4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல்களில் உளத்தற்காப்பு முறைகள் - முனைவர் மு.சுகந்தி

 

நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல்களில் உளத்தற்காப்பு முறைகள்

                                                  முனைவர் மு.சுகந்தி,  

                                      தமிழ்த்துறை(சுயநிதி),   

  என்.ஜி.எம். கல்லூரி,

  பொள்ளாச்சி.

               

    மனிதன் ஆறாம் அறிவைப் பெற்று,  சிந்திக்கத் தொடங்கிய காலம் முதலே நாட்டுப்புற வழக்காறுகள் தோற்றம் பெற்றுவிட்டன. உளவியல் அண்மையில் தோன்றிய புதியதுறை. இத்துறை மனிதனின் உள்ளத்தை அறிவியல் முறைப்படி ஆராய்வதாக அமைகிறது. தனக்கென தனி வரலாறும் பண்பாடும் கொண்டது கொங்குநாடு. அந்நாட்டு மக்களின் வாழ்வியல் பயனாக மலர்ந்தவை கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள். இப்பாடல்களில் ஒப்பாரிப் பாடல்கள் அவலச்சுவையின் வெளிப்பாடாகப் பாடப்படுகின்றன. இக்கட்டுரையில் திருப்பூர் மாவட்டம் - உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள, கொங்கல்நகரம் கிராம மக்களிடம் சேகரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடல்களில் எத்தகு உளத்தற்காப்பு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஆராயப்படுகிறது.

    இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது. அதிலும் உயிரிழப்பு எதனாலும் ஈடுசெய்ய முடியாதது. காலம் என்ற மருந்தால் மட்டுமே உயிரிழப்பால் ஏற்பட்ட வேதனையைக் குறைக்க முடியும். ஆனால் பெண்கள், உறவுகளின் உயிரிழப்பால் ஏற்படும் அப்போதைய வேதனையையும் பொருள் இழப்பு உட்பட்ட பல்வேறு இழப்புகளால் ஏற்படும் வேதனைகளையும் ஒப்பாரிப் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இதனால் உள்ளத்தில் ஏற்படும் அதிகப்படியான வேதனை சிறிது குறைந்து உள்ளம் பாதுகாக்கப்படுகிறது.

ஒப்பாரிபாடல் விளக்கம்:

    ஒப்பாரிப் பாடல்கள் பற்றிய அறிஞர்களின் கருத்துகள்,

     ஒப்பாரிக்கு ஒப்புச்சொல்லி அழுதல் என்று பொருள். அதோடு பெண்களால் பாடப்படுவது, இறந்தவர்க்கும் அடுத்த பிற பொருட்களுக்கும் ஒப்புச் சொல்லிப் பாடுவது(A Tamil English Dictionary – V.Viswanatha pillai, p.20)  என்று கூறுகிறது.

     இறந்தவர்களை நினைத்து அவர்கள் மீது பாடப்படும் பாடல்களே ஒப்பாரி. இறந்தவர்களின் இறப்பை எண்ணி, இறந்தவர்களையும் தம்மையும் ஒப்பிட்டுப் பாடுவதையும் ஒப்பாரி என்று கூறுவர்” (டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், ப.102) என்று விளக்கியுள்ளார்.   

    இறந்தவர்களின் உறவினர்களால் பாடப்படும் இப்பாடல்கள், இறப்பிற்காக மட்டுமின்றி, சில நேரங்களில் பொருள் இழந்த நிலையிலும் வாழ்கையில் குறைகளால் துயரம் ஏற்பட்ட நிலையிலும் பாடப்படுகின்றன.

உளவியல் (Psychology) விளக்கம்:

    உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்துறை பற்றி உளவியல் என்றால் நடத்தையைப் பற்றிப் படிக்கின்ற அறிவியல்” (ராஜராமன், அங்காடியாக்க உளவியல், பக். 10-11) என்று து.டீ. வாட்சன் அவர்களின் வரையறையைக் கூறியுள்ளார்.

