4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

ஜோன்டூவியின் கல்விசார் கருத்துக்கள் ஒரு சமூகவியல் கண்ணோட்டம் - A.S.P.Yumna

 

 

ஜோன்டூவியின் கல்விசார் கருத்துக்கள் ஒரு

சமூகவியல் கண்ணோட்டம்

 

A.S.P.Yumna

Department of Education and child care,Eastern University, Sri Lanka.

email: fathima1994fa@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய சிறந்ததொரு கல்வியலாளராகவும்; நவீனயுகத்தைச் சேர்ந்த கல்வித் தத்துவ ஞானியாகவும் கருதப்படும் ஜோன்டூவியின் கல்விச் சிந்தனைகள் அமெரிக்காவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பெரிதும் மதிக்கப்படுகின்றன. “கல்வித் துறையின் மிகமிக உயிர்ப்பான சிந்தனையாளர்என அவரைச் சிலர் குறிப்பிடுகின்றனர். முன்னேறும் கல்விக் கருமத்தொடரும் ஜோன்டூவியின் பெயரும் அமெரிக்கா உட்பட உலகம் பூராகவும் பரம்பிக் காணப்படுகின்றது. இவரின் கல்விசார் கருத்துக்கள் அனைத்தும் சமூகத்தையே மையமாகக் கொண்டுள்ளது. சமூகம் என்பது அனுபவங்களைச் சேகரிக்கும் ஒரு நிறுவனமாகும். எனவே கல்வி நிறுவனங்களும் அக்கருமத் தொடருடன் தொடர்பறுதல் வேண்டும் என்பது அவரது கருத்தாகும். அந்த வகையில் இவரின் கல்விசார் கருத்துக்கள் எவ்வாறு சமூகத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை நோக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

 அறிமுகம்

ஜோன்டூவி வாழ்ந்த காலம் அமெரிக்க சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்த ஒரு காலப்பகுதியாகக் கருதப்படுகின்றது. எளிய கிராமிய விவசாய சமூகத்திலிருந்த அமெரிக்கா ஜோன்டூவி வாழ்ந்த காலத்திலேயே சிக்கலான நகர தொழில்நுட்ப சமூகம்வரை விரைவாக அபிவிருத்தி அடைந்தது. இந்த விரைவான மாற்றங்களுடன் அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் சமூகத்துக்கு இயையவும் அதற்கானதுலங்கலாகவுமே அவரது தத்துவக் கருத்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பதனால் உயிர்ப்புள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கு கல்வி முறைமை எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதை ஜோன்டூவியின் தத்துவக் கருத்துக்களை ஆராய்வதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

 ஆய்வுப் பிரச்சினை

இன்றைய கல்விமுறையில் அதிகம் ஏட்டுக்கல்விக்கும் மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் பாடசாலைகளால் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்களை முழுமையாகப் பூரணப்படுத்த முடியாத இக்காலகட்டத்தில் கல்விக்கும் சமூகத்தின் எதிர்பார்ப்புக்குமிடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

 ஜோன்டூவியின் தத்துவச் சிந்தனைகள்

ஜோன்டூவியின் தத்துவச் சிந்தனைகளை விளங்கிக் கொள்வதன் மூலமே கல்வி தொடர்பான அவரது சிந்தனை பற்றிய தெளிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும். கல்வி தொடர்பான அவரது கருத்துமையக் கருவாக அமைகின்ற மூன்று எண்ணக்கருக்கள் உள்ளன.

மனிதனின் தன்மையும் மனித சிந்தனையும்

மனிதனின் தன்மை தொடர்பானடூவியின் கருத்து டார்வினின் உயிரினக் கூர்ப்புவாத கருத்துக்களுடன் பொருந்துகின்றன. ஏனைய உயர்வகை விலங்குகளைப் போன்றே மனிதனும் தாழ்வகை உயிரினத்தில் இருந்தே கூர்ப்படைந்து உள்ளான். அதாவது எளிய நிலையிலிருந்தே தற்போதைய நிலையை அடைந்துள்ளான். இதன் மூலம் முக்கியமான 2 கருத்துக்கள் வெளிக்கொணரப்படுகின்றன. அவையாவன

1)            மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையில் இடையீடற்ற தொடர்பு காணப்படுகின்றமை.

2)            மனிதன் உயிரற்ற பொருள்களுடனோ தாழ்மட்ட விலங்குகளுடனோ தன்மையொப்பை காட்டாமை.

