4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

நாவினால் சுட்ட வடு - அக்ரி.கோ.ஜெயகுமார்

 

                             

நாவினால் சுட்ட வடு

 அக்ரி.கோ.ஜெயகுமார்,

மேனாள் வேளாண்மை இணை இயக்குநர்,

காந்தி நகர்வேலூர் -6.

அலைபேசி எண்: 94869 38900.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.        - குறள்.

 

நாவினால் சுட்ட வடுக்கள் என்றும் ஆறுவதில்லை. நினைக்க, நினைக்க காயங்கள் மேலும் ஆழப்படத்தான் செய்கின்றன. சம்மந்தப்பட்ட தவறுகள் கூட பல சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகள் மன்னிக்கப்படுவதும் இல்லை, மறக்கப்படுவதும் இல்லை. ஒருவர் எத்தனையோ செயல்களில் நல்லவராக இருந்திருக்கலாம். எத்தனையோ பேருக்கு உதவிகள் செய்திருக்கலாம். ஆனால் கட்டுப்பாடில்லாமல் மற்றவர்களை கொடுஞ்சொற்களால் வேதனைப் படுத்துவாரேயானால் அவர் செய்த அத்துணை செயல்களும், நன்மைகளும், உதவிகளும் மங்கிப் போய் விடும். அவர் பேசிய கடுஞ்சொல் மட்டுமே பிரதானமாக நிற்கும்.

 எனவே தான் வள்ளுவப் பெருந்தகையாரும் எதைக் காக்க விட்டாலும் பரவாயில்லை, நாக்கையாவது காக்கச் சொன்னார். எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கிறது. பல குடும்பங்கள் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் தவிக்கின்றது. பேச்சு வழக்கினில் அன்றாடம் பல சமயங்களில் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்கத்தான் போகிறேன் என்று பலரும் சொல்வதினை கேட்டிருக்கின்றோம். இது பல நேரங்களில் நம்மிடையே மேலோங்கும் இயற்கையான சுபாவமே! சரியான சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது, மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அவர்களுக்கு கிடைக்கின்ற திருப்தியே அலாதி என்றாலும், அப்படிக் கேட்டு விட்டு என்றென்றும் சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பகைத்துத் கொள்கிறோம் என்பதனை பலரும் மறந்து விடுகின்றோம்.

யாருமே குற்றமற்றவர்கள் அல்ல! எல்லோரும் ஏதாவது ஒரு சமயங்களில் பலமிழந்து விடுகின்றார்கள். பலரும் ஒரு சில சம்பவங்களில் எப்போதும் பலவீனர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு சிலர் காலப்போக்கில் தங்களின் தவறுகளைத் திருத்திக் கொள்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொள்வதில்லை. இருந்த போதிலும் கடுமையான, கூர்மையான வார்த்தைகளால் அவர்களின் குறைகளையும், குற்றங்களையும் வார்த்தைகளால் சாடுவது சரியல்ல. யாரை எப்படிச் சாடுகின்றோமோ அவர்களும் நம்மை அப்படியே சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவார்கள்.

 பழிக்குப் பழி! இன்றில்லாவிட்டாலும்  என்றாவது ஒரு நாள் அதற்கான சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கித்தரக்கூடும்.  " அன்று என்னைப் பெரிதாகக் கேட்டாயே? நீ மட்டும் யோக்கியமா? " என்ற ரீதியில் அவர்கள் கேட்க, பதிலுக்கு நாம் ஆத்திரப்பட அதன் விளைவாக ஒரு நீண்ட பகையே உருவாகி விடுகிறது அல்லவா? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். ஒவ்வொரு குற்றத்திற்காக, ஒவ்வொருவரையும் நம் நாக்கால் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டால் பின் சுற்றம் என்பதே நம்மைச் சுற்றி இருக்காது. சுற்றம் மட்டுமல்ல! நண்பர்களும் நமக்கு இருக்க மாட்டார்கள். பின் நாம் தனி மரம் தான்.

இன்றைய குடும்பங்களில் விவாகரத்துக்கள் அதிகரிக்க மிக முக்கிய காரணம் கட்டுப்படுத்தாத நாக்கு தான். உப்புச் சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் கூர்மையான, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவது தான். ஒரு காலத்தில் வேறு வழியில்லை என்று சேர்ந்திருந்தார்கள். பொறுமையாக இருந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை. மேலும் ஈகோ பிரச்சினை வேறு தலை விரித்தாடுகிறது. இன்றைய விவாக ரத்து வழக்குகளில் இரு தரப்பினரும் சொல்கின்ற காரணங்களில் உண்மையான சித்ரவதை, பெரிய குறைபாடுகள் போன்ற காரணங்கள் குறைவு தான். உண்மையில் பெரும்பாலான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகள் போட்டுக் கொள்ளும் சண்டைகளுக்கான காரணங்கள் போலத் தான் அவைகள் இருக்கின்றன. குடும்பம் இரண்டாகப் பிரிகின்ற போது அந்த குழந்தைகளின் நிலை பரிதாபகரமானது என்பது கூட கவனிக்கப்படுவதில்லை. பெரும்பாலான தம்பதிகள் கடைசியாகச் சொல்கிற காரணம் இது தானாம் " அந்த அளவுக்கு பேசி விட்ட பிறகு அந்த மனிதருடன்/ பெண்ணுடன் இனியும் சேர்ந்து வாழ்வது என்பது சாத்தியமில்லை" என தெரிவிக்கின்றார்கள் என்கிறார் ஒரு மூத்த வழக்கறிஞர்.

