4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

முரண்தொடை - மைத்திரிஅன்பு

முரண்தொடை

 

வைகறையைப் பிரகனப்படுத்துபவள்

என்றெண்ணி இருந்தேன்.

உன் பூக்களை

வேடிக்கைப் பார்க்காதவரை...

பார்க்க நேர்ந்ததும் தான் தெரிந்தது 

நீ நீயாய் விழுந்துதிர்ந்த

ஊமத்தம் பூவென்று!

 

பூவானதால் வாசம் கொண்டாய் நீ...

சருகானதால் மோசம் போனேன் நான்.

 

புட்டுவித்தால்

புதுமைகள் தோன்றலாம்.

 

தெரிய வந்தது தெளிவு.

புறட்டுவிக்கப்பட்ட – நீ

புதிய வரலாறல்ல...

பழுது பார்க்கப்பட வேண்டிய

பழைய பஞ்சாங்கமென்று!!

 

முறையிட்டேன்

பூக்களோடு அல்ல... முட்களோடு.

வேண்டாம் வேண்டாம்...

என்னோடு நான் போராடியதே போதும்

நீவேறு எனக்குள் புதைய வேண்டாம்.

 

அமைதியாய் சென்றேன்,

ஆசையை கொண்றேன்.

சிதிறிய மாலையில்

உதிர்ந்து கிடந்த, பூக்களை விடுத்து

எனதான சருகுகளை மட்டும்

பொருக்கி எடுத்துக்கொண்டு

அவள் வாசம் தொடாத

தூரம் நின்றேன்.

 

அவள் கொண்ட பூக்களெல்லாம்

பூக்களோடு சினேகம் சேர்ந்து கொண்டன.

நான் கொண்ட சருகுகளோ...

சோகத்தோடு வாடி வதங்கின.

 

அன்று தான்

முழுமையாய் புரிந்தது

முரண்தொடை இலக்கணம்.

 

-    மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்