4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

செந்தமிழ் இதழில் குறுந்தொகை உரை ஆய்வுகள் - பி.ஜீவா

 

 செந்தமிழ் இதழில் குறுந்தொகை உரை ஆய்வுகள்   

                                                                                    பி.ஜீவா

                                                                                    முனைவர் பட்ட ஆய்வாளர்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தரமணி, சென்னை.

மின்னஞ்சல்: jeja900@gmail.com.

ஆய்வுச்சுருக்கம்

          எட்டுத்தொகையில் ஒன்றாகிய குறுந்தொகை நானூறுப் பாடல்களைக் கொண்ட அகநூலாகும். இந்நூலைச் செளரிப்பெருமாள் அரங்கனார் முதன்முதலில் பல ஏட்டுப்பிரதிகளைப் பரிசோதித்துப் பாடபேதங்களுடன் புத்துரை எழுதிப் 1915இல் பதிப்பித்தார். சுவடி பயிற்சியில் முன் அனுபவம் இல்லாத அரங்கனார் தனக்குள்ள தமிழார்வத்தினால் யாதானும் ஓர் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுதல் வேண்டும் என்ற விருப்பத்தினால் குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளார். அரங்கனார் பதிப்பில் பிழைகள் பல மலிந்தும் பாடலின் அடிவரையறை ஒழுங்கற்றும் உரை ஒரு சில இடங்களில் மூலக்கருத்தோடு பொருந்தாதாய் தமிழ் மரபுக்கு மாறுபட்டதாகவும் காணப்படுகிறது. இதனாலே இதன் பின் குறுந்தொகைக்கு பல்வேறு பதிப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன. அரங்கனார் பதிப்பில் காணப்படும் இப்பிழைப்பாடுகள் குறித்து பல்வேறு அறிஞர்கள் குறித்துள்ளனர். அவ்வகையில் செந்தமிழ் இதழில் ஐந்துக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இக்கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு குறுந்தொகைக்கு அரங்கனார் வரைந்துள்ள உரைத்திறன் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

திறவுச்சொற்கள்

            சங்க இலக்கிய உரை, உரை ஆய்வுகள், குறுந்தொகை உரை, செந்தமிழ் இதழ், தமிழ் இதழ்களில் உரை ஆய்வுகள், சங்க இலக்கிய உரையாசிரியர்கள்.

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் ஆய்வுக்காக தொடங்கப்பட்ட இதழ் செந்தமிழாகும். இவ்விதழ் 1902ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் தொடங்கப்பட்டது. இவ்விதழில் சங்க இலக்கியத்தின் காலம் சார்ந்து, நூல் சார்ந்து, புலவர் சார்ந்து, வரலாறு சார்ந்து, பண்பாடு சார்ந்து, பதிப்பான நூல்களில் காணப்படும் பாடவேறுபாடு மற்றும் உரைச் சார்ந்தும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதில் குறுந்தொகை உரைக் குறித்தான ஆய்வுகள் எத்தன்மையில் நிகழ்த்தப்பட்டன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

 

குறுந்தொகை

எட்டுத்தொகையில் ஒன்றாகிய குறுந்தொகை நானூறுப் பாடல்களைக் கொண்ட அகநூலாகும். அதில் 380 பாடலுக்குப் பேராசிரியர் உரைக் கண்டார் என்றும், ஏனைய 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரைக் கண்டதாகவும் கூறுவர். ஆனால், இவர்கள் உரை இந்நாள் வரைக் கிடைக்கவில்லை. இந்நூலைச் செளரிப்பெருமாள் அரங்கனார் பல ஏட்டுப் பிரதிகளைப் பரிசோதித்துப் பாடபேதங்களுடன் புத்துரை எழுதிப் 1915இல் முதலில் பதிப்பித்தார்.

