4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 மே, 2021

உலகப் புத்தக நாள் - முனைவர்.சித்ரா

 

உலகப் புத்தக நாள்

முனைவர்.சித்ரா

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

உலகிலே நாம் வருடந்தோறும் ஏதோ ஒரு நாளை கொண்டாடி வருகிறோம். அதை ஏன் நாம் அப்படி கொண்டாட வேண்டும். இன்று புத்தக நாள். உலக அமைதி நாள் என்பது ஒரு நாள். பெண்களுக்காக ஒருநாள். தாய்மார்களுக்காக ஒருநாள் என்றெல்லாம் கொண்டாடுகின்றோம். அதற்கு காரணம் அன்றைய தினம் அதைப் பற்றிய ஏதோ ஒரு செயலை செய்யத் துவங்குவது அல்லது துவங்கிய செயல் எந்த அளவிற்கு நிறைவேறி உள்ளது என்பதை திரும்பிப் பார்க்கவோ இந்த நாட்கள் கொண்டாடப்படுகிறது என்பது என் கருத்து.

என்னுடைய கல்லூரி நாட்கள் தொடங்கி இன்று வரையிலும் நான் எதையாவது எழுதிக் கொண்டும் வெளியிட்டுக் கொண்டும் இருக்கிறேன். இந்தக் கட்டுரையைமூன்று பகுதிகளாக தரலாம் என்று எண்ணினேன். முதலில் என்னுடைய அனுபவங்கள். பிறகு நான் இங்கு ஹாங்காங்கில் 25 வருடங்களாக வாழ்கின்ற போது, இங்கே நூலகங்களும் பள்ளிகளும் வாசித்தலை  மேம்படுத்த கூடிய செயல்களை  எப்படி செய்கிறார்கள் என்பதையும், இறுதியாக  பள்ளிக் கல்லூரிப்  பாடத்திட்டத்திற்கு மேலாக நூலகங்கள் நம் தலைவர்களை உருவாக்கும் பட்டறைகள் ஆக எப்படி மாறலாம் என்பதை பற்றியும்இக்கட்டுரை கூறும்

அனுபவங்கள்

என்னுடைய சிறுவயதில் எனக்கு ஒரு தோழி இருந்தாள். அவளுக்கு இருதயத்தில் துளை இருந்ததால்  ஓடியாடி விளையாட முடியாது. அதனால் அவர்கள் வீட்டில் அவளுக்கு பல புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார்கள். அதில் காமிக்ஸ் அடங்கும். அவளுடைய வீட்டிற்கு விளையாட செல்லும் போது எனக்கு அந்த புத்தகங்களை எல்லாம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அத்துடன் என் பெற்றோர் வாங்கித் தந்த அம்புலிமாமா சிறுவர் மாத இதழ் என்னுடைய வாசிப்பின் முதற்படியாக அமைந்தது.

அந்த சமயத்தில்எனக்கு ஒரு பன்னிரண்டு வயது இருக்கலாம். வெளியே தனியே சென்று வர தகுதி பெற்றேன். என்னுடைய தாய் கதை புத்தகங்களை நிறைய வாசிப்பவர்.  அதனால் நூலகத்திலிருந்து நூல்களை எடுத்து வருவது, திருப்பிக் கொடுப்பது என்பது  என்னுடைய பணியாக இருந்தது.  ஐந்து காசு அம்மா கொடுப்பார்கள். எங்கள் வீட்டிலிருந்து கிளம்பிஅதில் ஐந்து மிட்டாய்களை வாங்கிக்கொண்டு, சப்பிக்கொண்டே, அப்படியே நடந்து போய் அந்தப் பள்ளியின் வாயிலை அடைவேன். அந்த பள்ளியின் ஒரு மூலையில் நூலகம் இருந்தது. அந்த நூல்களை நூலகரிடம் கொடுத்துவிட்டு மேலும் மூன்று புத்தகங்களை திருப்பி வாங்கி வருவேன். இது மாதம் ஒரு முறை நடக்கும். இப்போது என் அம்மாவிற்கு 70 வயது மேல் ஆகிறது இன்று வரையிலும் அவர் தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறார் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்படியே சென்று வந்தவள் ஒரு 14 வயது தொடங்கியதும் அந்த நூல்களை படிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் என்னுடைய வாசிப்பு தொடங்கியது.

