4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

புத்தகத்தின் புண்ணியம் - தா.சரவணன்


 

புத்தகத்தின் புண்ணியம் 


தன்னை படித்துவிட்டு

தான் தான் அறிவாளி என்ற

அகங்கார செருக்குடன்

திரியும் மனிதர்களைப் போல

இல்லாமல்

தன்னடக்கத்திலிருந்து

எப்போதும்

மீறியதில்லை

புத்தகம்

 

போட்டித் தேர்வில்

முதலிடத்தில் நீ

முழுவதும்

தனக்குரிய வெற்றி என

கொண்டாடுகிறாயே!

எந்நேரத்தில் நீ 

புரட்டினாலும்

முகம் சுளிக்காமல்

புன்னகைத்த புத்தகத்தையும்

எழுதியவர்

தொகுத்தவர்

உதவியை ஒரு கணமேனும்

எண்ணிப் பார்த்தாயா நீ?

 

எல்லோருக்கும்

ஒரே மாதிரியாக இருக்கிறது

புத்தகம்

அதைப் படிப்பவர்களே

வேறுபட்டு நிற்கிறார்கள்

 

படிப்பின் மதிப்பை

உணர்ந்தவர்கள்

நேரத்தை வீணாக்குவதுமில்லை

புத்தகத்தை கைவிடுவதுமில்லை

 

தேர்வுக்காக படிப்பவர்கள்

தேர்ச்சி பெற்றதும்

பெற்றவர்களை

முதியோர் இல்லத்தில்

விடுவதைப் போல்

விட்டுவிடுகிறார்கள்

புத்தகத்தை

 

முதலில்

படிப்பவனாய்

படைப்பவனாய் இருங்கள்

பிறகு பாராட்டுகளோடு

உங்களைப் பார்க்க வருபவர்கள் 

பலராய் இருப்பார்கள் 

 

தாய்

அன்பூட்டி வளர்க்கிறாள்

புத்தகமோ  நமக்கு

ஆயுள் வரை

அறிவூட்டி

வளர்க்கிறது

 

பழகப் பழகத்தானே

பாலும் புளிக்கும்

படிக்க படிக்கத்தானே

எந்நாளும்  சிறக்கும்

 

பேச்சுத் துணைக்கு

ஆளில்லை என்ற

கவலை எதற்கு?

பேசிக் கொண்டிருங்கள்

புத்தகங்களோடு

 

மறந்துவிடுகிறது என்பதற்காக

படிக்காமல் இருந்துவிடாதே

மறதி கழித்தலானால்

மறவாமை கூட்டல்

 

மனிதர்கள் புண்ணியம் தேடி

போவதை விட

புத்தகம் தேடி போனால்

அதில் கிடைக்கும்

பூர்வ ஜென்ம

புண்ணியம்

 

புத்தகம் பூவை போன்றது

அதன் புனிதமான பொலிவை

இழக்காமல் இருக்க

மென்மையாகக் கையாள

வேண்டும்

 

புத்தகம் தாங்கிய

கடவுள் ஆசிரியரை

விட்டுவிட்டு

மாணவன்

ஆயுதம் ஏந்திய

கடவுளிடம்

படிப்பு கேட்டு

அன்றாடம்

வேண்டுகிறான்

 

கற்பித்துவிட்டு

இறந்தவர்களை

மண்ணில்

புதைத்தபின்னும்

பாடம் கற்க

வருகின்றனவாம்

கறையான்கள்

 

எழுதிவிட்டு

இறந்தவர்களின்

எழுத்துகளில் இருக்கின்றது

எழப்போகும் எண்ணற்ற

விதைகள்

 

நீ வளரும் போதே

புத்தகங்களை

வாசித்துக்கொண்டே போ

வளர்ந்த பின்பு

பௌர்ணமியாய்

பிரகாசிப்பாய்

 

புத்தகமில்லா

வீடுகளில் தான்

இன்னும் உதயமாகாமல்

இருக்கிறது சூரியன்

 

தா.சரவணன்

கல்யாண மந்தை,

திருவண்ணாமலை(மாவட்டம்)