4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

சைவ சித்தாந்தம் கூறும் ஒழுக்கம் - செல்வி.பேரின்பநாயகம் சுதர்சினி

 

சைவ சித்தாந்தம் கூறும் ஒழுக்கம்

செல்வி.பேரின்பநாயகம் சுதர்சினி

இலங்கை.

sutharshiniperinpam@gmail.com

அறிமுகம்

உலகம் இன்றுவரை போற்றி வருகின்ற சமயங்களில் இந்துசமயமும் ஒன்றாகும். அதற்குக் காரணம் சமூகத்திற்குத் தேவையான தத்துவ சிந்தனைகள், அறச்சிந்தனைகள் மற்றும் போதனைகள் அறிவியல் முதலான கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டு காணப்படுவதலாகும். அத்துடன் இந்துசமயத்தில் ஒழுக்கப் பெறுமானங்கள் என்பது ஆதி காலந்தொட்டு நிலவி வருகின்றது. குறிப்பாக இந்துக்கோட்பாடுகள் ஒழுக்கப் பெறுமானங்களை வலியுறுத்தி நிற்பது பற்றி பலரும் அறியாததொன்றாகவே காணப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பலரும் தங்களுக்கென்று வெவ்வேறு ஒழுக்கப் பெறுமானங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் ஒழுக்கம் என்பது இந்துக்களின் வாழ்க்கையில் அடிப்படையானதாகும். இவற்றோடு இந்துமதம் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டு தனித்துவமாகப் போற்றப்படுவதற்கும் ஒழுக்கத்தின் அடிப்படை என்றே கூறமுடியும்.

ஒழுக்கவியல் எனும் பதமானது ஆங்கிலத்தில் Ethics என அழைக்கப்படுகின்றது. இது கிரேக்க மொழியின் Ethos எனும் அடிச்சொல்லில் இருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது வழக்கம் (Custom), சம்பிரதாயம் (Tradition),  நிறுவப்பட்டவை (Something Established)  என்ற பொருள்களைக் குறித்து நிற்கின்றது. அத்தோடு ஒழுக்க மெய்யியலானது Moral Philoshopy என ஆங்கிலத்தில் ஒழுக்கவியல் என்று இன்னுமொரு பதத்தை சுட்டி நிற்கின்றது. இங்கு Moral என்பது Mores எனும் இலத்தீன் அடிச்சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வாறு ஒழுக்கம் என்பதற்கான பொருள் விளக்கங்கள் தோன்றியுள்ளன.

இந்தியப் பாரம்பரியத்தில் தர்மம், அறம், ஒழுக்கம் முதலான சொல்லாட்சிகள் வெவ்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டன. எனினும் சில வேளைகளில் இப் பதங்கள் ஒன்றுக்கொன்று இணையானவையாக உள்ளதையும் அவதானிக்கலாம்.இவ்வகையில் இந்தியச் சிந்தனை மரபில் மனுதர்ம சாஸ்திரம், ஞாஞ்ஞவல்லியர் சாஸ்திரம் ஆகியன பழமை வாய்ந்த இலக்கியங்களாகக் கருதப்பட்டன. இதில் ஞாஞ்ஞவல்லியரால் படைக்கப்பட்ட சட்ட நூலாக ஞாஞ்ஞவல்லியர் சாஸ்திரம் காணப்படுகின்றது. இவற்றில் மனுவினால் படைக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரம் மனித வாழ்வின் ஒழுங்கு முறைகளைப் பேணுவதற்கான நெறிமுறையினை எடுத்துக் கூறுவதாக அமைகின்றது.இதனால் முதன்மைக்குரிய நூலாகவும் கொள்ளப்படுகின்றது. இதில் பிரபஞ்ச ஒழுங்கைப் பேணுகின்ற சட்டமாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது. கர்மமானது சமய, சமூக, ஒழுக்க இலட்சியமாகவும் சுட்டப்படுவதால் முழுப்பிரபஞ்சமும் தர்மத்தில் தங்கியிருப்பதாகக் கருதுவர்.

