4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

இந்துசமய வரலாற்று மரபில், இராஜ நிர்வாகத்தில் பெண்களின் வகிபங்கு - கி.சர்வேஸ்வரன்

 

    


இந்துசமய வரலாற்று மரபில்,  இராஜ நிர்வாகத்தில் பெண்களின் வகிபங்கு

கி.சர்வேஸ்வரன்,

கிழக்குப் பல்கலைக்கழகம்,

வந்தாறுமூலை,

இலங்கை.

 

பெண்கள் என்றாலே சிறப்பு மிக்கவர்கள். பல இடங்களில் பெண்கள் நசுக்கப்பட்டு அடக்கி ஆளப்பட்டு வந்தாலும், அவர்களை எதிலும் ஓரளவிற்கு மேல் அடக்கியாள முடிவதில்லை. தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்தைப் போல் வேகமாக மேலெழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். கடந்த ஜம்பது ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும், வளர்ச்சியும் அபாரமாகியுள்ளது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருக்கும் சிறப்பான குணாதிசயங்களே ஆகும். அலுவலகம், வீடு, குழந்தைகள், கணவன், பெற்றோர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர்களை நிர்வாகம் செய்வதற்கு பெண்களைப் போல் யாராலும் முடியாது. பல வேலைகளை சுலபமாக செய்து முடிக்கக் கூடிய திறன் கொண்டவர்கள் பெண்கள் என்று குறிப்பிடுதலும் மிகையாகாது. 

வேதகாலத்தில் பெண்கள் உயர்ந்தவிடத்தைப் பெற்றிருந்தனர். வேதங்களும் பெண்களை அதிகம் போற்றிப் புகழ்ந்தது. உலகின் எந்த சமய இலக்கியங்களும் பெண்ணைப் புகழ்ந்து பேசாத அளவு இந்து மத மூல நூல்களாகிய வேதங்கள் பெண்களைப் போற்றித் துதி செய்தன கடவுளர்களாக உயர்த்தி வர்ணித்தன. ருக் வேதத்திலே,

            'புத்தி தாஸாம் சதுர்குணா...'

 என்ற சுலோகம் காணப்படுகின்றது. இச் சுலோகம் ‘பெண்ணானவள் ஆணை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தவள்’ என்பதனை விளக்குவதாகவுள்ளது. ஆகவே ஆணைவிட பெண் நான்கு மடங்கு சக்தி வாய்ந்தவள் என்று கூறி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன வேதங்கள். மேலும் வேதங்களிலே பெண்கள் வேதபாடங்களைக் கற்றிருந்ததாகவும் அரசியலில் துணைபுரிந்ததாகவும் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. கோஸை, கோதை, விசுவவரஸ், அபாலை, உபநிஸதை, நிஸதை, போன்ற இன்னோரன்ன வேதங்களைப் பயின்ற பெண்கள் பற்றிய சிந்தனைகள் கிடைக்கப்பெறுகின்றன. இவர்களில் சிலர் மன்னர்களது மனைவியர்களாகவும் இருந்துள்ளனர். அவர்கள் நாட்டின் ,ராஜ நிர்வாகத்தில் பங்குவகித்தவர்களாவுள்ளனர். இவ் வேதகாலத்தையடுத்து தோன்றிய காலப்பகுதிகளில் பெண்கள் தனித்து நாட்டை நிர்வகித்து ஆட்சி செலுத்தினர். கணவன் மன்னனாகவிருந்த உயிர் நீத்த பின்னரும் மற்றும் நாட்டைத் தனியே காக்க வேண்டிய சூழலிலும் அதிகமாக நாட்டையும் இராஜ நிர்வாகத்தையும் பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றவர்கள் பெண்களேயாவர். இதிகாசங்களில் குறிப்பிடப்படும் சில பெண்கள் இராஜ்ஜிய நலனில் பங்கு கொண்டு இராஜ நிர்வாகத்தை வழி நடத்திய சம்பவங்களும் அறியக் கிடைக்கின்றன.

இராமாயணத்தில் இராஜநிர்வாகத்தில் பங்கு கொண்ட பெண்கள்.

இராமாயணத்திலே, கோசலை சிறந்த தாயாகவும், சிறந்த மனைவியாகவும் படைக்கப்பட்டுள்ளார். தசரதச் சக்கரவர்த்தியின் பட்டத்துராணியாக சிறந்த குணவியல்புகள் கொண்ட தாயாக சித்திரிக்கப்பட்டவராவார். கோசலை என்ற இராஜ்ஜியம் அவரது பெயரினாலே நிறுவப்பட அவரே காரணமானவராகின்றார்.     

கைகேயி தசரதச் சக்கரவர்த்தியின் இரண்டாவது பட்டத்துராணியாக காட்டப்படுகின்றார். சிறந்த வீரபெண்ணான இவர் தசரதச் சக்கரவர்த்தியுடன் ஒருமுறை யுத்தத்திற்கு சென்ற பொழுது அவரது தேர்ச் சில்லு உடைந்து மன்னர் கீழே வீழ்ந்தார். அச்சமயத்தில் கைகேயி தன்னுடைய கைகளினால் தேர்ச்சில்லைப் பிடித்து தேரைச் செலுத்திச் சென்று தசரதனைக் காப்பாற்றினார். அதனால் தசரதன் இரண்டு வரங்களை வழங்கி நீ தேவைப்படும் பொழுது இவ்விரண்டு வரங்களை கேட்பாயாக என்று வரமளித்தார். அவ் வீரதீரத்தால் தான் பெற்ற வரங்களை கைகேயி கேட்காமலேயே வைத்திருந்தார்.

அயோத்தி இராஜ்ஜியத்தில் தசரதர் தனக்கு பின்னர் தன் மகனான ஸ்ரீஇராமனை நாட்டின் மன்னனாக்க முடிவு செய்தார். இராமனது சிறுவயது முதற்கொண்டே இராமன் மீது மாறாக் கோபம் கொண்டிருந்த கைகேயியின் பணிப்பெண்ணாகிய மந்தரை இராமன் மன்னனாக முடிசூடிக்கொள்வதறிந்து அதனை எவ்வாறெனினும் தடுக்கவேண்டும் என்ற நோக்கில் கைகேயியின் மனதை மாற்றி முன்னர் மன்னர் தந்த இரண்டு வரங்களை கேட்டுப் பெறும்படி வலியுறுத்துகின்றாள். அதன்படி கைகேயியும் தனது மகன் பரதன் நாடாழும்படியும், இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லும்படியும் இரண்டு வரங்களை வாங்கிக் கொள்கின்றாள். இங்கு கைகேயியின் ராஜதந்திரம்  செயல் வடிவம் பெறுகின்றதனைக் காணலாம்.

கைகேயி இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் வேண்டியதன் காரணம் அவ்யுக தர்மத்தினாலேயே ஆகும். இராமாவதாரம் நிகழ்ந்த யுகம் திரேதாயுகம் அங்கு உறவுகள் 13 வருடங்கள் எவ்வித தொடர்புமன்றி வாழ்ந்தால் அவ்வுறவு இரத்து செய்யப்பட்ட உறவாகும். கலியுகத்தில் அது 7 ஆண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே இராமனை 14ஆண்டுகள் வனவாசம் அனுப்பினால் மன்னர் தசரதருக்கும் இராமனுக்குமான உறவு ரத்தாகும் ஆகவே 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து வந்த பின்னும் இராமனால் உரிமைகோரி அரசாள முடியாது. என்ற தந்திரத்தை கையாண்டே கைகேயி தன் மகன் பரதனை நிரந்தர மன்னனாக்கும் நோக்கில் அவ்வாறு ஓர் வரத்தினை வாங்கினார். இது அவரது இராஜ்ஜியம் தொடர்பான இராஜதந்திர அறிவைக் காட்டுகின்றது.

இராவணனது மனைவி மண்டோதரி மயனது மகளாக இருந்தவர். அதனாலேயே அவளை இராவணன் வலிந்து மணமுடித்தான். அவரும் மிகச்சிறந்த மதிநுட்பமும் அரசியல் அறிவும் கொண்டவராவார். நாடு ஆபத்தான சூழலில் உழல்கின்றது என்பதை உணர்ந்து அதனிலிருந்து விடுபட இராவணனுக்கு ஆலோசனை வழங்குகின்றார் மண்டோதரி. யுத்ததிற்கு காரணமான சீதையை விடுவித்துவிடும்படி எடுத்துரைக்கின்றார். ஆயினும் ஆணவமிகுதியாலும் சுயகௌரவத்தாலும் மனைவியின் ஆலோசனையை ஏற்;க்க மறுக்கின்றான் இராவணன். இதன்படி இராஜ நிர்வாகத்தில் பங்குகொண்டவராக மண்டோதரியும் கருதப்படுகின்றார்.