இது குடும்பத்திற்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் மட்டும் பூதாகரமாகும் ஒரு பிரச்சினை அல்ல. அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும் கூட நம் மன அமைதியை நிர்ணயிக்கும் ஒன்றாக இருந்து விடுகிறது. ஒரு சில நிமிடங்களில் மறந்து விடக்கூடிய எரிச்சல் மிகுந்த சந்தர்ப்பங்களைக்கூட சுடு சொற்களால் பெரிய விஷயமாக பூதாகரமாக்கி விடுகின்ற எத்தனையோ சம்பவங்களை நம் அன்றாட வாழ்க்கையில் காண முடிகிறது. அதற்காக யார் என்ன சொன்னாலும் நாம் பொறுத்துக் கொண்டு போக வேண்டியதில்லை.நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை சகித்துக் கொண்டே இருந்து விடத்தேவையில்லை. தவறுகளை சுட்டிக் காட்டுவதும், உறுதியுடன் நம் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க வேண்டியதும் சில நேரங்களில் அவசியமாகும். எனவே நாம் சொல்ல வேண்டியதை உறுதியாகவும், தெளிவாகவும் சொல்லுதல் மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் அவ்வாறு சொல்லும் வார்த்தைகளில் விஷம் வேண்டாம், விஷமமும் வேண்டாம். நாம் தெரிவிக்கும் கருத்துக்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் போதுமானது. அந்த விஷயம் அப்போது ஏற்று கொள்ளப்படாவிட்டாலும் கூட சம்பந்தப்பட்டவர்களால் உணரப்படக்கூடும். அப்போது சற்று சங்கடமாக இருந்தாலும் விரைவில் அவை மறக்கப்பட்டு விடும்.

ஆனால் வார்த்தைகளில் விஷம் கலந்திருக்குமேயானால் நாம் சொல்கின்ற செய்தி உண்மையாகவே இருந்தாலும் அது ஆறாத வடுவாக அடுத்தவர் மனதில் தங்கி விடும். பின்னர் நீண்ட பகைமை வளர்ந்து விடும். பல பேர் குறைகளைச் சுட்டிக்காட்டும் போது, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையும் சேர்த்து இழிவாகப் பேசுவார்கள்.

 " உங்கள் குடும்பத்திற்கே இந்த புத்தி அதிகம் இருக்கிறது" என்கிற விதத்தில் பேச்சுக்கள் இருக்கும். இது எரிகின்ற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போலாகிவிடும். இன்னும் சிலர் தேவையற்ற அடைமொழிகளுடன் இழிச்சொற்களையும் சேர்த்திடுவார்கள். இப்படி நாவினால் சுடும் சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு சிலர் பேசுவதை எல்லாம் பேசி விட்டுப் பின்னர் ஏதோ ஒரு கோபத்தில் சொன்னதை எல்லாம் பெரிது படுத்துவதா? என்று சமாளித்து சமாதானம் செய்வார்கள். ஆனால் புண் பட்ட மனம் சமாதானமாவது சற்று கடினம் தான். கோபத்தில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கான அங்கீகாரம் அல்ல. எனவே திருப்பி வாங்க முடியாத வார்த்தைகளை பேசாமல் இருப்பது தான் அறிவு. எல்லோரும் நமக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உதவக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே வார்த்தைகளில் ஜெயித்து விட்டு வாழ்க்கையில் தோல்வி அடைய வேண்டாம். வார்த்தைகளைத் தீட்டுவதற்குப் பதிலாக புத்தியை தீட்டினால் பயனுள்ளதாக இருக்கும். கிண்டல் பேச்சும், குத்தல் பேச்சும் அந்த நேரத்தில் நன்றாகத் தெரியும். உடன் இருப்பவர்கள் பாராட்டலாம், சிரிக்கலாம். ஆனால் அத்தகைய பேச்சுக்களினால் முக்கியமான உறவுகளை, நல்ல மனிதர்களை இழக்க நேரிடும். அதனால் அவர்களின் அன்பு முறிந்து விட்டால் நமக்கு நஷ்டமே என்பதை என்றும் மறக்க வேண்டாம்.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.