உயிரின கூர்ப்பு தொடர்ச்சியுடன் தொடர்புடைய கருமத் தொடரையும் அக்கருமத் தொடரின் இடையீடற்ற தன்மையையும் அதாவது தொடர்ச்சியையும் ஏற்றுக்கொள்ளும் டூவி அத்தொடர்ச்சியான கருமத்தொடர் மனிதனின் தன்மை தொடர்பாகவும் மாற்றம் அடைய முடியாது எனக்கூறுகின்றார். 

மனிதனுக்கும் தாழ்மட்ட விலங்குகளுக்கும் இடையிலான தெளிவான வேறுபாட்டை டூவியின் எடுத்துக்காட்டுகின்றார். உயிரற்ற பொருள்களுடனோ தாழ்மட்ட விலங்குகளுடனோ மனிதனின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவல்ல. மனிதன் கொண்டுள்ள உயர்சிந்தனாசக்தி காரணமாக அவனுக்கு விலங்குகளைவிட முன்னேறிச் செல்லலாம். முன்னேற்றம் அடையலாம். 

விலங்குகளுக்கு விவேகமாக சிந்திக்க முடியாது என்பது அவை உபகரணங்களை பயன்படுத்தாமையின் மூலம் தெளிவாகின்றது. விலங்குகள் தனியே அவற்றினது உடல் உறுப்புகளின் மூலமே தொழிற்படுகின்றன. சிந்தனாசக்தியை விருத்தி செய்து கொண்ட உபகரணங்களை ஆக்கி அவற்றை பயன்படுத்துகின்ற ஒரு விலங்கு கூட்டமே மனிதன் ஆவான் என தர்க்கிக்கும் டூவி கூர்ப்பின் மூலம் மனிதனுக்கு விலங்குகளைவிட உயர்வான உள்ளமும் விவேகமும் கிடைக்கப் பெற்றன எனவும், மனிதன் பெற்ற சக்தி சிந்தனையாகும் எனவும் வலியுறுத்துகின்றார். இச்சிந்தனாசக்தியை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அதற்கு ஏற்றவாறு கருமங்களை ஒழுங்கமைத்தல் என்பனவற்றின் மூலம் மனிதனின் கூர்ப்பு செயற்பாடு உரியவிதத்தில் நிகழ்வதற்கு வழிவகுத்தல் வேண்டும் என டூவி நம்புகிறார். இதற்கான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையானவாறு செயற்பாட்டு ரீதியிலான அனுபவங்களை ஒழுங்கமைத்தல் வேண்டுமெனவும் சிந்தனைக்கும் தருக்கத்துக்கும் வழிகோலக் கூடியவாறு கற்பித்தல் முறைகளை ஒழுங்கமைக்க வேண்டும் எனவும் டூயி குறிப்பிடுகின்றார். 

அனுபவங்கள்தொடர்பானகொள்கை

உயிரினக் கூர்ப்புக் கொள்கையின்படி அங்கிகள் சுற்றாடலுடன் இடையீடற்ற தொடர்பை பேணுகின்றன என டார்வின் வலியுறுத்திக் குறிப்பிடுகின்றார். அது படிப்படியாக சிக்கலானதாக மாறியுள்ளது எனவும் அவர்காட்டுகின்றார். அங்கியின் வாழ்க்கை காலத்தின் சகலசந்தர்ப்பங்களிலும் அவன் சுற்றாடல் உடன் பரஸ்பரம் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளான். மனிதனும் சுற்றாடலுடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணுகின்றான். சுற்றாடலுடன் மோதி கரும மாற்றுவதன் மூலமும் தொடர்புகளை பேணுவதன் மூலமும் முன்னேறிச் செல்கின்றான். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு டூயி பயன்பாட்டு வாதத்தை கட்டி எழுப்பியுள்ளார். 

முன்கூட்டிதீர்மானித்தமுடிவுகளைமறுதலித்தல்

உலகம் கூர்ப்புக்குள்ளாகியுள்ளது. எனவே இயற்கையான உலகத்தில் உறுதியும் நிலைப்பாடும் காணப்பட முடியாது. அதாவது மாறாநிலை காணப்பட முடியாது. இன்று உண்மை என ஏற்றுக்கொண்ட ஒன்று நாளை வேறுபடுகின்றது. நாளை நாம் உண்மை என ஏற்றுக்கொள்ளும் ஒன்று எதிர்காலத்தில் அவ்வாறாக காணப்படுவதில்லை. மாற்றத்தை அடிப்படையாக கொண்ட உலகில் நிலையான குறிக்கோள்களையும் உறுதியான முடிவுகளையும் பேணிவைத் திருத்தல் பயனற்றதாகும். கூர்ப்பிடும் மாற்றங்களிலும் நம்பிக்கை வைத்த டூவி மெய்ப்பொருள் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் மறுதலித்தார். உண்மை என்பது அக்கணத்தில் புலனாகும் நிலவுகையாகும். எனவே அக்கணத்தில் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவதன் முக்கியத்துவத்தை டூவி வலியுறுத்துகின்றார் (கல்வித் தத்துவ அடிப்படைகள், 1991).

