4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

மனதில் உறுதி வேண்டும் - முனைவர் சித்ரா

 

 

 

 

 

 

மனதில் உறுதி வேண்டும்

(ஏகலைவனின் உறுதி)

 

 

 

நாடகம்

 

 

 

 

 

 

 

 

 

முனைவர் சித்ரா

ஹாங்காங்

 

 


 

உறுப்பினர் விவரம்

 

ஏகலைவன்

16 வயது உடையவன்

 (பெரிய உருவம் கொண்டவன்; வேட்டைக்காரனின் தினவு; பொறுப்பை உணர்ந்தவன்; தாயின் பால் மதிப்பும் மரியாதையும்கொண்டவன்)

 

ஏகலைவனின்தாயார்

வயதானவர் 

(மகனின் மேல் மாறா அன்பு கொண்டு, அறிவுரை கூறும் தன்மை கொண்டவர்)

 

துரோணர்

வயதானவர் 

(திண்மையான தோள்களை உடையவர்; கண்டிப்பான குரு; அறிவு சால் மனிதர்; வீரம் மிக்கவர்; வித்தைகள் பல கற்றவர்)

 

அர்சுனன்

16 வயது உடையவன்

(திண்மையான தோள்களை உடையவன்; வீரன்; கோபக்காரன்; உறுதியான குணம் கொண்டவன்)

 

அசுவத்தாமன்

20 வயது உடையவன் 

(திண்மையான தோள்களை உடையவன்; வீரன்; வித்தைகள் பல கற்றவன்)

 

தருமன்

17 வயது உடையவன்

(அர்சுனனை விடவும் உருவத்தில் சிறியவன்; அன்பான,அறிவுரை கூறும், எப்போதும் உடன் இருக்கும்சகோதரன்)

 

ஏகலைவனின்தோழன்

ஏகலைவனுக்கு சற்றே குறைந்த வயதுடையவன் 

(உருவத்தில் சிறியவன்; நல்ல தோழன்)

 

மாணவர்கள்

15-17 வயது உடையவர்கள்

(குரு பக்தி மிக்கவர்கள்)


 

காட்சி 1

உறுப்பினர்கள் : ஏகலைவன், அவனது தாயார்

வேளை : மாலைவேளை

இடம் : ஏகலைவன் குடில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

இதுவரை நீங்கள் சொன்னது போல் செய்து பல வெற்றிகள் பெற்று இருக்கிறேன்.

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

தாய் மகனுக்கு ஆறுதலுடன் அறிவுறுதல்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கையறு நிலை

(தாயைக் காண ஏகலைவன் வருதல்)

தாயார்:ஏகலைவா! வேட்டைக்குச் சென்றாயே... என்னவாயிற்று? 

ஏகலைவன்:தாயே... இன்றும் வெற்றி கிட்டவில்லை. நரிகளை எங்களால் கொல்லவே முடியவில்லை. அவற்றைக் கொல்ல இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ... தெரியவில்லை.

தாயார்:வருத்தப்படாதே... ஏகலைவா... உன் தந்தை இருந்திருந்தால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சிறு வயதிலேயே தலைமை பொறுப்பை ஏற்கும் நிலை. இன்னும் சற்று முயன்று பார்.

ஏகலைவன்:இன்று சென்றதே நான்காவது தடவை. அடுத்த முறையாவது அந்த நரிகளைக் கொல்லாமல் விடக்கூடாது. நிறைய விலங்குகளையும், மனிதர்களையும் அது கொன்றிருக்கிறது. காட்டிலே இருப்பவர்க்கு பெரும் தலைவலியாகத்தான் இருக்கிறது.

தாயார்:இனிமேல் வேட்டைக்குச் செல்லும்போது, சற்று அதிக நாட்களுக்குச் செல்லும்படி பார்த்துக் கொள். அந்த நாட்களிலேயே நரிகளின் போக்கை கவனி. பிறகு உன் முழுத் திறனையும் காட்டி அந்த நரிகளைக் கொன்று வா. நீ வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

ஏகலைவன்:நன்றி தாயே. இதுவரை நீங்கள் சொன்னது போல் செய்து பல வெற்றிகள் பெற்று இருக்கிறேன். அது போல இந்த நரிகளையும் கொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது வந்து விட்டது. அடுத்து வேட்டைக்குச் செல்லும் போது வெற்றியுடன் திரும்புவேன். இது நிச்சயம்.

தாயார்            :நல்லது ஏகலைவா... இப்போது நீ களைப்புடன் இருக்கிறாய். வா... சற்று உணவு உண்டு, ஓய்வு எடு.

(தாயாரும் ஏகலைவனும் செல்லுதல்)

- காட்சி முடிவு -

 

காட்சி 2

 

உறுப்பினர்கள் : துரோணர், அசுவத்தாமன், அர்சுனன் மற்றும் மாணவர்கள்.

வேளை: காலைவேளை

இடம் : துரோணரின் ஆசிரமம்

 

காட்சியின் முக்கிய வசனம்:

உங்கள் சபதத்தை நான் நிறைவேற்றுக்கிறேன். கவலைப்படாதீர்கள்

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

கற்றலில் ஆர்வம்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

குருவின் ஆசையை நிறைவேற்றும் உணர்வு

 

(துரோணர் மாணவர்களுக்கு பாடம் நடத்த வருதல். மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருத்தல்; துரோணரைக் கண்டதும் மாணவர்கள்எழுந்து நின்றல்)

மாணவர்கள்:(யாவரும் ஒரே குரலில்) வணக்கம் குருவே.

