4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

குறுந்தொகை இராமரத்நம் ஐயர் உரைத்திறன் - பி.ஜானகி

 

குறுந்தொகை இராமரத்நம் ஐயர் உரைத்திறன்

பி.ஜானகி

முனைவர் பட்ட ஆய்வாளர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை.

ஆய்வுச்சுருக்கம்

இராமரத்நம் ஐயர் குறுந்தொகை முழுவதற்கும் 1930இல் உரையெழுதியுள்ளார். அவ்வுரைக் கலாநிலயம் இதழில் 1930 ஏப்ரல் 3 முதல் டிசம்பர்18 வரைத் தொடராக வெளிவந்துள்ளது. குறுந்தொகையினைச் செளரிப்பெருமாள் அரங்கனார் 1915இல் உரையெழுதி பதிப்பித்துள்ள நிலையில் இராமரத்நம் ஐயர் உரையெழுதியதற்கான நிலைப்பாடு அரங்கனார் உரை மூலப்பாடத்தோடு பொருந்தாததாய்ப் பிழைப்பட்டு இருந்ததே முதன்மையானதாகும். செளரிப்பெருமாள் அரங்கனார் உரையிலிருந்து இராமரத்நம் ஐயர் மூலப்பாடத் தெரிவு வேறுபாட்டால் உரை வேறுபட்டும் சொற்களுக்கான பொருள் வரையறுக்கும் நிலை என்ற தன்மையிலும் சொற்களை மாற்றி பொருள் கொள்வதன் மூலமும் உள்ளுறை, இறைச்சி, திணை, கூற்று என்ற முறையிலும் வேறுபட்டு உரையெழுதியுள்ளார். இவ்வுரையின் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

திறவுச்சொற்கள்

சங்க இலக்கியம், உரை, இராமரத்நம் ஐயர், குறுந்தொகை உரை, கலாநிலயம் இதழ், சங்க இலக்கிய உரையாசிரியர்.

முன்னுரை

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இந்நூலின் முதல்380பாடலுக்கு பேராசிரியரும், எஞ்சிய 20 பாடலுக்கு நச்சினார்க்கினியரும் உரையெழுதியுள்ளனர். இவ்வுரை இதுவரைக் கிடைக்கவில்லை. குறுந்தொகைச் செளரிப்பெருமாள் அரங்கனாரால் புத்துரையெழுதி 1915ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இதுவே குறுந்தொகைக்குரிய முதல் பதிப்பாகும்.இப்பதிப்பைத் தொடர்ந்துஇராமரத்நம் ஐயர் குறுந்தொகை முழுவதற்கும் 1930-இல் உரையெழுதியுள்ளார். அவ்வுரை கலாநிலயம் இதழில் 1930 ஏப்ரல் 3 முதல் (vol 3.no.14 to no.50) டிசம்பர் 18 வரை தொடராக வெளிவந்துள்ளது. இவ்வுரையின் தன்மைகள் குறித்து ஆராய்கிறது இக்கட்டுரை.

செளரிப்பெருமாள் அரங்கனார் உரையுள்ள நிலையில் இராமரத்நம் ஐயர் உரையெழுதியதற்கான நிலைப்பாடு அரங்கனார் உரை மூலப்பாடத்தோடு பொருந்தாததாய்ப் பிழைப்பட்டு இருந்ததே முதன்மையானதாகும்.

உரையின் தன்மை

இராமரத்நம்ஐயர் குறுந்தொகைக்கு எழுதியுள்ள உரை பொழிப்புரையாகவும் விளக்கவுரையாகவும் அமைந்துள்ளது. செய்யுளின் இயங்கியல் தன்மைக்கேற்ப ஆற்றொழுக்காகவும், கொண்டு கூட்டியும் உரையெழுதியுள்ளார். செளரிப்பெருமாள் அரங்கனார் உரையிலிருந்து இராமரத்நம் ஐயர் மூலப்பாடத் தெரிவு வேறுபாட்டால் உரைவேறுபட்டும், சொற்களுக்கான பொருள் வரையறுக்கும் நிலை என்ற தன்மையிலும், சொற்களை மாற்றிப் பொருள் கொள்வதன் மூலமும், உள்ளுறை, இறைச்சி, திணை, கூற்று, இன அடிப்படையில் அடையாளப்படுத்தல் என்ற முறையாலும் வேறுபட்டு உரையெழுதியுள்ளார். அதேபோல, இலக்கணக் குறிப்பு தருதல், சொற்பொருள் தருதல், சொற்றொடரை விளக்குதல், ஒப்புமைக் காட்டி உவமையை விளக்குதல், பாடத்தைக் குறித்து செல்லுதல், நயம் பாராட்டல், மாற்று கருத்து தருதல், வடமொழிச் சொற்களை எடுத்தாளுதல், மேற்கோள் காட்டல், முன்புள்ள உரையைக் குறித்தல், மறுத்தல், வினைமுடிபு, சொல் வருவித்து பொருள் கூறுதல், சொற்களை மாற்றி கூட்டுதல் எனப் பல்வேறு இயல்புகள் இவ்வுரையில் அமைந்துள்ளன.

