4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

உய்ய நோய் தீர்ப்பது ஊணுக்கு ஊண் - முனைவர் சித்ரா

 

உய்ய நோய் தீர்ப்பது  ஊணுக்கு  ஊண்


நாடகம்

முனைவர் சித்ரா

ஹாங்காங்

 

உறுப்பினர் விவரம்

 

திண்ணன் 

16 வயது உடையவன்

(பெரிய உருவம் கொண்டவன்; வேட்டைக்காரனின் தினவு; மிகவும் செல்லமாக வளர்ந்தவன்; பொறுப்பை உணர்ந்தவன்; தாய் தந்தை பால் மிக்க அன்பு கொண்டவன்; இரக்க குணம் கொண்டவன்)

திண்ணனின் நண்பன் நாணன்

திண்ணனுக்கு சமவயது கொண்டவன் 

(திண்ணைனை விடவும் உருவத்தில் சிறியவன்; அன்பான தோழன்; அறிவுரை கூறும் நண்பன்; எப்போதும் உடன் இருப்பவன்; திண்ணன் குணாதிசயங்களை நன்கு உணர்ந்தவன்)

திண்ணனின் நண்பன் காடன்

திண்ணனுக்கு சற்றே குறைந்த வயதுடையவன் 

(உருவத்தில் மற்ற இருவரை விடவும் சிறியவன்; நல்ல நண்பன்; இருவருக்கும் பணிவிடைகள் செய்பவன்; நண்பர்கள் மனதில் நினைப்பதை உடன் செய்து முடிக்க வல்லவன்)

சிவகோசரியார் 

வயதானவர் 

(பக்தி மயமான உருவம் உடையவர்பேசும் போது பணிவு காட்டினாலும் கோபக்காரர்; தினப்படி காரியங்களை சரிவர செய்ய விரும்புபவர்; தினம் பூசைகள் செய்பவர்)

சிவகோசரியாரின் சீடன் உத்தமன் 

7 அல்லது8 வயது உடையவன்

(மிகச் சிறியவன்; குறும்புக்கார சிறுவன்; சுயசிந்தனை அதிகம் கொண்டவன்; குருவையே மிஞ்சும் குணம் கொண்டவன்)

 

காட்சி 1

 

 

உறுப்பினர்கள்: திண்ணன் காடன் நாணன்

வேளை: மாலைவேளை

இடம்               : திருக்காளத்தி மலையில்புலிக்காட்டில் ஒரு பகுதி

 

காட்சியின் முக்கிய வசனம்:

பிறர் துன்பத்தை காணச் சகிக்காமல், இவனே துன்பப்பட ஒத்துக் கொள்வான்

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

யோசனை செய்து கொண்டே பாறைமேல் அமருதல

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

பிறர் துன்பத்தை காணச் சகியாமை

(நாணனும் காடனும் வில் அம்புகளை வைத்துக்கொண்டு, காட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து இருத்தல். அப்போது திண்ணன் பலத்த யோசனையுடன் வருதல்)

நாணன்: (கிண்டலுடன்ன) ஏய்... காடா.. அங்கே பார்... நம்ம சிந்தனையானர் வரார்

காடன்: ஆமாம் நாணா... ஆனாலும் பார்... அந்தப் பூச்செடியை மிதிச்சிடாம திண்ணன் நடந்து வரான் பார்வா திண்ணா... வா.. 

நாணன்: என்ன திண்ணா... பலமான யோசனை...?

திண்ணன்:  என் தந்தை, நான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சொன்னதைத்தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்...

நாணன்:அவர் தொடர்ந்து நம் குடியினரின் தலைவருக்கான வேலைகளை ஓடியாடி செய்ய முடியுமா? உன் தந்தைக்கும் வயதாகி விட்டதில்லையா?

(திண்ணன் யோசனையுடன் பாறைமேல் அமர்தல். முடிவு எடுக்க முடியாத உணர்வை காட்டுதல்)

திண்ணன்: ஆனால்.. நானும் சிறியவன் தானே? என் 16 வயதிலே இந்தத் திருக்காளத்தி மலையில் உள்ள இந்த புலிக்காட்டுக்கான தலைவர் பதவியை பொறுப்பை ஏற்பது சுலபம் இல்லையே?

காடன்: என்னப்பா... நீயே இப்படி சொன்னால் எப்படி? என்ன திண்ணா.. நீ வில் எடுத்தால் இந்தக் காட்டில் கலங்காத விலங்குகளும் உண்டா என்ன?

திண்ணன்: வேட்டையாடுவது மட்டுமே என்றால் எனக்கு சுலபமான வேலைதான்... தந்தைக்கும் வேட்டைக்குச் சென்று வர போதிய வலிமை இல்லை.ஆனால், தலைவனுக்கு மற்ற பொறுப்புகளும் இருக்குமே.. ஆனால் தந்தையும் நம் இனத்தவரின் எல்லா பிரச்சினைகளையும் போட்டு மனதை அலைக்கழித்து உடலை வருத்திக் கொள்ளக் கூடாது...

