4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

நோய் உற்பத்தி, நோய் நீக்கம் பற்றிய திருமந்திர விளக்கம்: ஒரு பார்வை - சந்திரசேகரன் சசிதரன்

 

நோய் உற்பத்தி, நோய் நீக்கம் பற்றிய திருமந்திர விளக்கம்: ஒரு பார்வை

சந்திரசேகரன் சசிதரன்

சிரேஸ்ட விரிவுரையாளர்

சமூக விஞ்ஞானங்கள் துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம்,

வந்தாறுமூலை,

இலங்கை

அலைபேசி எண்:94770306649

மின்னஞ்சல்: sasisasitharan72@gmail.com

அறிமுகம்

நொய்என்ற வினையடியிலிருந்து நோய்என்னும் சொல் உருவாகியிருப்பதாக தமிழ் இலக்கணகாரர் பேசுவர். சமகால உலகில் நவீன வாழ்க்கை வசதிகள் பெருகியிருப்பது போலவே புதிய புதிய நோய்களும் பெருகி வருகின்றன. இதன் வழி, சென்ற ஆண்டு உலகையே ஆட்டிப் படைத்து, அகில உலக மாந்தரையும் வீட்டுக்குள் முடக்கி விட்ட கொரோனாஎன்னும் புதிய வகை நுண்கிருமித் தாக்கம், மனித வாழ்வியலில் பிணி தொடர்பான மரபான சிந்தனைகளை மறுபார்வைக்குட்படுத்தும் அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவான வாழ்க்கை முறையும், நவீன ஆடம்பர வசதிகளும், உணவுப்பழக்கம், நுகர்வு முறை, உறக்கம், மனிதத் தொடர்பாடல், சிந்தனை முறைமை என்பவற்றில் ஏற்பட்டுவரும் திரிபுகளும், பிறழ்வுகளும் இன்று மானிட சமூகத்தின் நிலைபேறான ஆரோக்கியத்துக்கு விலையாக அமைகிறதோ என்ற எண்ணப்பாட்டுக்கும் வித்திட்டுள்ளது. கொரோனாதொற்றின் உருவாக்கம் தொடர்பான விவாதங்கள் இன்றும் முற்றுப் பெறவில்லை.

சித்த மருத்துவம், யுனானி,“அலோபதிஎனப்படும் நவீன ஆங்கில மருத்துவம், ஹோமியோபதி, அக்குபங்சர், காந்த சிகிச்சை, தொடுகை மருத்துவம் முதலான பல்வேறு மருத்துவ முறைகள் இன்று நிலவி வருகின்றன. இவற்றின் நோய் நாடுதலும், நோய் அறிதலும், குணப்படுத்தல் முறையும் வெவ்வேறுபட்ட தன்மையில் வெளிப்படுகின்றன. கொரோனாதொற்றின் உலகளாவிய அச்சுறுத்தலை அடுத்து எமது பாரம்பரியப் பழக்கவழக்கங்களும், மருத்துவ நுட்பங்களின் தனித்துவமும் ஓரளவுக்கு ஆய்வுலகிலும், பொதுத்தளத்திலும் கலந்துரையாடலுக்கு வந்துள்ளது. ஒருவரை ஒருவர் தீண்டாமல் கரம் குவித்து வணக்கம் செலுத்துதல், வெளியில் சென்று வந்தால் வீட்டுக்குள் நுழையும் முன்பாக கை, கால் கழுவுதல், தினமும் நீராடுதல், தோய்த்து உலர்ந்த ஆடை அணிதல், இயன்றவரை மாமிச உணவு தவிர்த்தல், உண்ணும் உணவின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தல், குறைபடாமலும், மிகைபடாமலும் அளவோடு புலன் இன்பங்களில் ஈடுபடுதல் முதலான ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான வாழ்வியல் நுட்பங்களையும், வரன்முறைகளையும் எம் முன்னோர் வகுத்து வைத்திருந்தனர். மட்டுமன்றி உணவே மருந்து, மருந்தே உணவுஎன்னும் தத்துவம் தமிழர் வாழ்வியலில் ஆழமாக வேரோடி இருந்தது. அன்றைக்குச் சித்தர்கள் காட்டிய நெறி இன்று மறுபடியும் சொல்லாடலுக்கு வருகிறது, உலகின் ஒட்டு மொத்த அவதானிப்பையும் பெறுகிறது என்றால் நாமும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இஞ்சி, மஞ்சள், மிளகு, பெருங்காயம், திப்பிலி, சுக்கு முதலான எமது முன்னோர் உணவு முறையில் அன்றாடம் இடம்பெற்று வந்தது. இன்றைக்கு நவீன உலகமும் இவற்றையே தேடிச் செல்கிறது.

