4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

இந்து சமய அரசியல் வரலாற்றில் பல்லவர் காலம் பெறும் முக்கியத்துவம் - கி.நிரோஜா

 

இந்து சமய அரசியல் வரலாற்றில் பல்லவர் காலம் பெறும் முக்கியத்துவம்

கி.நிரோஜா

கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை

இலங்கை

 

பல்லவர் எனப்படுவோர் தென்னிந்தியாவில் கி.பி மூன்றாம் நூற்றாண்டு (கி.பி 300) தொடக்கம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு (கி.பி 850) வரையானக் காலப்பகுதியில் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்களாவர். இவர்கள் இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்களாகவும், தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள் எனவும், பஹலவர் எனும் பாரசீக மரபினர் எனவும் பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆதாரங்களுடன் குறிப்பிடப்படினும் பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி பல்லவர்கள் தென்னிந்தியர்களே என உறுதிப்படுத்தப்படுகின்றது.

பல்லவர் காலம் தமிழக வரலாற்றில் மிகவும் நீண்டதொரு காலப்பகுதியாகும். அது சமுதாய அமைப்பிலும் பண்பாட்டு வளர்ச்சிகளிலும் பல பிரதானமான மாற்றங்கள் ஏற்பட்ட காலப்பகுதியாகும். பல்லவர் காலச் சமுதாய நிலைகளைப் புரிந்து கொள்ளாதவிடத்து தமிழரின் கலாசார பாரம்பரியங்களையும் சமூக வழமைகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமன்றி அரசியல், சமயம், தொழிநுட்பம் மற்றும் பல இன்னோரன்ன விடயங்களிலும் பல்லவர்களின் ஆட்சிக் காலமானது சிறப்புற்று விளங்கியது எனலாம்.

பல்லவர்களின் ஆட்சிக்காலமானது ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளை உள்ளடக்கிய காலப்பகுதியாக வரையறை செய்யப்படுகின்றது. அதனை முதலாம் மகேந்திர வர்மனுக்கு முற்பட்டக் காலப்பகுதி என்றும் அதற்குப் பிற்பட்டக் காலப்பகுதி என்றும் இரு பிரிவுகளாக வகைப்படுத்துவர். 

முதலாவது காலப்பகுதியிலே பல்லவர்கள் தொண்டை நாட்டையும் கிருஷ்ணா நதி வரையில் பரந்துள்ள ஆந்திரப் பிரதேசங்களையும் ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் அவர்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய பட்டயங்கள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. அவை பிரமதேயங்கள், நன்கொடைகள் எனும் கோயில் வகைக்குரியனவாகும்.

பல்லவர் காலத்தின் முதலாவது கட்டமாகிய மூன்று நூற்றாண்டுகளிலும் தமிழக அரசியல் நிவையில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்படலாயின. அக்காலப்பகுதியிலேயே சோழ நாட்டில் சோழராட்சி மறைவுற்றதுடன், தென்தமிழ் நாட்டில் பாண்டியர்களின் அதிகாரமும் குன்றியது. அந்நாடுகளில் களப்பிரரின் ஆதிக்கம் ஏற்பட்டது. குறிப்பாகச் சாளுக்கியர், பல்லவர், பாண்டியர் ஆகியோரின் சாசனங்களில் களப்பிரரை வெற்றி கொண்டமை சிறப்பானதோர் சாதனையாகக் குறிப்பிடப்படுகின்றது.

சோழ நாட்டில் சிம்ம விஷ்ணுவின் காலத்திலே அதாவது கி.பி 575 தொடக்கம் 600 வரையானக் காலப்பகுதியில் பல்லவரின் ஆதிக்கம் மேலோங்கியது. அதேகாலத்தில் பல்லவர் வசமிருந்த வேங்கி மண்டலத்தை சாளுக்கிய மன்னனாகிய புலிகேசி கைப்பற்றிக் கொண்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்லவர் ஆட்சிக் காலத்துப் பிற்பகுதியான மூன்று நூற்றாண்டுகளிலும் தெற்கிலே பாண்டியர்களின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டது. பாண்டியர்களைப் பொருத்தவரையில்; கொங்கு தேசம், வேணாடு, ஓய்மாநாடு என்பவற்றில் தம் ஆதிக்கத்தினைச் செலுத்தியிருந்தனர். பல்லவர்களும் பாண்டியர்களைப் போலவே மேலாதிக்கம் மிக்க அரசாக விளங்கியதுடன் இவர்கள் சிற்றரசுளையும் தம் வசம் ஈர்த்தவர்களாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எனினும் அத்தகைய சிற்றரசுகள் பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் வசமானது எனபதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பல்லவர் ஆட்சியிலே சமூகம், பண்பாடு, கலாசாரம், அரசியல் மற்றும் பல இன்னோரன்ன விடயங்களில் சிறப்புற்றிருந்த  தன்மை காணப்பட்டது. குறிப்பாகப் பல்லவ மன்னர்கள் தம் மதமாகிய இந்து மதத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்ததோடு அரச ஆதரவுடன் அதை வளர்த்தெடுக்க முற்பட்டனர். குறிப்பாகப் பல்வர்களின் ஆட்சி காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட காலம் முதலாகப் பல்லவ மன்னர்கள் பொதுவாகவே வைதீகச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர். அரண்மனைக் கலாசாரமும் வைதீகக் கலாசாரத்துக்குள் உள்வாங்கப்பட்டது. அரசர்களின் வழமைகளை வேளிர் குலத்தவரும் பெருவணிகரும் பின்பற்றினர். வேதங்களிலும் சாஸ்த்திரங்களிலும் வல்ல வேதியருக்கும் மன்னருக்கும் இடையிலே நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. மன்னர்களின் ஆதரவில் பிரமதேயங்கள் தோற்றம் பெற்றன. பிற்பட்ட காலங்களில் பல்லவர்களினதும் பாண்டியர்களினதும் அரசியல் நடைமுறைகள் காகம்போஜம், சம்பா முதலான நாடுகளில் பரவலாயிற்று.

பல்லவர்களின் ஆட்சி முறைமைகளும், நிர்வாக முறைமைகளும்

தமிழகத்தில் ஒரு ஒழுங்கான நிர்வாக முறை பல்லவர்களாலேயே முதல் முதலாக உருவாக்கப்பட்டது. பல்லவர் காலத்திற்கும் முற்பட்டக் காலத்தினையுடையவர்களாகவே முடியுடை மூவேந்தர்களும் காணப்பட்டனர் எனலாம். இவர்களுடன் மலையமான்களும், அதியமான்களும் அதிகாரமுடையவர்களாகக் காணப்பட்டதோடு அவர்கள் நாணயங்களையும் வெளியிட்டிருந்தனர். மூவேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் சமுதாயப் பிரிவினரிடையே வேற்றுமைகள் வலுப்பெற்றுக் காணப்பட்டன. இவை பிராந்திய அடிப்படையில் அமைந்துக் காணப்பட்டது. எனவே இத்தகைய சூழலில் சமுதாயக் கூட்டுணர்வானது வளர்த்தெடுக்கப்பட முடியாத ஒன்றாகக் காணப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் நாட்டு உணர்வும் மக்களிடையே காணப்பட்டது. நூற்றுக்கணக்கான நாடுகள் காணப்பட்ட நிலையில் நாட்டின் தலைவன் குடிமக்களின் உணர்ச்சி பூர்வமான ஆதரவினைப் பெற்றவனாகக் காணப்பட்டான். முடி மன்னரின் இராசதானியானது குடிகளைப் பொருத்தவரையில் மிகத் தொலைவில் காணப்பட்டது. முடிமன்னராலும் வரையறையான நிர்வாக ஒழுங்குகளையும் எல்லைகளையும் கொண்;ட இராச்சியங்களை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் எழுச்சி பெற்ற பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

