4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

இக்கால இலக்கியங்களில் பெண்ணியம் - ரா.வனிதா

 

இக்கால இலக்கியங்களில் பெண்ணியம்

 

ரா.வனிதா,

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,

விழுப்புரம் - 605 602.

                                                                        98437 56910

 

முன்னுரை

            தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு படைப்பாளர்களுக்கு இடையில் தனக்கென்று ஒரு தனித்த இடத்தைப் பெற்ற படைப்பாளர் சூடாமணி ஆவார்.  இவரது படைப்புகள் பலவற்றில் பெண்களுக்கு முதன்மை கொடுத்து எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.  அந்த வகையில் இவரது படைப்புகளில் ஒன்றான மூன்று வருட இடைவெளிஎன்ற தலைப்பில் அமைந்த ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை இக்கால இலக்கியங்களில் பெண்ணியம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

இக்கால இலக்கியங்களில் பெண்ணியம்

            இக்கால இலக்கியங்களில் பெண்ணியம் என்பது வாழ்க்கையின் துணிவும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், எதையும் தாங்கும் வல்லமையும் பொருந்திய மாபெரும் சக்தி என்றால் மிகையில்லை.  இன்றைய வாழ்க்கை முறை சவால் நிறைந்தது.  தொழில் நுட்ப முறையில் நாகரிக வளர்ச்சியில் கல்வியில் குடும்பத்தில் இப்படி நாம் எல்லாவற்றிலும் முன்னேறி நம்மை செழுமைப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் நேர்மறை சிந்தனைகளை மனதில் இருத்தி நேர்மையான முறையில் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளும் முயற்சியிலும் இக்கால இலக்கியங்களில் காணப்படுகின்றன.  அதுதான் நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதால் நாம் அவற்றை இறுகப் பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.  இக்கால இலக்கியங்களில் பெண்ணியம் என்பது இயல்பு வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி.  அந்தக் கண்ணாடி பிரதிபலிக்கும் பிம்பம் நம் மனதில் மகிழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடியாகும்.

பெண்ணின் படைப்புகள்

            படைப்பு என்ற கனவு இடம் என்பது ஒருபுறம் வீடு என்ற சமூக இருப்பிலும் கூட பெண்களுக்கு இடமில்லை என்பது இன்னும் பெரிய வருத்தம் ஆகும்.  

                        உம் வீடுகள் தாம் இங்கே

                        சிறைக் கூடங்கள் அறிவீர்

                        உங்கள் பத்தினிகள் எல்லாம் அங்கே

                        சுதந்திர அடிமைகள்

                                                (சுதந்திர அடிமைகள், வித்யா, ப.194)

                        நடக்கு திசையெலாம்

                        முட்ட நேர்கிற சுவர்கள்

                        சிலை போலென்ன

                        இறுக்குகிற சுவர்கள் 

                        நானொரு சமாதியுள்

                        நிறுத்தி வைக்கப்பட்டு

                                                (வீடு, பிருந்தா, ப.154)

இந்தக் கவிதைகளில் வீடு சிறைகூடமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.  பெண்கள் வீடு என்னும் சமூக அமைப்பில் பெற்றுள்ள இடம் தெரிய வருகிறது.  பெண்கள் சுய உணர்வின்றி விடுதலையின்றியும் சவாலாக இருப்பதற்கு இடம் வீடுதான் என்பது இருந்தாலும் பெண்களுக்கு பழைய வீடே இனிமை தருவதாய் இருக்கும்.  அதுதான் அவளின் தாய் வீடு ஆகும்.  அந்த வீட்டின் அழகு, விடுதலை வாசம், எல்லாமே அவளின் நினைவில் தினம் தினம் வாழ்கிறது.

                        முற்றிலுமாக

                        தன் அடையாளமிழந்து

                        நொறுங்கிக் கிடக்கிறது

                        முன்பு நானிருந்த

                        என் பூர்வீக வீடு

                        இன்று 

                        நானங்கு இல்லையெனினும்

                        அது என்னோடு தானிருந்தது

                                                (என் பூர்வீக வீடு, சல்மா, ப.91)

இந்தக் கவிதையின் மூலம் பெண்களின் பூர்வீக வீட்டில் இன்னும் ரகசியங்கள் அந்த வீட்டின் சோகமும் அவளிடம் காணப்படும்.  ஒரு பெண்ணிற்கு புகுந்த வீடு எவ்வளவு முக்கியமோ அதுபோன்று தனது பிறந்த வீடும் முக்கியம்.  

