4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

திருக்கருப்பறியலூர் தலபுராணம் அருள்மிகு கோல்வளையாள் உடனாய குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் - Dr.விஜயலெக்ஷ்மி குமரகுரு

 

திருக்கருப்பறியலூர் தலபுராணம்  அருள்மிகு கோல்வளையாள் உடனாய குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்

 

 Dr.விஜயலெக்ஷ்மி குமரகுரு

 

 

ஈசன் குடிகொண்டுள்ள திருத்தலங்களைப் பெருங்கோவில், கரக்கோவில், ஞாலற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக் கோவில், ஆலக் கோவில், திருக்கோவில் என்று எட்டு வகையாகக் காட்டுகின்றார் ஆன்மிக அறிஞர் பெருமக்கள். அவற்றுள் கொகுடி என்னும் முல்லை வனம் சூழப் பெற்று விளங்கும்           கோவில்களில் திருக்கருப்பறியலூரும் ஒன்றானதால் இத்தலம் கொகுடிக் கோவில் எனப் பெயர் பெற்றது. திருக்கருப்பறியலூர்          என்னும் இத்தலம் மேலக்காழி, தலைஞாயிறு என்றும் வழங்கப்          பெறும். ஏறக்குறைய 1500 வருடப் பழமையான இத்தலத்திற்கு கருமநாசபுரம் என்னும் பெயரும் வழங்கப்படுகின்றது. தேவாரப்          பாடல் பெற்ற காவிரியின் வடகரைத் தலங்களில் இத்தலம் 27வது தலம். திரு ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல்          பெற்றுத் திகழ்கிறது.

 

நாள்தோறும் வழிபாட்டிற்கெனவே முல்லை மலரும் சோலை, பாக்குக் குலைகளும், நன்கு கனிந்த பழங்களும் உதிர,அங்கு குயில்கள் கூவ, அதன் இசைக் கேற்ப மயில்கள் நடனமிடும் இங்கு, ... “கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோவில் ஏற்றானை..         (தேவா- 7535) ஐயனை மனத்தினால் நினைத்த போதே அவர்                   நமக்கு இனிமையைத் தருகிறார் என்று சுந்தரமூர்த்தி நாயனார்               காட்டும் பெருமானை நாம் காணவேண்டுமா? எங்கே அவன்? இருப்பதும் எவ்வூர்?  அங்கே காலைப் போதிலே, போதோடு மலர்களும் புனைந்து நிற்கின்ற நாதன்”..

 குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்

  கற்றென இருப்பது கருப்பறியலூரே”(தேவாரம்-1806, இரண்டாம் திருமுறை) எனக் கை காட்டுகின்றார் ஞான சம்பந்தர். இதோ திருக்கருப்பறியலூருக்குச் செல்லுவோம். 

 

வைத்தீச்வரன் கோவில் ரயில் வண்டி நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர், தொலைவில் திருப்பனந்தாள் செல்லும் சாலையில், தலைஞாயிறு என்னும் கைகாட்டி உள்ள இடத்தில் வலது புறம் பிரியும் சாலையில் செல்ல இத்தலத்தை அடையலாம். மயிலாடு துறையிலிருந்து நகரப் பேருந்து வசதியும் உள்ளது.

 

திருப்பெயர்:

இறைவன்- குற்றம் பொறுத்த நாதர்; அபராதக்ஷமேஸ்வரர்

இறைவி- கோல்வளை நாயகி, விசித்தர வளையாம்பிகை.

தீர்த்தம்: இந்திர தீர்த்தம், செங்கழுநீர்த் தாடகம், சூரிய புஷ்கரணி

இத்தலத்தில் சிறப்பு அம்சமாய் சுயம்புவாகத் தோன்றிய ஈசனை - இந்திரன், வசிஷ்டர், ஆஞ்ச நேயர், இந்திரஜித், இராவணன், சூரியன் ஆகியோர் வழிபட்டனர்.

72 மகரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்க்கு இன்னொரு பிறவி கிடையாது. சிவனின் திருவடிக் கீழ் சேர்ந்து விடுவார்கள் என்பது ஐதீகம். அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவை அடைய மாட்டார்கள். அதனாலேயே இத்தலம் கருப்பறியலூர்’; என வழங்கப் படுகின்றது. சூரியன் வழிபட்டு நற்கதி பெற்றதால் ஆதித்ய புரிஎன்றும் வழங்கப் படுகின்றது.

