4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

“விஷேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகம்” - Mr. N.Koventhan

 

விஷேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகம்

(மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்ட அளவை நிலை ஆய்வு)

Mr. N.Koventhan  

                                      Karaveddy, Navatkadu, Batticaloa, Srilanka

                                                        T.N - 0775343237

koventhannadarasa@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகம்எனும் தலைப்பில்  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இவ் அளவை நிலை ஆய்வானது,  விசேட தேவையுடைய மாணவர்கள், கற்றலில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதுடன் அவர்களது கற்றலில் பெற்றோரின் வகிபங்கினை ஆராய்தல் எனும்  நோக்கத்தின் அடிப்படையிலும் இடம்பெற்றுள்ளது. இவ் ஆய்வினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் தெரிவுசெய்யப்பட்டது. இவ்வலயத்தில் உள்ள விசேட  தேவையுடைய மாணவர்களைக் கொண்ட 10 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன. இப் 10 பாடசாலைகளிலுமிருந்து 10 அதிபர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் 20 ஆசிரியர்களும், விசேட தேவையுடைய 50 மாணவர்களும், இம்மாணவர்களின் பெற்றோர்கள் 50 பேரும் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையிலும் ஆய்வுக் குடித்தொகையாகத் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்து, அவதானம், நேர்காணல் போன்ற ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் பண்பு ரீதியாகவும், அளவு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தரவுகள் MS  EXCEL   ஊடாக உருக்கள், அட்டவணைகளாக குறித்துக்காட்டப்பட்டுள்ளன. ஆய்வு முடிவின் பிரகாரம் இம்மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஈடுபாடு; குறைவதற்கான காரணங்களாகப் பெற்றோருக்கு இம்மாணவர்கள் பற்றிய தெளிவின்மை, பெற்றோரிடையே பொருளாதாரப் பற்றாக்குறை, பெற்றோரின் எதிர் மனப்பாங்கு, பெற்றோர் பிரிந்து வாழ்தல், குடும்பத்தில் வேறு விசேட தேவையுடைய பிள்ளைகள் காணப்படுதல், போன்ற காரணங்கள், இம்மாணவர்களின் கற்றலில் பெற்றோரின்; வகிபாகத்தை குறைக்கிறது. இவற்றிற்கான தீர்வுகளாக ஆசிரியர்கள்; பெற்றோருக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குதல், பாடசாலையில்  இம் மாணவர்கள் தொடர்பாக நடைபெறும் கூட்டங்களில் பெற்றோரைப் பங்குபெற வைத்தல், ஆசிரியர்கள் மாணவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோருடன் மாணவர்களின்; கற்றல் தொடர்பில் கலந்துரையாடுதல் போன்ற செயற்பாடுகள்  விதந்துரைக்கப்பட்டுள்ளன.

அருஞ்சொற்பதங்கள் : விசேட தேவையுடையோர், கற்றல், பெற்றோர், வகிபாகம்

1.   ஆய்வு அறிமுகம்

 

1.       அறிமுகம்

 விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகம்என்ற தலைப்பில் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்;கொள்ளப்படுகிறது. விசேட  தேவையுடைய மாணவர்களுக்குக் கல்வி வழங்கப் பாடசாலைகள் தயாராக உள்ள போதிலும் பெற்றோர்கள் இதற்காகத் தயாராகுவது குறைவாகவே உள்ளது. விசேட  தேவையுடைய பிள்ளைகள் தோற்றம் பெறுவதற்;கு அக, புறக் காரணிகளும், பெற்றோர்களின் நடவடிக்கைகளும் காரணங்களாக உள்ளன. அந்த வகையில்  பிள்ளைகளை சுமையாக எண்ணி அவர்களை கவனத்தில் எடுக்காமலும், கல்வியில் அக்கறை இல்லாமலும் அசமந்தப்போக்குடன் காணப்படுகின்ற நிலை அதிகரித்துச் செல்கிறது.