நாணன்: நீ என்ன சொல்ல வருகிறாய்?

காடன்:  நீ சும்மா இரு நாணா... அவனே பிறர் துன்பத்தை காணச் சகிக்காமல், இவனே துன்பப்பட ஒத்துக் கொள்வான்... இது தெரிந்தது தானே…

(சிரித்தபடி காடனைத் துரத்துகிறான். அவனைக் கீழே அழுத்தி விட்டு)

திண்ணன்: நீ சொன்னது சரிதான்  தந்தைகாகவும் மக்களுக்காகவும் தலைவர் பொறுப்பை ஏற்றுத் தான் ஆக வேண்டும்...

-          காட்சி முடிவு    -

 

காட்சி 2

 

உறுப்பினர்கள்: சிவகோசரியார் உத்தமன்

வேளை : காலை வேளை

இடம்: சிவகோசரியார் இல்லம்

 

காட்சியின் முக்கிய வசனம்:

அப்பத் தான் எனக்கு மோட்சம் கிட்டும்

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

கூஜாவை போய் எடுத்து வருதல்

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

சுயநலத்தின் வெளிப்பாடு

(பூஜைக்கு கிளம்ப வேண்டி அவசர அவசரமாக சிவகோசரியார் வருதல்)

சிவகோசரியார்: உத்தமா... என்பூஜைக்கு வேண்டிய சாமான் எல்லாம் தயாரா...

உத்தமன்: குருவே எல்லாம் தயாராக இருக்கு...

சிவகோசரியார்: அப்ப புறப்படலாமா?

உத்தமன்: போகலாமே!

(உத்தமன் உடனே வேகமாக புறப்பட ஆயத்தமாதல்)

சிவகோசரியார்: (உத்தமனை பார்த்துவிட்டு) பூஜைக்கு வேண்டிய சாமான் எல்லாம் எங்கே?

உத்தமன்: போற வழியில... அப்படியே எடுத்துக் கொண்டு போகலாம் குருவே...

சிவகோசரியார்: எதை எடுத்துக்கிட்டு போறது...

உத்தமன்: திண்ணையில திருமண் இருக்கு...  (உள்ளே சென்று கூஜாவை எடுத்து வருதல்)  போகும் போது... ஆத்துலேந்து  தண்ணி எடுத்துக்கலாம்... மரத்திலேந்து பூவை பறிச்சிக்கலாம்... பழங்களை பறிச்சிக்கலாம்...

சிவகோசரியார்: அப்ப... எல்லாத்தையும் இனிமேதான் செய்யனுமா? அப்படின்னா... எல்லாம் தயாரா இருக்குணியே...

உத்தமன்: குருவே... எல்லாம் அது அது இடத்தில தயாரா தானே இருக்கு... போகும்போது அப்படியே எடுத்துக்கொண்டு போக வேண்டியது தானே...

சிவகோசரியார்: குறும்புக்கார பயலப்பா...  நீ...  நீ  செய்யறதை பார்த்து கோபப்படரதா இல்ல... சிரிக்கிற தான் தெரியல...

உத்தமன்: குருவே நான் சொல்றது தப்புன்னா மன்னிச்சிக்கோங்க குருவே...

சிவகோசரியார்: என்னத்த மன்னிக்கிறது... காலையிலேந்து எந்த வேலையும் நீ செய்யல... எனக்கு எப்போதுமே பூஜைக்கான சாமான்கள் சரியா இருக்கனும்... அப்படிச் செய்தால் தான் எனக்கும் பிடிக்கும். அப்பதான் திருக்காளத்தி சிவபெருமான் மனசுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்க முடியும்.அப்பத் தான் எனக்கு மோட்சம் கிட்டும்..

உத்தமன்: குருவே நீங்க கவலையே படாதீங்க... நீங்க பூஜைக்கு உட்காரும் போது எல்லா பொருளும் இருக்கும்... போதுமா?

சிவகோசரியார்: அப்படித்தான் நேத்தும் சொன்னே... ஆனா..  பொருளுக்காக நான் காத்துகிட்டு தான் இருக்க வேண்டி இருக்கு ... ஏதோ சின்னவனா இருக்கிறதால விடறேன். நாளையிலிருந்து நானே பூஜைக்கான சாமான தயார் செய்துக்கறேன்...

உத்தமன்: (பதட்டத்துடன்) குருவே... குருவே... அப்படி சொல்லாதீங்க...நாளையிலிருந்து எல்லாத்தையும் முன்னாடியே எடுத்து வச்சிடறேன்.

சிவகோசரியார்: சரி... சரி... பார்த்துக்கலாம். இப்ப பூஜைக்கு நேரம் ஆயிடுச்சு... புறப்படலாம் வா...