 

தல வரலாறு:

ஒரு சமயம், தன்னிகர் யாருமில்லை என்று  கயிலை சென்ற இந்திரன், இறுமாப்புடன் இருக்க மகேசன் பூத வடிவில் அவன் முன் தோன்றினார். இந்திரன் அவர் மீது தன் வஜ்ராயுத்தை வீச பெருமான் தன் திருக்கோலக் காட்சியருளினார். இந்திரன் தன் தவறை உணர்ந்து குற்றம் வேண்ட இறைவன் அவன் குற்றத்தைப் பொறுத்து அருளினார். அதனால் இங்கு உறையும் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர்என்பது தலபுராணம்.

 

இன்னொரு புராணமும் சொல்லப் படுகின்றது. இராவண வதம் முடிந்த பிறகு. ராவணனைக் கொன்ற பழி தீர, ஸ்ரீராமர் தான் பூஜை செய்ய வேண்டி சிவத் திருமேனியைத் தேட, இரண்டு நாழிகைக்குள் சிவலிங்கம் கொண்டு வரவேண்டும் எனப் பணிக்கிறரர். ஆஞ்சநேயர் தான் உடனே காசிக்குச் சென்று கொண்டு வருவதாகச் சொல்லிச் செல்கிறார். அவர் வருவதற்குள் மணலைப் பிடித்து லிங்கத் திருமேனியை உருவாக்கி,  ஸ்ரீ ராமர் அதனை ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றார், தான் வருவதற்குள் பூஜை தொடங்கியதைக் கண்டு ஆஞ்ச நேயன் வருந்தினான். மேலும் தன் வாலால் அந்த லிங்கத்தைக் கட்டி இழுக்க,  அவனால் முடியவில்லை. இதனால் சிவ அபராதம் ஏற்பட்டது. இத்தோஷத்தைப் போக்கிக் கொள்ள அனுமனை சிவனை நோக்கித் தவம் செய்யுமாறு ஸ்ரீ ராமர் ஆலோசனை அருளினார். அனுமனும் அவ்வாறே தவமிருக்க சிவனார் மகிழ்ந்து. தலைஞாயிறு என்னும்  தலம் சென்று வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும் என்று சொல்லி அருள் பாலித்தார். அவ்வாறே அனுமனும் தலைஞாயிறு வந்து வழிபட தோஷம் நீங்கியது. சிவனாரின் கருணையை வியந்து அருகே தன் பெயரால் ஒரு சிவத்தலம் அமைத்துப் போற்றினார் அதுவே திருக்குரக்காஎன்னும் தலமாயிற்று.  

 

ராவணனின் மகன் மேகநாதன். இந்திரனைப் போரில் வென்றதால் இவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானத்தில் பறந்த கொண்டிருந்தான். திடீரென்று வழியில் விமானத்தின் ஓட்டம் தடைப்பட்டது. கீழே இறங்கிச் சென்று பார்த்த போது அந்த இடத்தில் இருந்த சிவாலயம் மீது தான் பறந்ததை அறிந்தான். அபராதம் செய்து விட்டதாக உணர்ந்து வருந்திய இந்திரஜித் இத்தலத்து தீர்த்தத்தில் இறங்கி நீராடி இறைவனைப் பூஜித்தான். இவனது கவலை அகல விமானம் மீண்டும் பறக்கத் தொடங்கியது. அற்புதமான இந்த தலத்து லிங்கத்தைப் பெயர்த்து இலங்கைக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய முயன்றான் மேகநாதன். அது முடியாமல் சக்தி யின்றி மயங்கி விழுந்தான். செய்தியறிந்த இராவணன் ஓடோடி வந்து          சிவனின் திருவடியில் விழுந்து தன் மகனின் தவற்றைப் பொறுத்து அருளுமாறு வேண்ட, கருணைக் கடலாம் இறைவனும் குற்றம் பொறுத்து அருள் செய்தார். அதனாலே இத்தல இறைவன் குற்றம் பொறுத்த நாதர்எனப் போற்றப் படுகின்றார் என்னும் வரலாறும் பேசப்படுகின்றது.

சூரியன் தான் பெற்ற சாபத்திலிருந்த விடுபட சிவத்தலங்கள் அனைத்திற்கும் சென்று வழிபட்டான். அவற்றுள் இத்தலம் மிக முக்கியமானது.  அதனாலேயே இத்தலம் தலைஞாயிறு என்றும் அழைக்கப் படுகின்றது.