பெண் பெருமை உடையவள் அவளினும் பெருமை உடையது எதுவும் இல்லை.  ஒருவள் அடையக் கூடியவற்றுள் பெண்ணை விட மேலான பொருள் எதுவும் இல்லை எனலாம்.  (பெண்ணின் பெருந்தக்கறு இல் தாயம்மாள் அறவாணன், பக்.11) அன்பு அமைதி ஆற்றல் முதலிய பண்புகளும் இயற்கை அழகும் உடையவளே பெண்.  “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மாஎன்று தேசிக விநாயகம் பிள்ளை குறிப்பிடுவதைப் போல் மனவலிமை கொண்டவர்கள் பெண்கள்.  அத்தகைய பெண் குடும்ப வாழ்விலும் பொருளாதாரத் தொழிலிலும் சிறந்து விளங்கி பெருமையுடன் திகழும் ஆற்றல் படைத்தவளாய் விளங்கியுள்ளாள்.  

கதைச் சுருக்கம்

            மூன்று வருட இடைவெளி என்ற கதையில் ஹேமா தன் வாழ்க்கையே முக்கியம் என்று நினைத்து தன் பிறந்த வீட்டையும் தன் பெற்றவர்களையும் மறந்து புகுந்த வீட்டு உறவோடு மிக மன வேதனையிலே வாழ்கின்றாள்.  தன் தாய் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்திற்காக அவளை தாய் வீட்டின் பக்கமே போகக் கூடாது உன் வாழ்க்கை முக்கியம் என்றால் என்னுடன் வா என்கிறார் ஹேமாவின் கணவர்.  

            ஹேமாவின் வாழ்வில் பழைய தாய் வீடு தனக்கான இடம் என்பதாக பெண்கள் உணர்ந்துள்ளார்கள்.  அந்த வீட்டை பெண்கள் இழந்து விட்டார்கள் என்பது போல பெண்களுக்கான இடம் அப்போதே தொலைந்து விடுகின்ற நிலைமை ஒரு சில பெண்களுக்கு கிடைத்து விடுகின்றன.  தமிழ்ச் சூழலில் அல்லது இந்தியச் சூழலில் உள்ள பிறந்த வீடு புகுந்த வீடு என்ற பெண்களுக்கான சமூக இரட்டை இருப்பு நிலை இந்த ஏக்கத்தின் முதற் காரணம் தெளிவு ஆகும்.  தாய் என்பவளைத் தன் இனமாக நோக்கும் மகளின் அன்பை கட்டாயமாகப் பிரிக்கப்படும்போது மகளின் மனதுள் ஏற்படும் இழப்பு பெரிய பாதிப்பை அவளின் படைப்பு மனத்தில் ஏற்படுத்துகிறது.  அந்த ஏக்கம் அந்த ஏமாற்றங்களும் பெண்களின் படைப்பு மனத்தில் பெரிய இழப்பாகவே இருக்கின்றன.  குடும்பத்தில் பிறந்த பெண் குடும்பத்தவளாக வாழ்கிற போது பல அனுசரிப்புகளுக்கு உள்ளாக வேண்டியவளாக இருக்கிறாள்.  அப்படி வாழ்வது சரியென வாழும் பெண்களின் வாழ்வில் பெண்ணியம் நுழைந்து அவர்களைக் கெடுத்துவிடப் போவதில்லை.  ஆனால் குடும்பத்தில் சம உரிமையை நிலை நாட்ட பெண்ணியம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.  மின்னல் பூக்கள் என்ற நாவலில் இறந்த பெற்றோருக்கு ஆண் இறப்பு கடன் செய்வது போல பெண்ணும் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளன.