(இருவரும் செல்லுதல்)

-          காட்சி முடிவு    -

 

காட்சி 3

 

உறுப்பினர்கள்: திண்ணன், நாணன்

வேளை: மாலைவேளை

இடம்: திருக்காளத்தி மலை

 

காட்சியின் முக்கிய வசனம்:

அவரை நான் தனியே விட்டு விட்டு வரமாட்டேன்

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

தன்னிலை மறந்து கடவுளைக் கண்டதும் உருகும்நிலை

காட்சி காட்ட வேண்டிய உணர்வு:

புளங்காகிதம்

(திண்ணமும் நாணனும் மிகுந்த அயர்ச்சியுடன் நடந்து வருதல்)

 

நாணன்: திண்ணா.... இனிமேல் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதப்பா... 

திண்ணன்:   நாணா... அப்படிச் சொல்லாதே... இந்த மலைக்கு அருகே வந்ததுமே எனக்கு ஏனோ ஒரு விதமான இன்ப உணர்வு வருகிறது. குடுமித் தேவரைக் நான் அவசியம் பார்க்க வேண்டும். இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும் என்று சொல்...

நாணன்: இன்னும் ஒரு காத தூரம் இருக்கும்...

திண்ணன்: ஒரு காத தூரம் தானே... வா... வேகமாக நடந்து விடலாம்...

நாணன்: திண்ணா. காலையிலேயே வேட்டையாட வேகமாக ஓடினோம் .. பிறகு காட்டுப்பன்றியை துரத்திக்கொண்டு ரொம்ப தூரம் ஓடி வந்தோம்... என்னால் இனியும் முடியாதப்பா...

திண்ணன்: நாணா... தயவுசெய்து குடுமித் தேவரைக் பார்த்தே ஆக வேண்டும்...

நாணன் சும்மா வாயை வெச்சுக்கிட்டு இல்லாம...  குடுமித் தேவரை பத்தி உனக்கு சொன்னது பெரிய தப்பு போலிருக்கே... அங்க காடன் நமக்காக காத்துக்கிட்டு இருப்பான்... வா... திரும்பி போயிடலாம்...

திண்ணன்: நாணா... முடியாது நீ வராவிட்டாலும் சரி... நானே குடுமித் தேவரைக் தேடிக்கிறேன்...

நாணன்: திண்ணா... உன்னை தனியே விடுவதா... சரி... சரி... நட போகலாம்...

(இருவரும் நடக்க ஆரம்பித்து குடுமித்தேவர் இருக்கும் இடத்தை அடைதல். சிவபெருமான் சிலை உருவை கண்டதுமே புளங்காகிதம் அடைந்து ஓடோடி அருகே செல்லுதல்; சிலையை தழுவ முற்படுதல்; முத்தமிடுதல் முகர்ந்து பார்த்தல்; கண்ணிலே ஒற்றிக் கொள்ளுதல்; பெருமூச்சு விடுதல் கண்ணீர் விடுதல்)

திண்ணன்: ஆஹா அடியேனுக்கு இவர்தான் இங்கே அகப்பட்டாரே...

(நாணனுக்கு திண்ணன் செய்வது ஆச்சரியமாக இருத்தல்திண்ணனைப் பார்த்து)

நாணன்: திண்ணா... திண்ணா... என்ன இது...

திண்ணன்: (அதைக் கேட்டதாக காட்டிக்கொள்ளாமல்) குடுமித்தேவரே! வனவிலங்குகள் நடமாடும் இந்த இடத்தில் நீங்கள் தனியாக இருக்கிறீர்களே துணைக்கு ஒருவரும் இல்லையே!

(எழுந்து நிற்கும்போது, வில் தானே கையிலிருந்து நழுவுதல்; தன்னை மறந்த நிலையில் நிற்றல்)

நாணன்: (திண்ணனை உலுக்கி) திண்ணா... திண்ணா...

(நினைவு திரும்பி, கடவுளுக்கு முன் வைத்திருக்கும் பொருட்களை திண்ணன் அதிசயத்துடன் பார்த்தல்)

திண்ணன்:  நாணா... யாரோ இதையெல்லாம் செய்திருக்கிறார்களே! 

நாணன்:   செய்தது யார் என்று எனக்குத் தெரியும். நான் உன் தந்தையோடு முன்பு வந்தபோது, ஒரு பெரியவர் இந்த குடுமி தேவரை நீரால்  நீராட்டிபச்சிலையும்  பூவும் வைத்ததைப் பார்த்தேன். அவராகத்தான் இருக்கும்... 

திண்ணன்: குடுமித் தேவருக்கு இப்படிச் செய்தால் பிடிக்குமா என்ன? அப்படி என்றால் நானும் இதைச் செய்வேன்...

நாணன்: திண்ணா... நேரமாகிவிட்டது... காடனும் நமக்காக காத்திருப்பான். எனக்கு பசிக்கிறது... வா போகலாம்....

திண்ணன்: அடடா! குடுமி தேவருக்கும் பசிக்குமே!

நாணன்: போச்சுடா... சாமி கிறுக்கன் ஆகி விட்டாயே... சரி... சரி... கிளம்பப்பா...