துரோணர்:உட்காருங்கள்.

                        (அசுவத்தாமன் சொல்லச் சொல்ல)

மாணவர்கள்:தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

துரோணர்:இன்றைய பாடத்தை ஆரம்பிக்கலாமா?

மாணவர்கள்:(யாவரும் ஒரே குரலில்) ஆகட்டும் குருவே… (அனைவரும் அமர்தல்)

துரோணர்:இன்று நான் உங்களையெல்லாம் கேள்விகள் கேட்கப் போகிறேன். இதுவரை நான் பல விஷயங்களை உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறேன். அவற்றை நினைவுபடுத்திக் கொண்டு பதில் சொல்லுங்கள்.

மாணவர்கள்:ஆகட்டும் குருவே.

துரோணர்:நாம் எப்போது போர் செய்ய வேண்டும்?

மாணவன்1 : நமக்கும், மக்களுக்கும் யாராவது அடுத்த நாட்டவர் அநீதி செய்யும் போது போர் செய்ய வேண்டும்.

துரோணர்:காரணமில்லாமல் மண்ணாசை கொண்டு போர் செய்யலாமா?

மாணவன்1:கூடாது.

துரோணர்:போர் செய்யும் காலம் என்ன?

மாணவன்2 : காலை சூரியன் உதித்த பின்பு, மாலை சூரியன் மறையும் முன்பு தான் போர் செய்ய வேண்டும்.

துரோணர்:போருக்கான பயிற்சி எப்போது செய்ய வேண்டும்?

மாணவன்3  : போர் வீரனாய் இருப்பவன் தினமும் பயிற்சி செய்ய வேண்டும். போர் மூளும் போது எதற்குமே நேரம் இருக்காது. அதனால் பயிற்சி செய்வதோடு இல்லாமல் ஆயுதங்களையும் எப்போதும் தயாராய் வைத்திருக்க வேண்டும்.

துரோணர்:போர் வீரனாய் இல்லாதவர் பயிற்சி?

மாணவன்2 : போர் வீரனாய் இல்லாதவர், போர் செய்யத் தகுதியானவர் என்றால், எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் பயிற்சி செய்யலாம்.

துரோணர்:நல்ல பண்புகளை எப்போது கற்க வேண்டும்?

மாணவன்:சிறு வயதிலிருந்தே நல்ல பண்புகளைக் கற்க வேண்டும்.

துரோணர்:நற்பண்புகள் சிலவற்றைக் கூறுக.

மாணவன்4 : உண்மையே பேசுதல்,

                        பெரியோரை மதித்தல்,

                        இன்னார் செய்தாரை ஒருத்தல்,

                        ஈதல் இசைபட வாழ்தல்,

                        கூடி வாழ்தல்

                        உறுதியான மனம் பெறல்,

                        நன்றி மறவாமை

                        புறங் கூறாமை

                        உள்ளன்று வைத்து, புறமொன்று பேசாமை,

                        சோம்பித் திரியாமை

                        கோபம் கொள்ளாமை.

 

துரோணர்:நன்று. மிக நன்று. உங்களிடம் ஒரு வேண்டுகோள். உங்கள் பயிற்சி முடிந்ததும், எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். யார் செய்வீர்கள்?

(மாணவர்களிடம் அமைதி. அர்சுனன் சிறிது நேரம் கழித்து, அனைவரது முகத்தையும் பார்த்து விட்டு.)

அர்சுனன்:குருவே... நான் செய்கிறேன். ஆணை இடுங்கள். செய்து முடிக்கிறேன்.

துரோணர்:நல்லது அர்சுனா! மிக்க மகிழ்ச்சி.

            (மாணவர்கள் தங்களுக்குள்ளே 'என்னவாய் இருக்கும்' என்று மெதுவாய் பேசிக் கொள்ளுதல்)

துரோணர்:இன்று நீங்கள் அனைவரும் நேற்று கற்றுத் தந்த வித்தைகளை அசுவத்தாமனிடம் செய்து காட்டுங்கள். (அசுவத்தாமனைப் பார்த்து)அசுவத்தாமா... அனைவரையும் அழைத்துச் செல்.

அசுவத்தாமா:ஆகட்டும் தந்தையே.

                        (அனைவரும் போதல்)

துரோணர்:அர்சுனா. நீ நில். உன்னிடம் தனியாக பேச வேண்டும்.

அர்சுனன்:ஆகட்டும் குருவே.

                        (அனைவரும் சென்ற பிறகு)

துரோணர்:(அர்சுனின் தோள்களைத் தட்டி)வா அர்சுனா... உன் தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது.

அர்சுனன்:நான் என்ன செய்ய வேண்டும் குருவே?