மகாபாரதத்தில் இராஜநிர்வாகத்தில் பங்கு கொண்ட பெண்கள்.

சந்தனு மகாராஜா சத்தியவதி எனும் பெண்ணினை கங்கைப்குப் பின் மணம் முடிக்கின்றார். சந்தனுமகாராஜாவிற்குப் பின் சித்திராங்கதனும் விசித்திர வீரியனும் இறந்த பின்னர்.மறு வாரிசு தோன்றும் வரை நாட்டைப் பரிபாலனம் செய்த பெண்ணாக இவ் மச்சகந்தி காணப்படுகின்றார். அம்பிகைக்கும். அம்பாலிகைக்கும் நியோக்கிய மார்க்கத்தின் வாயிலாக புத்திரப் பேறு கிடைக்க வழி வகை செய்து இராஜ்ஜயத்தை சாஸ்திரத்தின் வழி காப்பாற்றி நாட்டின் நலனைப் பாதுகாத்தவராகவும் இச்; சத்தியவதி காணப்படுகின்றார்.

பின்னர் ஓர்முறை சூதுவிளையாட்டினால் வனவாசம் செல்கிறார்கள் பாண்டவர்கள். அங்கே அர்ஜுனன் சுயம்பரத்தில் மாறு வேடத்தில் திரௌபதையை வென்று தன் தாயிடம் அழைத்துச் செல்கின்றான். கொண்டு வந்த பொருள் யாதாயினும் அதனைத் தாம் ஐவருமே சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள் என்று குந்தியும் அறியாது கூறிவிடுகின்றார். வாக்கினைக் காக்கும் அக்காலத்தவர் தாய் சொல்லைத் தட்டாமல் பங்கெடுக்க வேண்டிய நிர்பந்தம். ஒருவர் திரௌபதையை மணந்தாலும் மற்றய ஐவரும் துறவு பூணவேண்டும். எதிர்காலத்தில் அஸ்தினாபுரத்தினை ஆள யுதிஸ்டிரன் நிச்சயம் அவசியம் அவன் துறவு சென்றால் இராஜ்ஜியம் நல் அரசன் அற்றதாகிவிடும்.

இக்காரணத்தினால் பாஞ்சாலியை பாண்டவர்கள் ஐவரும் மணந்து கொள்ளும் நிர்பந்தம் தோன்றுகின்றது. இதற்கு அக் கால அரசியற் கோட்பாடே காரணமாய் அமைந்துள்ளதனைக் காணலாம். இராஜ்ஜியம் மற்றும் இராஜ்ஜியப் பிரஜைகளின் நன்மைகளை கருத்திற் கொண்டே பாண்டவர்கள் செயற்படத் தலைப்பட்டனர். அதனாலேயே தம் வாழ்வைத் தியாகம் செய்திருந்தனர். பாஞ்சாலியும் கூட தன்னையே இராஜ்ஜய நன்மைக்காக அர்ப்பணித்திருந்தார். அர்ஜுனன் மீதுகாதல் கொண்டு அவனையே மணந்து அவனுடன் வாழப்போகின்றோம் என்ற ஆசையில் வந்தாள் பாஞ்சாலி. ஆனால் அங்கு நிகழ்ந்த விபரீதத்தால் தன் வாழ்வைப் பற்றிய ஆசைகளைத் துறக்கின்றாள். இராஜ்ஜிய நலனுக்காக தன் வாழ்வையே எந்தவொரு பெண்ணும் சிறிதும் செய்துவிடத் தயங்கும் காரியத்தை துணிந்து தியாக மனப்பாங்குடன் செய்யும் பெண்ணாக திரௌபதி படைக்கப்பட்டுள்ளாள். அவளது அச்செயல் உலகத்தின் மேலோட்டமான பார்வைக்கு தவறானதானதாகக் தெரிந்தாலும் தர்மத்தின் வெற்றிக்கும் இராஜ்ஜியத்தின் நல்லாட்சிக்கும் இராஜ்ஜியத்தை தீயோரிடமிருந்து காக்கவும் வழி செய்த தியாகச் செயலாகவே அறிஞர்களால் போற்றப்படுகின்றது. அஸ்தினாபுர இராஜ்ஜிய நலனுக்காக தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வீரப்பெண் திரௌபதி பிற்காலத்தில் தெய்வமாக உயர்த்தி போற்றப்பட்டாள். இன்றும் போற்றப்படுகின்றாள்.

இவ்விருவரும் மகாபாரதத்தின் கதையோட்டத்தில் ,ராஜநிர்வாகத்தில் பங்கு வகித்த முக்கிய பெண் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் எனலாம். இதிகாசங்களுக்குப் பின்னரும் பல பெண்கள் பரந்த பாரத தேசத்தில் வீர மங்கையர்களாக ஜனனம் எய்தினர். சமூகத்தால் அடக்கியொடுக்கப்பட்ட போதிலும் சில பெண்கள் துணிந்து தான் விரும்பியதைச் செய்தனர். அவர்களது வாழ்க்கைப் போக்கால் காலப்போக்கில் அவர்கள் வீரமங்கையர் என்று போற்றப்பட்டார்கள். அந்தவகையில் அதிகளவான வீரமங்கையர்களை உலகிற்கு அளித்த பெருமை பாரததேசத்தையே சாரும். அவர்களில் பலர் இராஜ நிர்வாகத்தில் சிறந்து விளங்கி போரிட்டு தமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர்களாவர். இராஜ நிர்வாகம் என்பது அரசியலைச் சார்ந்ததொரு செயலாகும். இராச்சியத்தோடு தொடர்புடைய போரும் இவ் இராஜ நிர்வாகத்தின் பிரதான கூறாகும். இதிகாசங்களுக்குப் பின்னர், இராஜ நிர்வாகத்தில் ஈடுபட்ட பெண்கள் பற்றி கீழ்வருமாறு ஆராய்வோம்.

ஜான்சிராணி

ராணி லட்சுமி பாய் இந்தியாவின் ஜான்சி எனுமிடத்திலே பிறந்தார். இவருக்கு முன்பு இப் பிரதேசத்தினை ஆட்சி செய்தவர் ராணி ராமா பாய் என்பவராவார்;. இவரும் இராஜநிர்வாகத்தில்ப் பங்கு வகித்த பெண்மணியே ஆவார். இவரின் பின்னர் ஜான்சியை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் ராணி லட்சுமி பாய். இவர் 1828 நவம்பர் மாதம் 19ம் திகதியன்று மராட்டியப் பேரரசிலே உத்தரப் பிரதேசத்தில் காசி புனித ஸேத்திரத்தில் ஜான்சி எனுமிடத்தில் பிறந்தார். 1858 யூன் 18ம் திகதி வரை பூமியில் வாழ்ந்து இறுதியில் வீரமரணம் எய்தினார். தன்னுடைய இளமைப் பருவத்தில் கங்காதரராவ் எனும் மன்னரைத் திருமணம் முடித்தார் லட்சுமிபாய்.

இந்தியாவிலே பிரித்தானியர்களது ஆட்சிக் காலப்பகுதியில் 1857ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றிய பெண்ணாக லட்சுமி பாய் வீரமங்கையர் வரலாற்றிலே தடம் பதிக்கின்றார். பிரித்தானியர்களது ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த முதன்மையான பெண்ணும் இவரேயாவார்.

இவரது ஆரம்பகால வாழ்க்கையானது வீரம் வாய்ந்ததாகவேயிருந்தது. வாரணாசியின் புனித பிராமணக் குடும்பத்திலே மௌரிய பந்தர், பகீரதிபாய், ஆகிய பெற்றோருக்கு மகளாகப்பிறந்த இவருக்கு அவர்கள் இட்ட பெயர் மணிகர்ணிகா, சிவபுராணத்திலே குறிப்பிடப்படுகின்றதன்படி அன்னை பார்வதி தேவியின் 51சக்தி பீடங்களிலே அம்மனுடைய காது வீழ்ந்த இடமாகச் சொல்லப்படும் இடமும் மணிகர்ணிகா என்றே குறிப்பிடப்படும். அதற்கேற்றாற் போலவே அன்னையின் வீரம் கொண்டு இவளும் வளர்ந்தனள் போலும். இவரை முன என்றும் சிலர் அழைப்பர். இவரது 4ம் வயதிலே தாய் பகீரதிபாய் இறந்துபோக, தாயின் இழப்பை மறைக்கவும் தாய்மை இன்றி சமூகத்தின் பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய பெண்ணாக இவளை வளர்ப்பதற்காகவும் இவளை வீரப் பெண்ணாகவே வளர்த்தனர். வில் பயிற்சி, வாள்பயிற்சி, யானை ஏற்றம், குதிரை ஏற்றம் போன்ற போர் விளையாட்டுக்களில் சிறந்த தேர்ச்சி பெற்றார் மணிகர்ணிகா.