புதிய சிந்தனைகளின் மூலமாக முடியாட்சி தொடர்பான கோட்பாடுகள் அழுத்தம் பெற்றன. இக்காலத்தில் அரசனுக்கும் குடிகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்புகள், கடமைகள் என்பன அவற்றில் வலியுறுத்தப்பட்டன. அர்த்த சாத்திரம், தர்மசாத்திரம் என்பவற்றிலுள்ள சட்டத்தின் சாயல்கள் பல்லவர் காலத்தின் அரசியல் நடைமுறையில் பிரதிபலித்தது. இராச்சியம் முழுவதற்கும் உரியதும் மன்னனை நாயகனாகக் கொண்டதுமான பரிபாலன முறையொன்றினைப் பல்லவர்களின் சாசனங்கள் ஆதாரப்படுத்திக் காட்டுகின்றன. நீதி, நிதிப் பரிபாலனம் என்பவற்றை நிலைப்படுத்துவது மன்னனின் கடமை என வலியுறுத்தப்பட்டது. இதற்கான சிறந்த ஆதாரமாக சிலப்பதிகாரத்தினை எடுத்துக்காட்ட முடியும்.

இயற்கை எல்லைகளைக் கொண்ட நாடுகளை இராச்சியமாக இணைத்துக் கொள்வதற்கு புதிய சிந்தனைகளும் கோட்பாடுகளும் ஏதுவாயிருந்தன. நாட்டுத் தலைவனாகிய கோன் முடிமன்னனுக்குப் பணிந்து, அவனோடு இணைந்து தனது நலன்களைக் காத்துச் செயற்படுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவாகியது.

பல்லவர்கள் புரிந்த போர்கள் பெரும்பான்மையும் அயல்நாட்டு மன்னர்களுக்கு எதிரானவையாகக் காணப்பட்டன. பெரும் வலிமை கொண்ட பகைவர்களை எதிர்த்துப் போர் புரிந்த பல்லவ அரசர்கள் நீண்ட காலங்களுக்குப் போர்களைப் புரிந்துள்ளனர்.

சமய, பண்பாட்டு நிலைகளில் ஏற்பட்ட புதிய பல மாற்றங்களும் கூட பல்லவர்கள் ஆட்சியில் முடியாட்சியும் இராச்சியமும் விருத்தி பெறுவதற்குத் துணை புரிந்தன. பிரமதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம், நகரம் எனும் அமைப்புக்களும் இக்காலத்திலே தோற்றம் பெற்றன. இவை மன்னரின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டவையாகும். செல்வமும் செல்வாக்கும் பலமும் கொண்ட இவ்வமைப்புக்கள் மன்னரின் செல்வாக்கும் அதிகாரமும் மேலோங்குவதற்கு ஏதுவாயிருந்தன. அதனை நன்குணர்ந்த மன்னர்கள் அவற்றை அமைத்துக் கொள்வதில் ஆர்வமுடன் செயற்பட்டனர். இதனை ஆதாரப்படுத்துவனவாக,

எண்ணிறைந்த பிரமதேயமும்

எண்ணிறைந்த தேவதானமும்

எண்ணிறைந்த பள்ளிச் சந்தமும்

எத்திசையு மினிதியற்றி….”

எனும் தொடர்கள் சின்னமனூர் சாசனத்திலே காணப்படுகின்றன.

நிர்வாக முறை

பல்லவர் ஆட்சியின் நிர்வாக முறையில் கோட்டம், நாடு, கிராம நிர்வாகம், கோயில் நிர்வாகம், கடிகை, வித்யா ஸ்தானங்கள் போன்ற கல்வி நிர்வாகம், நாட்டின் முக்கிய வருவாயை ஈட்டித்தரும் விவசாயம், அதைச் சார்ந்த நில அளவை,வரி விதிப்பு, ஏரி, குளங்கள், கால்வாய் போன்ற பாசன அமைப்பு, வருவாய்த்துறை, படை போன்ற பல்வேறு நிர்வாக முறைகள் அனைத்தும் செவ்வனே செய்யப்பட்டிருந்தன.

இவர்களின் தொண்டை மண்டலமானது, கோட்டம், நாடு, ஊர் எனும் அமைப்புக்களாகப் பிரிக்கப்பட்டுக் காணப்பட்டது. கோட்டம் எனும் பிரிவு தொண்டை நாட்டில் பெருவழக்கில் காணப்பட்டது. கோட்டம் என்பதன் உற்பத்தி மிகவும் புராதனமானதாகும். அது பல்லவரின் ஆட்சிக்கு முற்பட்டதென கூறுவாரும் உளர்.புழல் கோட்டம்,ஈக்காட்டுக் கோட்டம், மணவிற் கோட்டம், செங்காட்டுக் கோட்டம், பையூர்க் கோட்டம், எயில் கோட்டம், தாமல் கோட்டம், ஊற்றுக்காட்டுக் கோட்டம், களத்துர்க் கோட்டம், செம்பூர்க் கோட்டம், ஆம்பூர்க் கோட்டம், வெண்குன்றக் கோட்டம், பலகுன்றக் கோட்டம், இலங்காட்டுக் கோட்டம், கலியூர்க் கோட்டம், செங்கரைக் கோட்டம், படுவூர்க் கோட்டம், கடிகூர்க் கோட்டம், செந்திருக்கைக் கோட்டம், குன்றவட்டான கோட்டம், வேங்கடக்கோட்டம், வேலூர்க்கோட்டம், சேத்துர்க் கோட்டம், புலியூர்க்கோட்டம் எனும் இருபத்து நான்கு கோட்டங்கள் தொண்டை நாட்டில் காணப்பட்டதாகக் குறிப்பிடுவர். அதனை ஒத்த பிரிவே சோழ, பாண்டியர் காலங்களில் கூற்றம் என அழைக்கப்பட்டது. கோட்டம் எனும் பிரிவில் நாடு எனும் பிரிவுகள் சில அடங்கிக் காணப்பட்டன.

நாடு என்ற பிரிவுகள் தமிழகம் முழுவதிலும் அமைந்திருந்தன. அவை மிகவும் பழமையானவையாகக் காணப்பட்டன. இராச்சியங்கள் தோற்றம் பெறுவதற்கு முற்பட்ட காலங்களில் உருவானப் பிரிவுகளே நாடுகள் எனப்படுகின்றன. இதன்படி பல எண்ணிக்கையிலான நாடுகள் தமிழகத்திலே இக்காலத்தில் காணப்பட்டன. இவற்றின் எல்லைகள் ஆறு, சிற்றாறு, ஓடை, குளம், கால்வாய், வனம், மலையடிவாரம் முதலியவற்றினை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்யப்பட்டிருந்தன.