துரோணர்:அர்சுனா... நான் முன்பு ஒரு முறை காட்டிலே திரிந்து கொண்டிருந்த துருபத நாட்டின் அரசனுக்கு விற்பயிற்சி தந்தேன். அந்தப் பயிற்சியை வைத்துக் கொண்டு, நாட்டை எதிரியிடமிருந்து போர் செய்து பெற்றான். பின்பு நான் அவனைக் காண அரசவைக்குச் சென்ற போது, துருபதன் மிகவும் திமிருடன், 'எந்த நாட்டு அரசனாவது உன்னைப் போன்ற சாதாரண மனிதனுடன் பேசுவானா?' என்று கூறி என்னை கேலி செய்தான். அப்போது நான், 'உன் பேச்சுக்கு பதில் சொல்ல என் மாணவன் ஒருவன் வருவான். உன்னைக் கட்டி இழுத்து வந்து என் காலடியிலே தள்ளுவான்' என்ற சொல்லிவிட்டு வந்தேன். அந்த என் சபதத்தை நீ நிறைவேற்ற வேண்டும்.

அர்சுனன்:அவ்வளவுதானே குருவே... உங்கள் சபதத்தை நான் நிறைவேற்றுக்கிறேன். கவலைப்படாதீர்கள்.

துரோணர்:நல்லது அர்சுனா...

அர்சுனன்:குருவே... என்னுடைய வேண்டுகோள் ஒன்றும் உண்டு. வில் வித்தையிலே என்னை யாரும் தோற்கடிக்க முடியாத வண்ணம் எனக்குப் பயிற்சி கொடுப்பீர்களா?

துரோணர்:சத்தியமாக... எனக்குத் தெரிந்த, என் குரு பரசுராமர் சொல்லிக் கொடுத்த அத்தனை வித்தைகளையும் உனக்கு மட்டுமே சொல்லிக் கொடுக்கிறேன் போதுமா?

அர்சுனன்:நன்றி குருவே.

துரோணர்:வில் வித்தையை நன்கு கற்று, சபதத்தை நிறைவேற்ற என் வாழ்த்துக்கள். (அர்சுனன் தோள்களை பிடித்துக் கொண்டு) வா... மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

                        (துரோணரும், அர்சுனனும் செல்லுதல்)

- காட்சி முடிவு -

 

காட்சி 3

உறுப்பினர்கள் : ஏகலைவன், அவனது தாயார்

வேளை : மாலைவேளை

இடம் : ஏகலைவன் குடில்

 

காட்சியின் முக்கிய வசனம்:

நீ யாரிடமாவது வில்வித்தையைக் கற்க வேண்டும்

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

நன்கு வேட்டையாட முடியவில்லை என்ற கவலை

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கவலை

(ஏகலைவன் வருத்தத்துடன் இருத்தல்)

தாயார்            :ஏகலைவா... ஏகலைவா...

                        (இன்னும் ஆழ்ந்த யோசனையுடன் இருப்பது கண்டு, அவனது அருகில் சென்று)

தாயார்            :ஏகலைவா... என்ன இது பலத்த யோசனை?

ஏகலைவன்:தாயே... எல்லாம் நம் மக்களையும் விலங்குகளையும் காப்பது பற்றியே...

தாயார்            :நீ தான் பெரிய வீரனாயிற்றே! அவர்களைக் காப்பதில் உனக்கென்ன பிரச்சினை?

ஏகலைவன்   :நாமோ காடுகளிலே வாழ்கிறோம். நம்மை விலங்குகளிடமிருந்து காக்க, நான் வேட்டைக்குச் செல்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்த அளவு வில் வித்தையை வைத்துக் கொண்டு என்னால் ஓடும் புலி, நரிகளைச் சரியாக குறி பார்த்துக் கொல்ல முடியவில்லை. அதற்காக என்ன செய்வது என்று தான் யோசிக்கிறேன்.

தாயார்            : அப்படியா விஷயம். உன் தந்தை இருந்திருந்தால் உனக்கு பயிற்சி தந்திருப்பார். உனக்கு விற்பயிற்சி தேவை. நீ யாரிடமாவது வில்வித்தையைக் கற்க வேண்டும்.

ஏகலைவன்:விற்பயிற்சியா? யார் எனக்கு சொல்லித் தருவார்கள்?

தாயார்            :நம் நாட்டிலேயே சிறந்த விற்பயிற்சி தருபவர் ஒருவர் இருக்கிறார். அதுவும் அவர் நம் காட்டுக்கு பக்கமாகவே வாழ்கிறார்.

ஏகலைவன்:அப்படியா? தாயே அவர் யார் என்று சொல்லுங்கள். உடனே அவரிடம் சென்று வில் வித்தை கற்று வருகிறேன்.

தாயார்            :அவசரப்படாதே ஏகலைவா... அவர் மன்னர் மகன்களுக்கு வில் வித்தை கற்றுத் தருபவர். அவர் உன்னைத் தன் சீடனாய் ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே.

ஏகலைவன்:மன்னர் மகன்களுக்கு பயிற்சி கொடுப்பவர் என்றால், அவரைவிட எனக்குச் சிறந்த குரு வேறு யார் கிடைப்பார்கள்? நான் எப்படியாவது அவரது சீடனாய் விரும்புகிறேன் தாயே. அதற்கான வழியைக் கூறுங்கள் தாயே.

