4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

கோவிட் 19 பெருந்தொற்று மக்களின் அடிப்படை உரிமைகளில் தாக்கம் செலுத்திய விதம் - ஓர் ஆய்வு - Manoharan Pradeepan

 

கோவிட்  19 பெருந்தொற்று மக்களின் அடிப்படை உரிமைகளில் தாக்கம் செலுத்திய விதம் -    ஓர் ஆய்வு

Manoharan Pradeepan  B.A, LLB

Teacher

Bt/Bw/Mahiladitivu Saraswathy maha vidyalayam,

Kokkaddicholai.

Sri Lanka.

pratheepanmanoharan84@gmail.com

0767626334/0775152989

 

ஆய்வுச்சுருக்கம்

கோவிட்  19 என்ற வைரசானது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக பரவி முழு உலகையும் முடக்கியது. இதனால் பொருளாதார, சமூக, கலாச்சார, கல்வி என பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தது. உரிமை என்பது சமூகத்தினாலும், அரசினாலும் அங்கிகரிக்கப்பட் மனித கோரிக்கைகளாகும். இது தொடர்பில் பல்வேறு அறிஞர்களும் தங்களது காலச் சூழ்நிலைக்கு ஏற்ப கருத்தினை முன்வைத்துள்ளனர். சர்வதேச ரீதியாக மனித உரிமைகளை விரிவாக வலியுறுத்தும் அமைப்புக்களில் 1948 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. ஒவ்வொரு நாடும் மனித உரிமைகளில் சிலவற்றை தெரிவு செய்து அவற்றினை அடிப்படை உரிமைகளாக தமது அரசியலமைப்பின் ஊடாக அங்கிகரித்துள்ளன. அந்த வகையில் இலங்கையில் 1978 அரசியலமைப்பின்  மூன்றாம் அத்தியாயத்தில் 10தொடக்கம்  14 ஆம் உறுப்புரை வரை சில உரிமைகளை அடிப்படை உரிமைகளாக அங்கிகரித்துள்ளன.மக்கள் தாங்கள் பிறப்பில் இருந்து அனுபவித்து வந்த கருத்து வெளியிடும் உரிமை, பேச்சுரிமை, அமைதியான வகையில் ஒன்று கூடும் உரிமை, சிந்தனை செய்யும் சுதந்திரமும், மதச்சுதந்திரம், கலாச்சார உரிமை, காரணமின்றி கைது செய்யப்படாமை, சமத்துவமாக வாழுவதற்கான உரிமை என்பன வரையறைகளுடன் அனுபவிக்க வேண்டியிருந்தது. சில அரசாங்கங்கள் இவ் உரிமைகளை கடுமையாக மட்டுப்படுத்தி தங்களுக்கு விரும்பிய ஆட்சியினை முன்னெடுத்தன. பெருந்தொற்றான கொரோனாவால் இலங்கை உட்பட்ட பல நாடுகளில் மக்களின் உரிமைகளை அனுபவிக்கும் விதத்தினை ஆய்வு செய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.

1.அறிமுகம்

கோவிட்  19 எனும் ஆட்கொல்லி வைரசானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாநிலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது. இதனை அடுத்து உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி உலகை 2020 ஆம் ஆண்டு முடக்கியது. தற்போதுவரை உலகில் 13 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 27 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக பொருளாதாரமானது பெரும்பாதிப்படைந்துள்ளது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களது நாட்டினை முழுமையாக முடக்கி வைத்திருந்தன. இதன் தாக்கமானது முதலாம், இரண்டாம், மூன்றாம் அலை என இதன் பரவலானது தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் மக்களது சுதந்திரமான நடமாட்டமானது பாதிப்படைந்து கொண்டே உள்ளது. இந் நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனமானது பல்வேறு நடவடிக்கைகளையும், உபாயங்களையும் எடுத்துள்ளது. மேலும் பல வழிகாட்டல்களை எல்லா நாடுகளுக்கும் வழங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில நாடுகள் தங்களது மக்களின் உரிமைகளை மீறுவதனை அவதானிக்க முடிகின்றது.

