4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இந்துஅறிவியற் புலத்தில் சுஸ்சுருதசம்ஹிதை - திருமதி. ருஜானி நிமலேஸ்வரன்

 

இந்துஅறிவியற் புலத்தில் சுஸ்சுருதசம்ஹிதை

 

திருமதி. ருஜானி நிமலேஸ்வரன் B.A(Hons), MLS, MPhil(r)

ஆசிரியை

மட்டக்களப்பு, இலங்கை

 

இன்றைய காலகட்டத்தில் எத்துறைசார் அறிவும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையினையும் அறிவியற்கருத்துக்களின் செழுமையினையும் கொண்டுஅமைய வேண்டியது எதிர்பார்ப்புக்குரியது. இந்துநாகரிகப் புலத்தில் அண்டவியல், வானியல், இயற்பியல், இரசாயனவியல், மருத்துவம் போன்ற முறைசார் அறிவியற் புலங்களும், இரசவாதம், சோதிடம், குண்டலினியோகம், காயசித்தி உபாயங்கள் போன்ற முறைசாரா அறிவியற் புலங்களும் காலாகாலமாக காத்திரமான வளர்ச்சியைப் பெற்றுவந்துள்ளன.

அந்தவகையில் இந்தியவரலாற்றில் வேதகாலத்தினைத் தொடர்ந்து கி.மு 800 முதல் 1000 வரையிலான காலப்பகுதி இந்திய மருத்துவத்தின் பொற்காலம் (The Golden Age of Medicine in India) என்று கூறப்படுகின்றது. அக்கினிவேசர் சுஸ்சுருதர், சரகர் ஆகியோரின் மருத்துவ சம்ஹிதைகளின் தாக்கங்களே இதற்குக் காரணமாகும். எனவே சுஸ்சுருதசம்ஹிதை, மருத்துவ நூல்; என்ற வகையில் இந்து அறிவியற் புலத்தில் முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் சுஸ்சுருதசம்ஹிதை பற்றி பார்ப்போமானால், அறுவைசிகிச்சையின் தந்தை (Father of Indian Surgery) எனப்படுகின்ற இந்துஞானியான சுஸ்சுருதர், தான்கற்ற அறுவை மருத்துவ ஞானத்தையும் ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ள சில கருத்துக்களையும் தொகுத்து சுஸ்சுருதசம்ஹிதை என்ற பெயரில் ஆய்வேடாக வெளியிட்டார். சுஸ்சுருதர் அறுவைசிகிச்சை முறையில் பெருமளவில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு அறுவை சிகிச்கையில் நுட்பத்திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். இதன் காரணமாக அறிவியல் பூர்வமான விளக்கங்களுடன் தெளிவான முறையில் தமது நூலினை எழுதியிருக்கிறார்.

குறிப்பாக மருத்துவன் (பிஷக்), மருத்துவத்தாதி (உபதாதா), நோயாளி (ரோனி), மருந்து ஆகிய நான்கும் நான்கு தூண்கள் போன்று செயற்பட்டு சிகிச்சையின் வெற்றிக்கு காரணமாகின்றன” (ஸீத்திரஸ்தானம் - அத்தியாயம் 34, ஸ்லோகம் 16, 17) என்று சுஸ்சுருதர் கூறியுள்ளார். இந்நூல் ஆயுர்வேத மருத்துவக் கலையின் சத்திர சிகிச்சை முறைமைகள் பற்றி வெளிவந்த மிகத் தெளிவான கையேடாகும். இதனுடைய காலம் கி.மு 1000ஆக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் ஊகமாகும்.

இந்நூல் பூர்வாந்திரம்,உத்திரதந்திரமாகிய இருபெரும் பாகங்களைக் கொண்டதாகும். இதில் பூர்வதந்திரம் ஸீத்திரஸ்தானம், நிதானஸ்தானம், சரீரஸ்தானம், கல்பஸ்தானம், சிகிச்சாதானம் என்னும் ஐந்துபிரிவுகள் உள்ளன. இவை சுஸ்சுருதசம்ஹிதையில் மூலநூலில் உள்ளவையாகும். உத்திரதந்திரம் கி.பி நான்காம் நூற்றாண்டில் நாகர்ஜீனர் என்னும் மருத்துவர் சுஸ்ருதசம்ஹிதையினைச் சீரமைப்புச் செய்தபோது பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டதாகும்.