தாயார்            :பொறுமையாக இரு. துரோணாச்சாரியார் சாதாரண மனிதர் அல்ல. மாமுனி பரத்வாஜரின் மகன். பரசுராமரின் சீடர். பேரரசர் போற்றும் மாவீரர். ஆணவத்திற்கு எதிரி. பணிவுக்கு பணிபவர். அதனால், நல்ல சமயமாக பார்த்து, அவரிடம் சென்று, பணிவுடன், சீடனாய்ச் சேர விரும்புவதைச் சொல். பிறகு அவர் முடிவு செய்து சொல்லட்டும்.

ஏகலைவன்:நன்றி தாயே. இன்றே நான் அவர் தங்கி இருக்கும் இடத்திற்குச் சென்று, கொடுக்கும் பயிற்சிகளைப் பார்க்கிறேன். பிறகு சமயம் வரும்போது என் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.

தாயார்            :ஏகலைவா! நல்லது நடக்க என் வாழ்த்துக்கள்.

(இருவரும் செல்லுதல்)

- காட்சி முடிவு -

 

காட்சி 4

உறுப்பினர்கள் : துரோணர், ஏகலைவன்

வேளை: மதிய வேளை

இடம் : துரோணரின் ஆசிரமம்

 

காட்சியின் முக்கிய வசனம்:

வில் வித்தையைத் தங்களிடம் கற்ற விரும்புகின்றேன்

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

அறிவார்ந்த குரு, பணிவான சீடன்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

குருவிடம் வேண்டுதல்

 

(துரோணர் சற்று ஓய்வாய் அமர்ந்திருக்கும் போது, ஏகலைவனின் பிரவேசம்)

துரோணர்:யாரப்பா நீ? இந்த காட்டிலே இருப்பவனா?

(ஏகலைவன் துரோணரின் கால்களிலே விழுகிறான். துரோணர் எழுந்து வந்து, அவனை தொட்டுத் தூக்கி...)

துரோணர்:ஏனப்பா... நீ என் காலிலே விழுந்து வணங்குகிறாய்?

ஏகலைவன்:சுவாமி. நான் ஏகலைவன். நிஷித நாட்டு மன்னரான ஹரண்யதுனுவின் மகன். இந்தக் காட்டிலே வாழ்பவன். காட்டிலே இருப்போரை பாதுகாக்க வேண்டி, அவர்கள் என்னைத் தலைவனாய் செய்திருக்கிறார்கள்.

துரோணர்:மிகவும் நல்லது. உன்னுடை பணிவன்பு எனக்கு பிடித்திருக்கிறது. நீ வந்த காரணம்.

ஏகலைவன்:நான் இப்போது சொன்னது போல், மக்களைக் காக்க நான் அடிக்கடி வேட்டைக்குச் செல்ல வேண்டும். என் சிறு வயதிலேயே தந்தை போரிலே இறந்து விட்டார். எனக்கு வேட்டையாட யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. எனக்குப் போதிய பயிற்சி இல்லாததால், நான் வேட்டைக்குச் செல்லும்போது, விரைந்து ஓடும் நரிகளையும், புலிகளையும் கொல்ல முடிவதில்லை. அவை தப்பி ஓடி விடுகின்றன.

துரோணர்:அவற்றைக் கொல்ல என் உதவி தேவையா?

ஏகலைவன்:ஆம் சுவாமி. என்னுடைய விருப்பம் என்னவென்றால், நன்கு வில் வித்தையைக் கற்று, சிங்கம், புலி, நரிகளைக் கொன்று சிறு விலங்குகளைக் காப்பாற்றி, மக்களை பயமின்றி வாழச் செய்ய வேண்டும். அந்த வில் வித்தையைத் தங்களிடம் கற்ற விரும்புகின்றேன்.

துரோணர்:அப்படியா? மிக்க மகிழ்ச்சி. இப்போது முடியாது. சமயம் வரும் போது கற்றுத் தருகிறேன்.

ஏகலைவன்:சமயம் வரும்வரை காக்க வேண்டுமென்றால், அந்தச் சமயம் வராமலும் போகலாம். அதனால் சுவாமி... இப்போதே தயவு செய்து என்னை சீடனாய் ஏற்க வேண்டுகிறேன்.

துரோணர்:ஏகலைவா... உனக்கு மன வருத்தத்தைத் தருவதற்கு மன்னிக்கவும். உனக்கே தெரியும். மன்னர் மகன்கள் இப்போது என்னிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். எனக்கு உன்னைக் கவனிக்க நேரம் கிடையாது. நீயோ வேடன். வில் வித்தை உன் இரத்தத்திலே ஊறிய ஒன்று. அதனால் ஒரு கணம் செய்யும் பணியைமனதிலே நினைத்துக் கொண்டு, மன உறுதியுடனும் ஆர்வத்துடனும் பயிற்சி செய். உன்னை என் சீடனாகவே ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு என் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.

ஏகலைவன்:அப்படியே செய்கிறேன் குருவே. ஆனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது?

துரோணர்:என்னை மனதில் நினைத்தவாறு சந்தேகத்தை அசை போடு. தானாய் உனக்கு விளக்கம் கிடைக்கும். நீ நன்கு வில் வித்தையைக் கற்க என் ஆசிகள்.

ஏகலைவன்:நன்றி குருவே. இன்றே என் பயிற்சியை ஆரம்பிக்கிறேன்.

(ஏகலைவன் மறுபடியும் குருவின் கால்களிலே விழுந்து வணங்குதல். குரு அவனைத் தொட்டு தூக்கி).