மனித உரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெற வேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும்.தோமஸ் கொப்ஸ் - இயற்கை உரிமை என்பது தனிமனிதனைக் காக்கும் உரிமைகளே என்ற புதிய விளக்கத்தை முன்வைத்து, உரிமைகளை மனித ஒழுக்க நெறியிலிருந்து பார்க்க முற்பட்டார்.

ரூசோ மக்களின் பொது விருப்பத்தின் அடிப்படையில் பொது மக்களால் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டினால் தான் உரிமைகள் தோன்றியதாக கூறுகிறார். அத்தோடு சமூக ஒழுக்க மனித உரிமைகளுக்கு இன்றியமையாது உரிமைகள் மதச்சார்பற்றது என்பதனையும் வலியுறுத்துகின்றார். இருபதாம் நூற்றாண்டில் தனிமனித ஆளுமை என்ற அடிப்படையில் தான் மனித உரிமைகள் தோற்றுவிக்கப்பட்டன.கீரின் மற்றும் லஸ்கி போன்ற ஆங்கிலச் சிந்தனையாளர்கள் தனி மனிதச் சுதந்திரம் பாதுகாக்கப்பட தோன்றியதுதான்  மனித உரிமைகள் என்று கூறினார்கள்.

உலகில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், பிரகடனங்களும் மனித உரிமைகளான பேச்சுரிமை, கருத்து வெளியிடும் உரிமை, மத உரிமை, ஒன்று கூடும் உரிமை, சமத்துவமாக வாழும் உரிமை போன்றவற்றை மக்கள் அனுபவிப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஒவ்வொரு நாடும் தங்களது அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளாக சில உரிமைகளை அங்கிகரித்துள்ளன.

2. 1948 - சர்வதேச மனித உரிமை பிரகடனம் வெளிக்காட்டும் மனித உரிமைகள்

இருபதாம் நூற்றாண்டில் இயற்கைஉரிமை, சட்டம், சமூகத்தேவைகள், தனிமனித ஆளுமை, சமூக ஒழுக்க மாண்புகள்  ஏற்கப்பட்டு, ஐ.நாவின் பொதுச்சபையால் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 இல் உலக மனித உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. மனித மாண்பு, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதியை நிலைநாட்டல் ஆகியன எதிர்பார்க்கப்பட்டது.சர்வாதிகாரம், கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபட்டு சட்ட ஆட்சி ஏற்பட வேண்டுவதே நோக்கமாகும். சமூக, பொருளாதார முன்னேற்றம் மற்றும் தரமான வாழ்க்கை நிலையை எய்;துதல் என்பது ஒரு நாட்டில் போற்றப்படும் மனித உரிமைகளின் அடிப்படையில் அமைகின்றது என்றால் அது மிகையாகாது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனமானது மக்களாட்சியினை வெளிப்படுத்தும் ஓர் ஆவணமாக உலகலாவிய ரீதியில் கணிப்பிடப்படுகின்றது. இதன் உறுப்புரைகளில் மக்களாட்சியின் முக்கிய பண்புகளை உற்றுநோக்குகையில்,உறுப்புரை :2 இனம், மொழி, மதம், நிறம், இடம், என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எனவும் உறுப்புரை: 3 இல் உயிர் வாழ்தல், சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு ஆகிய உரிமைகள் அனைவருக்கும் உண்டு. எனவும் உறுப்புரை: 5.இல் எந்த ஒரு மனிதனும் சித்திரவதைக்கு ஆளாகக் கூடாது. தண்டனையிலும் கூட குற்றம் புரிந்தவரைத் தன்மானத்துடன் நடத்த வேண்டும்.அத்துடன் உறுப்புரை: 6 இல் சட்டத்தின் முன் அனைவரும்  சமமாக மதிக்கப்பட வேண்டும்.என்பதுடன் 7 ஆம் உறுப்புரை  சட்டத்தின் பாதுகாப்பு அனைவருக்கும் சமமாக கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.எனவும் உறுப்புரை 8 இல் ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுமேயானால் அவ்வுரிமைகளை மீட்க தேசிய அளவில் தீர்ப்பாய்வு மன்றங்கள் அரசியலமைப்புச் சாசனம் அல்லது சட்டத்தின் துணை  வேண்டும்.எனவும் கூறப்படுகின்றது.