திண்ணன்: நாணா... இங்கு குடுமித் தேவருக்கு துணையாக யாருமே இல்லை. அவரை நான் தனியே விட்டு விட்டு வரமாட்டேன். இரவில் கண்விழித்து காக்கப் போகிறேன். என்னால் வர முடியாது போ...

நாணன்: அடடா... பெரும் தவறு செய்து விட்டேன். உன்னை குடுமித் தேவரை பார்க்க கூட்டி வந்தது தப்பாகிவிட்டது. ஒரே நாளில் குடுமித் தேவரை இப்படி உடும்பு பிடியாய் பிடிப்பாய் என்று தெரியாமல் போய் விட்டதே!

திண்ணன்: அவரை ஒரு கணமும் இனிமேல் பிரிய மாட்டேன்...

நாணன்: நான் போய் உன் தாய் தந்தையரை கூட்டிவருகிறேன்... அதுதான் சரி...

(நாணனும் செல்லுதல்; திண்ணன் சிலையை அன்புடன் பார்த்தபடி நிற்றல்)

-          காட்சி முடிவு    -

 

காட்சி 4

 

 

உறுப்பினர்கள்: சிவகோசரியார், உத்தமன்

வேளை: காலை வேளை

இடம்: திருக்காளத்தி நாதர் கோவில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

'என் பூஜைக்கு எதிர் பூஜையா? '

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

சிலைக்கு அருகே சென்று மாமிசத்தை பார்த்துவிட்டு அபச்சாரம் என்று கூறி கண்களை மூடிக் கொள்ளுதல்

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கடவுள் மேல் கரிசனம்; கோபம்

(சிவகோசரியாரும் உத்தமனும் அவசர அவசரமாக வருதல்)

சிவகோசரியார்: உத்தமா... உன்னுடன் பெரிய தொந்தரவா போய்விட்டது...

உத்தமன்: (வருத்தத்துடன்) மன்னிச்சிடுங்க குருவே...

சிவகோசரியார்: அதை மட்டும் எப்போதும் சொல்லிக்கிட்டே இரு... இப்ப பாரு... பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது...

உத்தமன்: என்ன செய்யறது குருவே? நான் பார்த்து வைத்த பழங்களை யாரோ பறித்துக் கொண்டு போயிட்டாங்க... வேற பழத்தை தேட நேரம் ஆயிடுச்சு...

சிவகோசரியார்: என்னவோ போ... (கடவுளின் சிலைக்கு அருகில் வந்து பார்த்ததும், அதிர்ச்சியுடன்) அபச்சாரம்... அபச்சாரம்... (காதுகளை மூடிக்கொண்டு கத்துதல்)

உத்தமன்: குருவே... என்ன இது?

சிவகோசரியார்: அதுதான்... என் பூஜைக்கு எதிர் பூஜையா? எனக்கும் புரியவில்லை...

உத்தமன்: இங்க பாருங்க... பழத்துக்கு பதிலா மாமிசம்...

சிவகோசரியார்: அபச்சாரம்... அபச்சாரம்...

உத்தமன்: நாம போட்ட பூவிற்கு பதிலாக வேற..  எல்லாப் பக்கமும் பூக்கள்...

சிவகோசரியார்: அதாவது பரவாயில்லை...

உத்தமன்: குருவே... இங்க பாருங்களேன்... சிலை மேல யாரோ எச்சில் துப்பினாப்புல... சிலை முன்னால மாமிசத்தை கடிச்சி துப்பினாப்புல....

சிவகோசரியார்: அபச்சாரம்.... அபச்சாரம்....யார் இந்த காரியத்தை செய்தது என்று தெரியலையே!

உத்தமன்: அதுதானே... இந்த மலைக்கு நம்மை விட்டால் யார் வருவாங்க?

சிவகோசரியார்: ஏதாவது வேடன் செய்திருப்பான்.  உத்தமா... இந்த இடத்தை முதலில் சுத்தம் செய்யணும். என்னோட பெருமானுக்கு இதெல்லாம் பிடிக்காது. நீ போய் நிறைய நீர் கொண்டு வா...

உத்தமன்: சரிங்க குருவே...

(உத்தமன் செல்லுதல்)

சிவகோசரியார்: பெருமானே... என் சார்பா அந்த வேடனை மன்னிச்சிடுங்க... இதோ ஒரு நொடியிலே இந்த இடத்தை சுத்தம் செஞ்சு, உங்களுக்கு பூஜை செய்கிறேன்... (துண்டை உதரி தோளில் போட்டுக் கொள்ளுதல்)

-          காட்சி முடிவு    -

 

காட்சி 5

 

உறுப்பினர்கள்: திண்ணன்

வேளை: மதிய வேளை

இடம்: திருக்காளத்தி நாதர் கோவில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

இதோ இதை தின்னுங்கள்...

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

அன்பா? ஆச்சாரமா?

