4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

வைணவ கருத்தியல் வளர்ச்சியில் பதினெண் மேற்கணக்கு நூல்கள் - ஓர் ஆய்வு - டாக்டர்(திருமதி)எஸ்.கேசவன்

 

 

வைணவ கருத்தியல் வளர்ச்சியில் பதினெண்  மேற்கணக்கு நூல்கள்  - ஓர் ஆய்வு

டாக்டர்(திருமதி)எஸ்.கேசவன்

மேனாள் தலைவர்;சிரேஷ்டவிரிவுரையாளர் G -1

இந்துநாகரிகத்துறை,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

Email Address -   manonmanys@yahoo.com

Mobile    - 0094777560733.

 

ஆய்வு அறிமுகம்

வேதங்களும் உபநிடங்களும், இதிகாசங்களும் வடநாட்டில் உருவாயிதெனினும் அதன் விளக்கப் பேருரைகள், சமயமாக மலர்வித்தச் சான்றோர்கள் தோன்றியது தென்நாடேயாகும். அதிலும் சிறப்பாகத் தமிழகத்திற்குப் பெரும்பங்குண்டு. இங்கு கி.பி 1ம் நூற்றாண்டு தொட்டு தற்காலம் வரை தமிழர் நாகரிகம் தனிச் சிறப்பினைப் பெற்றுத் திகழ்கின்றது. தமிழர் நாகரிகத்தில் சமயச் சிந்தனைகளும் மிக உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. சங்ககாலத்தில் நானிலம் போற்றும் சமயச்சிந்தனைகள் பற்றி அக்கால இலக்கியங்கள் காட்டுகின்றன. இந்த வகையில் வைணவக் கருத்தியல் பெறும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டுவதே கட்டுரையாளரின் நோக்கமாகும்.

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்

பாட்டும், தொகையும் எனப் போற்றப் பெறும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தமிழரின் வாழ்வை உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டுபவை. இவற்றை பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். இவை முற்காலச் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றியவை. இவை கி.பி 1ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 3ம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவை.

முருகு பெருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வள மதுரைக்காஞ்சி மருவினிய

     கோல நெடு நல்வடை கோல் குறிஞ்சிபட்டினப்பாலை கடாத்தொடும் பத்து. மேற்குறிப்பிட்ட தனிப்பாடலின் வழி அறியப்படும் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை), மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை என்பன அடங்கும்.

எட்டுத்தொகை நூல்களும் பத்துப்பாட்டைப் போல் அக புற வாழ்வியலை விளக்குவன.

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு

 ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்

 கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று

என நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவற்றைக் குறிப்பிடுகின்றன.

திருமால்

வைணவர்கள் திருமாலைப் பரம் பொருள் என்பர். மால் என்ற கருமை என்றும் கருமை நிறமுடைய திருமாலை விஷ்ணு, நாராயணன், வாசுதேவன்,மாயோன், மாயவன் எனவும் அழைப்பர். இத்திருமால் வழிபாடு மக்களையுடையதான காலந்தொட்டே தோன்றி நிலை பெற்றது என்பதற்கு தமிழ் முதனூல்களே தக்க சான்றாதாரங்களாகின்றன.

தொல்காப்பியம்

கடல் சூழ்ந்த நிலப்பகுதியை நான்கு நிலங்களாகப் பகுத்தும், அந்நிலங்களுக்குத் தெய்வங்களை வகுத்தும் கூறுகின்றது.

சேயோன் மேய மைவரை உலகும்

மாயோன் மேய காடுறை உலகும்

வருணன் மேய பெருமணல் உலகும்

   வேந்தன் மேய தீம்புனல் உலகும்”1என நானிலங்களையும், நால் வகை தெய்வங்களையும் கூறும் தொல்காப்பியம் முல்லை நிலத்துக்குரிய கடவுளாக திருமாலை மாயோன் எனச் சித்தரிக்கின்றது. மாயோன் மேய மன் பெருஞ்சிறப்பிற் றாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்”2 என்று மாயோன்என திருமாலைக் குறிப்பிட்டுள்ளார்.

