4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

இதற்காகவா பிறந்தாய் நீ? - முனைவர் சித்ரா


இதற்காகவா பிறந்தாய் நீ?

முனைவர் சித்ரா

SCOPE, City University of Hong Kong, Hong Kong

 

வருடம் 1999. என்தோழி பிந்துவின் நினைவு எனக்கு அடிக்கடி வர ஆரம்பித்த சமயம் அது. மூன்று ஆண்டு காலமாக அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.  நான் அவர்களது திருவனந்தபுர வீட்டுத்  தொலைப்பேசியில்  பேச முயன்ற போதும்,  மணி ஒலித்துக் கொண்டே  இருந்ததேயொழிய,  யாரும் எடுத்துப் பேசவில்லை.  சில சமயம் காலையிலும்,  சில சமயம் மாலையிலும் பேச முயன்றேன்.  பலன் ஏதும் இல்லை.  ஒரு வருட காலம் என்னுடைய நெருங்கிய தோழியாக இருந்த  பிந்துவை  எப்படியும் தொடர்பு கொண்டே தீர வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் வலுத்துக் கொண்டே இருந்தது.

ஆமாம்.. அந்த பிந்து யார்?  அவள் எனக்கு எங்கே எப்படி தோழியானாள்? அதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நான் ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக ஜப்பான் நாட்டின் ஓசகா நகருக்குச் சென்றிருந்தேன்.  ஒசாகாவை நான் ஏன் ஓசகா என்று எழுதியிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா?  ஆங்கிலத்தில் எழுதியதைப் படிக்கும் போது நாம் ஒசாகா என்று படிக்கலாம்.  ஆனான் ஜப்பானிய மொழியில் அந்த இடத்தைக் குறிப்பிடும் போது அதை ஓசகா என்றே சொல்ல வேண்டும். 

பயிற்சி காலத்தில் என் பயிற்சி மையத்தின்  பக்கத்திலிருந்த  பல்கலைக் கழகம் ஒன்றில் ஆராய்ச்சி மாணவியாகப் படித்துக் கொண்டிருந்தாள்.  நான் அவளைச் சந்தித்த போது மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தாள்.

அன்டார்க்டிக்  கண்டப்  பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்ட ஜப்பானியக் குழுத் தலைவரின் கீழ் தன் ஆராய்ச்சிப்  பணியைச்  செய்து கொண்டு இருந்தாள் பிந்து.  இந்த விஷயத்தை அறிந்த போது, ஆஹா.. நம் நாட்டிலிருந்தும் மாணவர்கள்,  மொழி தெரியாத தேசத்திற்கு வந்து,  ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டேன்.  அவளுக்கு ஜப்பானிய மொழி தெரியாது.  இருந்த போதும் ஆங்கிலத்தையே பயன்படுத்தி அந்த இரண்டு ஆண்டுகளைக் கழித்திருந்தாள்.  அவளுடன் இன்னும் சில இந்திய மாணவர்களும் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு இருந்தனர்.  அவர்களில் சிலரை எனக்கு ஒரு சமயம் பிந்து அறிமுகம் செய்தும் வைத்தாள்.

கேரளத்தைச் சேர்ந்த பிந்து, தமிழில் பேசவும் கற்றிருந்தாள். அதனால் நாங்கள் நெருங்கியத் தோழிகளானோம்.

இடையிலே  பிந்துவைப்  பற்றிய தேடுதலைப்  பற்றி எழுதுவதற்கு மன்னிக்கவும்.

பிந்துவை  நினைத்துக்  கொண்ட ஒரு நாள்,  எனக்கு ஒரு யோசனை தோன்றியது.  ஆராய்ச்சி மாணவி என்பதால்,  நிச்சயம் பல ஆய்வுக் கட்டுரைகளை  சமர்ப்பித்திருப்பார்கள். அவை  மின்வலையில்  வெளி வந்து இருக்குமல்லவா?  அதனால்  மின்வலையில்  அவளைப்  பற்றித்  தேடினால் என்ன என்பதே அது.

