4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

தாய்க்கொரு கண்ணீர் தாலாட்டு - வினோராஜ். லா



  தாய்க்கொரு கண்ணீர் தாலாட்டு....


கருவுக்குள் உயிரான போது

கனவோடு சுமந்தாய்...

கண்மணி என் முகம்காண

கடும் துன்பம் ஏற்றாய்...

கனிந்த நாளும் வந்தது

கருவறைதனை நான் கிழிக்க...

கடும் துன்பவலியால் உயிர்நோக துடித்தாயே

கண்ணீரில் உன் விழி நனைய என்

கண்களின் விழித்திரையில் முதல் பதிந்த

கடவுளம்மா நீ....

கடுவன் நான் பிறந்த செய்தி கேட்டு

கண்களில் நீ பட்ட இன்பத்தைக்

கண்ணாரக் கண்டேன் அன்று...

கடும்பனி காலம் அது

கசங்கி போன உன் சேலைக்குள்...

கதகதப்பாய் நான் தூங்க

கண்விழித்து நீ தூங்காத இரவுகள் எத்தனையோ...

கடவுளுக்கும் தெரிந்திருக்கும் என்னை

கரயேற்ற நீ பட்ட பாடு..

கவர்மெண்டுல மருந்து வாங்கிட

கடன் வாங்கிய பஸ்சுகாசு என்

கண்ணுக்குள்ள நிக்குதம்மா

காட்சி படமா இப்பொழுது...

கஞ்சிசாதம் வடிச்சி தந்து

கருசனையா என வளத்த...

கடைசி மகன் என்மேல உன்

கனவுகளையும் சுமக்கச் செய்த...

கண்மணியே என் உயிர்தாயே

கல்வி எனக்கு தந்த போது..

கடன்காறி ஆகிவிட்ட

கடனாளிகள் துரத்தியப்ப நீ

கண்ணீர்விட்டழுத அந்த நாள்

கண்ணு முன்ன நிக்குதம்மா...

கடும் பசியில் நீ வாட உன்ன

கரசேர்க்க நானும் உழச்சேன்...

கடும் வெயிலில் நான் நிற்க

கண்டபோது உருகிப்போனாய் மெழுகாய் நீ...

கரம் பிடிச்சி நான் வாழ

கலங்கரையாய் வழி காட்டினாய்...

கல்வியில் நான் ஆசானாய் வலம் வர

கண்ணாரக் கண்டு மகிழ்ந்தாயே...

கண்ணு மங்கும் காலத்திலும்

கடந்த கால கத சொன்னாயே...

கடைசி வர உங்கூட

கலஞ்சிடாம நான் வாழணும்...

கடலுவெள்ளம் வத்தினாலும்

கதிரும் நிலவும் மறஞ்சாலும் உன்

கருவறைக்குள் மறு பிறப்பாய்

கண்ணுறங்க மனம் ஏங்குதம்மா...

கதகதப்பான உன் கருவற

கங்கையை விட புனிதமம்மா...

கருணைமனம் கொண்ட அம்மா நான்

கண்ணு மூடும் வேளையிலும் என்

கண்ணுக்குள்ள பதிந்திடுமா என்

கருவிழியாய் நீ...

காஞ்சிப்போன உன் தலைமுடி

காற்றில் அசைய வெறும்

கழுத்தோடு உன்ன

கண்டபோது

கலங்கி போனேன்

கடனகிடன வாங்கிவந்து உன்

கழுத்துக்கு மால செஞ்சிதரணும் வெறும்

கழுத்தா மறுபடியும் உனக்கண்டா

கண்ணிருந்து என்னப்பயன் சொல்லு ஆத்தா...

கசங்கி போன உன் சேலையும்

கலறு போன ரவிக்கையும் கண்டு

கலங்குதடி ஆத்தா

கவருமெண்டுல வேல வரட்டும்...

கலர்கலராய் சேலையோடு

கண்டிப்பாக வருவேண்டி யம்மா...

கண்ணுக்கு பிடிச்ச வண்ண

கலறு கொண்ட பண்டம்...

கனவுல அனுப்புறேன்...

கதியில்ல தாயி

கண்ணாடி வளஞ்சிருக்கு...

கண்ணுதெரியலயே சொன்னியே

கண்ணீரு வருதடி யம்மா..

கடவுள்கிட்ட கேளு...

கன்னிக்கோழி முட்டையெல்லாம்

கடைவீதிக்கு போக

கஞ்சிமட்டுமா உனக்குணவு

கரண்டில்லா வீட்டில

கருச்சையும் வந்து போகும்

கவனமாக நீ இரு...

கடனெல்லாம் தீரும் வர

கலங்காம நீ இரு...

கருங் காகம் வாசலில்

கரையும் ஒரு நாள் வருவேன்

காலத்த என் முகம் காண

காத்திரு தாயே...

காத்திரு தாயே

கண்ணீருடன் உன்

கடுவன் மகன்...

வினோராஜ். லா

14-146/1,வாழப்படப்பு விளை,

வெள்ளிகோடு,முளகுமூடு -அஞ்சல்,

கன்னியாகுமரி மாவட்டம்.

அஞ்சல் எண் : 629267.

மின் அஞ்சல் : jiojisho@gmail.com

அலைப்பேசி : 9842314458.