துரோணர்:சென்று வா ஏகலைவா... வெற்றி உன் பக்கமே.

(ஏகலைவன் செல்லுதல். துரோணர் அமர்தல்)

- காட்சி முடிவு -

 

காட்சி 5

உறுப்பினர்கள் : ஏகலைவன், ஏகலைவனின் தோழன்

வேளை: மதிய வேளை

இடம் : நிஷித நாட்டு காட்டுப் பகுதி

 

காட்சியின் முக்கிய வசனம்:

குருவே இதற்கு எப்படி அம்பு எய்ய வேண்டும்?

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

வில் வித்தையைக் கற்றல்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

பொறுமையுடன் யோசிக்கும் தன்மை

 

சூழல் : துரோணரின்சிலை. கால்களிலே பழங்கள்.

(ஏகலைவன் சிலையின் கால்களிலே விழுந்து வணங்குதல். விற்பயிற்சி செய்ய ஆயத்தம். உடற்பயிற்சி செய்தல். பிறகு அம்பை எடுத்து, வில்லிலே கோர்த்து ஏய்து பார்த்தல். குறி தவறியதும்)

ஏகலைவன்:அடடா... குறி தப்பி விட்டதே. குருவே இதற்கு எப்படி அம்பு எய்ய வேண்டும்?

(குருவின் சிலைலயைப் பார்த்தல். பின்பு சிறிது தியானத்தில் அமர்ந்து பார்த்தல். பிறகு மறுபடியும் குறி பார்த்து அம்பு விடுதல்)

ஏகலைவன்:இந்த முறை குறி தப்பவில்லை. வெற்றிவெற்றி

                        (வெவ்வேறு விதமாக அம்பு விட்டு பார்த்தல்)

தோழன்:ஏகலைவா... உன்னைக் காண விருந்தினர் வந்திருக்கிறார்களாம். தாயார் அழைத்தார்கள்.

ஏகலைவன்:வருகிறேன் என்று சொல்

                        (தோழன் சென்றதும், சிறிது நேரம் கழித்து)

ஏகலைவன்:இன்றைய பயிற்சி நன்றாக இருந்தது. குருவுக்கு நன்றி. நாளை வருகிறேன் குருவே.

                        (குருவை வணங்கிவிட்டு ஏகலைவன் செல்லுதல்)

- காட்சி முடிவு -

 

 

 

காட்சி 6

உறுப்பினர்கள் : ஏகலைவன், அர்சுனன், தருமன்

வேளை: மதிய வேளை

இடம் : நிஷித நாட்டு காட்டில் ஒரு பகுதி

 

காட்சியின் முக்கிய வசனம்:

என் மீது சந்தேகமா? என் குருவின் மீது சந்தேகமா?

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

சிறந்த வில்வித்தைக் கண்ட வியப்பு

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கோபம்

 

தருமன்:அர்சுனா... நம்முடைய நாயின் வாயிலே அம்புகளைச் சரமாரியாய்  விட்டவன் மிகப் பெரிய வீரனாய் இருக்க வேண்டும்.

அர்சுனன்:ஆம் அண்ணா. அவன் யாராய் இருக்கும்?

                        (தூரத்தில் நின்று கொண்டு இருக்கும் ஏகலைவனைக் காட்டி)

தருமன்:அதோ... யாரோ ஒரு வேடன் இருக்கிறான். அவனிடம் சென்று கேட்போம்.

அர்சுனன்:வாருங்கள். கேட்டுப் பார்ப்போம்.

தருமன்:வேடனே... யாரோ ஒருவர் எங்கள் நாயின் வாயிலே அம்புகளை விட்டிருக்கிறார்கள். அவர் யாரென்று தெரியுமா?

ஏகலைவன்:அதை விட்டது நான் தான்.

அர்சுனன்:நீயா விட்டது? அவ்வளவு திறமையாக அம்பை விட உனக்கு யார் கற்றுத் தந்தது?

தருமன்:நீ யார்?

ஏகலைவன்:நான் வேடர்களின் தலைவன். ஏகலைவன். எனக்கு வில் வித்தையை துரோணர் கற்றுத் தந்தார்.

அர்சுனன்:உன்னுடைய குரு துரோணரா?

ஏகலைவன்:ஆம்.

அர்சுனன்:இருக்கவே முடியாது. அவர் அரசர்களுக்கு பயிற்சி கொடுப்பவர். உன் போன்ற வேடர்களுக்கு எப்படி பயிற்சி தருவார்?

ஏகலைவன்:அவர் தான் என்னுடைய குரு.

அர்சுனன்:உண்மையாகவோ?

ஏகலைவன்:இதென்ன கேள்வி. என் தந்தை எனக்கு வில் வித்தை கற்றுத் தர உயிரோடு இல்லை. ஆனால் உண்மை பேசவும், பொய்யை எதிர்க்கவும். சொல்லித் தந்திருக்கிறார். என் மீது சந்தேகமா? என் குருவின் மீது சந்தேகமா?

அர்சுனன்:நான் பாண்டு மன்னரின் மகன். என் பெயர் அர்சுனன். துரோணர் எங்களுக்கு குரு. அவர் உன்னைப் போன்ற காட்டுவாசிக்கு கற்றுத் தர மாட்டார். மன்னரும் அவர்களின் மகன்களும் தான் அவருடைய சீடர்கள்.