இந்நூல் 184 அத்தியாயங்களை உள்ளடக்கியது. 1120 வகையான நோய்களைப் பற்றி கூறுகின்றது. 700 மருத்துவ தாவரங்கள் பற்றிய வர்ணனைகளையும் கொண்டுள்ளது. தாதுப் பொருட்களிலிருந்து 64 வகையான மூலப் பொருட்களையும், விலங்கு மூலங்களிலிருந்து 57 வகையான மூலப்பொருட்களினையும் தயாரித்தல் மற்றும் நீரை தூய்மைப்படுத்துவதற்கான ஆலோசனைகளும் சுஸ்சுருதசம்ஹிதை கூறுகின்றது.

இதில் மூலிகைகள், இயற்கையான சத்துள்ள விதைகள், ஒருவகை அலங்கார மலர்கள், கடல் பாசிகள், முத்துக்கள், பளிங்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தெளிவற்ற நீரைப் பாதுகாக்க முடியுமெனக் கூறுகின்றார்.

ஸீத்திரஸ்தானத்தில் 46 அத்தியாயங்கள் அமையப் பெற்றுள்ளன. இப்பகுதி சிறப்பாக அறுவைசிகிச்சைப் பற்றி பேசுகின்றது. மனிதவுடலில் அறுவைசிகிச்சை செய்யக் கூடிய 27 இடங்களைக் கூறுகிறார். மேலும் அறுவைசிகிச்சை பற்றி கற்கின்ற மாணவர்கள் முதலில் மனிதஉடற் கூற்றியலை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக தற்காலத்தின் மருத்துவ கல்லூரிகளின் விஞ்ஞான ஆய்வு கூடங்களில் இறந்த சடலத்தை வெட்டி பரிசோதனை செய்வதைப் போல, இறந்த உடல்களை அறுத்து செய்யப்படும் சோதனைகள் இன்றியமையாதவை என்பதனை மிகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார்.

மேலும், அறுவைசிகிச்சைக்கு முன்பு நோயாளியை உணர்வு மறக்கச் செய்ய வேண்டுமெனவும், உணர்வுமறக்கச் செய்யும் உபாயமாக மதுவை அருந்த வைத்தல் இன்றியமையாதது என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். அறுவைசிகிச்சையின் போது நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க கருவிகளைக் கொதிநீரில் போட்டு எடுக்க வேண்டும் (ஸீத்திரதானம் - அத்தியாயம் 08, ஸ்லோகம் - 10) என்று கூறியுள்ளார்.

இந்நூலில் அறுவைசிகிச்சைக்கு தேவையான 101 வகையான மழுங்கல் கருவிகள், 29 வகையான கூர்மையான கருவிகள் பற்றி விபரித்துள்ளார். குறிப்பாக பற்றுக்குரடுகள், கன்னக்கட்சிக் கருவிகள், துரட்டிகள், துளையிடுதல் கருவி, குழல் கருவிகள் ஆகியவைமழுங்கல் கருவிகளாகவும் கத்திகள், கத்தரிக்கோல்கள், நீர்ரேருப்புக் கருவிகள், துண்டிக்கும் கருவிகள், ரம்பம் மற்றும் பலவகையாதைக்கும் ஊசிகள் ஆகியவை கூர்மைக் கருவிகளாகவும் கூறப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

குறிப்பாக உடலின் பல்வேறு பகுதிகளிலும் பொதிந்த அந்நியப் பொருள்களை வெளியே எடுக்கவும், திரவங்களை வெளியேற்றவும், மருந்துகளை உள்ளே செலுத்தவும் பல குழல் கருவிகளையும், உடற்பாகங்களில் வெட்டுவதற்கு, குத்துவதற்கு, துளைபோடுவதற்கு, சுரண்டுவதற்கு, தைப்பதற்கு பல கூர்மையான கருவிகளும் பயன்படுவதாக கூறுகிறார்.

சுஸ்சுருதசம்ஹிதையில் கூறப்படும் பலவேறு கருவிகளும் விலங்குகள், பறவைகளின் பெயரிட்டு சுஸ்சுருதர் கூறிய முறைதான் இன்றும் கூட பின்பற்றப்படுகின்றமையினைக் காணலாம். மேலும் அக்கருவிகள் செய்வதற்கான உலோகங்கள், கனப்பரிமான அளவுகள், கருவிகள், கைப்பிடிப்புக்கள் மற்றும் அவற்றைச் செய்யும் முறைகள் பற்றி விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன.

