4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

இஸ்லாமிய பண்பாட்டில் கட்டடக்கலையும் மரபு மாற்றமும் - KMF. Farhana

 

இஸ்லாமிய பண்பாட்டில் கட்டடக்கலையும் மரபு மாற்றமும்

(மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் மாஞ்சோலைக்கிராமத்தில் ஹிழ்ரியா ஜும்மா பள்ளிவாயலை மையமாகக்கொண்ட ஓர் ஆய்வு)

 

KMF. Farhana,

Divisional Secretariat – Koralaipattu West - Oddamavadi 

Email: fathimafarhana1994fff@gmail.com T.P 0770337804,

ஆய்வு முறையில்

இவ்வாய்வு பண்புசார் ஆய்வாக காணப்படுகின்றது அதாவது வரலாற்றுரீதியான தகவல்களைப் பெற்றுக்கொண்டு அதனூடாக கட்டடக்கலை சார் ஒப்பீட்டு ஆய்வாக இடம்பெறுகின்றது. 

ஆய்வின்கருதுகோள்

பாரம்பரிய மரபியல் சார்ந்த கட்டிடக்கலை புதிய மரபு சார்ந்த விடயங்களை உள்வாங்கிக் கொண்டு கட்டடக்கலை மரபியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. 

ஆய்வுப்பிரச்சினை

இஸ்லாமிய பண்பாட்டு மரபிற்கென்று தனித்துவமான கட்டட மரபு காணப்படுகின்றது. அது ஒரு நீண்ட வரலாhற்றுப்பின்புலத்தில் வருகின்றது. ஆனால் காலப்போக்கில் பிற பண்பாட்டு தாக்கம் காரணமாக இஸ்லாமிய பண்பாட்டிலும் கட்டிடக்கலை மரபிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆய்வின் எல்லை

ஓட்டமாவடிப்பிரதேசத்தின் மாஞ்சோலைக்கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹில்றியா ஜும்மா பள்ளிவாயலை எல்லையாகக்கொண்ட பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

ஆய்வு நோக்கம்

·       பழைய கட்டிடக்கலை மரபில் இருந்து புதிய மரபு கட்டிடத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை இனங்காணல்.

·       பாரம்பரிய மரபு அழிக்கப்பட்டு பிறபண்;பாடுகளுடன் இணைந்த கட்டடக்கலை நுட்பத்தை வெளிக்காட்டல்.

·       புதிய மரபியல் மாற்றத்தை சமூகத்திற்கு வெளிக்காட்டல்

ஆய்வுச்சுருக்கம்

இஸ்லாமிய கட்டிடக் கலையை பொறுத்தவரையில் பாரம்பரிய மரபுரிமை பின்பற்றி உருவாக்கப்பட்ட கட்டிடக் கலை வடிவங்கள் நவீன தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவகையில் இந்திய பண்பாட்டு மரபுரிமை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் பழைய மரபின் அடிப்படையில் சமூக கலாச்சார தாக்கத்துடன் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது ஆனால் இன்று இந்திய மரபின் தழுவல் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டிடக்கலையில் இஸ்லாமிய பண்பாடுகள்  மாற்றமடையாமல் காணப்படுகின்றது. இருப்பினும் அதன் வடிவம், தோற்றம், அலங்காரம் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. கட்டிடக்கலையின் வடிவமைப்பாளர்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டதா அல்லது இலங்கை கட்டிட கலைஞர்களால் உருவாக்கப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். இஸ்லாமிய கட்டிடக்கலையின் அழகியலை அதன் தொழில்நுட்பம், சமூக மரபு என்பன தீர்மானிக்கின்றன. அதன் சமய சமூக பிராந்திய தேவையை அடிப்படையாகக் கொண்டு கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இஸ்லாமிய மரபுரிமை புரிதலில் கட்டிடக்கலைக்கு தனித்துவமான இடமுண்டு. இதன் விளைவாக இஸ்லாமிய கட்டிடக்கலை ஆனது அதன் பிரதேச மரபுரிமையில் இருந்து மாற்றம் பெற்று புதிய மாறுதல்களுடன் உருவாகி இருப்பதை ஓட்டமாவடி பிரதேசத்தின் மாஞ்சோலைக்கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஹிழ்றியா ஜும்மா பள்ளிவாயலை மையமாகக் கொண்டு இவ்வாய்வு அமைகின்றது.