இதுவே என்னை தமிழில் அதிக ஆர்வம் கொள்ள வைத்தது. நான் பள்ளியில் மிகவும் ஆர்வத்துடன் தமிழை பயிலவும் உதவியது. அந்த நேரத்தில் நான் தமிழ் நூல்கள் பலவற்றையும் படித்தேன். அவை பெரும்பாலும் கதை புத்தகங்கள் மட்டுமே. ஆனால் இந்த வாசித்தல் மூலமாக கிடைத்த எழுத்து திறமை என்னிடம் இருக்கிறது என்பதை பற்றிய விதையை போட்டதற்கு  ஒரு நிகழ்வு காரணமாக இருந்தது.

எங்கள் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில், தமிழ் இரண்டாம் தாளில், இலக்கிய நயம் பாராட்டல் என்று ஒரு பகுதி உண்டு. அதில் அவர்கள் இலக்கியத்திலிருந்து ஒரு பாடலை கொடுத்து அதை எப்படி நயமாக இருக்கிறது அதில் இலக்கண அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம்  எழுதும் ஒரு கேள்வி உண்டு. அப்படி அதைப் பற்றி நான் ஒரு தேர்வில் எழுதிய போது, தேர்வுக்குப் பிறகு, விடைத்தாள்களை கொடுக்கும் போது, என்னுடைய தமிழாசிரியர், அவர் பெயர் சுலோச்சனா, இன்று வரையிலும் நினைவில் நிற்கும் ஆசிரியர், என் வகுப்பு மாணவிகள் முன்னிலையில், என்னுடைய பெயரை சொல்லி இவர் சிறப்பாக எழுதி இருந்தார் என்று கூறியது நிச்சயம்  என்னுடைய தமிழில் எழுதும் ஆர்வத்தை தூண்ட ஒரு முக்கிய  விதையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். அதற்கு பிறகு நான் தமிழ் பாடத்தை மேலும் ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தேன் என்றே சொல்ல வேண்டும்.  10 வருடங்களுக்கு முன் நான் படித்த பள்ளிக்கு சென்றபோது அந்த ஆசிரியர் தலைமை ஆசிரியராக இருப்பதைக் கண்டபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் அதே நேரத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி வியப்பாகவும் இருந்தது. இந்த நிகழ்வை அவர்களிடம் சொல்லி அவர் என்னுடைய நினைவில்  நின்ற ஆசிரியர் என்று கூறியபோது அவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

பிறகு பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கு ஒரு துணைப்பாட நூல். அப்பப்பா எத்தனை தலைப்புகள்.படிக்கும்போது எங்களுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அதன் மூலம் நாங்கள் தமிழர் வரலாற்றையும் பல தமிழ் ஆர்வலர்கள் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. இந்த நூல் என்னுடைய நினைவில் நின்ற நூல்.

பிறகு நான் அரசாங்க உயர் அதிகாரியாக பணியில் சேர வேண்டும் என்பதற்காக தேடி தேடி பல விஷயங்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவையெல்லாம் பொது அறிவு நூல்களே. செய்தித்தாள்களை மட்டும் தவறாமல் வாசித்து வந்தேன்.  பள்ளியில் மாணவிகள் காலையில் கூடும் நேரத்தில் செய்திகள் வாசிக்கப்படும். என்னுடைய வாசிப்பு திறன் காரணமாக, நானும் செய்தி வாசிப்பாளராக இருக்க அது அடிகோலியது.

