4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

கலாம் பற்ற வைத்த அக்னிக்குஞ்சு... - இரா. விஜயலெட்சுமி

 

 

 

 

கலாம் பற்ற வைத்த அக்னிக்குஞ்சு...

 

எகத்தாளம் பேசுவதும்

எள்ளி நகையாடுவதுமே

நகைச்சுவையென்பதைச்

செதுக்கியெடுத்துச் சீர்படுத்திய

சிரிப்பு வைத்தியர் !

 

நிலையாமையை ,

“இன்றைக்குச் செத்தால்

நாளைக்குப் பாலென”

சிரிப்பால் செதுக்கிய

சிந்தனைச் சிற்பி !

 

கசப்பு மருந்தைத்

தேன்தடவிப் புகட்டுதல் போலே ,

பெண்சிசுக் கொலை எதிர்ப்பை

வர்ணபேத மறுப்பைப்

புன்னகை மருந்தாய்ப் புகட்டிய

புதுப்புது அர்த்தம் !

 

ஜனத்தொகை அதிகரிப்பை

உறைக்கும்படி ,உரத்துரைத்த

ஜனங்களின் கலைஞன் !

சிறார்களையும் பெருங்கருத்  தாலீர்த்த

சின்னக் கலைவாணர் !

 

முடக்குவாதமாம் மூடநம்பிக்கைக்கு

முற்றுப்புள்ளியிடத் துடித்த

நம்பிக்கை நட்சத்திரம் !

கலைத்தாகமும் சமூக அக்கறையும்

கொண்ட விவேகி !

கலாம் கருத்தைப்

பற்றவைத்த அக்னிக்குஞ்சு !

 

மரத்துப் போன மனிதர் மத்தியில்

மரம் நடுவீரென மறத்துடன்

முழங்கிய முரசு !

முப்பது லட்சம் மரங்களும்

முணுமுணுக்கும் உள்ளக் கிடக்கை

என்ன தெரியுமா ?

 

மரங்களின் காவலருக்கு மரணமில்லை !

வேராய் அவர் !

விழுதாய் நாங்கள் !

மரங்களும் மரங்களினூடே கலந்த

அவரின் ஆன்மாவும் கதைக்கிறது ,

ஜனங்காள் !

செயல் வீரமும் விவேகமும்

கொள்ளுங்கள் !

 

 

மனமாசுகளைக் வெல்லுங்கள் !

சுற்றுப்புறமாசுகளைக் களையுங்கள் !

மரங்களைக் கொல்லாதீர்கள் !

 

எண்ணங்கள் சுருங்கிக்

காய்ந்து கிடக்கும் சமூகத்தை

வண்ணங்களாக வார்த்தெடுங்கள் !

இயற்கைக்கும் நமக்குமான

இடைவெளியைக் குறையுங்கள் !

 

சமூகத்திற்கும் நமக்குமான

உறவை உயர்த்துங்கள் !

மரத்தோடு மனித நேயத்தை

வளர்த்திடுங்கள் !

 

ஏனெனில்

"இன்றைக்குச் செத்தால்

நாளைக்குப் பால் !

 

 

 

கவியாக்கம்                                                                                            இரா. விஜயலெட்சுமி,

பட்டதாரி தமிழாசிரியை,

தி.சுக்காம்பட்டி 621310.

மணப்பாறை கல்வி மாவட்டம்.

திருச்சி மாவட்டம்.

6382993075.

 

ஓவிய ஆக்கம்                                                                             கணபதி சுப்ரமணியன்– கோவை

வடிவமைப்புப் பொறியாளர்