விசேட தேவையுடைய பிள்ளைகள் எதையும் செய்யமாட்டார்கள் என்று பரிதாபமாய்ப் பார்க்கின்ற நிலை பெற்றோர்களிடம் அதிகரித்துச்செல்கின்றது. விசேட கல்வியினை வழங்குவதற்குப் பாடசாலைகள் முன்வந்தாலும் பெற்றோர்கள் அலட்சியமாக எண்ணுதல், பாடசாலைக்கு  அனுப்பினாலும்; அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் அசமந்தப்போக்காக காணப்படல், போன்ற பலவிடயங்கள் பெற்றோர்களிடம் காணப்படுவதுடன். விசேட கல்வி தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகிறது. இதனால் விசேட தேவைக் கல்வியில் உட்படுத்தல் கல்வியானது முதன்மை பெறும் ஒரு விடயமாக மாறியுள்ளதுடன் இதற்கான உளவியல் காரணிகளும் பலமடைந்து வருகின்றன. வேறுபாடுகளின்றி சகல மாணவர்களுக்கும் கல்வியின் தரத்தினை மேம்;படுத்துதல் வேண்டும். விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகமே மிக அதிகமாக காணப்பட வேண்டும். இது எவ்வாறு உள்ளது என்பதை அறியும் பொருட்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

2.       ஆய்விற்கான பின்னணி

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் கூடுதலான விசேட தேவையுடைய பிள்ளைகள் வசிக்கும் குடும்பங்கள் காணப்படுகின்றன உள்ளடங்கல் வகுப்புக்களில் இருந்து கற்கக்கூடியநிலையிலுள்ள பல மாணவர்கள் சாதாரண வகுப்புக்களில் தமது கற்றல் கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றமை குறைவாகவே காணப்படுகின்றது. குறித்த பிரச்சினை  ஆய்வாளனின் ஆய்வுப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து தீர்வு காணப்படமுடியாத ஒரு விடயமாக இருந்துள்ளது. இதனால் இவ்வாய்வு இதனை மையப்படுத்தி அமைந்துள்ளது.

இத்தகைய பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற பாடசாலைகள், கல்வியை வழங்குகின்றனவா? எதிர்காலத்தில் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கான வழிகள் எத்தகையன? இதில் பெற்றோரின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதாக உள்ளது. விசேட தேவையுடைய மாணவர்கள், ஏனையவர்கள் போன்று மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரச பாடசாலைகள் செயற்பட்டாலும் பிள்ளைகள் விரும்புவதில்லை இதில் பெற்றோரும் விரும்புவது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் குறித்த பிரச்சினையை பின்னணியாகக் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

1.3 ஆய்வுப் பிரச்சினை

கல்வி ஓர் அடிப்படை உரிமையாகையால் எக்காரணம் கொண்டும் ஒருவரது கல்வி உரிமையை மறுதலிக்கமுடியாது. உடல், உள ரீதியில் இயலாமை கொண்டவர்களாக காணப்பட்டாலும் அவர்களும் கல்வியை பெறுவதற்கான உரிமையுடையவர்கள் என்ற எண்ணக்கருவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த விடயம் பற்றி ஆய்வாளனின் ஆய்வுப் பிரதேசத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதிய விழிப்பு நிலை இல்லாமையினால் இம் மாணவர்களை பாடசாலை கற்றல், கற்பித்தல் செயற்பாட்டிற்குள் கொண்டு வருவது சிரமமாகவே காணப்படுகிறது.

இந்த வகையில் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் விசேட தேவைகள் சார் கல்வி வழங்கும் பாடசாலைகளில், கற்கும் மாணவர்களின் கற்றல் தொடர்பாக பெற்றோர் என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிதல் அவசியம் ஆகும். இப் பிள்ளைகளின் கற்றலில் எல்லோரினது பங்களிப்பும் அவசியம் சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டு ஊக்கப்படுத்துவதுடன்; ஏனைய பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதலும் அவசியம்.

ஆய்வுப் பிரச்சினைக் கூற்று

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின்; கற்றலில் பெற்றோரின் பங்குபற்றுதல் குறைவாக காணப்படுகின்றமையால் இம் மாணவர்கள்; பொருத்தமான கல்வியைப் பெறுவதி;ல் சிரமப்படுகின்றனர்.