பெரிய பெரிய தலைவர்கள் எழுதிய நூல்களையோ ஆய்வு  நூல்களையோ கட்டுரைளையோ அப்போதெல்லாம் அவ்வளவாக நான் படிக்கவில்லை.  ஆனால் நான் கல்லூரியில் சேர்ந்தபோது அறிவியலாளர்களை பற்றிய  தொடர் நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப் படிக்கும் போது அதிலேயே முதலாவதாக அமெரிக்கப் பேரறிஞர் அறிவியலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ளும் நூல் எனக்கு கிடைத்தது. அந்த நூல் என்னை ஊக்கப் படுத்தும் நூலாக இருந்தது. என்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.  இது சரி நம்முடைய மக்களுக்கும் அதை தமிழிலே தரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நான் அப்போது அதைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை. இருந்தாலும் அதை எழுதி வைக்கலாம். நமக்கு ஒரு காலம் வரும். அப்போது புத்தகமாக வெளியிடலாம் என்று எண்ணத்தில், முதலாம் ஆண்டு செமஸ்டர் விடுமுறையின் போது 10 நாட்களில் வீட்டிலேயே யாருக்கும் சொல்லாமலேயே, அதை முழுவதுமாக மொழிபெயர்த்து எழுதினேன்.

என்னுடைய தந்தை அரசாங்க  உயர் அதிகாரியாக இருந்தார். இருந்தாலும் அவருக்கு தமிழில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் அவர்கள் பல நூல்களை வெளியிட்டிருந்தார்.  நாவலுக்கான கதைக்கருவை பற்றியும் அந்த கதையோட்டத்தை பற்றியும் என்னுடைய தாயிடமும் தந்தை அவ்வப்போது கலந்தாலோசிக்கும் போது நானும் கேட்டிருக்கிறேன். நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் நாடகங்கள் என்றெல்லாம். அப்போது ஒரு முறை பதிப்பாசிரியர் என் தந்தையிடம் வந்து எனக்கு ஒரு நூலை எழுதி கொடுத்தால் நன்றாக இருக்கும். பதிவிட வசதியாக இருக்கும்என்று சொல்லிச் சென்றார்.

இரண்டு மூன்று நாட்கள் யோசித்த பின்,ஒரு நாள் இரவு,சற்று பயத்துடன் தயக்கத்துடன் என் தந்தையிடம் பேசத் துணிந்தேன். இதுபோல நான் ஒரு மொழிபெயர்ப்பு நூலை எழுதி இருக்கிறேன் அதை வெளியிட முடியுமாஎன்று கேட்டேன்.  உடனே அவர் நாளை அதை கொடு... பார்க்கிறேன்என்று கூறினார். அடுத்த நாளே நான் எழுதியதை அவரிடம் கொடுத்தேன். அவர் ஒரு வாரத்தில் கிடைக்கும் நேரத்தில் முழுமையாக படித்துவிட்டு, “மிகவும் சிறப்பாக இருக்கிறது, நிச்சயம் இதை நான் பதிவிட ஏற்பாடு செய்கிறேன்என்று சொன்னார்.

அதுதான் என்னுடைய முதன்முதலில் நூலாக்கம் செய்யும் எழுத்துத் திறனை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது என்றே சொல்லலாம். இது நடந்தது என்னுடைய கல்லூரியின் முதலாம் ஆண்டில். இந்த நூலை வெளியிடும் போது, நிச்சயம் அது என்னை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காககப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களின் மகனார் நடராஜன் அவர்கள் முன்னிலையில் அந்த நூல் வெளியிடப்பட்டது. அதிலிருந்து என்னுடைய எழுத்தார்வம் இன்று வரையிலும் இருந்த வண்ணமே இருக்கிறது. அடுத்த ஒரு வருடத்தில் அறிவியல் மேதை கலிலியோ பற்றிய நூலை வெளியிடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நூலுக்கு மதிப்புரை என்னுடைய தமிழ் பேராசிரியர் பொன்மணி வைரமுத்து அவர்களிடம் இருந்து பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