மேலும், அறுவைசிகிச்சையின் பின் காயத்தை மூடி மறைக்கவும், முறிந்த எலும்புகளைப் பொருத்திக் கட்டப் பயன்படும் பல்பட்டவரிசல்கள், புண் கட்டுத் துணிகள், தைக்கப் பயன்படும் நூல்கள், ஊசிகள், பலவகையான தையல் முறைகள், பலவகையான தைலங்கள் முதலானவை பற்றியும், களிம்பு மருந்துகளை தடவுவதற்கான தட்டலகு கருவிகள், செப்புக்குறடுகள், எடை பார்க்கும் இயந்திரத்தின் எஃகு தட்டுக்கள் முதலானவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. இதுவே மருத்துவதுறைக்கு சுஸ்சுருதர் அளித்துள்ள மிகப்பெரிய பங்களிப்பாகும்.

சுஸ்சுருதசம்ஹிதையில் கிழித்தெடுத்தல், உறுப்புக்களை அகற்றுதல், கிழித்தல், துளையிடுதல், உரசித் தேய்த்தல், தையலிடல், கீறுதல், வலிநீரகற்றல் என்னும் எட்டுவகை தலைப்புக்களில் அறுவைச் சிகிச்சைமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்.

மூக்குகுழைம அறுவைச் சிகிச்சை, கண்படலமாற்று அறுவைச் சிகிச்சை, சிறுநீரககல்லகற்றும் அறுவைச் சிகிச்சை, வயிற்றுறுப்பு பிரசவமுறை எனப் பல அறுவைச் சிகிச்சை முறைகள் மிகவும் நுட்பமான முறையில் விளக்கப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

மேலும் இப்பகுதியில் 14 விதமான மட்டுக்களையும், அறுவைச் சிகிச்சைக்கு முன் காரப்பொருள் அல்லது நெருப்பால் சூடு போடுவது, கெட்ட இரத்தையை அகற்ற அட்டைகளைக் கடிக்கவிடுவது போன்ற செயல்முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.

நிதானஸ்தானம் என்னும் பிரிவு 16 அத்தியாயங்களைக் கொண்டது. நோய்களின் அறிகுறி, அவை தோன்றுவதற்கான காரணங்கள், நோய் வகைகள், அவற்றின் இலக்கணங்கள் பற்றி இங்கே விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. ஆயுர்வேதமருத்துவக் கலையின் அடிப்படையைக் கற்க விரும்புவோருக்கான பாடவிதானமாக இதனைக் காணலாம்.மேலும், இதில் கருவளர்ச்சி பற்றியும்,உடற்கூறு பற்றியும், நாடிநரம்புகளை பாதுகாத்தல், மகப்பேற்று மருத்துவம் பற்றியும் கூறப்படுகின்றது.

பத்து அத்தியாயங்களைக் கொண்டதாக சரீரஸ்தானம் விளங்குகின்றது. இப்பகுதியில் சிறப்பாக தாய்சேய் மருத்துவம் குறித்துப் பேசப்படுகின்றது. கருவுருவாகும் வழிமுறைகள், கருச்சிதைவு ஏற்படாது தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் இவ்வத்தியாயத்தில் பேசப்பட்டுள்ளது. கல்பஸ்தானம் விஷங்களின் இயல்பு, விஷ முறிவு என்பன பற்றிக் கூறுகின்றது.

சிகிச்சாதானம் 40 அத்தியாயங்களைக் கொண்டது. இரசாயன வாஜீகரணசிகிச்சை முறைகள், பஞ்சகர்மாமுறை போன்றவை இப்பகுதியில் ஆராயப்பட்டுள்ளன. வாதநோய், குட்டநோய், நீரிழிவு, கட்டிகள் போன்றவற்றிக்கான சிகிச்சை முறைகளும் இவ்வத்தியாயத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் உதடு, நாக்கு, தொண்டை, பல் ஆகியவற்றில் தோன்றும் நோய்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விபரிக்கப்படுகின்றது. வாய்துர்நாற்றம், முரசுகரைதல், பற்சூத்தை, வரிசையின்றிபல் முளைத்தல், உள்நாக்குவளர்தல் போன்றவற்றுக்கான சிகிச்சை முறைகளும் இவ்வத்தியாயத்தில் உள்ளடக்கப்படுகின்றது.