உடனே அவளது  பெயரைத்தேட  கணினியை  முடுக்கி விட்டேன்.  பிந்து என்ற பெயரில் பலர் பல கட்டுரைகளை வெளியிட்டு இருந்தனர். பிறகு பூமியியல்,  பூமி பற்றிய கட்டுரைகளைத் தேட ஆரம்பித்தேன். ஒரேயொரு  கட்டுரையைக் கணினி கண்டுபிடித்துக் கொடுத்தது. அதை மூவர்  சேர்த்துத்  தயாரித்திருந்தனர்.  அதில் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஏதும் கொடுக்கப்படவில்லை.  பிந்துவை எப்படியும் கண்டுபிடித்தேத் தீர வேண்டும் என்ற வெறி.  மற்ற இருவரைப் பற்றிய விஷயங்களை மின்வலையில் தேடினேன்.  அதில் ஒருவரின்கட்டுரை பல்கலைக்கழக பத்திரிக்கையில் வெளியிடப்பட்டதைக் கண்டேன். உடன் அந்தப் பத்திரிக்கையின் முதல் பக்கத்திற்குச் சென்று,  விஷயங்களைத் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.  முந்தைய பத்திரிக்கைகளைத்  துழாவினேன். அப்போது ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் பெயர் சந்தோஷ் என்று தரப்பட்டு இருந்தது.

என்னுடைய தேடுதலுக்கு பலன் கிட்டியது என்றே சொல்லலாம். பிந்து எனக்கு அறிமுகப்படுத்திய  மாணவர்களில்  ஒருவர் அவர்.  அவர் அப்போது ஐந்தாம் ஆண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர்.

பிந்துவை  நெருங்கிவிட்டோம் என்று எண்ணம் கொண்டு,  சந்தோஷ்  அவர்களைத்  தொடர்பு கொள்ள முடியுமா என்று வலையில் தேடினேன்.  அதிர்ஷ்டவசமாக அவரது தொடர்பு மின்னஞ்சல் முகவரி,  அதில் தரப்பட்டு இருந்தது.  அதை அவர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பயன்படுத்துவாரா என்ற சந்தேகம் இருந்த போதும்,  முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் கொண்டேன்.  உடன் பிந்துவைப்  பற்றிய தகவல் தரும்படிக் கோரி மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்.  பிந்துவிற்கு  அனுப்பிய மின்னஞ்சல்கள் அனைத்தும் திரும்பி வந்தது போல் இல்லாமல்,  இந்த மின்னஞ்சல் எனக்கு எந்த விதமான மின்னஞ்சல் தவறுகளைச் சுட்டிக் காட்டவில்லை. அதனால்  பிந்துவைப்  பற்றி விரைவில் தெரியும் என்ற மகிழ்ச்சியில் காத்திருக்க ஆரம்பித்தேன்.

வருடம் 1995.என் தோழியை நான் சந்தித்த விதம் எனக்கு மாறுபட்ட அனுபவம் என்றே சொல்ல வேண்டும். அதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.  உலகில் மக்கள் தொடர்பு எவ்வளவு முக்கியம் என்பதை எனக்குப் புரிய வைத்த நிகழ்ச்சி அது.

நான்  ஓசகா  நகரில்  சிகேரூ  என்று அழைக்கப்படும் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒரு வருட தொழிற்பயிற்சி  பெறத் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சென்றேன். பயிற்சி பெறுபவர்களுக்கு மொழி தெரிந்து இருத்தல் அவசியம் என்பதால் எல்லாப் பயிற்சியாளர்களுக்கும் ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கப்பட்டது.  ஜப்பானிற்குச் செல்லும் முன்பே,  அங்கு செல்ல வேண்டும் என்ற  உந்துததால்,  முதல் நிலை ஜப்பானியத் தேர்வை எழுதி விட்டுத் தான் அங்கே சென்றேன்.  இருந்தாலும்,  ஓசகா  நகருக்குச்  செல்லும் முன்னர் ஆறு வாரங்கள், ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒன்றான யோகஹமா நகரில் நான் ஜப்பானிய மொழியை பேசக் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