இவர் உரையெழுதிப் பதிப்பிப்பதற்குக் காரணம் நற்றிணை, குறுந்தொகை தவிர்த்து மற்றைய தொகை நூல்களான அகநானூறு 90 பாடல்களுக்கும், புறநானூறு 266 பாடல்களுக்கும், ஐங்குறுநூறு மற்றும் பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுக்கான பழைய உரையும், கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரையும், பரிபாடலுக்கு பரிமேலழகர் உரையும் உண்டு. இந்நிலையில் குறுந்தொகைக்கு உரை இல்லை என்பதை உணர்ந்தே ரையெழுதி பதிப்பித்துள்ளார். இதற்கு அக்காலச் சூழலும் நிலைக்களமாயின. பதிப்பிக்கப்பட்ட சங்க நூல்கள் கற்கை நிலையில் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டதின் பொருட்டும் 20ஆம் நூற்றாண்டில் பதிப்பாசிரியர்களே தாம் பதிப்பிக்கும் நூலுக்கு உரையெழுதி பதிப்பித்தல் என்ற மரபு உருவாகியதன் பொருட்டும் புத்துரை எழுதியுள்ளார்.

 சுவடி பயிற்சியில் முன் அனுபவம் இல்லாத அரங்கனார் தனக்குள்ள தமிழார்வத்தினால் யாதானும் ஓர் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடுதல் வேண்டும் என்ற விருப்பத்தால் குறுந்தொகையைப் பதிப்பித்துள்ளார். அரங்கனார் பதிப்பில் பிழைகள் பல மலிந்தும், பாடலின் அடிவரையறை ஒழுங்கற்றும், உரை ஒரு சில இடங்களில் மூலக்கருத்தோடு பொருந்தாதாகவும், தமிழ் மரபுக்கு மாறுபட்டதாகவும் காணப்படுகிறது. இதனாலே அரங்கனார் பதிப்பிற்கு பின் குறுகிய காலக்கட்டத்திற்குள்  குறுந்தொகைக்கு பல்வேறு பதிப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன.   

அரங்கனார் பதிப்பில் காணப்படும் பிழைப்பாடுகள் குறித்து பல்வேறு அறிஞர்கள் குறித்துள்ளனர். அவ்வகையில் செந்தமிழ் இதழில் ஐந்து கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

உரையாய்வு

குறுந்தொகை 140ஆவது பாடலின் சூழல் விளக்கம்பொருள் வயிற் பிரிந்த விடத்து நீ ஆற்றுகின்றிலை என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதுஆகும். இப்பாடலின் பொருள்ஆற்றின் கண்ணே செல்கின்ற மாக்கள், கூரிய ஈர்வாளினையுடைய வாய் போன்ற முதுகினையுடைய முதிய ஆண் ஓத்தியானது வழிச்செல்லும் மாந்தர் நிமித்தமாகக் கொள்ளும்படி வலமாகச் செல்லும் அரிய பாலை வழியில் சென்றார் காதலர். (அதனால் ஆற்றும்) லியழிந்து இவ்விடத்து யான் தாங்கிய துயரத்தை எவ்விதம் அறிந்தது இவ்விரக்கத்தை டைய ஊரென்கஎன்பதாகும்.

இப்பாட்டிற்கு உரை வரைந்த செளரிப்பெருமாள் அரங்கனார் வேதினம்’(1) என்பதற்கு வெப்பமுள்ளவென்றும், போத்து (1) என்பதற்குப் பொந்து என்றும், புள் (2) என்பதற்கு பறவை என்றும் பொருள் கொண்டுள்ளார்1. இது பாடலின் கருத்தோடு முற்றும் ஒன்றாததாய் உள்ளது.

            இவ்விடத்தில் வேதினம் என்பது ஈர்வாள் (ஆணோத்தி) என்றும், பொந்து என்பது போத்து எனவும், பறவை என்பது வாய்சொல் என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் அ.கந்தசாமியார். இதற்கு சான்றாகத் தொல்.மரபியல் 41வது சூத்திரத்தையும், தொல்.புறம்.58வது உரையையும், நற்றிணை 186வது பாட்டையும் காட்டியுள்ளார்2. இதுவே பாடலின் கருத்தோடு ஒன்றுவதாய் உள்ளது.

‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன’ (குறுந். 57: 1)

என்பதில் ‘பூவிடைப்படினும்’ என்பதற்கு அரங்கனார் ‘பூப்பு இடையே உண்டாயினும் எனத் தலைமகள் கூறியதாக’ உரை வரைந்துள்ளார்3. இவ்வாறு தலைமகள் நேரடியாக கூறுவது அகப்பொருள் முறையன்று. இக்கருத்தை அ.கந்தசாமியார் குறிப்பால் கூறலன்றி வெளிப்படையாக கூறல் புலனெறி வழக்கன்று என மறுத்துள்ளார். இதற்கு குறுந்.157வது பாடலைக் எடுத்துக்காட்டியுள்ளார்4. இக்கருத்து தமிழ் அகப்பொருள் மரபுப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் உள்ளது.

            குறுந்தொகை 7வது பாட்டின் 3வது அடியில் இடம் பெறும்ஆரியர்என்ற சொல்லிற்கு அரங்கனார்இருமுதுகுரவர்என அரும்பதம் வரைந்து, இருமுதுகுரவர் என்பது தாய்தந்தையைக் குறிக்கும் என குறித்துள்ளார்5.

            பெற்றோரை ஆரியர் என குறிப்பிடுவது வழக்கில் இல்லாத ஒன்று. இலக்கிய வழக்கும் அவ்வாறு இல்லை. ஆகையால் இருமுதுகுரவர் என்பது தாய்தந்தையைக் குறிக்கும் என்பது பொருந்தாதாகும். இவற்றை மறுத்துள்ளார் .கந்தசாமியார். ஆரியர் என்பது மிலேச்சர்களைக் குறிக்கும் என்கிறார்6. இதுவே பாடலின் கருத்தோடு ஒன்றுவதாய் உள்ளது.

இப்பாட்டின் முதல் 2 அடிகளுக்கு நயம் கூறும்  அரங்கனார்வில்லோன்..... சிலம்பே’ - இருவரும் பெருஞ்செல்வத்தினர் என்பது உணர்த்திற்று. வில்லோன் காலன கழலே என்றது தலைமகன் வல்லமையை முணர்த்தி நின்றது’ என பொருள் வரைந்துள்ளார். இங்கு கழலும், சிலம்பும் அணிந்திருந்ததைக் கொண்டு பெறுஞ்செல்வத்தினர் என்று குறித்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இல்லை என்று மறுத்துள்ளார் அ.கந்தசாமியார். பண்டைய மக்கள் மணம் முடிக்கும் முன்னரும் பின்னரும் இன்னின்ன அணிகள் அணிய வேண்டும் என்ற வழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள் எனக் கூறி அதற்குச் சான்றாகப் பல்வேறு நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார்7.

அரங்கனார் உரையில் உள்ள சில பிழைப்பாடுகள்,

‘செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த’ (குறுந்.1:1) என்ற அடிக்கு ‘செழிய போர்க்களத்திலே அழியும்படி கொன்று அவுணராயினரை யொழித்த’ என்று உரை வகுத்தனர்8. இங்கு செங்களம் என்பற்கு சிவந்த போர்களம் என பொருள் கொண்டிருத்தல் வேண்டும்.

‘குருதிப்பூவின் குலைக்காந்தட்டே’ (குறுந்.1:4) என்ற அடிக்கு ‘குருதியைப் போன்று பூக்கும் பூவின் குலைகளைக் கொண்ட (செங்) காந்தளையுடையது’ என்று உரை வகுத்தனர்9. இவ்விடத்தில் சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது என்று கூறியிருத்தல் வேண்டும்.

‘நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று- நீரினு மாரளவின்றே’ (குறுந்.3:1-2) என்ற அடிக்கு ‘நிலத்தினும் பெரியது. வானத்தினும் உயர்ந்தது. கடலினும் அரிய அளவினையுடையது’ என்று உரை வகுத்தனர்10. நீரினுமாரளவின்றே என்பது அளவினாற் கடலினும் மிக்கது என்று கூறியிருத்தல் வேண்டும்.