காமம் பகுதி கடவுளும் வரையார்

    எனோர் மருங்கினும் எம்மனார் புலவர்

    குழவி மருங்கிலும் கிழவதாகும்

என்ற தொல்காப்பியக் குறிப்பு, தெய்வக் குழவியாகிய கண்ணனிடம் ஆயர்மகளிர் கொண்ட காதல் வெள்ளத்தை உட்கொண்டு கூறப்பெற்றதாகக் கொள்ளலாம். இவற்றால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே திருமால் வழிபாடு தமிழகத்தில் வேரூன்றியிருந்தமை தெளிவு.

வாசு தேவனான இக்கண்ணனை சங்கர்சண மூர்த்தியாகிய பல தேவனுடன் வைத்துப் போற்றிய முறை விந்திய மலைக்கும் அப்பால் உள்ள வடநாடுகளிலே ஒரு காலத்துச் சிறப்பாக இருந்தது என்பதையும் பண்டைய வடநூல்களாலும் அறியலாம். இத்தகைய சங்கர்சண வாசுதேவ வணக்கமே தென்னாட்டிலும் பரவி வழங்கியதற்குச் பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்கள் பலவும் சான்றாக அமைகின்றன.

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

இத்தொகை நூலில் கடவுள் வாழ்த்துப்பாடல் வைணவ தத்துவத்தின் கருத்துக்களை மிக அழகாக விளக்குகின்றது.

மானிலம் சேவடியாகத் தூநீர்

    விளைநரல் பௌவம் உடுக்கையாக

    விசும்பு மெய்யாகத் திசைகையாகப்

    பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக

    இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கி

    வேத முதல்வன் என்ப

தீதற விளங்கிய திகிரியோனே”3எனதிருமால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்தும்) எள்ளுக்குள் எண்ணெய் போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரில் பொருள்களிலும் நிற்கும் நிலையும் - அந்தர்யாமித்துவம்) அவன் ஆழி தாங்கி நிற்பதும் பிறவும் கூறப்பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம். இதனை திருமங்கையாழ்வார்.

பவவநீர் உடையாடை ஆகச்சுற்றி

     பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா

     செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டப்

     திருமுடியா கின்றான்.”4என்ற பாசுரப்பகுதியில் இக்கருத்து நிழலாடுவதைக் காணலாம்.    

மாயோன் அன்ன மால்வரைக்கவாஅன்

      வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி”5 என திருமால் பற்றி விளக்கி நிற்கின்றது.

ஐங்குறுநூறு

கண்ணணுடைய இசைக்கருவி குழலாகும். இவனது இசைக்கருவி ஆம்பல் பண்ணிலே பாடப்படுவதை ஐங்குறுநூறு 215ம் பாடலில் நாம் காண்கின்றோம்.

கலித்தொகை

    இந்நூலிலே திருமாலைப்பற்றி பல செய்திகள் உள்ளன. வெள்ளை நிறக்காளையின் மீது பாய்ந்து அடக்க முற்பட்ட வீரன் ஒருவனைக் கருமைநிறக் காளையொன்று குத்தி அக்காளையை விடுவிக்க முயன்றது. இது வெண்மதியைப் பற்றிருந்த அரவிலிருந்து மதியினை விடுவிக்க முயன்ற நீல நிறமுடைய திருமால் தோன்றிருந்தார். இதனை

பான் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்

    நீனிற வண்ணனும் போன்ம்எனும் பாடல் உணர்த்துகிறது.

