4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

பண்பாட்டு அசைவுகள் நூலின் உள்ளடக்கமும் பொருளும் - இள.அபிராமி

 



பண்பாட்டு அசைவுகள் நூலின் உள்ளடக்கமும் பொருளும்


இள.அபிராமி

முதுகலை இரண்டாம் ஆண்டு

இலக்கியத்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

தொ.ப. என்று அனைவராலும் அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களுள் ஒருவராவார். தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கூர்மையான ஆய்வுகளின் வழியாக வெளிக்கொணர்ந்தவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். திசம்பர் 24, 2020ல் மறைந்தார். அறியப்படாத தமிழகம் உட்பட 15'க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூகமரபுகளும் ஆகிய  இரண்டு நூல்களையும் ஒன்றாக்கிக் ‘காலச்சுவடு’ பதிப்பகம் 2001'ல் “பண்பாட்டு அசைவுகள்” என்ற பெயரில் வெளியிட்டது. அறியப்படாத தமிழகத்தின் கீழ் 7 கட்டுரைகளும், தெய்வங்களும் சமுக மரபுகளும் என்பதன் கீழ் 10 கட்டுரைகளும் உள்ளன.

            இவற்றில் அறியப்படாத தமிழகத்தில் உள்ள தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பௌத்தம்: எச்சங்கள், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கறுப்பு ஆகிய ஏழு கட்டுரைகளும் உறவு முறைகள், சடங்குகளும் நம்பிக்கைகளும், சிறுதெய்வ வழிபாடுகள், மதமும் சாதியும் என்ற நான்கு தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் பகுத்து விளக்கப்படுகின்றன.

உறவு முறைகள்

உறவு முறைகள் பற்றி வீடும், வாழ்வும் என்ற கட்டுரையில் உறவுப் பெயர், தங்கையும், அண்ணனும் தாய்மாமனும் என்ற இரண்டு உட்தலைப்புகளில் விளக்குகிறார்.

உறவு என்பதை ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே உள்ள இணைப்புப் பாலமாகக் கருதலாம்.  தமிழின் உறவுமுறைச் சொற்கள் மிகமிக அதிகம். ஆங்கிலத்தில் 'Uncle' என்ற ஓர் உறவுமுறைச் சொல்லுக்குத் தமிழில் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்ற மூன்று உறவுமுறைச் சொற்கள் உள்ளன.

இதே போல் 'Sister' என்பதற்குத் தமிழில் அக்காள்,  தங்கை, என்ற இரண்டு உறவுமுறைகள் உள்ளன.

உறவுப்பெயர்கள் பொதுவாக விளிப்பெயர்களாக விளங்குகின்றன. அம்மை, அப்பன், மாமன், அக்கன், தாத்தன், ஐயன் ஆகிய பெயர்கள் அம்மா, அப்பா, அக்கா, தத்தா, ஐயா என வழங்கி வருகின்றன. இன்றும் வழக்காற்றில் ஒருசில இடங்களில் அப்பன், மாமன், தாத்தன், போன்ற சொற்கள் உள்ளன.

தமக்கை – தம் +அக்கை, தமையன் – தம் +அய்யன், என்றும் மூத்தவனைக் குறிக்க “முன்” என்னும் சொலும் இலக்கியங்களில் வழங்கி வருகின்றன . அதுபோல், பின் பிறந்த இளையவனைக் குறிக்க “ பின்” என்னும் சொல் வழங்கியிருக்கலாம். “தம் பின்” என்ற சொல்லே தம்பி என மருவியிருத்தல் கூடும் என்று உறவுப்பெயர்கள் எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடுகிறார்.

“நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்”         (நற்றி 172)

என்னும் அடியில் நுவ்வை என்பது உடன்பிறந்த பெண்ணைக் குறிக்கிறது.

அம்மா என்ற சொல் கேட்பித்தல் என்னும் பொருளை உடையது வேதனை, வியப்பு, மகிழ்ச்சி ஆகிய இடங்களில் தன்னை மறந்து நாம் சொல்லக்கூடிய அம்மா என்ற சொல், “என்னை பாருங்கள், கேளுங்கள்” என்ற பொருளில்தான் ஒலிக்கப்படுகிறது என்று வீடும் வாழ்வும் எனும் கட்டுரையில் உறவுப்பெயர்கள் என்னும் தலைப்பின் கீழ் தொ.ப. அவர்கள் குறிப்பிடுகிறார். இதற்குச் சான்றாகத் தொல்காப்பியத்தில் “அம்ம கேட்பிக்கும்” என்பதனை மேற்கோளாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் “அம்ம” என்பது இடைச்சொல்லாக வருகிறது.