‘அதுகொதோழி’ (குறுந்.5) என்னும் பாடலில் மெல்லம் புலம்பன் என்பதற்கு ‘மெல்லிய கடற்றுறைவன்’ என்று உரை வகுத்தனர்11. மென்மை என்பது கடலை விசேடிக்கிறது அல்லது தலைவனை விசேடிக்கிறதா என்பது தெளிவுபடாமல் உள்ளது. ‘மெல்லம் புலம்பன்’ என்பதற்கு மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் என குறித்தல் வேண்டும்.

‘முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே’ (குறுந்:239) என்ற அடிக்கு ‘முந்தும் முறைமையாகிய காவலையுடைய மலைக்குரி யான் திறந்து’ என்று உரை வகுத்தனர்12.  முந்தூழ் என்பது மூங்கிலைக் குறிக்கும். மூங்கிலை வேலியாக உடைய மலைகிழவோன் எனப் பொருள் கொண்டிருக்க வேண்டும்.  

மேற்கண்ட அரங்கனார் பதிப்பில் உள்ள இவ்விடங்கள் பொருள் நயம் அற்று காணப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார் .குமாரசாமிப்பிள்ளை13.

            பறியுடைக் கையர் மறியினத் தொழிய’ (குறுந்.221:2)

என்ற அடிக்கு பறியினைக் கொண்ட கையினராய் ஆயர் மறியினத்தோடு செல்ல என உரை வரைந்து விசேட உரையில் பறி என்பதற்கு மீன் பிடிக்கும் கருவி எனவும் கூழ் இழிந்தோருண்ணும் உணவு என உரை வரைந்துள்ளார் அரங்கனார்14.

இது முல்லை நிலப் பாடலாகும். இவர் குறித்திருப்பது போல் பொருள் கொண்டால் முல்லை நிலமக்கட்கு மீன் பிடித்தல் தொழிலும் உண்டு என்பதை உணர்த்துகிறது. அவ்வாறு பொருள் கொள்வது பொருந்தாது என்பதைச் சான்றுக் காட்டி மறுத்துள்ளார் ஆர்.கார்மேகக்கோனார்.

பறி - ஆயர் ஆனினங்காவல் புரியுங்கால் இரவிடைப் படுத்துத் துயில்வதற்குப் பனையோலைகளான் அமைத்துக் கொண்ட சயனம் ஆகும். இவற்றிற்கு பெரியாழ்வார் திருமொழி, திணைமாலை நூற்றைம்பதாவது பாடலையும் உரையையும் எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், இச்செய்யுளில் கூழ் என்பதற்கு உணவு எனப் பொருள் கொண்டு இழிந்தோருண்ணும் உணவு எனக் குறிப்பிட்டுள்ளார் அரங்கானார்.  இது அவர் காலத்து சமூக நிலையைப் பிரதிப்பலிக்கிறது. ஆனால் இவ்விடத்தில் அவ்வாறு பொருள் கொள்ளல் பொருந்தாது. இதனை ஆர்.கார்மேககோனார், இழிந்தோர் எனக் கூறல் பொருந்தாது. முல்லை நில மக்கள் உணவாகக் கூறுமிடனெல்லாம் கூழ் என்பதற்குப் பாற்சோறு எனக் கூறலே பொருந்தும். இதனைக் கூழாரிடையன் (பெரும்பாண் 175) என்புழி நச்சினார்க்கினியர் உரைத்த உரையால் அறிக என சான்றுக் காட்டி விளக்கியுள்ளார் 15.

