4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

அவளுக்கென்று ஒரு குணம் - விஜயா குமரன்

அவளுக்கென்று ஒரு குணம்

-விஜயா குமரன்

 

இருள் பிரிவதற்கு முன்னமே, விடியல்ல எழுந்து செல்லியம்மன் கோவில் பெரிய வாசலை சாணிதெளிச்சு பெருக்கி கோலம் போட்டாள் கமலம்மா. அங்கிருந்து நாலடி பின்னே போய்த் தள்ளி நின்னு, விட்டல் கிருஷ்ணன் மாதிரி இடுப்புலகையை வச்சுக் கிட்டு தலையை கொஞ்சமே இடப் புறமாகச் சாய்த்து எங்கேயாவது புள்ளிதப்பி போயிருக்கா. பிசகு ஏதாச்சும் ஆயிருக்கா பார்த்து, “எல்லாம் சரியாத்தேன் இருக்கு என்றுசொல்லிக் கொண்டே மனம் நிறைந்தவளாய் அங்கிருந்து நகர்ந்து போனாள் கமலம்மா. எந்த வேலையைச் செய்தாலும் அவளிடத்தில் கச்சிதமான கை நேர்த்தி. கமலம்மா கைபட்டா கண்ணாடி தான்.. தேச்சுவச்ச பாத்திரம் எல்லாம் தங்கமுலாம்; மொழுகித் தொடைச்ச தரையில முகம் பாக்கலாம்..  என்பதெல்லாம் இவள் பெற்ற விருதுகள். இது தான் இன்னிக்கி வரை அவளுக்குச் சோறு போடுகிறது. கட்டிக் காப்பாத்துகிறது.

இன்னிக்குமட்டுமா? அன்னியிலேர்ந்தே. கமலாசிறுபிள்ளையா இருந்தபோதே, அவள் அப்பாகுடும்பத்தை நட்டாத்தில் விட்டுவிட்டுகுடியும் இன்னம் எல்லாத்தையும் சேர்த்துக் கிட்டுஓடிப் போக.. இவள் அம்மாதான் இவளைக் கரையேத்தினாள். அம்மாவோட கூடவே வீட்டு வேலை செய்யப்போன சின்னஞ் சிறுமிக்கு அம்மா மூலமா வந்த குலவித்தை தான் இது.

வளர்ந்து திருமணமான கமலாவுக்கோ வேறுவிதமா துன்பம் பால் வாசம் மறக்காத பிள்ளையா மகன் வேலு இருக்கும் போதே ஆட்டோடிரைவரான கணவன் விபத்தில் செத்துப் போனதுதான். கஷ்டமும், கண்ணீரும் தான் கமலாவுக்கு வந்த பரம்பரைச் சொத்து. சோர்ந்து போயிடலை அவ. வீட்டு வேலை செய்து வந்த வருமானத்தில் பிள்ளையைப் படிக்கவைத்தாள். வேலை செய்றவீடுகளில் கொடுக்கும் சாப்பாட்டை பிள்ளைக்கு சாப்பிடக்கொடுத்து வண்டிக்கடையில இருந்து இட்லி, பூரின்னு மதிய சாப்பாட்டுக்கு எதையாவது வாங்கிக் கொடுத்து தான் அரைப் பட்டினியும் முழுப் பட்டினியும் கிடந்துபள்ளிக்கூடக் கட்டணம் கட்டிபுத்தகம் வாங்கிக் கொடுத்தாள். தன் அடுத்த தலைமுறையாவது நன்றாகப் படித்து காசு பணம் பாத்து கஷ்டப் படாம இருக்கோணும் என்கிறது தான் அவள் உயிர் மூச்சா இருந்தது. வேலு நீலகலர் யூனிபாரமைப் போட்டுக்கிட்டுபையத் தூக்கிக் கிட்டுகையை வீசி ஆடிக்கிட்டேபோற அழகைப் பாத்தேதன் பசியெல்லாம் மறந்தாள்.