அண்ணன் தங்கை உறவினை இன்றைய காலக்கட்டத்தில் கவிதை, கதை, நாவல், திரைப்படம் போன்றவை சிறப்பாக காட்டுகின்றன. தொ.ப. அவர்களும் தாய் மாமன் உறவை முக்கிய உறவாகக் கருதிக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மாமன் உறவென்பது அண்ணன், தங்கை உறவின் அடுத்த கட்டம். தங்கை, அக்கா ஆகியோர் தாயாகும்பொழுது இவர்களின் அண்ணன், தம்பி தாய்மாமன் ஆகிறார்கள். இன்றளவும் கிராமப் புறங்களில் பெரும்பாலான இடத்திலும், நகர்ப்புறத்தில் ஒரு சில இடங்களிலும் தாய்மாமன் சீர் சிறப்பிடம் பெறுகிறது. காதுகுத்து, பெண் பூப்பெய்தல், திருமணம் என அனைத்திலும் தாய்மாமனுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

பெண் கொடுத்தல், பெண் எடுத்தல் அண்ணன், தங்கை உறவில் சிறப்பிடம் பெறுகின்றன.

சடங்குகளும் நம்பிக்கைகளும்

தொன்றுதொட்டு நாம் பழகிவரக்கூடிய விடயங்களில் ஒன்று சடங்குகளும் நம்பிக்கைகளும். இதனைப் பற்றி தொ. ப அவர்கள் தமிழ் என்னும் கட்டுரையின் கீழ் தமிழர் உணவு, உணர்வும் உப்பும், உணவும் நம்பிக்கையும், எண்ணெய், உரலும் உலக்கையும், சிறுதெய்வங்களின் உணவு எனும் உட்தலைப்புகளிலும், வீடும் வாழ்வும் எனும் கட்டுரையின் கீழ்த் தாலியும் மஞ்சளும், தவிடும் தத்தும், துடுப்புக்குழி எனும் உட்தலைப்புகளிலும் விளக்குகிறார்.

சடங்குகள்

ஆண், பெண்ணின் கழுத்தில் தாலி அணிவிப்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது. மணமகன் தாலி கட்டும்பொழுது மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறையில் உள்ளவர் மணமக்களுக்குப் பின் கட்டாயம் நிற்க வேண்டும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மணமகன் திருமண நிகழ்ச்சிக்கு வர இயலாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது என்று தொ. ப அவர்கள் வீடும் வாழ்வும் எனும் கட்டுரையில் கீழ்த் தாலியும் மஞ்சளும் எனும் தலைப்பில் விளக்குகிறார்.

இந்நிகழ்வு சு. தமிழ்ச்செல்வி  எழுதிய கீதாரி நாவலில் இடம்பெற்றுள்ளது. ஆடு மேய்க்கும் வெள்ளைச்சாமியின் தடியை கொண்டுபோய் மணமகனாக அமர்த்தித் திருமணம் நடைபெறும்.

குழந்தைப்பேறு நாள் தொடங்கித் தீட்டுக்கழிக்கும் நாள் ஒரு சடங்காக நடைபெறுகிறது. வீட்டின் பின்புறம் குழி தோண்டி நஞ்சையும் கொடியையும் புதைத்து அந்த இடத்தை ஓலை அல்லது தட்டிகொண்டு வேலியிட்டு மறைக்கின்றனர். அக்குழியைத் துடுப்புக்குழி என்கின்றனர். தாய் தீட்டுக்காலம் முடியும் வரை அம்மறைப்பினுள் குளிக்கிறாள். குளித்த நீர் வெளியே வராதபடி அக்குழிக்குள் விடப்படுகிறது.

பதினாறாம் நாள் அக்குழி முன் மூன்று இலைகள் போட்டு அதில் சோறு, கருவாட்டுக் குழம்பு, முட்டை, காயமும் கருப்பட்டியும் சுக்கும் சேர்ந்த மருந்து உருண்டையும் வைக்கின்றனர். சோற்றின் நடுவில் ஒரு மரக்குச்சியினை ஊன்றி வைக்கின்றனர். (ஆண் குறியின் அடையாளமாக இவ்வாறு வைக்கின்றனர்). பின்னர் வழிபாடு செய்கின்றனர் என்று வீடும் வாழ்வும் எனும் கட்டுரையில் துடுப்புக்குழி  தலைப்பில் குறிப்பிடுகின்றார். இம்மாதிரியான நிகழ்வு இன்றளவும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள எம். ஜி.ஆர் நகரில் நடைமுறையில் உள்ளது.