இத்தலத்தில் நாம் செய்யும் அறச் செயல்கள் அனைத்தும் பன்மடங்காகப் பெருகும் என பிரம்மா சொல்ல, வசிஷ்டரும் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டு உய்வுற்றார் என்கிற தலபுராணக் குறிப்பும்; உள்ளது.

 

திருக் கோவில் அமைப்பு:

மூலவர் குற்றம் பொறுத்த நாதர்சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கியும் அம்பாள்  கோல்வளை நாயதி தெற்கு நோக்கியும் தரிசனம் அருள சுற்றுப் பிரகாரத்தில் சித்தி விநாயகர், லிங்கோத்பவர், துர்க்கை. பிரம்மா ஆகியோர் நிறைந்தருள்கின்றனர். நான்கு பிரகாரங்களை உடைய இக்கோவிலில், வெளிப்பிரகாரத்தில். மலைக்கோவில் அமைப்பில் தனிக்கோவிலாக, முதல் தளத்தில் தோணியப்பர் மற்றும் உமையம்மை சன்னதி. அங்கே கர்ப்ப           ஞானேஸ்வரர்என்றும்; அம்மை கர்ப்ப ஞான பரமேஸ்வரிஎன்றும் பெயருடையோராகி அருள் பாலிக்கின்றனர்.  அதற்கு, மேல் செங்குத்தான மரப்படிகளில் ஏறிச் சென்று இரண்டாவது தளத்தில் சட்டை நாதரைதரிசிக்கலாம். சீர்காழி சட்டை நாதர் திருக்கோயில் போலவே    மலைக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டுள்ளதால் இத்தலத்தை மேலைக்காழி என்றம் கூறுவர். இன்னொரு சிறப்பு அம்சம். இத்திருக் கோவிலில் சண்டிகேசுவரர் மனைவியாகிய யாமினியுடன் வீற்றிருக்கின்றார்.

 

குற்றம் பொறுத்த நாதர்- கோயில் கோபுரம் கிழக்கு நோக்கி மூன்று நிலைகளாகி நிமிர்ந்திருக்க உள் மண்டபம் வெளவால் நெத்தி         மண்டபம்என வழங்கப் படுகின்றது. லிங்கோத்பவர் சன்னதிக்கு          எதிராக தலக் கொடியாக கொகுடி முல்லை படர்ந்துள்ளது. இத்தலத்தில் சோழர் கால கல்வெட்டுக்கள் காணக் கிடைக்கின்றன.

 

வழிபாடுகள்:

இத்தலத்தில் காரண, காமிய ஆகம பூஜை முறைப்படி தினப்படி ஆராதனைகளோடு சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் சிறப்பு            வழிபாடுகள் நடத்துகின்றனர். மாத பிரதோஷம், ஐப்பசி         அன்னாபிஷேகம், திருக் கார்த்திகை, மார்கழி திருவாதிரை.  மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், ஆகிய விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அபிஷேகம், ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டு  இறைமேனித் திருவீதி உலாவும் கொண்டாடுகின்றனர்.   

 

 

நின்றருளும் ஈசன்:

இத்ததலத்து ஈசன், வந்து வழிபடுவோர்க்கெல்லாம் அருள்          நோக்கு ஈந்து பலன் கொடுக்கும் தெய்வமாக இருக்கின்றார் ஈசனும் உமையம்மையும். மகப்பேறு பாக்கியம் அருளும் மகத்துவமும் கொண்டது இத்தலம். அதற்கு ஒரு வரலாறு உண்டு.

விசித்ராங்கதன் என்னும் மன்னன் வெகு நாட்களாகப் புத்ர பாக்கியம் இன்றி வருந்தினான். அவன் தன் மனைவி சுசீலையுடன் கருப்பறியலூர் தலத்திற்குவந்து குழந்தை பாக்கியம் வேண்டி     வழிபாடுகள் செய்தான். அம்மையும் அப்பனும் கனிந்து திருவுளம்         அருள அவர்கள் மகப்பேறு பாக்கியம் பெற்றார்கள்.  எல்லையிலா    ஆனந்தம் அடைந்த மன்னன் இத்தலம் வந்து அழகுறக் கோவிலை   எழுப்பி நேர்த்திக் கடன் முடித்தான் என்பது வரலாறு.