செயற்படுத்துதல்:

    மனதில் தோன்றும் இன்ப துன்பங்களை வெளிப்படையாகக் கூறுதல் செயற்படுத்துதல் ஆகும். வெளியே சொல்ல முடிந்தால் சொல்வதால் பிரச்சனைகளை அதிகமாக்காமல் தெரிந்து கொண்டால் வேதனைகள் தீரும்” (டாக்டர் ருத்ரன், மனம் என்னும் மேடை, ப. 42) என்றும், “மனதிலிருக்கும் சிக்கலை முழுதாய் அவிழ்தால் அழகாக வருங்கால இழைபின்னலாம்” (மேலது) என்றும் கூறியுள்ளதால் வேதனை குறைவதற்கான வழி மனத்துன்பத்தை வெளிப்படத்துவது என்பதுடன் அழகான எதிர்காலத்தை உருவாக்கும் என்பதையும் அறியமுடிகிறது. ஒப்பாரிப்பாடல்களில்,

    ஆலாமரத்தடிய / அருங்கிளியா சோந்து நின்னா / அழச்சுவந்துஞ் சீர் கொடுக்க / அன்பான தம்பியெங்க” (சகுந்தலா) இதில் தன் துயரை நீக்கும் சகோதரன்(தம்பி) என்ற உறவை இழந்த நிலையில் அத்தம்பியின் சிறப்புடன், தன் துயரை நீக்க எவரும் இல்லா  நிலையை எடுத்துரைக்கிறாள்.

   என்னம்மா இங்கிருந்தா / தங்க நககேப்ப/ தனிச்சு வந்துஞ் சீர் கேப்ப” (மேலது)  என்றும், “வளத்தும்முடி காலமுங்கோ / வண்ணோ சயினெழந்தோ / வயிரக்கல்லுங் கூடெழந்தோ” (கிருஷ்ணம்மாள்) என்றும் பாடப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் தன் தாயிடம் உரிமையுடன் சீர் பெறுவர். ஆனால் அத்தாயையே இழந்த நிலையில் அவ்வுரிமையையும் இழந்ததை எண்ணி சுய இரக்கம் கொண்டு துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

    தீவோ பருத்திவெச்சு /  தேங்கா ஒடச்சுவச்சு /  தீவத்துக்குங் கீழால /  செல்லி தொவண்டழுதா” (மாயாத்தாள்) என்பதால் இறந்தவர்களைத் தெய்வமாக எண்ணி வணங்கிய பின்பு, பெண்கள் தம் துயரத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளமையை அறியமுடிகிறது.

    தேடப்பட்டார் பக்கிருந்தா / கள்ளேர் நுழையாங்கோ / கள்ளேர் வரேல் அஞ்சுவாங்கோ” (லட்சுமி) என்று தன் கணவனுடன் பாதுகாப்பையும் இழந்ததை எண்ணி வருந்துகிறாள்.

    அருகுபோல் இராமமிட்டு / ஆத்தோர போயிட்டா / ஆறும் பகையாகு / அதிக சன வீணாகு” (லோகநாயகி), இப்பாடலில் பெண் கணவனை இழந்த நிலையி;ல் பிறந்த வீட்டின், புகுந்த வீட்டின், சமுதாயத்தின் அரவணைப்பை இழந்து அவர்களால் புறக்கணிக்கப்படும் தன்நிலை எண்ணி வருந்துகிறாள்.

    இன்னெக்கு மதுப்பா பொழக்கிலியே / மதுரகட்டி ஆளுலியே / நா நல்லவர்க்குஞ் சொல்லானே / நாட்டுக்கு எழுச்சானே” (லட்சுமி) என்று திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண், திருமண வாழ்வில் வறுமை ஏற்பட்ட பொழுது மக்கள் அவளைத் தாழ்வாகப் பேசியதை எண்ணி வருந்துகிறாள்.

    பெண்கள் உறவை, உரிமையை, பாதுகாப்பை, அரவணைப்பை இழந்த நிலைகளையும் தன் குடும்ப வறுமையையும், இறந்தவரையும் தம்மையும் ஒப்பிட்டுப்பாடும் ஒப்பாரிப்பாடல்களின் மூலம் அழுகையுடன் வெளிப்படுத்தி தம் கவலையைக் குறைத்துக் கொள்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.   