நான் படித்த காலத்தில் கல்லூரி தமிழ் பாடத்திட்டத்தில் எங்களுக்கு கண்டராதித்தன் என்ற ஒரு நூல் துணைப்பாட நூலாக இருந்தது. இதுவும் என் மனதை கவர்ந்த நூல். தேர்வில் அந்த நூலில் இருந்து கேட்ட கேள்விகளுக்கு நான் பக்கம் பக்கமாக எழுதியது இன்றும் என் நினைவில் இருக்கிறது. அந்தக்கதை ஒரு சோழன் எப்படி கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று போர்க்கலையில் கப்பல்களைக் கொண்டு சிறந்து விளங்கினான் என்பதைப் பற்றியது. அந்தக் கதாசிரியர் அதை அவ்வளவு அழகாக வர்ணனை  செய்திருந்தார். மன்னிக்கவும் எனக்கு அந்த ஆசிரியரின் பெயர் நினைவில் இல்லை. நான் ஹாங்காங்கிற்கு வந்த பிறகு சீன படம் ஒன்றைப் பார்க்கும் பொழுது அவர்கள் கப்பற்படையைக் கொண்டு எப்படி கிழக்காசிய நாடுகளை கைப்பற்றினார்கள் என்பதை பார்த்தபோது இந்தப் புத்தகத்தில் வந்த வர்ணனை இதோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றபோது தமிழ் பாடத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் எட்டாம் இடத்தை பெருமளவிற்கு எனக்கு மதிப்பெண் கிடைத்தது.இதற்கு முழு காரணம் நான் செய்த தமிழ் வாசிப்புகள் என்று சொல்லலாம்.

இந்தக் கல்லூரி நாட்களில் எனக்கு கிரிக்கெட் மேல் அதீத ஆர்வம் ஏற்பட்டது. அப்படி பார்த்துக்கொண்டிருந்தபோது ஷார்ஜா நகரில் நடந்த ஒரு இறுதிப்போட்டி என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. அந்த விளையாட்டைப் பற்றிய ஒரு வர்ணனையை எழுதி, சென்னை வானொலி நிலையத்திற்கு, விளையாட்டு அரங்கம் என்ற நிகழ்ச்சிக்கு, எழுதிப் போட்டேன். ஒரு வாரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. எங்களுடைய நிகழ்ச்சியில் வாரத்திற்கு ஒரு முறை வரும் வர்ணனை நிகழ்ச்சியில் நீங்கள் எழுதலாம் அதை வழங்கலாம் என்று. இதுவும் என்னுடைய வாசிப்புக்காக கிடைத்த பரிசு என்றே சொல்ல வேண்டும்

பிறகு நான் கணிப்பொறித் துறையில் எம் சி ஏ பட்டம் படிக்க முதுகலையில் சேர்ந்தேன். அப்போது எங்கள் பாடத்திட்டத்தில் ஒரு பாடத்திற்கு Performance Evaluation என்ற படத்திற்கு நேரடியான நூல் இருக்கவில்லை. அதனால் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் பல புத்தகங்களிலிருந்து கருத்துக்களை ஒன்று சேர்த்து படிக்க வேண்டி இருந்தது

அந்த வாசிப்புதான் என்னை எம் சி ஏ முதுகலை பட்டத்தின் போது சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் மாணவியாக இருக்க உதவியது

அப்படி நான் சேர்த்த பல விஷயங்களையும் நூலாக வெளியிட முடிவு செய்தேன். அதுவும் எனக்கு வெற்றியை தந்தது. Tata Mcgraw Hill நிறுவனம் அதை வெளியிட்டது.

பிறகு வேலை காரணமாகவும் திருமணமாகி குழந்தை பிறந்ததன் காரணமாகவும் வாசிப்பதும் குறைந்தது. எழுதுவதும் குறைந்தது.

நான் ஹாங்காங்கிற்கு வந்தபிறகு என்னுடைய வாசிப்பு மீண்டும் தொடங்கியது. அதற்கு காரணம் என்னுடைய மகள். அவளுக்கு ஒரு வயது முதலே புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஹாங்காங்கின் நூலகத் திட்டங்கள்

ஹாங்காங் ஒரு சிறிய நகரமே என்றாலும் இங்கு 70க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் லட்சக்கணக்கான நூல்கள் உள்ளன

ஹாங்காங் ஒரு சிறிய நகரமே என்றாலும் இங்கு 70க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றிலும் லட்சக்கணக்கான நூல்கள் உள்ளன.