 

முற்றம் செவி மறைப்பாய்வு முரண் செய்த புலி செற்று

    மற்றம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்

    குறங் கூறுத் திடுவான் போல் கூர்துதி மடுத்து அதன்

    நிறம் காடி முரண் தீர்ந்த நீள்மருப்பு எழில்யானை

    மல்லரை மறம் சாய்ந்த மால் போல் தன் கிளை நார்ப்பண்

    கல்லுயர் நனஞ் சாரல் கலந்தியலும் நாட கேள்”6

மேவார் விடு தந்த கடந்தற் குதிரையை

    வாய் பகுத்திட்டு புடைத்த இன்னன் கொல்

    மாயோன் என்று உட்கிட் என் நெஞ்சு “6 (கலி 103ம் பாடல்)

 

மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர

    ஞாயிற்று முன்னர் இருள்போல் மாய்ந்தது என்

    ஆயிழை உற்ற துயர்”7

 

பால்நிற வண்ணன் போல்

பனைக் கொடிப் பழி திரிந்த வெள்ளையும்

 பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்

    திருமறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்”8

என்ற அடிகளில் பனைக் கொடியைக் கொண்ட பால் நிற பல தேவனைப் பற்றிய குறிப்பும் திருவாகிய மறுவினையுடைய (ஸ்ரீ வஸ்தம்) திருமாலைப் பற்றிய குறிப்பும் வருகின்றன.

பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்

    நீனிற வண்ணர்”9

என்ற அடிகளில் திருமாலைப்பற்றிய குறிப்பும் காணப்படுகின்றது.;

வள்ளுரு நேமியான் வாய் வைத்த10

வளை போலத் தெளிதின் விளங்கும் கரி நெற்றிக் காரியும்”11

என்ற அடிகளில் மாயோன் ஆழி தாங்கிய கையன் என்றும் அவன் வாய் வைத்து ஊதும் சங்கு போல் கரி கொண்ட நெற்றினையுடைய கரிய ஏறு என்ற குறிப்பும் அதே பாடலில் நம்பி மூத்த பிரானைப் பற்றிய குறிப்பும் வருகின்றன. தேயா விழுப்புகழ் தெய்வம் பரவுதும்”12“தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும்”13

பாடிமிழ் பரப்பகத் தரவணை அடைகிய

    ஆடு கொள் நேமியாம் பரவுதும்”14

கரும்பிமிர் காலம் பாடினம் பரவுதும்

    ஏற்றவர் புலங்கெடத் திறை கொண்டு

    மாற்றாரைக் கடக்க வெம்மறங் கொழுகோவே”15

நெற்கலியில் ஒரு பாடலில் 16

ஞால முன் றடித்தாய முதல்வர்க்கு முது மறைப்

    பாலன்ன மேனியான் அணி பெறத்தை இய”17 என்ற அடிகளில் உலகம் மூன்றும் தன் திருவடியால் அளந்தவனைப் பற்றிய குறிப்பினையும் இவனுக்கு மூத்த முறைமையினையுடைய நம்பி மூத்தபிரானையும் பற்றிய குறிப்பினையும் காணலாம்.

செருமிகு நேமியான்தார் போலஎன்றும்

சக்கரப்படை ஏந்தியவனைஎன்றும்

மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்;18….”

என்ற அடிகளில் திருமால் பற்றிய குறிப்பும் காணப்படுகின்றன. இதை விட, திருமாலின் அவதாரச் செயல்களைக் கூறும் பாரத இராமயணக் குறிப்புகள் பலவற்றைக் கலித்தொகையில் காணலாம்.

அஞ்சீரசையியல் கூந்தற்கை நீட்டியன்”19 என்ற பாடலில் வீமன் பாஞ்சாலியின் கூந்தலை தொட்டிழுத்த துச்சாதனைப் போரில் கொன்று தன் சபதம் முடிந்த செயல் குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். மேலும் ஆழி அழுத்திய வரலாறு அரவினை கோல் விடுத்த வரலாறு கூறப்படுகின்றது.

முல்லைக்கலி

ஆரிருள் என்றான் ஆங்கங்குல் வந்துதன்…..”20என்ற அடிகளில் அசுவத்தாமன் திருஷ்டத்;துய்மனைக் கொன்ற செய்தியும்,

மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்

      குறங்கறுத் திடுவான் போல”21என்று குறிஞ்சிக்கலி அடிகளில் (152) வீமன் துரியோதனைக் கொன்ற செய்தியும் கூறப்பெற்றுள்ளன.

