4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

நடிகர் திலகத்தின் நவராத்திரியும் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலும் - கவியரசன்

 

நடிகர் திலகத்தின் நவராத்திரியும் தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலும்

கவியரசன்

மாத்தூர்,

சென்னை - 600 068.

தொடர்பு எண் 7358020315

 

நடிகர் திலகத்தின் 100-வது படம் நவராத்திரி. இயக்குனரின் முகவுரைப்படி, 1.அற்புதம், 2.பயம், 3.கருணை, 4.கோபம், 5.சாந்தம், 6.அருவருப்பு, 7.சிங்காரம், 8.வீரம், 9.ஆனந்தம் ஆகிய நவரசங்களையும் பிரதிபலிக்கும் ஒன்பது வேடங்களையும் சிவாஜி கணேசன் ஏற்றிருந்தார்.

வடநூலார் வகுத்தளித்த நவரசம் என்ற வகைப்பாட்டிலிருந்து நம் தொல்காப்பியர் முற்றிலும் வேறுபடுகிறார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப (1197) என்று தொல்காப்பியம் ஐம்புலன்களால் உய்த்துணரும் உள்ளத்து உணர்வுகளை எண்வகை மெய்ப்பாடுகளாகப் பிரிக்கிறது.

ஒன்பது குணங்கள் என்று இயக்குனர் சொல்வதற்கும் எண்வகை மெய்ப்பாடுகள் என்று தொல்காப்பியப் பேராசான் வகுத்தளித்திருப்பதற்கும் வேறுபாடு இங்கிருந்து துவங்குகிறது.

நவராத்திரியின் ஒன்பது வேடங்களில் தொல்லாசானின் எண்வகை மெய்ப்பாடுகளின் தாக்கத்தைக் காணலாம். நமது இமயத்தின் நடிப்பில் இலக்கிய நயம் பாராட்டி இலக்கணச் சுவையை திகட்டத் திகட்ட பருகலாம்.

1.அற்புதராஜ் மனைவியை இழந்தவர்; மகளின் நல்வாழ்வுக்காக மறுமணம் செய்து கொள்ளாமல் மொத்த அன்பையும் அவள் மீது பொழிந்து வாழ்ந்து வருபவர். கதாநாயகி நளினாவால் பிறரைவிட மேம்பட்டவராக, சிறப்பித்து கூறப்பட்டு,

கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்

சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே (1203) என்ற தொல்காப்பியர் கூற்றுப்படி, பெருமிதச் சுவைக்கு பேர்போனவராகிறார்.

2.அடுத்து வரும் வேடம், தன்னை கோழை என்றும் பயந்த சுபாவம் உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டாலும் இந்த பாத்திரத்துக்கான காட்சியமைப்பு, கதாநாயகி உட்பட பார்வையாளர்களையும் அச்சுறுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் உச்சகட்ட காட்சியில் அஞ்சியபடியே திருமண மண்டபத்துக்குள் நுழைந்து அச்சச் சுவைக்கு அடையாளமாகிறது அவ்வேடம். அது தொல்காப்பியர் கூறும் 'பிணங்கல் சாலா அச்சம்'(1202) என்ற சிறிதும் வேறுபடாது பிறரால் தோன்றும் அச்சம் என்பதாகும்.

3.மனநல மருத்துவர் கருணாகரனாக வந்து தொல்காப்பியர் கூறும் உலக வழக்கை பெரிதும் தழுவிய அருளல்(1206) என்ற மெய்ப்பாட்டை, அருளுடைமையைக் காட்டும் கனிவைக் காட்டுகிறார் சிவாஜி.

முந்தைய எண்வகை மெய்ப்பாடுகளும் நாடக வழக்கை ஒட்டியன. அவற்றில் இரண்டை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பார்க்க இருக்கிறோம்.

4.ஆணவக் கொலைக்கு எதிரான அண்ணனின் கோபம்

உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே (1204) என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கு விளக்கமாக அமைகிறது.

5.சாந்தம் என்ற வடநூலார் வகுத்தளித்த நவரசங்களில் ஒன்று தொல்காப்பியரின் எண்வகை மெய்ப்பாட்டு பட்டியலில் இல்லை. உலக வழக்கிற்குண்டான நடுவுநிலை(1206) என்ற பெயரில் அமைந்துள்ளது. ஆனாலும் நமது சாந்தப்பன் வாயிலாக வெளிவருவது நகைச்சுவை உணர்வு தான்.

எள்ளல் இளமை பேதைமை மடன் என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்ப (1198) என்ற நூற்பாவின் படி, பூசாரியால் ஏமாற்றப்படும் சாந்தப்பனின் பேதைமை நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

6.மூப்பே பிணியே வருத்தம் மென்மையோடு யாப்புற வந்த இளிவரல் நான்கே (1200) என்ற நூற்பாவின் படி இளிவரல், அதாவது இகழப்படுதல் தொழுநோயாளியான முதியவர் வேடத்துக்கு பொருந்துகிறது. அதோடு

இளிவே இழவே அசைவே வறுமை என

விளிவில் கொள்கை அழுகை நான்கே (1199) என அவலச்சுவைக்கும் பொருந்திப் போகிறது.

7.சத்தியவான் சிங்காரம் என்ற தெருக்கூத்துக் கலைஞர் வேடம் நகைச்சுவை உணர்வைத் தருவது மட்டுமின்றி, புதுமைக்கலையான வெண்திரையில் தெருக்கூத்துக் கலைவடிவத்தை நிகழ்த்தி,

புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே (1201) என்ற பாவுக்கும் பாடமாகிறது.

8.காவல்துறை அதிகாரி வீரப்பன் தறுகண்(1203) என்ற சொல்லுக்கு பொருளாக, அஞ்சத்தகும் எதற்கும் அஞ்சாத ஆண்மையுடையவராக பெருமிதச் சுவைக்கு பெருமை சேர்க்கிறார்.

9.செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே (1205) என்ற தொல்காப்பியர் சொற்படி, எட்டு நாட்கள் நீடித்த 'அல்லல் நீத்த உவகை'யாக தலைவன்(ஆனந்தன்)-தலைவி(நளினா)யின் புணர்வான இன்ப நுகர்வு நயம்படவும் சுவைபடவும் நிகழ்கிறது.

இவ்வாறாக நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கணம் தமிழிலக்கணத்துடன் ஒன்றி வரும் சிறப்பினை சொல்ல இதற்கு மேலும் தமிழில் சொற்கள் இல்லை.