மனித வாழ்விற்கு அடித்தளமாக விளங்குவது உயிர்ப்பாகும்.உயிர் இல்லாவிடில் உடலானது சடமாகி விடும். அதே போன்று தான் ஒழுக்கம் இல்லாது விட்டால் வாழ்க்கையே நிலைகுலைந்து விடும். இந்நிலையிலே வள்ளுவப் பெருந்தகை ஒழுக்கத்தை உயிரிலும் மேலாக எடுத்தாள்வதன் மூலமாக ஒழுக்கத்திற்கு அவர் கொடுக்கும் சிறப்பை உணர முடிகின்றது. அதனை மேல்வருவதை அவதானிக்கலாம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

 

ஒழுக்கம் குழுமத்தின் நடத்தைக்கோலத்தினைக் குறிப்பாகக் கொள்ளமுடியும். இந்து ஒழுக்கம் எனும் போது இந்துக்களின் வாழ்வியல் நடத்தை முறைகளை அதாவது நடத்தைச் சட்டங்களாக நடத்தை பற்றிய விதித் தொகுப்பாக அமைகின்ற அம்சங்களைப் பற்றி அக்கறைப்படுவது அவசியமாகின்றது. ஒழுக்க விதிகள் என்பவை பொதுவாக சமதாயத்தில் வளர்த்தெடுக்கபடுவதேயாகும். இதே போன்று இந்துசமயத்தில் இன்றும் நிலைத்திருக்கும் சைவ சித்தாந்த நெறியானது மனித நடத்தையின் ஒழுங்கு விதிகளை செம்மைப்படுத்தி மனிதனை உயர்நிலைக்கு வாழ வழிகாட்டுகின்ற தத்துவநிலையாக விளங்குகின்றது. இத்தத்துவ நெறியானது வேத மரபில் எடுத்தாளப்பட்ட சிந்தனையின் நுட்பதிட்பங்களைக் கைக்கொண்டுள்ளதுடன் அவற்றினை ஒழுங்குபடுத்தி சிறப்புற அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ரிதம் எனும் சொல்லாட்சியானது ஆரம்பத்தில் உலக ஒழுங்கினைக் குறித்ததாகும். அதற்கமைய பிற்பட்ட மளிதனின் ஒழுக்க ஒழுங்குக்கும் உரியதாக கொள்ளப்பட்டது. இது வேத இலக்கியங்களால் சட்டங்களால் இயற்கை முறைகளுக்கேற்ப சமூக அமைதி, நீதி, மனித ஆனந்தம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவல்ல தன்மையில் சுட்டப்பட்டது.இந்நிலையிலேயே சமய அனுபூதிமான்களின் வாக்குகள் பின்வருமாறு ஒலிக்கின்றன.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிற்கு யாதுமோர் குறைவிலை

 

இவ்வாறே சைவசித்தாந்தமும் மனித ஒழுக்கம், நடத்தை என்பன பற்றி விரிவாக விளக்குகின்றது. அவ்வாறே சைவசித்தாந்த தத்துவம் கூறுகின்ற ஒழுக்கம் பற்றிய தத்துவக்கருத்துக்களை விரிவாக நோக்குவோம்.

சித்தாந்திகள் ஒழுக்கத்தில் நடத்தை பற்றிய ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றனர். இங்கு நடத்தை என்பது நடத்தைக்குப் பொறுப்புடையவனாக உள்ளவனே கர்ம விதிகளுக்குட்படுகின்றான் என சித்தாந்திகள் வலியுறுத்துகின்றனர். அதாவது நடத்தை பற்றிய விளக்கத்தை கர்மக் கோட்பாட்டினூடாக வினை விதைத்தவன் வினை அறுப்பான்எனும் கூற்றிற்கிணங்க சைவசித்தாந்த ஒழுக்கக் கோட்பாட்டினை கர்மக்கோட்பாட்டினூடாக இவர்கள் விளக்கிச் செல்வதைக் காணலாம். இங்கு கர்ம க்ருஎனும் சமஸ்கிருத அடிச்சொல்லில் இருந்து எழுந்ததாகும். இதனோடு செயல் அல்லது வினை என்னும் பொருள்படும் செயலும் செயலின் பயனால் வருகின்ற விளைவும் கர்மம் என்ற சொல்லால் உணர்த்துகின்றது. பிரபஞ்சத்தில் தோன்றிய ஜீவராசிகள் அனைத்தும் ஒரு கணமும் செயலின்றி அல்லது வினை இன்றி இருக்க முடியாது என சித்தாந்தம் கூறுகின்றது.கர்மக் கோட்பாட்டின் படி சைவசித்தாந்தத்தில் இரு வகையான நிலைப்பாங்குகள் விளக்கப்படுகின்றன.