பொருள் முடிபுக் காட்டல்

          சொற்களை அன்வயப்படுத்தி பொருள் முடிபுக்காட்டல் உரைத்தன்மையில் ஒன்று. இத்தன்மையை அரங்கனாரும் கையாண்டுள்ளார். குறுந்தொகை 7வது பாட்டிற்கு

நல்லோர் அழுவம் முன்னியோர் யார்கொல்? அளியர்தாம் ஆரியர்16

என முடிபு கொள்ள வேண்டும் என குறித்துள்ளார். இதன்படி பொருள் கொண்டால்,

நல்லோராகிய இவர்கள் காட்டு நிலப்பரப்பைக் கடந்து செல்ல நினைந்து வருபவர்கள் யாவரோ? இவர்கள் பிரிவாற் பெரிதும் கவலும் இருமுதுகுரவர்கள்

எனப் பொருள் கொள்ள நேரிடுகிறது. இங்குஆரியர்என்பதற்கு இருமுதுகுரவர் என இவர் குறித்தது பொருந்தாது. ஆகையால், இவர் கொண்ட முடிபும் பொருந்தாதாகும். இதனைக் கருத்தில் கொண்டு .கந்தசாமியார்,

நல்லோர் யார்கொல் அளியர்தாமே17

என்றே முடிபுக்கொள்ள வேண்டும் என்று தம் கருத்தை முன்வைத்து எழுதியுள்ளார். இதற்கு ஆதாரமாக சேனாவரையரும் (தொல்.சொல்:132), சங்கர நமச்சிவாயரும்நல்லோர் யார்கொல் அளியர்தாமேஎன்று எடுத்தாண்டுள்ளதைக் காட்டியுள்ளார். மேலும், ‘நல்லோர் யார்கொல் அளியர்தாமேஎனவும், ‘ஆரியர் கயிறாடு பறையிற் கல்பொரக் கலங்கி, வாகை வெண்ணெற்றொலிக்கும் வேய்பயிலழுவம்எனவும் முடிபுகொள்ளலும் பொருந்துவதாகும் என்கிறார். இப்பாட்டிற்கு .வே.சா.

அழுவம் முன்னியோர் யார்கொல்? அளியர்18

என முடிபு கொண்டு பொருள் கொள்ளவேண்டும் என்று குறித்துள்ளார். இவ்வாறு மாற்றி பொருள் முடிபு கொண்டாலும் பாடல் கருத்தைக் பெற முடிகிறது. இதுவே,

நல்லோர் அழுவம் யார்கொல் அளியர்தம்

என மாற்றி பொருள் கொண்டால், ‘நல்லோராகிய (இவர்கள்) பாலைநிலப்பரப்பில் கடந்து செல்ல நினைந்து வருபவர்கள் யாவரோ? இரக்கத்தக்கார்என இப்படியும் மாற்றி பொருள் கொள்ளலாம். இது பாடலின் கருத்துக்கேற்பவும் வாசகனின் அறிவு திறனுக்கேற்பவும் மாற்றம் பெறும் என்பதை உணர்த்துகிறது.

பாடவேறுபாடு

குறுந்தொகை 7வது பாட்டிற்குச்  சுவடியைக் கொண்டுப் பாடபேதம் காட்டி, உரை வரைத்துள்ளார் .கந்தசாமியார். இவர் பாடமாகக் கொண்ட மூலச்சுவடிசெந்தமிழ் விலாச முத்திரத்தின முதலியார் பிரதிஆகும். குறுந்தொகை 7வது பாட்டில் பாடபேதமாகக் கொண்ட அடிகள்,

ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக்கலங்கி’ (7:3-4) செளரி.பெ., .வே.சா.

ஆரியர் கயிறாவு பறையிற் கால்பொரக்கலங்கி’ (7:3-4) .கந்தசாமியார்

வேய்பயி லழுவ முன்னியோரே’ (7:6) செளரி.பெ., .வே.சா.

            வேய்பயில் பழுவம் முன்னியோரே’ (7:6) .கந்தசாமியார்.

இதில்பழுவம்என்ற பாடத்தினை அரங்கனாரும், .வே.சா.வும் பாடவேறுபாடாகக் காட்டியுள்னர். பழுவம்- அழுவம்இரண்டும் காட்டைக் குறிக்கும் என்பதால் இவ்விடத்தில் இரண்டும் பொருந்துவதாகும்.