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கடவுள் மேல் வைத்த அன்பு

(திண்ணன் தொன்னையை இறைச்சியுடன் கையில் ஏந்திக்கொண்டுதலையிலே மலர்களையும், ஒரு கையில் வில்லும் அம்பும், வாய் நிறைய நீரையும் வைத்துக் கொண்டு வருதல்;

கடவுளின் சிலைக்கு அருகே வந்ததும் செருப்பு கால்களால் இடத்தை சுத்தம் செய்தல்;

வாயில் இருந்து நீரை  உமிழ்தல்;

தலையிலிருந்து பூக்களை உதறி விடுதல்;

கையில் இருக்கும் இறைச்சியை கடவுளின் சிலைக்கு முன் வைத்த பிறகு)

திண்ணன்: குடுமித் தேவரே... நீங்கள் மிகவும் பசியுடன் இருப்பீர்கள். இந்த இறைச்சி நன்றாக பக்குவம் பண்ணியது. நாவினால் சுவைத்துப் பார்த்து, இனிமை உடையதை  தேர்ந்தெடுத்தேன். இது மிகவும் சுவையாக இருக்கும். இதோ இதை தின்னுங்கள்...

(ஊட்டுவதை போன்று பாவனை செய்தல்)

-          காட்சி முடிவு    -

 

-          காட்சி 6

 

உறுப்பினர்கள்: சிவகோசரியார், உத்தமன்

வேளை: காலை வேளை

இடம்: திருக்காளத்தி நாதர் கோவில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

'என்னை தண்டித்து விடாதே!' 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

 சிவகோசரியார் தடாலென்றுமண்டியிட்டு வணங்குதல்

காட்சிகள் காட்ட வேண்டிய உணர்வு:

சுயநலத்தின் உச்சம்

(உத்தமன் வேகமாக சிலைக்கு அருகே வந்து பார்த்துவிட்டு)

உத்தமன்: குருவே... இன்னைக்கும் மாமிசம் இருக்கு...

சிவகோசரியார்: பெருமானே! பெருமானே! என்ன இது? யார் இந்த காரியத்தை செய்கிறது?

உத்தமன்: நம்மைப் போலவே தினம் வந்து செய்கிறார்களே!

சிவகோசரியார்: பெருமானே! பெருமானே! இந்த பாவத்தை யார் செய்யறாங்கன்னு தெரியலையே! தொடர்ந்து இன்னிக்கு ஐந்தாவது நாள்... இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

உத்தமன்: குருவே... கடவுள் கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்? நாமதான் கண்டுபிடிக்கணும்...

சிவகோசரியார்: (கோபத்துடன்) உத்தமா... அதிகப்பிரசங்கித்தனம் ஆக பேசக்கூடாது... பெருமானுக்கு தெரியாதது எதுவுமே கிடையாது...

உத்தமன்: மன்னிச்சிடுங்க... குருவே... (வாயைப் கைகளால் பொத்திக் கொள்ளுதல்)

சிவகோசரியார்: சே... தொடர்ந்து யாரோ இந்தப் பாவச் செயலை செய்வதை பார்த்தால் எனக்கே கோபம் வருது... எம்பெருமானுக்கு எப்படி இருக்குமோ?

உத்தமன்: ஆமாமாம்... அவருக்கு நிச்சயம் கோபம் வரும்... மகா கோபம் வரும்..?

சிவகோசரியார்: (சிலையைப் பார்த்து) பெருமானே! என்னை தண்டித்து விடாதேதயவு செய்து இந்தப் பாவச் செயலை பொறுத்தருள வேண்டும்...

(சிவகோசரியார் தடாலென்றுமண்டியிட்டு வணங்குதல்)

-          காட்சி முடிவு    -

 

காட்சி 7

 

உறுப்பினர்கள்: சிவகோசரியார், உத்தமன்

வேளை: காலை வேளை

இடம்: திருக்காளத்தி நாதர் கோவில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

என் பூஜையை விட அவனது பூசை பெரிதா?'

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

கோபத்துடன் திண்ணன் வைத்த பூக்களை எடுத்து எறிதல்

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

சுயநலத்தின் உச்சம்

 

சிவகோசரியார்: (வேகமாக நடந்து கொண்டே) வேகமா வா... இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பாக்கலாம் வா....

உத்தமன்: என்ன சொல்றீங்க குருவே...

சிவகோசரியார்: உத்தமா... நேத்து பெருமான் என் கனவுல வந்து இங்க நடக்கறதை பத்தி சொன்னாரு...

உத்தமன்: என்ன சொன்னார் குருவே...

சிவகோசரியார்: (கடவுளின் சிலையை பார்த்து விட்டு உத்தமனை நோக்கி)  ஏதோ ஒரு வேடன் வந்து இதை  செய்கிறான்.  (மீண்டும் கடவுளின் சிலையை நோக்கி) பெருமானே... அவன் செய்யறது எனக்கு பாவச் செயலா தெரியுது... ஆனா... உங்களுக்கு அது பிடிச்ச விஷயம் இருக்கிறது நினைத்தால், ஆச்சரியமா இருக்கு...

