4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

மனிதன் - சுரேஜமீ

 

மனிதன்

நானொன்றும் புத்த னில்லை

  நானொன்றும் ஏசு வில்லை

நானொன்றும் காந்தி இல்லை

  நானொன்றும் நெல்சன் இல்லை

நானொன்றும் அறிஞன் இல்லை

  நானொன்றும் ஞானி யில்லை

நானொன்றும் புனிதன் இல்லை

  நாள்தோறும் மனித னாவேன்!

 

வஞ்சித்து வாழ்வா ருண்டு

   வையத்தில் நல்லா ரென்று

நெஞ்சத்தில் ஒன்றை வைத்து

   நெருக்கத்தை உதட்டில் வைக்கும்

நஞ்சகரும் உலகில் உண்டு

    நாடுபோற்ற வாழ்வ துண்டு

பஞ்சினினும் மெல்லி யானே

    பட்டதைநான் மறந்தே வாழ்வேன்!

 

பொய்யதனைச் சொன்ன தில்லை

   புகழ்தேட நினைத்த தில்லை

கையதனில் உள்ள தீந்துக்

   களிப்புடனே வாழும் உள்ளம்

வையகத்தில் வாழ்வோ ரெல்லாம்

    வாழ்வாங்கு வாழ எண்ணும்

பையனென்றன் குணத்தை மாற்ற

    பக்குவமும் போத வில்லை!

 

எவரென்ன சொன்னால் என்ன

  என்நெஞ்சில் தைத்தால் என்ன

சுவராக இருந்தால் தொல்லை

  துளிகூட இல்லை தானே?

அவமானம் தோல்வி தாண்டி

  அகிலத்தைக் கண்டேன் நானே

தவமாகத் தமிழைக் கொண்டேன்

  தகையெல்லாம் வருமே தானே!

 

- சுரேஜமீ