4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

மரணத்தை மரணிப்போம் !! - இரா. விஜயலெட்சுமி


மரணத்தை மரணிப்போம் !!

மண்ணில் புதைக்கப்படும் விதை                      

மண்ணைக் கீறி முட்டிமோதி 

விருட்சமாவதில்லையா ?

மாலையில் சுருங்கி மறைந்து வீழும்

மலர்கள் மலர்ந்து மணம்

பரப்புவதில்லையா ?     

கூட்டுப் புழுக்கள் பட்டாய்ப் 

பளபளப்பதில்லையா ?    

ஜனிக்கும் உயிர்கள் மரணிக்கும் !  

ஐந்தறிவு படைத்த சீவன்கள்

மறந்ததுண்டோ ?                         

மரணத்தை எதிர்கொண்டு      

எதிர்த்துப் போராடி  பயன்தந்து 

வாழவில்லையா ?     

இன்புற்றிருக்கவில்லையா ?   

இறந்தவர் பிறப்பதும்                

பிறந்தவர் இறப்பதும் இயற்கையே  !

பகுத்தறிவு  படைத்த மானுடா ! 

இயற்கையை மீற நினையாதே !

இயற்கையைக் கண்டு அஞ்சாதே  !

இயற்கையை ஏற்கப் பழகு  !     

காலனைச் சிறு புல்லென மதித்த

கவிஞனின் கவிதைவரிகள்  காதில்

ஒலிக்கவில்லையோ ?                       

காலனைக் காலால் உதைத்த 

மார்க்கண்டேயன் மனத்திரையில்

தோன்றவில்லையோ ?                           

உயிர் பறிக்க வந்த எமனிடமே

வரம்பெற்ற கதை கேட்டதில்லையோ 

வாழ்க்கைப் போர்க்களத்தில்      

எதிர்நீச்சலிட வேண்டாமோ  ?              

வெற்றி வாகைசூட வேண்டாமோ ?  

மரணத்தை நீயாய் நாடாதே !      

மண்ணில் ஜனித்த நீ - உன்        

பங்கைப் பூமியிலாற்றுமட்டும்

மரணத்தை மணக்க நினையாதே !

மரணமே உனைத் தழுவிட வந்தாலும்

மனவெழுச்சி கொண்டு புறந்தள்ளிவிடு !               

மனக் கவலைகளைத் தேக்கி            

மனத்தைக் குப்பைத் தொட்டியாக்காதே !

கவலைகளை மறந்து களித்து வாழ் ! 

சிரித்து வாழ் ! சிந்தித்து வாழ் !

சாவிற்குச் சாபமிட்டு வாழ் !     

சவால்விட்டு வாழ்! - உன் 

பிறப்பிற்கான அர்த்தத்தைத் தேடு  !

பொய்யுடம்பைப் புகழுடம்பாய்    

மாற்றும் வித்தையைக் கற்றிடு !

மானுடா !                                     

மரணிக்கப் பிறந்தவன் நீயல்லன் !

மரணத்தை மரணிக்கப் பிறந்தவன் நீ !!

மானுடா !

மரணிக்கப் பிறந்தவன் நீயல்லன் !

மரணத்தை மரணிக்கப் பிறந்தவன் நீ .

 

 

 

இரா. விஜயலெட்சுமி,

பட்டதாரி தமிழாசிரியை,

தி.சுக்காம்பட்டி 621 310.

மணப்பாறை கல்வி மாவட்டம்.

திருச்சி மாவட்டம்.