சமய வாழ்வின் பரிமாணங்களும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுவனமாக உள்ளன. காலை கண் விழிப்பது முதற்கொண்டு இரவு உறங்கச் செல்லும் வரையிலும் உடல், உள நலத்துக்கான உற்ற ஆலோசனைகள் சமயப் போதனைகள் ஊடாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளன. மனதைச் சமைப்பதே சமயம்என்பது வழக்கு. சமைத்தல் என்பது ஆற்றுப்படுத்தல், உருவாக்குதல், நெறிப்படுத்தல் எனப் பொருள் தரும். இதன் வழி, நோய் நாடி நோய் முதல் நாடி, அதனை வேரோடு களைவதற்கான உபாயங்களைத் திருமந்திர நூலின்வைத்தியப் பகுதி எவ்வகையில் முன்வைக்கிறது என்பதைச் சுருக்கமாகப் பரிசீலிப்பதே இக்கட்டுரையின் இலக்காகும்.

விவாத முன்வைப்பும் கலந்துரையாடலும்:

திருமந்திரமும் திருமந்திர ஆசிரியரும்

திருமந்திரத்தில் இல்லாத பொருள் ஒரு மந்திரத்திலும் இல்லைஎன்பர். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையாம்என்ற நிலையில் நின்று, அப் பெரு நோக்கினை ஈடேற்றும் வகையில், தான் அடைந்து கண்ட அருள் அனுபவ உணர்வை மூவாயிரம் தமிழ் பாக்களின் ஊடாக எளிமையாகவும், அதேவேளை ஆழமாகவும் புலப்படுத்தியுள்ளார். திருமூல நாயனார், இலக்கிய வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி இன்றைக்கு ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராய் இருத்தல் கூடும் என்று கருதப்படுகின்றார். உண்மையில் அவரால் திருமந்திரம்என்ற நூல் மட்டுமே இயற்றப்பட்டதுஎன்பது ஏற்புடைமை மிக்கது. எனினும், இன்று திருமூலரின் பெயரில் எண்ணற்ற நூல்களும், சுவடிகளும் கிடைக்கின்றன. திருமூலர் தத்துவக் கட்டளை”,“திருமூலர் தண்டகம்”,“திருமூலர் நாடிச் சூத்திரம்”,“திருமூலர் குறிகை முறை”,“திருமூலர் ஆயிரம்”,“திருமூலர் வாகடம்என்பன அவற்றுட் சில ஆயின், திருமூலரின் பெயரில் அமைந்துள்ள மேற்குறித்த நூல்களுக்கும், பத்தாம் திருமறையாகிய திருமூலரின் திருமந்திர நூலுக்கும் சொல்லமைதி, பொருளடைவு, நடை என்பவற்றில் கணிசமான வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவே, எவ்வாறு சங்ககால ஒளவையார் வேறு, அதன் பிற்பாடு நீதி நூற்கள் பாடிய ஒளவை, சோழர்கால ஒளவை வேறு என்று இலக்கிய ஆராய்ச்சி குறிப்பிடுகிறதோ அவ்வண்ணமே, திருமந்திரம் தந்த திருமூலர் வேறு; ஏனைய திருமூலர்கள் வேறு என்பது அறியக் கிடைக்கின்றது.