சூழலிடம் காணுதல்

    புறத்தேற்றம் என்பது வெளியுலக சூழலாகும். இப்புறத்தேற்றம் பற்றி தன் மன உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் வெளியுலக பிம்பங்கள் மேல் ஏற்றிக் காணுதல்(Irwin G.Sarason. Barbara R.Sarason , Abnormal Psychology,p. 356) என்றும. ‘;தம்மிடத்தில் உள்ள உள்துடிப்புகளையும் பண்புகளையும் பிறருக்கு ஏற்றுதலும் பிறரிடம் காண்பதும் புறத்தெறிதல் எனப்படும்” (அ.பெசண்ட் கீரிப்பர் ராஜ்(மொ.பெ.ஆ.), பிறழ்நிலை உளவியல், ப.63) என்றும் கூறப்பட்டுள்ளன. ஒப்பாரிப்பாடல்களில் பெண்கள் தம் உள்துடிப்புகளை வெளியுலக பிம்பங்கள் மீது ஏற்றிக் காண்பதைக் காணமுடிகிறது.

    அரசமரக் காகமெல்லா / அள்ளி எடுக்குமின்னு / ஆண்காகங் கொத்துமின்னு / அருங்கிளியா தாநெனச்சோ” (பானுமதி),  இப்பாடலில்  இறந்தவர்கள் காகமாக வந்து தாம் வைக்கும் உணவை உண்பர் என்ற நம்பிக்கை அடிப்படையிலான உள்துடிப்பால் காகத்தை மனிதனாகவும், காகம் உணவு உண்பதை மனிதனே உண்பதாகவும் எண்ணி ஆறுதல் அடைகின்றனர்.

    கூச்சேத்து பல்லியெல்லா / குறிப்பாகோ சொல்லியிருந்தா / நாவால் கலித்திருப்போ / நல்ல சொல்லுங் கேட்டிருப்போ” (லட்சுமி) என்பதால், தன் தந்தை இறப்பிற்கு முன்பு அவரிடம் சென்று உரையாடாமல் போனது தன் தவறு என்று எண்ணும் நிலையில் மனம் மிகுந்த வேதை அடையும், ஆனால் அது பிறவற்றால் ஏற்பட்டது, அதாவது பல்லி சகுனம் கூறாததால் ஏற்பட்ட தவறு என்று எண்ணும் நிலையில் வேதை சிறிது குறையும், பெண்களின்  நம்பிக்கை அடிப்படையிலான உள்துடிப்பு  புறவுலக உயிரினமான பல்லியின் மீது ஏற்றப்பட்டுள்ளது.

கற்பனை செய்தல்:

    மனித உள்ளம் சூனியமன்று. அதில் பண்டைய நினைவுகள் கருத்துகள் துயின்று கொண்டிருக்கின்றன என்று டன்ஸ் ஸ்கோடல் கூறுகிறார்” (தி. இரா. அரங்கராசன் (மொ.பெ.ஆ.), பொது உளவியல் - இரண்டாவது தொகுதி, ப.167) என்கிறார்.

     கற்பனை இரண்டு வகைப்படும் ஒன்று பழைய நினைவுகளை மீண்டும் எண்ணிப்பார்ப்பது. இல்லாத ஒன்றை எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்ப்பது” (எம்.எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள் ப.77) என்கிறார். இவற்;றைக் கொண்டு மனம் இறந்தகாலத்தை, எதிர்காலத்தைக் கற்பனை செய்து கொள்ளும் என்பதை அறியமுடிகிறது.

    வாழே நறுநறுக்கி / வாழெலைய நாவறுத்து / வாழெலைய சுத்தி வந்து / வைத்திடுவா நூறுவக” (பானுமதி) என்றும்,

    ஒரு அடுப்புக் கூட்டுனா / ஒரு நேரமாகுமுன்னு / இரு அடுப்புக் கூட்டி / இருபுறமும் சாதம் பொங்கி” (சகுந்தலா) என்றும், ஒரு பெண் தன் தாயை இழந்த நிலையில், பிறந்த வீட்டிற்கு வந்தால் தாய் எப்படியெல்லாம் தன்னை உபசரித்தால் என்று கூறி, இனித் தன்னை அவ்வாறு உபசரிக்க யாரும் இல்லை என்ற துன்பத்தில் அத்தகு நினைவைக் கற்பனை செய்து பாடல்களின் மூலம் வெளிப்படுத்தி ஆறுதலடைகிறாள்.