            செளரிப்பெருமாள் அரங்கனார்கயிறாடுஎனப் பாடம் கொண்டுகயிற்றின் கண்ணே பொருந்தி அசைகின்ற பறையின் (ஒலியைபோன்று) எனப் பொருள் கொண்டுள்ளார்19.

            .கந்தசாமியார்கயிறாவுஎனப் பாடம் கொண்டு இச்சொல்லில் உள்ளகயில்என்பது பிடர்’ (கழுத்திணையுணர்த்திற்று) எனக் குறித்து மிலேச்சர்கள் கழுத்தினிடத்துப் பொருந்தியுள்ள பறைப் (ஒலி) போல எனப் பொருள் கொண்டுள்ளார்20.

இவர்கள் பாடமாக கொண்டு பொருள் வரைந்துள்ள தன்மையை நோக்கும்போது இவ்வேறுபாடு பாடலின் கருத்தை மாற்றுவதாக இல்லை.

கழனிமரத்து - கழனிமாஅத்து(குறுந். 8:1)

என்பது பாடவேறுபாடு கொண்டுள்ளது. அரங்கனார்மரத்துஎனக் கொண்டுமரம்என்றும், .கந்தசாமியார்மாஅத்துஎனக் கொண்டுமாமரம்என்றும் பொருள்கொண்டுள்ளனர்.

இங்கு மாஅத்து என்பதே சரியான பாடமாக தோன்றுகிறது. ஏனெனின் சங்க இலக்கியத்தில் மரத்து என்ற சொல் எங்கும் காணப்படவில்லை. அதோடு மரப்பெயர் கிளவி முன் அத்து சாரியை வரும் என்ற தொல்காப்பியர் குறித்துச்சென்றுள்ளதும் இதனோடு இணைத்துப்பார்க்க வேண்டியதாய் உள்ளது. இதனையே .கந்தசாமியார் பின்வருமாறு காட்டியுள்ளார். அவை, 

மாஅத்து’ என்பதே சரியான பாடமாகும். இதற்குத் ஆதாரமாக குறுந்தொகை 99வது பாட்டில்நீடிய மாஅத்த கோடுதோய் மலிர்சிறைஎன்னும் அடியையும், தணிகைபுராணத்தில்அருவி தொட்ட வறைக்குழி மாத்தனஎன்னும் அடியையும், சிந்தாமணியில்நிலைமாத் தனதே முறுதீங் கனியும்’ என்பதையும் காட்டியுள்ளார்21. .வே.சா.வும் தம் குறுந்தொகைப் பதிப்பில்மாத்துஎனவே பாடம் கொண்டுள்ளார். இதன் வழிமாத்துஎன்பதே சரியான பாடமாகும்.

 அ.குமாரசாமிப்பிள்ளை, செளரிப்பெருமாள் அரங்கனார் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளார். அவை,

“நோமென்னெஞ்சே (4) என்பது நோமேநெஞ்சே எனவும், ஒயான் (6) என்பது ஓர்யான் எனவும், காப்பாடும்மே (9) என்பது கரப்பாடும்மே எனவும், கூன்முள் (51) என்பது கூர்முள் எனவும், பரிக்கும் (51) என்பது பரக்கும் எனவும், இடைபட (62) என்பது இடைப்பட எனவும், முயங்கற்குமினிதே (62) என்பது முயங்குவமினிதே எனவும், விரிந்திலங்குவெண்பல் (52) என்பது நிரந்திலங்கு வெண்பல் எனவும், நாடுநாள் (69) என்பது நடுநாள் எனவும், அரிப்பவர்பாம்பின் (69) என்பது அரிப்பவர்ப்பிரம்பின் எனவும், அஞ்சிக்கொன்முனை (91) என்பது அஞ்சிகொன்முனை எனவும், அரும்பவிழ் (349) என்பது அடும்பவிழ் எனவும், சிதைய என்பது சிதைஇ எனவும், மின்னுயிரிழந்தே என்பது மன்னுயிரிழவே எனவும் அப்பிரதிகளில் காணப்படுகின்றன”21.