மணிகர்ணிகாவின் தந்தை மௌரியபந்தர் பித்தூரிலுள்ள பேஸ்வா நீதிமன்றத்தில் வேலை செய்தார். பித்தூரின் போஸ்வா அவளைத் தனது சொந்த மகள் போலவே கருதி அன்பு செலுத்தினார். பின்பு உரிய காலம் வந்தவுடன் மணிகர்ணிகாவை ஜான்சியின் அரசனான ராஜா கங்காதரராவ் இற்கு 1824ல் மணமுடித்துக் கொடுத்தனர். அன்றிலிருந்து மணிகர்ணிகா ராணி லட்சுமி என்றே அழைக்கப்படலானாள்.

1851ல் அவர்களுக்கு தாமோதர் ராவ் என்ற மகன் பிறந்தான் அவன் நான்கு மாதங்களிலே இறந்து போக அவனது இழப்பை ஈடு செய்வதற்காக ஆனந்ராவ் எனும் சிறுவனைத் தத்தெடுத்து அவனுக்கு தாமோதர் ராவ் என்ற பெயர் மாற்றி வளர்த்து வந்தனர். இருந்த போதிலும் தன்னுடைய மகன் இறந்த சோகத்தினை ஏற்றுக் கொள்ளமுடியாது தவித்த கங்காதர ராவ் சில காலங்களிலே உடல் நோயுற்று 1853லே நவம்பர் 21ல் உயிர் துறந்தார். கணவன் கங்காதர ராவ் இறந்த பின்னர் தம்முடைய வளர்ப்பு மகனாகிய தாமோதர் ராவை ஆட்சி பீடமேற்ற முடிவு செய்தார் லட்சுமி பாய். ஆனால் அப்போதைய ஆங்கிலேய ஆளுனர் டல்லவுசி பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அவகாசியிலிக் கொள்கையின்படி தத்துப் பிள்ளையை அதிகாரபூர்வ அரசனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

Description: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/1882_jhansi_fort.jpg/220px-1882_jhansi_fort.jpgஓர் மன்னனுக்கு நேரடி வாரிசு இல்லையெனின் அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வந்த ஆங்கிலேயர்கள் ஜான்சி நாட்டை தங்களது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தனர். 1854ல் மார்ச் மாதத்திலே ராணி லட்சுமிபாய்க்கு 60000 ரூபாய்களை ஓய்வூதியமாகக் கொடுத்து அவரை ஜான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினார்கள். ஆயினும் 1857 மே 10ல் இந்தியாவின் முதலாவது கிளர்ச்சி, மீரட்டில் ஆரம்பமாகியது. போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசுவினதும், பன்றியினதும் கொழுப்பு பூசப்பட்டதனால் தோன்றிய அக்கிளர்ச்சி பரதகண்டம் எங்கும் பரவி வியாபித்தது. இதன் காரணத்தினால் ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியின் மீதே அதீத கவனம் செலுத்தத் துவங்கினர் லட்சுமிபாய் பற்றிய எண்ணத்தை கைவிட்டனர். இதனால் லட்சுமி பாய் தானே தனியாக தமது ஜான்சி பிரதேசத்தை ஆளத் துவங்கினார்.

வடமத்திய இந்தியாவில் ஜான்சிப் பிரதேசம் எவ்வித முற்றுகையும் இல்லாத அமைதியான பிரதேசமாக இருந்தமையைக் காட்டுவதற்காக லட்சுமிபாய் ஹால்டி குங்குமப் பண்டிகை எனும்      ஜான்சிக் கோட்டை–(1882) Description: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4a/The_Ranee_of_Jhansi-Chambers-1859.jpg/220px-The_Ranee_of_Jhansi-Chambers-1859.jpgபண்டிகையை ஏற்பாடு செய்து கொண்டாடினார். ஆங்கிலேயர்கள் எதிர்காலத்தில் லட்சுமி பாய் நம்மை எதிர்க்கக்கூடும் என்ற அச்சம் கொண்டிருந்தனர். அதன் காரணத்தினால் 1857ம் ஆண்டு யூன் 8ம்திகதி ஜோக்கன் பாக்கில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் ராணி லட்சுமிபாய்க்கு பங்கு உள்ளதாக கூறினர். பொதுமக்களும் விவசாயிகளும் ராணி மீதுகொண்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கவே அவ்வாறொரு குற்றசாட்டினை அவர்கள் முன்வைத்தார்கள்.

இதனையே காரணமாக வைத்து 1858ம் ஆண்டு மார்ச் 23ம் திகதி ஹீரோஸ் தலைமையில் ஆங்கிலேயப் படையொன்று ஜான்சியைக் கைப்பற்ற முன்வந்தது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காக தாந்தியா தோபேயின் தலைமையில் 20,000 பேரைக் கொண்ட படையொன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படையின் ஆயுதங்கள் மார்ச் 31ம் திகதி ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால் தாந்தியாதோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவமுடியாது போனது. தாந்தியா பேதியும் பான்பூர் மன்னரும் வரும் வழியிலே தங்களது ஆயத வண்டிக்காக காத்திருக்கும் சமயம் 1000 பேர் கொண்ட ஹியுரோஸ் தலைமையிலான குதிரைப்படை என்பீல்ட ரக துப்பாக்கிகளின் உதவியோடு அவர்களைத் தாக்கி 1500 பாரத வீரர்களை மரணமடையச் செய்து அவர்களது ஆயத வண்டிகளையும் பறித்துக் கொண்டனர். மாவீரன் தாந்தியாபேதியும் மிகப்பெரிய மனவருத்தத்துடன் போரிலே புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது.

லட்சுமிபாய்க்கு உதவுவதற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் லட்சுமிபாய்க்கு எதிராகவே ஆங்கிலேயர்களர் பயன்படுத்தப்பட்டன. ஆயினும் ராணி பிரித்தானியருக்கு அடிபணிய மறுத்து தமது படைகளுடன் இணைந்து கடுமையாகப் போரிட்டாள். மிகுந்த துணிச்சலுடன் அதி வீரத்துடன் போர்புரிந்தார் ஜான்சி ராணி எனினும் மூன்று நாட்களில் பிரித்தானியப் படை கோட்டையைக் கைப்பற்றியது. பாரத நாட்டின் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் மாவீரன் குதாபக்ஸ் பீரங்கி படைத்தளபதி கௌசல்கான் ஆகியோரும் மரணமடைந்தனர். கடுங்கோபம் கொண்ட பிரித்தானியர் அரண்மனையை சூறையாடி பொருட்களையெல்லாம் கொள்ளையடித்து பெண்களையும் மானபங்கம் செய்தனர்.

ஜான்சி ராணி தனது தத்துக் குழந்தையுடனும் 1858ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி இரவு நேரத்தில் மதிலிருந்து குதிரையுடன் பாய்ந்து தப்பித்தார். அதிக பெண்களைக் கொண்ட பாதுகாவலர் படையும் அவரைப் பின் தொடர்ந்தது. அண்டை நாடுகளான ஒர்ச்சா மற்றும் டாடியா என்பனவற்றின் மீதுபடையெடுத்து அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக் கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்தார் ஜான்சி ராணி. தாமோதர்ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஸ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார். இவர்கள்குவாலியருக்குச் சென்று குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையை தோற்கடித்து குவாலியரின் கோட்டையொன்றைக் கைப்பற்றி கொண்டார்கள். வெள்ளையர்களின் படை குவாலியர்களைக் கைப்பற்ற முகாமிட்டது.

ஆக்ராவிலுள்ள லட்சுமிபாயின் சிலை,   தனது குழந்தையுடன் லட்சுமி பாய் தாவிய இடம்

Description: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/The_place_from_where_Rani_Lakshmibai_jumped.jpg/220px-The_place_from_where_Rani_Lakshmibai_jumped.jpg
Description: https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Ranilaxmibai-1.JPG/180px-Ranilaxmibai-1.JPG

             

 

 

 

 

 

1858, யூன் 17ல் கோட்டாகி சேராய் என்றவிடத்தில் வெள்ளையரை எதிர்த்து ஜான்சிராணி போரிட்டார்.அப்போரில் கடும் காயங்களுக்குள்ளாகி வீரமரணமடைந்தார் ஜான்சிராணி. ஆயினும் ராணி வீழ்ந்தமை பிரித்தானியருக்குத் தெரியவில்லை. பூல்பாக் எனுமிடத்தில் ஓர் குடிசையோடு சேர்த்து ராமச்சந்திர ராவ் ஜான்சி ராணியின் உடலைத் தகனம் செய்தார். பிரித்தானியர் மூன்று நாட்களில் குவாலியரைக் கைப்பற்றினர். ஸ்ரீமதி சுமித்திர குமாரி சௌகான் என்ற புகழ் பெற்ற இந்தியக் கவிஞர் இந்தி மொழியில் ராணி பற்றிப் பாடுகின்றார்.