ஏகலைவன்:என்னுடைய குருவுக்கு இந்த மேலோர் கீழோர் பாகுபாடெல்லாம் கிடையாது. மன்னரா? வேடனா? என்ற கேள்விக்கே இடமில்லை. சீடனுக்கு கற்பதில் ஆர்வமும் விருப்பமும் இருந்தாலே போதும் என்று சொல்வார். குருவுக்கும் சீடன் மேல் ஆர்வம் இருக்க வேண்டும். என்னுடைய குரு துரோணர் எனக்கு நல்லாசிகள் தந்துள்ளார். அதனால் நான் நல்ல வில் வித்தை வீரனாய் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அர்சுனன்:இருக்கவே முடியாது. நீ சொல்வதெல்லாம் பொய். உன்னை நம்ப மாட்டேன். குரு என்னை ஏமாற்ற மாட்டார்.

                        (ஏகலைவன் கோபத்துடன், அர்சுனன் முகத்திற்கு நேரே அம்பினைக் காட்டி)

ஏகலைவன்:உன் வாயை மூடு. என்னுடைய குருவைப் பற்றித் தவறாக எதுவும் பேசினால், நாக்கை ஒட்ட நறுக்கி விடுவேன். ஜாக்கிரதை!

தருமன்          :அர்சுனா... என்ன இது வாதம். பொறுமையாக இரு. இந்த விஷயத்தைப் பற்றி நம் குருவிடமே சென்று கேட்போம். (ஏகலைவனை நோக்கி) அர்சுனன் பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஏகலைவன்:வருகிறேன். குருவைப் பற்றி பேசினால் ஜாக்கிரதை.

                        (ஏகலைவன் ஒரு பக்கம் செல்ல, தருமனும் அர்சுனனும் நடந்து கொண்டே)

அர்சுனன்:அண்ணா... குரு என்னிடம், வில் வித்தையில் என்னைத் தலை சிறந்தவனாய் ஆக்குவேன் என்று சத்தியம் செய்து தந்தார். ஆனால் இன்று எனக்கு இணையாய் இன்னொருவனுக்கும் பயிற்சி தருகிறார் என்றால், என்னால் பொறுக்க முடியவில்லை.

தருமன்          :உண்மை என்னவென்று குருவிடமே சென்று கேட்டு விடலாம். வா போகலாம்.

(இருவரும் செல்லுதல்)

- காட்சி முடிவு -

 

 

 

காட்சி 7

உறுப்பினர்கள் : துரோணர், அர்சுனன், அசுவத்தாமன்

வேளை: மாலைவேளை

இடம் : துரோணரின் ஆசிரமம்

 

காட்சியின் முக்கிய வசனம்:

குரு யாரென்று கேட்டால், உங்கள் பெயரைச் சொல்கிறான். இது எப்படி சாத்தியம்?

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

தன்னைக் காட்டிலும் ஒருவன் சிறந்து இருப்பதைக் கண்டு வெறுப்பு

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

பதற்றம்

 

(துரோணர் அமர்ந்திருக்கும்போது)

அர்சுனன்:(வேகமாக வந்து கொண்டே) குருவே... குருவே...

துரோணர்:அர்சுனா? ஏன் இந்த பதற்றம்?

அர்சுனன்:நேற்று நாங்கள் ஒரு வேடனைச் சந்தித்தோம். அவன் மிகப் பெரிய வில் வித்தை வீரனாய் இருக்கிறான். குரு யாரென்று கேட்டால், உங்கள் பெயரைச் சொல்கிறான். இது எப்படி சாத்தியம்?

துரோணர்:(யோசனையும்) குரு என்று என்னைச் சொன்னானா? அவனை எப்படி மாவீரன் என்று சொல்கிறாய்?-

அர்சுனன்:எங்களது நாயின் வாயிலே சரமாரியான அம்பு விடுவது என்ன சுலபமான காரியமா?

துரோணர்:அப்படியா? மாவீரன் தான்.

அர்சுனர்:குருவே... என்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிறீர்களா?

துரோணர்:உன்னுடைய கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. முதலில் நாம் அந்த வேடனைச் சென்று பார்ப்போம். உண்மை விளங்கும்.

அர்சுணன்:வாருங்கள் இப்போதே போகலாம்.

துரோணர்:அசுவத்தாமா. வேடனுக்கு முதலில் சொல்லி அனுப்பு.

                        (புறப்படுவதற்கும் ஆயத்தம் செய்)

அசுவத்தாமன்          :ஆகட்டும் தந்தையே...

                        (அர்சுனனும் அசுவத்தாமனும் செல்லுதல்)

                        (துரோணர் தனக்குத் தானே)

துரோணர்:அந்த வேடன் ஏகலைவனோ? அடடா என்னுடைய துணையின்றியே வில் வித்தையை கற்று விட்டான் போலிருக்கிறது. அர்சுனனுக்கு இணையான வீரனாய் ஆகி விட்டானே! அவனை எப்படி அர்சுனனுக்கு போட்டியாக வராமல் தடுப்பது? யோசிக்க வேண்டும்

                        (யோசித்துக் கொண்டே செல்லுதல்)

- காட்சி முடிவு -

 

காட்சி 8

உறுப்பினர்கள் : துரோணர், அர்சுனன், அசுவத்தாமன், ஏகலைவன், ஏகவலைனின் தோழன்

வேளை: மாலைவேளை

இடம் : ஏகலைவன் அவை

 

காட்சியின் முக்கிய வசனம்:

உன்னுடைய வலது கை கட்டை விலை எனக்கு தட்சிணையாகக் கொடுக்க முடியுமா?