ஒருகுழையொருவன் போல் இணா சேர்ந்த மராமரமும்”22பலராமன் பற்றிய குறிப்பும்,

மல்லரை மறஞ்சாய்த்த மால்”23

மாயோன்”24 போன்ற இன்னோரன்ன கருத்துகள் மூலம் வைணவக் கருத்துகளை உணரமுடிகிறது.

பதிற்றுப்பத்து

உண்ணா நோன்பு கொண்டோர், திருமகள் மார்பிலமந்த சக்கரப் படையேந்திய துழாய் மாலையணிந்த செல்வனாகிய திருமாலின் சேவடி பரவிய செய்தியைக் கீழ்வரும் பதிற்றுப்பத்து பாடலால் அறியலாம்.

               திருஞெமர்

      அகலத்துக்

      கண் பொருதிகிரிக் கமழ்குரல் குழாஅய்

      அலங்கற் செல்வன் சேவடிபரவி

என்றும் காணப்படும் குறிப்பில் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள திருமாலின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப்பெற்றுள்ளது. திருக்கோயிலின் நாற்புற வாயிலின் வழியாகத் தலைமேல் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராhவாரம் நான்கு வேறு திசைகளில் பரந்து ஒலிக்கின்றது.  

அகநானூறு

தண் கயத்தமன்ற வண்டு படுதுணை மலர்ப்

      பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்….

      வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை

மரம் செல மிதித்த மாஅல் போல”25என்ற வரிகள் மூலம் ஆயமகளிர் யமுனை ஆற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் வைத்த ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்தமரத்தில் ஏறும் காட்சி புலப்படுத்தப்பட்டுள்ளது.

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

      முழங்கிரும் பௌவம் இரங்கு முன்துறை

      வெல்போர் இராமன் அருமறைக்குவித்த

பல்வீழ் ஆழம் போல

ஒலியவிந்தன்று இவ்வழங்கலூரே”26என்ற பாடலடிகள் மூலம் இராமபிரான் இலங்கை சென்றமை கோடிக்கரை ஆலமரத்தில் ஆலோசனை, அங்கு அரிய அறைய ஆராயும் பொழுது அவ்வால மரத்திலுள்ள பறவைகளை சத்தம் போடாதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்று திருமால் பற்றி குறிப்பிடப்படுகின்றது.

இதை விட பலராமன், ஜமதக்கனி முனிவர், பலராமன் கார்தத வீரியன் மற்றும் இருபத்தொரு மன்னர் மரபினைக் கொன்ற வரலாறு,

மன்மருங் கறுத்த மடிவாள் நெடியோன்

       முன்முயன்றரிதின் முடித்த வேள்வி

       கயிரறை யாத்த காண்டகு வனப்பின்

அருங்கடி நெடுந்த தூண்போல”27என சித்தரிக்கப்பட்டுள்ளது. ; திருவரங்க பங்குனி

உத்தர விழாவைக் குறிக்கின்ற பாடல் ஒன்று காணப்படுகின்றது.

புறநானூறு

கழுவப் பெற்ற நீலமணி போன்ற மேனியையுடைய கருடக் கொடி ஏந்திய வெற்றியினையுடைய திருமாலை புறநானூறு குறிப்பிடுகிறது. சூரியனை மறைத்த அரக்கர்களுடன் போர் செய்து திருமால் பெற்ற வெற்றியைப் புறநானூறு,

அணங்குடை அவுணர் கணங் கொண்டொளித்தென

சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது

இருள் கண் கெடுத்த பரிதி ஞாலத்து

       இடும்பை கொள் பருவரல் தீரக் கடுந்திறல்எனப்பாடுகிறது. இந்த நிகழ்ச்சி வடமொழி நூல்களில் காணப்படவில்லை எனலாம்.