நான் தங்கி இருந்தது பயிற்சி மையம் என்பதால், ஆண்டுதோறும் பல நாடுகளிலிருந்து பலவிதமான பயிற்சிகளைப்  பெற  பயிற்சியாளர்கள் வந்த வண்ணம் இருப்பர்.  இரண்டு வாரங்கள், ஒரு மாதம்,  மூன்று மாதங்கள்,  ஆறு மாதங்கள் என்று பயிற்சி வகுப்புகள் நடந்த வண்ணம் இருக்கும். இந்தியாவிலிருந்தும் பலர் வந்தனர்.  நான் ஜப்பானிய மொழியை, மாருதி நிறுவனத்தில் பணியாற்றும் ஆறு மாதப் பயிற்சிக்கு வந்திருந்த குழுவினருடன் கற்க ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் சென்னையிலிருந்து பதினைந்து பேர் கொண்ட குழு வந்தது.  அந்தக் குழுவின் தலைவர்,  சென்னை  ஜப்பானியச்  சங்கத்தின் தலைவரின் நண்பர் என்பதாலும்,  நான் சென்னையிலிருந்து வந்த ஒரே பெண் பயிற்சியாளர் என்பதாலும்,  குழுவினர் அனைவரும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அதில் சென்னை ஆனந்த் திரையரங்கு உரிமையாளரும் வந்திருந்தார்.  நான் இரு வாரங்கள் கழித்து  ஓசகா  செல்லும் விஷயத்தை அவர் தெரிந்து கொண்ட போது,  அவர் எனக்கு அங்கு வசிக்கும் கார்த்திக் என்பவரின்  முகவரியைத்  தந்தார்.  அது  எனக்குப்  பயன்படுமா இல்லையா என்பது தெரியாத போதும், அந்த முகவரியை நான் பத்திரமாகக் குறித்துக் கொண்டேன்.

ஒரு வருடப் பயிற்சியில் முதல் ஆறு வாரங்கள் ஜப்பானிய மொழிப் பயிற்சியும், ஜப்பானியக் கலாச்சாரம், பண்பாடு பற்றிய விஷயங்கள் பலவற்றை அறியும் வாய்ப்பினையும் பெற்று, ஓசகா நகருக்கு வந்தேன்.  நகரை அறிந்து கொள்வதிலும், மையத்தில் உள்ளவர்களைத் தெரிந்து கொள்வதிலும், சிகேரூவில் இருப்பவர்களுடன் பழகுவதிலும் இரண்டு வாரங்கள் சென்றதே தெரியவில்லை.  மூன்றாம் வாரம் தான் தனிமை புரிந்தது. நான்கு வயதான மகன் இந்தியாவில் இருந்தான்.  கணவர்  ஹாங்காங்கில்  வேலையில்   இருந்தார்.  குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருந்து கொண்டு, நல்ல எதிர்காலத்திற்காகப் பிரிவுச்  சுமையைத்  தாங்கிக் கொண்டிருந்த சமயம் அது.  யாராவது நல்ல நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா என்று மனம் அலைந்தது.  அப்போது கார்த்திக்கை தொடர்பு கொள்ள முயன்றேன்.  தொடர்பு சரியாகக்  கிட்டவில்லை. தொலைப்பேசி எண் தவறோ என்று எண்ணத் தோன்றியது.  பின்னர் முகவரி இருந்ததால், கடிதம் எழுதலாம் என்று முடிவு செய்தேன்.  கார்த்திக் தமிழர் என்பதால் தமிழிலேயே கடிதம் எழுதினேன்.  கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டு, பதிலுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.

அதற்கிடையில் என் தோழியின் தேடுதல் வேட்டையின் விளைவு. சந்தோஷ் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிஇரண்டு வாரங்கள் சென்றுவிட்டன. பதில் ஏதும் வரவில்லை.  என்னுடைய மின்னஞ்சல் அவருக்குக் கிடைத்ததோ இல்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. மீண்டும் ஒரு முறை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தேன்.