உத்தமன்: குருவே... என்ன சொல்றீங்க இங்கே நடக்கிறது சிவனுக்கு பிடிச்சிருக்கா?

சிவகோசரியார்: ஆமாம்... உத்தமா...

(சிவகோசரியார் மறுபடியும் கடவுளின் சிலையைப் பார்த்து)

சிவகோசரியார்:  'வன்திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல். நன்றவன், அவனுடைய வடிவெல்லாம் நம் பக்கல் அம்பென்றும், அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினியவாம்' என்று நீங்கள் சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.

உத்தமன்: குருவே... நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லை...

சிவகோசரியார்: உத்தமா.. எம்பெருமான் 'இங்கு நடப்பவை யாரோ ஒரு வேடன் செய்வது என்று நினைக்காதே... அவன் அன்பே உருவானவன். அவன் எண்ணம், உரை, செயல் எல்லாம் நம்மைப் பற்றியனவே. அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவே' என்று சொன்னார்.

உத்தமன்: அப்படியா... ஆச்சரியமாக இருக்கிறதே!

சிவகோசரியார்: (கோபத்துடன்)எம்பெருமானே... உம்மை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை...

உத்தமன்: ஏன் குருவே?

சிவகோசரியார்: 'அந்த வேடன் தன் செருப்புக் காலால் முன்புள்ள மலரை நீக்கும் போது, முருகனின் இளம்பருவ சேயடி படும் போது ஏற்படும் இன்பம் உண்டாகிறது' என்றீர்கள்.

(கோபத்துடன் திண்ணன் வைத்த பூக்களை எடுத்து எறிதல்)

உத்தமன்: பெருமானுக்கு தான் எத்தனை கருணை?

சிவகோசரியார்: 'வேடன் தன் வாய் வழியாக விடும் நீர் ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்தம் போன்று புனிதமானது' என்றீர்கள்.

உத்தமன்: எச்சிலைத் தீர்த்தமாக எண்ணுவதா?

சிவகோசரியார்: 'தன் தலையிலிருந்து வேடன் உதிர்க்கும் மலர்கள், அயனோடு மால் முதல் தேவர் வந்து செய்யும் அர்ச்சனை மலருக்கும் சமானம் ஆகா' என்றீர்கள். 'அவன் மென்று சுவைத்து பார்த்து தரும் ஊண், மறை வேள்வியில் இடும் அவியை விடவும் சிறந்தது' என்றீர்கள்.

(எல்லாவற்றையும் கேட்டதும், உத்தமன் சிவபெருமானை சிலையை வணங்க முற்படுதல்)

சிவகோசரியார்: 'மன்பெரு மாமறை மொழிகள் முனிவர் மகிழ்ந்து உரைக்கும் இன்ப மொழித் தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும் வேடன் தன் முகம் மலர, அகம் நெகிழ, அன்பில் நினைத்ததையெல்லாம் அறிவுறா மொழிகள் நல்லன' என்றீர்கள்...

உத்தமன்: குருவே... இதெல்லாம் பெருமான் உங்கள் கனவிலே நிஜமாகவே கூறினாரா?

சிவகோசரியார்: உண்மை உத்தமா... உண்மை. இங்கு நடப்பது எனக்கெப்படி தெரியும் சொல் பார்ப்போம்..

உத்தமன்: அதுவும் சரிதான் குருவே... அப்படி என்றால் இதை இப்படியே விட்டு விடுவதா?

சிவகோசரியார்: இல்லை உத்தமா... இல்லை... கனவின் இறுதியில் பெருமான், 'உனக்கவன் தன் செயல் காட்ட நாளை நீ ஒளிந்து இருந்தால் எனக்கவன் தன் பரிவு இருக்கும் பரிசெல்லாம் காண்பாய். மனக்கவலை ஒழி' என்று சொன்னார்.

உத்தமன்: அப்படி என்றால்... இப்ப என்ன செய்யலாம்?

சிவகோசரியார்: உத்தமா... நாம் வேடன் வரும்வரை காத்திருப்போம். வந்து, அவன் என்ன செய்கிறான் என்பதை மறைந்திருந்து பார்ப்போம்...என் பூஜையை விட அவனது பூசை பெரிதா?

உத்தமன்: அதுவும் சரிதான் குருவே... வாருங்கள் ஒளிந்திருந்து காத்திருப்போம்...

(இருவரும் சென்று மறைந்து கொள்ளுதல்)

-          காட்சி முடிவு    -

 

 

காட்சி 8


உறுப்பினர்கள்: திண்ணன், நாணன், காடன்

வேளை: மாலை வேளை

இடம்: திருக்காளத்தி மலை காட்டில் ஒரு பகுதி

 

காட்சியின் முக்கிய வசனம்:

'குடுமித் தேவருக்கு வேண்டிய உணவை நான் தான் தர வேண்டும்...'