1.4 ஆய்விற்கான நியாயம்

மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்தில் விசேட தேவையுடையோர் அதிகமாக காணப்படுகின்றனர். இந்நிலையில் விசேட  தேவையுடைய பிள்ளைகளிற்கான கல்வியை வழங்குவதில் பெற்றோரின் பங்களிப்பானது குறைவாகவே காணப்படுகிறது. இப்பிள்ளைகளுக்கு வழங்கும் கல்வி தொடர்பாக பெற்றோர்கள் குறைவான அறிவைக் கொண்டு காணப்படுவதால். இவர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2.0 இலக்கிய மீளாய்வு

Desforges and abouchar, 2003, இல், பெற்றோருக்கும் பாடசாலைக்கும் இடையிலான தொடர்பினை அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஆய்வில் பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன. பெற்றோர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டு அவர்களுடன் இணைந்து கற்றல், கற்பித்தல் தொடர்பாக வரும் பிரச்சினைகளை ஆசிரியர்கள் தீர்ப்பதன் மூலம் பெற்றோரின், பங்களிப்பையும் அதிகரிகப்பதுடன் மாணவர்களின் கற்றலையும் மேம்படுத்த முடியும்.

Noora 2015 ஆம் ஆண்டு, “விசேட தேவையுடைய மாணவர்களது கற்றலில் பெற்றோரின் ஈடுபாடுஎனும் தலைப்பில் பாகிஸ்தானில் செய்யப்பட்ட ஆய்வில் பின்வரும் முடிவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சில பிரதேசங்களிலுள்ள பெற்றோர்கள் ஏழைக் குடும்பங்களாக காணப்படுகின்றனர், பொருளாதாரக் காரணிகளும் இம் மாணவர்களின் கற்றலில் பாதிப்புச் செலுத்துகின்றது, பெற்றோர், சமூகம், ஆசிரியர்கள் இந்த மூன்று பங்காளிகளின் ஒத்துழைப்பினால் பிள்ளைகளின் கற்றலை அதிகரிக்க முடியும். அதாவது ஒரு பக்கம் பிள்ளையை ஊக்குவிக்கும் பாடசாலை, பிள்ளையை ஆதரிக்கும் சமூகம், பிள்ளையைப் பராமரிக்கும் பெற்றோர் ஆகிய மூன்று தரப்பினரும் ஒன்றாகக் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன.

3.0 ஆய்வு முறையியல்

ஆய்வு முறையியலானது, ஆய்வின் பொது நோக்கத்தையும், சிறப்பு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு, ஆய்வு வினாக்கள் தயாரிக்கப்பட்டு அவற்றுக்கு விடை காண்பதன் அடிப்படையில் ஓர் அளவை நிலை ஆய்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3.1 ஆய்வின் நோக்கம்

1.      விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்றல் செயன்முறைகளை இனங்காணல்.

2.      விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஈடுபாட்டை இனங்காணல்.

3.      விசேட  தேவையுடைய மாணவர்கள் எதிர்நோக்கும் கற்றல் பிரச்சினைகளைக் கண்டறிதல்.

4.   விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில், பெற்றோரின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் பரிந்துரைத்தல்.

3.2  ஆய்வின் மாதிரித் தெரிவு

        அட்டவணை 3.2.1 ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள்

4.0 தரவுப்பகுப்பாய்வும் வியாக்கியானமும், கலந்துரையாடலும்  

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபங்கை அறியும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆய்வுக்கான தகவல்கள் வினாக்கொத்துக்கள் மூலம் திரட்டப்பட்டன. விசேட நோக்கங்களுக்கு அமைய வினாக்கள் அமைக்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. இம் மாணவர்களது கற்றல் தனித்து ஒரு செயற்பாடாக அமையமாட்டாது  அந்த வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும், பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு  ஆள.நுஒஉநட மூலம் பகுப்பாய்வு செய்து அதனை வியாக்கியானமும், கலந்துரையாடலும் செய்வதாக இவ்வாய்வு அமைகின்றது.