திருத்தொண்டர் புராணத்தின் இருபத்தாறு பாடல்களின் வாயிலாக நாம் திருமூலரின் வரலாற்றை அறிய முடிகிறது.

மூலன் உரை செய்த முப்பது உபதேசம்

 மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்

 மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்

 மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே

என்ற பாடலின்படி,“மூவாயிரம் தமிழ்என்பது திருமந்திரத்தையே குறித்து நிற்கிறது எனலாம். முப்பது உபதேசம்என்பது திருமூலர் இயற்றிய தனிநூலாகவே அமைந்திருக்க வாய்ப்பிருந்தாலும், இது திருமந்திர நூலின் கண் ஒரு தன் அதிகாரமாகவே திருமந்திரப் பதிப்புகள் அனைத்திலும் அமைந்துள்ளன. இந்த உபதேசப் பாடல்களில் பல்வெறு அரிய மருத்தவ உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் கரு உற்பத்தியாகும் விதம், தசவாயுக்களின் தொழிற்பாடுகள், முக்குணத்தின் இயல்புகள், நாடிகளின் தன்மை, வாத, பித்த, சிலோத்தும இயல்புகள், மனித சுவாசத்தின் வகை, தன்மை, உடலின் தட்ப வெப்ப மாறுபாடுகள், வியாதிகளின் தன்மைகள், நோய்த் தடுப்பு முறைகள், மருந்து முதலான பல விடயங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. 

கருவுற்பத்தியும், உடல் இயக்கமும்

உடல், உள்ளம், உயிர் ஆற்றல் இவை தொடர்பான நவீன விஞ்ஞான அறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் இன்று  பல்கிப் பெருகியுள்ளன. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பாகவே, நவீன சாதனங்களின் துணை ஏதுமின்றி இத்தகைய உண்மைகளை எமது முன்னோர் எடுத்துரைத்துள்ளனர். அவை சமய இலக்கியங்களில் எங்கணும் பரவிக் கிடக்கிறது. உடலின் உருவாக்கம் பற்றிக் கூற வந்த திருமூலர்,

உடல் உற்றவாறும் உயிர் உற்றவாறும்

அடைவுற்ற ஒன்பது வாயிலின் ஆறும்

திடமுற்ற தத்துவ சீவப்புலன்களும்

கடலுற்ற நீர் போற் கண்ட கருவிதே”(திருமந்திரம், வைத்தியப் பகுதி பாடல் 03)

என்று உரைக்கிறார். மனித சரீரம் உருவான வகையும் பொருந்திய பிராணன் வந்த வகையும், பொருந்திய பிராணன் வந்த வகையும், நவத்துவாரங்கள் தோன்றிய விதமும், பரந்த கடலில் இருக்கும் ஆழமான நீருக்கு ஒப்பானது. எனவே கருவின் உற்பத்தி என்பது திருவருளால் நிர்ணயம் செய்யப் பெறுவது என்பது இதன் பொருளாகும்.

இதனை விட பதினான்கு வகைத் தத்துவங்கள் பற்றியும் திருமூலர் எடுத்துரைத்துள்ளார். சப்தம், ஸ்பரிசம்,ரூபம்,ரசம், கந்தம், வசனம், கமனம், தாளம், விசற்கம், ஆனந்தம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்றவாறு அவை அமையும்.

