4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

பொறுப்பே சுதந்திரம் - - சுரேஜமீ

 

பொறுப்பே சுதந்திரம்

 

 

பொறுப்பே சுதந்திரம் என்ற புரிதல்

மறுக்காது நன்றதனைச் சிந்தி! - வெறுப்பின்றி

செய்யும் செயலின் விளைவறிந்து சிந்திப்பார்

வையமுணர்ந் தாராவர் வாழ்த்து!

 

கல்லும் கனியுமென்பார் கண்டநற் பூசனையால்

வெல்லும் எடுத்தசெயல் வேண்டுவோர்க்குத் - தொல்லையில்

சொல்லும் பொருளும் சுவையும் நலமுமென

எல்லாமாய் நிற்கும் இறை!

 

என்றைக்கும் கொன்றை வழிசெல்ல வாழ்வது

நன்றாகும் நம்பித் தொழுதேத்தப் - பின்னையோர்

தீங்கும் நமையண்டாத் தேர்ந்த அறிவுடனே

பாங்காய் நடந்திடுவோம் பார்!

 

மறுவேது வாழ்வில் மருகனருள் காக்க

உறுமோர் பிணியுமில் ஊரில்! - சிறுமையொழி

சீர்கந்தன் தாளிரண்டைச் சேர்வார்க்கு எந்நாளும்

பேரும் புகழுமுண் டே!

 

அடங்கா விஷயத்தை ஐம்பொறியை நன்றாய்

அடக்கும் மனமே அருளாம்! - திடமதனைப்

பற்றிடுவோர் திக்கெட்டும் பற்றிடுவார் நிச்சயமே

வெற்றியுண்டு வேண்டுவன பெற்று!

 

காலனை ஓங்கியுன் காலால் உதைத்தாங்கே

ஞாலம் உணர்த்திய நாயக! - மாலனை

நான்முகனைத் தேடவைத்த நான்மறையே! நாள்தவறா

யானேத்தும் நற்றமிழாய் வா!

 

- சுரேஜமீ

மஸ்கட்