4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

“வறீதையா பதிவுகளில் எக்கர்” - ஜா. சஜிகுமார்

 

வறீதையா பதிவுகளில் எக்கர்

ஜா. சஜிகுமார்

(பதிவு எண். 12549)

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்,

தமிழாய்வு மையம்,

நேசமணி  நினைவு கிறித்தவக்கல்லூரி, மார்த்தாண்டம்

ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி – 12.

 

ஆய்வுச்சுருக்கம்

ஆழி சூழ் உலகுஎனும் பதத்திற்கு ஏற்ப உலகின் பெரும்பரப்பு கடலினால் ஆனது. தீபகற்பமான இந்திய தேசமும் தனது மூன்றுபக்க எல்லைகளான கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளைக் கடல் சூழ அமைந்துள்ளது. இந்த எல்லைகளை நூற்றாண்டு காலமாய் பாதுகாப்பது நெய்தல் நில மக்களே ஆவர். மண்காக்கும் மக்களைக் காக்கும் இயற்கை அரண்தான் எக்கர் எனப்படுகிறது. சங்ககால நெய்தல் வாழ்வியலில் முக்கிய பங்கு வகிக்கும் எக்கர் எனும் மணல்மேடுகள் அன்றைய நெய்தல் மக்களின் வாழ்வியலில் இயற்கையான பிணைப்பினைக் கொண்டிருந்தது. மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பும் மனிதர்களைத் தாலாட்டி தூங்க வைப்பது எக்கர் ஆகும். பிடித்துவரும் மீன்களை கருவாடு ஆக்குவதற்காக உலர்த்துவது, மீன்பிடி வலைகளைக் காயப்போடுவது, அதன் பழுதுகளைச் சரிபார்ப்பது ஆகியவை எக்கரில்தான் நடைபெற்றுள்ளன. பனைமர உயரம் மணற்குவியல் அரணாக அமைந்து நெய்தல் நில வாழ்விடங்களையும், அவர்களின் தொழில் உபகரணங்களையும் பாதுகாக்கின்றது என்பது உண்மை.

சங்க இலக்கியங்களான குறுந்தொகை, நற்றிணை, மலைபடுகடாம், புறநானூறு என பல இலக்கியங்கள் எக்கர் மணல்மேடுகளை அடையாளப்படுத்துகின்றன. தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும் இடமாகவும் எக்கர் விளங்கியதை இப்பாடல்கள் மூலமாக கண்டறியலாம். மறைந்த பேராசிரியர் வேதசகாயகுமார் எக்கரை மீள தமிழ் இலக்கியத்திற்குள் கொண்டுவந்தார் எனலாம். அதற்காக அவர் நெய்தல் படைப்பாளி வறீதையாவைப் பயன்படுத்திக்கொண்டார்.  கடல் கொடுஞ்சீற்றம் கொள்ளுங்காலத்தில் சமவெளி மனிதர்களின் விவசாய நிலங்களைக் கூட எக்கர் பாதுகாக்கும். நாகரீக மாற்றத்தினால் இயற்கை அமைத்த அரணான எக்கரை தற்கால சுயநல மனிதன் சுரண்டி அழிக்கிறான் என்பதை சுட்டிக்காட்டும் வறீதையா, எக்கர் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை தனது இலக்கியப் பதிவுகள் மூலம் எடுத்தியம்புகிறார்.

கலைச்சொற்கள் : நெய்தல்வெளி, கழிமுகம், இடுமணல், அரண், வேட்கை

முன்னுரை

சங்க காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த பகுதிகள் ஐவகை நிலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை திணைகளின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும். ஒவ்வொரு திணைசார் மக்களும் மாறுபட்ட வேலைகளையும், கலாச்சாரங்களையும் கொண்டவர்கள். வழிபடும் தெய்வங்கள் கூட திணைகளுக்கு ஏற்ப வேறுபடும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நில மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித்தல் ஆகும். சங்க காலம் முதல் தமிழர்கள் நில அடிப்படையிலே வாழ்வை எதிர்கொள்கின்றனர். நெய்தல் நிலம் என்பது கடற்கரை சார்ந்த நீண்ட பரப்பாகும். ஆறுகள் கடலோடு கலக்குமிடங்களில் சோலைகள் இயற்கையாக அமைந்திருந்தன. எக்கர்எனும் மணல்குன்று நெய்தலின் முக்கியமான அடையாளமாகும். பெரிதாக பேசப்படாத எக்கர் குறித்து வறீதையா சுட்டுவனவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

வறீதையாவும் படைப்புலகும்

            வறீதையா என்ற இயற்பெயர் கொண்ட இவரது தந்தை பெயர் கான்ஸ்தந்தின். தந்தையின் பெயரை தனது பெயருடன் இணைத்து வறீதையா கான்ஸ்தந்தின் என்ற பெயரில் எழுதி வருகிறார். குமரி மாவட்டத்தின் பள்ளந்துறை என்ற மீனவ கிராமத்தில் 15.06.1959 அன்று பிறந்த இவர் பள்ளம் புனித யூதா ஆரம்பப்பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். சீயோன்புரம் எல்.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்துவிட்டு நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவ கல்லூரியில் புதுமுக கல்வியான பி.யு.சி.யும், இளம் அறிவியல் பட்டமும் முடித்தார். விலங்கியல் பாடம் முடித்த இவர் அத்துறை சார்ந்த கல்வியிலும் வல்லுநராகத் திகழ்ந்தார்.

            தனது முதுநிலைப் பட்டப் படிப்பையும், இளம் முனைவர் ஆய்வுப்படிப்பையும் தொடர்ந்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முடித்தார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தூத்தூர் புனித யூதா கல்லூரியில் விலங்கியல் துறைப் பேராசிரியராக 1982ஆம் ஆண்டுமுதல்பணிபுரிந்து துறைத்தலைவராகி ஓய்வு பெற்றார்.