வயதுக்கேற்ப நூல்கள் பல இருக்கின்றன. என் மகள் ஒரு வயதிலே படம் போட்ட நூல்களை பார்க்க ஆரம்பித்தாள். பிறகு சிறுசிறு வார்த்தைகள் கொண்ட நூல்கள். பிறகு சிறிய கதைகள். பிறகு படம் போட்ட நூல்கள் என்று வயதிற்கேற்ப படிக்க ஆரம்பித்தாள்.  அவளுடன் நானும் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்

அப்போது பல நாடுகளின் பழங்கதைகளை எனக்கு படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதை வாசிக்கும்போது இதையும் நம்முடைய தமிழ் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது. அதனால் பல கதைகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். அப்படி மொழிபெயர்த்த நூல்களில் இரண்டு நூல்களை மணிமேகலைப் பிரசுரம் மற்றும் மூன்று நூல்களை பழனியப்பா பிரதர்ஸ் என்ற நிறுவனமும் வெளியிட்டு உதவின. அவற்றில் ஒரு கதை, குழந்தைகளுக்கான காணொளியாக சித்திரமாக வெளி வந்தது என்பதையும் இங்கே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் ஹாங்காங்கில் வாசிப்பை ஊக்குவிக்க பல திட்டங்கள் உள்ளன.  அதில் ஒன்று Reading Programme. நூலகத்தில் வருடத்தின் ஆரம்பத்தில் கையேடு ஒன்றை  கொடுத்து அந்த வருடத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசிக்க பட்டதோ அதன் தலைப்பை எழுதி நூலகத்தில் முத்திரை பெற வேண்டும். அன்றைய வருடத்தில் அதிகமாக வாசித்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் படித்த நூல்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களை படமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ எழுதிக் கொடுக்கலாம். அதில் வாரம் தோறும் சிறப்பாக எழுதிய கட்டுரைகள் வரையப்பட்ட படங்கள் அந்தந்த நூலகத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைப்பார்கள். இதையும் என் மகள் செய்து ஆறு வருடங்கள் தொடர்ந்து சான்றிதழை பெற்றாள். ஒரு வருடத்தில் 700 நூல்களை படித்த போதும் அந்த வருடத்தில் ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் 2000 நூல்களைப் படித்து முதல் இடம் பிடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் ஹாங்காங்கில் வாசிப்பை ஊக்குவிக்க பல திட்டங்கள் உள்ளன.  அதில் ஒன்று Reading Programme. நூலகத்தில் வருடத்தின் ஆரம்பத்தில் கையேடு ஒன்றை  கொடுத்து அந்த வருடத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசிக்க பட்டதோ அதன் தலைப்பை எழுதி நூலகத்தில் முத்திரை பெற வேண்டும். அன்றைய வருடத்தில் அதிகமாக வாசித்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் படித்த நூல்களைப் பற்றிய தங்கள் கருத்துக்களை படமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ எழுதிக் கொடுக்கலாம். அதில் வாரம் தோறும் சிறப்பாக எழுதிய கட்டுரைகள் வரையப்பட்ட படங்கள் அந்தந்த நூலகத்தின் நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைப்பார்கள். இதையும் என் மகள் செய்து ஆறு வருடங்கள் தொடர்ந்து சான்றிதழை பெற்றாள். ஒரு வருடத்தில் 700 நூல்களை படித்த போதும் அந்த வருடத்தில் ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் 2000 நூல்களைப் படித்து முதல் இடம் பிடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாசித்தல் மட்டுமன்றி நூலகத்தில் பல நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். சிறு குழந்தைகள் கதைகளை எப்படி படிக்கலாம் என்பதை ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சியும் உண்டு. சற்றே பெரிய மாணவர்களுக்கு அந்த நூலைப் பற்றிய கருத்துக்களை எப்படி எழுதலாம் என்பதை எடுத்துக் கூறும் நிகழ்ச்சிகளும் உண்டு. வருடம் முழுவதும் இத்தகைய நிகழ்ச்சிகளை நூலகங்கள் நடத்தி வருகின்றன. இப்படித்தான் ஹொங்கொங்கில் வாசிப்பை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

நூலகங்கள் தலைவர்களை உருவாக்கும் பட்டறைகள்

ஒரு தலைவர் என்றால் அவருக்கு உரிய பண்புகள் என்னென்ன?