இராமாயண நிகழ்ச்சி பற்றி ஒரு குறிப்பும் வருகிறது. சோழன் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி ஊன்பதி பசுங்குடையாருக்கு சில பரிசிற் பொருள்களை நல்கினான் அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன. இவற்றை பசுங்குடையாருடன் போர்ந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக் கிணைப் பொருநன் கூற்றில் வைத்து,

விரற்சொறி மரபின செவித் தொடக்குநரும்

      செவித்தொடர் மரபின விரற் செறிக்குநரும்

      அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும்

      மிடற்றமை மரபின அரைக்கியாக்குநரும்

கடுந்தெறல் இராமன் உடன்புணர்சீதையை

      வலித்தகை யரக்கன் வெளவிய ஞான்றை

      நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்

      செம்முகப் பெருங்கிளை யிழைப் பொழிந்தா அங்கு”28

என்று கூறுவான். இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்த சென்ற போது அவள் கழற்றியெறிந்த அணிகலன்களை குரங்குகள் எடுத்து அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து

மகிழ்தாற் போல, பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலும் கழுத்திற்குரியவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும் போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

பரிபாடல்

திருமால் பற்றிய செய்திகள் மிகுதியாக இடம்பெறும் நூல் பரிபாடல் ஆகும்;. பரிபாடலில் திருமாற் கிருநான்குஎன எட்டுப் பாடல்கள் இருந்தன. தற்போது ஆறு பாடல்கள் கிட்டியுள்ளன. அவையாவன பரிபாடல் 1, 2, 3, 4, 13, 15 ஆகிய பாடல்கள் ஆகும். பரிபாடல் மொத்தம் 22 பாடல்கள். அவற்றில் ஆறு திருமால் பற்றியது என்பது தெரிகின்றது. அத்துடன் பரிபாடல் திரட்டில் ஒன்று எனவே மொத்தம் 7 பாடல்கள் அடங்கும்.

திருமால், தாமரைக் கண்ணன், காயாம் பூவண்ணன், திருமகள் அமர்ந்த மார்பினன், மார்பில் ஒளிவிடும் பூண்னன், பொன்னாடையினன், கருடக் கொடியினன் எனப் பரிபாடல் சித்தரிக்கின்றது.

திருமாலின் திருவடி,

மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி”29 அவனே வீடு பேறுநல்குபவன், இதனை,

நாறிணர்த் துழாயோன் நல்சினல்லதை

      ஏறுதல் எளிதோ வீறு பேறு துறக்கம்என்பதால் அறியலாம்.

வெனது பல்வேறு அவதாரங்களை,

பிறவாப் பிறப்பில்லை, பிறப்பித் தோரிலையேஎன்றார் கடுவனிளவெளினனார்.

பரிபாடலில் முதற்பாடலில் ஆயிரம் தலையையுடைய ஆதிடேன் மீது பள்ளி கொண்டவன் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் பூவைப்பூவண்ணன், தீமார்பில் கௌத்துவமணி (ஸ்ரீவத்ஸம்) யையுடையவன்எனவும் திருமாலை சித்தரிக்கினறது. 30இரண்டாவது பாடலில்,

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய

  ஊழி ஒருவினை உணர்த்தலின் முதுமைக்கு

 ஊழி யாவரும் உணரா”31என்பதில் திருமால் கொண்ட கேழல் உருவம் (பன்றியுரு) பற்றி குறிப்பிடுகின்றது. அதாவது உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத் திருக்கோலம் கொண்டவன். ஆழிப்படையால் அவுணர்களின் தலைகளைப் பனங்காய்கள் போல் உருளச் செய்பவன். எனவும் குறிப்பிடுகின்றது.