            

       'ஸ்வராஜ்ய கனவின் அக்கினிக் குஞ்சு

    இங்குதான் ஜனித்தது.

                      ஓர் வீராங்கணையின் இறுதி நாள்

    சோதனைகள் அரங்கேறிய

    வீரபூமியில் நிற்கும்....'

  என்றவாறு ராணி பற்றிய புகழ்மாலை பாடப்படுகின்றது. இவ்வாறு புகழ்பூத்த ராணி லட்சுமிபாய் இந்தியாவின் தலைசிறந்த வீரமங்கையர்களில் ஒருவராகப் இன்றும் புகழப்படுகின்றார்.

தபஸ்வினி மாதாஜி கங்காபாய்

                               இராஜநிர்வாகத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் ஈடுபட்டிருந்தமையினை வரலாற்றாதாரங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. அந்தவகையில் இராஜ நிர்வாகத்தில் ஈடுபட்டிருந்த பெண்மணிகளுள் 'தபஸ்வினி மாதாஜி கங்காபாய்' குறிப்பிடத்தக்கவர். இவர் வீரசிவாஜியின் பரம்பரையின் வழிவந்த நாராயணராவ் என்பவரின் புதல்வியாவார். கங்காதேவியை நோக்கி விரதமிருந்து பெற்ற பெண்குழந்தை என்பதால் 'கங்காபாய்' என்று பெற்றோர் பெயரிட்டனர். கங்காபாய் ஒரு பிறவி மேதை. ஏழு வயதில் சமஸ்கிருதத்தில் கவிபாடும் புலமையும், பன்னிரண்டு வயதில் குதிரையோட்டம், வாள்;பயிற்சி, ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டுக்களில் சிறந்து விளங்கினாள். இத்தகைய திறமைகளை அவள் கொண்டிருந்த போதிலும் அரண்மனையைத் துறந்து ஆன்மீகத் தேடலின் வழி சென்றாள். அதன் விளைவாக தாமிரபரணி கரையில் மரவரி தரித்து 41 நாட்கள் பஞ்சாக்னி தவத்தினை மேற்கொண்டாள்.

            பின்னர் தந்தை நாராயணராவுடன் வேலூருக்கு வந்தாள். சில நாட்களில் நாராயணராவ் காலமானார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து தந்தை ஆட்சி செய்த ஆற்காட்டை கங்காபாய் ஆட்சி செய்து வந்தாள்.  தன்னுடைய தம்பியிடம் நம் நாட்டின் இன்றைய நிலையில் நமது கோட்டையை நவீன முறையில் பலப்படுத்த வேண்டும் என்கின்றாள். தம்பியும் அதை ஏற்றுக் கொண்டு அரசாட்சி முறைகளை தனக்கும் கற்றுத் தருமாறு கங்காபாயிடம் வேண்டுகின்றான். அவளும் ஆட்சியில் தன் தம்பியைப் பயிற்றுவித்து வந்தாள்.

            இவ்வாறு ஆட்சி புரிந்து வந்த கங்காபாயை ஆங்கிலேய அரசு சந்தேகப்பட்டு திருச்சி சிறையில் அடைத்தது. திருச்சி சிறையிலிருந்து விடுதலையாகிய கங்காபாய் ஆன்மீக வேட்கையால் நைமிசாரண்யம் சென்று தவமியற்றினார். இச்சமயத்தில் கங்காபாய் ஒருநாள் அங்குள்ள கௌரி சங்கர் ஆலயத்திற்குச் சென்றார். ஆனால் அங்குள்ள பண்டா அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கங்காபாய் கங்காதேவியை நோக்கி 'தாயே கங்கா, இதோ என் பூஜைப் பொருட்கள் அனைத்தையும் உன்னிடமே சமர்ப்பிக்கிறேன். விரைவில் கௌரி சங்கர் மகாதேவருக்கு ஒரு கோயில் எழுப்பி, மக்கள் தடையின்றி தரிசிக்க வழிபட எனக்கருள் அம்மா' என்றவாறு வேண்டி நின்றாள். கங்காபாயின் நீண்டகாலத் தோழியான ஆங்கில யுவதி 'பியூட்டி ராஜ்பதானா' என்பவள் 'கமிஷனர் தாம்ஸனை' மணந்தாள். இவர்களின் உதவியால் கங்காபாய் 15 நாட்களில் கௌரிசங்கருக்கு கோயில் எழுப்பி ஏழைகள் அனைவரும் இவ்வாலயம் சென்று வழிபடலாம் என்று கூறினார்.

            கௌரிசங்கருக்கு ஆலயத்தை கட்டுவித்த பின்னர் கங்காபாய் விந்திய மலைப் பிரதேசத்தின் அடிவாரத்தில் இருந்த காளி கோயிலை அடைந்தார். இதனிடையே நாட்டினை பிடிக்கும் பேராசையால் ஆங்கிலேயர்களினால் பல கேடுகள் விளைவிக்கப்பட்டன. இதனை,

 'அம்மா காளிதேவி! அந்நியர்கள் நாட்டைக் கூறுபோட்டு அபகரிக்க நினைக்கின்றனர். என் மக்களை இந்தத் துன்பத்திலிருந்து காப்பாற்று தாயே'  

என்ற கங்காபாயின் கூற்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். கங்காபாய் புரட்சி செய்யத் திட்டமிடுவதாகச் சந்தேகித்த ஆங்கிலேய போலீசார் கோவிலைத் துப்பாக்கிகளுடன் சூழ்ந்து கொண்டனர். கங்காபாயின் தேஜஸையும், கம்பீரத்தையும் கண்ட போலீசார் தம்மையும் அறியாமல் பணிந்து சென்றனர். இச் சூழ்நிலையில்தான் ஜான்சி ராணிக்கும், ஆங்கிலேயருக்கும் இடையில் போர் நிகழ்கின்றது. அந்தவகையில் 1854இல் கிழக்கிந்திய கம்பனி ஜான்சிராணியின் சுவீகார மகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக ஜான்சியை தன் பகுதிகளோடு இணைத்துக் கொண்டு ஆண்டுக்கு ரூ.6000 உபகாரநிதி வழங்கப்படும் என்ற ஆணை கிழக்கிந்திய கம்பனியால் பிறப்பிக்கப்படுகின்றது. இதனால் கோபமுற்ற ஜான்சியின் மகள் 'என்ன கும்பெனிக்காரனா நமக்கு நிதி தருவது? என் உயிர் இருக்கும் வரை என் நாட்டை விட்டுத்தர மாட்டேன். போருக்கு தயாராவோம். பெண்களும் போர்க்கலையில் பயிற்சி பெறட்டும்' என்று கூறியவாறு புரட்சி மேற்கொண்டாள். உடனே ஜான்சி ராணி தன்னுடைய ஆத்மார்த்த தோழியான கங்காபாய்க்கு கடிதம் எழுதி போரில் தனக்கு மெய்க் காப்பாளராக இருக்க வேண்டும் என்று கூறி அவரை அழைத்தார்.

            இப்போரே இந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களுக்கெதிரான முதல்ப் போராகும். அந்தவகையில் 1857ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் இந்திய சுதந்திரப் போர் ஆரம்பமாகியது. குவாலியரில் ஆங்கிலேயருடனான ஜான்சிராணியின் இறுதிப் போர் நடைபெற்றது. போரில் ராணி காயமுற்று வீழ்ந்தாள். எதிரியிடம் சிக்காமல் ராணியை அழைத்துச் சென்றார் கங்காபாய். போர்களத்தை விட்டுச் சென்றதும் ராணி இறந்துவிட்டார். கங்காபாயும், பலவந்த்சிங்கும் அவரை ரகசியமாகத் தகனம் செய்தனர். போரைத் தொடர்ந்து கங்காபாய் 1858-1890 வரை கங்காபாய் தாம் சென்ற இடமெல்லாம் தெய்வீகத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார். வாரணாசியில் சாதக் தாராநாத் என்ற துறவியைச் சந்தித்த கங்காபாய் தனக்கு பஞ்சாக்னி வித்யையைப் போதிக்க வேண்டும் என்று வேண்டி நின்றார். மாதாஜி அவருக்கு பஞ்சாக்னி வித்யையை கற்பித்ததோடு, நீங்கள் ஆன்மீகப் பலம் பெறுவதோடு புரட்சி வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார். கங்காபாய் ராஜபரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் அரச மரியாதை கிடைத்தது. ஆன்ம பலம் கொண்டவராதலால் சாதாரண மக்களின் ஈர்ப்பும் அவருக்கு ஒருசேரக் கிடைத்தது.

