4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

செவ்வியல் நூல்களில் புவி சார் பதிவுகளும் வான் சார் பதிவுகள் - முனைவர் ம. சித்ரகலா

 

செவ்வியல் நூல்களில் புவி சார் பதிவுகளும் வான் சார் பதிவுகள்

                                                                                முனைவர் ம. சித்ரகலா,

                                                                   தமிழ் உதவிப் பேராசிரியர்,

                                                                                                   ந. க. ம. கல்லூரி, பொள்ளாச்சி.

  chitrababu1996@gmail.com

                                                                                அலை பேசி: 9842250753.

முன்னுரை

வானும் பூமியும் மனித வாழ்வுக்கு இன்றியமையாதன என்பதை,

                                விசும்பின் துளிவிழின் அல்லால் மற்று ஆங்கே

                                 பசும்புல் தலைகாண்பு அரிது

என்கிறார் பொய்யாமொழிப் புலவர். பூமியில் வாழும் மனிதர்களுக்கு வானம் ஒரு தகவல் மையமாக அமைந்துள்ளது. நம் முன்னோர்களும் வானியல் வல்லுநர்கள் போல வானத்தைப் பார்த்து பல செய்திகளையும் உண்மைகளையும் கண்டறிந்துள்ளனர்.  வானில் சூரியன், சந்திரன் நட்சத்திரங்கள் பற்றியும், மண்ணில் கனிம வளங்களான தங்கம், வெள்ளி, போன்ற உலோகப் பொருள்களின் பயன்பாடுகள் பற்றியும், அவை மனித வாழ்விற்கு பயன்படும் விதத்தையும் சான்றுகள் காட்டி ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே விண்ணிலும் மண்ணிலும் காணப்படும் அதிசயங்கள் செம்மொழி இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுவதையும், இவ்வளங்கள் மனித வாழ்வின் பயன்பட்டுள்;ள விதத்தையும்  அறிவியல் பார்வையோடும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

செவ்வியல் நூல்களில் சூரியன், சந்திரன்

சூரியனின் முதன்மையைக் கருதியே இளங்கோவடிகள் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்என்று சூரியனைத் தெய்வமாகப் போற்றினார். சூரியனைத் தெய்வமாகப் போற்றும் மரபு சங்க காலம் முதல் இன்று வரைப் பரவலாகக் காணப்படுகின்றது என்பதை,

                முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி

            ஏமுற விளங்கிய சுடர்” (நற். 283: 6 – 7)

            தயங்குதிரைப் பெருங்கடல் உலகுதொழத் தோன்றி

            வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அகம். 263: 1 – 2)

            ஞாயிற்றுப் புத்தேள்” (கலித். 108: 13)

இவ்வடிகள் உறுதிப்படுத்துகின்றன. வெப்ப சக்தியே கடல் நீரை ஆவியாகச் செய்து மழைப்பொழிவைத் தந்து உலக உயிர்களைக் காக்கின்றது.  சூரியனது வெப்ப சக்தி உயிர்களுக்கு மட்டுமின்றி கோள்களுக்கும் தேவைப்படுகின்றது. ஆகவே கோள்கள் அனைத்தும் சூரியனைச்சுற்றி வருகின்றது. சந்திரனை இளங்கோ திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” (சிலம்பு. 1-1) என்று தெய்வமாகக் கூறிப்பிடுகின்றார்.  சந்திரன் மாதத்திற்கு ஒரு முறைதான் முழுநிலவாகத் தோன்றுவான் பின் அவன் தேய்பிறையாகவும்  வளர்பிறையாகவும் வளர்வதைத் திருவள்ளுவர் அறுவாய் நிறைந்த அவிர்மதிஎன்றும் குறிப்பிடுவதையும் இவற்றில் வாழ்வியல் தேவையையும் அறிவியல் நுட்பமும் இருப்பதை அறியமுடிகின்றது.

