4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

எது சொர்க்கம் - நரகம் - அக்ரி.கோ.ஜெயகுமார்

 

எது சொர்க்கம்  -  நரகம்

அக்ரி.கோ.ஜெயகுமார்,

    மேனாள் வேளாண்மை  இணை இயக்குநர்,

    காந்தி நகர், வேலூர் - 6.

    கைபேசி எண்: 94869 38900

 

      அடர்ந்த கானகத்தில் ஒரு மரத்தின் அடியில் ஒரு துறவி அமர்ந்து அமைதியாகக் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக குதிரையில் சென்ற ஒரு வீரன் அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், குதிரையிலிருந்து இறங்கி அவரை நோக்கிச் சென்றான். பின்னர் அவர் அருகே கை கூப்பி வணங்கி நின்றான். சிறிது நேரம் கழித்து அந்தத் துறவி தனது கண்களைத் திறந்து அந்த வீரனை ஊடுறுவிப் பார்த்தாரே தவிர அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் வீரன் பேசினான். அய்யா! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையைத் தாங்கள் தான் கூற வேண்டும் என்றான். அப்போதும் அந்த துறவி எதுவும் பேசவில்லை.

         அந்த வீரனே மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான். அய்யா! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன். இவை இரண்டும் உண்மையிலேயே இருக்கின்றனவா? அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன என்று தன் சந்தேகத்தை அந்தத் துறவியின் முன்பாக வைத்தான். அந்தத் துறவியோ பதில் ஏதும் கூறாமல் அமைதியாகவே இருந்தார். ஆனால் அந்த வீரனோ பதில் கிடைக்காமல் அங்கிருந்து போக மாட்டேன் என்பது போல் அங்கேயே அந்தத் துறவியின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்துக்கொண்டான். அந்த வீரனை தீர்க்கமாகப் பார்த்த துறவி, சிறிது நேரம் கழித்து அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார், நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய்? என்றார்.

       அந்த வீரன் உடனடியாக அய்யா, நான் இந்த நாட்டின் தளபதி, எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கின்றேன் என்று பெருமையுடனும், கர்வத்துடனும் கூறினான். அந்தத் துறவியிடமிருந்து உடனே ஒரு கேலிச் சிரிப்பு வெளிப்பட்டது. அவனைப் பார்த்து நீ ஒரு முழு முட்டாள், உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்? என்று கேட்டு விட்டு மீண்டும் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.

       வீரனுக்கு வந்ததே கோபம்! கண்களில் நெருப்பு பொறி பறக்க, ஏய்! என்ன சொன்னாய் என்று ஆவேசம் பொங்க, கர்ஜனை செய்தபடியே தன் இடையில் வைத்திருந்த உரையிலிருந்து வாளை வேகமாக உருவினான். இதனைக் கண்டவுடன் துறவி தன் சிரிப்பைக் கொஞ்சம் கூட நிறுத்தாமல் இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன என்றார்.

        துறவி கூறியதைக் கேட்ட அந்த வீரன் திகைத்து நின்றான். சட்டென்று எதோ விளங்குவது போல் அவனுக்கு தோன்றியது. உடனே தன் வாளை உறையில் போட்டு விட்டு, அந்தத் துறவியைப் பார்த்து இரு கைகளையும் கூப்பி வணங்கியபடியே, குருவே! என்னை மன்னித்து விடுங்கள் என்று பணிவுடன் வேண்டினான். இதோ! சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டது என்று புன் சிரிப்பு மாறாமல் கூறினார் அந்தத் துறவி. 

      சொர்க்கமும், நரகமும் நம்மில் தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையாளும் போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடை போடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும் போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணம் செய்கின்றான்.