            இதனையடுத்து கங்காபாய் கொல்கத்தா வந்தடைந்தார். அவர் வந்த காலப்பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிகள் செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்டதோடு, வைதீக சமயங்களின் நிலை கேள்விக்குறியதாக்கப்பட்டிருந்தது. உருவ வழிபாடு மூடத்தனம் என்ற சிந்தனை கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளிகளின் வாயிலாக மக்கள் மத்தியில் பரப்பட்டிருந்தது. இதனை,

'தாயே நான் என்ன செய்வேன்? கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளிகளில் உருவ வழிபாடு மூடத்தனம் என்று கேலி செய்கிறார்களே! அறியாப் பெண்களின் மனதில் அந்நியர்கள் விஷத்தை விதைக்கிறார்களே! தேவி, பெண்களுக்கு நமது நாட்டைப் பற்றிய பெருமையை ஊட்ட எனக்கு அருளம்மா!”

என்று கங்காபாய் காளியிடம் வேண்டுவதிலிருந்து தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். இதன் முதற் கட்டமாக 1893 சித்திரை 19ம் திகதி காசிம்பஜார் மகாராணி ஸ்வர்ணமயியின் பங்களாவில் 30பெண்களுடன் கொல்கத்தா அப்பர் சர்க்குலர் சாலையில் 'மஹாகாளி பாடசாலை'யைத் தொடங்கினார். இவ் வேளையில் சுவாமி விவேகானந்தர் மேலைநாட்டிலிருந்து 1897இல் தாயகம் திரும்பினார். பெண்களுக்கு நமது சமயத்தைப் போதித்திடும் பள்ளிகள் தேவை என்பதை வலியுறுத்தி வந்த சுவாமிஜியை அவரது பள்ளிக்கு கங்காபாய் அழைத்தார்.

            அப்பள்ளியின் கற்றல், கற்பித்தல் முறைகளையும், சாஸ்திரநெறிகளையும் கேட்டு மகிழ்வுற்ற சுவாமிஜி 'இந்த இயக்கம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றது” என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட்டார். சுவாமி விவேகானந்தரே வியந்து போற்றும் அளவிற்கு ஒரு இலட்சியப் பெண்ணாகவே கங்காபாய் விளங்குகின்றார். சுவாமிஜியின் துணையோடு பாடசாலை தடையின்றி செயற்பட்டதோடு, பல கிளைகளும் நிறுவப்பட்டன. இந்து மதத்திற்கு சோதனை நேரும்போது அதைக் காக்க மட்டுமல்ல நமது பெண்களுக்கு, எதிர்காலத் தேசத் தலைவர்களின் தாய்மார்களுக்கு, தேசப்பற்றை ஊட்டுவதிலும் ஒரு வஜ்ராயுதமாகவே கங்காபாய் போற்றப்பட்டு வருகின்றார். இவரைப் பற்றி,

• ஸ்வராஜ் சஞ்சிகை :- 'தபஸ்வினி கங்காபாய் சுதந்திர வீரர்களின் தலைவி. அவர் அருளால் வங்காள சுதந்திர இயக்கம் விரைவில் தொடங்கும்'

என்றும்

• ப்ரபாஸி இதழ் :- 'ராஜ குடும்பத்தில் பிறந்த மேதை தபஸ்வினி கங்காபாய்.தன் சொத்துக்களை நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்தவர்.'

என்றும் கூறியுள்ளன.

                        

                         

 

 

கங்காபயின் சிலையும்

சமாதியும்

 

ஊதாதேவி                          

இராஜ நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய மற்றுமொரு பெண் ஊதாதேவி ஆவார். இவர் காவலர் குடியிருப்புப் பகுதியை முற்றுகையிட்ட பெண்கள் படையின் தலைவி ஆவார். மேலும் அவத் நாட்டின் ஒர் கிராமத்து பாசி இனத்துப் பெண் ஆவார். ஜான்சிராணி, ஹஸ்ரத் மஹல் போன்ற அரசிகளுடன் இணைந்து முதல் சுதந்திரப் போரில் பங்கேற்றாhர். ஊதாதேவி ஆங்கிலேயருக்கு எதிரான மக்களின் வெறுப்பை புரிந்து கொண்டு அவர்களை விரட்டத் தானும் ஏதாவது செய்ய வேண்டுமென விரும்பி புரட்சிப் படையில் சேர்ந்து முற்றுகையில் ஈடுபட்டுப் போர் புரிந்தார். அவளது கணவனும் புரட்சியில் ஈடுபட்டு போரில் கொல்லப்பட்டான். புரட்சிப் படையினர் சரியான தலைமை இல்லாததால் தோற்றனர். மேற்கொண்டு ஆங்கிலேயரின் முன்னேற்றத்தைத் தடுக்கவும், தன் கணவனின் கொலைக்குப் பழிவாங்கவும் ஆணுடையில் குண்டுகளுடன் ஆலமரத்தில் ஏறி மறைந்திருந்து ஏறக்குறைய 32 ஆங்கிலேயப் படைவீரர்களைக் கொன்றாள். அவளது வீரத்தை அறிந்து கொண்ட எதிரி காம்பெல்கூட அவள் முன் சிரம் தாழ்த்தி வணங்கினான். அந்நியனுக்கு எதிராகத் துணிந்து போரிட்ட வீராங்கனை ஊதாதேவியை பாசி இன மக்களும், மற்ற தேச பக்தர்களும் போற்றி வணங்குகின்றனர்.

வீரமங்கை வேலுநாச்சியார்

1730ம் ஆண்டு இராமநாதபுர மன்னர் செல்வமுத்து சேதுபதி- ராணி சுகந்திமுத்தாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தாள்.  ஆண்குழந்தை இல்லாத பெற்றோர் அவளை இளவரசனாகவே வளர்த்தனர். ஆயுதப் பயிற்சிகளுடன் வளரி, சிலம்பம் போன்ற பயிற்சிகளும் அவளுக்கு அளிக்கப்பட்டன. தாய்மொழியான தமிழ் மொழியுடன் பிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளும் அக்காலச் சூழ்நிலைக்கேற்ப அவளுக்கு கற்பிக்கப்பட்டன. இவ்வாறு ராமநாதபுர அரசைத் திறம்பட ஆட்சிபுரியத்தக்க அனைத்துப் பயிற்சிகளும் கொண்டவராக நாச்சியார் விளங்கினார். நாச்சியாரின் கணவரான சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரும், மகள் கௌரி நாச்சியாரும் கிழக்கிந்திய கம்பெனியால் படையெடுக்கப்பட்ட போரில் உயிரிழந்தனர். இதுகேட்ட ராணி நாச்சியார் வெஞ்சினம் கொண்டு ஆங்கிலேயரைப் பழிவாங்கி தமது அரசை மீண்டும் பெறுவதாக சூளுரைத்தார். தனக்கு துணையாக இருக்கும் சேனைத்தளபதி தாண்டவராயப்பிள்ளை பழிதீர்க்க உரியகாலம் வரும் வரை தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற ஆணைப்படி ராணியும் தலைமறைவானார்.

இவ்வாறு தலைமறைவாக இருக்கும் காலத்திலேயே அரசி ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியைச் சந்தித்து அவரிடமிருந்து 5000 காலாட் படை வீரர்களையும், 5000 குதிரைப் படைகளையும் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சிக்கு துணையாக தருமாறு வேண்டி நின்று உதவியைப் பெற்றுக் கொண்டார்.  அத்தோடு நாட்டுப்பற்றும், ராஜபக்தியும் கொண்ட ராணி குயிலி பற்றி அறிந்து கொண்டு குயிலியை மெய்க்காப்பாளர் பதவியிலிருந்து வீரப்பெண்கள் படைக்குத் தளபதியாக்கினார் வேலுநாச்சி. 1780இல் சிவகங்கை இராச்சியத்தை மீட்டெடுக்கும் இறுதிப்போர் நடைபெற்றது. நாச்சியாரின் படையால் மின்னல் வேலுநாச்சியாருக்காக

இந்திய அரசு வெளியிட் தபால் தலை.

வேகத்தில் ஆங்கிலேய குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. வேலுநாச்சியார் பத்தாண்டு காலம் சிறப்புற குடிமக்களை சொந்த மக்களாக எண்ணி அரசாண்டு, பின் அரசுப் பொறுப்பை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்து விட்டு மறைந்தார்.

