4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

அச்சுறுத்தும் கொரோனா கொடை வள்ளல்கள் - முனைவர் சித்ரா

 

அச்சுறுத்தும் கொரோனா கொடை வள்ளல்கள்

முனைவர் சித்ரா

ஹாங்காங்

 

கொள்வதும் கொடுப்பதுமே மனித இயல்பு. ஆனால் இன்று கொரோனாவை கொள்வதும் கொடுப்பதும் தான் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இத்தகைய கொடை வள்ளல்கள் நமக்கு அவசியமில்லை என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டியநிலையில் உள்ளோம்.

பெங்களூரில், நான்கு வாரங்களுக்கு முன்பு நண்பரின் உறவினர், முதுமையின் காரணமாக உயிரிழக்க நேர்ந்தது. அவர் நண்பரின் தாய் மாமன். அவரது அக்காளின் கணவர் கூட.. அதனால் குடும்பத்தில் அனைவரும் ஈமச் சடங்கில் கலந்து கொள்ள சென்றிருந்தார்கள். அந்த சடங்கில் மிகச்சிலரே கலந்து கொண்ட போதும், உள்ளூர்வாசிகள்வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் என்று 20-30 பேர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யார் கொரோனாவை கொடையாக அளித்தார்கள் என்பது தெரியவில்லை. இறந்தவரின் மனைவிக்கும் (நண்பரின் அக்கா),நண்பருடைய வீட்டில் தம்பிக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. மூவரில், தம்பியின் மனைவியைத் தவிர, மற்ற இருவரும் தடுப்பூசி போட்டிருந்தனர்.பெண்கள் மூவரும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டனர். அன்று ஈமச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். கடவுளின் ஆசியால் மற்றவர்களுக்கு தொற்றுஏற்படவில்லை.

ஆனால் தடுப்பூசி போடாத நண்பரது தம்பிஒரு வாரகாலம் மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது. முதல் மூன்று நாட்கள் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் மிகவும் சாதாரணமாகவே இருந்தார். ஆனால் நான்காம் நாள், தொற்று அதிகரித்து, மூச்சு விட முடியாமல், ஆக்சிஜன் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தார். ரெம்திஸ்விர் மருந்து மூன்று நாட்கள் கொடுக்கப்பட்டது. அவரது மகள்கள் இருவரும் தங்களுடைய தாய் தந்தையை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டனர்.  மேலும்உறவினர்கள் பெரும் உதவி செய்தனர். இடையிலே நண்பரது தம்பி அந்த மருத்துவமனையில் இருப்பதற்கு ஏனோ சங்கடமாக இருக்கிறது என்று கூறியபோது, வேறு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கிறதா என்று தேடி, அது கிடைக்காத காரணத்தால், தொடர்ந்து அதே மருத்துவமனையில்அவர் சிகிச்சை பெற வேண்டி இருந்தது. மருத்துவர்களாக இருக்கும் உறவினர்களின் ஆலோசனையை தொடர்ந்து பெற்று வந்தார்கள்.

இதே காலக்கட்டத்தில், சில நாட்கள் கழித்து, அண்ணனுக்கும்கொரோனா  தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  குடும்பத்தில் பெரும் குழப்பம். நாங்கள் இருப்பதோ வெளிநாட்டில். இங்கிருந்தே பலரிடம் பேசி, வேண்டிய பணிகளை செய்ய வேண்டிய சூழ்நிலை. நண்பரும் நிலைகுலைந்து போனார்.

இதே நேரத்தில், ஹாங்காங்கில் வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் மட்டுமே கொரோனா தொற்று இருந்து வந்த நிலையில்நாங்கள் வசிக்கும் பகுதியில், வேறு  எங்குமே சென்றிராத வெளிநாட்டு பணிப் பெண்ணுக்கும் மற்றும் அவள் பணிசெய்த வீட்டில் அவள் கவனித்துக்கொண்டிருந்த 10 மாத குழந்தைக்கும் புதுவகை தொற்று தாக்கியதை கண்டறிந்தார்கள். அது தெரிந்ததுமே இந்தக் தொற்றை பரவ விடக்கூடாது என்ற பெரும் நோக்கில், அவர்கள் வசித்து வந்த முழு கட்டிடத்திலும், 400 குடும்பத்தினரை இரவோடு இரவாக, மூன்று மணிநேரத்தில், தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். அவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்ற அறிவிப்பும் உடன் இருந்ததால் அனைவரும் அதிர்ந்து போயினர். இதே போன்று, வேறு இரண்டு பகுதிகளிலும் கூட 2 கட்டிடங்களில் உள்ளவர்களையும் தனிமைப்படுத்த அழைத்துச் சென்றது பின்னர் வந்த செய்தி. 

அதில் முதியவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், குழந்தைகள் என்ற அனைத்து தரப்பினரும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானார்கள்.  ஆனால் அரசு அதை பற்றி எதையும் யோசிக்காமல் இந்தப் புது வகைத் தொற்றை தொடக்கத்திலேயேஅழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது என்றே சொல்ல வேண்டும்.