4.1 தரவுப்பகுப்பாய்வு முடிவுகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்றல் செயன்முறைகள்.

4.1.1 விசேட தேவையுடைய மாணவர்களின் வகுப்பறைச் சூழல்.

 

உரு 4.1 பாடசாலையின் வகுப்பறைச் சூழல்.

விசேட தேவையுடைய மாணவர்களின் வகுப்பறைச் சூழல் தொடர்பாகப் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில், பொருத்தம் என 20மூ மான ஆசிரியர்களும், ஓரளவு என்று 15மூ மான ஆசிரியர்களும், குறைவு என 40மூ மான ஆசிரியர்களும், மிகக் குறைவு என 25மூ மான ஆசிரியர்களும் பதில்களை வழங்கியுள்ளனர். இதிலிருந்து விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலுக்கு பொருத்தமான வகுப்பறைச் சூழல் குறைவாகவே உள்ளது. என்பதனை அறிய முடியும்.

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபாகம்.

4.2 பெற்றோரின் ஒத்துழைப்பு

உரு 4.2 பெற்றோரின் ஒத்துழைப்பு

விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர், ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனரா? என கேட்கப்பட்ட வினாவிற்கு மிக அதிகம் என 10 வீதமான ஆசிரியர்களும், அதிகம் என 15 வீதமான ஆசிரியர்களும், ஓரளவு என 20 வீதமான ஆசிரியர்களும், குறைவு என 30 வீதமான ஆசிரியர்களும், மிகக்குறைவு என 25 வீதமான ஆசிரியர்களும் பதில்களை வழங்கினர். பகுப்பாய்வின்படி பெற்றோரது ஒத்துழைப்பு குறைவாகவே காணப்படுகின்றது.

4.3 கற்றல் பிரச்சினைகள்



 

 

 

உரு 4.3 கற்றல் பிரச்சினைகள்.

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் செயற்பாட்டின் போது அவர்களது நிலை  எவ்வாறு உள்ளது? என கேட்கப்பட்ட வினாவிற்கு மிகச் சிறப்பானது என 5 வீதமான ஆசிரியர்களும்;, சிறப்பானது என 20 வீதமான ஆன ஆசிரியர்களும், திருப்தியானது என 10 வீதமான ஆசிரியர்களும், குறைவானது என 50 வீதமான ஆசிரியர்களும், மிகக் குறைவானது என 15 வீதமான ஆசிரியர்களும் பதில் வழங்கினர். இவர்களது கருத்தின்படி மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் காட்டும் துலங்கல்கள் குறைவாக இருப்பதை காணலாம்.

 

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் வகிபங்கை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கையும், ஆலோசனையும்




 

 4.4 பெற்றோரின் ஈடுபாடு   

 

உரு 4.4 பெற்றோரின் ஈடுபாடு 

விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றலில் பெற்றோரின் ஈடுபாடு உள்ளதா? எனக் கேட்கப்பட்ட வினாவிற்கு மிகச் சிறப்பாக என 10 வீதமான ஆசிரியர்களும், சிறப்பானது என 10 வீதமான ஆசிரியர்களும், திருப்தியாக என 20 வீதமான ஆசிரியர்களும், குறைவாக என 40 வீதமான ஆசிரியர்களும், மிகக் குறைவாக என 20 வீதமான ஆசிரியர்களும் பதில் வழங்கினர். ஆகவே பெற்றோரின் ஈடுபாடு குறைவாக உள்ளது.