கார்த்திக்கிற்கு கடிதம் அனுப்பி ஒரு வாரம் ஆகிவிட்டது.  பதிலேதும் இல்லை.  அவரது முகவரி மாறி இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்தது. திடீரென்று ஒரு நாள் மாலை தொலைப்பேசி அடித்தது. அந்த நண்பர் கார்த்திக் தான் பேசினார். அந்த வாரம் அவர் வெளியூர் சென்றிருந்ததால், கடிதத்தை அன்றுதான் கண்டதாகவும், என்னைக் காண வருவதாகவும் கூறினார்.  அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரியாத போதும், அவரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருந்தேன்.  ஒருவரையும் அறியாத ஊரிலே, சென்னையில் வளர்ந்து தற்போது ஓசகாவில் பணியாற்றும் அந்த நண்பரின் நட்பு எனக்கு நிச்சயம் பயன்படும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

அந்த வார முடிவில், ஞாயிற்றுக்கிழமை அவர் என்னைக் காண வந்தார். என்னைக் கண்டதும் அவர் சொன்ன சொற்கள், பத்து வருடங்களுக்குப் பிறகும் இன்னும் என் நினைவில் இருக்கின்றது.

ஆஹா.. ஜப்பானில் எனக்கு யார் தமிழில் கடிதம் எழுதியிருக்கிறார் என்று முதலில் ஆச்சரியப்பட்டேன். சரி.. சரி.. ஒரு ஒளவைப்பாட்டியைக் காணப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டு வந்தேன். இங்கே உங்களை பார்த்ததில் மகிழ்ச்சிஎன்று நகைச்சுவையுடன் கூறினார்.

உறவினர்கள் அனைவரையும் பிரிந்து, அத்துவானக் காட்டில், நம் மொழியில் அன்புடன் பேசும் போது, நமக்கு ஒரு தம்பி இருந்திருந்தால், இப்படித்தான் இருப்பாரோ என்று எண்ணும் வகையில் அன்றைய சந்திப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அவர் கிளம்பும் போது, “ஓசகாவில் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்என்று சொல்லிச் சென்றார்.

அடுத்து வந்த இரண்டு வாரங்களில் கடுமையான பயிற்சி காரணமாக வேறேதும் யோசிக்க நேரம் கிட்டவில்லை.  ஒரு நாள் கார்த்திக், ஓசகா நகரில் வாழும் தமிழர்கள் இணைந்து புது வருட நிகழ்ச்சியை நடத்தப் போவதாகவும், விருப்பம் இருந்தால் நானும் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பு விடுத்தார்.  ஓசகா நகரில் வாழும் மற்ற தமிழர்களைச் சந்திக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் உடன் சம்மதித்தேன்.

தமிழ்ப் புத்தாண்டு விழாவினை ஜப்பானில் தமிழர்கள் கொண்டாடியதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். முதன்முதலாக ஒரு விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி.  இந்தியாவில் இருக்கும்போது புத்தாண்டு அன்று, கோயிலுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டு வருவோம்.  அவ்வளவே.  கலை நிகழ்ச்சிகளும், வினா-விடை போட்டிகளும் நடைபெற்றன.  நல்ல இந்திய உணவினை உண்டு, மையத்திற்குத் திரும்பினேன்.

அடுத்து வந்த இரண்டு நாட்களில் அதைப் பற்றி அசை போட்டுக் கொண்டே என் ஓய்வு நேரத்தைக் கழித்தேன்.  மூன்றாம் நாள் எனக்கு கார்த்திக்கிடமிருந்து தொலைப்பேசி வந்தது. அவருடைய நண்பர் ஒருவருக்கு, எங்கள் மையத்தின் பக்கத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்ணைத் தெரியும் என்று சொல்லி, தொடர்பு எண்ணையும் கொடுத்தார்.  அந்த மாணவி யாராக இருக்கும்? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கும்? பல கேள்விகள் எழுந்தன.  இறுதியில் யாராக இருந்தாலும் சரி, ஒரு பெண் தோழி கிடைப்பாளே என்ற ஆசையில் உடனே அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டேன்.  அவள் தான் நான் இது வரை கூறி வந்த பிந்து.