ஆட்சி பரிபாலனம்

நாட்டின் தலைவன் கோஎனவும் கோன்எனவும் அழைக்கப்பட்டான். அத்துடன் வேளாண்மை விருத்தியடைந்திருந்த நாடுகளில் உழவர்களைக் கொண்ட மன்றம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. நாட்டின் பரிபாலனம் தொடர்பான பொது விடயங்களை அம்மனற்ங்கள் கவனித்தன. அவற்றின் ஆளும் கணத்தாரை நாட்டார்என அழைத்தனர்.

முடியாட்சி முறையும் இராச்சியங்களும் அபிவிருத்தியடைந்த காலத்தில் நாடுகளின் மரபுவழியான பரிபாலன முறையிலே சில மாற்றங்கள் ஏற்பட்டன. பரம்பரை அடிப்படையில் அதிகாரம் செலுத்திய கோன்எனும் நாட்டுத் தலைவர்கள் இராச்சிய பரிபாலனத்திலே பதவிகளைப் பெற்று அரசனுக்கு அனுசரனையான அதிகாரிகளாயினர். அவர்களுக்கு நிலமானியங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் மரபு வழியாக காணப்பட்ட அதிகாரங்கள் முடிமன்னரின் வசமாக்கப்பட்டது. மேலும் நாட்டில் காணப்பட்ட ஆளும் கணமாகிய நாட்டாருடன் நெருங்கிய தொடர்புகளை மன்னர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.

நாட்டு வழமைகளை அனுசரிப்பதன் மூலமாக நாட்டாரின் சம்மதத்துடன் மன்னர்கள் தங்களின் அதிகாரங்களை நிலைநாட்டிக் கொண்டனர். அத்துடன் மன்னரின் ஆணைகளை நிறைவேற்றுவதில் நாட்டார் ஈடுபாடு கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். நெல்லூர் மாவட்டத்திலுள்ள சாசனமொன்றிலே இதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

பல்லவர்களின் ஆட்சியில் பலமெனக் கருதப்பட்ட விடயங்களாக கீழ்வரும் விடயங்கள் காணப்பட்டன,

         பலம் வாய்ந்த மந்திரி சபை

         கற்றறிந்தோர் நிறைந்த திருஓலக்கம்

         அர்த்த சாத்திரம், மனுதர்மசாத்திரம், வால்மீகி இராமாயணம் மற்றும் சுக்கிர நீதி போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்ட தர்மத்தின் படி ஆட்சி நடத்தியமை.

         அரசனும் மந்திரிகளும் ஒன்றிணைந்து நல்ல புரிதலுடன் செயற்படும் பொழுது செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் வந்து சேரும் என கிருதார்ஜுனியத்தில் கூறியது போல அரசனும் மந்திரிகளும் செயற்பட்டமை. என்பனவாகும்.

அமைச்சர்கள்

ஆமாத்யர், மஹாமாத்ரர் எனும் மந்திரிகள் அரசின் உயர் பதவிகளை வகித்தவர்களாவர். மாத்ரர், கடிகையர், மூல பிரகிருதிகள் ஆகியோர் அடங்கிய குழு மந்திரி மண்டலம் என அழைக்கப்பட்டது. பிரம்ம ஸ்ரீ ராஜன், பிரம்ம வாயு ராஜா, உத்தம சீலன், விடேல் விடுகு, காடு வெட்டி, தமிழ் பேரவையன் என மந்திரிகள் பெயர் பெற்றிருந்தனர்.

சிவஸ்கந்தவர்மன் வெளியிட்ட ஹிரஹதகல்லிப் பட்டயத்தில் ஆமாத்யர் (அமைச்சர்) என்போர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பிற்காலப் பல்லவருள் மகேந்திவர்மனான குணபரன் திருநாவுக்கரசரை அழைத்து வர தன் அமைச்சரை அனுப்பினான் என்பதைப் பெரிய புராணத்தால் அறிய முடிகின்றது. இதன் மூலம் பல்லவர் கால அரசியல் பரப்பில் அமைச்சர்களுக்கு மிக முக்கிய இடம் அளிக்கப்பட்டது என அறியலாம்.

மேலும்,இரண்டாம் நந்திவர்மன் காலத்திலும் பிற்காலத்திலும் பல்லவர் அரசியல் அமைப்பில் அமைச்சர்குழு இருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறியலாம். இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சன் பிரம்மஸ்ரீ ராஜன்எனப்பட்டான். இவன் பிராமணக் குலத்தினைச் சேர்ந்தவனாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாம் நந்திவர்மன் அமைச்சன் நம்பன் இறையூர் உடையான்என்பவராவார். அவர் முன்னோர் பல்லவர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

அடுத்ததாக உத்தமசீலன் - தமிழ்ப் பேரரையன்என்று ஓர் அமைச்சன் பெயர் காணப்படுகிறது. எனவே,‘பிரம்மராஜன்’ (பிரமராயன்), பேரரையன் என்பன அமைச்சர் பெறும் அரசியல் பட்டங்களாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.தென்னவன் பிரமராயன்என்று மாணிக்கவாசகர் அழைக்கப்பட்டமை இவ்விடத்தில் கவனிக்கத்தக்கதாகும். இதனால் பண்டைத் தமிழ் அரசர், தம் அமைச்சருடைய சிறப்பியல்புகளை நோக்கிப் பிரமராயன், பேரரசன்என்று பட்டங்களை வழங்கிய முறையைப் பின்பற்றியே பல்லவரும் நடந்து வந்தனர் என்பது நன்கு விளங்குகின்றது.  உத்தம சீலன்”,“நம்பன்என்னும் அமைச்சர்கள்அரசருக்கு ஆலோசனையாளராகவும் இருந்தனர் என்பது வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டின் மூலம் அறியலாம்.

இத்தகைய மந்திரிகள் நிர்வாகத்தைக் கவனிப்பது மட்டுமன்றி மன்னன் கட்டளைப்படி அவன் ஏற்படுத்தும் தான தர்மங்களை நிறைவேற்றுவது, வெளிநாட்டுக் கொள்கைகளிலும் பிற அரசர்களின் வலிமை போன்றவற்றை ஆராய்ந்து முடிவெடுப்பது போன்ற காரியங்களிலும் சிறந்திருந்தனர்.

பொதுவாக பல்லவர்களினதும் பாண்டியர்களினதும் அரசியற் கோட்பாடுகளையும், இலட்சியங்களையும் அவர்களின் பட்டயங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம். குறிப்பாக பல்லவர்களின் செப்பேடுகள் சமஸ்கிருத மொழியிலும், தமிழிலும் எழுதப்பட்டுக் காணப்படும். தமிழ்ப் பகுதியைப் பொருத்தவரையில், அது மன்னனால் வழங்கப்பட்ட தானம் பற்றிய செய்திகளைக் கொண்டதாகவும் சமஸ்கிருதப் பகுதி வம்ச உற்பத்தி, வம்சாவளி என்பன பற்றியதாகவும் காணப்பட்டது. அது அமைப்பில் பிரசஸ்தி போல அமைந்துக் காணப்படும்.