மேலும் உறுப்புரை: 18 ஒவ்வொருவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமையும், மத உரிமையும் உள்ளது. பல்வேறு தகவல் சாதனங்களின் துணை கொண்டு தங்கள் கருத்துக்களை உலகெங்கும் பரவச் செய்ய உரிமையுண்டு. மதக் கோட்பாடுகளை மற்றவருக்குப் போதிக்கவும், வழிபடவும், பின்பற்றவும் ஒருவருக்கு உரிமை உண்டு. அத்துடன் உறுப்புரை: 19 கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எனக் கூறுவதோடு உறுப்புரை: 20 அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கும், சில சமூக அமைப்புகளில் உறுப்பினராகச் சேர்வதற்கும் அனைவருக்கும் உரிமையுண்டு  எனக் கூறுகின்றது.

3. 1978 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு வெளிக்காட்டும் அடிப்படை உரிமைகள்

இவ் அரசியலமைப்பின் அத்தியாயம் மூன்றில் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இவ் உரிமைகளை மீறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. அந்தவகையில் உறுப்புரை 10 தொடக்கம் 14 வரை அடிப்படை உரிமைகளும் அதன் மீதான மட்டுப்பாடுகளும் விதந்துரைக்கப்பட்டுள்ளன.

உறுப்புரை: 10 ஆனது ஆளொவ்வொருவரும், தான் விரும்பும் மதத்தை அல்லது நம்பிக்கையை உடையவராயிருப்பதற்கான அல்லது மேற்கொள்ளுவதற்கான சுதந்திரமுட்பட சிந்தனை செய்யும் சுதந்திரம், மனட்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் என்பவற்றுக்கு உரித்துடையவராதல் வேண்டும்;. அத்துடன் உறுப்புரை: 11 ஆனது ஆளெவரும் சித்திரவதைக்கு அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது தண்டனைக்கு உட்படுதத்தப்படலாகாது. எனவும் உறுப்புரை: 12.(1) சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் எனவும் கூறுகின்றது. மேலும் (2) இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற்கொள்கை அல்லது அத்தகைய காரணங்களுள் ஏதாவது ஓர் காரணமாகவும் எந்தப் பிரசைக்கும் ஓரங்கட்ட முடியாது.அத்துடன் (3) எந்த ஆளுமை, இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒரு காரணமாகவும், கடைகள், பொது உணவுச் சாலைகள், விடுதிகள், பொது கழியாட்டவி;டங்கள், தனது மதத்திற்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றிற்கு செல்லுதல் தொடர்பில் ஏதேனும் தகுதியீனத்துக்கு, பொறுப்புக்கு, மட்டுப்பாட்டுக்கு அல்லது நிபந்தனைக்கு உட்பட்டவராதலாகாது. எனவும் கூறப்பட்டுள்ளது.