ஆய்வு அறிமுகம்

இன்றைய காலத்தை பொறுத்தவரையில் இஸ்லாமிய கட்டிடக்கலை பற்றிய பரவலாக்கம் பேசப்படும் தன்மை குறைவாக காணப்படுகின்றது. இஸ்லாமிய மரபுரிமை பற்றிய தேடலில் கட்டிடக்கலை முக்கியமான இடத்தைப் பெறுகின்றது ஆரம்ப காலத்தில் அச்சமூகத்தின் தேவை இடவசதி தொழில்நுட்ப மூலப்பொருள் என்பனவற்றிற்கு ஏற்றவகையில் கட்டடக்கலை வடிவமைப்பை உருவாக்கினர் அவை கலை அம்சங்களும் கால நீட்சியும் பெருந்தியவையாக காணப்படுகின்றன. கால மாற்றத்திற்கேற்ப புதிய மாறுதல்களை உருவாக்குவதற்கு கட்டிடக்கலை துணைபுரிகின்றது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பள்ளிவாயல்கள் அமைகின்றன. ஆரம்பகால பள்ளிவாயலை பொறுத்தவரை இலங்கையில் சில இடங்களில் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு ஏற்ற வகையிலான கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் பாரம்பரிய சமூக மக்களின் தேவை மற்றும் தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ற வகையிலான கட்டிடஅமைப்புகளை காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும் இலங்கையின் சில இடங்களில் இன்று புதிய மரபுகளை உள்வாங்கி கட்டிடக்கலை பிரம்மாண்டமான வடிவமைப்பில் இஸ்லாமிய பண்பாடுகள் மாறாத வகையில் புதிய மாற்றத்தை உருவாக்குகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக ஓட்டமாவடி பிரதேசத்தில் மாஞ்சோலை கிராமத்தில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள கட்டடக்கலை மரபு புதிய மாறுதலுடன் அமைக்கப்பட்ட விதம் அதன் கட்டிடக்கலையின் சிறப்பு பற்றியும் அதன் கூறுகளோடு இவ்வாய்வில் ஆராயப்படுகின்றது.

பெறுபேறும் கலந்துரையடலும் இஸ்லாமிய கட்டிடக்கலை மரபும் அதன் கூறுகளின் வெளிப்பாடும்

மனிதன் நிலைபேறு அடையும்போது சமூக பொருளாதார உறவுகள் வளர்ச்சி அடைகின்றன. சமூக அரசியல் பொருளாதார வாழ்க்கைக்கான கருவிகள் பயன்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. இதனூடாக வழிபாட்டிடம், போருக்கான மைதானம், மாளிகை, புதைகுழி போன்றன கட்டடக்கலை மாதிரிகளாக வளர்ச்சி பெறுகின்றன இவை தனக்கான தொழிற்பாட்டை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றன. பண்பாடு, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்பன கட்டடக்கலையில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்நம்பிக்கை கோட்பாடுகளுக்கும் நாகரிகங்களுக்கும் தொடர்புகள் உண்டு.

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பண்பாடுகளுக்கும் அவற்றுக்கே உரிய சில சிறப்பு பண்புகள் உள்ளன. அவற்றின்வழியே கலை வெளிப்பாடுகள் உருவாகின்றன. அந்தவகையில் கட்டிடக்கலை இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் வளர்ச்சி அடைந்து அதன் காரணமாக வரலாற்றில் புதிய ஒரு கட்டிடக்கலை போக்கை தோற்றுவித்துள்ளது. தனி மனிதனையும் இறைவனையும் நேரடியாக இணைப்பதாக உருவான இஸ்லாமிய பண்பாட்டின் தாக்கம் அதன் கட்டிட கலையிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. முஸ்லிம்கள் வெவ்வேறு பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அவர்களின் பிராந்தியத்திற்கு உரித்தான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு இவை வளர்ச்சி பெற்றுள்ளன. உலக கட்டடக்கலை மரபு கிழக்கு இஸ்லாமிய நாகரீகம் அதன் தனிச்சிறப்பான பள்ளிவாசல் கட்டிட அமைப்பு மூலமும் சமயசார்பற்ற கட்டட அமைப்பு மூலமும் தனியாக அடையாளம் காணக் கூடிய வகையில் பங்காற்றியுள்ளது. இஸ்லாமிய கட்டடக் கலையின் தனித்துவமான அடையாளத்தை எடுத்துக்காட்டும் வகையில் பள்ளிவாயல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மசூதிகள் அல்லது மஸ்ஜிதுகள் முஸ்லீம்களின் வழிபாட்டு  இடங்கள் ஆகும்.