பட்டாபிஷேகம்

பல்லவர்கள் அஸ்வத்தாமனின் வழி வந்த பிரம்ம சத்திரியர்கள் என வரலாறுகள் குறிப்பிடுகின்றன. அது போலவே ஆரம்பகாலப் பல்லவ மன்னர்கள் வைதீக இலக்கியங்களிலே குறிப்பிடப்பட்ட சடங்குகளையும் வேள்விகளையும் தம் ஆட்சியின் ஸ்திரத்தன்மையினை நோக்காகக் கொண்டு விமரிசையாக நடத்தினர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

பல்லவர்களைப் பொருத்தவரையில் ஆட்சியுரிமை பரம்பரை வழியானது. தந்தைக்குப் பின் அரசுரிமை மூத்த மகனுக்குரியது எனும் அடிப்படையில் ஆட்சி நடைபெற்றது. இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறந்தப் பின்னர் நாட்டிலே அரசியல் நெருக்கடி ஒன்று உருவாகியது. இத்தகைய தருணத்திலே காஞ்சிபுரத்துக் கடிகையாரும் நகரத்தாரும் உயரதிகாரிகளும் பல்லவ வம்சத்தின் கிளை மரபினை சேர்ந்த ஹிரணியவர்மனிடம் சென்று முறைபாடு செய்து, அவனுடைய இளைய மகனை அழைத்துச் சென்று அரசனாக முடிசூட்டினார்கள். வேத விதிப்படி அபிஷேகம் செய்யப்பட்ட ஒருவனே அரசனாகி நாட்டை ஆள முடியுமென்று மனுஸ்மிருதி போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்கு இணங்க பல்லவர்கள் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின்பே அரசனொருவனுக்குரிய அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டனர். இளவரசன் ஒருவனை அபிஷேகஞ் செய்யுமிடத்து அவனுக்கு அபிஷேக நாமம் என்னும் பட்டப்பெயரைச் சூட்டுவது வழக்கமாகக் காணப்பட்டது. உதாரணமாக பெருங்கோயில்களின் நிர்மாணகாரனாகிய இராஜசிம்மன் நரசிம்ம வர்மன்எனும் பட்டப்பெயரை சூட்டிக் கொண்டான். பின்னர் ஹிரண்யவர்மனின் மகனை காஞ்சிபுரத்திலே அரசனாக்கிய பொழுது அவனுக்கு நந்திவர்மன்எனும் பட்டப்பெயரைச் சூட்டினர்.

மேலும்,பல்லவ மன்னர்கள் தங்களை சக்கரவர்த்திகளாகவே கருதினர். இதற்கமைவாக தத்தம் பெயர்களோடு மகாராஜாதி ராஜ, தர்ம மகாராஜ, மகாராஜ எனும் பட்டப்பெயர்களையும் இணைத்துக் கெர்ணடனர். இத்தகைய விருதுப் பெயர்களைச் சூடிக் கொள்வது மகேந்திரவர்மனின் காலம் தொடக்கம் நடைமுறையில் காணப்பட்டது. அரசனொருவனின் குணநலன்கள், ஆற்றல், வீரம், சாதனைகள் என்பனவற்றினைப் புலப்படுத்தும் வகையில் அவர்களது விருதுப் பெயர்கள் அமைந்துக் காணப்பட்டன.

உதாரணம் :- குணபரன், சத்துருமல்லன், சைத்யாகாரி, லக்ஷிதன், சித்திரக்காரப்புலி, மத்தவிலாசன், சங்கீர்ண ஜாதி, லலிதாங்குரன் என்பன மகேந்நிர வர்மனுக்குரிய விருதுப் பெயர்களாகும்.

காளையின் உருவத்தைப் பல்லவர்கள் தத்தமது அரச சின்னமாகக் கொண்டிருந்தனர். வலதுபுறம் நோக்கி அமர்ந்த வடிவிலான காளையின் வடிவம் பல்லவர்களின் ஆவணங்களிலும், நாணயங்களிலும், கொடிகளிலும் காணப்பட்டன. எனினும் படைத்தளங்களிலே தங்கியிருந்த வேளைகளில் பல்லவரர்கள் வெளியிட்ட பட்டயங்களில் சிம்ம உருவம் பொறிக்கப்பட்டுக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மன்னர்கள் உலா சென்ற சமயங்களிலும் போருக்குச் சென்ற சமயங்களிலும் விடைக்கொடியை ஏந்தி சென்றதாகக் குறிப்பிடப்படுகின்றது.

எடுத்துக்காட்டு :- விடை வேற்கொடி வேற்படை முன் உயர்த்த…” என நந்திக் கலம்பகம் குறிப்பிடுகின்றது.

அரச பணியாளர்கள்

பல்லவர் காலத்தில் அரச பணிகளுக்காக அமர்த்தப்படுபவர்கள் அதற்கு உரித்தான தகுதியினை உடையவர்களாகக் காணப்படுகின்ற மாத்திரத்திலேயே பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி அமைச்சர்களுக்கான தகுதி பின்வருமாறு எதிர்ப்பார்க்கப்பட்டது. அதாவது, மனுதர்ம சாஸ்த்திரத்தில் கூறப்பட்டிருப்பது போல அமைச்சர்கள் வேத இலக்கியங்களை படித்தவராக இருத்தல் வேண்டும் எனப்பட்டது. அத்துடன் அறிவுகூர்மையுடையோராக, பேராயுதங்களைக் கையாள்வதில் திறமை படைத்தவர்களாக மற்றும் நற்குடியில் பிறந்தவர்களாகவும் காணப்படுதல் அவசியமாக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் நந்தி வர்மனைஅரசனாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் மந்திரிகள் அரசனை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும் என வால்மீகி கூறுவதைப் போல அமைச்சரவையானது மந்திரி மண்டலமாகவும் செயற்பட்டமை நோக்கத்தக்கது.

பல்லவர் காலத்திலே முடிமன்னர்களின் அதிகாரங்களும் ஆதிக்கமும் நாட்டு வழமைகளுக்கு ஏற்ப அமையப்பெற்றனவாகும். தமிழகத்திலே ஆதிகாலம் முதலாக மக்கள் ஒன்று கூடி தங்கள் விவகாரங்களை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வழமை காணப்பட்டது. காலப்போக்கிலே ஊர்கள் தோறும் பொது விவகாரங்கள் பற்றி ஆராயும் பரிபாலனம் புரியும் சபைகள் உருவாகின. அவற்றை ஊர் என்றும் குறிப்பிடுவது வழக்கமாகக் காணப்பட்டது. ஊர்கள் சமூக அமைப்பின் தன்மைகளுக்கு ஏற்ப வேறுபட்டிருந்தன. பல்லவர் காலத்தின் மத்திய பகுதியில் அவற்றை ஊர், பிரமதேயம், நகரம் என மூன்று வகைகளாக பாகுபடுத்தப்பட்டு நோக்கப்பட்டது.ஒவ்வொரு நாட்டுப் பிரிவிலும் இம்மூன்று வகையான ஊர்கள் காணப்பட்டன. நிலக்கிழார்களே ஊர் சபையின் ஆளும் கணத்தில் உறுப்பினர்களாகக் காணப்பட்டனர்.

வணிகர் கணங்கள் அதிகாரம் பெற்றிருந்த ஊர்கள் நகரம் எனும் பெயரால் வழங்கப்பட்டன. இவர்கள் அரசிடமிருந்து குறிப்பிட்;ட ஒரு தலத்தினையும் குறிப்பிட்;டதோர் மக்கள் தொகையினரையும் ஆட்சி புரிவதற்காகப் பெற்றிருந்தனர். இந்நடைமுறையில் பிரமதேயங்களைப் போலன்றி நகரங்கள் குடியானவர்களிடமிருந்து இறை கடமைகளைப் பெற்று அவற்றினை அரசிற்கு ஒப்படைக்கும் முக்கியப் பணியினை ஆற்றி வந்தன.