கர்ப்பமானது சுக்கிலம், ஆர்த்தவம், ஜீவாத்மா என்பவற்றின் சேர்க்கையினால் ஏற்படும் வஸ்து என்பது திருமூலரின் அபிப்பிராயம். இதனை விட முக்குணத்தவர் கொண்டிருக்கும் இயல்புகள், பிராணனுக்கான விளக்கம், அங்கவீனமான சிசுக்கள் பிறப்பதற்கான ஏது பஞ்சéத பிண்ட உற்பத்தி, ஏழு வகைச் சர்மங்கள், எலும்புகளின் வகைகள், அறுவகைச் சக்கரம், மூன்று மண்டலம், நாடிகளின் மாற்றம், நாடி அறியும் முறை, நோய் அறியும் முறை, தேகத்தின் பஞ்சéத அமைப்பு, பஞ்சéதங்களில் உடலில் தங்குமிடம் முதலான பல்வேறு அéர்வமான தகவல்களையும் நவீன மருத்துவ விஞ்ஞானத்துக்கு இயைபான வகையிலும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இதனூடாக சமயமும்,அறிவியலும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்னும் உண்மையும் புலனாகிறது. ஆன்மீக நிலைப்பட்ட சொல்லாட்சி மொழிதல் இடம் பெற்றாலும் கூட காலங்கடந்தும், மனித உடல், அதன் இயக்கம், உயிர் ஆற்றல், உள்ளத்தின் குணாம்சங்கள்,உள்ளுறுப்புத் தொழிற்பாடுகள் பற்றிய ஆகிய உண்மைகள் இங்கு வெளிப்பட்டு நிற்கின்றன.

நோய் தொடர்பான விளக்கம்

பண்டைக் காலத்தில் மனிதர் இயற்கை சீற்றம்,கொடிய விலங்குகள் என்பவற்றக்கே பெருமளவுக்கு அஞ்ச வேண்டிய நிலை காணப்பட்டது. சமகாலத்தை ஒத்த நோய் நொடி மலிந்த காலம் நிலவவலில்லை. இயற்கையுடன் இயைந்த வாழ்வு, உடல் உழைப்பு, அளவான நுகர்வு முதலானவை முன்னோரி ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுத்தது. எனினும் மருத்துவம் என்பது பிழைப்பாகவன்றி, பெரும் சமூகப் பணியாகக் கருதப்பட்டது. கல்வி, மதம், மருத்துவம், கலை முதலானவை இன்று போல வணகமயப்படுத்தவில்லை. மருத்துவர்கள் மனித உடலுக்கு மட்டுமன்றி, உள்ளத்துக்கும் உற்ற துணையாக விளங்கினர்.

நோய் இன்னதென்று முதலில் ஆராய்ந்து துணிய வேண்டும். பின்பு அது உண்டான காரணத்தை மிகச் சரியாக அறிதல் வேண்டும். அதன் பின்பு படிப்படியாக அப்பிணியை நீக்கும் வழிமுறையைத் தெளிய வேண்டும். ஈற்றிலே, தான் கண்டறிந்த உபாயத்தினபடி அப்பிணி களையுமாறு மருத்துவம் புரிய வேண்டும். இத்துணை சிறந்த கருத்தை முன்வைத்தவர் வான் மறை தந்த வள்ளுவப் பெருமான்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்என்பது குறள் (அதிகாரம் 95, குறள் 948)

திருமூலர், தமது வைத்தியப் பகுதியில் நாடியறிதலின் மூலம் தக்கவாறு பிணிகளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார். பண்டைய இந்து மருத்துவ நூல்கள் நாடிகளின் எண்ணிக்கையை நன்கு ஆராய்ந்து 72000 நாடிகள் நமது உடலில் உள்ளதாகக் கூறியுள்ளன. (சரகஸம்ஹிதை, கர்ணிகஸம்ஹிதை, யோகதாராவளி முதலானவை) வாத நாடி ஒரு மாத்திரையும், பித்த நாடி அரை மாத்திரையும்,கபநாடி கால் மாத்திரையுமாக நடக்குமானால் அது யாதொரு நோயுமற்ற சுக சரீரம் என்று கருதப்படலாம் எனக் கூறுகிறார். எனவே, நாடியறிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று எடுத்துரைக்கிறார். நாடி தெரியாத வைத்தியன் சமூக அங்கீகாரம் பெற முடியாது. ஆனால் நாடியை ஒருவர் அறிவதென்பது சிரமத்தை அறிவது போல மிகுந்த சிரமத்துக்குரியது. பிறர் நாடியை அறிவதற்கு முன், தனது மனதையும் உடலையும் மிகத் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம்.

