4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

உளநெருக்கீடுகளைத் தணித்தலில் வழிபாட்டு உளவியலின் பங்கு - கி.நிரோஜா

 

உளநெருக்கீடுகளைத் தணித்தலில் வழிபாட்டு உளவியலின் பங்கு

கி.நிரோஜா

கிழக்குப் பல்கலைக்கழகம்

வந்தாறுமூலை

இலங்கை

 

உளவியல் என்பது ஒருவரையறைக்குள் உட்படுத்த முடியாத பரந்துபட்ட அம்சமாகும். உளவியல் பற்றிய ஆராய்ச்சி காலம் தோறும் உலகம் முழுவதிலுமே இடம்பெற்ற வண்ணம் காணப்படுகின்றமை நாம் அறிந்ததே.

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உளவியலுக்குள்ள தொடர்பையும், அத்தொடர்பினால் விளையும் பல்வேறு பெயர்களையும் நாம் அறியலாம். உளவியலின் கண்டுபிடிப்புக்களும் கருத்துக்களும் வாழ்க்கையை பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. நுண்ணறிவுச் சோதனைகள், மனநல உளவியல் சிகிச்சை முறைகள் போன்ற உளவியல் கண்டுபிடிப்புக்கள் சமுதாயத்தில் எழும் சில சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் தோன்றியவையே எனலாம். வாழ்க்கைச் சிக்கல்களோடு தொடர்பில்லாதன என்று முதலில் கருதப்பட்ட உளவியல் உண்மைகள் பின்னர் மனிதவாழ்க்கையைச் சீராக்கி  உயர்நிலைப்படுத்த  உதவியுள்ளன.

இன்று நாம் உளவியல் என்று கூறுவதை பண்டை கிரேக்கர்கள் ஆன்மவியல்" என்று கூறினர். அதுவே ஆங்கிலத்தில் சைக்கோலொஜி" (Psychology) என அழைக்கப்பட்டது. பழங்காலமனிதன் தன் உடலைத் தவிர வேறெதையும் அறியாதவனாயிருந்தான். ஆனால் காலம் செல்லச் செல்ல உடம்பினுள்ளே ஏதோ ஒரு பொருள் உண்டு என அறிந்தான். அதுவே ஆன்மா அல்லது உயிர் எனப்படும் புலக்காட்சியற்றப் பொருள் என்பதையும் அறிந்தான். கனவுகளும், நெறிபிறழ்வு அல்லது அசாதாரண நடத்தைகளும் அவனை அவ்வாறு சிந்திக்கத் தூண்டின. தன் உடல் ஓரிடத்தில் செயலற்றுக் கிடந்த நிலையிலும் தான் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று பலவிதமான அனுபவங்களைப் பெறுவது போன்ற உணர்ச்சி கனவுகளில் தோன்றுகின்றது. இவ்வனுபவங்கள் உடலுக்குரியவை அல்ல, உடலினுள்ளே உறைந்துள்ள ஆன்மாவின் செயல் எனஅவன் சிந்திக்கத் தொடங்கினான். இவ்வாறு உள்ளம் பாதிப்படைந்தோர் தம் இயல்பான நடத்தை முறைகளுக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபடும் போது அது அவர்களது உடலைப் பற்றியுள்ள வேறு ஓர் ஆவியின் செயல் எனவும் பழங்கால மனிதன் கருதினான். இத்தகைய ஆன்மா அல்லது ஆவியின் இயல்புகளை ஆராய்ந்து எடுத்துக் கூற உளவியல் தோன்றிபல நூற்றாண்டுகளாக பெருவளர்ச்சி கண்டுள்ளது.

உளவியலானது குழந்தைப் பருவத்தின் பிறழ்ச்சி, பிறழ்ச்சியற்ற மனிதன், விலங்கு, தனியாள், சமூகம் எனபவற்றுடன் தனியாள் வேறுபாடுகள், பாலுணர்ச்சி வேறுபாடுகள், கற்றல், பதிதல், உளக்கிளர்ச்சி,  உள எழுச்சி, உளச்சோர்வு போன்றவற்றையும் ஆராய்கின்றது.

உளவியலானது ஆரம்பத்தில் அகநோக்கு (introspection) முறையையே கையாண்டு வந்தது. பின்னர் இவற்றுக்கு பல எதிர்ப்புக் கருத்துக்கள் தோன்றவே சோதனைமுறைகளைக் கையாளத் தொடங்கியது. தற்காலத்தில் உளவியலானது விஞ்ஞானம் போலவே அளத்தல், புள்ளிவிபரங்கள் சேகரித்தல் முதலியவற்றைப் பயன்படுத்துகின்றது. அத்துடன் அது ஆள் வரலாற்றுமுறை, போட்டிமுறை, வளர்ச்சிமுறை, வினாமுறை போன்ற பலமுறைகளை வகுத்துள்ளது.

எனவே, உளவியலானது உள்ளத்தைப் பற்றி ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டிய உண்மைகளைக் கூறி, அவற்றைக் கொண்டு வாழ்க்கையைப் பயன்படுத்துவதற்கேற்ற முறைகளையும் வகுத்து அதற்குத் தேவையான சோதனை முறைகளையும் உண்டாக்கி, மனிதனுக்கு உதவி செய்து வருகின்றது.