கிட்டூர் ராணி சென்னம்மா                    

கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் காகதி என்னும் கிராமத்தில் 1778 ஐப்பசி மாதம் 23ம் திகதி சென்னம்மா அவதரித்தார். இவரது தந்தை துலப்ப கௌட தேசங்பாளையங்காரர்களில் ஒருவர்.  சென்னம்மா, தந்தை மற்றும் மாமனிடம் குதிரையேற்றம், வாட்போர், ஈட்டி எறிதல், நீச்சல் போன்ற பல இராச்சியக் கலைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். சென்னம்மா தனது 15 வயதில் கிட்டூர் அரசன் மல்லசராஜாவை மணம் முடித்து கிட்டூர் இராச்சியத்திற்கு ராணி ஆகினாள். மல்லசராஜாவின் அகால மரணத்தை தொடர்ந்து சமஸ்தானத்தை ஆட்சி செய்து காக்கும் பொறுப்பு சென்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மல்லசராஜாவின் முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீகப் பாதையில் செல்ல அவரது மகனை அரசனாக்கிய சென்னம்மா இராஜ நிர்வாகத்தில் அவனுக்கு பக்க பலமாக இருந்து அவனை வழிநடத்தி வந்தார். சிறிது காலத்தில்  ருத்ரம்மா மற்றும் சென்னம்மாவின் மகன் இறந்து விட்டனர். அதனையடுத்து சாம்ராஜ்ஜியத்தின் ஒட்டுமொத்த பொறுப்பு சென்னம்மாவை வந்தடையவே சென்னம்மா அரசுவாரிசு அற்ற அந்நிலையில் நெருங்கிய உறவினரின் மகனைத் தத்தெடுத்து 'சிவலிங்கப்பா' எனப் பெயரிட்டு அவனுக்கு அரசுரிமை அளித்தார். கிட்டூர் சமஸ்தானத்திற்கும், கும்பினிக்கும் இடையே நிகழ்ந்த போரின் விளைவாக 1824ம் ஆண்டு கிட்டூர் ராச்சியம் வீழ்ந்து ராணி சென்னம்மா சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 5வருடங்களுக்குப் சிறையிலேயே உயிர்நீத்தார்.

 

 

 

 

 

 

கேலடி சென்னம்மா

சென்னம்மா கர்நாடகா தேசத்தைச் சேர்ந்தவராவார். 17ம் நூற்றாண்டில் இராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். இவ்விழா காண்பதற்காக தென்னகத்தின் சமஸ்தான மன்னர்கள் பலரும் வருவர். அவர்களுள் ஒருவரான கேலடி மன்னனான சோமசேகரரும் அவ்விழாவிற்கு வருகை தந்திருந்தார். சிற்பி செதுக்காத அழகுச் சிலையாக இருந்த சென்னம்மா மீது காதல் கொண்டு அவளை மணமுடித்தார். சென்னம்மா கேலடி சமஸ்தானத்திற்கு அரசியானார். இவர்கள் இருவரும் ராமேஸ்வரர், அகோரேஷ;வரர், கொல்லூர் மூகாம்பிகை ஆகிய தெய்வங்களை தரிசித்தும், ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்கள் வழங்கியும் வாழ்ந்து வந்தனர். சென்னம்மா, சோமசேகரருக்கு மனைவியாய், மந்திரியாய், நல்லாசிரியராய், தோழியாய், வழிகாட்டியாய் விளங்கி கணவரின் நல்லாட்சிக்கு உறுதுணையாக இருந்தார். சந்தோசமாக இருந்த சென்னம்மாவின் வாழ்க்கையில் நடனமாது கலாவதி வடிவில் பிரச்சினை வந்தது. அந்தவகையில் தசரா நிகழ்ச்சியில் கலாவதி ஆடலைக் கண்டு அவளை ஆஸ்தான கலைஞராக்கினார் மன்னர். மன்னருக்கு குழந்தை இல்லை என்பதை அறிந்து கொண்ட கலாவதியின் வளர்ப்புத் தந்தை பாரமே மொவுதா என்ற நயவஞ்சகன் மருந்து என்ற பெயரில் எதையோ கொடுத்து தன்னுடைய கைபொம்மையாகக்கி நாட்டைக் கைப்பற்ற திட்டம் போட்டுக் கொண்டிருந்தான். அவனது அச்செயலாலும், கலாவதி மீது கொண்ட மயக்கத்தாலும் மன்னர் தன்னிலை, தன் மனைவி, உயிரனைய குடிமக்கள் அனைத்தையும் மறந்தார்.

 

அரசன் சரியில்லாத நாடு அலங்கோலமாகி விட்டிருந்தது. அரசுக்கு வேறு வாரிசு இல்லாத நிலையில் அரசர் இறந்தால் நாடு என்னவாகும் என்று கலங்கிய சென்னம்மா இறைவன் மீது நம்பிக்கை கொண்டு தன் தந்தையின் உதவியுடன் நாட்டை செப்பனிட முற்பட்டார். நம்பிக்கைக்குரிய சேனைத் தலைவர்களையும், சான்றோர்களையும் அழைத்து உரிய மரியாதை அளித்து ஒத்துழைப்பை நாடினார். பல எதிர்ப்புக்கள் கோரிக்கை வடிவில் வந்தன. இவற்றை புறம் தள்ளிய அரசி நற்குணமும், நல்லறிவும் நிறைந்த பசப்பா நாயக்கன் என்ற சிறுவனைத் தேர்ந்தெடுத்து தமது வாரிசாக்கி அரசனுக்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அவனுக்கு அளித்தார். கும்பினி, முகலாய மன்னன் ஒளரங்கசீப் போன்ற பல மன்னர்களுடன் போரில் ஈடுபட்டார். யுத்த களத்தில் சாமுண்டியாக, கற்பில் சிறந்த கண்ணகியாக, குடிமக்களுக்கு தாயாக அரசாண்டு இந்து மதத்திற்குப் பாதுகாப்பும் அளித்த அரசி சென்னம்மா 25ஆண்டுகள் நல்லாட்சி நடத்தினார். பின்னர் தன் மகன் பசப்பாவிடம் அரசை ஒப்படைத்து மக்கள் சேவையில் முழமையாக ஈடுபட்டார்.

மகாராணி தித்தா

தித்தா என்பவள் ஷாஹி அரச பரம்பரையில் வந்த சிம்மராஜன் என்பவனின் ஒரே மகளாவாள். இவள் நல்ல அழகி, புத்திகூர்மை மிக்கவள். ஆனால் கால் ஊனமுற்றவள். இதன் காரணமாகவே 26வயது வரை அவள் மணமாகாமல் இருந்தாள். பர்வதகுப்தன் அவளை தன் மகன் NÑமகுப்தனுக்கு மணமுடித்து கொடுத்து அரசவம்சத் தொடர்பை ஏற்படுத்தினான். பர்வதகுப்தன் மறைவுக்குப் பின்னர் NÑமகுப்தன் அரசனானான். ஆனால் காஷ;மீரத்தின் குழப்ப அரசியலும், பொதுமக்களின் துயரங்களும் மாறவில்லை. மனைவிக்கு அடிமையானவனாகவே NÑமகுப்தன் விளங்கினான். அரசாட்சி அவன் பெயரில் தித்தாவால் நடைபெற்றது. 'தித்தா NÑமகுப்தன்' என்ற பெயரில் நாணயங்கள் வெளியிடும் அளவுக்கு அவளுடைய அதிகாரம் விரிந்திருந்தது. வேட்டைக்குச் சென்ற NÑமகுப்தன் சுரம் கண்டு இறந்து போனான். தானும் உடன்கட்டைஏற அனுமதி கேட்டாள். பின்னர் சதியாவதிலிருந்து விடுதலை அடைந்த அவள் தன் மகன் அபிமன்யுவை அரசனாக்கினாள். ஆட்சிப் பொறுப்பை தானே ஏற்று நடத்தினாள். தனது மகன் அபிமன்யுவிற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள் அனைத்தையும் மிகச் சாமர்த்தியமாகத் தோற்கடித்து அவன் அரசாள உறுதுணையாய் இருந்தாள்.

1972இல் அபிமன்யுவின் இறப்பு நிகழ்ந்தது. அவனுக்குப் பின் அரசாண்ட மூன்று பேரன்களும் மர்மமான முறையில் இறக்க அரசாட்சியை தானே ஏற்றுக் கொண்டாள். மகாராணி தித்தா 22 ஆண்டுகள் அரசாட்சி புரிந்தாள். தித்தா பல கலகங்களை அடக்கி சரியான, உறுதியான அரசுக் கட்டமைப்பை உண்டாக்கினாள். பொதுமக்களும் அரசுக்குட்பட்டு வாழ்ந்தனர். மகனின் நினைவாக ஒரு விஸ்னு கோவிலை நிறுவினாள்.

 

சிலபுத்த மடாலயங்கள் உட்பட மொத்தம் 64 கோவில்கள் கட்டினாள். தன்னைச் சுற்றி இருந்தவர்கள் யாரையும் நம்பமுடியாத நிலையில் தனது ஆட்சியில் வேறொரு புரட்சியையும் செய்தாள் தித்தா. மாடு மேய்க்கும் ஓர் இளைஞனை, கடிதங்கள் விநியோகிக்க வந்தவனை, அரசியலுக்கு முற்றிலும் புதியவனை என்று அவர்களுடைய புத்தி கூர்மையைக் கண்டறிந்து அடுக்கடுக்காய் பதவிகளை அளித்து, ஒரு கட்டத்தில் தனது மந்திரிகளாக்கிக் கொண்டாள். விசுவாசம் கொண்ட அவர்கள், அவள் எதிர்கொண்ட பல்வேறு எதிர்ப்புக்களையும் அடக்க உதவினர்.