மூன்றாவது பாடலில்,

தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ

 கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ

 அறத்தினுள் அன்பு நீ

 

வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ

வெஞ்சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ

உறையும் உறைவதும் இலையே உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை32

 

 முதன் முறை  இடைமுறை கடைமுறை தொழிலிற்

பிறவாப் பிறப்பில்லை பிறப்பிது;தோர் இலையே”33 என்பதிலிருந்து வைணவ முழுமுதற் தெய்வம் திருமால் எல்லாமாகவும் இருக்கிறார். தீயில் வைம்மை, மலநள்மணம், கல்லினுள் மணி சொல்லினுள் வாய்மை, அறத்தினுள் அன்பு, மறத்தினுள் வன்மை என இருப்பதை கடுவன் இளவெயினனார் மேற்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

அளவற்ற கைகளையும், யாக்கைகளையும் உடையவன், ஆகமத்தாலும் அகங்காரத்தாலும், மனத்தாலும், உணர்வினாலும் அறியப்படாதவன். ஆயிரம் தலையையுடைய அனந்தாழ்வானைத் தன் வாயிற் கவ்விய கருடனின் செருக்கு அடங்க ஓவெனக் கதறுவதற்குக் காரணமானவன்.

செங்கட் கார் கருங்கண் வெள்ளை

      பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்”34  என்ற அடிகள் சிவந்த கைகளையும், கரியமேனியையும் உடைய வாசுதேவன் கரிய கண்ணையும், வெள்ளிய திருமேனியையும் உடைய சங்கர்ணன் சிவந்த திருமேனியையுடைய பிரத்தியும்னன் பசிய உடம்பினையுடைய அநிருத்தன் என்ற திருமாலினது நான்கு வகை வியூகங்களும் இப்பாடலில் கூறப்பெறுகின்றன.

நான்காம் பாடல் நீலமணியையும், அவையடங்கிய கடலையும், நீர் நிறைந்த மேகத்தையும் ஒத்த திருமேனி உடையவன் அவனே எல்லாமாக இருக்கின்றான்.

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள

      நின் தண்மையும் சாயலும் திங்களுள

      நின் சுரத்தலும் வண்மையும் மாரிஉள

      நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்துள

      நின் நாற்றமும் ஒண்மையும் பூவைஉள

      நின் தோற்றமும் அகலமும் நீரின்உள

      நின் உருவமும் ஒலியும் ஆகாயத்துள

      நின் வருதலும் ஒடுக்கமும் மருந்திலுள”35  எனக் கூறும்.

பதின்மூன்றாம் பதினைந்தாம் பாடல்களில் திருமாலின் திருமேனிச் சிறப்புகளும், திருமாலிருஞ் சோலையில் வீற்றருக்கும் அவன் அருள் பற்றியும் விளக்கப்படுகின்றன.

பரிபாடல் திரட்டு முதற் பாடலில்,

இருந்தையூர் அமர்ந்த செல்வ

என்ற திருமாலை விளக்கும் சொற்றொடர் கொண்டு இருந்த வளமுடையார் கோயில் என்று மதுரை அருகில் இருந்த கோயில் (திருங்கடல் எனும் திருப்பதி) என்றும் கூறுவர்.

ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்

      பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும்

      நீடுநீர் பையை நெடுமால் அடியேத்தத

      தூவித் துறைபடியப் போயினாள்

என்ற சிலப்பதிகார துன்பமாலை வரிகளில் வரும் நெடுமால் கோயில் இதுவென்றும் கூறுவர். இருந்தையூர்க் கருங்கோழி மோகியர் இருந்தையூர்க் கொற்றப் புலவன் எனும் இரு புதல்வர்கள் இங்கிருந்தவர்கள் என்று டாக்டர். உ.வே சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.

பத்துப்பாடல்

பத்துப்பாட்டு நூல்களிலும் மாயோனைப் பற்றிய குறிப்புகள் பல உள்ளன.

திருமுருகாற்றுப்படை

திருமால் கருடக் கொடியை உடையவன் என்பதை,

பாம்புடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறை  

       புள்ளிணி நீள் கொடிச் செல்வனும்”36

நாற் பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய

       உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை”37என்கிறார் நக்கீரர்.