அந்த வகையில், உளவியலானது இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே எல்லா துறைகளிலும் பிரயோகிக்கக்கூடிய ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது. உள நெருக்கீடுகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான சரியான வழிகாட்டலை மேற்கொள்வதில் வழிபாட்டு உளவியல் முதலிடம் வகிக்கின்றது. இது சமயத்தின் ஓரங்கமாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

சமயமானது ஒருவரது வாழ்வில் சிறப்பானதொரு பங்கினை வகிக்கின்றது. ஒருவரின் சீரியவாழ்க்கைக்கும் சமூகமேம்பாட்டிற்கும் சமயம் மிக அத்தியாவசியாமானதாகும். பிறந்தது முதல் ஒவ்வொருவரும் சமயத்தின் ஓர் அங்கமாகவே வாழ்கின்றனர். அதன் காரணமாக சமயம் ஒரு மனிதனது உள்ளத்தில் ஆழ்ந்த விளைவினை ஏற்படுத்தியிருப்பதோடு அவனது நடத்தையையும் கட்டுப்படுத்துகின்றது.

சமயமானது ஒவ்வொருவரும் தாமாகவே அங்கீகரித்துக் கொள்ள வேண்டியதாகும். ஒருவர் மீது இதனை திணிக்க இயலாது. மாறாகதாமே அங்கீகரித்துக்கொள்வதனாலேயே எவ்வித கண்காணிப்புமின்றி அதன் ஆசாரங்களை ஏற்றுக் கொள்கின்றான். சில வேளைகளில் அதனின்று பிறழநேரும் போது, மனிதன் மனம் குற்ற உணர்வுக்குட்படுகின்றது. எனவே சமயமானது ஒரு மனிதனை சரியான வழியில் இட்டுச் செல்லும் பொருட்டு அவனை உளவியல் ரீதியாகக் கட்டப்படுத்துகின்றது.

அந்தவகையில் சமயத்தின் அடிப்படைஅம்சமாகக் காணப்படுவது வழிபாடாகும். இவ்வழிபாடானது ஓர் உளவியல் சார்ந்த அம்சமாகும். வழிபாடு எனப்படுவது, மனிதனை விலங்கு நிலையினின்று மனித நிலைக்கு இட்டுச் செல்வதோடு உளவியல் ரீதியாக நன்னிலைப்படுத்தும் ஓர் செயற்பாடாகவும் விளங்குகின்றது. இத்தகைய உளவியலானது எவ்வகையில் வழிபாட்டுடன் தொடர்புபடுகின்றது எனும் வினா எம்முள் ஏற்படுகின்றது.

உளவியலானது உடல், உள்ளம், மனவெழுச்சி ஆகிய மூன்று அம்சங்களையும் பகுதிகளாகக் கொண்டதாகும். எனவே இம்மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைப்பதே வழிபாட்டின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது.

வழிபாடானது உடலை ஓர் ஊடகமாகக் கொண்டு உள சுகம் பெற வழிவகுக்கின்றது. இது பலவிதமான முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

               ஆடல்

               கீர்த்தனைகள்

               பாடல் / இசை

               துள்ளல்

               உடலைவருத்துதல்

இத்தகைய முறைகளில் மேற்கொள்ளப்படும் வழிபாடானது, உடலை பிரதானமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டாலும் இதன் அடிப்படை நோக்கம் உளநலமேயாகும்.

வழிபாடானது பிரதானமாக நான்கு வகைப்படுத்தப்படுகின்றது.

01.          சரியை நெறி சார்ந்த வழிபாடு

02.          கிரியை நெறி சார்ந்த வழிபாடு

03.          யோக நெறி சார்ந்த வழிபாடு

04.          ஞானநெறி சார்ந்த வழிபாடு என்பனவாகும்.

சரியை நெறி சார்ந்த வழிபாடு

சரியை நெறி சார்ந்த வழிபாடு எனப்படுவது இறைவனுக்கு தொண்டுகள் செய்வதன் மூலம் வழிபாடாற்றும் நெறிமுறையாகும். அதாவது அப்பரின் கூற்றுக்கிணங்க உடலால் பணிசெய்துகிடப்பதாகும்.

உதாரணம்:- ஆலயத்தைக் கட்டுதல், ஒப்புவித்தல், புனருத்தாரனம் செய்தல், ஆலயத்தைக் கழுவிசுத்தம் செய்தல் என்பனவாகும்.

மனிதவாழ்வில் ஏற்படும் உளவியல் சார்ந்த நெருக்கீடுகளை இத்தகைய சரியை நெறிசார்ந்த வழிபாடுகள் எவ்வாறு தணிக்கின்றது என நோக்குமிடத்து, மனிதனொருவனிடத்தில் நடத்தை சார்ந்த பழக்க வழக்கங்களில் நேர்ப்பண்பு ரீதியான மாற்றத்தினையும், முன்னேற்றத் தினையும் ஏற்படுத்துகின்றது. அதாவது தொடர்ச்சியாக சரியை வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலமாக தூய தெய்வபக்தியும், இறையம் சமும் ஏற்படுவதோடு முக்திப் பேற்றுக்கும் வழி வகுக்கும். இச்சரியை நெறியானது  பிரதானமாக நான்கு வகைப்படுத்தப்படுகின்றது.

01.          சரியையில் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் விளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

02.          சரியையில் கிரியை - ஒரு மூர்த்தியை வழிபடுதல்.

03.          சரியையில் யோகம் - வழிபடும் கடவுளையும் சிவனையும் தியானித்தல்.

04.          சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப்பெறல்.

