4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

கறுப்பின் மகிமை - தா.சரவணன்

 

கறுப்பின் மகிமை

 

எவ்வளவு

பால் ஊற்றி

கழுவினாலும்

வெண்மையை

விரும்பாத

கடவுள்

 

கறுப்பான

கருவறையிலிருந்தே

ஒவ்வொருவரும் 

மண்ணில்

உதிக்கிறோம்

வளர்ச்சியில்

வேறுபாடு

பகுக்கிறோம்

 

வருத்தத்தின்

அடையாளமா கறுப்பு

நிலத்தில்

உழைக்கும்

வர்க்கத்தின்

அடையாளமல்லவா

கறுப்பு

 

தான்  கறுப்பு என்பதால்

தன்னை

கடிப்பவர்களுக்கு

கசப்பை தருவதில்லை

கரும்பு

 

கறுப்பு எருமைதான்

ஈட்டுகிறது

வெள்ளைப் பாலை

 

வரிசைமுறையை

அழகாக எடுத்து சொல்கிறது

கருங்கட்டெறும்புகள்

 

ஒற்றுமைக்கான

தந்திரத்தை

கற்பிக்கின்றன

கறுப்பின காக்கைகள்

 

தன் கரும்

உடலிலிருந்து

எல்லாவற்றையும்

மற்றவர்களுக்காகவே

அர்ப்பணிக்கிறது

பனைமரம்

 

கறுப்பாகாமல்

எந்த பானையும்

உணவு தந்ததில்லை

 

வாகனங்களுக்கு

உயிராய் இயங்குவது

கறுப்பு

 

சிவந்தவன்

வெளுத்தவன்

விரும்புவது

தலையில் கறுப்பை

 

உடலை

நனைக்கின்றபோது

அடையாத ஆனந்தத்தை

கருங்கூந்தலை

நனைத்ததும்

தேக்கமின்றி

குதூகலத்தில்

தெறித்து ஓடுகிறது

தண்ணீர்

 

அழகு என்று

சொல்வதில்லை கறுப்பை

அழகு சேர்க்கிறது

கண்-மை 

 

எதையும் மனசுக்குள்

கொண்டு செல்ல

முதலில் அனுமதி

பெறவேண்டியது

கருவிழியிடம்

 

நிறம் பார்க்கும்

காதலுக்கும்

அரங்கேற்றம் செய்வது

கரும் இமைகள்

 

கறுப்பு சிம்மாசனத்தில்

அமரவே

பிறப்பெடுக்கிறது

பூக்கள்

 

கறுப்பை

இகழ்ந்து பேசும்

சிவப்பு வெள்ளையர்களின்

நிழல்

செம்மண்ணிலும் கறுப்பு

 

வளம் செழிக்க

கருமேக கருணையால்

மண்ணில் மழை

 

நிலவு ஒளியும்

விளக்கொளியும்

இல்லையெனில்

இந்த உலகம்

இருள் சூழ்ந்த கறுப்பு

இங்கு சத்தங்கள்

சாதி, மத சண்டைகள்

இருக்காது

 

கறுப்பு இகழ்ச்சியல்ல

புகழ்ச்சி

அதை நீக்கிவிட்டால்

இவ்வுலகில்

ஏது சுழற்சி

 

தா.சரவணன் - கல்யாணமந்தை