செவ்வியல் நூல்களில் நட்சத்திரம் கோள்கள்

நட்சத்திரம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் புராணமாகவும் சோதிடமாகவும் இடம் பெற்றுள்ளன என்பதை

                திண்நிலை மருப்பின் ஆடுதலையாக

            விண் ஊர்பு திரிதரும் வீங்குசெலல மண்டிலத்து

            முரண்மிகு சிறப்பின் செல்வனோடு நிலைஇய

            உரோகிணி நினைவனள் நோக்கி” (நெடுநல். 160 – 163)

நெடுநல்வாடைப்பாடல் வரிகள் விளக்குகின்றன. பரிபாடலில் பரணி நட்சத்திரம் பற்றி,

            எரிசடை எழில் வேழம் (பரி. 11 - 2)

குறிப்பிடுகின்றது. நட்சத்திரங்கள் உவமைகளாகப் பயன்பட்டமை

            விரிநுண்ணூல் சுற்றிய ஈரித ழலரி

            அரவுக்கண் அணியுறழ் ஆரல்மீன் தலையொப்ப” (கலித். கலி. 64, குறி. 39 - 3,4)

அடியில் தலைவி பூச்சூடிய அழகு கார்த்திகை நட்சத்திரம் போல் இருப்பதாக தெரிவிக்கின்றது. நாளும் கோளும் நானில மக்களுக்கு உரியவை என்பதை குமட்டூர் கண்ணனார்,

            நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்

            ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத்தனையை (பதி. 14. 3 -4)

என்ற இமயவர்மன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகின்றார். நாள் என்பது அசுவினி முதல் 27 நட்சத்திரத்தையும் கோள் என்பது செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐந்தையும் குறிப்பிடுகின்றார்.  இதில் திங்கள் ஞாயிற்றை தவிர்த்துக் குறிப்பிடுகின்றார். பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களே யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கோள்கள் ஆகும் இவ்வாறு நட்சத்திரங்களும் கோள்களும் மனித வாழ்வோடும் ஒன்றி இருக்கின்றன என்பதை இன்றைய தேவையில் அடிப்படையில் அறியமுடிகின்றது.

செவ்வியல் நூல்களில் நிலவியல்

நிலவியலில் மணிகள் நிலத்தில் கிடைக்கின்றன என்பதை கலைமான் ஒன்று ஓடுகின்றபொழுது அதன் குளம்பழபட்டு மணிகள் தெறித்து மிளிர்வதாகக் குறிப்பிடுகிறது. முல்லை நிலத்து கோவலர்கள் ஆநிரை மேய்க்க சென்ற இடத்தில் மிளிரும் மணிகளை பெற்றதாக,

            முல்லைக் கண்ணிப் பல ஆன் கோவலர்

            புல்லுடை வியன் புலம் பல் ஆ பரப்பி,

            கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம்”(பதிற். 21. 20 – 23)

குறிப்பிடுகின்றன. மேலும் கிழங்கு தோண்டும்போது மதுத்துளி போன்ற வைடூரிய மணி கிடைத்ததாக, 

            பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு

            கண்அகன் தூமணி, பெறூஉம் நாடன், (குறுந். 379: 2 – 3)

            ஆழந்த குழியிற் குழும்பிற் திருமணி கிளர” (மதுரைக்காஞ்சி. 273)

குறிப்பிடுகின்றன. இவற்றோடு இரும்பு, எஃகு, முத்து, போன்ற பொருள்களைப் பயன்படுத்தியதை அறியமுடிகின்றது.

மக்கள் பயன்பாட்டில் நிலவியல்

நிலத்தில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் மக்கள் பயன்பாட்டில் இருந்தது என்பதையும் அவற்றின் தேவையையும் பின்புலத்தையும் கொண்டு இவ்வியல் ஆராயப்படுகின்றது. சங்க காலத்தில் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபரணங்களை அணிவதைவிட நிறமுறைய நவமணிகளையும், அவற்றுள் சிறந்த முத்து, பவளங்களையுமே இழையாக கோர்த்து அணிந்து வந்துள்ளனர் இம்முத்துக்களும் பவளங்களும் எழில் மயக்கம் பெற்று அகநானூற்றில் மணிமிடைப்பவளம் என்று பெயரில் வந்துள்ளதையும் பவளத்தோடு நீலமணி கோர்த்த அழகையும் குறிப்பிடுவதாக,