எத்தனையோ பேருக்கு பிள்ளைப் பேறு உண்டாகாமல் போவதும். அப்படியே உண்டான போதும் சிசு கலைந்து போவதும். குடும்பத்தில் துர்மரணம் ஏற்படுவதும் ஆக நேர்கையில் இவையெல்லாம்                   ஆலாள தோஷத்தினால் உண்டாவது என்பர். அவர்கள் இத்தலத்திற்கு வந்து  கர்ப்ப ஞானேசுவரிஅம்மையை வந்து வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி நன் மக்கட் பேறு பெற்று மகிழ்வர்.

 

பரிகாரத் தலம்:

சூரியன் வழிபட்டு நற்கதி அடைந்த தலமானதால் சூரியதோஷ    பரிகாரத் தலமும் ஆக இக்கோவில் விளங்குகின்றது. சூரிய                   தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் தோஷம் நீங்கப் பெற்று       நல்ல பயனைப் பெறுவார்கள்.

ஞான சம்பந்தப் பெருமானார் திருக்கருப்பறியலூர் தலத்து இறையைப் போற்றி ஒரு பதிகம் பாடியுள்ளார். பதினோராவது பாடல் பலசுருதி என்ற வகையில் அருள்கின்றார், பக்தியோடு வரும் அடியார்களுக்கு நற்கதி அளிக்கும் நாதன் இருக்கும் ஊர் கருப்பறியலூரே என்று முதல் பாடல் தொடங்கி,

“…கருப்பறியல் மேய கடவுளைப் பலம் தரு தமிழ்க் கிளவி பத்தும் இவை கற்று வலம்தருமவர்க்கு வினை வாடல் எளிதாமே(தேவா.1807 2ம் திருமுறை)

என்று வந்;தோர் வினை தீரும் வழிகாட்டி முடிக்கின்றார்.                  சுந்தர மூர்த்தி சுவாமிகளோ, கூற்றுவனையும் காலால் உதைத்துத் தள்ளிய குழகன், அவனைத் தரிசிக்க மரண பயம் ஒழியும். படர்ந்து வருத்தும் நோய்களும், வினைகளும் அனைத்தும் ஒன்றுமில்லாது      அழிய வேண்டுமெனில்,

செடிகொள்நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்                தொழியச்சிந்தை செய்மின். போற்றிப் பூசை செய்து பாட                          தீராத வல்வினைகள் அனைத்தும் தீர்த்து விடுவான். அவனை    மனத்தினால் நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு இனிமையைத் தருபவன் என்று (தேவாரம் எழாம் திருமுறை -7534-7544) திருக்கருப்பறியலூர் பதிகம் முழுவதும் பத்து பாடல்களில் தெளிய வைத்து “,…இடர் தீர்க்கும் கருப்பறியலூர்இலைமலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்துங்கள் என்று சொல்லி முடிக்கின்றார்.

 

நேரில் சென்று நாதனை, “கோல்வளையாள் உடனாய குற்றம் பொறுத்த நாதர்திருவடி தனை வணங்கி நல்லருள் பெறுவோம்.                     நேரில் செல்ல முடியாதவர்கள் மனத்தினால் அன்பு செய்து அவன் தாள் வணங்கி உய்வுறுவோம்

 

முகவரி:

அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்.                            தலைஞாயிறு அஞ்சல், இளந்தோப்பு வழி, மயிலாடுதுறை                     வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், பின் கோடு 614 712. தமிழ் நாடு

கோவில் திறந்திருக்கும் நேரம்:காலை 6.00 முதல் 12 மணி;                 மாலை 5.00 முதல் 8 மணி வரை.

 

பயன் பட்ட நூல்கள்:

    • தேவாரம் ஆய்வுத் துணை.  T.V. Gopal Iyer,Institue Francais D’Indologie

·         Messages and Photos from: Dinamalar.com kutram poruththa naathar temple

·         https://www.dinamani.com/specials/parigara-thalangal

·         https://www.dharisanam.com/temples/sri-kutram-porutha-natheswarar-temple-at-thiru-karuppariyalur-thalaignayiru

    • vikatan.com nermai-endrum.com கருப்பறியலூர் ஆலயம்

·         ta.m.wikipedia.org தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்

·         shaivam.org

·         Shiva Temples.com