என்னை அறிமுகம் செய்து கொண்டு, அவரைப் பற்றியும் சில விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.  நான் இருக்கும் இடம் பற்றிச் சொன்னேன்.  உடனே அவள், தன் வீடு அந்த மையத்திலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் இருக்கிறது என்றாள். உடனே சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது நேரமோ பத்து மணி. இருந்தாலும் ஊர் மிகவும் பாதுகாப்பான ஊர் என்பதால் பயமில்லாமல் பிந்து என்னைக் காண கிளம்பி வந்தாள்.  அவளைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  அவளுக்கும் என்னைக் கண்டதும் மிக்க மகிழ்ச்சி.  பிந்துவுடன் கற்கும் சக இந்தியர்கள் அனைவருமே ஆண்கள். எங்கள் சந்திப்பில் அவளுக்கும் பெண் தோழிகள் வேண்டும் என்ற எண்ணத்தில் வெற்றி கிட்டியது.

இருவரும் பல விஷயங்கள் பற்றிப்  பேசினோம். எனக்காகவே அவள்  அங்குக்  காத்திருந்தாள் என்று  எண்ணத்  தோன்றியது.  நாங்கள் இருவரும் நெருங்கிய தோழிகளானோம்.  தினம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டோம்.  கார்த்திக்கிற்கு தொடர்பு கொண்டு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டேன்.

விடுமுறை நாட்கள் வந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். இருவரும் நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றோம். ஒரு முறை பல்கலைக் கழகத்திற்கும் அழைத்துச் சென்றாள். அங்கிருந்த நண்பர்களையும் பேராசிரியர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினாள்.  எனக்குச் சுவையான உணவு வகைகளைச் சமைத்து விருந்து கொடுத்தாள்.  எங்கள் மையத்தின் உணவு விடுதியில் நான் அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை வாங்கிக் கொடுத்து உண்ண வைத்தேன்.  இருவரும் மிதிவண்டியில் மையத்தின் பக்கத்தில் உள்ள இடங்களுக்குச் சென்று வந்தோம். டென்னிஸ், பில்லியர்ட்ஸ் விளையாட்டுக்களை விளையாடினோம். மையத்தில் வேலை செய்யும் அனைவருக்கும், உணவு விடுதி ஆட்கள் அனைவருக்கும் பிந்துவும் மிகவும் பரிச்சயமான பெண்ணாக மாறினாள்.

பயிற்சி மையம் என்பதால், பல இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்வார்கள். எனக்கு அறிமுகம் ஆனவர்களை நான்  பிந்துவிற்கும்  அறிமுகம் செய்து வைத்தேன்.  பிந்து மகிழ்ச்சியோடு இருக்கும் தருணத்தில் ஒரு நாள் ஒரு செய்தி வந்தது.

என் அலுவலகத்திற்கு,  பிந்துவின்  நண்பர்  ரபி  தொலைப்பேசி  தொடர்பு கொண்டு, என்னிடம் பேச வேண்டும் என்று செய்தி அனுப்பினார். எனக்கு மிகுந்த ஆச்சரியம். நண்பர்கள் யாருமே என் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டது கிடையாது.  பிந்துவின் நண்பர் ரபியிடம் பேசினேன். அவர் பிந்துவின் தந்தை இறந்த செய்தியைக் கூறி, பிந்துவிடம் நான் கூற வேண்டும் என்று தெரிவித்தார். எவ்வளவுதான் நெருங்கிய தோழியாக இருந்த போதும், இந்தச் செய்தியை அவளுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் தைரியம் எனக்கு இருக்கவில்லை.  அதனால் அவரிடம் உதவி கோரினேன்.