   இவரது உரைச் சிறப்புக்கள் குறித்து இராம.குருநாதன் குறிப்பிடுகையில், ‘குறுந்தொகைக்கு இராமரத்நம் ஐயர் எழுதியுள்ள உரை சுருக்கமானது; தெளிவானது; நுட்பமானது; உள்ளுறை; இறைச்சி காட்டப்பட்டுள்ளது; இலக்கிய நயம் நிறைந்துள்ளது’ (2004:29) என்று சுட்டியுள்ளார்.

சொல் வருவித்து பொருள் கூறுதல்

பொருள் தெளிவுறுதல் பொருட்டு உரையின் இடையில் கருத்தோடு தொடர்புடைய ஒரு சொல்லை இட்டு அப்பொருளோடு இயைபுப்படுத்தித் தெளிவுறுத்துவர். பின்பு அச்சொல் வருவித்து உரைக்கப்பட்டது எனக் கூறுவர். சில இடங்களில் கூறாதும் விடுவர். இம்முறை உரைமரபுகளில் ஒர் உத்தியாகும். இவ்வுரையாசிரியர் தம் உரையில் சில இடங்களில் சொற்களைக் குறிப்பிட்டு வருவித்து உரைக்கப்பட்டது, ஒரு சொல் வருவிக்க, வருவித்துக் கொள்க எனக் கூறிச் செல்கிறார்.

  புதுநாண் நுழைப்பான் நுகிமாண் வள்ளுகிர்’ (குறுந்.67:3)

என்பதற்கு உரை கூறுகையில்,

புதிய சரட்டிற் கோப்பதற்குப் பெண்கள் தமது கூர்மையான நகம் பொருந்திய விரல்களால் பிடித்த’ (குறுந்.67).

என விளக்கம் தருகிறார். இதில் இச்செயல் யாருக்குரியது எனத் தெளிவுப்படுத்தல் பொருட்டு பெண்கள் என ஒரு சொல் வருவித்து உரைத்துள்ளார். அவற்றைப் பின்பு கூறுகையில்,

நுதிமாண் வள்ளுகிர் என்னும் மொழிக்குமுன் பெண்களின் என்பது வருவித்து உரைக்கப்பட்டது’ (மேலது)

என விளக்கம் தந்துள்ளார். இதுபோல குறுந்.59, 192, 248, 260, 271, 275, 285, 294, 307, 327, 350, 368, 371, 378, 393, 400, 401 போன்ற  இடங்களில் சொல்லை வருவித்துப் பொருள் கூறுகின்றார்.

வினைமுடிபு

ஒன்றிற்கு மேற்பட்ட பல அடிகளைக் கொண்ட பாடலுக்குக் குறிப்பிட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து வினைமுடிபு தருதல் என்பது சாதாரண செயல் அல்ல. பாடலின் பொருள் அச்சொல்லில் பொதிந்துள்ளது என்பதை அறிந்திருந்தால் மட்டுமே வினைமுடிபு தரமுடியும். இது ஒரு நுட்பமான வாசிப்பின் செயல்பாடாகும். இத்தன்மையில் இவ்வுரையாசிரியரும் தம் உரையில் வினைமுடிபுகளைத் தருகிறார்.

முன்னுரை வாராது பொழுதோ தான் வந்தன்றே என்று வினைமுடிக்க’ (குறுந்.155).

துறந்தோர் சுரனிறந்து சென்ற நாட்டில் பொருள் எய்தினர் கொல் என முடிக்க (குறுந்.180).

என உரையில் இறுதியில் தந்துள்ளார்.