பல்லவ வேந்தர் நல்ல உடற்கட்டு உடையவர்கள்  உயரமானவர்கள் மணிமுடி தரித்த மன்னர்கள் என்னும் விவரங்கள் மாமல்லபுரத்தில் உள்ள உருவச் சிலைகளைக் கொண்டு நன்கறியலாம். மூன்றாம் சிம்மவர்மன் சிம்ம விஷ்ணு முதலிய பல்லவ அரசர் அனைவரும் வடமொழிப் புலவர்களாக இருந்தவர்கள்.  மூன்றாம் நந்திவர்மன், மூன்றாம் சிம்மவர்மன், அபராசிதவர்மன் என்போர் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கினர். இராஜ சிம்மன் சைவ சித்தாந்தத்திற் சிறந்தவனாகக் காணப்பட்டான்.  பல்லவ அரச மாதேவியாரும் நிரம்பப் படித்தவர்களாகவே விளங்கினர். அத்துடன் ஒழுக்கம் மிக்கவர்கள் என்பது சாருதேவி, ரங்கபதாகை, தர்ம மகாதேவி, சங்கா, மாறம்பாவையார், பிருதிவீ மாணிக்கம் முதலிய பெண்மணிகள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளால் நன்கறியலாம்.

பல்லவர் காலத்தின் அரசவையில் பணியாற்றிய பணியாளர்களுள் முக்கியமானவர்கள் தொடர்பாக நோக்குவோமெனில்,

·  அரண்மனைப் பொற்கொல்லர் - அரண்மனைக்கு வேண்டிய அணிகலன்களைச் செய்ததோடு செப்புப்பட்டயங்களில் அரசர் ஆணைகளைப் பொறித்துவந்தவர் ஆவார்.

·  மாதேவியாகிய அரசிக்கு அணி செய்த பொற்கொல்லர் - இவர் மாதேவி பெருந்தட்டார் என்று பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். இப்பொற்கொல்லர் தம் மைந்தரும் பெயரரும் அரண்மனைப் பொற்கொல்லராகவே இருந்துவந்தனர் என்று பட்டயம்பகர்கின்றது.

·  அரசனுக்கு அணிகள் முதலியன செய்து வந்த பொற்கொல்லன் - அரசர் விருதுப்பெயருடன் பெருந்தட்டான்என சேர்த்து வழங்கப்பட்டான்.

·  பொற்கொல்லர் அல்லாமல் செப்புப் பட்டயங்களைத் தீட்டப்பட்டய எழுத்தாளர் என்பவரும் இருந்தனர். இவர்களது தொழிலும் வழிவழி வந்ததாகும்.

·  அரசர் மெய்ப்புகழை நாளும் பாடும் புலவர் - இவர்கள் பல்லவர் அரண்மனையில் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கவிகளைப் பாடியுள்ளனர். இத்தகைய புலவர் காரணிகர்எனப்பட்டனர்.

உதாரணம் :-உதயேந்திரப் பட்டயத்தில் அரசனது மெய்ப்புகழை வரைந்த புலவன், மேதாவிகள் மரபில் வந்தவனும் புகழ்பெற்ற சந்திரதேவன்மகனுமான பரமேசுவரன்எனப்பட்டவன்.

அறங்கூர் அவையம்

பல்லவப் பெருநகரங்களில் அறங்கூர் அவையங்கள் பெருவாரியாகக் காணப்பட்டன. அவை அதிகரணங்கள்எனும் பெயரால் அழைக்கப்பட்டன என்பது மகேந்திரனின் மத்தவிலாசப் பிரகசனத்தால் அறிய முடிகின்றது. அறங்கூர் அவையத்துத் தலைவர் அதிகரண போசகர்எனப்பட்டார்.

அதிகரணம் என்பது பெரிய அறங்கூர் அவையாகும். கரணம் என்பது சிற்றூரில் இருந்த அறங்கூர் அவையாகும். கரண அலுவலாளர் (தலைவர்), அதிகாரிகள் எனப்பட்டோர் காணப்பட்டனர். சிற்றுர்களில் சான்றோர் அறங்கூர் அவையத்தலைவராக இருந்துள்ளனர். மூன்றாம் நந்திவர்மனின் காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் ஊரவை இருந்தது. அது வழக்கை விசாரித்து முடிவு கூறியதாகப் பெரியபுராணத்தில் குறிப்பிடப்படுகின்றமை இதற்கு தக்க சான்றாதாரமாக அமைகின்றது. வழக்கில் முடிவுகூற மூன்று சான்றுகள் தேவை: அவை:

01.       ஆட்சி

02.       ஆவணம்

03.       அயலார் காட்சி என்பனவாகும்.

இவற்றுள் ஆட்சி என்பது நீண்ட காலமாகக் கையாண்டு வரும் ஒழுக்கமாகும். ஆவணம் என்பது வழக்கை முடிவு செய்ய உதவும் சுவடி, ஒலை முதலிய எழுத்துச் சீட்டுகளைக் குறித்தது. அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் கூறுவதாகும். அந்தந்த ஊரார் கையெழுத்துகளையும் கை ஒப்பங்களையும் தனியாக ஊர் பொது அரசாங்க அறச்சாலைப் பாதுகாப்பில் வைக்கும் வழக்கம் பல்லவர் காலத்தில் இருந்தது. சிற்றுக்களில் இருந்த அறங்கூர் அவைய அலுவலர் காரணத்தான்என அழைக்கப்பட்டான். பத்திரத்தில் சாட்சிகளாகக் கை ஒப்பமிட்டவர்கள்மேல் எழுத்திட்டவர்எனப்பட்டனர்.

இத்தகைய அறங்கூர் அவையங்களில் கைக்கூலி(லஞ்சம்) தாண்டவமாடியது என்பதை மகேந்திரவர்மனே தான் வரைந்துள்ள மத்தவிலாசத்தில் குறிப்பிட்டுள்ளமை இவ்விடத்தில் கவனிக்கத்தக்கதோர் விடயமாகும். இக்காலத்தில் உள்ளது போல் உயர்நீதி மன்றம் (High Court) அக்காலத்திலும் இருந்தது. அது தருமாசனம்எனப்பட்டது. இது பல்லவப் பேரரசின் பொது மன்றமாகும். அது அரசனது நேரான மேற்பார்வையில் காணப்பட்டது. அதிகரணம்என்பது குற்ற வழக்குகளை (Criminal) விசாரிக்கும் மன்றம் எனவும்,“தருமாசனம்என்பது பிற வழக்குகளை (Civil) விசாரிக்கும் மன்றம் எனவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிள அளவை

நில அளவை முறையில் சிறந்து விளங்கியோர் சோழர்களாவர். அத்தகையோருக்கே வழிகாட்டியவர்கள் பல்லவ மன்னர்கள் என்றால் அது மிகையாகாது. எனவே பல்லவர் காலத்தில் நிலங்கள் முறையாகப் பிரிக்கப்பட்டு அவை தரம் பிரிக்கப்பட்டும் காணப்பட்டன. வரி வசூல்கள் நிலத்தின் தன்மையைப் பொருத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு நிலத்தை கோயிலுக்கோ அல்லது தனிப்பட்டவருக்கோ தானமாகக் கொடுக்கும் போது, அந்த தானம் பற்றிய ஆவணம் கோன் ஓலைஎன அழைக்கப்பட்டது. இவ்வாவணம் அந்த நிலம் அமையப்பெற்றுள்ள நாட்டார் சபைக்கு அனுப்பி வைக்கப்படும். நாட்டார் சபையே மன்னன் அளித்த தானத்தை அளந்து, எல்லை வகுத்து, தானத்தை நிறைவேற்ற வேண்டும் எனும் நடைமுறை காணப்பட்டது. அப்போது நிலைக்களத்தார், அதிகாரர், வாயில் கேட்போர் போன்ற அதிகாரிகள் உடனிருப்பதுண்டு. அந்நிலத்துக்கு எல்லை வகுத்து கல்லும் கள்ளியும் நாட்டி வேலி அமைத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முறைமை தொடர்பாக காசக்குடி செப்பேடு குறிப்பிடுகின்றது.