ஜோன்டூயின் கல்விச் சிந்தனைகள்

கல்விக் குறிக்கோள்

கல்விக்கு குறித்த நோக்கங்களோ, குறிக்கோள்களோ, இலட்சியங்களோ இருக்க முடியாதுஎனகருத்துத் தெரிவிக்கிறார். டூவியின் கொள்கைக்கு ஏற்ப கல்வியின் அடிப்படைப் பொறுப்பு பிள்ளைகளின் பூரண ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும். பிள்ளைகளின் ஆர்வத்துக்கும் திறமைகளுக்கும் சமூகத்தேவைகளுக்கும் ஏற்றவாறு கல்விக் குறிக்கோள்கள் தயாரிக்கப்படல் வேண்டும். ஆர்வமும் திறமைகளும் தொடர்பாகப் பிள்ளைகளுக்கு இடையில் வேறுபாடு காணப்படுகின்றது. அத்தோடு காலத்துக்குக் காலம் சமூகத் தேவைகளும் மாறுகின்றன. மேலும் குறித்த நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஆசிரியரினதும் மாணவர்களதும் உள்ளார்ந்த திறன்கள் வெளிக்கொணரப்படல் தடைபடுகின்றது. ஆகையால் கல்விக்கு நிச்சயிக்கப்பட்ட நோக்கங்கள் இருக்க முடியாது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார்.

டூவி எடுத்துக்காட்டும் விதத்திற்கு அமைய கல்வி என்பது தொடர்ச்சியான ஒரு கருமத் தொடராகும். அவ்வாறான தொடர்ச்சியான கரும தொடரில் நோக்கங்கள் இருக்க முடியாது. தொடர்ச்சியாக முன்னேறிச் செல்லும் ஏதேனுமொன்றில் குறித்த நோக்கங்கள் காணப்பட முடியாது. பிள்ளையின் தன்மையோ சமூகத்தின் தன்மையையோ கருத்தில் கொள்ளாது, எவரேனும் ஒரு ஆசிரியர் நோக்கங்களைத் தீர்மானிப்பவராயின் அவர் பயிர் பற்றியோ மண் பற்றியும் கவனம் செலுத்தாது பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முயற்சிக்கும் ஒரு விவசாயிக்கு ஒப்பாவார் என குறிப்பிடுகின்றார். மாணவனின் தேவை உள்ளார்ந்த திறன்கள் அனுபவங்கள் ஆகியவற்றின் துணையுடன் உத்திகளைக் கையாண்டு நல்ல கல்வி வாய்ப்புக்களை தயார்படுத்தல் வேண்டும். எனவே குறித்த நோக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஆசிரியரின் உள்ளார்ந்த திறன்கள் பிள்ளையின் உள்ளார்ந்த திறன்கள் ஆகிய இரண்டுமே வெளிக்கொணரப்படல் தடைப்படுகின்றது.

சமகாலக் கல்விமுறை தொலைவிலுள்ள எதிர்கால வாழ்க்கைக்குப் பிள்ளைகளை தயார்படுத்துவதொன்றாகும். முன் ஆரம்பபாடசாலை, இடைநிலைப்பாடசாலை, உயர்நிலைப்பாடசாலை பல்கலைக் கழகம் என்றவாறு முழுக்கல்வி கருமத்தொடருமே பிள்ளையை வளர்ந்த நிலையிலான வாழ்க்கைக்குத் தயார்படுத்துவதாகும். ஆறு வருட வயதில் பிள்ளைபாடசாலையில் சேரும்போது அவனை மிகச் சேய்மையான எதிர்காலத்தில் நிலவும் யாதேனும் குறிக்கோள்களை நோக்கிச் செல்லும் செயற்பாடொன்றுடன் தொடர்புபடுத்துவது பொருத்த மற்றதாகும். பிள்ளை நிகழ்காலத்திலேயே வாழ்கின்றான் எனவே சேய்மையான எதிர்பார்ப்புகள் மூலம் அவனிடத்தில் தூண்டலை ஏற்படுத்துவது கடினமானதாகும் (கல்வித் தத்துவ அடிப்படைகள், 1991).