இவ்வாறு ஒருபாட்டின் மையக்கருத்தைச் சில சொற்களால் சாரம்சப்படுத்துதல் என்பது வாசிப்பாளன் எளிமையாகப் புரிந்து கொள்வதற்கான வாயிலாக அமைகிறது.

பொருள் முடிபு காட்டல்

வினைமுடிபுகளைப் போன்று பொருள் முடிபுகளைத் தம் உரையில் சுட்டியுள்ளார். சான்றாக,

   பாம்புடைய அவிந்தது போலக் கூம்பிக்

  கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்

  கண்மிசை கவியு நாடற்’ (குறுந்.185:5 – 7).

என்பதில் கொண்டலிற் றொலைந்த (6) என்பதைப் பாம்புடைய அவிந்தது போல (5) என்ற அடிக்கு முன்னும் பின்னும் கூட்டுக என்கிறார். அவை,

மழைக்காலத்தில் மேகத்தி னிடியால் பாம்புகள் பையவிந்தழிதலும், காந்தள் கூம்பிக் கவிழ்தலும் இயல்பாதலின் கொண்டல் தொலைந்த என்பதை மத்திம தீபமாக முன்னும் பின்னும் கூட்டுக (குறுந்.185).

என்பதாகும். இவர் கூறுவது போல, ‘கொண்டல் தொலைந்த பாம்புபை அவிந்தது போல கொண்டல் தொலைந்த கூம்பி வெண்செங் காந்தள் கல்மிசை கவியும்எனப் பொருள் கொள்ளலாம். இதுபோல குறுந்.82ஆம் பாடலிலும் குறித்துள்ளார்.

இவ்வாறு ஒரு சொல்லை முன்பின்னாக மாற்றிக் கூட்டிப் பொருள் காண்பது சாத்தியமானது என்பதை இச்செயல்பாடு குறித்துச் செல்கின்றது.

மேலும், குறுந்.86ஆம் பாடலில் முதல் அடிசிறைபனி யுடைந்தஎன்பதாகும். இதனைச்சிறையுடைந்த பனிஎன மாற்றுக என ஒரு தொடருள் சொற்களை மாற்றிப் பொருள் கொள்கிறார். குறுந்.72ஆம் செய்யுளில் பொருளை முன்பின்னாக மாற்றிக் கூட்டிப் பொருள் கொண்டுள்ளார். இருந்தாலும் அதன் பின்னர் வேறு அமைப்புக்குள்ளும் மாற்றிப் பொருள் காண்கிறார். இத்தன்மை, பல பாடல்களில் உள்ளன.

இவ்வாறு தம் உரையில் சொற்களை மாற்றிப் பொருள் கொண்டுள்ளது என்பது இவர் காலத்தில் கொண்டுக்கூட்டி மாற்றி பொருள் கொள்ளும் முறை பெரும் வழக்குபெற்றுவிட்டது என்பதை உணர்த்துகிறது. அதோடு ஒரு பாடல் பல்வேறு கோணங்களில் அணுகுவதற்குரியது என்ற முறைமையை சுட்டுகிறது.

பிறர் உரையை மறுத்தல்

உரையில் பிற உரையாளர் கருத்துக்களைக் கூறும்போது என்பாரும் உளர், உரைப்பாரும் உளர் எனக் கூறிச் செல்கின்றார். அதில் அரிதாகச் சில இடங்களில் பொருந்தாமை காண்க எனப் பிற உரைகளில் உடன்பாடு இல்லாத கருத்துக்களை மறுத்துள்ளார்.

இழிபுபெரி துடையன்’ (குறுந்.143:1).

என்பதற்குஇழிவான காதலை மிகவும் உடையவன் என்பாருமுளர். தலைமகளிடத்துத் தலைமகன் கொண்டுள்ள காதலைத் தோழிஇழிபுஎனக் கூறுவது பொருந்தாமை காண்க’ (குறுந்.143) என்கிறார். இதில் என்பாருமுளர் என்பது அவர்காலத்து வழக்கத்திலிருந்த உரையை உணர்த்துகிறது. இவர் மேற்கோள் காட்டும் நூல்கள் இவரது புலமைத் திறத்தினைப் புலப்படுத்துகிறது. அதுபோல மிக நயமான பகுதிகளை விளக்குதல், உவமையை விளக்கி செல்லும் தன்மையும் உரையில் காணப்படுகின்றன.