பிந்துவை அவருடைய வீட்டிற்கு வர வைத்து, செய்தியைப் பக்குவமாக எடுத்துச் சொல்லச் சொல்லி விட்டு, இரண்டு நாட்கள் அவர்களது வீட்டிலேயே தங்கவும் ஏற்பாடு செய்யும்படிக் கேட்டுக் கொண்டேன். மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருந்த அந்த கேரளத்து நண்பர் அதற்கு ஒப்புக் கொண்டார். அவரது முகவரியைப் பெற்றுக் கொண்டு, மாலை அவர்களைச் சந்திக்க வருவதாகக் கூறினேன்.

மாலை பிந்துவை சந்திக்கும் வரை எனக்கு இருப்பே கொள்ளவில்லை.  என்னுடன் பயிற்சி பெறும் ஸ்ரீராம் என்பவருக்கு விசயத்தைக் கூறி, மாலை எனக்குத் துணையாக பிந்துவை சந்திக்க வரும்படிக் கேட்டுக் கொண்டேன். அவருக்கும் பிந்துவின் பரிச்சயம் இருந்ததால், செய்தி அறிந்து, உடன் வரச் சம்மதித்தார்.

பயிற்சி நேரம் முடிந்ததுமே, மூவரும்நேரே ரபியின் வீட்டிற்குச் சென்றோம். கவலையோடு இருந்த பிந்துவிற்கு ஆறுதல் கூற வழியற்றுத் தவித்தேன்.  அவளது தந்தை இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாகவும், செய்தியைத் தாமதமாக சொல்லியிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. அவர் இறந்த நேரத்தில் தான், பிந்து என் முன்னால், இரண்டு நாட்களுக்கு முன்பு, ஊருக்குப் பேசினாள்.  விவரத்தைக் கூறாமல், உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று மட்டுமே அன்று சொன்னதாகச் சொன்னாள் பிந்து.  அன்றே சொல்லாமல் ஏமாற்றி விட்டார்களே என்று பெரிதும் வருத்தப்பட்டாள். கடல் கடந்து வாழும் மக்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று அப்போது உணர்ந்தேன்.  ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு  மையத்திற்குத்  திரும்பினோம். இரண்டு நாட்கள்  கழித்துப்  பிந்து திரும்பியதும், தினம் ஒரு முறை அவளை நேரே சந்தித்து திரும்பினேன்.  பிந்து தந்தை இறந்த துயரத்திலிருந்து மீளப் பல நாட்கள் பிடித்தன.

எங்களது நட்பு நாளுக்கு நாள் வலுத்து வந்தது. அப்போது ஒரு நாள் இரவு பத்தரை மணி இருக்கும். பிந்துவிடமிருந்து அழைப்பு.

எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். உடனே என் வீட்டிற்கு வர முடியுமா?” என்று கேட்டாள்.

ஏன்? இப்போது பத்தரை ஆகிறதே?” என்று கேட்டேன்.

இல்லை.. நீ அவசியம் வர வேண்டும். நேரில் வந்தால் உனக்கு விவரம் புரியும்என்று கூறி அவசரமாக தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தாள்.

என்ன இது? பிந்து இப்படி அழைக்கும் ஆளே கிடையாது. ஏதோ பிரச்சினை.  சென்று பார்த்துவிட்டு வந்து விடலாம் என்று அந்த நேரத்தில் கிளம்பிச் சென்றேன்.

வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். கதவைத் திறந்த பிந்துவின்  முகத்தில் பயம் கலந்த நோக்கு. பிந்து என்னாச்சு?” என்று கேட்டேன்.

கையை வாயின் மேல் வைத்து அமைதியாக வருமாறுக் கூறி, வீட்டினுள்ளே அழைத்துச் சென்றாள். அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் ஜப்பானில் ஆய்வுப் படிப்பை முடித்து விட்டு, வேலை செய்வதாகச் சொல்லி, அவரை அறிமுகப்படுத்தினாள். பிறகு என்னை அறிமுகப்படுத்தினாள்.  மூவரும் சில நிமிடங்கள் பொது விசயங்களைப் பற்றி பேசினோம். பேசிய அந்த சில நிமிடங்களில் பிந்துவின் செயல்கள் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. இருந்தாலும் நான் எதையும் கேட்கவில்லை. புதிய நண்பர் முன் கேட்பதும் சரியல்லவே.