 காட்சியின் முக்கிய நடிப்பம்சம்: 

உணவைச் சுவைத்து எடுத்து வைத்தல்

 காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கனிவு

 

(திண்ணன் சிவபெருமானுக்கு தர  ஊணை சுவை பார்த்துக் கொண்டு அமர்ந்து இருத்தல்; நாணனும் காடனும் அங்கு வருதல்)

 

நாணன்: பார்...  திண்ணனை... நம் குல தலைமையை விட்டுவிட்டு இந்த சாமிக்கு சொந்தக்காரன் ஆகிவிட்டான்...

காடன்: ஆமாம் நாணா... பைத்தியம் பிடித்தவன் போல் இருக்கிறான்...

(நாணன் திண்ணன் அருகே வந்து அவனைத் தொட்டு)

நாணன்:  திண்ணா... திண்ணா...  என்னப்பா இது? இப்படி சாமி கிறுக்கு பிடித்த அலைகிறாயே!

திண்ணன்: (கனவில் இருந்து மீண்டவன் போல்) நாணா... இந்த உலகத்தில் இனிமேல் எனக்கு குடுமித் தேவரை விட்டால் யாரும் கிடையாது...

காடன்: திண்ணா... உனக்காக உன் தாய் தந்தை காத்திருக்கிறார்கள்...

திண்ணன்: இனிமேல் எனக்கு தாய் தந்தை எல்லாம் இந்த குடுமித்தேவர் தான்...

நாணன்: இது உனக்கே நன்றாக இருக்கிறதா! நீ எங்களுக்கு எல்லாம் தலைவன் ஆயிற்றே! எங்களைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்...

காடன்:  ஆம் திண்ணா.. இது உனக்கே நன்றாக இருக்கிறதா! நீ எங்களைப் பற்றியும் நினைத்துப் பார்...

(ஏதும் கூறாமல் திண்ணன் அமைதி காத்தல்; சில கணங்களுக்கு பிறகு)

நாணன்:  திண்ணா.. நீ யாரைப் பற்றியும் எண்ணாமல், உன்னைப் பற்றியும் எண்ணாமல், உண்ணாமல் உறங்காமல் இப்படி குடுமித் தேவரைக் மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கிறது?

திண்ணன்: குடுமித் தேவரை நான் இங்கு கண்டது என் பாக்கியம்... அவருக்காக நான் என் உயிரையும் தருவேன்...

(நாணன் நாணன் உலுக்குதல்)

நாணன்: வேணாம் திண்ணா... இது நல்லா இல்லை... நீ இப்படி இருந்தால் இன்னும் கொஞ்ச நாள்ல செத்துப் போவாய். அதுக்கு முன்னே எண்ணத்தை மாற்றிக் கொண்டு எங்களுடன் வந்துவிடு...

திண்ணன்: நாணா... என்னை வற்புறுத்தாதே! குடுமித் தேவருக்கு வேண்டிய உணவை நான் தான் தர வேண்டும். இரவில் அவரைப் பாதுகாக்க வேண்டும். பகலில் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். என்னை தவிர இதை வேறு யார் செய்வார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்...

காடன்: திண்ணா... இத்தனை நாள் குடுமித்தேவர் பத்திரமாக தானே இருந்தார். அதைப் போல நீ இல்லாத போதும் பத்திரமாக இருப்பார். நீ இப்போது கிளம்பு...

(காடன் திண்ணனை எழுந்து நிற்க வைக்க முயலுதல்; திண்ணன் அதைத் தடுக்கும் வகையில் கையை தட்டிவிட்டு)

திண்ணன்: காடா... என்னால் வர முடியாது என்றால் வர முடியாது...

நாணன்: காடா... அவனுடைய தாய் தந்தை சொல்லியே வராதவன் நாம் சொல்லியா வரப்போகிறான்... நாமும் நண்பன் என்று புத்தி சொல்கிறோம்... கேட்டால் தானே!

காடன்: நாணா... உண்மை தான். அதுக்கு திண்ணன்  இப்படி சாமி கிறுக்கனாக இருப்பதாஒன்று அவனுக்கா புத்தி வரணும்... இல்லாவிட்டால்... இந்த குடுமித்தேவர் தான் அவனுக்கு புத்தி கொடுக்க வேண்டும்...

நாணன்: ஆமாம் காடா... நாம் குடுமித்தேவர் இடமே வேண்டிக் கொள்ளலாம்.