        இச்சமயத்தில்தான், நண்பரது தம்பிஉடல்நிலை மோசமான காரணத்தால்  மருத்துவர்கள் வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். அப்படி மற்றொரு மருத்துவமனையில்  பெரும்பாடுபட்டு படுக்கை வசதியை ஏற்பாடு செய்த பின்னர், இந்த மருத்துவமனையில் இருந்து அடுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாரானார்கள். ஆனால் அந்த அரை மணி நேரமருத்துவ வாகனப் பயணத்தில் மருத்துவமனையை அடையும்போது அவர் உயிருடன் இல்லை. இது நடந்தது வெள்ளியன்று. இது நடந்தது இந்திய நேரம் 4 மணிக்கு ஹாங்காங் நேரம் 6:30. இந்த சம்பவம் நண்பர் குடும்பத்தினரை கதிகலங்க வைத்தது. 

என் நண்பர் உடனே ஊருக்கு செல்ல ஏற்பாடுகளை செய்யத் துவங்கினார். கொரோனா பரிசோதனை செய்து, உடனுக்குடன் முடிவுகளை பெற ஒரு தனியார் மருத்துவமனையில் சான்றிதழைப் பெற்று, அவர் வீடு திரும்ப பதினோரு மணி ஆகிவிட்டது. விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டை பற்றி பார்த்தபோது, மறுநாள் இரவு ஹாங்காங்கில் இருந்து  பாங்காக் வழியாக துபாய் சென்று அங்கிருந்து பெங்களூருக்கு செல்லும் விமானத் திட்டம் இருந்தது. மொத்தம் 35 மணி நேர பயணமாக இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் நண்பரால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. இச்சமயத்தில் பெங்களூரில் இருந்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபோது, கொரோனாவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் வராமல் இருப்பது நல்லது என்றும்,35 மணி நேரத்தில் வழியிலே யாரிடமேனும் கொரோனா கொடையை பெற்று வருதலும் சாத்தியம் என்பதாலும் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது என்ற ஆலோசனையை  பெற்றோம்.

கொரோனா கொடை வள்ளல்களை முடக்கும்  வகையிலும், ஹாங்காங்கில் கொரோனாவின் பாதிப்பை குறைக்க வேண்டியும், மூன்றாம் நாளே துங் சுங் பகுதியில்கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்தப் பணிப்பெண் சென்ற இடங்களுக்குச் சென்ற அனைவரும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று மூன்று நாட்கள் கெடு கொடுக்கப்பட்டது.இந்தப் பகுதியில் வாழும் கிட்டத்தட்ட  50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும் சூழ்நிலை ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் நீண்டவரிசையில் நின்று, அதை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தார்கள். மனதிலே பெரும் துக்கம் இருந்த போதும், சனிக்கிழமை நண்பரின் குடும்பத்தாரும்பரிசோதித்துக் கொண்டார்கள்.

தம்பியின் இறுதிச் சடங்கு மிகவும் வருத்தத்துடன் நடந்தது என்றே சொல்ல வேண்டும். கொரோனா கொடை யாருக்கும் தரக் கூடாது என்ற நோக்கத்தில், மற்றுமொருமுறை தவறு செய்யக்கூடாது என்ற எண்ணத்திலும், வெளியூர்களிலிருந்து உறவினர் யாரையும் வர வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார்கள். அதனால் நண்பரின் அக்காவைத்தவிர, சொந்த ஊரில் இருந்த அவருடைய தங்கையும், அண்ணன் மருத்துவமனையில் இருந்ததால் அவரும், என் நண்பர், ஹாங்காங்கில் இருந்ததால் அவரும் என்று உடன் பிறந்தோர் யாருமே அதில் பங்கு கொள்ள முடியாமல் தவித்துப் போயினர்.

பின்னர் நண்பரது அண்ணன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், ஒரு வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,    சிகிச்சைக்குப் பின்  குணமடைந்து வீடு திரும்ப முடிந்தது.  அவருடன் தினமும் கைபேசியில் தொடர்புகொண்டு தைரியம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு பணிபுரிய வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஹாங்காங்கில் வீடுகளில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் அனைவரையும் ஹாங்காங் அரசு பரிசோதித்துக்கொள்ள ஆணையிட்டது. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அத்தகைய பணியாளர்கள் அனைவரும் ஒரே வாரத்தில் தங்களை பரிசோதித்துக் கொண்டனர்.

இதற்கிடையில் திடீரென தனிமைப்படுத்தப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புது இடத்தில் ஏற்பட்ட சங்கங்களின் காரணமாக அரசிடம் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்த கோரிக்கை வைத்தனர். ஆயினும், பத்து நாட்கள் கழித்து அனைவரையும் பரிசோதித்த பின்னர் தான்,அரசு அவர்களை அவர்களது வீடுகளுக்கு செல்ல அனுமதித்தது. இதன் மூலம் நாம் இந்த கொரோனாவை வழிக்கு கொண்டுவர, நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொண்டு, தொற்று ஏற்பட்ட ஆரம்ப நாட்களிலேயே, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொண்டு, மற்றவருக்கு அது போகாமல் தடுப்பது தலையாயது என்பதை உணரலாம். ஒவ்வொரு நாடும் அதற்கான முயற்சிகளை எப்படி எடுக்கிறது என்பதையும் நாம் காணமுடிகிறது.