மசூதி" என்பது முஸ்லீம்களின் வணக்கத்திற்கான ஒரு ஆங்கில பெயராகும். இது ஒரு தேவாலயம், ஜெப ஆலயம் அல்லது பிற மதங்களில் உள்ள கோவிலுக்கு சமமானது. முஸ்லிம்களின் வணக்கத்தின் இந்த அரபி வார்த்தை மஸ்ஜித்" என்பதாகும். இது ஊக்கமளிக்கும் இடம்" என்று பொருள். இஸ்லாமிய மையங்கள், இஸ்லாமிய சமுதாய மையங்கள் அல்லது முஸ்லீம் சமூக மையங்கள் எனவும் மசூதிகள் அழைக்கப்படுகின்றன. ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சமுதாய நிகழ்வுகளுக்கு அதிக நேரம் செலவிடுகின்றனர்.

சில முஸ்லிம்கள் அரபு மொழியைப் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலத்தில் மசூதி" என்ற வார்த்தையை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துகின்றனர். முஸ்லிம்களின் கட்டடக்கலை வளர்ச்சியின் ஆரம்பமாகவும் முதல் பள்ளிவாயலாகவும் புனித கஃபா மஸ்ஜிதுல் ஹராம் விளங்குகின்றது. இதன் பிற்பாடு பள்ளிவாயல்கள் அடுத்தடுத்து தோற்றம் பெறுகின்றது. மத்திய கிழக்கு நாடுகள் ஸ்பெய்ன், இஸ்பஹான், இந்தியா போன்ற உலக நாடுகள் பலவற்றில் மத்திய காலத்துக்குரிய சிறந்த நுட்பமான கட்டிடக்கலைகளாக இஸ்லாமியர்களின் கட்டிடக்கலை விளங்குகின்றன.

ஆரம்பகால முஸ்லிம்கள் கட்டிடங்களை எளிமையான வணக்கஸ்தலங்களாகேவ நிர்மாணித்தனர். அதாவது அவர்களின் சூழல், மூலப்பொருள், தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவகையில் சமூக கலாச்சார தாக்கங்களை உள்வாங்கி அவர்களுக்கே தனித்துவமான வடிவமைப்பில் கட்டடங்களை உருவாக்கினர். பின்னர் விசாலமானதாகவும் அலங்கார வேலைப்பாடுகள் கொண்டதாகவும் மாற்றங்களை வரலாற்றில் அவதானிக்க முடிகின்றது. ஆரம்பகால பள்ளிவாயலை பொறுத்தவரையில் காண்பிய மூலக்கூறுகளில் எளிமையானதாகவும் பின்னர் கூட்டுத் தொழுகையை சமூக, சமய, அரசியல் போன்றவற்றை நடத்தும் இடமாகவும் மாறியது. இஸ்லாமிய கட்டடக் கலையின் வளர்ச்சி பெற்ற பள்ளிவாயலானது முஸ்லிம்களது சமூக, சமய, பொருளாதார வளத்தை மதிப்பிட்டு காட்டும் ஒரு அளவுகோலாகவும் அமையப் பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் மாஞ்சோலை கிராமத்தில் அமையப் பெற்றுள்ள ஹிழ்றியா ஜும்மா பள்ளிவாயல் புதிய பாணியில் கட்டடங்களின் கூறுகள் அனைத்தும் உயர்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முற்றுமுழுதாக இந்திய கட்டிடக்கலை மரபைப் பின்பற்றி புதிய மாறுதல்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளமை  இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. கட்டிடக்கலையின் ஒவ்வொரு கூறுகளும் இதற்கான சான்றுகளாக காணப்படுகின்றன. இதில் சமூக சமய பொருளாதார தாக்கத்தினை இனங்காண முடியும்.

