4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உலகை உய்யச் செய்வேனே! - சுரேஜமீ

 

உலகை உய்யச் செய்வேனே! - சுரேஜமீ

 

 

என்னே வாழ்க்கை என்பேனோ

  எல்லாம் இறையாய் நின்றேனோ

முன்னை வினையும் அறியேனோ

  மீளும் வினையைத் தேடேனோ

தன்னை அறியாது இருப்பேனோ

  தாளே கதியென் றிருந்தேனோ

என்னுள் இருக்கும் இறையே சொல்

  ஏனென் றறியாக் குறையைச் சொல்!

 

விண்ணை யளந்தே முடித்திடலாம்

  மண்ணைக் கூட அளந்திடலாம்

பொன்னை மணியைப் பூமியிலே

  புதைந்த கற்கள் எண்ணிடலாம்

கண்ணில் எட்டாக் கடலையுமே

  கடுகாய்க் குறுக்கி அளந்திடலாம்

முன்னை இற்றைப் பிறப்பதனின்

  மூச்சை அளக்க முடிந்திடுமோ?

 

ஐயோ யாரை அடித்தேனோ

  அம்மை தந்தை மிதித்தேனோ

செய்யா வினைகள் செய்தேனோ

  சேற்றில் குதித்துக் களித்தேனோ

பொய்யை விற்றுப் பிழைத்தேனோ

  பொல்லாக் கொலையும் செய்தேனோ

மெய்யாம் அடியைப் பற்றாமல்

  மேனி கொண்டே அலைகின்றேன்

 

மெய்வாய் கண்ணும் செவிமூக்கும்

  மெய்யில் தீண்டி மகிழ்கிறதே

கையில் வெண்ணை ருந்தும்

  காண தெங்கும் அலைகிறதே

நெய்யை தன்னுள் வைத்திருக்கும்

  நொய்யக் கடையாத் தயிராகி

வெய்ய நொந்து வேகிறதே

   வீணே புலம்பி அழுகிறதே!

 

காய்ந்த மரமும் வீடாகும்

  கனிந்த பழமும் உணவாகும்

பாய்ந்த அருவி ஆறாகும்

  பனியும் கூட சுகமாகும்

ஓய்ந்த காற்றும் உலகிற்கு

   உருவில் ஒளியும் நிலமுயர்த்தும்

தேய்ந்த மதியும் தெளிவுடனே

   தீர்ந்து மீண்டும் துலங்கிடுமே!

 

என்றன் மீது கருணைகொள்ளா

  ஏங்கித் தவிக்கச் செய்வாயோ?

உன்றன் தவற்றை என்மீதே

  திணிக்கச் சொல்லி மகிழ்வாயோ?

நின்றென் கணக்கை நேர்செய்து

  நீங்காப் புகழைக் கொடுத்திடு, இறைவா!

உன்றன் இருதாள் பற்றிட்டே

  உலகை உய்யச் செய்வேனே!!

 

சுரேஜமீ

மஸ்கட்