கிரியை நெறி சார்ந்த வழிபாடு

கிரியை நெறி தொடர்பாக நோக்குமிடத்து, சைவ நாற்பாதங்களுள் இது இரண்டாவதாகக் கொள்ளப்படுகின்றது. தந்திரங்களை குருவின் மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டுமுறையாகும். கிரியை நெறியில் நிற்போர் இறையியலுடன் நெருங்கிய தொடர்புடையோராகக் காணப்படுவதுடன் அவர்கள் சார் உளவியலும் ஆன்மீகத்தையே சுற்றி வட்டமிட்ட வண்ணம் காணப்படும் என்பது உளவியலாளர்களின் உறுதியான கருத்தாகக் காணப்படுகின்றது.

திருமலர்கள், திருமஞ்சனம், முதலியவற்றினால் ஒப்பனை,  தூபம், தீபம் முதலான உபசாரங்களை செய்தல், வலம் செய்தல், பணிதல், தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டிநிற்றல் என்பனவே கிரியைத் தொண்டுகளாக இந்து சமயத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, கிரியை நெறிசார்ந்தவர்கள் தமக்காக வேண்டுதல் செய்தல் மற்றும் பூசைகள் செய்வதைக் காட்டிலும் பிறருக்கான வேண்டுதலில் ஈடுபடுவது அதிகமானதாகக் காணப்படுவதால் பிறர் நலம் கருதும் தன்மையுடையோராகவும் காணப்படுவர் என உளவியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

கிரியை நெறி மூலமாக உளவளம் எவ்வாறு பேணப்படுகின்றது என நோக்குகின்ற பொழுது, ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறைகளேனும் கிரியை வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அவனுள் காணப்படும் உள நெருக்கீடுகளுக்கு அது ஒரு மருந்தாகக் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய கிரியை நெறி சார்ந்து வாழ்பவர்களை இவ்வழிபாடு உளவியல் ரீதியாக பலமடைய செய்கின்றது. இக்கிரியை வழிபாடும் நான்கு வகைப்படுத்தப்படுகின்றது.

01.          கிரியையிற் கிரியை – பூசைப் பொருட்களைத் திரட்டல்.

02.          கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

03.          கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

04.          கிரியையில் ஞானம் – மேற்கொள்ளப்பட்ட கிரியைகளினால் ஓர் அனுபவம் வாய்க்கப்பெறுதல்.

யோக நெறி சார்ந்த வழிபாடு

யோகநெறி சார்ந்த வழிபாடு தொடர்பாக நோக்குமிடத்து, யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவதாகக் காணப்படுவதுடன் சரியை, கிரியை முதலான நெறிகளைவிடமேலான நெறியாக இது கொள்ளப்படுகின்றது.  இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அட்டாங்க யோகங்கள் இவ்யோக நெறிக்கு உரியதாக சாத்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவ்வட்டாங்க யோகங்களில் பயிற்சிப் பெற்று படிப்படியாக தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும்.

குறிப்பாக யோக நெறி மற்றும் பயிற்சிகளின் மூலமாக உடல் ரீதியானசுகம் பேணப்படுவதுடன் உள ரீதியான ஆரோக்கியமும் ஒருங்கே பெறப்படுகின்றது. குறிப்பாக எத்தகைய உளவியல் சார்ந்த நெருக்கீடுகளுக்கும் தைரியமாகமுகம் கொடுத்து அவற்றினைத் திடமாகச் சமாளிக்கக் கூடியஆற்றலும் ஆளுமையும் வளர்க்கப்படுகின்றது.

தியானயோகப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் சாதாரண மனிதர்களைக் காட்டிலும் உடல் உள ரீதியாக ஆரோக்கியமும் திடமும் கொண்டு விளங்குவர் என்பதுதெளிவு. குறிப்பாகயோக நெறி சார்ந்த வழிபாடு எனப்படுவது யோகம் மற்றும் தியானப் பயிற்சிகள் மடடுமல்ல. மாறாக அறிவுதரும் நூல்களைக் கற்றுஅவற்றில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக சிந்தித்து, தெளிவு பெறுதலும் இவ்யோக நெறிக்குள் உள்ளடங்கும்.

எனவேதான் சான்றோர்கள் சைவ நாற்பாதங்களில் முதல் இரண்டு நெறிகளாகிய சரியை, கிரியை என்பவற்றினைக் காட்டிலும் யோக நெறியினை மேலானதாகக் குறிப்பிட்டுள்ளனர் எனலாம். இதுநான்கு பிரிவுகளுக்குள் உட்படுத்தப்படும்.

01.          யோகத்தில் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம்

02.          யோகத்தில் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை

03.          யோகத்தில் யோகம் - தியானம்

04.          யோகத்தில் ஞானம் – சமாதி என்பன வற்றிகை குறிப்பிட முடியும்.

ஞானநெறி சார்ந்த வழிபாடு

ஞானநெறி சார்ந்த வழிபாடு தொடர்பாக நோக்குமிடத்து, ஞானநெறியாவது சைவ நாற்பாதங்களில் நான்காவது நெறியாகக் கொள்ளப்படுகின்றது. ஞானம் எனப்படுவது, ஆன்மா தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தலாகும். அதாவது, சிவனை அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்க மற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும்.

கேட்டல், சிந்தித்தல், தெரிதல், நிட்டை கூடல் எனும் நான்கு அங்கங்கள் இந்நெறியில் காணப்படுகின்றது. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவில் வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை வழங்குவார்.