மூன்று வருட இடைவெளி கதைகளில் பெண்ணியம்

            கடைவீதி முனை திரும்பியதுமே அம்மா கண்ணில் பட்டால் அடிவயிற்றில் அடையாளம் சிலீரென்றது ஹேமாவுக்கு.  தன் தாய் முகத்தை மூன்றாண்டுகளுக்கு பின் தான் பார்க்கிறாள் மகள்.  ஆனால் தாய் தன் மகள் அருகில் நிற்பதை பார்க்கவில்லை.  சரியாகச் சொன்னால் மூன்று ஆண்டுகள் இரண்டு மாதங்கள் பதினொரு நாட்களில் அம்மா எப்படி மெலிந்து உருமாறி விட்டாள் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்ற ஞாபகம் கண்ணிலே இருந்தன.  ஒரு வெள்ளிக் கிழமை அன்று மாலை மயிலாப்பூருக்கு பேருந்து மூலம் சென்று வருவாள்.  ஏனென்றால் வெள்ளி தோறும் தனது அப்பா அம்மா மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வருவார்கள்.  எனவே அவள் பார்க்க ஆசைப்பட்டாள்.  கோயிலுக்கு சென்று தொலைவிலிருந்து பார்த்துவிட்டு வருவாள்.  ஆனால் இப்போது மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு கடைவீதியில் அம்மாவை ஹேமா பார்க்கிறாள்.  ஆனால் கடைக்கு தன் கணவர் குழந்தையுடன் வந்திருந்தாள் ஹேமா.  எப்படித்தான் தாயை பார்ப்பது என்று மிக வேதனைப்பட்டாள்.  பின்பு தன் கணவரிடம் ஒரு பொய் சொன்னாள்.  என்னுடைய சிநேகிதி மாலா அந்தக் கடையின் அருகே நிற்கின்றாள்.  அவளைப் பார்த்து பேசி விட்டு வருகிறேன் என்று சொன்னாள்.  அவள் கணவரும் சரி நீ போய்ட்டு வா குழந்தை மோகனை என்னிடம் விட்டுட்டுப் போ நான் இந்தக் கடையில் சட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்றார்.  ஆனால் குழந்தை அப்பாவிடம் செல்லவில்லை  ஹேமாவிடமே சென்றது.  கணவர் கடைக்குள் செல்லும்வரை மெதுவாகவே நடந்தாள்.  அவர் கடையின் உள்ளே சென்றவுடன் மிக வேகமாக தனது அம்மா அருகில் சென்று கண்ணீருடன் அம்மா என்று கூப்பிட்டு தனது தாயைக் கட்டித் தழுவினாள்.  “அம்மா உன்னைப் பார்க்க எத்தனை சந்தோஷமாயிருக்கு என்று சொல்லி குழந்தையை இறக்கினாள்.  ஆனாலும் ஒரேயடியா இளைச்சுப் போய்ட்டியேம்மா.  உடம்பு சரியாயில்லையாம்மா என்றாள்.  மிக சந்தோஷப்பட்டாள் அவளின் மனசு குளிர்ந்து காணப்பட்டன.  தன் மகளைத் தழுவிக் கொண்டாள்.  மழையினூடே பளீரிடும் சூரிய பிம்பம் போல் அழுகையூடே புன்னகை அம்மாவின் இந்த சந்தோஷம் அம்மா பட்டிருந்த வேதனையின் அளவுகோல் போலமைந்தன.