01.           பௌதீக அதீத நிலைக்குரியது

02.           பௌதீகம் சார்ந்த ஒன்றாகும்.

சைவசித்தாந்தத்தில் கூறப்படும் பொருள் விளக்கத்தில் பசுவானது பாசத்தில் இருந்து நீங்கி பதியை அடைவதற்கான வழி வகைகளைத் தெளிவுபடுத்தி நிற்கின்றமையைக் காணலாம். இவற்றில் பாசமானது ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றாகும்.இதில் கர்மமானது ஒவ்வொருவரும் ஆற்றுகின்றனர். அவ்வாறு ஆற்றும் கர்மம் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளைவானதும் தவிர்க்க முடியாததாக அமையும். இதே போன்று முன்பு குறிப்பிட்டது போன்று எவரும் கர்மம் ஆற்றாது இருக்க முடியாது. குறிப்பாக ஒவ்வொருவரும் திரிகரணங்களான மனம், வாக்கு, காயம் எனும் நிலைகளில் கர்மமாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதனாலேயே ஒரு கணம் எனும் செயலாற்றாமல் இருக்க முடியாது என்பதை அறியமுடிகின்றது. வாக்கால் ஆற்றும் கருமமானது பேச்சுக்கள் கூற்றுக்களாக அமைகின்றன. காய கருமமானது பௌதீக செயலாகவும் உடற்செயலாகவும் அமைகின்றன. இங்கு மனதால் ஆற்றும் செயலானது சிந்தனை முதலான அகச்செயற்பாடுகளாக அமைகின்றன. இவற்றில் காயத்தினால் ஆற்றும் செயல்களையும் வாக்கினால் ஆற்றும் செயல்களையும் ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வைக்கமுடியும். ஆனால் மனத்தால் ஆற்றும் சிந்தனையினை முற்றாக கட்டுக்குள் வைத்திருப்பது என்பது கடினமானதாகும். அதாவது மனமானது சிந்தனையை விடுத்து வெறுமையாக இருத்தல் எனலாம். இதனால் தான் ஒரு கணம் ஏனும் கருமமாற்றாமல் இருப்பது சாத்தியம் இல்லை எனலாம். கர்ம நிலையானது கடந்த நிலையில் சும்மா இருத்தல் என்பது ஆன்மீக நிலையில் உயர்வானது என்கின்றனர் சித்தாந்திகள். அவ்வகையில்

மௌனியாய் சும்மா இருக்க- தாயுமானவர்

சுகக்கடல் பொங்க சொல்லுணர்வு அடங்க சும்மா பொருந்திடு- ரமண மகரிஷி

இவ்வரிகளினூடாக அத்துவித கழிவெண்பா தொடர்பாக எடுத்துக் கூறப்படுவதை அவதானிக்கலாம். ஆகவே சும்மா இருத்தல் உயர்வானது ஆயினும் ஆற்றுகின்ற கருமங்கள் அதற்குரிய பலன்கள் கர்ம விதியின் விளக்கமாகும்.