பெரும்பாணாற்றுப்படை

காவிரிப்பூம் பட்டணத்தின் அரண்மனையையும், அதைச்சுற்றியிருந்த மதிலும், திருமாலின் உந்தித் தாமரையில் விளங்கும் பிரமனைப் பயந்த தாமரையின் பொருட்டும் இதழ்களும் போல் தோற்றமளித்ததை,

நீனிற உருவின் நெடியோன் கொப்பூழ்

       நான் முக ஒருவற் பயந்த பல்லிதழ்ப்

தாமரைப் பொருட்டின் காண்வரத் தோன்றி” (பெரும் அடி 402 – 404)

இருநிலங் கடந்த திருமறு மார்பின்

       முந்நீர் வண்ணன் பிறங்கடை”38

நாடுபல் கழிந்த பின்றை நீடு குலைக்

       காந்தளுஞ் சிலம்பில் களிறுபடித்தாங்கு

       பாம்பணைப் பள்ளி யமர்ந் தோனாங்கன்

       வெயில் நுழை பநியாக் குயில் நுழை பொதும்பா

என திருமால் பற்றிய செய்திகள் பெருமபானாற்றுப்படையில் காணக்கிடக்கின்றன.

முல்லைப்பாட்டு

சக்கரத்தோடு வரம்புரிச் சங்கினைத் தாங்கிய கைகளையும், திருமகள் அமர்ந்த மார்பினையும் உடையவன் திருமால் என்பதைப் முல்லைப்பாட்டு பின்வருமாறு குறிப்பிடும்.

நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை”39

மதுரைக்காஞ்சி

திருமால் அசுரர்களை வென்ற செய்தியை,

கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்

மாயோன் மேய ஓணநன்னாள்”40 என மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது.

 

பத்துப்பாட்டிலிருந்து நாம் அறிபவை

மாயோன் கொடி - கருடக் கொடி, திருமால் காக்கும் கடவுள் நான்முகனைப்பெற்ற திருவுந்தியை உடையவன். மகாவலியிடம் மூன்றடி மண் கேட்டு பின் வளர்ந்தவன் அசுரர்களை அழித்தவன் கருமைநிறம் கொண்டவன் போன்ற இன்னோரன்ன கருத்துகள் மூலம் திருமால் பற்றி அறியமுடிகிறது.

முடிவுரை

மேற்கூறப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு மூலம் சங்ககாலத்தில் இருந்த வைணவக் கருத்துகள் பற்றி அறிவதுடன் இக்கால இலக்கியங்களில் காணப்பட்ட கருத்துகள் தொடர்ந்து சிலப்பதிகாரக் காலத்திலும் அதனை அடுத்து வந்த காலங்களிலும் வளர்ந்து வரக் காரணமாக அமைந்துள்ளது. என்பதையும் உணர முடிகிறது.

உசாத்துணை

1.            தொல் - அகம் - 5

2.            தொல் - புறத் - 60

3.            நற் - 1

4.            பெரி.திரு.6.6:3

5.            நற்றினை – 32

6.            மேலது 52ம் இ 103

7.            மேலது 145 ம்

8.            மேலது8-10

9.            மேலது 37-38

10.          மேலது105

11.          மேலது 9-10

12.          கலி 103

13.          கலி 104

14.          மேலது 105

15.          கலி 106

16.          கலி 124

17.          மேலது1-2

18.          கலி 1-4

19.          கலி 101

20.          மேலது30-33

21.          மேலது2-5

22.          கலி 27

23.          மேலது52

24.          கலி 103

25.          அகம் 59

26.          அகம் 70

27.          அகம் 220

28.          புறம் 378

29.          பரி – 3

30.          பரி – 1

31.          பரி -2

32.          பரி – 3

33.          பரி 3: 63 – 72

34.          181 -182

35.          பரி – 4

36.          திருமுரு. அடி 150 – 151

37.          திருமுரு. அடி 160 – 161

38.          பெரும் அடி 29 – 31

39.          முல்லை அடி 1 -3

40.          மதுரை அடி 591 – 592