4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

சுந்தரமூர்த்திநாயனார் சுவாமிகள் மெய் கீர்த்திக் கவிதை - முனைவர் பாவலர்.விஜயலட்சுமிகுமரகுரு

 

சுந்தரமூர்த்திநாயனார் சுவாமிகள் மெய் கீர்த்திக் கவிதை

முனைவர் பாவலர்.விஜயலட்சுமிகுமரகுரு.

தேவாரம் அருளிய மூவர் முதலிகளுள் ஓருவராம் நம்பியாரூரர் என்னும் பெயர் கொண்ட சுந்தர மூர்த்திநாயனார் சுவாமிகள் திருவவதாரதினம்ஆடிச் சுவாதி 14-8-2021 சந்தர மூர்த்திநாயனார் குருபூஜை நாள்.

 

ஆடிச் சுவாதிஅவதரித்தஆரூரன்

ஆடல் அரசன் அணுக்கத் திருத்தோழன்

பாடியசீர்திருப் பாட்டதனையோத

ஓடும் வினையெலாம் உண்மையே/

 

சடையனார் இசைஞானி சிறுவன் நாவலூரில்

நடைபயில சிறுதேர் நகர்த்துங்கால் நரசிங்கர்

அடைந்தார் ஆனந்தம் இசைவுடனே தன்மகவாய்

உடன்கொண்டு சென்று உரிமையாய் வளர்த்தார்/

 

அரசர் திருவும் அந்தணர் அறிவும்

ஒருங்கே வளர்ந்திட வதுவைமணம்பேசி

சடங்கவி சிவாசாரி மகளுக்கு நிச்சயிக்க

நடக்கத் தள்ளாடும் அந்தணராய் வந்தென்/

 

அடிமைநீ இதுவோலையெனக்காட்டிச் சுந்தரரை

தடுத்தாட்கொண்டார் வெண்ணைநல்லூர்ச் சிவனே

சொற்றமிழால்  பாடெனவேசொல்லெடுத்துக் கொடுக்க

பித்தா..எனத் தொடங்கிபாநயம் விளங்க/

 

அத்தா உனக்கு ஆளானேன் என்றுடனே

பத்தியொடு பாடியதேஏழாந் திருமுறையாம்

பக்தியில் நவவிதமாம் பெருமைமிகு சக்யத்துவம்

சிக்கெனக் கொண்டே சிவநெறி பரப்பினாரே! /

 

கயிலையில் கொண்டகாமநினைப்பால்

புவிதனில் பிறந்துபரவையார் சங்கிலியார்

இருவரை மணந்தும் யோகநிலை கொண்டொழுகி

அருமைமிகு அடியார்க்கு அமுதருளும் பணிசெய்தார் /

 

வெறுஞ்செங்கல் அதனையாங்கு ஒளிர்செம்பொன் ஆக்கியதும்

பெருநெல்மலை யொன்றைப் பெயர்த்துஅனுப்பியதும்

பெருகாற்றில் பொன்னிட்டு குளத்திலுங்கு எடுத்ததுவும்

திருத்தொண்டத் தொகைதென் திசையுய்யத் தந்ததுவும்/

 

முதலையுண்ட பாலகனை மீட்டுக் கொடுத்ததுவும்

பொதிசோறும் நீரும் கொண்டு பரமனருள வைத்ததுவும்

விதிமீறியதாழிழந்த விழியொளி பெற்றதுவும்

மதிகங்கை சடைக்கணிந்த மகேசன் துணையாற்றான் /

 

திருப்பாட்டால் மகிழ்வுற்ற திருக்கயிலைக் கோன்வெள்ளைக்

கரியதனைஅனுப்பிக் கனிந்துருகும் நம்பியைக்

கயிலாயம் வந்திடெனக் கட்டளையிட்டிடப்போய்

உயிருடன் உடல்போலும் ஒன்றாகிக் கலந்தனனே! /

 

இனியதமிழ் இசைத்த  இத்திருப் பாட்டினை

இனியிதற்கு இன்னொன்றுஈடில்லைஎன்றே

புனிதசிவன் போற்றிப் புகழ்பாடியசுந்தரரின்

நனிசிறந்ததேவாரம் நாளுமோதுமனமே!