இனம் சார்ந்த கருத்தாடல்

உரையாசிரியர் நூலுக்கு உரையெழுதும் போது தம் நிறுவனம், சமயம், கருத்தியலுக்கு ஏற்றவாறு உரையெழுதுவர். அத்தன்மையிலேயே இவ்வுரையாசிரியரும் உரையெழுதியுள்ளார். குறுந்.6வது பாடலில் மாக்கள் (2) என்பதற்குவிலங்குகளைப் போன்ற கீழ்மக்கள்என்றும், உலகம் (3) என்பதற்கு உயர்ந்தோராகிய நன்மக்கள் என விளக்கம் தருகிறார். இது உயர்வு, தாழ்வு கற்பிக்கும் செயலாக உள்ளது. குறுந்.62இல் நறியள் (4) என்ற சொல்லிற்குஉத்தமசாதிப் பெண்கள் தம் உயிப்பும் கூந்தலும் இயற்கை நறுமணம் உடைமைப் பற்றிஎனக் குறிப்பிடுகிறார். மேலும், குறுந்.95இல் சிறுகுடிக் குறவன் (3) என்பதற்குதாழ்ந்த குடிப் பிறப்பையுடைய குறவன்என்றும், குறுந்.129இல் சிறாஅர் ஏமமுறு நண்ப (1) என்பதற்குஅவன் பார்ப்பனப் பாங்கன்என எழுதியுள்ளார். இத்தன்மைத் தன்காலத்திய சமூகச் சூழலில் இருந்த பல்வேறு பிரிவினைகளைக் குறிக்கின்றது என்றாலும் புலனெறி வழக்கிற்கு மாறாக உள்ளது.

புலனெறி வழக்கிற்கு மாறாய் உரையெழுதுதல்

சில இடங்களில் மரபுக்கு மாறாய் உரையெழுதியுள்ளார். குறுந்.33ஆம் பாடலில்இவனோர் இளமாணாக்கன் (1) என பாணனைத் தலைவி கூறுகிறாள். இத்தொடருக்கு உரையெழுதும் இராமரத்நம் ஐயர்,

காமுகர்க்குத் தூதாய்ப் பரத்தையர் வீடுதோறுஞ் சென்று யாழ்வாசித்துப் பிச்சையேற்கும் பெற்றி நோக்கி அவனைமாணாக்கன்என இகழ்ந்துரைத்தவாறாம்

மாணாக்கன் என்பவன் பிச்சையேற்று வாழ்பவன் என விளக்கம் தந்துள்ளார்.  இங்குமாணாக்கன்என்பவன் பிச்சையேற்று வாழ்பவன் எனக் குறிப்பிடுவது புலனெறி வழக்கிற்கு மாறாய் உள்ளது. மாணக்கன் என்பவன் ஆசிரியருக்கு உற்ற நேரத்தில் உதவியும், உறுபொருள் கொடுத்தும் கல்வி கற்று வந்தனர். இக்கருத்திற்கு ஆதாரமாகஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்’ (புறம்:183) எனத் தொடங்கும் பாடலைக் கொள்ளலாம். மேலும், குறுந்.50ஆம் பாடல் இறைச்சிப் பொருள் கூறுமிடத்துத் தலைவன் நீர்த்துறையில் பரத்தைப் பலரோடுக் கூடிச் செவ்வி அழிந்தான் என கூறுகிறார். அது,

ஞாழலில் புதுப்பூக்கள் மருதின் பழம் பூக்களோடு கலந்து பரந்து நீர்த்துறைகளை அழகு செய்யும் ஊரன்என்றமையால்பரத்தையரோடு கூடிச் செவ்வியழிந்து வந்த தலைமகனுடன் செவ்வி குலையாத தான் கூடிப் பொலிவள்என்று குறித்தவாறாம்

என்பதாகும். இதில் புனல் விளையாட்டின்போது காதல் பரத்தையரோடு தலைவன் நீர்விளையாட்டு விளையாடினான் என்பதற்கு மாறாகப் பரத்தைப் பலரோடு விளையாடினான் என கூறுவது புலனெறி வழக்கிற்கு மாறாக உள்ளது.