பெண்ணின் பிறப்புறுப்பினை ஆபாசப்பொருளாகப் பார்க்கும் சமுதாயத்தில் பிறப்புறுப்பினைத் தெய்வமாக வணங்குகின்றனர் என்று இவர் கூறுவது போற்றுதற்கு உரியது. கும்பகோணத்திற்கு அடுத்த தாராசுரத்தில் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்துள்ள சக்கராயி கோவில் யோனித் தெய்வக் கோவில். யோனி என்பது பெண்ணின் பிறப்புறுப்பினைக் குறிக்கிறது.

இறந்தவர்க்குக் காரியம் செய்தல் ஒரு சடங்காக உள்ளது. அவர்களுக்குப் படைக்கும் உணவில் உப்பு இல்லாமல் படைப்பது பெரும்பான்மையான இடங்களில் காணப்படுகிறது. உப்பு, உறவின் தொடர்ச்சிக்கும் செழிப்பிற்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. இறந்தவரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே உப்பு இல்லாமல் சமைப்பதாகத் தமிழ் எனும் கட்டுரையில் உணர்வும் உப்பும் எனும் தலைப்பில் தொ. ப விளக்குகிறார்.

நம்பிக்கைகள்

“நீரின்றி அமையாது உலகு”. நீரினது சிறப்பையும் அதற்கு வழங்கப்படும் பெயர்களையும் நீரின் மீது கொண்ட நம்பிக்கையையும் தொ.ப. விளக்குகிறார்.  விழாக்காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் இருக்கும் நீர்க்கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் நெருப்பில் சிக்கி இறந்து போனவர்கள் நீரின் வேட்கையோடு இறந்திருப்பார்கள் என்று அவரின் நினைவாக நீர்ப்பந்தல் அமைப்பது தமிழர்களின் வழக்கம் என்று தொ.ப. தமிழ் எனும் கட்டுரையில் தண்ணீர் எனும் தலைப்பில் விளக்குகிறார். 

இதே போன்று நெருப்பில் இறந்த ஒருவரின் நினைவாக அவரது குடும்பத்தினர் அரியலூர் மாவட்டம் பெரியமறை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவின்போது அனைவருக்கும் தண்ணீர் வழங்குகின்றனர்.

இடைக்காலத்தில் எண்ணெய்யை அமங்கலப் பொருளாகக் கருதி எண்ணெய் விற்பவர் எதிரில் வந்தால் கெட்ட சகுனம் என்று நம்பினர்.

உணவினை நெடுந்தூரம் எடுத்துச்செல்லும் பொழுது கரித்துண்டு, வேப்பிலை, இரும்பின் சிறுதுண்டு போட்டு எடுத்துச் செல்கின்றனர். இல்லையேல் உணவிற்காக ஆவிகள் பின்னே வரும் என்று நம்புகின்றனர்.

தமிழ் எனும் கட்டுரையில் உரலும் உலக்கையும் எனும் தலைப்பில் உரலின் மீது சுமங்கலிப் பெண் அமரக்கூடாது. கணவனை இழந்தவளுக்கு உரலைக் கவிழ்த்து அதில் உட்கார வைத்துத் தாலியைக் கழற்றுவர்/ நீக்குவர்; அதனால் சுமங்கலி அமரக் கூடாது என்பார்கள் என்கிறார் தொ. ப  அவர்கள்.

சிறுதெய்வ வழிபாடுகள்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டிற்குரியனவாக இருப்பன சிறுதெய்வங்களே. “சிறு தெய்வம்” என்ற சொல்லாட்சி முதன் முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது என தொ.ப. தமிழ் எனும் கட்டுரையில் சிறுதெய்வங்களின் உணவு எனும் உட்தலைப்பில் விளக்கம் தருகிறார்.

அனைத்துச் சாதியினர்க்கும் நிச்சயமாக ஒரு குலதெய்வம் இருக்கும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வங்களாகவே இருக்கும். சிறுதெய்வ வழிபாடுகள் கிராமப்புறங்களிலேயே மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. பலியிடும் வழக்கம் சிறுதெய்வ வழிபாட்டில் உண்டு. “பலி” என்பது வடமொழிச் சொல் படைக்கப்படுதல் என்பது அதன் பொருள் என்று தொ.ப. சிறுதெய்வங்களின் உணவு எனும் உட்தலைப்பில் அமைந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

மேலும், இக்கட்டுரையில் இவர் சிறு தெய்வத்திற்கு இடும் படையலைக் கீழ்கண்டவாறு பிரித்துக்காட்டுகிறார். பொங்கலையும், இரத்தப்படையலையும் தனியாக நடத்தும் கோயில்களில் பொங்கல் படையலை “சைவப் படைப்பு”, “ஆசாரப்படைப்பு”, “சுத்தப்படைப்பு” என்று அழைக்கின்றனர். இரத்தப்பலியோடு கூடிய படைப்பு மாமிசப்படைப்பு என்று பிரித்துக்காட்டுகிறார்.

திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்குப் படையலிட்டு பொங்கலில் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாவின் இரத்தத்தைக் கலந்து சாமியாடி குழந்தைப்பேறு இல்லாதவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர், பேய் பிடித்தவருக்கு ஊட்டுகிறார். இந்த இரத்தம் கலந்த சோற்றை உண்டால் குழந்தைப்பேறு உண்டாகும். உடல்நிலை சரியாகும் என்பது அவர்களது நம்பிக்கை.

தொ. ப அவர்கள் பெண் ஆடு பலியிடுதலை பற்றிக் கூறுகிறார். இப்பலி சிறு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனைச் சூல் ஆடு குத்துதல் என்று இவர் விளக்குகிறார். உக்கிரம் மிகுந்த பெண் தெய்வங்களுக்கு நிறைசினையுடைய ஒரு ஆட்டைக் கொண்டுவந்து அத்தெய்வத்தின் முன் நிறுத்தி வேல் போன்ற கருவியால் ஆட்டின் வயிற்றைக் குத்தி அதன் உள்ளே இருக்கும் குட்டியைப் பலி பீடத்தின் மீது வைக்கின்றனர். ஆடும் இறந்து விடும்; குட்டியும் இறந்து விடும். இந்நிகழ்ச்சி நடக்கும் முன்னர்க் குழந்தைகளையும் பெண்களையும் அங்கிருந்து அனுப்பிவிடுகின்றனர் என்று தமிழ் எனும் கட்டுரையில் சிறு தெய்வங்களின் உணவு எனும் தலைப்பில் கூறியுள்ளார்.

ஒரே இடத்தில் பலசிறு தெய்வங்கள் இருக்கும். அதில் இரத்தப் பலி ஏற்காத சிறு தெய்வங்கள் இரத்தப்பலி இடும் பொழுது திரை கொண்டு மறைக்கப்படும்.

மதமும் சாதியையும்

இந்திய சமூகத்தில் சாதி என்பது அதிகம். சாதியிலிருந்து பிறத்ததுதான் மதம். மதத்திற்கு முன்னோடி சாதி என்று கருத்து தோன்றுமாவிற்கு மதமும் சாதியையும் குறித்து தொ.ப. அவர்கள் தைப்பூசம் எனும் கட்டுரையின் கீழ் பறையரும் மத்தியானப் பறையரும், பழைய குருமார்கள் எனும் உட்தலைப்புகளிலும், தமிழக பௌத்தம்: எச்சங்கள் எனும் கட்டுரையில் சமணம், துறவு, நிர்வாணம் எனும் தலைப்புகளிலும் விளக்குகிறார்.

சமண, பௌத்த மதத்தின் எச்சங்கள் இன்றளவும் காணப்படுகின்றன. துறவு நெறியை இந்தியாவில் உருவாக்கியவர்கள் சமணப் பௌத்தர்கள்.

செவ்வாடை அணிவது பௌத்த மதம் தந்ததாகும். மேலும் மொட்டை அடித்துக் கொள்ளும் வழக்கம் சைவ, வைணவ சமயங்களில் ஆரம்பகாலங்களில் இல்லை எனவும் பௌத்தமே அமைத் தந்ததாகவும் தொ.ப. கூறுகிறார். பழநி, திருப்பதி, போன்ற ஊர்களில் மொட்டையடிப்பது பௌத்தர்களின் எச்சமே ஏனென்றால் அவர்கள் வைத்திருக்கும் பொருளில் முடியை எடுக்கும் கத்தியும் ஒன்று. எப்பொழுதும் மொட்டையடித்தே இருப்பார்கள் எனத் தமிழ் பௌத்த எச்சங்கள் எனும் கட்டுரையில் தருகிறார்.

அரசமரத்தை வணங்குவதும் பௌத்தர்களின் எச்சமே என்கிறார். இன்றும் சொல்லக்கூடிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய சொற்கள் புத்தம், தர்மம், சங்கம் ஆகிய பௌத்த மும்மைக் கோட்பாட்டின் மறுபிறவி12  என்று தமிழ் பௌத்த எச்சங்கள் எனும் கட்டுரையில் தொ. ப அவர்கள் விளக்குகிறார்.