மிராசுதாரர் நிலங்களில் பெரும்பகுதி பயல் நிலம்என்றும் அரசர்க்குரிய வரியைச் செலுத்த என்றும் விடப்பட்ட நிலப்பகுதி அடை நிலம்என்றும் குறிப்பிடப்பட்டன. பயல் நில வருவாயில் பாதியை நிலத்தவர் பெற்றனர். மற்றப் பகுதி பயிரிட்டோர் பெற்றனர். அரசாங்க நிலங்களைப் பயிரிட்ட குடியானவர் சிலர் இருந்தனர். அவர்களது பயிரிடும் உரிமை அரசாங்கத்தாரால் தரப்பட்டு வந்தது. அந்த உரிமை அடிக்கடி மாற்றப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

போர், போர்ப்படைகள்

ஒரு அரசியல் வரலாற்றினைப் பற்றி பேசும் பொழுது முக்கியம் பெறுவது போரும் அப்போருக்கானப் படைகளுமேயாகும். அந்தவகையில், பல்லவர்கள் போரில் வன்மை பெற்றவர்களாக திகழ்ந்தனர். இடைக்காலப் பல்லவர் காலத்தில் வடபகுதியில் மேன் மதுரை, தசனபுரம் முதலிய இடங்களுக்கும் சென்று போர் நடத்தி வெற்றி பெற்றதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. பிற்காலப் பல்லவர் காலத்தில் காணப்பட்ட போர்ப்படைகள் கடம்பரை நிலைகுலையச் செய்தன என்றும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. புகழ் பெற்ற சாளுக்கியரை அடக்கியதோடு தமிழ் வேந்தரைப் பின்னடையச் செய்துள்ளனர் எனும் வரலாற்றுச் சான்றுகளும் பல்லவர்களின் போர் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களே எனலாம்.

குறிப்பாக பல்லவர்களிடம் பல வகையான போர்ப்படைகள் காணப்பட்டன என்பதற்கு அக்காலத்து பட்டயங்களும், செப்பேடுகளும் மற்றும் சில சான்றுகளுமே துணை புரிகின்றன. அந்த வகையில், தேர்ப்படை, பானைப்படை, குதிரைப்படை, காலாட்படை மற்றும் கடற்படை என்பன காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.

நந்திக் கலம்பகம் மற்றும் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பங்களின் அடிப்படையில் தேர்ப்படை காணப்பட்டது என அறிய முடிகின்றது. அத்துடன் பல்;லவன் இராஜசிம்மன் கஜசாஸ்த்திரம் அறிந்தவன் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் சிறந்த துறைமுகப்பட்டினமாகிய மாமல்லபுரத்தில் பழைய காலத்திலிருந்தே மேனாட்டுக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தமைக்;கு இலக்கியங்களே சான்றாகும். வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பங்கள் வாயிலாகப் போர்ப்பரிகள் பல இருந்தன என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

மேலும் சிறந்த சேனைத் தலைவர்கள் பல்லவர் காலத்தில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன் என்னும் தானைத்தலைவன் சிறந்திருந்தான் என்றும், நரசிம்மவர்மன் காலத்தில் வாதாவி கொண்ட சிறுத்தொண்ட நாயனார் சிறந்த சேனைத் தலைவராக விளங்கினார் எனவும், இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அப்பேரரசனைத் பகைவர் முற்றுகையிலிருந்துகாத்த பெருவீரனான உதய சந்திரன் என்பவன் படைத் தலைவனாக இருந்தான் எனவும், மூன்றாம் நந்திவர்மனிடம் பூதிவிக்கிரம கேசரி என்பவன்தானைத் தலைவனாக இருந்தான் எனவும் இலக்கியங்கள் சான்றுரைக்கின்றன.

பல்லவர்களிடம் யானைப்படைகளும் போரின் நிமித்தம் பயன்படுத்தப்பட்டன என்பதை வரலாற்று சான்றாதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன்படி நரசிம்ம வர்மன் காலத்தில் யானைப்படை இலங்கையை நோக்கி வந்தமையை மகாவம்சமும் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியும் குறிப்பிடுகின்றன. மேலும் சாளுக்கியரான இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியை நோக்கி படையெடுத்து வந்த போது மிகச்சிறந்த யானைப் படையைக் கைப்பற்றினான் எனக் கேந்தூர் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

பல்லவரிடம் காணப்பட்ட கடற்படையும் இளைத்ததாகக் காணப்படவில்லை. இதன்படி,நரசிம்மவர்மன் தன் நண்பனான மானவன்மனுக்கு உதவிபுரியத் தன் கடற்படையை கொடுத்துதவினான் என்றுக் குறிப்பிடப்படுவதிலிருந்து பல்லவர்களின் கடற்படையும் சளைத்ததல்ல என்பது நிரூபனமாகின்றது. நிருபதுங்கவர்மன் எனும் மன்னனின் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவர்களின் கடற்படையை இரவலாகப் பெற்று ஈழத்தின் மீது படையெடுத்த செய்தியும் இலக்கியங்களில் காணப்படுகின்றமை தகுந்த சான்றாதாரமாகும்.

மேலும் காஞ்சி வைகுந்தப் பெருமாள் ஆலயத்தின் சிற்பங்களில் காணப்படும் வீரர்களின் கைகளில் காணப்படும் ஆயுதங்கள், மகிஷாசுர மர்த்தினி சிற்பத்திலுள்ள ஆயுதங்கள் மற்றும் வல்லம் குகையின் வீரனின் கையிலுள்ள ஆயுதம் அதைப் போன்ற சிற்பங்களில் காணப்படும் ஆயுதங்களைக் கொண்டு பல்லவர் கால படைகலன்களின் சிற்பினையும் திறத்தினையும் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

வரிகள்

பல்லவர் கால அரசியல் பற்றியக் கருத்தியலில் முக்கியம் பெறும் விடயம் யாதெனில், வரிக் கொள்கையாகும். இதன்படி,பலவிதமான வரி முறைகள் காணப்பட்டன. அவற்றுள் சில வருமாறு,

01. உப்பளத்தில் உப்பு சேகரிப்பதற்கு வரி

02. நல்லெருது

03. ஈழம்

04. பூட்சி

05. இடைப் பூட்சி

06. பிராமணராசக்காணம்

07. கல்லாணக்காணம்

08. குசக்காணம்

09. தட்டுக்காணம்

10. வசக்காணம்

11. பாறைக்காணம்

12. பட்டிகைக்காணம்

13. தரகு

14. செக்கு வரி

15. தறிக்காணம்

16. பாடம் கழி

17. புதநாழி

18. பட்டிண சேரி

19. திருமுக்காணம்

20. பட்டூர்ச்சாற்று

21. உளையவயப்பள்ளி வட்டு

22. நாட்டு வகை

23. நெய் விலை

24. கட்டிக்காணம்

25. எச்சோறு சோறு மாட்டு

26. நெடும்பறை

27. மன்றுபாடு என்பனவாகும்.