தலைவர் என்பவர் பல விஷயங்களை அறிந்திருக்கவேண்டும்.  தெரிந்த விஷயங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் மனதிற்கு படும்படி பேச வேண்டும். பல சிறந்த கொள்கைகளை வைத்துக்கொண்டு அதன்படி நடந்து காட்ட வேண்டும்.

இவற்றைப் பெற வேண்டுமென்றால் அதற்கு முதலில் வாசிப்பு வேண்டும். வாசிப்பதால் தான் நம்முடைய அறிவை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

நூலகங்கள் நூல்களைப் தருவதோடு அல்லாமல் அந்த நூல்களைப் பற்றிய கருத்துக்களை மாணவர்கள் ஒருவருடன் மற்றொருவர் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சிகளையும் செயல்படுத்த வேண்டும். அப்படி மாணவர்களை ஊக்கப்படுத்தினால் மாணவர்களுக்கு தங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் எப்படி சிறப்பாக எடுத்துச் செல்ல முடியும் என்பதை உணர வைக்க முடியும். இப்போது ஒரு மாணவர் ஒரு நூலை படித்தால், அதை வகுப்பிலே அந்த நூலைப் பற்றிய விவரங்களை சொல்ல வைக்கலாம். அதன் காரணமாக அந்த நூலை மற்ற மாணவர்களும் படிக்க தூண்டுகோலாக அமையும். இப்படி அறிவு திறன் வளர வளர அவர்களும்  என்னைப் போன்று எழுத துவங்கலாம்.

 

இங்கே நான் படித்த மற்றொரு நூலைப் பற்றியும் கூற வேண்டும். நான் ஐந்தாம் வகுப்பு வரையிலும் தமிழ்வழிக் கல்விதான் கற்றேன். ஆறாம் வகுப்பிலிருந்து நான் படித்தது ஆங்கில  வழி கல்வி என்றாலும் நான் பள்ளி இறுதி வரையிலும்  செய்தித்தாள்கள் பொது அறிவு நூல்கள் தவிர மற்ற ஆங்கில நூல்களை அவ்வளவாக படித்ததே கிடையாது. ஏனென்றால் படித்தால் அது புரியாது. ஆனால் கல்லூரியில் படிக்கும்போது, இறுதியாண்டில் தான் நான் ஆங்கில கதைப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எங்கள் வீட்டில் பிரன்சு போர்த் தளபதிநெப்போலியன் பற்றிய ஒரு ஐநூறு பக்கம் கொண்ட ஆங்கிலநூலை படிக்க முயன்றேன்.

அதில் இரண்டு நிகழ்வுகள் இன்று வரையிலும் என் மனதில் நின்றுள்ளது. நெப்போலியன் ஒரு போருக்குச் சென்று திரும்பிய போது, அந்தப் போரிலே சிறப்பாக பணியாற்றிய வீரர்கள் பற்றிய பட்டியலை தளபதி ஒருவர் படித்தார். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் பெயர் வந்ததும் கூச்சலிட்டார்கள். ஆனால் நெப்போலியன் பெயர் வந்தபோது எதுவும் செய்யாமல் நின்றிருந்தார். அவருக்கு பக்கத்தில் இருந்த வீரர் ஏன் உனக்கு மகிழ்ச்சியாக இல்லையா என்று கேட்டாராம். அதற்கு அவர் இந்த பட்டியலை படிக்கும் இடத்தை நான் எட்ட வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணத்தில் இப்போது இருக்கிறது என்றாராம். இது ஒரு தலைமை பண்பு என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் அறிவீர்கள். நாம் எதையும் சாதிக்க வேண்டும் என்று எண்ணினால் அது ஒரு குறிக்கோளாக நான் வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் படிப்படியாகத்தான் நாம் அந்த நிலையை அடைய முடியும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