அடுத்த இரண்டு நிமிடங்களில், பிந்து கிளம்புவோமா?” என்று கேட்டாள். எங்கே?”  என்று கேட்டேன். உன் பயிற்சி  மையத்திற்குத்  தான்என்றாள். அப்படியா.. போகலாமே!என்றேன். என் நண்பரை அறிமுகப்படுத்தலாமே என்று தான் கூப்பிட்டேன்என்றாள் பிந்து.

மூவரும் வீட்டை விட்டுக் கிளம்பினோம்.  வீட்டைப் பூட்டிவிட்டுத் திரும்பிய பிந்துவின் முகத்தில் சற்று தெளிவு ஏற்பட்டது.  பயிற்சி மையம் வரை வந்தோம். நண்பர் சென்று வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். பிந்து என்னை மறுபடியும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.  அவள் நடந்து கொண்ட விதம் எனக்குச் சற்றும் விளங்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்தும், பிந்து அப்பாடா என்று பெருமூச்சு விட்டு, சோர்வுடன் அமர்ந்தாள்.

பிந்து.. இன்னிக்கு உனக்கு என்னாச்சு..?” என்று கேட்டேன்.

இப்போ வந்துட்டுப் போனாரே.. அவர் நான் கூப்பிடாமலேயே ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தார்.  ரொம்ப நேரம் பேசினார். பத்து மணி ஆகியும் கிளம்பற  மாதிரி தெரியல்ல. அதனால் தான், அவரைக் கிளப்ப, உனக்குத் தொந்தரவு தரும்படி ஆச்சு..என்றாளே பார்க்கலாம்.

ஏதற்காக வந்தார்?” என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.

அவருக்குத் திருமணமாகி சில வருடங்களிலேயே மனைவி டைவர்ஸ் செய்து கொண்டு போய்விட்டார். அதனால் பொழுது போகாமல் வந்தார் என்று நினைக்கிறேன்என்று சொன்னதும் தான் எனக்கு பிந்துவின் கஷ்டம் புரிந்தது.

வெளிநாடுகளில் படிக்கவும் பயிற்சி பெறவும் செல்லும் பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை நான் அத்தருணத்தில் புரிந்து கொண்டேன். திருமணத்திற்கு முன்பே எனக்கு ஜப்பான் சென்று பயிற்சி பெறும் வாய்ப்பு இருந்த போதும், என் பெற்றோர் அதற்கு ஒப்பவில்லை.  திருமணம் ஆன பின்பு, கணவன் வீட்டில் ஒப்புக் கொண்டால் சென்று வரலாம் என்று கூறிவிட்டனர். மணமான பின்பு ஐந்து வருடங்கள் கழிந்தே எனக்கு ஜப்பான் பயிற்சி வாய்ப்பு கிட்டியது.  பெற்றோரின் பயத்திற்கான காரணம் எனக்கு அப்போது தெளிவாகப் புரிந்தது.

சரியான நேரத்தில், பிந்து சமயோசிதமாக யோசித்து, என் உதவியை நாடியதை நினைத்து ஆச்சரியப்பட்டேன்.  பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு நான் பதினோரு மணியளவில் மையத்திற்குத் திரும்பினேன்.

திரும்பி வரும் வழிதோறும், பிந்துவிற்கு இன்னும் இருக்கும் ஆண்டுகளில் என்னென்ன தொந்தரவுகள் வரப் போகிறதோ என்ற எண்ணிய வண்ணம் நடந்தேன்.