இஸ்லாமிய பள்ளிவாயல் கட்டிடக்கலையின்  கூறுகள்

ஒரு மசூதி அரபு மொழியில் மஸ்ஜித் என அழைக்கப்படுகின்றது. இஸ்லாமிய வழிபாட்டு இடம் என்றும் குறிப்பிட முடியும். பிரார்த்தனைகள் உட்புறங்கள் அல்லது வெளிப்புறங்களில், கிட்டத்தட்ட ஒவ்வொரு முஸ்லிம்களும் சபை பிரார்த்தனைக்காக  பள்ளிவாயலில் ஒன்று கூடுகின்றனர்.

ஒரு மசூதியின் முக்கிய கட்டடக்கலை கூறுகள் நடைமுறைக்கேற்ற வகையில் இன்று  நடைமுறையில் உள்ளன. மேலும் உலகளாவிய முஸ்லிம்களிடையே தொடர்ச்சியும் தொடர்ச்சியான பாரம்பரியத்துவமும் காணப்படுகின்றன.

உலகெங்கும் உள்ள மசூதிகளின் கட்டிட அமைப்புகளில் வேறுபாடுகள் உள்ளன. கட்டுமான பொருட்கள் மற்றும் வடிவமைப்பு ஒவ்வொரு உள்ளூர் முஸ்லிம் சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வளங்களை சார்ந்துள்ளது. இருப்பினும், கிட்டத்தட்ட அனைத்து மசூதிகளும் பொதுவானவை என்று சில அம்சங்கள் உள்ளன.  இவை மசூதிகளில் கட்டடக்கலை கூறுகள் ஊடாக இனங் காணப்படுகின்றன. அந்தவகையில் கட்டிடக்கலை கூறுகள் பற்றி நோக்கும்போது,

மினரா

இது மசூதியின் மெல்லிய கோபுரத்தைக் குறிக்கும். ஒரு மசூதியின் தனித்துவமான பாரம்பரிய அம்சமாகும், அவை உயரம், பாணி மற்றும் எண் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. மினாராக்கள்  சதுரமாக, சுற்று அல்லது எண்கோணாக இருக்கலாம். இவை  பொதுவாக ஒரு கூரையுடன் மூடப்பட்டிருக்கும். அவர்கள் ஆரம்பத்தில் பிரார்த்தனை (அதான்) அழைப்பு மேற்கொள்வதற்கு  உயர் புள்ளியாக இது பயன்படுத்தப்பட்டது.

இந்த வார்த்தை கலங்கரை விளக்கம்" என்ற அரபி வார்த்தையிலிருந்து உருவானது. மசூதிகளின் ஒரு கூரை வடிவமைப்பாகும்.  குறிப்பாக மத்திய கிழக்கில் மஸ்ஜித்களை இவை அலங்கரிக்கின்றன. இந்த கட்டடக்கலை உறுப்பு எந்த ஆன்மீகமும் கொண்டதல்ல. இது குறியீட்டு முக்கியத்துவம் மற்றும் முற்றிலும் அழகியலை வெளிப்படுத்துகின்றன. ஒரு கோபுரத்தின் உட்பகுதி பொதுவாக மலர், வடிவில் மற்றும் பிற வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டு காணப்படும்.

ஒரு மசூதியின் குவிமாடம் வழக்கமாக  பிரார்த்தனை மண்டபத்தை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் சில மசூதிகளில் இரண்டு குவிமாடங்கள் இருக்கலாம்.

பிரார்த்தனை மண்டபம்

பிரார்த்தனை மைய பகுதியில் பிரார்த்தனை செய்யப்படும் இடம்" என்று இது அழைக்கப்படுகிறது. வணங்குவோர் உட்கார்ந்து, முழங்கால்மண்டியிட்டு, பிரார்த்தனை செய்வதற்கு பயன்படும் மண்டபமாகும். மண்டபத்தின் சுவர்களில் மற்றும் தூண்களுக்கிடையே குர்ஆன், மரத்தாலான புத்தகம் ( ரிஹால் ), பிற மத வாசிப்புப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பிரார்த்தனை விரிப்புகள் ஆகியவற்றைப் பிரசுரிப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டு காணப்படும். இதற்கு அப்பால், பிரார்த்தனை மண்டபம் ஒரு பெரிய, திறந்தவெளியாக காணப்படும்.