ஆகாசம், வாயு, தேயு, அப்பு, பிருதுவி என்னும் ஆதாரமான பஞ்ச பூதங்களால் ஆனதே எமது உடம்பு. இதனால்தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டுஎன்பர். எல்லா நாடிகட்கும் ஜீவாத்மாவேமூலாதாரம் ஆகும். தொப்புளுக்குள் கீழே நான்கு அங்குல அகலமும், இரண்டு அங்குல உயரமும் பவழத்தின் முனை போன்ற உருவமும் உடைய ஓர் இடமே நாடிகளின் மூலஸ்தானம் என்று கூறப்படுகிறது. அதிலிருந்தே ஏழுபத்தாயிரம் நாடிகளும் புறப்பட்டு, இலையின் நரம்புகள் போல கிளைத்து, சூக்குமமான முறையில் உடலின் அனைத்துப் பாகங்களிலும் ஊடு பரவிச் செல்லுகின்றன. அவையே வாத, பித்த, கபபேதங்களின் வழியாக மனித உடலின் ஆரோக்கியத்துக்கும், நோய் நிலைகளுக்கும் வழிவகுக்கின்றன.

வாத நாடி நடை கோழி போலும், பித்த நாடியின் நடை தவளை போலும், கபநாடியின் நடை பாம்பு போலவும் நடக்கும் இவற்றை எல்லாம் ஐயமறத் தெளிந்து கொண்டவர்களே மனித உடலில் வெளிப்படும் பிணிகள் பற்றியும் தெளிவாக அறிய வல்லவர்கள் என்று எடுத்துரைக்கிநார் திருமூலர்.

எழுபத்தீராயிரம் மொத்த நாடிகளுள் முப்பதினாயிரம் நாடிகள் புருஷ நாடிகள் எனவும் என்றும், முப்பதினாயிரம் நாடிகள் ஸ்திரீ நாடிகள் என்றும், பன்னாயிரம் நாடிகள் நபும்ஸக (அலி) நாடிகள் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

காணவே புருடருக்கு வாத நாடி

கானகத்து மயில் போலும் அன்மை போலும்

 தோணவே கோழி நடை நடக்கும் சொன்னேன்

……………………………………………….”     

என்பதாக அகத்தியரும் எடுத்தியம்பியுள்ளமை நோக்கத்திற்குரியது.

தேறவே சந்திரனும் வாத நாடி

திறமான சூரியனும் பித்த நாடி

மீறவே அக்கினியும் சேதம் நாடி

விளங்கவே வியாழமதிலங்கி மீறும்

 கூறவே மந்தன்சேய் இரவி மூன்றும்

  குணமான சூரியனுங் குமுறியோடும்

 ஏறவே திங்கள் புதன் வெள்ளி தானும்

இன்பமுள்ள சந்திரனும் ஓடுங் காணே என்பது அகத்தியர் பரிபூரணப் பாடல்.

நோய்களுக்கான அடிப்படைக் காரணங்கள்

மனித உடலானது பஞ்சழுதச் சேர்க்கை என்பதனை லவே கண்டோம். நோயின் உற்பத்தி பற்றி எடுத்து கூறும் முன்பு, பஞ்சழுத அம்சங்களின் இயல்பு பற்றித் திருமூலர் விளக்கி நிற்கிறார். பிருதுவி (பூமி) அம்சமானது மூக்கில் தங்கும்; அக்கினி (நெருப்பு) அம்சமனது காண்களில் பொருந்தி நிற்கும்; சப்தத்தோடு கூடிய வாயுவானது சரீரம் முழுமைக்கும் ஸ்பரிசத்தை வழங்கி நிற்கும்.