ஞானநெறியில் கைதேர்ந்த ஒருவன் உள ரீதியான நெருக்கீடுகளை சந்திப்பதில்லை. எனவே, ஒரு மனிதன் உளநெருக்கீடுகளில் இருந்து விடுபடுவதற்கு சைவ நாற்பாதங்கள் ஒவ்வொன்றினையும் ஒழுங்கான படிமுறையில் கடைபிடிப்பதோடு ஈற்றில் ஞானநெறியையும் கடைபிடித்து சிறப்படைவதால் இது கைக்கூடும். இந்நெறி நான்கு வாகப்பாட்டில் நோக்கப்படும்.

01.          ஞானத்தில் சரியை – ஞான நூல்களைக் கேட்டல்.

02.          ஞானத்தில் கிரியை - ஞான நூல்களை சிந்தித்தல்.

03.          ஞானத்தில் யோகம் - ஞான நூல்களைத் தெளிதல்.

04.          ஞானத்தில் ஞானம் - ஞானநிட்டை கூடல் என்பவற்றினைக் குறிப்பிடமுடியும்.

பிரார்த்தனை

மேற்கூறப்பட்ட சைவ நாற்பாதங்களின் வழி உள நெருக்கீடுகளைத் தவிர்த்துக் கொள்வதுமட்டுமன்றி மேலும் பல வழிமுறைகளும் வழிபாட்டின் மூலம் உள நெருக்கீடுகளைத் தணித்துக் கொள்வதற்கு ஏதுவாக அமைகின்றன. அந்த வகையில் உள நெருக்கீடுகளைத் தணிப்பதில் வழிபாட்டின் ஒருமுக்கியப் பிரிவாகக் கருதப்படும் பிரார்த்தனை எத்தகைய பங்கினை வகிக்கின்றது என ஆராயுமிடத்து, பிரார்த்தனை நிலைப்பட்ட வழிபாடு என்பது, ஒரு வேண்டுகோள் அல்லது செயல் எனப் பொருள்படும். இது வழிபாட்டுடன் பரஸ்பரம் நெருங்கிய தொடர்புடைய அம்சமாதலால் மனிதர்களிடத்தில் நம்பிக்கை மற்றும் புரிதலை செயற்படுத்த இது முற்படுகின்றதெனலாம்.

பிரார்த்தனை என்பது பொது அல்லது தனிப்பட்ட முறையில் நடக்கலாம். இதில் வார்த்தைகள் அல்லது பாடல் அல்லது முழமையான மௌனம் உள்ளிட்டவற்றினை பயன்படுத்த முடியும். மொழி பயன்படுத்தப்படும் போது பிரார்த்தனை ஒரு பாடல் வடிவமாகவோ, மந்திரமாகவோ, முறையான நம்பிக்கையாகவோ அறிக்கையாகவோ அல்லது பிரார்த்தனை செய்யும் நபரின் சொற்பொழிவாகவோ இருக்கலாம்.

வேண்டுகோள், பிரார்த்தனை விண்ணப்பம், நன்றி மற்றும் புகழ் பாடுதல் எனப் பிரார்த்தனையின் வெவ்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன.

பிரார்த்தனையானது ஒரு தெய்வம், ஆவி அல்லது இறந்தவர், உயர்ந்தயோசனை, வழிபாட்டிற்கான நோக்கம், வழிகாட்டுதல், கோருதல், பாவங்களை ஒப்புக்கொள்ளுதல் அல்லது ஒருவரின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கி இருக்கலாம். எனவே, தனிப்பட்ட நன்மைக்காக அல்லது மற்றவர்களுக்காக எனப் பல காரணங்களின் நிமித்தம் வழிபாடு செய்யப்படுகின்றது.

இத்தகைய பிரார்த்தனைகளின் மூலமாக மனிதரிடத்தில் ஏற்படும் உள நெருக்கீடுகளுக்கு ஓரளவேனும் தீர்வு எட்டப்படுவதாக உளவியல் நிபுனர்கள் நிரூபித்துள்ளனர். இதன்படி நோக்கும் போது, தனிப்பட்ட பிரார்த்தனையாயினும் கூட்டுப் பிரார்த்தனையாயினும் இறைவனிடத்திலே உள ரீதியானப் பிரச்சினை அல்லது இன்னல்களை வாய் விட்டுக் கூறி அதன் மூலம் மனநிம்மதி அடையும் சந்தர்ப்பம் மக்களுக்குக் கிடைக்கின்றது. மேலும், இத்தகைய பிரார்த்தனைகளில் இடம்பெறும் இசை தொடர்பான அம்சங்களில் மனதை செலுத்தும் பொழுது, இயல்பாகவே மனதிற்கு ஒரு வித அமைதி கிடைக்கின்றது.

குறிப்பாக இத்தகையப் பிரார்த்தனையானது, மேற்கொள்ளப்படுவதில் மனிதனின் உளவியல் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றது. உதாரணமாக மனிதனொருவன் தனது வாழ்க்கை சிறப்பாக எல்லா அம்சங்களும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டு காணப்படுகின்ற பொழுது, அவன் தனது அன்றாட இருவேளை பிரார்த்தனை தவிர ஏனைய விஷேட பிரார்த்தனைகளில் ஈடுபடுவதில்லை. மாறாக அவனது வாழ்வில் யாதேனும் பிரச்சினைகளோ அல்லது உளவியல் ரீதியான நெருக்கீடுகளோ ஏற்படும் சந்தர்ப்பத்திலேயோ மனிதன் பிரார்த்தனையை நாடிச் செல்கின்றான். இதன் மூலம் அவனது உள நெருக்கீடுகளுக்கு நிவாரணம் பெறப்படும் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கையாகக் காணப்படுகின்றது.