கல்வித்திட்டமிடல்

கல்வி பிள்ளையின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் இயைபானதாக இருத்தல் வேண்டும்; என்பது டூவியின் கருத்தாகும். பிள்ளை தொடர்பாகவோ சமூகம் தொடர்பாகவோ கவனம் எடுக்காமல் கற்பிக்கும் ஆசிரியர் மண் மற்றும் கால நிலையைக் கவனியாது விவசாயம் செய்யும் விவசாயிக்கு சமமனானவர். ஆகவே, பிள்ளையின் முதிர்ச்சி நிலையையும் திறன்களையும் மற்றும் அவனது உளவியல் நிலமைகளையும் கருத்திற்கொண்டே கல்வியைத் திட்டமிடல் வேண்டும். “உயிர்ப்பற்ற மௌனத்தைவிட சப்தத்துடன் கூடியதுலங்கள் உயர்வானதுஎன்றும் குறிப்பிடுகின்றார். பிள்ளை, உயிர்ப்பின்றித் தொழிற்படாது செவி மடுப்பவனாக அன்றி உயிர்ப்புடன் செயற்பாடுகளில் ஈடுபடுபவனாக இருத்தல் வேண்டும். அதற்கேற்றவாறு கல்வித் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் சுயாதீனமாக சிந்திக்கும் திறன் தன்னம்பிக்கையுடன் கரும மாற்றும் திறன் ஆக்கபூர்வத் திறன் என்பன வளர்ச்சியடைவதனாலே மனிதச் சமூகத்தை உரியவாறு நல்வழிப்படுதடதலாம் என்று  டூவி குறிப்பிடுகின்றார். 

பிள்ளைக்கு கருத்துக்களை அதிகமாக புகட்டல் கூடாது. கருத்துக்கள் வெளிக்கொணரப்படுவதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். திறமையாகக் கரும மாற்றும் வழியை விளங்கிக் கொள்வதன் மூலமே நுண்ணறிவுத் திறன் வெளிக்கொணரப்படுகின்றது. இத்திறன்களை வெளிக்கொணர்ந்து கொள்வதற்காக பிள்ளைக்கு செயற்படுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அவசியமாகும். ஆசிரியர் பிள்ளையின் முதிர்ச்சி நிலையையும் திறன்களையும் உணர்ந்து கொண்டு அந்நிலையை விருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை திட்டமிடல் வேண்டும் எனவும் டூயி குறிப்பிடுகின்றார். இத்திறன்களை மழுங்கடித்தாலோ, அவற்றை கவனியாதுவிடுவதோ கூடாது. இத்திறன்களுக்குப் பொருத்தமான அனுபவங்களையும் தொழிற்பாடுகளையும் திட்டமிட்டு உரிய மனப்படத்தை கட்டியெழுப்பி கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சுயாதீனமாக தடையேதுமின்றி சிந்திப்பதற்கும் தன்னம்பிக்கையுடன் கரும மாற்றுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் (கல்வித் தத்துவ அடிப்படைகள், 1991).

பாடசாலை

முழுமையான கல்வி, தொடர்ச்சியான ஒரு கருமத் தொடராகும்என டூவி கூறுகின்றார். பாடசாலையினுள்ளும் பாடசாலைக்கு வெளியேயும் பெறும் அனுபவங்களுக்கிடையே ஒற்றுமை காணப்படல் வேண்டும்;. பாடசாலை நடவடிக்கைகளுக்கும் வாழ்க்கை அனுபவங்களுக்கும் இடையே தொடர்பு காணப்படாவிடின் கல்வியின் உயிரோட்டம் நலிவடையும் என அவர் எடுத்துக்காட்டியுள்ளார். அவ்வாறாயின் வெற்றிகரமாகக் கற்பதற்கான வாய்ப்புகிடைப்பதில்லை என டூவி குறிப்பிடுகின்றார். வகுப்பறையுள் பிரவேசிக்கும் மாணவனுக்கு அவன் வீட்டில் பெற்ற அனுபவங்களை மறுதலிக்க நேரிடின் அது தீங்கானதாகவே அமையும். பிள்ளையின் தேவைகள் ஆசைகள் தொழிற்பாடுகள் என்பன அவனது அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபட வேண்டும். அவ்வாறான தொடர்பே கல்வியின் பேறாக இருத்தல் வேண்டும்.