இனி வாத குணம் பற்றிக் கூற வந்தவர், மிகுந்த வாத குணத்தினால் உடம்பில் எரிச்சல் உண்டாகும். பிரதானமாக கை, கால்கள், இடுப்புச்சந்து, விலாப்பக்கத்திலும் தாங்க முடியாத வலி ஏற்படும். வயிற்றுப்பொருமல், குடலிரைச்சல், மலச்சிக்கல், உடலில் சீதனத்தைக் கூட்டி நடை நலிதல், பக்க வாதம் முதலானவையும் வாதத்தின் குணாம்சங்களே என்கிறார்.

பித்தமானது, மனக்கோளாறையும், நினைவு தப்புதலையும், வாந்தி, நாவில் மிகுதியாக நீர் ஊறுதல், சரீர எரிச்சல் அதிக தாகம் என்பவற்றை ஏற்படுத்தும் என்று உரைக்கிறார். கபமானது, மேல் மூச்சை அதிகரிக்கும். தொடர் இருமலுக்கு வழிவகுக்கும்.

உடலில் அக்கினியும், வாயுவும் சேர்ந்து தன்தன் அளவுக்கு அதிகரித்தல் நினைவினையே இழுக்கச் செய்யும்படியான சுரம் (காய்ச்சல்) உண்டாகும்.

நோய்க்குறிகளை அறிதல்

நோய் நாடுதல்என்பது மிகப் பெருங்கலையாகும். திருமூலரின் வைத்தியப் பகுதியில் இந்த அம்சமும் முதன்மை பெறுகிறது. உடலில் முக்குண மாறுபாடுகளினால் தோ~ங்கள் ஏற்படுகின்றன என்பது திருமூலரின் கருத்து. நிறைந்த வாயுவும், அக்கினியும் சேர்ந்து கருவண்ணமாகவும் அக்கினியும், பித்தமும் கலந்து செவ்வண்ணமாகவும் சேறு போன்ற கபத்தினால் வெண்ணிறமாகவும் நாவில் தோன்றும் என்று கூறப்படுகிறது.

அக்கினி மந்தத்தினால் வாயு உண்டாவதோடு, அதிகரித்த வாயுவினால் அனைத்து விதமான பிணிகளும் உண்டாகும். அன்னத்தாலும் மந்தம் ஏற்படலாம். மாமிசம், மாப்பண்டங்களை அதிகம் புசித்தாலும் மந்தம் உருவாக வாய்ப்புண்டு. இதனையே நவீன மருத்துவமும் எடுத்துக் கூறப்படுகிறது. உணவு, உயிர் இயக்கத்துக்கான மூலாதாரம் எனினும் எதனை, எக்காலத்தில், எவ்வாறு உண்ண வேண்டும் என்பதற்கான உரிய வரன்முறைகளை முன்னோர் வகுத்துச் சென்றுள்ளனர்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்” (அதிகாரம் 95, குறள் 942)

இக்குறள் அளவறிந்து உண்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. திருமூலரும்,

மேவியவன்னத்தால் விளங்கியது இச்சடம்

பாவியே கொன்று பழியுறு மன்னந்தான்

 ஆன் மிதந்தப்பிலையுற்று நோயாகும்

காவிலிவை யெல்லாங் கண்டு கொளன்னமே                              (பாடல் 61)

அளவு மீறிய உண்டியால் உடலின் பல பிணிகளும் உருவாகும் என்பது இப்பாடலின் சாரம்.