புள்ளைக்கு காலேஜிலே இடம் கிடைக்கோணும், கல்யாணம் ஆகோணும் என ஆரக்கால்களாக ஒவ்வொரு தேவைகளும் நெருக்கிப் பிடிக்ககாலச்சக்கரம் ஓடிக் கொண்டே இருந்தது. ஒவ்வொருதேவையும் நிறைவேற வேணுங்கிற ஆதங்கத்துல பக்கத்துல இருக்கும் செல்லியம்மா கோவில் வந்து வேண்டுவாள். விளையாட்டாக  ஆரம்பித்தது தான் கோவில்ல கூட்டிப் பெருக்குறதும் கோலம் போடுவதும். பின்னே அது ஊர்ல எந்தக் கோவில்ல திருவிழான்னாலும் கமலம்மாகை வண்ணம் இல்லாம சாமி கூட  வாசலுக்கு வருவதில்லை என்றாகிப் போனது.

கமலம்மா வேண்டிக் கொண்ட படியே பையனுக்கு நல்லவேலை கிடைத்து சுமாரான வருமானம் வர திருமணமும் ஆகியது. மருமகளும் வேலைக்குப் போகவருமானம் என்னவோ வந்து கொண்டு தான் இருந்தது. வருடங்கள் நகர்ந்தன. நாளும் புதிதுபுதிதாகப் பிரச்சனைகள். அவசர உலகில், இளையவர்களுக்கு வேளைப் பளு, அழுத்தம். மாமியாரின் அறிவுரைகள். பட்டஅறிவின் குறிப்புரைகள் எட்டிக்காயாகிப் போயின. வீட்டில் இருக்கும் அவளோடு பேசக் கூட நேரம் ஒதுக்க முடியாத சம்பாதிக்கும் மகன், மருமகள். வழக்கமான மாமியார் மருமகள் உரசல்கள், புதிதாக வந்த பணம், செல்வாக்கு, இளையமுதிய தலைமுறையினரின் பொருந்திப் போகாத, உடன் படாத கருத்துக்கள் குடும்பலயத்தையே புரட்டிப் போட்டன. எல்லா கருத்துக்களிலும் சிக்கல்கள்; இடியாப் பசிக் கல்கள். கமலம்மாவின் முதுமை பாரமாகிப் போனது. வேறோடின மரத்தை வெட்டிக் கொண்டு போய் வேற இடத்தில் நட திட்டங்கள் போட்டனர் மகனும் மருமகளும். எல்லாக் கூறுகளும் காரணமாகி கமலம்மாவை வெளியே தள்ளிவிட்டன.

அதுக்கப் புறம் என்ன? உண்ணும் சோறு, குடிக்கும் நீர் எல்லாமே இந்த செல்லியம்மா தான். அன்னை கோவில் தான் புகலிடம். கமலம்மாவுக்கு நிரந்தரமான தங்குமிடம் ஆனது. கையில் தான் குலவித்தை இருக்கிறதே. பட்டினியும் பழக்கமான உடம்பு தானே. காலம் நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தது.

இன்னிக்கு வழக்கம் போலதன் வேலைகள் எல்லாம் முடித்த பின், ஓய்ந்து வேப்பமரத்தடியில் வந்து உட்கார்ந்தாள் கமலம்மா. கிளைகளால் நிழல் குடை விரித்துக் கொண்டிருந்தது அந்த வேப்பமரம். கோவிலை ஒட்டிய, வெளிப்புறமை தானத்தில் இருந்த வேப்பமரம் தான் கமலம்மாவுக்கு ஓய்வறை, பொழுதுபோக்கு அறை எல்லாமே!  இராத்திரிப் போது தவிர மத்தநேரம் முழுவதும் பெரும்பாலும் இங்கேதான். அப்படியே மரத்தில் முதுகைச் சாய்த்துக் கொண்டு கால்களை நீட்டி உட்கார்ந்து இருப்பதும், “இனிமே நான் வேலை செய்யமாட்டேன்னு அடம் பிடிக்கும் கால்களை நீட்டி வழித்து. அழுந்த தடவிக் கொடுத்து சமாதானப் படுத்தி அடுத்த பொழுது வேலைக்காக தயார் செய்வதுமாக எல்லாமே இங்கே தான்.