மிஹ்ராப்

இது குர்ஆனின் திசையை குறிக்கும் ஒரு மசூதியின் பிரார்த்தனை அறையின் சுவரில் ஒரு அலங்கார, அரை வட்ட வடிவினைக் குறிக்கின்றது. தொழுகையில் மக்காவை எதிர்கொள்ளும் திசையாகும்.  அளவு மற்றும் வர்ணங்கள் இதில் வேறுபடுகின்றன. இங்கு மொசைக் ஓடுகள் நேர்த்தியுடன் அலங்கரிக்கப்பட்டு காணப்படும்.

மின்பார்

பிரார்த்தனை மண்டபத்தின் முன் பகுதியில்  எழுப்பப்பட்ட மேடையாகும். இதில் பிரசங்கங்கள் அல்லது பேச்சுகள் வழங்கப்படுகின்றன. இந்த மின்பார் பொதுவாக செதுக்கப்பட்ட மரம், கல்,அல்லது செங்கல் மூலம் தயாரிக்கப்படுகிறது. மேல் மேடைக்குச் செல்லும் ஒரு சிறிய மாடிப்பகுதியை இது உள்ளடக்குகிறது. இது சில நேரங்களில் ஒரு சிறிய குவிமாடம் மூலம் மூடப்பட்டிருக்கும்.

மின்பார் மிக்ராபின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது.  இது பிரார்த்தனைக்காக கிப்லாவின் திசையை குறிக்கின்றது.

பேச்சாளர்களுக்குத் தெரிந்தவரையிலும் பேச்சாளரின் குரலை அதிகரிக்க இது உதவுகின்றது. நவீன காலங்களில் இந்த நோக்கத்திற்காக ஒலிவாங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய மின்பார் உலகெங்கிலும் இஸ்லாமிய மசூதி கட்டிடத்தின் ஒரு பொதுவான அம்சமாகும்.

அப்துல் பகுதி

Ablutions (wudu ) முஸ்லீம் பிரார்த்தனை தயாரிப்பு பகுதியாகும். ஒரு சுவர் அல்லது முற்றத்தில் ஒரு நீரூற்று போன்ற அமைப்பு காணப்படும். இதனை பயன்படுத்தி வுழு செய்து கொள்வர்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் பழைய பள்ளிவாயல் ஹில்ரியா  ஜும்மா பள்ளிவாயல் பற்றிய பார்வை

மாஞ்சோலை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பழைய பள்ளிவாயலை பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் ஓலைகளால் அமைக்கப்பட்ட கட்டிட அமைப்பு முறையாகவே காணப்பட்டது பிற்பட்ட காலங்களில் இஸ்லாமியர்களின் அதிகரிப்பு மற்றும் கூட்டுத் தொழுகை பிரார்த்தனைகளுக்கான தேவை விருப்புகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடக் கலையை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதற்கேற்ப 1980ஆம் ஆண்டு கற்களை மூலப்பொருளாக கொண்டு நிரந்தர கட்டிடமாக அமைக்கப்பட்டது. இதன் கட்டட அமைப்பை பொறுத்தவரையில் பாரம்பரிய மரபு முறைகளை பின்பற்றி அவர்களின் தேவை நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாமியபள்ளிவாயலின் கட்டிடக்கலை கூறுகள் அதன் வசதிக்கு ஏற்ற வகையில் அமையப் பெற்றிருந்தது. அதாவது இஸ்லாமிய பள்ளிவாயல் ஒன்றில் காணப்படும் பொதுவான கூறுகளான மினரா, டோம், பிரார்த்தனை மண்டபம், மிம்பர், கவ்ழ் போன்ற பகுதிகளை உள்ளடக்கும் வகையில் வசதிக்கு ஏற்ற வகையில் குறுகியதாக அமையப்பெற்றிருந்து. அதாவது பாரம்பரிய இஸ்லாமிய கட்டிடக் கலை மரபுகள் மாறாத வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஜன்னல் அமைப்பைப் பொறுத்தவரையில் பூக்கற்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக ஒளி ஊடுருவக்கூடிய தன்மை அதில் வெளிப்படும் வகையில் அமையப் பெற்றிருந்தது. இஸ்லாமியர்கள் தொழுகைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வதற்கு வுழு செய்து கொள்வதற்காக கவ்ழ் காணப்பட்டது. இவை பாரம்பரிய கட்டடக் கலை மரபின் கலை அம்சமாகவும் கருதப்படுகின்றது.