5.0 முடிவுகளும், விதப்புரைகளும்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு வழங்கப்படும் கற்றல் செயன்முறைகள்

5.1 பாடசாலை வகுப்பறைச் சூழல் முடிவுகள்

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில் 65 வீதமான பாடசாலைகளின் வகுப்பறைச் சூழல்;, இடவசதி குறைவு, அதிகப்படியான மாணவர்கள் காணப்படுகின்றமை, கேட்டல், பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு ஏற்ற வகையில் வகுப்பறை ஒழுங்கமைக்கப்படாமை, கற்றலை இலகுபடுத்தக்கூடிய வளங்கள் இல்லாமை, போன்ற பல காரணங்களால் கற்றல் கற்பித்தலை சிறப்பாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

விதப்புரைகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கேற்ப வகுப்பறைச் சூழல் அமைக்கப்பட வேண்டும். அதற்குப் பாடசாலையின் உதவியுடன் பெற்றோர், கல்வி அதிகாரிகளின் உதவிகளைப் பெற வழிவகுத்தல் அவசியம். வகுப்பறையின் பருமனுக்கு ஏற்ப மாணவர்களின் எண்ணிக்கையைப் பேணுவதுடன் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தல், பொருத்தமான தளபாட வசதிகளை ஏற்படுத்தி அவர்களது தேவைக்கு ஏற்ப அமைத்தல். போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் இதற்குப் பெற்றோர், அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப் பெறலாம்.

5.2 பெற்றோர் தொடர்பான நடவடிக்கையும், ஆலோசனையும்.  முடிவுகள்

65 வீதமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் அக்கறை அற்றவர்களாகவும், தங்கள் பிள்ளைகள் பற்றி தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.சில குடும்பங்களில் கூடுதலான பிள்ளைகள்; இருப்பதனால் இம்மாணவர்களுக்காக பெற்றோர்கள் கூடுதலான ஈடுபாட்டை வழங்குவது குறைவாகவே உள்ளது. அதுமட்டுமன்றி பெற்றோர் பாடசாலைக்கு வருவதே குறைவாக உள்ளது.

60 வீதமான பெற்றோர்கள் இம்மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுவதுடன் அயல் இடங்களில் உள்ள பொருத்தப்பாடுடைய வசதி மிக்க பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை இணைத்து கற்பிக்க ஆர்வம் குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

விதப்புரைகள்

கற்றலில் இவர்களது நிலைமைகளை எடுத்துக்காட்டல் வேண்டும், விசேட தேவையுடைய மாணவர்கள் செய்த சாதனைகளை எடுத்துக் கூறுதல், பாடசாலை கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்தல், இப் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர், அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பெற்றோரின் மனநிலையில்; படிப்படியாக மாற்றத்தைக் கொண்டு வருதல், இப் பிள்ளைகளது குடும்பத்துடன் பாடசாலை, நெருக்கமான உறவை வலுப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை தொடர்ச்சியாக வழங்குதல், பிற இடங்களில் இயங்கும் விசேட தேவையுடைய பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளுடன் பெற்றோர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தல். போன்ற பலவற்றைச் செய்யலாம்.

6.       உசாத்துணை நூல்கள்

1.      அருள்மொழி, செ. 2016, கல்வி ஆய்வு முறை, AIPS வெளியீடு, துர்க்கா அச்சகம்.

2.      தம்பிராசா சிவகுமார், 2009, விசேட கல்வி அறிமுகமும் பிரயோகங்களும், குரு பிறிண்டர்ஸ், திருநெல்வேலி.

3.      சந்தானம், எஸ். 1999, கல்விசார் அறைகூவல்கள், சாந்தா பப்ளிஸர்ஸ், சென்னை.

4.      சந்திரசேகரன், சோ. 2004, கல்வி ஒரு பன்முக நோக்கு, உமா பதிப்பகம், கொழும்பு.

5.      சறோஜினி, பி, ஆர், ராஜமோகன்,ஆர். 2009 சிறப்பு கல்விசார் சிந்தனைகள், சாந்தா பப்ளிஸர்ஸ், சென்னை.

6.         Desforges, c.& Abouchaar, A. 2003, The impact of parental involvement, parental support and family education on pupil achievemet , London department for education and Skills.

7.         Noor,A. 2015, Parental involvement in special education challenges faced to involving in education, university of Karachi, Pakistan.

8.         Caplan, G. 1974, Support Systems and community mental health, Lectures on consept development, New York.