4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கொரோனா கொலைகள் - மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்

 

கொரோனா கொலைகள் 

 

 

மனப்பறவை மயானம் நோக்கி பறக்கிறது

கொரோனா கொலைகள்

மரணங்களால்

மயானம் நிரப்ப புறப்பட்டுவிட்டன..

நேற்று இன்று நாளை என

அதன் எண்ணிக்கையை நீட்டிக்க

தெருக்கள் தோறும்

இனம்புரியா அச்ச இருள்

சூழத் தொடங்கியுள்ளது..

 

பேசிக்கொள்வதாலும் பேசி கொல்வதாலும்

கொலைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை

மாறாக..

மடங்குகளை தாண்டி

பல நரம்புகளில் நுழைந்து

நடுநிசியிலும் நெஞ்சடைப்புகளை பரிசளிக்கிறது..

 

இறக்கங்கள் ஏதுமற்ற

கொலை தண்டனைகளை

மருத்துவ குணமிக்க மேருமலையென

சித்தம் நித்தம் கைசேர்ந்து..

தடுப்புகளையும் மீறிய

கரன்சிகளுக்காக கட்சி மாறுகிறது.

 

அதிகாரம் அலர அலர

ஆதவற்ற

நிராதரவான பிணங்கள் அழுகின்றன

அடைக்கலம் வேண்டி.. ..!

 

புரிதலற்ற சொற்கள்

பொறுமை காத்தலுக்கு இடையே உள்ள

கால வெளியில்

முகங்களுக்கு இடையிலான

பார்வைகளை

குரல் அதிர்வுகளால் விசாரிக்கின்றன.. ..

 

சிலர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாயினர்

சிலர் கொலையுண்டனர்

சிலர் பழமையை நோக்கி பயணம் மேற்கொண்டனர்

சிலர் வெற்றிடங்களின் வெளியெங்கும்

பசித்த வயிறோடு

அடுத்தடுத்த இரவுக்குள்

நலமிழந்த பகலைத் தேடுகின்றனர்.. ..

சிலர் அதிகாரம் கோரும் இடங்களை நாடி

தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர்..

சிலர் கனவுகளுக்குள் மூழ்கி

முக்திபெறவும் மோட்சம் எய்தவும்

மறையருள் யாசிக்கின்றனர்.. ..

 

ஓடாத வாகனங்களுக்கு இடையே

சிலர் வழக்கமான பயணம் மேற்கொள்கின்றனர்

பதட்டப்படுகின்றனர் ..

பார்க்கத் திறக்காத கடைகளுக்காக

பரிகசிக்கின்றனர்..

வீட்டிற்குள் செய்ய ஏதுமின்மையால்

ஊர்வலம் விரும்பும் நேரம்

தெரு அடைக்கப்பட்டிருப்பதாய் சொல்லி

தேம்புகின்றனர்.. ..

தேர்தல் முடிந்ததும் இழைக்கப்பட்டது

தேசதுரோகமென கோஷமெழுப்புகின்றனர்.. ..

கோபிக்கின்றனர்..

கொலை எரிச்சலுறுகின்றனர்..

உரிமை பறிக்கப்பட்டதாய்

புலம்புகின்றனர்..

சமூக நீதிக்காக போராட முடியவில்லையென

சங்கடப்படுகின்றனர்..

 

சாலையோர மனிதர்களின்

வாழ்க்கைச் சீர்குலைவை முன்வைத்து

சுகாதார விரும்பிகள்

சிலர்

குப்பைகளுடன்

குறைந்தபட்ச தன்னலத்தையும்

பாசாங்காய் அகற்ற பரிதவிக்கின்றனர்.. ..

பாதுகாத்தல்படுகொலையை விட

பயங்கரமாது என்று.. ..!?

 

-              மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்