மேலும்,தென்னை மரங்கள் சிறப்பாகப் பிரம்மதேய தேவதானச் சிற்றூர்களில் அரசர் உரிமை பெற்று வரி செலுத்தாது பயிரிடப்பட்டன. இதனால் பிற ஊர்களில் அவற்றைப் பயிரிட விரும்பியோர் அவற்றின் விளைவில் ஒரு பகுதியை அரசர்க்கு வரியாகச் செலுத்தி வந்தனர்.  பிரம்மதேய - தேவதானச் சிற்றுர்களில் இருந்த தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து கள் இறக்குதல் விலக்கப்பட்டிருந்தது. கள் இறக்கியவர் அரசாங்கத்திற்கு வரி செலுத்தி வந்தனர். இம்மரங்களைப் பயிரிட்டவரும் அரசாங்கத்திற்கு ஒரு பகுதி வருவாயை வரியாகச் செலுத்தி வந்தனர்;. வெட்டப்பட்ட மரங்களின் அடிப் பகுதியில் ஒரு பகுதியும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. தென்னை பனை மரங்களுக்கு உரியவர்கள்சாறு இறக்க வரிகட்டினர். பனம்பாகு செய்யவும் வரி கட்டினர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கடைகளில் விற்கப்பட்ட பழைய பாக்கு மரங்களிலும் அரசாங்கம் பங்கு பெற்று வந்தது. கல்லால மரம்பயிரிடச் சிற்றூரார் அரசாங்கத்தினரிடம் உரிமை பெற வேண்டியிருந்தது. அவ்வுரிமைக்குச் சிறு தொகை செலுத்தவேண்டியும் இருந்தது. அதுவேகல்லாணக்காணம்எனப்பட்டது.

அத்துடன், செங்கொடி அதாவது செங்கொடி வேலி அல்லது சித்திர மூலம் என்பது மிகச் சிறந்த மருந்துக்கொடி. இது பல வகை நோய்களையும் ரணங்களையும் போக்கவல்ல ஆற்றல் பெற்றது. இதனைப் பயிரிடுவோர் உரிமை பெற வேண்டும் எனும் சட்டமும் காணப்பட்டது. இதற்குச் செலுத்தப்பட்டவரி செங்கொடிக் காணம்எனப்பட்டது.

அத்துடன் கருசராங் கண்ணிஎன்பதும் சிறந்த பயன்தரும் செடியாகும். அது பல நோய்களை நீக்க வல்லது. இச் செடியைப் பயிரிட அல்லது விற்க உரிமை தரப்பட்டது. அவ்வுரிமை பெறச்செலுத்தப்பட்ட தொகையேகண்ணிட்டுக் காணம்எனப்பட்டது.

அத்துடன் நீலோற்பலம் எனப்படும் குவளைச் செடிகளை நடுவதற்கும் உரிமைபெற வேண்டும்; விற்பதற்கும் அரசினரிடம் உரிமை பெற வேண்டும் எனும் நடைமுறை காணப்பட்டது.  இவை முறையே குவளை நடுவரிஎனவும்,“குவளைக்காணம்எனவும் பெயர் பெற்றன. இக் குவளை மலர் பூசைக்கும்மருந்துகள் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. இங்ஙனமே செங்கழுநீர் நடுவதற்கும் உரிமை பெறவேண்டும் எனும் சட்டம் காணப்பட்டது. பிரம்மதேய - தேவதானச் சிற்றூர்கள் வரி இல்லாமலே இதை நடுவதற்கு உரிமை பெற்றிருந்தன.

மேலும்,பல்லவர் காலத்துக் கடல் வாணிபம் கிழக்கிந்தியத் தீவுகளிலும் சீயம், சீனம் முதலிய நாடுகளிலும் பரவி இருந்தது. அதனால் சீனத்திற்கு உரிய மருக்கொழுந்துதமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பயிரிடப்பட்டது. இதனைப் பயிரிட தேவதான - பிரம்மதேயச் சிற்றுர்கள் உரிமை பெற்றிருந்தன. பிற சிற்றூர்கள் அரசாங்க உரிமை பெற்றே (வரிசெலுத்தியே) பயிரிடவேண்டியவையாகக் காணப்பட்டன.

மேலும் பல்லவர் காலத்தில் காணப்பட்ட பிற வரிகள் தொடர்பாக நோக்குமிடத்து, கால்நடைகளால் பிழைப்பவர்,புரோகிதர், பலவகைக்கொல்லர், வண்ணார், ஆடை விற்போர், ஓடக்காரர், தரகர், செக்கர், ஆடை நெய்பவர், நூல் நூற்பவர், வலைஞர்,பனஞ்சாறு எடுப்போர், நெய் விற்போர், மணவீட்டார் முதலிய பல தொழிலாளரும் பிறரும் அரசாங்கத்திற்குக்குறிப்பிட்டவரி செலுத்தி வந்தனர் என பல்லவர் காலத்துக்குரிய பல பட்டயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிற்றூர்த் தலைவன் சிற்றூர் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று வாழ்ந்தான். அவனுக்கு அவ்வூரார் செலுத்தி வந்த வரி விசக்காணம்அல்லது வியவன் காணம்என அழைக்கப்பட்டது. இவ்வரிகள் அன்றி நெல் விற்பவர், அரிசி முதலிய பலவகைக் கூலவகைகளை விற்போர் குறிப்பிட்ட அளவையுடைய அரிசியோ பிற கூலமோ வரியாகத் கொடுத்துவந்தனர்.

மேலும்,பல்லவர் காலத்தில், செய்திகள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குள் கொண்டு செல்வதற்கென்று வரி காணப்பட்டது. இது திருமுகக் காணம்என அழைக்கப்பட்டது.

கத்தி முதலிய கருவிகளைச் செய்த தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட வரி கத்திக்காணம்எனப்பட்டது. பறையடிப்போர் ஒருவகை வரி செலுத்தி வந்தனர். அது நெடும்பறைஎனக்  குறிப்பிடப்பட்டது. அறுவடைக் காலங்களில் அரசியல் திறையாக நெல்லைப் பெற வந்த அதிகாரிகளுக்கு ஊரார் உணவளித்தல் பல்லவர் கால சமுதாய வழக்கமாகக் காணப்பட்டது. அதற்கென்று ஊராரிடம் பெற்று வந்த சிறுதொகையானது ஒருவகை வரியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் எச்சோறு” (சோறுமாட்டு) எனப்பட்டது.

ஊர் மன்றங்களில் வழக்காளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டம் மன்றுபாடுஎனப்பட்டது. இங்ஙனம் பல்லவர்களின் அரசாட்சியில் பல துறைகளிலும் வந்த வருவாய் அரசாங்கப் பண்டாரத்தை அடையப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலைமை பல்லவர்கால அரசியலில் வருமானத்தினை ஈட்டிக் கொடுத்த மிகப்பெரும் துறையாக விளங்கியது எனலாம்.

