4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

ஈரமில்லா மனம் - தா.சரவணன்

 


ஈரமில்லா மனம்

 

மொழிவாரியாக

பிரிந்தது மாகாணம்

யாரு எல்லை தாண்டி

போனாலும் ஏளனம்

 

சமூக வரையறையால்

பிரித்தது சாதி

யார் யார்

இனத்தைப் பத்தி

பேசிவிட்டாலும் சதி

எல்லைக்குள்ளே

இனவெறி

எல்லை தாண்டிப் போனால்

மொழிவெறி

 

பலருக்குப் பதவி

பணவெறி

சிலருக்குப் பசிவெறி

மனிதனுக்குள்ளே

எத்தனை வெறியிருந்தாலும்

வியர்வை சிந்தாமல்

வயிறு நிறையாது

என்பதை

உணர்வதே இல்லை

 

தன்னுடைய

எல்லை என

உரிமை கோருபவன்

எதையும்

எல்லை தாண்டவிடாமல்

தனதாக்க நினைக்கிறான்

 

வரம்பு மீறிய அழிவு

எவ்வளவு எல்லைக்குள்ளே

இதில் தாங்கள்

காரணப்பட்டிருப்பதால்

தன் குற்றம்

தன்னை சுடும் என்பதாலோ

இதற்கு எல்லை வகுக்கவும்

உரிமை எடுக்கவும்

யாருக்கும் உணர்வில்லை 

 

தன்னுடைய

பெரிய தவறுகளை மறைத்து

பிறருடைய

சிறிய குற்றங்களை

காட்டிக்கொடுக்கும்

அற்ப மனிதர்களுக்கு

பதுக்கத் தெரியும்

பங்கிடத் தெரியாது

 

மண்ணிலும்

தண்ணியிலும்

பேதமில்லை

ஒரு நாகொண்ட

மனிதனிடத்தில்

எத்தனை பேதம்

 

இயற்கை தோன்றலில்

எங்கும் சென்று

எல்லோருக்கும் பயனளிக்க

இறைவன் கொடுத்த

நன்கொடை நதி

 

எல்லாமே தனக்கென

அணைகட்டி

தகராறு செய்யும்

மாகாண அரசும்

மனிதர்களும்

எல்லை தாண்டி

ஓட துணிந்த நீரை

நிறுத்திக்கொண்டார்கள் சரி

எல்லை தாண்டி

பறந்த காற்றை

என்ன செய்தார்கள்

 

அணைபோடத் தெரிந்தவர்களுக்கு

பூமிக்கும் வானுக்கும் சேர்த்து

தடை போட்டுக்க தெரியலயோ !

 

அங்கங்கே மணிக்கணக்கில்

துண்டிக்கப்படுகிறது

மின்சாரம்

செயற்கைக் காற்று

தடையால் அவதிப்படும்

தன் மாநகர மக்களுக்கு

இயற்கைக் காற்றை

சேமித்து தர முடியலயோ !

 

வான் மேகமே

உனக்கு

ஒரு வேண்டுகோள்

இனி பருவம் பார்த்து

மழை பொழிவை

விட்டுவிட்டு

எல்லை பார்த்து

பொழிவதை

வாடிக்கையாக்க வேண்டும்

ஏனென்றால்

இங்கு கைக்கு வந்தது

வாய்க்கு எட்டவில்லை

எவனோ பசியறியாதவன்

தட்டி விட்டதைபோல

கதிர் அரும்பி

தண்ணீர் கேட்டு நின்ற பயிர்க்கு

இருக்கப்பட்டவன்

அணைபோட்டதனால்

கருகி இறந்தது

பயிர்கள் மட்டுமல்ல

விதைத்தவனும் கூட

 

மழைவரம் வேண்டி

தவமிருக்கும்

விவசாயிகளே

மழையையும்

சர்க்கரையும் நம்பி

செத்து மடிந்தது போதும்

பனித்துளிகளின் ஈரத்தில்

பயிர் செய்யகற்றுக்கொண்டாலாவது

நம் சந்ததிகளை

காப்பற்றலாம்

 

இனி சிந்தும்

வியர்வையையும்

கண்ணீரையும்

உப்புகரிக்கும்

என்பதற்காக துடைத்துவிடாதீர்கள்

சேகரித்துக்கொடுங்கள்

இங்கு

சுத்திகரிப்பு செய்து

வியாபாரம்  பண்ண

ஆளிருக்கு 

சோறுபோட்டவன் சோகத்தை

தீர்த்துவைக்கதான்

யாருமில்லை

 

தா.சரவணன்