மேலும் ராணி தித்தா கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்து கலவரப் பூமியாகப் பல ஆண்டுகள் காட்சியளித்த காஷ;மீரத்தை உறுதியுடன் செயல்புரிந்து, அமைதி நிலவச்செய்து, ஒருசக்தி வாய்ந்த பரம்பரை ஆள்வதற்கு வழி செய்தாள். 22வருடங்கள் ஆட்சிக்குப் பின் தனது 79வயதில் மகாராணி தித்தா தனது சகோதரனின் மகனான 'சம்கிராமராஜனை' அரசனாக்கினாள். 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பாரதத்தின் மீது கஜினி முகமது படையெடுத்தான். சக்தி வாய்ந்த இந்துப் பேரரசான ஷhஹி அரசு அவன் முன் வீழ்ந்த போதிலும் மகாராணி தித்தாவினால் படைக்கப்பட்ட உறுதியான, கட்டுக்கோப்பான அரசாக அமைந்த காஷ;மீரம் அவனை இரண்டு முறை தோற்று ஓடச் செய்தது.

இவ்வாறு இந்தியாவில் பெண்கள் மோசமாகப் புறக்கணிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் சமூக அநீதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தன் நாட்டின் அமைதி காக்கப் போரிட்டவள் மகாராணி தித்தா என்பது பெருமைக்குரியதே. இந்தியாவின் முதல் வரலாற்று நூல் என்று போற்றப்படும் காஷ;மீரத்தின் வரலாறான ராஜதரங்கிணியின் ஆசிரியர் கல்ஹணர் 'குதிரையின் குளம்படியில் நிற்கும் நீரைக் கூடக் கடக்க முடியாதவள் என்று கருதப்பட்ட இவள் (மகாராணி தித்தா) வீர அனுமனை ஒப்ப, கடல் போன்ற தனது பல எதிரிகளை எளிதில் அடக்கி வென்றாள்' என்று தித்தாவின் வெற்றியைப் புகழ்கிறார். இதனை,

 'கோஷ;யதோ லங்கனே யாஸ்யா: சக்திர்நாக்ஜாயி கேனசித்

  வாயுபுத்ராயிதம் பங்க்வா தயா ஸங்காப்தி லங்கனே.'(ராஜதரங்கிணி 226)

   என்ற சுலோகத்தின் வாயிலாக தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

ராணி அவந்திபாய்

மத்திய பாரதத்தின் ராம்கர் சமஸ்தானத்தின் அரசர் விக்ரமாதித்யசிங்கின் மனைவியே ராணி அவந்திபாய் ஆவார். நோய்வாய்ப்பட்டிருந்ததால் தன்னால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்று கருதிய அரசர் தனது நிர்வாக ஆட்சியை கவனிக்கும் பொறுப்பினை கிழக்கிந்திய கும்பெனி ராம்கருக்கு ஒப்படைத்தார். ஆனால் அரசி அவந்திபாய் தான் இருக்கும் போது அந்நியர் தனது நாட்டை நிர்வகிக்கவோ, அதன் ஆட்சிக்கு வழிகாட்டவோ தேவையில்லை என்று கருதி கும்பெனியின் நிர்வாகியை வெளியேற்றிவிட்டு ராச்சியத்தின் முழு பொறுப்பினையும் தானே ஏற்றுக் கொண்டார். ராணி அவந்திபாய் தனது நாட்டைக் காப்பாற்ற ஜான்சிராணி தலைமையில் 1857ம் ஆண்டு நிகழ்ந்த முதல் சுதந்திர போரில் தனது பங்கை ஆற்ற முனைந்தார். அந்தவகையில் 4000 வீரர்கள் கொண்ட படையை நிறுவி, தானே அதற்குத் தலைமை தாங்கி, கேரி என்ற இடத்தில் ஆங்கிலேயரைச் சந்தித்து, மின்னல் போலச் சுழன்று போரிட்டு அவர்களை விரட்டினார். இப்படி அவரது இராஜ நிர்வாகச் செயல் பல.  மத்திய பிரதேச கிராமியப் பாடல்களிலும், நடனங்களிலும் நாயகியாக இன்றும் போற்றப்படுகிறார் ராணி அவந்திபாய்.

ராணி ஸாரந்தா

இராஜ புத்திரர்களின் சிறிய சமஸ்தானம் ஒன்று அதற்கு மன்னனாக அனிருத் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரண்டு சகோதரிகள் அதிலே இளைய சகோதரி ஸாரந்தா ஆவாள். புந்தேல்கண்டின் ஓர்ச்சா பகுதி மன்னனான ராஜா சம்பத்ராய் எனும் தன் நண்பனை அவளுக்கு மணமுடித்து வைத்தான் அநிருத். ராஜாசம்பத்ராய் ஆட்சிபீடமேறிய நாளிலிருந்து மொகலாயர்களுடன் பகையை வளர்த்து வந்தான். கப்பம் கட்ட மறுத்தான். அவர்கள் ஆட்சியை விஸ்தரித்த பிரதேசங்களை எல்லாம் தன் ஆட்சிக்குட்படுத்தி அவர்களுடைய விஸ்தரிப்பிற்கு முட்டுக்கட்டையாக இருந்தான். ஒவ்வொரு முறையும் தோற்று ஓடினான் சாஜகான். சாஜகானது இறுதி ஆட்சிக் காலத்தில் சம்பத்ராயை வெல்ல முடியாதென்றுணர்ந்த சாஜகானின் மகன் தாராஸிகோ நயவஞ்சகமாக சம்பத்ராயை தனது நட்பு வலைக்குள் சிக்க வைத்து சம்பத்ராயை தனக்கு கீழே கட்டுண்டு இயங்க வைத்தான்.

வருடத்திற்கு 9லட்சம் வருமானம் தரக்கூடிய கால்பி எனும் பிரதேசத்தினை அவனுக்கு பரிசாக வழங்கி சுகபோகத்தில் அவனைத் திழைக்கச் செய்து தனக்கு அடிமை போலவே வைத்திருந்தான் தாராஸிகோ. சம்பத்ராயின் மனைவியர்களும் அவனுடேனேயே அங்கேயே தங்கி வாழ்ந்தனர். ஆனால் ஸாரந்தா மட்டும் அமைதியாகத் துன்பமடைந்தவளாக  இருந்தாள். அவளைப் பார்த்த சம்பத்ராய் 'ஓர்ச்சா வாழ்க்கைக்கும்  இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டான். அதற்கு அவள் 'அங்கு நான் ராணியாக இருந்தேன். இங்கு அடிமைப் பெண்ணாகவிருக்கின்றேன். இன்று நீங்கள் தலைகுனிந்து வணங்கும் பாதுஸா ஓர்காலத்தில் உங்கள் பெயரைக் கேட்டாலே நடுநடுங்கினான். இன்று  என்ன நிலை இந் நிலையில் நான் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது?'என்று வினவினாள் அவளுடைய அக் கூற்றில் தன்நிலையுணர்ந்த சம்பத்ராய் தன்நாடு திரும்பி மீண்டும் சுயமாக வாழத்துவங்கினான். சாஜகான் இறந்த பின்னர் சகோதரர்களுக்கிடையே குழப்பம் சூழ்ந்து ஒருவரையொருவர் வென்று அரசாட்சியைக் கைப்பற்ற முடிவெடுத்தனர். ஒளரங்கசீப் அனைவரையும் புறம் தள்ளி முன்னுக்கு வரத் தீர்மானித்தான். சம்பல் நதிப் பகுதியில் ஓர் ஆபத்தான நிiயில் சம்பத்ராயின் உதவியை நாடி ராய்க்கு செய்தி அனுப்பினான் ஒளரங்கசீப்.