இத்தகைய பிரார்த்தனைகளில் இடம்பெறும் சில வகையான செயற்பாடுகளே மனித உள்ளத்தை இத்தகைய நெருக்கீடுகளில் இருந்து பாதுகாத்து சாந்தப்படுத்துகின்றன. உதாரணமாக தண்ணீர் ஓதிக் கொடுத்தல், கயிறு கட்டுதல், தாயத்து அணிதல், மண் சோறு உண்ணுதல், தீச்சட்டி ஏந்துதல், தீமிதித்தல் முதலான அம்சங்களை எடுத்துக் கொண்டால் அவை நம்பிக்கையை அடியொற்றியே கட்டியெழுப்பப் பட்டுள்ளன. தண்ணீரைப் பொருத்தவரையில் அது நல்லவிடயங்களையும் தீய விடயங்களையும் இலகுவில் சார்ந்துக் கொள்ளும் திறன் படைத்ததாகும். எனவேதான் நேர்ப்பாங்கான எண்ணப்பாடுகளையுடைய மந்திரங்களை தண்ணீரில் ஓதிக் கொடுக்கும் போது அது நேர்ப்பாங்கான தாக்கத்தினை செலுத்தக்கூடிய இயல்பினைப் பெறும் என்பது திண்ணம். குறிப்பாக இத்தகைய செயற்பாடுகள் மேற்கொள்வதன் மூலமாக மனதளவில் ஒருவித நம்பிக்கையும் குறித்த உள நெருக்கீட்டுக்கான தீர்வு கிடைக்குமென்ற உணர்வும் ஏற்படும். இதுவே உள நெருக்கீட்டுக்கான ஓர் தற்காலிக தீர்வாகவும் அமையப்பெறும் எலாம்.

நேர்த்திக்கடன்

அடுத்ததாக உளநெருக்கீட்டைத் தணிப்பதில் வழிபாட்டு உளவியலின் முக்கிய அம்சமாகத் திகழும் நேர்த்திக்கடன் எனும் ஓர் விடயம் தொடர்பாக நோக்குமிடத்து, இறைவனுக்கு நாம் ஏதேனும் சில ஆகுதிகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக சில உலகியல் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ள வேண்டுதல் செய்வது நேர்த்திக்கடன் எனப்படுகின்றது.

அந்தவகையில், தற்காலத்தில் நேர்த்திவைத்தல் எனும் மரபு மக்களிடத்திலே மிகுதியாகக் காணப்படுகின்றது. குறிப்பாக இது உளவியல் சார்ந்து பெருமளவிலானதாக்கத் தினைச் செலுத்தும் ஓர் செயற்பாடாக அமைகின்றது. உதாரணமாகக் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதேனும் உடலியல் ரீதியான இயலாமை ஏற்படின் அதற்காக இறைவனிடத்தில் நேர்த்திக்கடன் வைத்து காசுகட்டிவிடுவது பிரபலமான ஒரு செயற்பாடாகும். இவ்வாறு காசு நேர்தலினால் குறிப்பிட்ட நோயாளிக்கு உடற்சுகம் பெறப்படும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாகக் காணப்படுகின்றது. அதாவது 'நான் உனக்கு இந்தக்காசினைத் தருகின்றறேன். அதற்காக நீ இந்த நோயினைமாற்றிக் கொடு!" என்று கடவுளுக்கு ஓர் ஒப்பந்தம் முறைமையிலான நேர்த்தியாக இது அமைகின்றது. எனவே குறித்த உளநெருக்கீட்டிலிருந்து விடுதலைப் பெறுவதற்கு இத்தகைய நேர்த்திக்கடன் செலுத்தும் முறைபெரும் பங்களிப்பு செய்கின்றது.

குறிப்பாக இன்றளவிலும் உளநலம் குன்றியப் பிள்ளைகளை கோயிலுக்கு நேர்த்தி செய்து விடப்படும் வழக்கம் இந்தியாவின் பெங்களுர் பகுதியில் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலே ஒரு வருடகாலத்துக்கு மேலாக உளவியல் சார்ந்த நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்த சிலர் ஒரு ஆலயத்தில் பல வாரங்களுக்குத் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்றும், அங்கு அவர்கள் பூக்கன்றுகளுக்கு நீர் ஊற்றுதல் முதலான ஆலய வேலைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும், சில வாரங்களின் பின்னர் அவர்களது உள ஆரோக்கியத்தில் 20மூ முன்னேற்றம் காணப்பட்டது எனவும் உளவியல் வைத்தியநிபுனர்கள் ஆதாரப்படுத்தியுள்ளனர். எனவே ஆலய வழிபாடும் அங்குகாணப்படும் நேர்ப்பாங்கான சூழலும் ஒருமனிதனின் உளவியல் நெருக்கீடுகளுக்கு சிறந்த மருத்துவமாக அமையப்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மனிதன் பெருமளவு உளநெருக்கீடுகளுக்கு உள்ளாவது அவனது மறைச் சிந்தனையினாலேயே எனலாம். இத்தகைய மறை எண்ணப்பாடுகளை நீக்குவதற்கு ஆலயமும் மிகச்சிறந்த முறைமைகளாகும். குறிப்பாக இறைவனுக்கு எண்ணெய் வைத்தல், தொட்டில் செய்துவைத்தல், வடைமாலை செய்து சூட்டுதல், மடைவைத்தல், தேங்காய் உடைத்தல் எனும் செயற்பாடுகளும் இவ்வகை நேர்த்திக் கடன்களைச் சார்ந்தனவே எனலாம். இவை அனைத்தும் முற்று முழுதாக நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்பட்டு வந்த நேர்த்திக் கடன் முறைகளேயாகும்.