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

உறுதியுடன் விரலை வெட்டித் தருதல்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

குரு பக்தி

 

(ஏகலைவன் குருவின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருத்தல்)

ஏகலைவன்:(பதட்டத்துடன்) குரு இப்போது வந்திருக்க வேண்டுமே. நண்பா... குரு வரும் வழிகளிலெல்லாம் சுத்தம் செய்து விட்டீர்களா?

தோழன்:செய்து விட்டோம்.

ஏகலைவன்:குருவுக்கு வழி சொல்ல ஆட்களை நிறுத்தியிருக்கிறீர்களா? வழி மாறிவேறு எங்கும் அவர் சென்று விடக் கூடாது.

தோழன்:ஆட்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். குரு சீக்கிரமே வந்து விடுவார்.

                        (துரோணர், அர்சுனன், அசுவத்தாமன் வருதல்)

(குருவைக் கண்டதும் ஏகலைவன் ஓடோடி வந்து அவரது கால்களிலே விழுகிறான். கண்களிலே மகிழ்ச்சி. பிறகு எழுந்து)

ஏகலைவன்:வாருங்கள் குருவே... அனைவரும் வருக. வரும் வழியிலே ஏதும் தொந்தரவு இல்லையே? என்னைக் காண நீஙக்ள் வந்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி தருகிறது.

துரோணர்:எப்படி இருக்கிறாய் ஏகலைவா? பயிற்சி செய்கிறாயா?

ஏகலைவன்:எல்லாம் தங்களது ஆசீர்வாதம் இப்போது நான் வில்வித்தையை நன்கு கற்று விட்டேன். என்னுடைய அம்புகள் குறி தப்புவதே கிடையாது. என்னால் சத்தத்தைக் குறியாக வைத்தும் அம்பு விட முடியும். நான் உங்கள் சிலை முன்னால் வணங்கி அமர்ந்தாலே போதும், எனக்கு வில் வித்தை பற்றிய அனைத்தும்தானே தெரிந்து விடும். எல்லாம் உங்கள் பெருந்தன்மையே.

                        (துரோணர் மகிழ்ச்சியுடன்)

துரோணர்:ஏகலைவா... போதும் போதும். நான் உனக்காக எதுவும் செய்யவில்லை. உன்னுடைய இந்த வார்த்தைகள் உன்னுடைய உயர்ந்த பண்பினைக் காட்டுகிறது. உன்னைப் போன்ற சீடனைப் பெற நானே புண்ணியம் செய்திருக்க வேண்டும். உன்னிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும்.

ஏகலைவன்:என்ன குருவே?

துரோணர்:(யோசனையுடன்) அசுவத்தாமா... நீ நாம் நாளை இங்கிருந்து புறப்படத் தேவையான விஷயங்களை கவனித்து வா.

அசுவத்தாமன்          :ஆகட்டும் தந்தையே.

துரோணர்:(அர்சுனைப் பார்த்து விட்டு, ஏகலைவனை நோக்கி) ஏகலைவா நீ நிறைய கற்று விட்டாய். உன்னுடைய ஆர்வமும், பயிற்சியும் தான் உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறது. உன்னுடைய இந்த மன உறுதி எல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் இருக்கட்டும்.

ஏகலைவன்:நன்றி குருவே. உங்களுடைய இந்த மொழிகளை என் தாய் கேட்டால் மிக்க மகிழ்ச்சி அடைவார். நீங்கள் தான் என்னை ஆசி கொடுத்துபயிற்சியைத் தொடங்கச் சொன்னீர்கள். என்னை உங்களுடைய சீடனாய் ஏற்றுக் கொண்டீர்கள். அப்படி நீங்கள் செய்திரா விட்டால், இன்று நான் எங்கிருப்பேன் என்றே தெரியாது. உங்களுடைய ஆசிகள் என்னை என்றும் நல்ல நிலையில் வைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு குருவே!

துரோணர்:நீ என்னை உன்னுடைய குருவாய் ஏற்றுக் கொள்வதானால், எனக்கு குருதட்சிணைத் தர வேண்டும். கொடுக்க முடியுமா உன்னால்? யோசனை செய்து கொள்.

ஏகலைவன்:இதில் யோசிக்க என்ன இருக்கிறது. குருவே? எப்படி என் தாய், இந்த காடு, இதில் வாழ்பவர்கள் உண்மையோ அப்படியே நான் உங்கள் சீடன், நீங்கள் என் குரு என்பதும் உண்மை. உங்களுக்கு தட்சிணையாக என்ன வேண்டும் என்று கேளுங்கள். உயிரையும் தர சித்தமாய் இருக்கிறேன்.

துரோணர்:(சிறு நேர மௌனத்திற்குப் பிறகு) உன்னுடைய சாதனை மகத்தானது. எந்த குருவும் உன்னைப் போன்ற சீடனைப் பெறுவதில் பெருமிதம் அடைவார்கள். ஆனால் மகனே! இப்போது என்னுடைய சத்தியத்தைக் காக்க வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.