தாராவுடன் நட்பு இருந்தாலும் உதவி கேட்டவரைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் ஸாரந்தாவின் யோசனைப்படி புந்தேல் வீரர்களின் படை விரிந்தது. ஆயினும் ஓர் சிறிய தவறினால் பாதுஸாவின் படையால் புந்தேல் வீரர்கள் இறந்தார்கள். அதே சமயத்தில் அந்நிலையறிந்து மேற்கிலிருந்து ஸாரந்தா ஓர் படையுடன் வருகை தந்து சம்பத்ராய்க்கு உதவி வெற்றியை வசமாக்கினாள். போர்களத்திலே பாதுஸாவின் படைத்தளபதி கான்சாஹிப் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த வேளை அவனருகே மிக அழகான வெள்ளைப் புரவியொன்று நின்று கொண்டிருந்தது. அக்குதிரை மிகவும் கோபாவேசத்துடன் நின்றது. அதனை உயிருடன் பிடித்து தருபவர்களுக்கு  சிறந்த வெகுமதி தருவதாகக் கூறினான் ராய். ஆயினும் யாருமே அக்குதிரையின் அருகிலே செல்லத் தயங்கினார். ஆனால் ஸாரந்தா லாவகமாக அதனருகே சென்று அக்குதிரைக்கு தடவிக் கொடுத்து தனது அன்பினால் அக்குதிரையை தன் வசமாக்கி கொணர்ந்தாள். பின்னர் ஒளரங்கசீப் அரசனானான். சம்பத்ராயின் உதவிக்காக அவனுக்கு 4 மன்ஸப்   ( பெரிய நிலப்பகுதி ) நிலமளித்து மன்ஸப்தார் பட்டமளித்து கௌரவித்தான். மீண்டும் மொகலாயர்களின் நண்பனாகவும் அடிமையாகவும் மாறினான் ராய். எதிர்ப்படையிலிருந்த கான்சாஹிப் சாமர்த்தியத்தினால் ஒளரங்கசீப்பின் படையில் சேர்ந்தான்.

ஒருநாள் சம்பத்ராயின் மகன் சத்ரஸால் வெள்ளைக்குதிரையிலே போவதனைக் கண்டு அதனை அவனிடமிருந்து பறித்தான் கான்ஸாஹிப். அதனால் ஒளரங்கசீப்புடன் பெரும் விவாதம் புரிந்தாள் ஸாரந்தா. இப் பிரச்சினைகளையறிந்த சம்பத்ராயும் தன் பட்டங்களையெல்லாம் துறந்து தனது மனைவி மக்களுடன் மீண்டும் தனது இராஜ்ஜியத்திற்கு வந்து சேர்ந்தான். இதனால் ஆத்திரமடைந்த       புல்தேன் ஓர்ச்சா கோட்டை    

            ஒளரங்கசீப் நன்றி மறந்தவனாக சம்பத்ராயைக் வெல்லப் படைகளை அனுப்பி வைத்தான். ராய் தன் குடும்பத்துடன் காட்டிற்குள் புகந்து மறைந்து அங்கிருந்தபடியே யுத்தத்திற்காக ஆட்களைத் திரட்டினான்.  தன் வீரர்களால் ராயைக் கண்டுபிடிக்க முடியாது என்றறிந்து தன் வீரர்களை கோட்டை முற்றுகையை கைவிடும்படி பணித்தான். அவர்களும் முற்றுகையைக் கைவிட்டு விட்டு திரும்பினர். இதனையறிந்த ராய் மீண்டும் ஓர்ச்சா கோட்டைக்கு திரும்பினான். அதையறிந்து மீண்டும் ஒளாரங்கசீப் கோட்டையை முற்றுகையிட்டான். கோட்டைக்குள் சுமார் 20000ற்கும் மேற்பட்ட மக்கள் மன்னனுடன் இருந்தனர். முற்றுகை பல மாதங்கள் தொடர்ந்தது. தன் மக்கள் தன்னால் மடிவதனைக் கண்டு ஒளரங்கசீப்புடன் ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்தான் சம்பத்ராய். தன் மகன் சந்ரஸாலிடம் ஓலையை கொடுத்து மன்னனுக்கு அனுப்பி வைத்தான்.                                       

மறுநாள் சமரசம் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆயினும் தம் மகனை அவன் தம்முடனேயே வைத்துக் கொள்வதாய் முடிவு செய்தான். அதன்பின்னுள்ள சதியை நன்குணர்ந்த சம்பந்ராயும் ஸாரந்தாவும் தாம் கோட்டையை விட்டு வெளியேறி விட்டால் கோட்டை தாக்கப்படாது என்றுணர்ந்து ஐந்து வீரர்களுடன் கடும் காய்ச்சலுடன் மன்னனும் ஸாரந்தாவும் கோட்டையை விட்டு இரகசிய வழியில் வெளியேறினர். இரகசியமாக அவர்களை ஒளரங்கசீப்பின் படையொன்று பின் தொடர்ந்து வந்து அவர்களைத் தாக்கியது.

அதில் மன்னன் தாக்கப்பட்டு உயிர் துறக்கும் தருவாயை அடைந்தான். அப்பொழுது தன் மனைவி சாரந்தாவை பார்த்து நான் வீரமிழந்து எதிரிகளால் கைது செய்யப்பட விரும்பவில்லை என்னைக் கொன்று விடு என்று கெஞ்சினான். துன் கைக்கட்டாரியால் அவன் நெஞ்சைக் குத்தி தன் கணவனுக்கு நிம்மதியளித்தாள் ராணி ஸாரந்தா. மறுகணமே புந்தேல் வீரர்களை வீழ்த்திய மொகலாயப் படை ராணியை நெருங்கியது. அதன் தலைவன் தாயே நான் உன் அடிமை என்ன செய்ய வேண்டும் என்று சொல் மண்டியிட்டுக் கேட்டான். அதற்கு ஸாரந்தா 'என்பிள்ளைகள் யாரேனும் தப்பி வந்தால் இந்ந சடலங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என்று கூறியபடி தன் கைக் கட்டாரியால் தன் மார்பையே குத்திக் கிழித்து தன் கணவன் உதிரமும் தன் உதிரமும் ஒருசேர மண்ணில் மடிந்தாள் வீர ராணி ஸரந்தா.

இவ்வாறாக அன்றிலிருந்து இன்றுவரை இராஜநிர்வாகத்திலே பெண்களின் வகிபங்கானது தனிச்சிறப்பானதாகவே காணப்படுகின்றது. தன் மண்ணையும், தன்னையும், பெண் மானத்தையும் காத்து, இன்றுவரை பெண்குலம் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. உலகை தன்னிலிருந்து தோற்றுவித்தவள் பெண்ணே என்று சிந்துவெளி முத்திரைகள் தொட்டு வேதங்களும் ஏனைய சாஸ்திரங்களும் கூறுகின்றன. அவ்வுண்மையை தன் மதிநுட்பத்தினாலும் நிர்வாகத் திறனிலாலும் இன்றுவரை காத்து வருபவர்களாகப் பெண்கள் திகழ்கின்றனர். அதிலும் இந்துப் பண்பாட்டின் பாரம்பரியத்திலே தோன்றும் பெண்கள் உலகின் ஏனைய பெண்களிலும் பார்க்க தலை சிறந்தவர்களாகவும், இராஜநிர்வாகத்தில் பங்கு கொண்டு நாட்டினையும் மக்களையும் காத்து வருபவர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர் எனலாம்.

உசாத்துணை நூல்கள்

01..சுவாமி. பிரபுபாதர்.,(2011), 'கிருஸ்ணா',பக்தி வேதாந்த புத்தக அறக்கட்டளை.

02.சுவாமி. பிரபுபாதர்.,(2006), 'பகவத்கீதை – உண்மையுருவில்', பக்தி வேதாந்த அறக்கட்டளை,  சென்னை.

03.சிவலிங்கம்.,(2007), 'மாணவர்களுக்கான மஹாபாரதக் கதை', சண் அச்சகம்,மட்டக்களப்பு.

04.சுவாமி.ராகவேசானந்தர்.,(2005), 'சிறுவர்களுக்கான மஹாபாரதம்', ஸ்ரீ இராமகிருஸ்ண மடம் மயிலாப்பூர், சென்னை.

05. https://www.google.com/search?q=%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&tbm=isch&ved=2ahUKEwjiudrY-dvnAhWcwnMBHSQsAykQ2-cCegQIABAA&oq=%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D&gs_l=img.3...30641.32350..33266...1.0..4.482.1912.1j3j2j0j2......0....1..gws-wiz-img.....10..35i39j0j35i362i39.UKZ1MU_h750&ei=dEpMXuKvGJyFz7sPpNiMyAI&bih=657&biw=1366 2021.2.20. 10.00 pm

06. https://www.google.com/search?q=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF&tbm=isch&ved=2ahUKEwjP6-bp-dvnAhVgG7cAHW-MBFUQ2-cCegQIABAA&oq=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF&gs_l=img.3..0i19l5j0i10i19j0i19l4.80848.82563..83530...1.0..2.457.2311.0j2j0j2j3......0....1..gws-wiz-img.....10..35i39j35i362i39.zfbGDplZHRg&ei=mEpMXs-_D-C23LUP75iSqAU&bih=657&biw=1366 2021.02.23. 11.00 pm.

07.(2019), 'ஸ்ரீ ராமகிருஸ்ண விஜயம்;', ஸ்ரீ இராமகிருஸ்ண மடம் மயிலாப்பூர், சென்னை.