நேர்த்திக் கடனை முதலில் செய்யும் போது அது உளவியல் ரீதியாக அதிகபலனைத் தருகின்றது. எனினும், ஆன்மீக நம்பிக்கைகள், ஆன்மீகப் பலம் ஆகியவை இருக்கும் போது உளப்பாதிப்புக்கு எதிரான தாங்குதிறன் அதிகமாகின்றது. எனினும், பெரும்பான்மையானவர்கள் வழிபாட்டின் மூலமே தமது உளநெருக்கீடுகளைத் தணித்துக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர் என்பதுயதார்த்தமே.

அன்னதானம் செய்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல் ஆகிய அம்சங்களில் சுய தேவையின் வெளிப்பாடாக பொது நலமும் கலந்துள்ளது எனலாம். நோய் மாறுதல், பிள்ளை வரம் வேண்டுதல் போன்றவிடயங்களில் இத்தகைய நேர்த்திக் கடன் எனும் அம்சம் பெருமளவில் செல்வாக்கு செலுத்து கின்றதெனலாம். உடல் நோய்கள் பலவற்றோடும் உள்ளமானது நெருக்கமான தொடர்புபடுகின்றது. குழந்தை இல்லாதவர்களிடத்தில் காணப்படும் சோர்வும், துன்பமும், பயமும் நேர்த்திக்கடன் செய்வதன் மூலம் செம்மைப்படுத்தப்பட்டு நம்பிக்கையும் விதைக்கப்படுகின்றது.

நேர்த்திக்கடனைப் பொருத்தவரையில், இவை சாதாரண நேர்த்திகளில் தொடங்கிமிகவும் பாரதூரமான வேண்டுதல் முறைகள் வரையில் விரிந்துச் செல்கின்றது. `   இதன்படி, காவடி எடுத்தல், காவடிதொங்குதல், தீமிதித்தல், அங்கப்பிரதட்சனம் செய்தல் என இன்னோரன்ன நேர்த்திக் கடன்கள் ஆலயங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நேர்த்திக் கடன்கள் தீராநோய்கள், பெரும் செல்வ இழப்பு எனப் பெரும் துன்பங்களை ஏற்படுத்தும் உளம் சார்ந்த நெருக்கீடுகளுக்கான தீர்வுகளாக அமைகின்றன. எனவே இறைவனிடத்தில் முறையிடுவதால் மனிதன் உளநெருக்கீடுகளில் இருந்து தணிவு பெறுவதுடன், அவற்றுக்குக் கிடைக்கும் தீர்வுகள் மகிழ்ச்சியினைத் தருமாறு அமைகின்ற சந்தர்ப்பத்தில் அது இறைவனின் அனுக்கிரகமே என நம்பும் மனிதர்கள் இறையியலில் மேலும் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். எனவே ஒவ்வொருவரினதும் வாழ்வியலில் இடம்பெறும் சிக்கல்களுக்கும் வழிபாட்டினை ஓர் மருத்துவ முறைகளாக மனிதர்கள் கையாளுகின்றனர்.

விரதம்

அடுத்ததாக விரதம் தொடர்பாக நோக்குகின்ற பொழுது, நேர்த்திக் கடன்களின் நிமித்தம் விரதம் இருத்தலும் நடைமுறையிலுள்ள ஓர் சமூகவழக்காகும். 'மனம் பொறி வழிபோகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் அல்லது சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம்" என ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குறிப்பிடுகின்றார். ஆறுமுக நாவலரைப் பொருத்தவரையில் யாதாயினும் ஒருவிடயத்தினைப் பெற்றுக் கொள்ள விரதம் இருத்தல் வேண்டும் எனஅவர் குறிப்பிடவில்லை. மாறாக எவ்வாறாயினும் உணவை விடுத்தேனும் மனதைக் கட்டுப்படுத்தி தியானமுறைமையினைப் பின்பற்றலே இவர் குறிப்பிடும் விரதத்தின் நோக்கமாகக் காணப்படுகின்றது. எனவே மனஅமைதியின் பொருட்டும் விரதமானது மேற்கொள்வதை நாம் இதன் மூலமாக நன்கு விளங்கிக் கொள்ள முடியும். இத்தகைய விரதத்தினை மேற்கொள்வதனால் உடற் சமநிலை பேணப்படுவதோடு உள ரீதியான அமைதியும் திடமும் ஏற்படுகின்றது. அத்துடன் விரதகாலங்களில் மனமானது இறை சிந்தனையில் மூழ்கிக் காணப்படுவதால் ஒருநிலைப்படுத்தப்பட்ட தன்மை காணப்படும். எனவே, இது தேவையற்ற உள நெருக்கீடுகளைத் தவிர்த்து உளச்சுகம் பேணவழி வகுக்கின்றது.