கோவில் வாசல் பூக்காரி பொன்னி கொண்டு வந்த நிலசம்பங்கி. மல்லி, ரோஜா பூக்களை மாலையாகக் கட்டத் தொடங்கினாள்.  தொடங்கும் போது ஓம் செல்லியம்மா போற்றி என்று சொல்லிவிட்டு, அம்மாவை மனசால நினைத்துக் கொண்டே ஆரம்பிப்பது தான் அவள் வழக்கம். இன்னிக்கு, பூக்களை பிரித்து தொடுக்க ஆரம்பித்தபோது பூக்காரி பொன்னியின் நினைவு வந்தது. பதினைந்து நாளாகவே அவ சரியா இல்லை. என்னவோ சோகத்தைச் சொல்லுது முகம். என்ன பிரச்சினையா இருக்கும்? யோசித்துக் கொண்டே பூ தொடுத்தவளுக்கு இலைமறை காயாய் ஏதோபுரிந்தது. அதிவேகமாய் கைகள் தொட்டுத் தொடுத்துக் கொண்டிருக்கும் பூக்களுக்கு அவள் தலையில் அமரஅனுமதியில்லை. சமுதாயம் செய்தஏற்பாடுஅது.

அவள் கும்பிடும் செல்லியம்மா, கதியென்று வந்து தன் காலடியிலேயே கிடக்கும் கமலம்மாவைப் பார்த்தாள்.. தன்னையே முழுசாக அர்ப் பணித்துக் கொண்டு கோவில் வாசல். பிரகாரம், மண்டபம் எல்லாத்தையும்  பெருக்கித் துடைத்து எத்தனை நேர்த்தியா, கருத்தா செய்யறா.. கருவறை விளக்கு, தீபக் கால், தூபக் கால், தாம்பாளம், தட்டு, நீராட்டுக்கு என தண்ணீர் பிடித்து வைக்கும் கொப்பரை, ஜோடுதவலைன்னு எல்லாத்தையும் தேய்த்துக் கழுவி.., மீந்த நேரத்தில் வண்ண வண்ண பூக்களால் மாலை தொடுத்து அலங்காரத்திற்காக கொடுத்து அதில் மகிழ்ந்து போகிறாள். மதங்க முனிவர் ஆசிரமத்தில தொண்டு செய்த சபரி போலப் பணி செய்கிறாள்.

அவளை எப்படித் தான் பாராட்டுவது? எத்தனைவேலை…? அதுக்காக கோவில் ஆளுங்ககொடுக்கும் சொற்பபணம் அவள் ஜீவனத்துக்கே போதாது. ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். நூன் நினைச்படி நடக்குமா? என அந்த வேப்பமரத்தைப் பார்க்க.. மரம் வேகமாகத் தலையாட்டியது. காற்றின் அசைவில்பூக் கட்டிக் கொண்டிருந்த கமலம்மாவின் தலையில் பூக்கள் குடியேறின. சின்னஞ்சிறு நட்சத்திரங்களாய் வேப்பம் பூக்கள். அவள் கும்பிடும் அன்னைக்கு விருப்பமான பூக்கள்!