எனவே பாடசாலையானது வலிமை வாய்ந்த கல்வி கருவியாக அமைதல் வேண்டும். சமூகம் என்பது பொது நோக்கமொன்றுக்கு அமைய பொது உணர்வொன்றுக்கு இயைய பொது வழிவகையொன்றுக்கு ஏற்ப கரும மாற்றுகின்ற மனிதக் குழுவொன்றின் கூட்டமைப்பாகும். பொது நோக்கங்கள் பொதுத்தேவைகள் ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளமையினால் அங்கு பரஸ்பரத் தொடர்பும் காணப்படுகின்றது. பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையே பரஸ்பர இடைத்தாக்கங்கள் காணப்பட வேண்டியது அவசியமாகும்.

உளவியல் சமூகவியல் அடிப்படையைக் கவனத்திற்கொண்டே பாடசாலையினுள் நடவடிக்கைகளை திட்டமிடல் வேண்டும். பாடசாலையை உயிர்ப்பான தன்மையிலிருந்து வேறாக்கிவைப்பதானது பிள்ளையின் கற்றலுக்கு தடை விளைவிப்பதொன்றாகும். பாடசாலையின் அனுபவங்களை வாழ்க்கையின் அனுபவங்களுடன் தொடர்புபடுத்துவது அவசியமானதாகும். மாணவர்களைச் சமூக வாழ்க்கைக்குத் தயார்படுத்தாத பாடசாலைகளைக் கல்வி நிறுவனங்களாக கருதமுடியாது. பாடசாலை என்பது நல்லதையும் கெட்டதையும் வேறாக்கிகாட்டுவதும் ஒன்றுக்கொன்று எதிரான இயல்புகளை சமப்படுத்துவதுமானதோர் இடமாக இருத்தல் வேண்டும் என டூவி குறிப்பிடுகிறார். எனவே சமூககருமத் தொடரில் பங்கு பெறுவதற்கும் கலாச்சாரத்தை போதிப்பதற்காகவுமான சகலசெயற்பாடுகளும் பாடசாலையினால் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும் (கல்வித் தத்துவ அடிப்படைகள், 1991).

ஆசிரியர்

பிள்ளையை உணர்ந்து கொண்டு பிள்ளையின் முதிர்ச்சிக்கு விருத்திக்கு இணைய அவனது ஆசைகள் விருப்புகளுக்கு அமைய அவனது முழுவளர்ச்சிக்குத் தேவையான அனுபவங்களைக் கொடுத்தலே ஆசிரியரது கருமமாக இருத்தல் வேண்டும். ஆசிரியர் அறிவை வழங்குபவராக அன்றி அறிவு பிறப்பதற்கு தோற்றுவிக்கப்படுவதற்கு வழிகாட்டியாகவே அமைதல் வேண்டும் என டூவி எடுத்துக்காட்டுகிறார். ஆசிரியர் ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு வழி காண்பவராவார். அவர் புதுஅனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான முறைகளை நுண்ணாய்வு செய்பவராவார்.

தாய் மொழிக் கல்வி

மனிதனின் பிரதானமான கற்றல் உபகரணம் மொழியாகும்எனக்கருதுகிறார். அது சமூகத்தின் ஓர் உற்பத்தியும் சமூக அனுபவங்களால் கற்கப்படுவதுமாகும். மொழியானது அச்ச மூகத்தின் ஒழுக்கங்கள், விழுமியங்கள்  நம்பிக்கைகள், ஒன்று தொகுக்கப்பட்ட அறிவுக் கதிர்கள் என்பன சேமிக்கப்பட்ட ஒரு களஞ்சியமாகும். மொழியையும் மொழியினூடாக மேற்குறித்த அறிவுக் களஞ்சியத்தின் ஞானக்கோவையையும் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுப்பது பாடசாலையின் கருமமாக அமைதல் வேண்டும். எனவே ஒவ்வொரு சமூகத்திலும் தாய்மொழியைக் கல்விபுகட்டும் ஊடகமாக ஆக்கி, அதன் மூலம் சமூகத்தின் குறித்த நோக்கத்தையும் நுகர்வையும் பெற்றுக்கொள்வதற்கான சக்தியைப் பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என டூவி பிரேரிக்கிறார். 