ஏனைய வழிபாட்டுமுறைகள்

மேலும், வீட்டில் யாருக்காவது அம்மை நோய் ஏற்படின் வாசலில் வேப்பிலை தொங்கவிடப்படுகின்றது. துடக்கு உள்ளவர்கள் அதனைப் பார்த்ததும் உள்ளே வரமாட்டார்கள். மேலும், துஷ்ட தெய்வங்கள் அணுகாது என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. அம்மைமாறி தண்ணீர் வார்த்தலை 'தீர்த்தம் வார்த்தல்" என்று குறிப்பிடுவர். அன்று, 'தண்ணீர்ச் சோற்றுப் பள்ளயம்" வைப்பர். முதல் நாளிரவு சோறும் அரிசிமாக் கூழும் சமைத்து வைத்திருப்பர். அதிகாலையில் நோயுற்றவருக்கு தீர்த்தம் வார்த்து, வேப்பிலையும் மஞ்சளும் அரைத்துப் பூசுவர். இத்தகைய நம்பிக்கை மிகுந்த செயற்பாடுகளினால் நோயின் காரணமாக ஏற்பட்ட உள நெருக்கீடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நிச்சயமாக உடற்சுகம் பெறப்படும் எனும் நம்பிக்கையும் ஏற்படுகின்றது.

பிள்ளைக்கு அம்மை நோய் வந்தநாளில் இருந்து வேப்பிலை தடவுதல், படுக்கும் படுக்கையில் வெள்ளைச் சீலைவிரித்து வேப்பிலை பரப்புதல், குளிர்ந்த உணவுகொடுத்தல், மாமிச உணவை விரும்பிக் கேட்டால் கொடுத்தல் ஆகியவை எல்லாம் அம்மாளுக்குச் செய்வதாகக் கருதியேசெய்வர். இதுமக்களின் உளவியலுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.

ஆரம்பகாலத்தில் அனுபவரீதியாக, சூட்டு நோய்க்கான பரிகாரமாக குளிர்ந்த உணவுமுறையும், நோய் தீர்க்கும் கிருமிநாசினியாகப் பயன்படுத்திய வேப்பிலை, மஞ்சள் போன்றவையும் காலப்போக்கில், சமயத் தொடர்பாகி முன்னர் குறிப்பிட்ட நம்பிக்கையினாலான சடங்குமுறைகளைத் தோற்றுவித்துள்ளது. விஞ்ஞான, நாகரீக வளர்ச்சி அடைந்துள்ள இக்காலகட்டத்திலும் தெய்வக் குற்றத்திற்கு ஆளாக வேண்டி வருமோ என்ற அச்சமேலீட்டினால் இத்தகைய சடங்குகளும் நம்பிக்கைகளும் பேணப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருவதைக் காணமுடிகின்றது.

மேலும், ஈழத்தின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் விஷேட நாட்களிலும் வெள்ளிக் கிழமைகளிலும் பெண்களால் அதிகாலையிலேயே வீட்டின் பூஜையறையில் கும்பம் வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. இத்தன்மையானது, குறித்த நாட்களில் வீட்டின் மங்களகரத்தினை அதிகரிப்பதோடு, இதனால் வீட்டில் செல்வச் செழிப்பும் ஏற்படும் என்பதோடு மங்களத் தன்மையும் பேணப்படும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கைகளின் அடிப்படையில் நோக்கும் போது, இத்தகைய பாரம்பரியத் தினைப் பின்பற்றும் எந்தவொரு வீட்டிலும் சாதாரணமாகவே அனைவரிடத்திலும் உளச்சுகம் பேணப்படுவதோடு உள நெருக்கீட்டுக்குட்பட்டவர்கள் அத்தகைய வீடுகளில் பிரவேசிக்கும் போது, அங்கு காணப்படும் அமைதியான சூழல் அவர்களது உள்ளங்களிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதஐயமும் இல்லை.

அடுத்ததாக முளைப்பாரி எடுத்தல் எனும் சடங்கு குறித்து நோக்குவொமெனில், மாரியம்மன் வழிபாட்டின் போது முளைப்பாரி எடுப்பது என்பது ஒரு வழக்கமாகும். இது ஆடி மாதம் முடிந்து வரப்போகிறகார் காலத்தில் பயிர் செய்வதற்கான ஆயத்தப் பணியின் தொடக்கச் செயலாகும். ஒவ்வொருவரும் தாம் எந்தப் பயிரினைபயிர் செய்யப் போகிறோமோ அந்தப் பயிரினை முளைக்கட்டி வைத்துக் கொண்டுகார் காலத்தை எதிர்நோக்கி காத்திருந்துகார் காலத்தை வரவேற்கும் செயலே முளைப்பாரி எடுத்தலாகும். இத்தகைய தோர் வழிபாட்டு முறைமையின் மூலமாகபயிர் செய்யும் முன்னதாகவே இறைவனின் அருள் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையும் அப்பயிர் செய்கையின் மீதான ஓர் நேர்ப்பாங்கான உளத்தன்மையும் ஏற்படும் எனலாம்.

மேலும், அன்றாட வழிபாடுகளில் காணப்படும் உளவியல் முறைமைகள் குறித்து ஆராயுமிடத்து, வீடுகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் இடம்பெறும் வழிபாடுகளினால் வீடுமங்களகரமானதாகவும், குடும்ப அங்கத்தவர்ளிடையே மனமகிழ்ச்சியும் நிலவும். குறிப்பாகமங்கள இசைபரவுதல் மற்றும் தூப, தீப, மலர்களின் மனம் இயல்பாகவே அனைவரது மனதிலும் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது.