மனிதர்கள் நீண்டஆயுளும் ஆண்மையும் பெற்று வாழ்வதற்கான காயகல்பங்கள் பற்றிய விபரங்கள் 26 – 30 வரையான அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. 31 – 40 வரையான அத்தியாயங்களில் இன்றைக்கு மேல்நாடுகளில் பிரபல்யமாகியுள்ள ஆயுர்வேதசிகிச்சை முறையான பஞ்சகர்மா முறை பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

பதினான்கு விதமான கட்டுக்கள் பற்றியும் நான்கு விதமான தீப்புண்கள் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சை முறைகளும் கூறப்படுகின்றன. நெருப்புக் காயங்களினால் ஏற்படுகின்ற தழும்புகளைப் போக்க மாற்றுத்தோல் சிகிச்சை, ரணங்களின் கீழ் கட்டிக் கொள்ளாமல் சுத்தரிக்கின்ற முறை பற்றியும் கூறப்படுகின்றது. விபத்துக்களால் ஏற்படக்கூடிய காயங்களுக்கு ஆறு விதமான மருந்து கூறப்படுகின்றது. எலும்பு வகைகள் பற்றியும், மூட்டெலும்பில் ஏற்படும் நோய் பற்றியும் கூறப்படுகின்றது.

அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துகின்ற சாவணங்களாக சிம்கையந்திர (lion face)> வியாகரயந்திர (tiger face),  டியூபியற்திர (dipert face),  மிர்கயந்திர, சாஸ்கதயந்திர, கிரௌயன் யந்திர, உல்கயந்திர, காக்கயந்திர என்பன கூறப்படுகின்றது.

வெட்டுகின்ற உபகரணங்களை சஸ்திர என அழைக்கின்றனர். கழலை, கட்டிகளை அகற்றுகின்ற 20 வகையான உபகரணங்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் மண்டலஅக்ர, அர்த்தாகர சஸ்திர, கரப்பட்டார சஸ்திர, அர சஸ்திர, அந்தர்முக சஸ்திர என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.

தைக்கின்றபோது பிரதானமாக இரண்டு வகையான நூல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Murva என்று சொல்லப்படுகின்ற கொடியின் இழை, Coccbluscordifolius என்பனவாகும். பலசந்தரப்பங்களில் கூந்தல் இழை,பட்டு இழையும் பாவிக்கப்பட்டது. மேலும் இந்நூலில் Plastic surgery பற்றி விபரமான விடயங்கள் கூறப்பட்டுள்ளது.

இந்நூலினை பற்றிக் குறிப்பிடும் ஆராய்ச்சியாளர் Dr. P.Misra என்பவர் பிற்கால மருத்துவ நூல்களில் இது போன்று நுட்பமான ஆற்றல் மிக்க அறுவை சிகிச்சை முறைகளைக் கூறும் நூல் வேறு எதுவும் இல்லைஎன்று கூறியுள்ளார்.

“Nothing in the recorded history of ancient medicine is even remotely comparable with the creative ideas skills and achievements describes in the great compilation of surgery and surgical techniques” – Dr.P.Misra

இந்நூலின் சிறப்புக் காரணமாக கி.பி எட்டாம் நூற்றாண்டளவில் Abillasiabil என்பவரினால் Kitab – I – Susrud என்ற பெயரில் அரேபிய மொழியிலும், இலத்தீன் மொழியிலும் Hessler என்பவரால் ஜெர்மன் மொழியிலும் ,மாக்ஸ் மூலர் என்பவரால் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளமையினைக் காணலாம்.

 

உசாத்துணை  

  1. அருள்நேசன், பு., “குழைய ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைக்கு சுஸ்சுருதரின் பங்களிப்பு”, வளரும் விழுதுகள்,  இரண்டாவது இதழ், கிழக்குப் பல்கலைக்கழகம், 2010.   
  2. சந்திரா, எஸ்., “அறிவியல் முன்னோடிகள்”, விசுபதிப்பகம், சென்னை, 1990.   
  3. முகுந்தன், .,“இந்து அறிவியற் புலத்தில் மருத்துவச் சிந்தனைகள்”, நெய்தல் - தொகுதி 04, கிழக்குப் பல்கலைக்கழகம், 2006.  
  4. https://en.wikipedia.org/wiki/Sushruta_Samhita   
  5.  https://rarebooksocietyofindia.org/book_archive/Sushruta%20Samhita%201.pd   
  6. https://www.keralatourism.org/ayurveda/history/evolution-literature/sushruta-samhita