கலைத்திட்டம்

கல்வி என்பது வாழ்க்கைக்கு தயாராதல் அல்ல. மாறாக வாழ்க்கையை வாழ்வதே கல்வியாகும்எனக் கருதுகிறார். சமுதாயமயமாக்கலுக்குத் தேவையான செயலூக்கமுள்ள பிரசையாவதற்கும், வெற்றிகரமான குடும்ப வாழ்க்கைக்கும், ஒரு தொழிலில் ஈடுபடவும் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றைப் பிள்ளைகளிடம் விருத்தி செய்யவும் உதவும் வகையில் கலைத் திட்டம் காணப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். மேலும் டூவி கலைத்திட்டத்தை தயாரிக்கையில் கவனத்திற் கொள்ள வேண்டியவிடயங்களை எடுத்துக்காட்டினார்.

·         பிள்ளைகளின்ஆர்வங்கள்,தேவைகள்,சவால்களுக்குஏற்றவாறுஉண்மைவாழ்க்கையைஅடிப்படையாகக்கொண்டுபாடங்களுக்கிடையில்நல்லதொருதொடர்புஏற்படும்விதத்தில்தயாரிக்கப்படல்வேண்டும்.

·         கற்றல்செயன்முறையில்நேரடியாகப்பங்குபற்றுவதற்குச்சந்தர்ப்பம்கிடைக்கும்வகையில்சமூகவாழ்க்கையின்பிரதானவிடயங்களைஅடிப்படையாகக்கொள்ளவேண்டும்.

பாடவிதானம்

கல்வி என்பது வாழ்க்கைக்காக தயாராவது அல்ல. வாழ்க்கைக் கருமத் தொடரில் பங்கு பற்றுவதே கல்வியாகும;. முழுமையான கல்வி தொடர்ச்சியான ஒரு கருமத்தொடராகும். ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற்கு பதிலாக சமூக கருமங்களில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும் கூட்டுத்தொழிற்பாடுகள் மூலம் சமூகம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படல் வேண்டும். இதற்கு ஏற்பபாடவிதானத்தைத் தயாரிக்கும் போது பாட சாலை சமூகத்துக்கும் சமூக அனுபவங்களுக்கும் பிரதான இடம் வழங்கப் படல் வேண்டும். அவரது மாதிரிப் பாடசாலையில் உணவு சமைத்தல், துணிதுவைத்தல் போன்ற பாடங்களை சமர்ப்பித்து அப்பாடங்களின் மூலம் பரீட்சார்த்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். வாழ்க்கையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் விலகியிருக்கும் பாடசாலையை தொழிற்பாடுகளின் மூலம் வாழ்க்கை மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் ஒன்றிணைத்தல் வேண்டும் என்பது டூயியின் கருத்தாகும.; உணவு, உடை, வாழிடம் என்பன தொடர்பான பாடங்களை பாடசாலைக் கல்வியுடன் தொடர்புபடுத்தல் வேண்டும். உணவு சமைத்தல், தையல்வேலை, கைப்பணி போன்ற பாடங்களை அவரது பாடவிதானத்தில் உள்ளடக்கியமையின் மூலம் அவர் புதுசிந்தனையொன்றினையும் புது வழிவகையொன்றினையும் தோற்றுவித்தார். ஆக்கபூர்வமான வெளியீட்டு வழி வகைகளின் மூலம் புது சிந்தனையை தோற்றுவிப்பதற்கும் சமூகத்துடன் முன்னேறிச் செல்வதற்கும் சமூகத்துக்கு எவற்றையேனும் ஒப்படைப்பதற்குமான திறமையைப் பாடசாலை கொண்டிருத்தல் வேண்டும்.

மாணவர் மையக்கற்றல்

மனிதன் என்பவன் சிந்தனா சக்தியை வளர்த்துக் கொண்டதும் உபகரணங்களை உற்பத்தி செய்து கொண்டு அவற்றைப் பயன்படுத்தும் ஒரு முன்னேற்றகரமான விலங்கினத்தின் ஒரு பிரிவினனாகும்என டூவி விளக்குகின்றார். இந்த சிந்தனை சக்தியை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகச் செயற்பாட்டு அனுபவங்களை ஒழுங்கமைக்க வேண்டும். ஆசிரியர் மையக் கற்பித்தல் செயன்முறையை நிராகரித்த டூவி ஆசிரியரின் பணிபிள்ளைக்கு அறிவுத் தொகுதியைப்புகுத்துவது அன்றிப் பல்வேறு செயற்பாடுகளின் மூலம் பிள்ளைக்கு அறிவை வளர்த்துக் கொள்ளும் சூழலைத் தயார்படுத்த வேண்டும் என்கிறார். அதாவது கல்வி பிள்ளையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். கற்பவற்றை மாணவன் தீர்மானிக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாகும். ஆசிரியரது பணி அறிவுத் தொகுதியை மாணவருக்குப் பெற்றுக் கொடுப்பதுவன்றி அறிவைப் பெற்றுக் கொள்ள மாணவனுக்கு வழிகாட்டுவதாகும்.