என்ன ஆத்தா பூவெல்லாம் தலையிலே.. வேடிக்கையாகக் கேட்டுக் கொண்டே வந்தான் சாப்பாட்டு வண்டிக்கார அண்ணாசாமி. என்ன இன்னிக்கு சாப்பிடவரலை?” அக்கரையாகக் கேட்டான் வயிறும் சரியில்லே மனசும் சரியில்லே எனச் சோர்ந்தகுரலில் பதில் சொல்ல.. நேரம் போனதே தெரியாமல் ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பூ கட்டி முடித்ததும், தன் சுருக்குப் பையைப் பிரித்து அதிலிருந்த பணத்தை எடுத்து எண்ணிச் சரி பார்த்து பைக்குள் வைத்துக் கொண்ட கமலம்மா.. ஆகா சூரியன் இறங்கப் போறநேரமாச்சு; வேலையைப் பாக்கணும் என்று சொல்லிக் கொண்டே பூக்களைக் கொண்டு போய் உள்ளே அம்மன் முன்னே வைத்து விட்டு தன் அடுத்த வேலையை, சாயந்திர கோலம் போடத் தொடங்கினாள். நாளைக்கு மண்டபத்துல காது குத்து விழா இருக்கு அதுக்கு மண்டபத்தைதயார் செஞ்சுகோலம் போடணும்.. மனதைத் தயார் படுத்திக் கொண்டாள். அந்த கோவிலின் விழா மண்டபத்தில் நடக்கும் கல்யாணம் போன்ற மற்றவை பவங்களுக்கும் எதிர்பார்ப்பே இல்லாமல் நிறைய வேலை செய்வாள் கமலம்மா. அவ்வப்போது நடக்கும் வைபவங்களின் போது சம்பந்தப்பட்ட மனிதர்கள் மகிழ்ந்து அவளுக்கு உணவு, பணியாரங்கள் தவிர பணமும், பெரிய மனது படைத்தவர் யாரேனும் சேலையும் கூட தந்துவிட்டுச் செல்வது உண்டு. இந்த பணத்தையெல்லாம் அவள் என்னதான் பண்ணுகிறாள்.

கோவில் பூசாரி கூட அவளைச் சீண்டி செல்லமாக வம்பிழுப்பது உண்டு. என்னகெழவி முடிஞ்சு, முடிஞ்சு வச்சுகிறியேபோம் போது என்னத்தைக் கொண்டு போப்போறே..?

சாப்பிடறதுக்குக் கூட செலவு செய்ய மாட்டேங்குற.. கோவில் பிரசாதம், புளியோ தரை தயிர் சாதத்துலேயே ஓட்டிடறே..ம்..? ராத்திரிலே வண்டிக் கடை இட்லி. இல்லைனா பட்டினி தான் பலகாரம்..ம்..? என்னதான் பண்ணறே பணத்தை? கோவில்ல முன் மண்டபம் பெரிசாகட்டப் போறாங்க அதுக்கு தானம் கொடேன். மாட்டியே! சரி அதான் போட்டும், வரப்போற பெரிய திருவிழாக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப் போறாங்க அதுக்காவது கொடு. போற வழிக்கு புண்ணியமாவது சேரும்..என்று நையாண்டியோடு நன்கொடை கேட்டார்.

ஆங்…. எனக்கு அள்ளிக் கொடுத்துடறீங்களாக்கும் நீங்க. எனக்குவேற செலவு நெறைய இருக்கு. நீ வந்து எனக்குக் காரியம் பண்ணப் போறது இல்லை. அப்புறம் உனக்கென்ன கவலை என்னைப் பத்தி? ”நீ போய் உன் வேலையைப் பாரு..இவளும் இடக்கு மடக்காகவே பேசி விட்டு எழுந்து போனாள்.