மீதமிருந்த என் பயிற்சி நாட்களில், அவளுடன் மேலும் பேசி, விளையாடி, ஊரைச் சுற்றி வந்தேன். நான் கிளம்பும் நாள் வந்தது. பிந்துவை அவளது வீட்டிற்குச் சென்று சந்தித்தேன். என் பிரிவை எண்ணி வருந்தி, அழுதுவிட்டாள் பிந்து.  இருவரும் பிரியா விடை பெற்றோம். நான் மையத்தை விட்டுக் கிளம்பும் போது, பிந்து மற்ற நண்பர்களுடன் என்னை வழியனுப்பி வைத்தாள். ஜப்பானில் தங்கிய அந்த ஒரு வருடம், என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அங்குக் கிடைத்த நண்பர்களும் மறக்க முடியாத நண்பர்கள்.

ஜப்பானில் பயிற்சி முடிந்து நான் என் கணவருடன் ஹாங்காங்கில் வசிக்க ஆரம்பித்தேன். பிந்துவின் நட்பு மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து இருந்தது. அவளது சகோதரியின் திருமணம்,  அவர்களுக்குப் பிறந்த குழந்தை போன்ற விவரங்கள் எனக்குத் தெரிய வந்தது. பிறகு பல வருடங்கள் தொடர்பு இல்லாமல் போனது.  அவ்வப்போது மின்னஞ்சல் அனுப்பிப் பார்ப்பேன். பதிலேதும் வந்ததில்லை.

ஹாங்காங்கில் பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அதில் ஒரு நண்பரின் குடும்பத்தினருக்கு தாங்கொணா துயரம் வந்து சேர்ந்தது. ஒரு தீ விபத்தில் இரட்டையர்களில் ஒரு குழந்தை இறந்தது. என் தோழிக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டு மூச்சுத் திணறல் நோய் ஏற்பட்டு, வருந்திக் கொண்டிருந்த நேரம். அப்போது தான் நான் பிந்துவைத் தேடும் முயற்சியிலும் இருந்தேன்.

ஒரு நாள் காலை தோழி இறந்த செய்தி வந்தது. தோழியின் வீட்டிற்குச் சென்று விசாரித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்தேன். வேலை செய்ய மனமே இல்லாமல், மின்னஞ்சல்களை அலசிக் கொண்டு இருந்தேன்.  அப்போது சந்தோஷ் அவர்களிடமிருந்து பதில் வந்திருந்தது. மனம் வருத்தத்துடன் இருந்த போதும், பிந்துவைப் பற்றி அறியும் ஆவலுடன், அந்த மின்னஞ்சலைத் திறந்து படித்தேன்.  அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, காரணம் ஏதும் கூறாமல், பிந்து தன்னை மாய்த்துக் கொண்டார்என்று அதில் குறிப்பிட்டு இருந்தது.

நான் பல நாட்கள் ஆவலுடன் காத்திருந்த பதில் அன்று ஏன் வந்தது? ஏன் அப்படி வந்தது? எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

ஜப்பான் வந்த போது என் கணவர் பிந்துவை சந்தித்திருந்தார். எங்களது நட்பைப் பற்றி அவருக்கும் தெரியும்.  அதனால் உடனே அவருக்குப் பேசினேன்.  விசயத்தைச் சொன்னதும் அவரும் வருத்தப்பட்டார். ஒரே நாளில் இரண்டு தோழிகளின் சாவு பற்றிய செய்தி.  அந்த நாள் உண்மையில் என்னிடத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது.

கஷ்டப்பட்டு இந்தியாவில் பற்பல போட்டிகளுக்கு இடையே படித்து, பட்டம் பெற்று, ஜப்பானில் ஆய்வு செய்யத் தகுதி பெற்று, ஆய்வுப் பட்டத்தையும் பெற்று, இறுதியில் பிந்து தன்னை இப்படி மாய்த்துக் கொண்டாளே! என்னால் நம்பவே முடியவில்லை.  இதற்காகவா பிறந்தாய் நீ என்ற கேள்வி அன்று என் மனத்தில் எழுந்தது.  அன்று முதல் நான் என்ன காரியத்தைச் செய்தாலும், இந்தக் கேள்வி என் மனதில் அடிக்கடி வந்து போக ஆரம்பித்தது. இன்று வரையிலும் என்னை நான் கேட்டுக் கொண்டும் இருக்கிறேன்.