4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

அன்னை - அன்புவேல் வர்மன்

 

அன்னை

 

அன்னையே

உன் கருவறையில்

எனக்கு ஓர் உருவம் தந்து

மொட்டிலிருந்து புத்தம்  புதுப்பூவாய்

மலரச் செய்தாய்..,

 

உன் சேலை

வாசனையில் முகம்புதைத்து

லயித்திருந்த நேரத்தில்

ஒளியாய் விளங்கும்

மொழியான தமிழ் மொழியை

கற்றுக் கொடுத்தாய்..,

 

வடக்குப் போகும் வேப்பங்கிளையில்

தொங்கும் தூலிகையில்

தூங்க வைக்க

தாலாட்டை ஒப்புவித்து

உறங்கச் செய்தாய்..,

 

பாட்டி வைத்த

பசிய குழம்பில்

அடியில் தங்கிய

பருப்புச் சாந்தில்

சோற்றைப் பிசைந்து

உருட்டி வடித்த

சிற்பத்தை ஒவ்வொன்றாக

என் வாய்க்குள்  உருட்டி

ஊட்டி மகிழ்ந்தாய்..,

 

உன் சுண்டு விரலில்

நகத்தைக் கோதி

வீதிகளைக் கடந்து

மூலை கடைக்குச் சென்று

சிட்டாய் பறக்கும்

இளசுகள் கூட விளையாட

அனுப்பி வைத்தாய்..,

 

உன் கைவிரல்களைப் பிடித்து

நான் நடக்கும்போது

இந்த உலகத்தைப்

பார்த்து நடக்கவில்லை

உனது பாதம்பட்ட தடங்களில்

கால் பதித்து

எண்ணிக்கொண்டே

நடந்து சென்றேன்

நாள்தோறும் நடைபயில

கற்றுத் தந்தாய்..,

 

என் தலையைச் சீவி சிங்காரித்து

முகத்தைத் தடவிப் பொட்டு வச்சு

ஆடைகளை வாகாய் மாட்டி வைத்து

புத்தகம் தாங்கிய

மஞ்சள் பையோடு

மதிய உணவுத் தட்டையும் வைத்து

கையசைத்து விடை கொடுத்தாய்..,

 

நான் நடந்து செல்லும் அழகை கண்டு

ஒவ்வொரு அசைவுகளிலும்

புதுப்புது இன்பங்களைக்

கண்டுபிடித்து

அதிசயத்தில் ஆழ்ந்திருந்தாய்..,

 

அன்னை என்பதற்கு

ஆயிரம் அர்த்தங்கள்

அகராதியில் இல்லாமல் இருக்கலாம்

ஆனால்

அவளின் அசைவுகளில்

தினந்தோறும்

ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை

கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறேன்.

                          

                                                அன்புவேல் வர்மன்