கற்பித்தல்முறை

வெறுமையான பிரச்சினைகள் ஏதும் அற்ற ஓரிடத்தில் கற்பனை ரீதியிலான ஓர் அறிவைக் கட்டியெழுப்ப முடியாதுஎன்கிறார். அதற்கேற்ப பிரச்சினை தீர்க்கும் முறையே பொருத்தமான கற்பித்தல் முறையாகும். பிரச்சினை தீர்க்கும்போது தனித்தனியாகவும் கூட்டாகவும் முயற்சிப்பதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். இதற்கு ஏற்ப குழுக் கற்பித்தல் முறைக்கு ஆர்வ மூட்டல் வேண்டும். பயன்பாட்டுவாதத் தத்துவக் கருத்துக்களின் மூலம் நெறிப்படுத்தப்பட்ட டூவியின் அறிவியல் கருத்துகளுக்கு அமையயாதேனும் பயன்பாடுடைய செயலைச் செய்தலும் அது தொடர்பாக ஏற்படும் ஆசையின் ஊடாக அனுபவத்தை பெறலுமே அறிவைப் பெறுவதற்கான மிகச் சிறந்தமுறையாகும். அறிவியற்கருத்துக்களை மறுதலித்த டூவி அவதானித்தல், பரிசோதித்தல், உண்மையறிதல் என்பனவே அறிவைப்பெறும் ஊடகங்கள் ஆகும் எனக்குறிப்பிட்டார். சுயதொழிற்பாட்டின் மூலம்பிள்ளைக்கு ஆராய்ச்சி செய்வதற்கும் பரீட்சார்த்தமாக வாய்ப்பு பார்ப்பதற்கும் சந்தர்ப்பம்கிடைக்கப் பெறல் வேண்டும். பிள்ளை ஈடுபட்டிருக்கும் கருமத்தொடரில் தடைகள் ஏற்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறாகதடை ஏற்படும் போது அதனைத் தீர்த்துக் கொள்வதற்கான விருப்புபிள்ளையிடத்தே ஏற்படுகின்றது. இரண்டாவதாக அது தொடர்பான விளக்கத்தை பெறுவதற்கும் பிரச்சினையை மென்மேலும் விடுவித்துக் கொள்வதற்கும் பிள்ளை முயற்சிக்கின்றது. மூன்றாவதாக பிரச்சினையைத் தீர்ப்பதற்காக பிரேரணையை சமர்ப்பிக்கின்றது. இவ்வாறாக சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகளுக்கு இயைபானவாறு செயற்படுவதன் மூலம் அதற்கான தீர்வுகள் கிடைக்கின்றன. எதிர்பார்க்கப்பட்ட விடை தீர்வு அதுவாயின் அது சரியான தீர்வாகும். இக்கருமத் தொடரில் ஈடுபட்டபடி பிள்ளை பிரச்சனைகளை தீர்த்தவாறு கற்றுக் கொள்கின்றது. இவ்வாறாக பிரச்சனை தீர்த்தலானது அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான பிரதானமான தொரு வழியாகும் (கல்வித் தத்துவ அடிப்படைகள், 1991).

மேலும் கல்வி அனுபவம் மூலம் பெறப்படுவதாகும்என்று நம்புகிறார். ஓர் அனுபவம் மற்றுமோர் உயர்ந்த அனுபவத்தோடு தொடர்பு படவேண்டும். அனுபவம் மூலம் பெறப்படும் அறிவு வாழ்க்கைக்கு ஏற்றதும் என்றும் நன்றாக நினைவில்பதியும் என்றும் நம்புகிறார். இதற்கு பிரச்சினைவிடுவித்தல், நேரடி அனுபவங்களை வழங்கல், சுய கற்றலுக்குத் திசைப்படுத்தல், சகபாடிக்கற்றல், மற்றும் பரிசோதித்தல் போன்ற நடைமுறை ரீதியிலான கற்பித்தல் முறைகள் பொருத்தமானவையாகும். இதன் மூலம் சமூகத்தில் அவன் எதிர் நோக்கும் சவால்களுக்கு வெற்றி கரமாக முகங்கொடுக்கலாம். பாடவிடயம் நாளுக்கு நாள் மாற்றமடைகின்ற நிலையில் பலாத்காரமாக பெருமளவுபாடங்களைக் கற்பித்தலுக்குப் பதிலாக அனுபவங்களினூடாக அவர்கள் தாமே முயன்று கற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பது டூவியின் கருத்தாகும். 