ஓட்டமாவடி பிரதேசத்தில் புதிய மாறுதல்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஹிழ்றியா ஜூம்மா பள்ளிவாயல் பற்றிய பார்வை

புதிய பள்ளிவாயலை பொறுத்தவரையில் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி கட்டப்பட்டது. கட்டட நிர்மாணம் ஜாமியத்துல் அன்சாரித் சுன்னத்தில் முஹம்மதிய பரக்காதேனிய என்ற அமைப்புடன் சவுதி அரேபியா, கட்டார், ஓமான் போன்ற நிறுவனங்களின் உதவியுடன் இப் பள்ளிவாயல் அமைக்கப்பட்டது. இதன் கட்டட அமைப்பை பொறுத்தவரை நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி பிரமாண்டமான முறையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கட்டிடக்கலை மரபுகளைப் பின்பற்றி உள்நாட்டு  கலைஞர்களால் பிரம்மாண்டமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய மற்றும் புதிய பள்ளிவாயல்களுக்கிடையிலான மாற்றம்

ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட பள்ளிவாயல்  அதன் கட்டட அமைப்பு முறைகளை நோக்கும்போது பாரம்பரிய இஸ்லாமிய சமூக பண்பாட்டு அம்சங்களுக்கு ஏற்ப கட்டடக்கலை கூறுகள் காணப்படினும் கட்டிடக்கலை அம்சங்கள், அதன் அழகியல் தன்மை நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி இந்திய பாணியில் தழுவலில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாறுதல்களை, புதிய பாணியில் உள்வாங்கி அதனை வசதிகளுக்கு ஏற்ப பயன்படுத்தி கட்டிடக்கலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை தெளிவாக அவதானிக்க கூடியதாக உள்ளது. அந்தவகையில் கட்டிடக்கலையும் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள், அழகிய வடிவமைப்பு, சமச்சீர் தன்மை, தொழில்நுட்ப வசதிகள் என்பன இதனூடாக எடுத்துக் காட்டப்படுகின்றன.

கட்டடக்கலை கூறுகள் ஊடாக பள்ளிவாயலின் கட்டிட அமைப்பு அழகியல், புதிய பாணியினை விளங்கிக்கொள்ள முடியும்.

அந்த வகையில் இஸ்லாமிய கட்டடக்கலையின் கூறுகள் பற்றி நோக்கும்போது மினரா வினை எடுத்துக்கொண்டால் ஆரம்பகால மஸ்ஜிதின் மினரா பாரம்பரிய அடிப்படையில் அதான் ஒலி பொதுமக்களுக்கு கேட்கும் வகையில்  மினரா அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் நவீன பாணியில் வடிவமைக்கப்பட்ட கட்டிடத்தின் தோற்றத்தை நோக்கும் போது அதன்நான்குபக்கங்களும் சதுர வடிவ அமைப்பில் அமைக்கப்பட்ட நான்கு பக்கமும் ஒரே வகையான முகத்தோற்றத்தில் தாஜ்மஹால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நான்கு முகங்கள் நான்கு மினராக்கள் மிக உயரமான வடிவமைப்பில் அதான் ஒலி கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்முகத்தோற்றத்தின் இரு பக்கங்களிலும் சிறிய மினரா போன்ற அமைப்பு நான்கு திசைகளிலும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டோம் பற்றி குறிப்பிடும்போது ஆரம்ப காலத்தில் அமையப் பெற்றிருந்த பள்ளிவாயலில் டோமானது வெங்காய குமிழ் வடிவம் போன்று சாதாரணமான ஒரு அளவு பிரமாணத்தில் அமைக்கப்பட்டிருந்தது. புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு பற்றி  நோக்கும்போது நான்கு முகங்களிலும் நான்கு திசைகளிலும் சிறிய அளவிலான டோம் அமைப்பு அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆரம்ப காலத்தில் டோமை பிரதானப்படுத்தி அதன் மையப் பகுதியில் வைத்து கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்று நான்கு திசைகளிலும் அமைக்கப்பட்டிருப்பது பள்ளிவாயல் கட்டிடக் கலையின் அழகியலை வெளிப்படுத்தும் வகையில் எங்கும் டோம் பிரதானப் படுத்தப் பட்டுள்ளது. இதனூடாக அதன் கலைச் சிறப்பையும் தனித்துவத்தையும் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. மூலப் பொருளை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் பள்ளிவாயலில் கட்டிடக்கலை ஆனது சீமெந்து கலவையினை பயன்படுத்தி வர்ணப்பூச்சு இடப்பட்டு கட்டிடக்கலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்று உயர் தொழில்நுட்பத்தில் செம்பு, பித்தளை போன்ற மூலப்பொருட்கள் ஊடாக மினராக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது மேலும் பள்ளிவாயலின் கட்டிடக்கலை அழகியலை வெளிப்படுத்துகின்றது.