படபடன்னு பேசிவிட்டுப் போனாலும் அவள் மனது எதையோ எண்ணி சங்கடப் பட்டது. நேற்று பூக்கார பொன்னி வந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டு நின்ற காட்சி இன்னமும் இவளை பாடாய்ப் படுத்தியது. அந்த நேரத்தில் பூக் கூடையைச் சுமந்து கொண்டு எதிரில் வந்தாள் பொன்னி. கூடவே வந்த அவள் மகன் ஒரு பெரிய பூ மூட்டையை இறக்கி வைத்து விட்டுப் போனான். கமலம்மா அந்தப் பையனை வைத்த கண் வாங்காமல் கூர்ந்து பார்த்தாள். கமலம்மா தான் பேசத் தொடங்கினாள், ஏண்டீ பொன்னி! நானும் தான் பாக்குறேன் கொஞ்ச நா முன்னே டிரஸ்டி ரெட்டி கிட்டே எதையோ சொல்லி புலம்பினதைப் பார்த்தேன். அப்போ ஒண்ணும் புரியல. அப்புறம் பாக்குற பெரியமனு சங்ககிட்டேல்லாம் எதையோ சொல்லிக் கிட்டு இருந்தஎன்கிட்டே சொல்லனும்னே தோணலை பாரு உனக்கு? உரிமையோடு கேள்விக் கணை தொடுத்தாள். என்ன கஷ்டம்? எங்கிட்டே சொல்ல மாட்டீயா?

இல்ல.. பையன் காலேஜுலே இரண்டாம் வருஷம் படிச்சுகிட்டு இருக்கான் தெரியுமில்லே. அவனுக்குபணம் கட்டலாஸ்ட் தேதி ஆயிடுச்சு பணங் கட்டலை. அவனை பரிட்சை எழுதக் கூடாதுன்னு வெளியேத்தப் போறாங்க நாளையோட எல்லாம் முடிஞ்சு போயிடும் பணம் தேறலை உடைந்து கதறினாள் பொன்னி. எங்கிட்டே நீ சொல்லலை.. ஆனா வண்டிக்கார அண்ணாசாமி கூட நீ பேசிக்கிட்டு இருந்தது அரைகுறையா என்  காதில விழுந்தது. அவன் கிட்டே போட்டு வாங்கிட்டேன்.

பொன்னி உடைந்த குரலில் பேசினாள். அவனுக்குத் தெரியும் ஆனா அவன் பொண்ணுக்கு இந்த வருஷம் இஸ்கூல் பீஸ்{ நீ தான் கட்டினேன்னு சொன்னான். சும்மாசும்மா உன்னை எப்படி தொந்திரவு செய்யறது, எப்படிக் கேக்குறதுன்னு தான்.. மேலே பேச முடியாமல் கேவினாள். ஏ! மக்குப் பொண்ணே! இந்தா.. தன் சுருக்குப் பையைத் திறந்து பணம் முழுவதையும் பூக்காரியிடம் தந்தாள். திகைத்துப் போய், தன்னை மறந்து கை நீட்டி வாங்கிக் கொண்ட பூக்காரி அவள் காலில் விழுந்து கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள். விவரமா எதுவுமே புரியாத படி இதையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் பூஜாரி.

நான் தேவைப் பட்டவங்களுக்கு கொடுப்பேன். என்னாலே தான் படிக்கவே முடியலே. வேறே எதுக்குடி எனக்கு காசு பணம் எல்லாம்அம்மா இருக்குறா அவ பாத்துப்பா எனக்கு வேண்டியதை..உறுதியான, மகிழ்ச்சியான குரலில் சொன்னாள். நீ புள்ளையை நல்லா படிக்க வை. அது போதும். படிப்புக்குன்னா நான் யாருக்கும் கொடுப்பேன் கேக்கறதுக்கு யோசிக்காதே என்ற கமலம்மாவை கையிரண்டும் சேர்த்துக்கும் பிட்டாள் பொன்னி. பக்கத்துப் பள்ளிக் கூடத்திலிருந்து பாரதியார் பாட்டு கேட்டது. அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலும்.. ..கருவறையில் அன்னையின் முன்னே நின்றிருந்த பூஜாரி சேதியை ஊகித்துக் தெரிந்து கொண்டதும் செல்லியம்மனை விட்டு விட்டுத் தன்னை மறந்து கண்ணில் நீருடன் கமலம்மாவை நோக்கி வந்தார்.