கருவூலம்

பல்லவர்களின் பண்டாரம் எனப்படும் கருவூலம் தொடர்பாக நோக்குமிடத்து, பல்லவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் பலம் பெற்றதும் பேரரசாகவும் விளங்கியமைக்கு முக்கிய காரணம் விளங்கிய பல்லவராட்சியின் செல்வ செழிப்பு மிக்கதான சூழலேயாகும். பல்லவ அரசர்கள் வரலாற்றில் கண்ட போர்களையும், பல்லவர் கட்டிய மற்றும் குடைவித்த உலகம் போற்றும் கோயில்களையும் நினைக்கும்பொழுது, அவர்தம் செல்வநிலை நன்னிலையில் இருந்திருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அரசியல் பண்டாரத்தைப் பொறுப்புள்ளவரே காத்து வந்தனர். தண்டன் தோட்டப் பட்டயத்தில்,“குமாரன்என்பவன் பண்டாரத் தலைவன்: அவன் சமயக்கல்வி உடையவன்: அவா அற்றவன்;: நடுநிலையாளன்: சிறந்த ஒழுக்கம் உடையவன்: பகைவர்க்கும் உறவினர்க்கும் ஒரே படித்தானவன் எனத் தெளிவுற விளக்கப்பட்டுள்ளது. இப்பேரரசுக்குரிய பண்டாரத்தலைவன் அன்றி, மாணிக்கப் பண்டாரம் காப்போர் பலர் இருந்தனர். பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணை இடும் அலுவலாளர் கொடுக்கப்பிள்ளைஎன அழைக்கப்பட்டார்.

இலங்கையுடன் ஏற்பட்ட அரசியல் தொடர்புகள்

இவ்வாறாக பல்லவர்கள் தமது ஆட்;சியில் தமிழகத்தில் மட்டுமன்றி ஏனைய அயல் நாடுகளிலும் தமது ஆதிக்கத்தினைச் செலுத்தி வந்துள்ளனர். அந்தவகையில் பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. வாணிபம், மொழி, எழுத்து, சமய வழிபாடுகள், சிற்பம், கட்டடம் எனும் துறைகளிலே குறிப்பிடத்தக்க அளவில் பல்லவர்களின் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது.

தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான மரபு வழியான வாணிபத் தொடர்புகள் பல்லவர் காலத்தில் மேலும் விருத்தி பெற்றிருந்தன. இத்தகைய வாணிபத்தின் மூலமாகவே பல்லவர்களின் ஊடுருவல் பெரும்பாலும் இலங்கையை அடைந்தது. இத்தகைய ஊடுருவல் இவ்விரு அரசுகளுக்குமிடடையில் பல்வேறு நிலைகளில் உறவுகள் பேணப்படுவதற்கு அடித்தளமிட்டது. எனவே கி.பி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளிலேயே பல்லவ அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மிக நெருங்கியவாறான அரசியல் தெடர்பு ஏற்பட்டதெனலாம்.

இலங்கையில் அனுராதபுரத்தில் தமிழ்ப்படைகளின் தலைவனான பொத்தகுட்டனின் செல்வாக்கு மேலோங்கியிருந்த காலத்தில் அரசனின் பகைமையை தேடிக்கொண்ட மானவர்மன் எனும் பிரதானி காஞ்சிபுரத்துக்கு தப்பியோடி பல்லவர்களிடம் புகலிடம் தேடிக்கொண்டான். மாமல்லனாகிய நரசிம்மவர்மனின் ஆதரவுடன் அங்கு வாழ்ந்த காலத்தில் அவன் பல்லவர்களின் படையில் இணைந்து அதில் உயர் பதவியும் பெற்றுக்கொண்டான். இதனால் மாமல்லனின் நல்லுறவினையும் சம்பாதித்துக் கொண்டான்.

இதனை அப்படையாகக் கொண்டு மானவர்மன் இலங்கையில் அரச பதவியினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மாமல்லனிடமிருந்து ஒரு பெரும் போர்ப்படையினைப் பெற்றுக்கொண்டு இலங்கையை வந்தடைந்தான். இதனைக் கண்ணுற்ற அப்போதைய இலங்கை அரசன் தலைமறைவாகினான். எனினும் மானவர்மன் அனுராதபுரத்தினைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக அரசனை தொடர்ந்து சென்றான். அத்தருணத்தில் மாமல்லனின் சுகயீனச் செய்தியினை அறிந்த பல்லவப் படைகள் தமிழகத்தினை நோக்கி திரும்பவே, பொத்தகுட்டன் வெளிப்பட்டு மீண்டும் தன் அரசாட்சியினை இலங்கையில் ஸ்தாபித்துக் கொண்டான். மீண்டும் சிறிது காலத்தின் பின்னர் மானவர்மன் பல்லவப் படைகளைத் திரட்டி வந்து பொத்தகுட்டனை போரில் தோற்கடித்து அனுராதபுரத்தில் ஆட்சியiமைத்தான். எனவே மாகவர்மனின் ஆட்சியுடனேயே இலங்கைக்கும் பல்லவ அரசுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் தொடர்புகள் மேலும் வலுவடைந்ததெனலாம்.

எனவே தொகுத்து நோக்குமிடத்து பல்லவர் காலத்தினைப் பொருத்தவரையில் இது தமிழ் நாட்டின் சிறப்புமிகு ஆட்சியை நடத்திய பேரரசாகவும், அதே வேளை பல்லவர்கள்அரசியலில் திடமானத் தன்மையினை உடையோராகவும் விளங்கியது மட்டுமன்றி, தமிழகத்தில் நெடுங்காலம் ஆட்சி நடத்திய ஆட்சியாளர்ளாகவும் விளங்கினர் எனலாம். சுருங்கக் கூறின், பல்லவர்களின் காலம் இந்து அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலப்பகுதியாக விளங்கியக் காலம் எனலாம். இப்பல்லவர்களின் அரசியல் நுட்பங்களைப் பின்பற்றியே பின்வந்த சோழர்களும் வரலாறு இன்றும் பேசும்படியான ஆட்சியை வழங்கியுள்ளனர் என்றால் அதனை மறுப்பார் எவருமிலர்.

உசாத்துணைகள்

01.          சிறப்பு மலர்,(2007),“பக்தி நெறியும் பண்பட்டுக் கோலங்களும் - ஆய்வரங்கம்”, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

02.          பத்மநாதன். சி., (2005),“இலங்கையில் இந்து கலாசாரம்”, இந்து சமய அலுவல்கள் திணைக்களம் - கொழும்பு – 07.

03.          இராச மாணிக்கனார். மா., (2015),“தமிழக வரலாறும் பண்பாடும்”, சாரதா பதிப்பகம் - சென்னை.

04.          பகவதி. கு., (2005),“காஞ்சிபுரம்”, International Indtitute of Tamil studies – Chennai.

05.          https://ta.wikipedia.org/wiki/பல்லவர்/

06.          https://ta.wikisource.org/wiki/பல்லவர்_வரலாறு/18._பல்லவர்_ஆட்சி/

07.          http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312223.htm

08.          http://tamilansekar.blogspot.com/2016/10/blog-post.html?view=classic