சொற்பொருள் கூறுதல்

சொற்பொருள் விளக்கம் தருதல் உரையின் இன்றியமையா ஒரு கூறாகவே உள்ளது. கடினமான சொல்லுக்கு அல்லது முக்கியமான சொற்களுக்குப் பொருள் கூறுதல், சொல்லுக்கு சொல் பொருள் கூறுதல் என்ற இருதன்மைகளில் உரையாசிரியர்களால் கையாளப்பட்டுள்ளன. சொல்லின் பொருளானது சூழலுக்கு தகுந்தாற்போல் பொருள் தர கூடியது. இவ்வுரையாசிரியர் அச்சூழல் சார்ந்தே தம் உரையில் விளக்குகிறார்.

Ø உரம்வன்மை(குறுந்.20)

Ø உரம்அறிவு, ஞானம் (குறுந்.20)

Ø மாந்தல்உண்ணல். இது குடித்தல் என்னும் பொருளில் மிகுதியாக வழங்கும் (குறுந்.46)

Ø கொக்குமாமரம். இங்கே மாம்பழம் (குறுந்.26)

என்பதில் சொல்லுக்கு இருபொருளும், அச்சொல் பயின்று வந்துள்ள இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் சுட்டியும், சொல்லுக்கான பொருளை விளக்கியுள்ளார். சில இடங்களில்,

Ø உணங்கல்ஆகுபெயர். உலரவைத்த பொருள் (குறுந்.46)

Ø இணைஇணைதல், வருந்துதல். முதனிலைத் தொழிற்பெயர் (குறுந்.46)

Ø பிதிர்த்திவலைபிதிராகிய திவலை. இருபெயரொட்டு (குறுந்.55)

என்று இலக்கணக் கூறுகளின் அடிப்படையில் சொல்லின் தன்மையை விளக்கிச் செல்கிறார். சில இடங்களில் ஆங்கில சொற்களால் விளக்கம் தந்துள்ளார்.

Ø இறைவீட்டின் இறப்பு (The eaves of house) – குறுந்.46

Ø அரமகளிர்தெய்வப்பெண்கள் (Nymphs) – குறுந்.53)

Ø இன்மைஇறந்துபடுதல். Non-existence (குறுந்.151)

இத்தன்மை உரை எழுதப்பட்ட காலச்சூழலின் பின்னணியை உணர்த்திச் செல்கிறது. சில இடங்களில்,

பக்கம் - க்ஷம். பதினைந்துநாட்கொண்டதொரு கால அளவு, ஒவ்வொரு மாதமும் இவ்விரு பக்ஷங் கொண்டது. ஒன்று தேய்ப்பிறைப் பக்கம் (கிருஷ்ணபக்ஷம்), மற்றொன்று வளர்பிறைப் பக்கம் (சுக்ல பக்ஷம்) – குறுந்.129. என்று வடமொழி கொண்டு விளக்குகிறார்.

இவ்வாறுமொழிப் புலமையுடன் சொற்களுக்கான இருப்பொருள் தருதல், விரிவான விளக்கம் தருதல், அச்சொற்கள் சூழல் சார்ந்து எப்பொருண்மையில் பயின்று வந்துள்ளது என்பதை நுட்பத்துடன் விளக்குகிறது இவர் உரை.

முடிவுரை

குறுந்தொகைப் பாடல்களுக்கு ஒரே முறையில் உரையெழுதாமல் பாடலின் அர்த்தத்திற்கு ஏற்றவாறு உரையெழுதி செல்கிறார். பாடலின் உள்ளடக்கம் சார்ந்து பெருங் கவனம் செலுத்தி உரையெழுதியுள்ளது சிறப்புக்குரியதாகும். சமகாலத்திற்கு ஏற்றவாறு ஆங்கில, வடமொழிகளின் துணைக்கொண்டும், தம் கொள்கை சார்ந்தும் உரையெழுதியுள்ளது பன்மொழிப் புலமையை வெளிப்படுத்துவதுடன் தம் சமயச் செயல்பாட்டையும் குறிக்கிறது.

பார்வை நூல்கள்

1.     இராமரத்நம் ஐயர், குறுந்தொகை மூலமும் உரையும், கங்கை புத்தக நிலையம் – 2002.

2.     .சுந்தரமூர்த்தி, மா.ரா.அரசு, இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் – 2004.

3.     கலாநிலயம் இதழ் 1930 ஏப்ரல் 3 முதல் டிசம்பர் வரை வெளியான பகுதிகள்.