என்கிறார். மேற்கண்ட இம்மாறுபாடுகள் ஒருசில .வே.சா. பதிப்பில் இடம் பெற்றுள்ளன. பாடசெம்மையாக்கத்திற்கு இக்கட்டுரைகள் காட்டும் பாடவேறுபாடுகள் முக்கியமானதாகும்.

 

நிறைவாக

இவ்வாறு சுட்டிக்காட்டியதன் மூலம் இவ்விடம் திருத்தம் பெற்றது. இதன் பின்னர் உரை வரைந்த உரையாசிரியர்கள் இவ்விடங்களைக் கவனத்தில் கொண்டு எழுதுவதற்குரிய வாய்ப்பை இக்கட்டுரைகள் ஏற்படுத்திக்கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் பின் .வே.சா 1937இல் குறுந்தொகைக்கு மிக விரிவானதோர் உரை எழுதி பதிப்பித்ததின் மூலம் இவ்விடங்கள் திருத்தம் அடைத்தன என்பது முக்கியமானதாகும்.

அடிக்குறிப்பு

1.    தி.செளாரிப்பெருமாள் அரங்கனார் – குறுந்தொகை மூலமும் உரையும், பக்.140.

2.    செந்தமிழ் இதழ், தொகுதி 14, குதி 5.

3.    குறுந்தொகை மூலமும் உரையும், பக்.72.

4.    செந்தமிழ் இதழ்,  தொகுதி 14, பகுதி 5.

5.    குறுந்தொகை மூலமும் உரையும், பக்.14.

6.    செந்தமிழ் இதழ், தொ.14, .5.

7.    செந்தமிழ்: தொ.14, ப. 5.

8.    குறுந்தொகை மூலமும் உரையும், பக்.4.

9.    மேலது, பக்.5.

10. மேலது, பக்.9.

11. மேலது, பக். 11.

12. மேலது, பக். 204.

13. செந்தமிழ் இதழ்,  தொகுதி.14, குதி.9.

14. குறுந்தொகை மூலமும் உரையும், பக்.193.

15. செந்தமிழ் இதழ், தொ.16, .11.

16. குறுந்தொகை மூலமும் உரையும், பக்.14.

17. செந்தமிழ் இதழ், தொ.17, .5.

18. உ.வே.சா, பக்.9.

19. குறுந்தொகை மூலமும் உரையும், பக்.19.

20. செந்தமிழ் இதழ், தொ.14, .5.

21. செந்தமிழ் இதழ், தொ.14, ப.5.

22. செந்தமிழ் இதழ்,தொ.14.ப.9.

 

 

பார்வை நூல்கள்:

1. தி.செளரிப்பெருமாள் அரங்கனார்குறுந்தொகை மூலமும் புத்துரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2015.

2. .வே.சாமிநாதையர்குருந்தொகை மூலமும் உரையும், .வே.சா. நூல் நிலையம், சென்னை 2017.

3. .குமாரசாமிப்பிள்ளைகுறுந்தொகை, செந்தமிழ் இதழ், தொகுதி 14, பகுதி 9.

4. .கந்தசாமிப்பிள்ளைகுறுந்தொகை உரை ஆராய்ச்சியும் பாடாந்தரமும், செந்தமிழ் இதழ், தொகுதி 14, பகுதி 5.

5. .கந்தசாமிப்பிள்ளைகுறுந்தொகை உரை, செந்தமிழ் இதழ், தொகுதி 17, பகுதி 5.

6. ஆர். கார்மேகக்கோன்அச்சிட்ட குறுந்தொகையுரை, செந்தமிழ் இதழ், தொகுதி 16, பகுதி 1.

7. செலுவையர்குறுந்தொகை, செந்தமிழ் இதழ், தொகுதி 21, பகுதி 7.