உறுப்புரை: 13.(1) சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடவடிக்கை முறைக்கிணங்கவன்றி, ஆளெவரும் கைது செய்யப்படுதலாகாது. கைது செய்யப்படுவதற்கான காரணம் கைது செய்யப்படும் எவரேனும் ஆளுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும். எனவும், உறுப்புiர்: 14.(1) ஒவ்வொரு பிரசையும் பின்வருவனவற்றுக்கு உரித்துடையவராவர்(அ) வெளியிடுதலுட்படப் பேச்சுச் சுதந்திரமும் கருத்துத்தெரிவித்தற் சுதந்திரமும்,(ஆ) அமைதியான முறையிலே ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், (இ) ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், (ஊ) தனியாக அல்லது ஏனையவர்களுடன் சேர்ந்து தனது சொந்த கலாசாரத்தை அனுபவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், அத்துடன் தனது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கும் ஆன சுதந்திரம்: (ஏ) இலங்கை முழுவதும் தடையின்றி நடமாடுவதற்கும், தான் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் ஆன சுதந்திரம்: அத்துடன் (2)14 (1) (அ)   ஆம் உறுப்புரையினால் வெளிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை உரிமையின் பிரயோகமும் தொழிற்பாடும், இனச்சுமுக வாழ்வு, மதச்சுமுக வாழ்வு          என்பவற்றின் நலன் கருதியோ அல்லது பாராளுமன்றச் சிறப்புரிமை, நீதிமன்ற அவமதிப்பு, மான நட்டம் அல்லது தவறு புரிய தூண்டுதல் என்பன தொடர்பாகவோ சட்டத்தினால் விதிக்கப்படக் கூடியவறான அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு அமைந்தனவாதல் வேண்டும். 

4. கோவிட்  19 எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் உரிமைகள் 

கொரோனாவால் மக்களின் அத்தியாவசிய உரிமையான சுதந்திரமாக நடமாடும் உரிமை சில சந்தர்ப்பங்களில் முழுமையாக மறுக்கப்பட்டதோடு, தற்போதுவரை வரையறுக்கப்பட்டவகையிலேயே நடமாடக்கூடிய நிலைமை உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. நோய் பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையினை நாடுகள் எடுத்தன. இதற்கு உலக சுகாதார ஸ்தாபனமும் அனுமதி அளித்தது. ஆனால் இந்த நிலைமையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திய சில நாடுகள் அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக இந்த உரிமையினை வழங்காமல் வரையறுத்துள்ளன.

கருத்து வெளியிடும் சுதந்திரமானது பல்வேறு வகையில் உலகின் பல நாடுகளிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கங்கள் விடும் தவறுகளை மக்கள் சுட்டிக்காட்டுகின்ற சந்தர்ப்பங்களில் அதை மக்கள் வெளிக்கொண்டு வருகின்றபோதும், அதற்கு எதிராக மக்கள் கருத்து வெளியிடும் சந்தர்ப்பங்களில் அதனை கட்டுப்படுத்த இந்த கோவிட்  19 சட்டவிதிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்துகின்ற நிலையினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

காரணம் இன்றி கைது செய்ய முடியாததோடு குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியாகவே கருதப்பட வேண்டும். விளக்கமறியலில் உள்ள கைதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஒவ்வொரு அரசின் கடமையாகும். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் இலங்கை உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள சிறைக் கூடங்களில் தொற்று கொத்தனியாக அதிகரித்து, கைதிகள் சிறைகளில் இருந்து தமது உரிமைகளை பெற போராடியதில் பலர் உயிரிழந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆளொவ்வொருவரும் மதம் சம்பந்தமான நடவடிக்கையில் ஈடுபடவும், தமது கலாச்சார நடவடிக்கைகளை எவ்வித கட்டுப்பாடுகள் இன்றியும் முன்னெடுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களது உடல்களை அவர்களது மத நம்பிக்கையின் பிரகாரம் புதைக்கவோ அல்லது எரிக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.கிறிஸ்தவ மக்களும் தங்களது மத சம்பிரதாயங்களின்படி இறப்பவர்களை புதைப்பதே வழமை. ஆனால் சில ஐரோப்பிய நாடுகளும் இதற்கு அனுமதி வழங்காமல் எரித்தமை அவர்களது உரிமையினைமீறும் செயலாக பார்க்கப்பட்டது. இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை புதைப்பது தொடர்பில் பாரியளவு முரண்பாடுகள் நிலவியமையும், அதனையடுத்து தற்போது புதைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது. இந்த சுதந்திரமானது கோவிட்  19 நோய் பரவல் காலத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் என்ற அடிப்படையில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கங்கத்தினை விமர்சித்து ஆர்பாட்டம் செய்யும் உரிமை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி செய்வதனைக் கூட தடை செய்திருந்தனர். இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இலங்கையிலும் மனித உரிமை செயற்பாட்டாளர்களது போராட்டங்களை தடை செய்வதற்காக நீதிமன்ற தடையானைகளை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இன,மத, மொழி, சாதி, பால் வேறுபாடு இன்றி அனைவரும் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும். அத்துடன் ஒவ்வொரு மனிதனுக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்க வேண்டும். என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான சமத்துவத்தின் கொள்கையாகும். இவ் பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் சில சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் இவ் எண்ணக்கருவினை முழுமையாக நிறைவேற்ற முடியாதபோதிலும், சில அரசாங்கங்கள் வேண்டுமென்றே இதனை தவிர்த்திருந்தன.