            அரக்கத்து அன்ன செற்றிலப் பெருவழி

            காயா செம்மல் தாஅய், பலஉடன்

            ஈயல் மூதாய் பிரிப்ப, பவளமொடு

            மணிமிடைத் தன்ன குன்றம்  (அகம். 14)

அமைகின்றது. மணிகள் கிடைக்கும் இடம் அறிந்தும் அவற்றைப் பயன்படுத்தும் விதம் அறிந்தும் பயன்படுத்தினர் என்பதையும் மணிகள் மலைகளில் பிறக்கும் என்பதையும்

            மாமலைப் பிறந்த காமருமணி (புறம்.  218- 4)

குறிப்பிடுகின்றது. இவற்றோடு உலோகப் பொருள்களும் பயன்பாட்டின் இருந்தது என்பதையும் அவற்றின் பின்புலத்தையும் அறியமுடிகின்றது.

அளவைகளில் வானியலும் மண்ணியலும்

மக்களுக்குக் காலக் கணக்கை அறியும் கால கண்ணாடியாக கோள்களும் சூரியனும் சந்திரனும் விளங்குகின்றன. காலத்தைச் சூரியன் அளக்கின்றான் என்ற உண்மையை,

            தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும்

            கூற்றம் அளந்து நும்நாள் உண்ணும் (நாலடி. 7)

என்று நாலடியார் குறிப்பிடுகின்றது. சந்திரனை அளவு கருவியாக வைத்துக் கொண்டு காலத்தை அளக்கலாம் என்பதை,

            தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

            மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்

            அறியா தோரையும் அறியக் காட்டித்

            திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து” (புறநானூறு. 27: 11 – 14)

குறிப்பிடுவதோடு ஒரு நாளை ஏழு கோள்களும் தம்முள் ஆள்வதால் காலமுறையும் வாரமுறையும் தோன்றுவதை,

            பருதி சூழ்ந்த இப்பயங்கெங்கழு மாநிலம்

            ஒரு பகல் எழுவர் எய்தி யற்றே” (புறம். 358: 1 -2)

குறிப்பிடுகின்றது. இம்முறை உலங்கெங்கிலும் பின்பற்றி வருகின்றன என்ற காலக்கணக்கையும் மனிதவாழ்வின் அனுபவக்கணக்கையும் அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

முடிவுரை

ஆக செம்மொழி நூல்களில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றின் தன்மைகளையும் நிலவியலின் தன்மைகளையும் அன்றே அறிந்திருந்த பண்டைய தமிழர்களின் அறிவியல் நுட்பம் இன்;றளவும் பராட்டுதலுக்குரியது. வாழ்க தமிழர் மரபு.! வளர்க எந்நாளும் தமிழ்!

துணை நின்ற நூல்கள்

1.   முனைவர் வி. நாகராசன், எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட், 41. பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098.

2.   டாக்டர் அ. சிவபெருமான், இலக்கியங்களில் வானியல், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1997.

3.   டாக்டர் வா. சா. பானுநூர்மைதீன்,      பழந்தமிழ் அகப்பாடல்களில் நிலமும் பொமுதும், கவின் கலை அச்சகம், 2 – 141 கந்தசாமி நகர், பாலவாக்கம், சென்னை 600 041.

4.   முனைவர் இராம. குருநாதன், புறநானூறு புதியபார்வை, வானதி பதிப்பகம், 13 தினதயாளு தெரு, தி. நகர். சென்னை  17.

5.   மாண்புமிகு க. இலட்சுமி நாராயணன்,   சங்கத் தமிழ் மாலை கட்டுரைத் தொகுப்பு, புதுவைத் தமிழ்ச் சங்கம்,  தமிழ்ச்சங்க வீதி. வெங்கட்ட நகர், புதுச்சேரி - 11