மற்றொரு நிகழ்ச்சி. பெரும்பாலும் நெப்போலியன் அவர்கள் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு நாட்டின் வரைபடத்தை வைத்துக்கொண்டு அதை ஆய்ந்து கொண்டிருப்பார். தன்னுடைய நண்பர்களையும் அழைத்து அதை பற்றி விவாதிப்பார். அப்போது அதில் ஒரு நண்பர் ஏன் இப்படி நீ வரைபடத்தை பிடித்துக் கொண்டு அல்லா ஆடுகிறாய் என்று கேட்டாராம். அப்போது நெப்போலியன் அவர்கள் நான் அரசனாக இருக்கும் போது இதையெல்லாம்  பார்ப்பதற்கு நேரம் இருக்காது. அதனால் தான் நான் இப்போது இருந்தே தயாராகி கொள்கிறேன் என்றாராம். இதிலிருந்து நாம் நமக்கு நேரம் கிடைக்கும் போது, நாம் எந்த குறிக்கோளை எட்ட வேண்டுமோ அதற்கான செயல்களை இப்போதிலிருந்தே செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு நிகழ்வுகளைப் பற்றி படித்த போது என்னுடைய மனதிலே அது ஆழமாக பதிந்துவிட்டது. அதன்படியே இன்று வரையிலும் நான் செயல்பட்டு வருகிறேன்.

உங்களில் பலரும் எழுத வேண்டும் பேச வேண்டும் வரைய வேண்டும் கவிதை எழுத வேண்டும் கதை எழுத வேண்டும் என்றெல்லாம் என்னலாம். நீங்கள் தயங்காமல் அதை செய்யுங்கள். அதை உங்களுக்கு அருகில் இருப்பவர்களிடம் கொடுத்து அதைப் பற்றிய கருத்தை பெற்றுக் கொள்ளுங்கள். முதலில் அது சரியில்லை என்றுதான் சொல்வார்கள். எனக்கும் அது நடந்தது. கவிதை எழுதும் ஆர்வத்தில் ஏதோ ஒரு கவிதையை எழுதினேன். அப்போது அதை என் தாயிடம் காட்டியபோது இதெல்லாம் கவிதையாக யாரும் ஏற்க மாட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். அப்படி சொல்லும் தருணத்தில் நீங்கள் துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் ஒரு நூறு கவிதைகளை எழுதினால் அதில் நிச்சயம் பத்து கவிதைகள் ஆவது மனதைத் தொடும் வண்ணம் இருக்கும். அதே போன்று படங்கள் வரையும் போதும் நீங்கள் பல படங்களை எண்ணிய வண்ணம் வரைந்து கொண்டிருந்தாள் 100 படங்களில் நிச்சயம் ஏதோ ஒரு 5 ஆவது நிச்சயம் சிறப்பானதாக அமையும். அதனால் தொடர்ந்து எதையுமே செய்ய பழகுங்கள். நாம் பழக பழகத்தான் நம்முடைய திறன் மெருகேறும்.

இப்போது நீங்கள் பார்க்கலாம். கிரிக்கெட்டில் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடுவதற்கு காரணம் என்ன என்று நீங்கள் யோசித்தது உண்டா? ஏனென்றால் அவர்கள் வருடம்தோறும் வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள். விளையாட விளையாட அவர்களுக்கு அந்த திறன் பெருகிக்கொண்டே செல்கிறது. அதுதான் காரணம். அதே போன்று உங்களுக்கு இருக்கும் திறனையும் நீங்கள் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதை தொடர்ந்து செய்யுங்கள். அதைப் பற்றிய கருத்துக்கள் மாறாக இருந்தாலும் நீங்கள் செய்து கொண்டே இருங்கள்

தலைவர் என்றால் ஒரு மாநிலத்திற்கு நாட்டிற்கோ தலைவர் என்று கொள்ள வேண்டாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் தலைவராகவும் உங்கள் சமூகத்தினரின் தலைவராகவும் அல்லது நீங்கள் வாழும் இடத்தின் தலைவராகவும் அல்லது நீங்கள் பணி செய்யுமிடத்தில் தலைவராகவும் இருக்கலாம். அப்படி பார்க்கும்போது, இப்போது நீங்கள் அந்த தலைமைப் பண்பை பெற என்ன செய்கிறீர்கள் என்பதை கவனித்து, உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இன்று ஆங்காங் இந்தியர்களிடையே பலரும் அறிந்த ஒருத்தியாக நான் இருப்பதற்கு என்னுடைய வாசிப்பும் அதனால் எழுந்த எழுத்துத் திறனும் பேசும் திறனும் தான் என்பதை என்னால் உறுதியுடன் கூற முடியும்.