(இருவரும் கடவுளை வணங்குவது போல் இரு கைகளையும் மேலே கூப்பி வணங்கி விட்டு அங்கிருந்து செல்லுதல்; திண்ணன் மாமிசத்தை சுவை பார்த்து எடுத்து வைத்துக் கொண்டே இருத்தல்)

-          காட்சி முடிவு    -

 

காட்சி 9


 

உறுப்பினர்கள்: திண்ணன், சிவகோசரியார், உத்தமன்

வேளை: காலை வேளை

இடம்: திருக்காளத்தி நாதர் கோவில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

'ஊணுக்கு ஊண் 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

இடக் கண்ணையும் தோண்ட முற்படுதல்

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

அன்பின் உச்சம்

 

(சிவகோசரியார் உத்தமனும் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்து இருத்தல்; திண்ணன் மற்ற நாட்களைப் போன்றே பூஜை பொருட்களை எடுத்து வருதல்; கடவுள் சிலையின் வலக் கண்ணில் குருதி வருதல்; அதைக் கண்டதும் துடிதுடித்துப் போதல்; கையிலிருந்த பொருட்கள் கீழே விழுதல்; நிலைகுலைந்து விழுதல்; எழுதல்; பதறுதல்)

திண்ணன்: ஐயோ... என் குடுமித் தேவரின் கண்ணில் இரத்தம்... இதை செய்தவர் யார் ஐயோ... வேடரோ? விலங்கோ? யாராக இருந்தாலும் இதோ தொலைத்துவிடுகிறேன்...

(வேகமாக கையில் வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடி பார்த்தல்)

திண்ணன்: குடுமித் தேவருக்கு தீங்கு விளைவித்தவர் யார் என்றே தெரியவில்லையே... ஐயோ! இதற்கு என்ன செய்வது? என்ன செய்தால் இது தீரும்... ஆம்... புண்ணுக்கு பச்சிலை கட்டுவார்களே! நான் போய் பச்சிலை கொண்டு வருகிறேன்.

(பச்சிலை எடுத்து வர திண்ணன் ஓடுதல்; உத்தமன் ஒளிந்திருக்கும்  இடத்தை விட்டு எழ முயலுதல்; சிவகோசரியார் அவனை தடுத்தல்திண்ணன் கையில் இலைகளோடு திரும்புதல்; கையிலே இலைகளை பிழிந்து சாறு வர வைத்தல்)

திண்ணன்:  (சாற்றினை இறைவன் கண்களில் விடுதல்; சில கணங்களுக்கு பிறகு) ஐயோ... ரத்தம்... இன்னும் நிற்கவில்லையே... இனி என்ன செய்வது? உம்...  (யோசித்தல்; சில கணங்களில்  விடை கண்ட மகிழ்ச்சியுடன்) அடடா... ஒரு விஷயத்தை மறந்து விட்டேனே... உற்ற நோய் தீர்ப்பது ஊணுக்கு ஊண் என்று சொல்வார்களே... அதை செய்து பார்க்கிறேன். குடுமித் தேவருக்கு என்னுடைய கண்ணை பறித்து அப்பு வேன்.

(வலது கண்ணைத் தோண்டி இறைவனின் கண்ணில் அற்புதல்)

திண்ணன்: ஆஹா இரத்தம் நின்றுவிட்டது. இரத்தம் நின்று விட்டது... (ஆனந்தமாக குதித்தல்)  நன்று நன்று... நான் செய்த இந்த மதி...

(சில கணங்களுக்கு பிறகு கடவுளின் சிலையை பார்த்தல்; சிலையின் இடக் கண்ணில் ரத்தம் வழிவதை பார்த்தல்)

திண்ணன்: அடடா... இப்போது இடக் கண்ணில் ரத்தம் வழிகிறதே... கவலையே வேண்டாம்... இதற்குத்தான் மருந்து கண்டு விட்டேனே... எனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறதே.  அக்கண்ணை அப்பி இந்நோயை ஒழிப்பேன். (கண்களை எடுக்க தயாராகுதல்)

ஆனால்... இன்னொரு கண்ணையும் எடுத்துவிட்டால், இறைவன் இருக்குமிடம் தெரியாதே!

(சிறிது யோசித்துவிட்டு இறைவன் இடக்கண்ணில் தன் இடக்காலை ஊன்றி கண்ணை எடுக்க, அம்பை இடக்கண் அருகே கொண்டு செல்லுதல்)

சிவகோசரியார்: கண்ணப்ப நில்... கண்ணப்ப நில்... கண்ணப்ப நில்  (பதறிக் கொண்டே வந்து திண்ணனின் கைகளை பிடித்தல்; உத்தமனும் பின்னே வருதல்; அதிர்ச்சியுடன் பார்த்தல்)

சிவகோசரியார்: பெருமானே... உன்னுடைய சோதனையில் கண்ணப்பன் வெற்றி பெற்றுவிட்டான். (திண்ணன்   புரியாமல் விழிப்பது; உத்தமன் சிலைக்கு அருகே சென்று பெருமானை வணங்குதல்) அவனைப் போல் உன் மேல் அன்பு கொண்டவர்கள் யாருமே இல்லை. அவனைப் பற்றி தவறாக எண்ணியதற்கு என்னை மன்னிக்கவும்.

(கடவுள் சிலையின் முன்னால் பணிதல்)

திண்ணன்: ஐயா... இதென்ன? என் அன்புக்கு சோதனையா? (கவலையுடன்) என் அய்யனுக்கு எதுவும் இல்லையே....

(கவலையுடன் கடவுள் சிலையை பார்த்தல்)

(குரல் மட்டும்)

 

"அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

 

-          காட்சி முடிவு    -