எனவே, இத்தகைய அன்றாட வழிபாடுகளினால் காலையில் குடும்பத்தினின்று வெளியில் தொழிலுக்கு செல்லும் அங்கத்தர்கள் ஏனையோரிடத்தில் காரூண்யத்துடன் பழகுவதோடு தம் மகிழ்ச்சியை தக்கவைத்துக் கொள்ளவும் இது உதவுகின்றது. மேலும் மாலை வேளைகளில் வீடுதிரும்பும் அங்கத்தவர்கள் மனசோர்வுடனும், உளம் சீரின்மையுடனும் காணப்படின் வீட்டில் மங்களகரமான சூழலும் பக்தி இசையும் அவர்களின் உளநெருக்கீட்டினைத் தணிக்கும் அம்சங்களாக அமையப்பெறும். எனவே, வீடுகள் தோறும் காலையும் மாலையும் வழிபாட்டின் அவசியமானது இதன் மூலம் பேணப்படுகின்றதெனலாம்.

தியானம்

தியானமும் இறை சிந்தனையும் ஒரு மனிதனுக்குள் மறைந்திருக்கும் உள வலுவைக்கிளறி எடுத்து ஆன்மீககுணமாக்கல்  நடைபெறுவதற்கு உதவுகின்றது. எனவே தினமும் வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலமாக ஒரு மனிதனிடத்தில் உள நெருக்கீடுகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்களே இடம்பெறாமல் தடுக்கப்படுகின்றது.

தியானமும் இந்து மரபில் ஒரு வகையான வழிபாட்டு முறைமையே ஆகும். தியானம் எனப்படுவது, தளர்வு, உள்சக்தி அல்லது உயிர் சக்தியை உருவாக்குதல் மற்றும் இரக்கத்தை வளர்த்துக் கொள்ளுதலாகும். தியானத்தினை மேற்கொள்வதன் வாயிலாக ஒரு மனிதனிடத்தில் உள ரீதியான வலுநிலை கிடைக்கப்பெறும். குறிப்பாக, மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனிடத்தில் உள்ளத்தைச் சேர்ப்பிப்பதனால் உள்ளத்திலே காணப்படும் எவ்வகையான அழுக்கும் நெருக்கடியும் விலகி மன அமைதி ஏற்படும்.

முக்கியமாக தியானத்தினை மேற்கொள்வது உள்ளத்தினை ஆரோக்கியப்படுத்துவதிலும் பார்க்க உடலையும் மிகுதியான அளவிற்கு ஆரோக்கியமாகப் பேணுவதற்கு துணைபுரிகின்றது. அதாவது, தொடர்ச்சியான தியானத்தின் மூலம் உடற்சுகம் பேணப்படுவதாடு அச்சமநிலை காக்கப்படும் என்பது உறுதி. அத்துடன் நாளாந்ததியானத்தி;ன் மூலமாக ஒவ்வொரு நாளுக்குமான மனஅழுத்தம் போக்கப்படுவதுடன் உளம் புத்துணர்ச்சியும் பெறும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

முடிவுரை

எனவே, தொகுத்து நோக்குமிடத்து மனிதவாழ்வில் உள ரீதியான அழுத்தம் மற்றும் உள நெருக்கீடு என்பது தவிர்க்க இயலாத ஓர் அம்சமாகி விட்டது. அன்றாட வாழ்வில் எதிர் கொள்ளும் ஒவ்வொரு விடயங்களிலும் ஏற்படக்கூடிய உள நெருக்கீடுகளை தவிர்ப்பதற்கு ஒவ்வொருவரும் மிகுந்த பிரயத்தனப்படுவது நாம் காணும் காட்சிகளேயாகும். எனவே இதற்கான சிறந்த தீர்வாக வழிபாட்டினை எமது முன்னோர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே முக்கியப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அன்றாட வாழ்வியல் தொடக்கம் விஷேட நாட்கள் வரையில் எத்தகைய வழிபாடுகள் எவ்வாறு உள நெருக்கீட்டினைத் தணிக்கின்றது என்பதை நன்கறிந்த எமது முன்னோர்கள் அவற்றினை மனித வாழ்வில் முக்கியத்துவப்படுத்துவதை பெரிதும் வலியுறுத்தியுள்ளனர். எனவே மனித வாழ்வின் பரியசவாலாக அமையப்பெறும் உள நெருக்கீட்டினை தவிர்ப்பதற்கு நாளாந்த வழிபாடு, விஷேட வழிபாடு, விரதங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், நேர்த்திக் கடன்கள், தியானம் முதலானவை பெரிதும் துணையாக அமைகின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை.

உசாத்துணைகள்

1.     ஆயதனம்”, அகில இலங்கை இந்து மாமன்றம் பொன் விழாசிறப்பு மலர், (2007),  ஆனித்திங்கள் வெளியீடு.

2.     ரிட்லி ஜயசிங்க, “உளவியல் சார் உளவளத்துணை அணுகுமுறை”, IWTHI Trust–கொழும்பு.

3.     மௌனகுரு.சி., (1988), “சடங்கிலிருந்து நாடகம் வரைநாகலிங்கம் நூலாலயம் - யாழ்ப்பாணம்.

4.     https://ta.m.wikipedia.org/wiki/irt-ehw;ghjq;fs;/

5.     https://shaivam.org/wiki/to-practise/thiruvachakam-of-manikkavachakar-in-tamil-script/

6.     https://www.karmayogi.net/?q=arulamudam10