     மரத்த சதிரப்பண்ணி / மல்லிகப்பூந் தொட்டி செய்து / மல்லிகப்பூந் தொட்டியிலே / மகுந்தா செலயோடு” (கிருஷ்ணம்மாள்)  என்று குழந்தை இல்லாத வேதனையில் தனக்குக் குழந்தை பிறந்தால் மல்லிகைப்பூந் தொட்டிலில் உறங்கச் செய்யப்போவதாக எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறாள்.

    பக்க சடையும் பின்னி / பார்வைக்கோர் பொட்டுமிட்டு / பந்தாட அனுப்புனது  (மாயாத்தாள்), இப்பாடலில் தாய் தன் குழந்தை பற்றிய இறந்தகால நிகழ்வைக் கற்பனை செய்கிறாள்.

     இத்தகு கற்பனைகள் தற்காலிகமாக துயரத்தை மறக்கச் செய்கிறது.

பொதுமைப்படுத்துதல்

    பொதுமையாக்கம் (Generalization) பற்றிக் கூறுகையில் மனதால் எண்ணக்கூடிய ஒன்றைப் பொதுப்படையான ஒன்றுடன் சேர்த்துப் பார்ப்பது(John Daniel Morell, elements of psychology, p.209) என்கிறார்.

    கன்னீம்பா நின்னழுதா / காசிநதி யென்ன செய்யு / கமுக மர மென்னபண்ணு / மயிலி தலையெழுத்து /  மயிலியம்பா வாங்கும்பரோ” (கிருஷ்ணம்மாள்) என்கிறார். மனிதர்களுக்கு இறைவன், எழுதிய தலையெழுத்தும் கொடுத்த வரமும் மாறாதது. அனைவருக்கும் பொது என்னும் நிலையில் துன்பத்தை ஏற்று ஆறுதலடைதல்.

    சாமி பசுமாடு / சந்தன பிள்ளநெரோ / சாமிக்கு முன்னால / சரஸ்வதியா மண்டியிட்டா / தட்டி எழுப்பாம / தடியால் அடிச்சீங்கோ / சாமி உடுஞ்சாபோ / மண்ணூலெறங்காம / ஒரு மரத்துமேல் சாடாம / உங்க மயிலிமேல் சாடுனது” (லட்சுமி) என்கிறார். தெய்வம் குற்றம் செய்தால் தண்டிக்கும் என்பது தெய்வப்பற்றுள்ள அனைவரும் ஏற்றுக் கொண்ட பொதுக்கருத்து. இக்கருத்திற்கு ஏற்ப ஒரு பெண் தனக்குக் குழந்தை இல்லாமைக்கு தந்தையின் தெய்வக் குற்றமே காரணமென்று எண்ணுகிறாள்.

     இவை உலக இயல்பு என்று எண்ணி ஆறதலடையும் போக்கு ஆகும்.

முடிவுரை

    இவ்வாறு பாடப்படும் இழந்தோர் பாடல்களில் பாடுபவர்கள், இழந்தோர் மேல் கொண்டுள்ள பாசத்தையும் மரியாதையையும் அவர்களை இழந்ததால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பையும் வெளிப்படுத்துகின்றனர். இப்பாடல்களில் உளவியல் உளத்தற்காப்பு முறைகளான செயற்படுத்துதல், சூழலிடம் காணுதல், கற்பனை செய்தல், பொதுமைப்படுத்துதல் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் தற்காலிகமாக அவர்களின் துன்பம் நீங்கப் பெறுவதை அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்:

 

1. அ.பெசண்ட் கீரிப்பர் ராஜ்(மொ.பெ.ஆ.), பிறழ்நிலை உளவியல், 

2. எம்.எஸ். உதயமூர்த்தி, எண்ணங்கள், 

3. தி. இரா. அரங்கராசன்(மொ.பெ.ஆ.), பொது உளவியல் - இரண்டாவது தொகுதி,                        

4. ராஜராமன், அங்காடியாக்க உளவியல்,  

5. டாக்டர் ருத்ரன், மனம் என்னும் மேடை, 

6. டாக்டர் விஜயலட்சுமி இராமசாமி, கோவை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள், 

7. Irwin G.Sarason. Barbara R.Sarason , Abnormal Psychology, 

8. John Daniel Morell, elements of psychology, 

9.V.Viswanatha pillai, A Tamil English Dictionary.