இதனை விட இன்று பால்வினை நோய்” (ளுநஒரயடடல வசயளெஅவைவநன னளைநயளந) என்று அழைக்கப்படும் பிணியை மேக நோய் என்பதாகக் குறிப்பிட்டு அது தொடர்பான விரிவான விளக்கமும் இந்நூலில் இடம்பெறுகிறது. பித்த குன்மம், வாத குன்மம், ஐய குன்மம், மேக சூலை குன்மம், பித்த சூலை, வாத சூலை,  மலட்டுத்தன்மை, பெண் நோய் இயல், கண் நோய்கள் (வெள்ளெழுத்து, மாலைக்கண், மந்தாரதிமிரம் முதலியன) என்றவாறு பல்வேறு நோய்களின் அடிப்படைக் காரணங்களும் பேசப்படுகின்றன.

நோய் தீர்த்தல் தொடர்பான உபாயங்கள்

ஆங்கில மருத்துவம் போலன்றி, சித்த மருத்துவமானது பக்க விளைவுகள் இன்றியும், பிணியை வேரோடு முற்றாகக் களையும் தன்மையும் கொண்டிருப்பதனை உலகமும் இன்று படிப்படிhக அறிந்து வருகிறது.

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வான் என்று

 அப்பால் நாற் கூற்றே மருந்துஎன்றார் வள்ளுவர். (அதிகாரம் 95, குறள் 950)

கருவுற்பத்தி முதல் நோய் அறிதல் வரை எடுத்துரைத்த திருமூலர், ஒரு சில பிணிகட்கான பரிகாரங்களையும் விளக்கத் தவறவில்லை. கண்நோய்க்கு அவர் கூறும் மருந்து இ;வாறு அமைகிறது.

இந்துப்புத் திப்பிலி இயல் பீதரோகிணி

நந்திப்éச்சாற்றில் நயந்தேயரைத்திட

அந்தகன் கண்ணுக்கு வருந்ததி தோன்றிடும்

நந்திக்கு நாதன் நயந்துரைத்திட்டதே                        (பாடல் 119)

இந்துப்பு, அரிசித்திப்பிலி, இயற்கையாகிய பீதரோகணி இவைகளை நந்தியாவட்டéச் சாற்றினால் நன்றாக அரைத்து, மாத்தழரையாகச் செய்து கண்களில் இட்டால் இருண்ட கண்களை உடையவருக்குக் கூட அருந்ததி நட்சத்திரமும் புலப்படும். என்கிறார். இச் சிகிச்சை முறையானது இன்னும் கூட கிராமிய சமூதாயங்களில் பின்பற்றப்படுவதனை அவதானிக்கிறோம்.  இவ்வாறே மேலான இரசக்குருவை அநுபானங்களில் கொடுத்து வர சுரம், அதனோடு தொடர்புபட்ட ஜன்னி,நாட்பட்ட வாயு கர்ப்பப்பையில் உருவான  கொடிய சூலை நோய்களும் நிவர்த்தியாகும் என்றுரைக்கிறார்.  இறுதியாக சுத்தி செய்யப்பட்ட இரசம், தங்கம், கந்தகம், அதன் சாரம் இவற்றைப் பொடி செய்து, அநுபானங்களில் கலந்து உரிய வேளைகளில் உண்டு வர சகல ரோகங்களும் நீங்கப் பெறும் என்று உறுதயாக உரைக்கிறார்.