டூவி குறிப்பிடுவதற்கு ஏற்ப அனுபவம் என்பது யாதேனுமொரு செயற்பாட்டின் நற்பெறு பேறுக்கு அமையதனியாளிடத்தே நிகழும் நடத்தை சார்மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும் நிலைமையாகும். ஒரு பிள்ளைமெழுகு திரிச் சுவாலையைத் தொடும்போது கையில் தீக்காயம் ஏற்படுகின்றமையால் வேதனையை உணர்கின்றது. எனினும் இது கல்வி சார்ந்தோர் அனுபவம் அல்ல. தீச்சு வாலையை தொட்டதால் கையில் தீக்காயம் ஏற்பட்டது என்பதை மட்டும் அவன் அறிந்து கொள்கின்றான். தீச்சு வாலையை தொட்டால் கையில் தீக்காயம் ஏற்படும் என்றவாறு பொதுமையாக்கம் செய்யப்படும் போது அது கல்வி அனுபவமாக மாறுகின்றது. முறையான கல்வியைப் பெற முன்னர் இவ்வாறாக உலகம் பற்றியும் நம்மைப் பற்றியும் ஏனையோரை பற்றியுமான பல்வேறு விடயங்களை நாம் அறிந்து கொள்கின்றோம். அனுபவங்களின் ஊடாக கற்றல் உண்மையறிதல் முறையாகும். அதாவது யாதேனு மொன்றினைச் செய்வதன் மூலமும் நிகழ்ந்துயாது என மீண்டும் சிந்தித்தல் மூலமும் கற்றுக் கொள்வதாகும்.

எனவே பாடசாலையில் பிள்ளைக்குப் பிரச்சினைகள் எழுவதற்கு ஏற்ற பின்னணியொன்றினைத் தோற்றுவித்தல் வேண்டும். அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பிள்ளைக்கு வழங்குதல் வேண்டும். உயிர்ப்பான செயற்பாட்டு ரீதியான கருமங்களில் ஈடுபட அவனுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.

முடிவுரை

எனவே ஒட்டுமொத்தமாக ஜோன் டூவியின் கருத்துக்களை நோக்கும் போது கல்வியினூடாக வாழ்க்கையின் கடமைகளையும் உரிமைகளையும் விளக்க வேண்டும் என்பதையும் வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கும் திறனைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதையும் சமூகசக்திகள் சமூகத் தேவைகள் சார்ந்த சக்திமிக்க கல்வி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சமூகச் செயன்முறையுடன் தொடர் பற்ற கல்வி பயனற்றது என்பதும் தெளிவாகின்றது.

 

References

1.        John Dewey: A Yankee Confucius and Cultural Ambassador. (2014). Chinese and Americans, 204–232. https://doi.org/10.4159/harvard.9780674736290.c10

2.        B. (2020, June 15). John Dewey. Biography. https://www.biography.com/scholar/john-dewey

3.        D is for John Dewey: His Approach to Education. (2020, June 3). The Positive Encourager. https://www.thepositiveencourager.global/john-deweys-approach-to-doing-positive-work/

4.        Gouinlock, J. S. (2021, May 28). John Dewey | Biography, Philosophy, Pragmatism, & Education. Encyclopedia Britannica. https://www.britannica.com/biography/John-Dewey

5.        John Dewey. (1952). Nation Academy of Science. http://www.nasonline.org/member-directory/deceased-members/20001029.html

6.        L., S. P., &Schilpp, P. A. (1939). The Philosophy of John Dewey. The Journal of Philosophy, 36(25), 691. https://doi.org/10.2307/2018919

7.        Sikandar, A. (2016). John Dewey and His Philosophy of Education. Journal of Education and Educational Development, 2(2), 191. https://doi.org/10.22555/joeed.v2i2.446

8.     கல்வித்தத்துவஅடிப்படைகள் (1991), ஆசிரியர்கல்வித்துறைதேசியகல்விநிறுவகம்,மகரகம.

9.     சந்திரசேகரம், (2011),கல்வத்தத்துவம். சேமமடுபதிப்பகம்.