மக்களாட்சியின் பிரதான பண்பாக விளங்குவது சட்டத்தின் ஆட்சியாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதோடு, சமமான பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும். நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே, ஏனைய விசேட சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இதுவும் அரசியலமைப்பினை மீறாத வகையிலும், மக்களது உரிமைகளை மீறாமலும் இருக்க வேண்டும். ஆனால் சில நாடுகளில் இந்த நிலையினைக் காண முடியவில்லை.

5. முடிவுரை

கோவிட்  19 எனும் பெருந்தொற்றினால் உலகமானது இன்னும் வழமைக்கு திரும்பாத நிலையில் தொற்று அதிகரிப்பதோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. மக்கள் பொருளாதார, அரசியல், கலாச்சார, கல்விரீதியான பாதிப்பினால் மக்களது உரிமைகளும், சுதந்திரங்களும் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.இவ் நோயை கட்டுப்படுத்த சில தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்தினாலும் அது முழுமையான பாதுகாப்பினைத் தரவில்லை. இந்த நிலையில் மக்கள் தங்களது உரிமைகள் சிலவற்றை தாமாகவே வரையறுக்க வேண்டி ஏற்பட்டன.ஆனால் இச் சந்தர்ப்பத்தினை தமக்கு சாதகமாக்கிக் கொண்ட சில நாடுகள் உரிமைகளான கருத்துவெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, சுதந்திரமான நடமாட்டம், மத மற்றும் கலாசார உரிமை,பேச்சுரிமை, சமத்துவமாக வாழும் உரிமை, சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படுவதற்கான உரிமை என பல மனித உரிமைகளை சில நாடுகள் வரையறுத்தமையானது மக்களாட்சியினை மீறுவதாக அமைகின்றது எனலாம்.இவ் பெருந்தொற்றினால் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. அதாவது பயங்கரவாதத் தாக்குதல் குறைவடைந்தமை, தொழிற்சாலைகள் பல மூடப்பட்டமையால் சுற்றாடல் பாதிப்பு குறைவடைந்தமை, வீதி விபத்துக்கள் குறைவடைந்தமை, கர்ப்பம் தரித்தோர் எண்ணிக்கை அதிகரித்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உசாத்துணை நூல்கள்

1.       யோதிலிங்கம்,சி,, 2007, அரசறிவியல் ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

2.       யோதிலிங்கம்,சி,, 1998, இலங்கையின் அரசியல் யாப்புக்கள், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

3.       இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு, 2013, பாராளுமன்ற செயலகம், கொழும்பு.

4.       சிவராஜா,அம்பலவாணர், 2006, அரசியல் மூலதத்துவங்கள், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.

5.       ரோகன ரத்னாயக்க, சர்வதேச பிரகடனங்களும் சமவாயங்களும், மனித உரிமைகள் கற்கை நிலையம்,கொழும்பு பல்கலைக்கழகம்.

6.       Gehan Gunatilake, 2020, oxford human rightshub,covid 19 in srilanka is free speech the next  victim.

7.       Hannah Ellis Petersen, 2020, the gardian, south asia.

8.       Meenakshi Ganguly, 2020, human rights watch, srilanka uses pandemic to cutain free  expression.