சமணத் துறவிகளில் திகம்பரர் (திசைகளையே ஆடையாக உடுத்தியவர்: பிறந்த மேனியாக இருப்பவர்) சுவேதாம்பரர் (வெள்ளையாடை உடுத்தியவர் ) என இரண்டு பிரிவினர் இருந்தனர். ஆடையில்லாச் சமணத்துறவி பசித்த போது மட்டுமே பிச்சை ஏற்று உண்ணல் வேண்டும்.

பள்ளி என்ற சொல் சமணர்களிடம் இருந்து தான் பிறந்திருக்கிறது. “பள்ளி என்ற சொல்லுக்குப் படுக்கை என்பது பொருள்”. பள்ளியறை என்றால் படுக்கையறை. பள்ளி கொள்ளுதல் என்றால் உறங்குதல் என்ற பொருளைத் தருகிறது. “ஞானதானம்” செய்வதற்காகச் சிறுபிள்ளைகளைத் தங்கள் இருப்பிடத்திற்கு ஆடையில்லாத் துறவிகள் அழைத்துக் கற்றுக்கொடுத்தனர். திகம்பரர் தங்கியிருந்த இடம் பள்ளி; அங்கு அமர்ந்து கல்வியைப் போதித்தனர். இதன்படியே கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆயிற்று. பெண் துறவிகளும் பயிற்றுவித்தாகக் கழுகுமலைக் கல்வெட்டால் அறிய முடிகிறது. என்று தொ.ப. அவர்கள் தமிழக பௌத்த எச்சங்கள் எனும் கட்டுரையில் சமணம் எனும் உட்தலைப்புகளில் விளக்குகிறார்.

தொல்குடிகளுள் ஒரு பிரிவினர் பறையன் ஆவர். பறை எனும் தோற்கருவியின் அடையாளமாக இச்சொல் பிறந்திருக்கிறது. இறந்த விலங்கினை அப்புறப்படுத்துதல், அவற்றின் தோலை உரித்துப் பதப்படுத்துதல் அவர்களின் தொழிலாக இருந்துள்ளது. மான் தோல் தவிர ஏனைய தோல்கள் தீட்டுக்குக் காரணமாகும் என்பது பார்ப்பனரின் வருணக் கோட்பாட்டில் உள்ள வழக்கமாகும்.

வருணக் கோட்பாடு காரணமாகத் தோலைப்பதப்படுத்தும் பறையர் இழிந்த சாதியினராக மாற்றப்பட்டனர். ஆனால் பறையர்கள் சில சாதியினருக்கு சமய குருவாக இருந்து பல சடங்குகளை நடத்தியுள்ளனர் என்று தைப்பூசம் எனும் கட்டுரையில் பறையரும் மத்தியானப்பறையரும் எனும் தலைப்பில் விளக்கியுள்ளார்.

இவர் கூறுவது ஏற்புடையதே இன்றளவும் பல கிராமங்களில் பெண் பூப்பெய்தினால் வண்ணான் வீட்டில் இருந்து வந்து துணிகொடுத்துச் சடங்கினைச் செய்கின்றனர். நாவிதர் இறுதிச்சடங்கில் முன்னுரிமை பெறுகிறார்.

திருவாரூர்க் கோவில் திருவிழாவின்போது பறையர் ஒருவர் யானைமீது அமர்ந்து கொடிபிடித்துச் செல்லும் வழக்கம் அண்மைக் காலம்வரை நடைமுறையில் இருந்திருகிறது என தொ.ப. பறையரும் மத்தியானப் பறையரும் எனும் தலைப்பில் கூறுகிறார்.

முடிவுரை

தொன்றுதொட்டு மக்கள் வழக்கில் இருந்து வரும் பல பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் பண்பாட்டு முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் தொ.ப. பல கருத்துகளைத் தம் நூல் களின் வழி முன்வைத்துள்ளார். அவ்வாறு அவருடைய பண்பாடு பற்றிய கருத்துகள் பண்பாட்டு அசைவுகள் நூலில் உள்ள அறியப்படாத தமிழகம் என்னும் பகுப்பில் அடங்கியுள்ளன. அவற்றில் உள்ள ஏழு கட்டுரைகளிலும் காணப்படும் கருத்துகளை இக்கட்டுரை நான்கு பிரிவுகளில் விளக்கியுள்ளது.

கருவி நூல்

பண்பாட்டு அசைவுகள், தொ. பரமசிவம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2001