மேலும் ஹாங்காங்கில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை தமிழர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளை தினமலர் பத்திரிக்கைக்கு அனுப்பி வந்தேன். அதன் காரணமாக, இரண்டாம் வருடத்தின் முடிவில் அவர்களின் செய்தியாளராக ஆகும் வாய்ப்பையும் பெற்றேன். கடந்த 15 வருடங்களாக ஹாங்காங் செய்திகளை அனுப்பி வருகிறேன். வாய்ப்புகளை நானாகத்தான் ஏற்படுத்திக் கொண்டேன்.

நான் ஐந்து வருடங்கள் ஹாங்காங் தமிழ் மலர் என்ற இதழை வெளியிட்டு வந்தேன் பிறகு நாரி என்ற ஆங்கில பெண்கள் பத்திரிக்கைக்கு ஆசிரியராகவும் சில மாதங்கள் பணியாற்றினேன். இந்த ஆசிரியப் பணியின் போதும் நான் நிறைய வாசிக்க வேண்டி இருந்தது. பிறகு பெற்ற அறிவால் பல கட்டுரைகளை எழுதும் வாய்ப்பு கிட்டியது.

நான் கவிதைகளை எழுதுவேன். ஆனால் அதை யாரிடமும் காட்டியதில்லை. சில நேரங்களில் சில நிகழ்வுகள் நம்மை நிலைகுலையச் செய்துவிடும். அந்த நேரத்தில் என்னில் கவிதை வரிகள் உணர்வுபூர்வமாக எழும். நிலநடுக்கம் வந்த போதும் மக்கள் அவதிப்படுவதை கண்டபோதும், சுனாமி வந்த போது மக்கள் பட்ட பாட்டை பார்த்த போதும், நான் எழுதிய கவிதைகள் பலராலும் ஏற்கப்பட்டன அதில் ஒரு கவிதை புவி எங்கும் தமிழ் கவிதை என்று மாலன் ஐயா தொகுத்து வழங்கிய கவிதை நூலுக்கு தேர்வு செய்யப்பட்டு சாகித்ய அகாடமி வெளியிட்ட நூலில் இடம்பெற்றது. இதுவும் என்னுடைய அயராத தொடர் எழுத்தின் காரணமே.

இவை அனைத்திற்கும் வாசிப்பே காரணம். அதற்கு அடுத்ததாக என்னுடைய முன்னெடுப்புகள்.

நீங்கள் எழுதியதை வெளியிட இப்போது உங்களுக்கு பல தளங்கள் உள்ளன. கணிப்பொறி அறிவு நிச்சயம் உங்களில் பலருக்கும் இருக்கும். அதனால் நீங்களே உங்களுக்கென ஒரு வலைதளத்தை உருவாக்கி, நீங்கள் விரும்பியதை எழுதி வரலாம். இரண்டு ஆண்டு கழித்து நீங்கள் அதை திருப்பி பார்க்கும் போது, அதில் நீங்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியும்.

இன்று நம்மிடையே பல பொய்கள் நூல்களிலும் காணொளிகளும் இருக்கின்றன. அதனால், நாம் படிப்பதோடு மட்டுமல்லாமல் காணொளிகளில் காணும் விஷயங்களையும் ஆய்ந்து, அதில் இருக்கும் உண்மைகளை புரிந்து செயல்பட வேண்டும்.

நாளை உங்களில் எத்தனையோ எழுத்தாளர்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் அரசு அதிகாரிகள்  தலைவர்கள் என்று மாறுவீர்கள். அந்த மாற்றம் உங்களது வாசிப்புகளாலும் அறிவுத்திறன் வளர்ப்பின்னாலும் தான் ஏற்படும்.