முடிவுரை

கொரோனாபெருந்தொற்றுப் பிணியின் உலகளாவிய பரவுகையானது எமது வாழ்வியலை, உணவு முறையை, மருத்துவமுறையினை எல்லாம் மறுபடியும் நிதானமாக மீட்டிப் பார்க்கச் செய்துள்ளது. அளவு கடந்த புலனின்ப வேட்கை, அளவு கடந்த நுகர்வு, காலில் மண்ணேபடாத தொடர் மாடிக் குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவுப்பழக்கம், மிதமிஞசிய செல்லிடப்பேசிப் பாவனை, இயற்கையுடன் இணைய மறுக்கும் வாழ்க்கை முறை, நீண்ட நேரம் விழித்திருத்தல் என்றவாறு நாமே நமக்குத் தீங்கு தேடிக் கொண்டோம். உணவே மருந்துஎன்னும் நிலை மாறி,“மருந்தே உணவுஎன்னும் துர்ப்பாக்கிய நிலை உருவாகிவிட்டது. சித்தத்தின் அழுகை இழந்து,  அது குப்பைத் தொட்டிக் களஞ்சியமானது. இதனால்தான், நவீன விஞ்ஞானம், மருத்துவம் என்பன கூட தடுமாறித் திணரும் அளவுக்கு இப்புதிய நுண்கிருமித் தொற்று, முகக்கவசம், சமூக இடைவெளி, தேச முடக்கம் ஆகிய அவலங்களைக் கொண்டு வந்தது. இன்னும் உலகம் இப்பிணியின் தாக்கத்திலிருந்தும் முற்றாக விடுபடாத நிலையில் சமயத்தின் வழியிலே நோய் நாடி”,“நோய் முதல் நாடி”, அது தணிக்கும் வாய் நாடி, என்றும் பொருந்தும் அரிய மருத்துவ உண்மைகளைச் சிந்தித்து,கடைப் பிடிப்பதற்கான காலம் கனிந்துள்ளது என்றே கூறுதல் வேண்டும். தொகுத்துச் சிந்திக்குமிடத்து திருமூலரால் அருளப்பட்ட வைத்தியப் பகுதிஎன்னும் இந்நூலின் கண், கருவுற்பத்தி முதல் பஞ்சபூத விளக்கம், உடலியக்கம், உயிர் விளக்கம், நாடிகள், வாத, பித்த,சிலேட்டும இயல்பு, நோயறியும் பாங்கு, நோய் தணிக்கும் உபாயம் முதலானவை தெளிவுற எடுத்து மொழியப் பெற்றள்ளமை நன்கு புலனாகிறது. இனியேனும், பழைமை என்று இழிவுரைக்காமல் நம் பெருமை நாமறிந்து, முன்னோர் புகட்டிய வழியில் நோயற்ற நல வாழ்வு காண்பதும், இவ்வரிய மருத்துவ உண்மைகளை எமது அடுத்த தலைமுறையினருக்குக் கடத்துவதும் எம் கடப்பாடு ஆகிறது. 

அடிக்குறிப்புகள்

தமிழ் நூல்கள்

1.     உத்தமராயன்;, K.S. 1951.சித்த மருத்துவ சுருக்கம், தமிழ் நாட்டு அரச வெளியீட்டு திணைக்களம், சென்னை.

2.  உத்தமராயன், K.S.1992.நோயியல் ஆராய்ச்சியும் சித்த மருத்துவ வரலாறும்,தமிழ் நாட்டு அரச வெளியீட்டு திணைக்களம், சென்னை.

3.     வேணுகோபால், P.M., 1987.சித்த உடல் தத்துவம், அறும்பாக்கம், சென்னை.

4.    சண்முகவேலு, M.,  1987. சித்த மருத்துவ நோய் நாடல் மற்றும் நோய் நாடித்திரட்டு - 1, அறும்பாக்கம், சென்னை.

5.     திருவாவடுதுறை ஆதீனம் (வெளியீட்டு எண் : 574),2008. திருமந்திரம் - வைத்தியப்பகுதி.

ஆங்கில நூல்கள்

1.     Kandasami Pillai., N. 1998. History of Siddha Medicine, Dept of ISM & H., Arumpakkam, Chennai

2.     Subramnian., S.V & Madavan., V.R. 1973. Heritage of Tamils Siddha Medicine, International Institute of Tamil Studies, Taramani, Chennai.

இணையத்தளம்

1.     http://www.geocities.com/chivaperuman/thirumoolar.html Viewed on 14.03.2021 09.30 p.m.

2.     http://www.en.wikipedia.org/wiki/thirumoolar   Viewed on 15.03.2021 07.30 a.m.