ஒவ்வொரு செயலும் கர்ம விதிப்படி அதற்குரிய பலனை அல்லது விளைவை பெற்றுக்கொள்கின்றன. இவற்றையே நல்வினை தீவினை என்னும் செயல்நிலை விழுமியத்தைப் பெறுகின்ற ஒழுக்க நிலை சார்ந்த எண்ணக்கருக்களாக நோக்கமுடிகின்றது. ஆற்றுகின்ற செயல்கள் அனைத்தும் பலாபலன்கள் கொண்டதாகவும் ஒழுக்கப்பெறுமானங்களைக் கொண்டதாகவும் அமைவது தெளிவுக்குரியதாகும். இங்கு கர்மமானது பௌதீக நிலை சார்ந்த தகைமைக்குரியதாகவும் ஒழுக்கத்திற்குரியதாகவும் அமைகின்றது. இந்நிலையிலே சுய சித்தத்திற்கு அமைய செயலை ஆற்றுவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்வதுடன் அதற்கமைவான நெறிமுறைகளை விளக்குவதாகவும் அமைகின்றன. இதற்கமைவாக ஒழுக்கப் பெறுமானத்திற்கமைய ஆன்மாவானது கர்மத்தில் பெறுபேறுகளை எவ்வாறு பெற்றுக்கொள்கின்றது என்பதனை சைவசித்தாந்தம் விளக்குகின்றது. இதற்கமைவாக பௌதீக அதீத தன்மை சார்ந்ததாக அமைவதுடன் கர்மத்தின் பகுப்பு நிலைகளான ஆகாமியம், சஞ்சிதம்,பிராரத்துவம் என்பன எடுத்தாளப்பட்டு சித்தாந்தம் தெளிவுபடுத்தி நிற்பதைக் காணலாம்.

சைவசித்தாந்தம் அகத்துக வாழ்வில் மேற்கொள்ளப்படும் தவ வாழ்க்கையையும் ஒழுக்க சிந்தனையாகக் கொள்கின்றது.இத் தவமானது இறைவனை அடைவதற்கான மாற்றமாகவும் சித்தாந்தம் கூற விளைகின்றது. உயிர்கள் இறைவனை அடைவதற்குரிய உபாயமாகக் கொண்டுள்ளன. பிறவியின் நோக்கமே மீண்டும் பிறப்பெடுக்காமல் இறைவனைச் சேர்வதாகும். இவ்விழுமிய நோக்கம் நிறைவேறுவதற்கு உயிர்கள் தவம் மேற்கொள்கின்றன. தவம் மேற்கொள்வதால் இருவினையொப்பு, மலபாரிகம், சத்தினிபாதம் என்பன படிமுறையாக நிகழ்கின்றன. அவ்வாறு நிகழ்வதால் இறைவன் குருவாய் வந்து உணர்த்துவான் என கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக உயிரானது பாசத்தை விட்டு பதியைச் சேரும். தவத்தார் உலகியலில் உயிரானது பாசத்துடன் இணைந்து அசத்தாக காணப்படுகின்றது.பின்னர் பதியுடன் முத்திப் பேற்றில் இணைகிறது. குறிப்பாக சத்தான பதியுடன் இணைந்து சதசத்தாக மாறுகின்றது. இவ்வாறு நடைபெறுவதற்குத் தவம் ஒரு செயற்கரும ஒழுக்கமாகக் காணப்படுகின்றது. இதனை சைவசித்தாந்தியான மெய்கண்டார் மிகத் தெளிவாக விளக்கியுள்ளதை அவதானிக்கலாம்.

ஐம்புலவேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்

தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்ந்த விட்டு

அந்நியும் இன்மையின் அரன் கழல் செலுமே”.

 

சைவசித்தாந்தம் கூறும் ஒழுக்கங்களில் சைவநாற்பாதங்களும் கொள்ளப்படுகின்றன. முத்தியடையத் தேவையான ஒழுக்க முறைகளாக இவை கொள்ளப்படுகின்றன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். இவற்றில் சரியை மார்க்கமானது கடவுளுக்கு நமது மனம், மொழி, மெய் ஆகியவற்றால் தொண்டு செய்வதுடன் அடியவர் கொண்டுள்ள செயல், எண்ணம், வாக்கு ஆகிய அனைத்தும் இறைவனைப் பற்றியே இருத்தல் வேண்டும். எல்லாத் தொண்டுகளும் தெய்வப் பணிகளாகவே செய்யப்படுவதால் அவை தெய்வீகத் தன்மை பெறுகின்றன. இதுவே தாச மார்க்கம் எனக் கொள்ளப்படுகின்றது. ஆன்மா தன்னைப் பணிவுடன் கூடிய அடிமையாகக் கருதி இறைவனாகிய தலைவனுக்குத் தொண்டு செய்கின்றது. அதனால் ஆன்மாவானது இறைவனுக்குப் பணிவுடனும் பக்தியுடனும் தனது முழுத்திறமையுடனும் பணியாற்றவே விளைகிறது.