ஏகலைவன்:என்ன சொல்கிறீர்கள் குருவே? உங்கள் சத்தியத்திற்குச் சோதனையா? அது நடக்கக் கூடாது. அதுவும் நான் இந்த வில் வித்தையைக் கற்றதாலா? குருவே... உங்கள் வருத்தத்தைப் போக்கும் வழியைச் சொல்லுங்கள். என்னுடைய அனைத்தும் உங்களுடையது.

துரோணர்:ஏகலைவா... உன்னிடமிருந்து ஒரு பெரிய தியாகத்தை எதிர்பார்க்கிறேன். அது தான் என் சத்தியத்தைக் காக்கும்.

ஏகலைவன்:ஆணையிடுங்கள் குருவே.

துரோணர்:உன்னுடைய வலது கை கட்டை விலை எனக்கு தட்சிணையாகக் கொடுக்க முடியுமா?

(துரோணரைப் பார்த்து விட்டு, ஏகலைவன் எழுந்து சென்று கட்டை விரலை இடது கைகளால் அம்பினைக் கொண்டு வெட்டி எடுத்து, தட்டிலே வைத்துக் கொடுக்கிறான். அர்சுனன் நடப்பதை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென விழிப்புற்று)

அர்சுனன்:ஏகலைவா... என்ன காரியம் செய்தாய்? நீ எனக்கு நிகராய் வந்து விட்டாய் என்ற கவலை எனக்கு இருந்தது. ஆனால் அதற்காக, குரு கேட்டார் என்று, வில்லுக்கு முக்கிய அங்கமாக விளங்கும் வலக்கை கட்டை விரலை இப்படி வெட்டலாமா?

துரோணர்:அர்சுனா... ஏகலைவன் மிகச் சிறந்தவன். அவனைப் போன்ற சீடனைப் பெற நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஏகலைவா... உனக்கு என் ஆசிகள்.

அர்சுனன்:இருந்தாலும் குருவே... நீங்கள் செய்தது...

துரோணர்:அர்சுனா... வந்த காரியம் முடிந்து விட்டது. நாம் செல்லலாம் ஏகலைவா... என்னுடைய இந்தச் செயலுக்கு மன்னிக்கவும். நாங்கள் சென்று வருகிறோம்.

ஏகலைவன்:குருவே... நீங்கள் மன வருத்தம் கொள்ள வேண்டாம். எல்லாம் ஆண்டவன் செயல். என் குருவுக்கு அவரது சத்தியத்தைக் காக்க, எனக்கு வாய்ப்பு கிட்டியதற்கு மகிழ்ச்சி. குருவே... வருத்தப்படாமல் மகிழ்ச்சியுடன் சென்று வாருங்கள்.

அர்சுனன்:ஏகலைவா... உன்னுடைய துணிச்சல் யாருக்கும் வராது. என்னுடைய பாராட்டுக்கள். சென்று வருகிறோம்.

ஏகலைவன்:நல்லது அர்சுனா.

                        (ஏகலைவன் கைகைய பிடித்துக் கொண்டு சிறிது நேரம் நிற்றல்)

- காட்சி முடிவு -

 

காட்சி 9

உறுப்பினர்கள் : ஏகலைவன், அவனது தாயார்

வேளை: மாலைவேளை

இடம் : ஏகலைவன் அவை

 

காட்சியின் முக்கிய வசனம்:

இன்னொரு கை எதற்காக இருக்கிறது. இடது கையால் வில் விடும் வித்தையைக் கற்கும் திறனை எனக்கு குரு தருவார்

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

மன உறுதி

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

தெளிந்த அறிவு

 

(ஏகலைவனின் தாயார் ஓடி வருதல், ஏகலைவனின் கையைப் பற்றிக் கொண்டு)

தாயார்:ஏகலைவா... என்ன இது? என்ன காரியம் செய்தாய்?

ஏகலைவன்:தாயே... மானசீக குருவாய் இருந்து எனக்கு வில் வித்தையைக் கற்றுத் தந்த துரோணருக்கு, அவர் கேட்ட குருதட்சிணையைத் தானே கொடுத்தேன்.

தாயார்            :நீ செய்த காரியத்திற்கு, என் பெற்ற பாசம் வருந்துகிறது. ஆனால் வளர்த்த பாசம் பெருமைப்படுகிறது. இனி இந்தக் கட்டை விரல் இல்லாமல் எப்படி வில் வித்தையைக் காட்டுவாய்?

ஏகலைவன்:தாயே! இன்னொரு கை எதற்காக இருக்கிறது. இடது கையால் வில் விடும் வித்தையைக் கற்கும் திறனை எனக்கு குரு தருவார் என்று நம்புகிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்.

தாயார்:அப்பப்பா... எப்படிப்பட்ட குரு பக்தி? எப்படிப்பட்ட மன உறுதி. உன்னுடைய மன உறுதி யாருக்கும் வராது. அதற்கு மேலே, குருவுக்கு மரியாதை செய்வதில் உன்னை மிஞ்சி யாருமே இருக்க முடியாது. ஏகலைவா... உனக்கு என்னுடைய ஆசிகள்.

ஏகலைவன்:நன்றி தாயே...

- காட்சி முடிவு -