குழந்தையைப் பார்த்து இவன் மோகன்தான்மா ஆறு மாதக் குழந்தையில் பார்த்தேன் என் செல்லத்தை என்றாள்.  இப்போது இவன் எல்.கே.ஜி. படிக்கிறான் என்றாள் ஹேமா.கண்ணா என்கிட்ட வரியா என்று அவள் தொட்டதுமே குழந்தையைப் பற்றி உலுக்கி அப்பாகிட்ட போலாம் வா என்றாள்”.  ஹேமா அம்மாவிடம் நான் சீக்கிரமே போயிரணும் அம்மா வாசுவும் நானும் துணிகள் வாங்க இங்கே வந்தோம்.  நீ நிக்கிறது பாத்ததும் எனக்கு மனசு கேட்காமல் ஏதோ பொய் சொல்லி இங்கு வந்தேன்.  இப்போது வாசு கடைக்கு வெளியே வந்து நம்மைப் பார்த்தால் வம்புதான் என்றாள்.  அம்மா மகளிடம் அப்பாவும் நானும் உன்னைப் பார்க்காமல் ஒவ்வொரு நாளும் வாடிப்போய்தான்மா உள்ளோம் என்றாள் அம்மா.  அப்பாவிற்கு மருந்து வாங்கி செல்ல கடைக்கு இங்கே வந்தேன் என்றாள்.  மருந்து சீட்டை அம்மாவிடமிருந்து ஹேமா வாங்கி வந்து மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி தன் தாயிடம் அப்பாவிடம் நா வாங்கிக் கொடுத்தேன்னு சொல்லுமா என்றாள்.  தாய்க்கு மிகப் பெரிய சந்தோஷம் மூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் மகளையும் பேரனையும் பார்த்ததில் அம்மாவை வலியனுப்பி வைத்துவிட்டு தன் கணவர் இருக்கும் கடைக்கு செல்லுகின்றாள்.  அப்போது குழந்தை அந்த ஆன்ட்டி யாருமா என்றது.  கண் கலங்கினாள் ஹேமா கடையில் சென்று தன் கணவரிடம் சட்டை பார்த்தீர்களா பிடித்திருக்கா என்றாள்.  நீ பாருமா உனக்கு எது பிடித்திருக்கோ அதுவே எனக்குப் பிடிக்கும் என்றார் கணவர்.  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹேமாவின் தகப்பனாருக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.  ஹேமா, வாசு, வாசுவின் அக்கா கமலம் மூவரும் விழாவிற்கு சென்றார்கள்.  அங்கே அவர்களை மிக சிறப்பாகவே உபசரித்தார்கள்.  குறை சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை.  ஹேமாவின் அம்மா வீட்டு உறவை எப்படியாவது அறவே அருத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாசுவின் அக்கா கமலம் முடிவு எடுத்தாள். அதன்படியே விருந்து முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரம் வந்தன.  அப்போது ஹேமாவின் அம்மா வெற்றிலை பாக்குடன் தாம்பூலம் கொடுத்து வழியனுப்பும்போது தாம்பூலப் பை கை தவறி கீழே விழுந்தது.  அத்தனை அலட்சியம் வயசாயிட்டா போதுமா என்றாள் கமலம் இதைப் பெருசுபடுத்தி பெரிய சண்டை போட்டு ஹேமாவை அம்மா வீட்டு உறவு வேண்டுமா இல்லை கணவர் வீட்டு உறவு முக்கியமா சொல் என்று கூறி அவள் தன் கணவர்தான் முக்கியம் என நினைத்து மன வேதனையுடன் சொல்கிறாள்.  இப்படிப்பட்ட சூழலில்தான் மூன்று ஆண்டுகளுக்குப் பின் தனது அம்மாவைக் கண்டவுடன் வாசுவிடம் சிநேகிதியைச் சென்று பேசிவிட்டு வரேன் என்று சொல்கிறாள் வாசுவும் அனுமதி தர அம்மாவைச் சந்திச்சிட்டு வந்த பிறகு சிநேகிதி என்ன சொன்னாள் என்றார் கணவர்.  “ஓ அவளா இப்ப அவள் சென்னையில் தான் இருக்காளாம்.  ஒரு பெண் குழந்தையாம் அவளுக்கு என்றாள்

அவள் பேசும்போதே வாசு நானும் உங்க அம்மாவப் பாத்தேன்.  அவன் முகத்தில் கோபமில்லை.  அவள் கண்களைத் திருப்பிக் கொண்டாள்.  உதடுகள் சுருங்கின எனக்கென்ன தண்டனை என்றாள்.  எதுக்கு தண்டனை மூன்று வருடத்தில் நான் மாறியிருக்கலாம் இல்லையா,ஹேமா சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.  அவளைத் தடவிக் கொடுத்தார் கணவர்.  மனைவியின் மன வருத்தத்திற்கு மருந்திடும் கணவன் என்பது மிக அழகாக இலக்கியங்களில் கண்ணாடி போன்று உள்ளன”.

முடிவுரை

விடுதலை பெற்ற சுதந்திர நாட்டில் பெண்கள் அறிவு வேட்கையும் அறநிலையும் அன்பு நெறியும் உடைய சுடர் விளக்காகவும் திகழ வேண்டும் என்பது அவர் கனவு இன்றைய பெண்கள் அஞ்சி அஞ்சி தலை குனிந்து செல்லாமல் நிமிர்ந்து நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் எவர்க்கும் அஞ்சாமல் சிறந்த நெறிகளை பின்பற்றி அவள் நடப்பதாகக் காட்டுவதன் மூலம் அவளின் கனவு நனவானது எனவும் பல வடிவங்களில் காட்டி பெண்மையைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

உதவிய நூல்கள்

1.      பாரதி.கே., ஆர்.சூடாமணி நாகலிங்கமரம் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

2.      சீதாரவி பாரதி.கே., ஆர்.சூடாமணி தனிமைத்தளிர் 

3.      மின்னல் பூக்கள், நாவல்

4.      இரா. வாசுகி, பெண்ணிய அணுகுமுறைகளும், இலக்கியப் பயன்பாடும்.

5.      நிர்மலாராணி.வீ, பெண்ணியத் திறனாய்வு.