இது போன்றே கிரியை நெறியும் உபாசனை முதலாக வரும் காரியங்களில் தொகுப்பைக் கொண்டதாக அமைகின்றது. அவ்வகையில் பக்தன ;ஒருவன் தன்னைப் பரமபதத் தந்தையின் தொண்டுகளைப் பய பக்தியுடன் கட்டுப்பாட்டு கடமை உணர்வுள்ள மகனாகக் கருதி பணிந்து ஒழுகுகிறான். ஆகவே அவன் தன்னுடைய நேரம் முழுதையும் இறைவனுக்குப் பணி செய்வதிலேயே கழிக்கிறான். இவ்வாறு இறைவனுடன் நெருங்கி தாசமார்க்கத்தில் அன்புடன் பணி செய்வதாகும். இக்கிரியை நெறியானது சற்புத்திர மார்க்கமாகக் கொள்ளப்படுகின்றது. இம் மார்;க்கத்தின் பயனாக கடவுளுக்கருகில் செல்லமுடியும். இதனை சாமீபம் எனக் கொள்ளப்படுகின்றது. அகந்தையையும் மமதையையும் தகர்த்தெறிய வல்லதாக இக் கிரியா மார்க்கம் பின்பற்றப்படுகின்றது. இதனை அருணந்திசிவாசாரியார் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றார்.

புத்திரமார்க் கம்புகலிற் புதியவிரைப் போ

புகையொளிமஞ் சனமமுது முதல்கொண் டைந்து

………………….நின் மலன்ற னருகிருப்பர் நினையுங் காலே”.

 

இவற்றோடு சைவசித்தாந்தம் தர்மம் எனும் பதம் ஒழுக்க வாழ்வியலுக்கு உறுதுணையாக உள்ளதெனக் குறிப்பிடுகின்றது. இந்துசமயம், பௌத்தம், சமணம் முதலான சமயங்கள் தர்மம் பற்றிப் பெரிதாகப் பேசுகின்றன. இதனாலேயே இம்மதங்கள் தர்மத்தினை ஒழுக்க நிலைக்கும், இயற்கைக்குரியதாகவும் அதர்மத்தினை ஒழுக்கத்திற்கு முரணானதாகவும் இயற்கைக்கு ஒவ்வாத தன்மை கொண்டதாகவும் போற்றுகின்றன. ஆரம்ப காலங்களில் தர்மத்தினை வர்ணம், ஆச்சிரமம் என்றவாறு பகுத்து நோக்கியுள்ளனர். இவற்றில் அறம் எனும் சொல்லாட்சியானது தர்மம் எனும் பதத்தைச் சேர்ந்ததாக அமைவதை அவதானிக்கலாம். அறமானது நல்லறம், தீயறம் எனக் கொள்வதுடன் இல்லறம் மற்றும் துறவறம் பற்றியும் பேசுகின்றன. இவ் அறங்கள் மூலம் மனிதனின் தார்ப்பரியங்களை அறியமுடிகின்றது.இதனை வள்ளுவர் தனது குறளினூடாகத் தெளிவுபடுத்துவதைக் காணலாம். குறிப்பாக வள்ளுவர் இல்வாழ்க்கையைக் அறன் என வலியுறுத்திக் கூறுகின்றார். அவ்வகையில் அற வழி வாழ்கின்ற போதிலேயே இன்பம் கிடைக்கும்எனவும் மற்றவழி புகழென்பது அசாத்தியம்என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதை அவதானிக்கலாம்.