இதே போன்று பிரார்த்தனை மண்டபத்தை பொறுத்தவரையில் ஆரம்ப காலத்தில் பாரம்பரிய சமூகத்தின் வசதிக்கு ஏற்ற வகையில் பிரார்த்தனை மண்டபம் அளவில் சிறிதாக காணப்பட்டது. இன்றைய புதிய பள்ளிவாயலில் பிரார்த்தனை மண்டபத்தை பொறுத்தவரையில் பள்ளிவாயல் கட்டிட அமைப்பு மூன்று தொடர் மாடிகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. மூன்று பகுதிகளிலும் நீளமான பிரார்த்தனை மண்டபம் காணப்படுகின்றது. மண்டபங்களுக்கு இடையில் தூண்கள் வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதிகமான மக்கள் தொழுகையில் கலந்து கொள்ளும் வகையிலும், பிரார்த்தனையில் ஈடுபடும் வகையிலும் பிரார்த்தனை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மிம்பர் பற்றிக் குறிப்பிடும் போது பழைய பள்ளிவாயல் கட்டிடத்தின் மிம்பர் ஆனது சாதாரணமாக சிறிய இப்படிப்பில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்றைய நவீன உத்திகளைப் பயன்படுத்தி வசதிக்கேற்றவாறு சற்று உயரமான மேடை அமைப்பில் மிம்பர் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசங்கங்கள், பேச்சுகள் இடம்பெறும்போது அவை தெளிவாக அனைத்து மக்களுக்கும் விளங்கும் வகையில் சற்று உயரமான மேடை போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கவ்ழ் பற்றிக் குறிப்பிடும் போது இது தொழுகைக்கு தயார் செய்வதற்காக வுழு செய்கின்ற பகுதியாக காணப்படுகின்றது. பாரம்பரிய பள்ளிவாயலை பொருத்தவரையில் கவ்ழ் நீண்ட தொட்டி போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக தொழுகைக்கான வுழுச் செய்து வருகின்ற நடைமுறை காணப்பட்டது இன்று காணப்படுகின்ற அனைத்து பள்ளி வாயில்களிலும் அத்தகைய பாரம்பரிய கவ்ழ் பகுதியினை காண முடியாதுள்ளது. அது நவீன முறைகள் மாற்றமடைந்து நீர் குழாய்கள் ஊடாக நீரினை பெற்றுக்கொண்டு வுழு செய்கின்ற முறை காணப்படுகின்றது. இது அப்துல் பகுதி என அழைக்கப்படுகின்றது. அதேபோன்று இதன் வாயிலில் வாயில் முற்றம், ஜன்னல் அமைப்புகள், தூண்கள் போன்றவற்றை நோக்கும்போது வளைவான வெங்காய குமிழ் போன்ற வடிவமைப்பில் நேர்த்தியாக வரிசையான முறையில் அமைக்கப்பட்டுள்ள வாயில்கள், ஜன்னல் அமைப்புகளை காணக்கூடியதாக இருக்கின்றது. கண்ணாடிகள் அதனூடாக ஊடு புகும் ஒளியானது சுவர் தளத்தில் அலைகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ண கண்ணாடிகள் ஊடாக தோன்றும் வண்ணம் கட்டிட கலையின் அழகியலை மேலும் நிறுவுகின்றது. அதேபோன்று நான்கு முகங்களிலும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் காணப்படும் வாயில்கள், ஜன்னல் அமைப்புகள், மினராக்கள் மற்றும் அதன் வர்ணப் பூச்சிகள் விவரணைகள் இவைகள் அனைத்தும் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பழைய கட்டிடத்தில் இருந்து புதிய மாறுதல்களுடன் உள்வாங்கப்பட்டு இருப்பதே கட்டிடக்கலையின் சிறப்புத் தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. இதன் உருவாக்க வடிவமைப்பு தோற்றம் இந்தியாவில் அமையப்பெற்றுள்ள ஹ_மாயூன் கல்லறை மாடம் போன்ற வடிவமைப்பிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நவீன வசதிகளுக்கேட்ப சில கூறுகள் அதில் மாற்றங்களை கொண்டு புதிய மாறுதல்களுடன் கலையம்சம் பொருந்திய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர் ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்ட பள்ளிவாயல் கட்டிடத்திற்கும் இன்றைய நவீன வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான பள்ளிவாயலின் தோற்றத்திற்கும் அதன் கூறுகளோடு புதிய பாணியில் உள்வாங்கப்பட்ட வீதம், கட்டிட அமைப்பு முறைகள், அதில் ஏற்பட்ட மாற்றம், அழகியல் தன்மை  வெளிப்படுத்தி நிற்கும் திறன் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. இது இந்திய பாணியில் உள்நாட்டு கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கலைத்திறன் மிக்க கட்டிடக்கலை படைப்புக்கு சிறந்த சான்றாக காணப்படுவதுடன் ஏனைய பள்ளிவாயல் பாரம்பரிய கட்டடக்கலைகளுடன் ஒப்பிடும்போது அதில் ஏற்பட்ட மாற்றம் அதன் வளர்ச்சி வியக்கத்தக்கதாக காணப்படுவதே சமூகத்தில் எடுத்துக் காட்டப்பட வேண்டிய ஒன்றாக விளங்குகின்றது.