நல்வழி மற்றும் ஒழுங்கு முதலான கருத்துக்களைச் சுட்டி நிற்பதாக அறம் எனும் பதம் கொள்ளப்படுகின்றது.இக் கருத்தினை அருணந்திசிவாசாரியார் எடுத்துரைப்பதைக் காணலாம்.

ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உறவு சீலம்      

வழுக்கிலாத் தவம் தானங்கள் வந்தித்தல்  வணங்கல் வாய்மை

அழுக்கிலாத் துறவு அடக்கம் அறிவோடு அர்ச்சித்தல்ஆதி

இழுக்கிலா அறங்காளனால் இரங்குவான் பணியறங்கள்”.

 

அத்தோடு அருணந்தி சிவாசாரியார் இல்லறத்தினூடாக அனுபவிக்கின்ற இன்பம் வரையறைகளுக்குட்பட்டது எனக் குறிப்பிடுகின்றார். குறிப்பாக இன்பமானது சிற்றின்பம், பேரின்பம் எனும் இரு நிலையில் அனுபவிக்கப்படுகின்றன. அத்துடன் இன்பமானது மனித வாழ்வின் இறுதி இலக்காகவும் சைவசித்தாந்தம் எடுத்தாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை அருணந்தி சிவாசாரியார் பாடல் விளக்கி நிற்கின்றது.

 

இம்மையின் முயற்சியாலே யிருநிதியீட்டி யின்பம்

இம்மையே நுகர்வர்

 

நிறைவுரை    

எனவே ஒரு ஆத்மாவானது இறைவனை அடைய வேண்டுமானால் வழிபாடு, தீட்சை, தவம், சைவநாற்பாதங்கள், சிவசின்னங்கள் அணிதல் முதலான செயற்கர்ம ஒழுக்கக் விழுமியங்கள் பற்றி சைவசித்தாந்தம் குறிப்பிடுகின்றது. ஆகவே இவற்றையெல்லாம் நாம் பின்பற்றுகின்ற போது இறைவனைச் சேர்வதற்கான முத்தி நிலையை அடைகின்றோம். சைவசித்தாந்த சமயமும் கொள்கையும் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கின்றது. இதற்குக் காரணம் சைவசித்தாந்தம் ஆன்மீக ஆறுதலையும் அமைதியையும் அளித்தமையே ஆகும். ஆன்மாக்கள் இறைவன் பாதம் சேர வேண்டுமானால் செயற்கர்ம நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் அன்பையும் ஒழுக்க நியதிகளையும் கடைப்பிடிக்க முடியும் என சைவசித்தாந்தம் வலியுறுத்தி நிற்கின்றது. மனித வாழ்விற்கு ஒழுக்கமானது அச்சாணியாக அமைந்துள்ளது என்பது சைவசித்தாந்திகளால் எடுத்தாளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். எனவே ஒழுக்கச் சிந்தனையின் சீர்மையானது செழுமை பெற்றிருந்ததுடன் வாழ்வின் வளத்திற்கு வழிகாட்டுவதாய் சைவசித்தாந்தம் அமைந்திருக்கின்றமையை காணமுடிகின்றது.

உசாத்துணைகள்

01. முத்தப்பன்.பழ, (2009),“சாத்திரங்கள்இ உமா பதிப்பகம், சென்னை.

02. ராமானுஜாசாரி.ர, (1963),“சைவசித்தாந்தம்”, தத்துவ கல்வித்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

03. மகாலிங்கம்.சிவ, (2011),“இந்துநாகரிகம்  தரிசனங்களும் வாழ்வியலும்,” குமரன் புத்தக இல்லம், கொழும்பு சென்னை.

04. திருச்சிற்றம்பலம்.சிவ, (2002),“சைவசமயக் கலைக்களஞ்சியம் - தோத்திரமும் சாத்திரமும்”, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

05. ஞானகுமரன்.நா, (2012),“சைவசித்தாந்தத்தின் தெளிவு”, தூண்டி கேனியடி திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.