முடிவுரை

இஸ்லாமிய கட்டிடக் கலையைப் பொறுத்தவரை பாரம்பரியமரபுகளுடன் கட்டிடக்கலைகள் உருவாக்கப்பட்டிருக்கும். இஸ்லாமிய கலாச்சாரத்தை பண்பாடுகளில் மரபுகள் மாறாத வகைகள் இன்று புதிதாக உருவாக்கப்படுகின்ற கட்டடக் கலை வடிவங்கள் அதன் நிர்வாகிகள் ஊடகங்களின் தொழில்நுட்ப முறைகள் ஆகியவற்றில் மாற்றங்களை உருவாக்கி அதனூடாக அழகியல் அம்சத்தையும் உள்வாங்கிக்கொண்டு இதய மாறுதல்களுடன் நவீன மரபுகளைப் பின்பற்றி கட்டடக்கலையில் மாற்றமடைந்து வருவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஓட்டமாவடி பிரதேசத்தில் மாஞ்சோலை கிராமத்தில் காணப்படும் இன்றைய ஜூம்மா பள்ளிவாயல் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது இதன் பிரம்மாண்டம் அதன் வடிவமைப்பு அனைத்தும் இந்திய கட்டிட மரபுகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருந்தது கட்டிடக்கலையின் வளர்ச்சியையும் அதன் நவீனத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகின்றது. இத்தகைய கட்டிடக்கலைகள் வரலாற்றில் பேசப்பட வேண்டிய கட்டடக்கலைகளாக காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உசாத்துணைகள்

1.     அனஸ், எம்.எஸ்.எம்(2007), இலங்கையில் முஸ்லிம் நுண்கலை, கொழும்பு குமரன் புத்தக இல்லம்

2.     அமீன் எம்.ஐ.எம்(1996), முஸ்லிம்கள் வளர்த்த அழகியற்கலைகள், இலங்கை திகாரி, றேஸ்மா பதிப்பகம்.

3.     இத்ரீஸ் ஏ.பி.எம், மக்கள் இஸ்லாம், இஸ்லாமிக் புக்ஹவுஸ்

4.      https://www.google.com/amp/s/ta.efferit.com

5.      https://www.google.com/amp/s/jumuaammmedia.wordpress.com

6.      https://www.britanica.com/topic/mosqe

7. https://en.m.wikipedia.org/wiki/islamic_architecture

8.      https://www.scienncederect.com

பின்னிணைப்புக்கள்

 


ஹிழ்றியா ஜும்மா பள்ளிவாயலின் தோற்றறம்


பிரார்த்தனை மண்டபம்


               மினரா


மின்பர்              


                                                                             டோம்