            குமரிமண்ணின் நெய்தல்வெளியை எழுத்துக்கு கொண்டு வந்தவர்களில் முதன்மையானவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் நெய்தல்  நில மக்கள் குறித்தும், நெய்தல் நிலம் குறித்தும் கவிதை மற்றும் சிறுகதைகளுடன் பல கட்டுரைகளும் எழுதி வருகிறார். தமிழகக் கடற்கரைகள் முழுவதும் பயணித்து தகவல்கள் சேகரித்து பல எதார்த்தபூர்வமானகட்டுரைகள் எழுதியுள்ளார்.

            வறீதையாவின் படைப்புகள் நெய்தல் நில மக்களின் வாழ்வியலைத் துல்லியமாக வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. நெய்தல் நில மக்களின் வாழ்வியலில் மதம் முக்கிய பங்காற்றுகிறது என்பதுணர்ந்த வறீதையா திருச்சபை அரசியல் எங்ஙனம் அடித்தள மக்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை தைரியமாக பல கட்டுரைகளில் விவரித்துள்ளார்.

             கடற்கரைக் சூழியலை முன்வைத்து அதிகம் எழுதி இருக்கும் இவர் நெய்தல் சுவடுகள்என்ற நூலின் வாயிலாக 2005ஆம் ஆண்டு தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் ஆனார். 2006ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஆழிப்பேரிடருக்குப்பின்’, 2012ஆம் ஆண்டு கூஜா நகரம்என்ற கவிதைத் தொகுப்பை நெய்தல் வெளி பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அதே வருடம் நெய்தல் வெளியிட்ட கொம்பன் சுறாசிறுகதைத் தொகுப்பு, 2017ல் தடாகம் வெளியிட்ட மூதாய் மரம்’, 2017ல் கடல்வெளி வெளியிட்ட வேளம்ஆகியவை இவர் எழுதிய நூல்களில் சில. 25 ற்கும் மேற்பட்ட நூல்களும், ஆறு சிற்றேடுகளும் எழுதி இருக்கும் இவர் மீனவர் வாழ்வியல் குறித்து வெகுஜன இதழ்கள் பலவற்றில் எழுதி வருகிறார். இவர் சமீப காலத்தில்தி இந்துஇதழில் கடலம்மா கண்ணு பேசறேன்என்ற தலைப்பில் தொடர் எழுதி வந்தார்.

            கடல்சார்ந்த வாழ்வியல் தன்மைகளைத் தனது படைப்புகளில் வெளிப்படுத்திய வறீதையாகடற்கரைச் சூழியல், வள அரசியல் மற்றும் மீனவர் வாழ்வியல் தளங்களில் 30கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகள் பன்னாட்டு மற்றும் தேசிய ஏடுகளில் எழுதியுள்ளார். சிற்றிதழ்களில் 70 கும் மேற்பட்ட கட்டுரைகள் படைத்துள்ளார். ஓர்மத்திரகள்எனும் நாவலை மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

வறீதையா கான்ஸ்தந்தின் புதுதில்லி அயாச்சேயின் சிறந்த கல்லூரிக் கல்வியாளருக்கான தேசிய விருதும்(2009), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கட்டுரை நூலுக்கான பரிசை 2006ஆம் ஆண்டும் பெற்றுள்ளார். நெய்தல் மக்களின் வாழ்வியல் பரிமாணங்களைத் தொடர்ந்து தனது படைப்புகளின் மூலம் வெளிக்கொணர்ந்து வருகிறார்.

எக்கர்

எக்கர் எனப்படும் சொல் சங்க இலக்கியத் தமிழ் ஆகும். எக்கர் எனப்படுவது கடற்கரைகளில் சுழன்றடிக்கும் காற்று உருவாக்கும் மணல் மேடு ஆகும். இது கடற்கரை மக்களின் குடியிருப்புகள் மற்றும் மீன்பிடித்தொழில் பொருட்களை பாதுகாக்கும் மணல் அரணாகவும் காணப்படுகிறது. பொதுவாக ஆறு கடலுடன் கலக்கும் முகத்துவாரம் அல்லது கழிமுகம் எனச் சொல்லப்படும் இடங்களில் கடல் அலைகளும் ஆற்றுநீர் மோதலினால் மணற்திட்டுகளும் உருவாகும். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையிலும் மேற்குக் கடற்கரையிலும் மாறுபட்ட காரணங்களால் எக்கர் மணல்மேடுகள் உருவாகின்றன. தமிழகம் சார்ந்த கிழக்குக் கடற்கரையில் மேல்காற்று மணலை குவிக்கிறது. ஆனால் அரபிக்கடலோரம் வரும் மேற்குக் கரையில் காற்றை விட அதிகமாக பெரும் கடல் அலைகளே மணலைக் குவிக்கின்றது என்கிறார் வறீதையா கான்ஸ்தந்தின். எக்கர் இடுமணல் அதாவது குவிக்கப்படும் மணல் எனும் பொருளைக் குறிப்பதாகும். இதற்கு ஆதாரமாக அற்புதமான குறுந்தொகைப் பாடல் வரிகளைக் காணலாம். பனைமரத்தின் கருக்கை உடைய நெடியமடல் குருத்தோடு மறையுமளவிற்கு காற்றுக் குவித்த மணல்அலைகள் காணப்படும் என்பதைச் சுட்டும் குறுந்தொகைப் பாடலையும் ஆதாரமாகக் கூறுகிறார்.

பனைத் தலைக் கருக்குடை நெடுமடல் குருந்தொடு மாயக்

            கடுவளி தொகுத்த நெடுவெண் குப்பை” (குறுந்தொகை - 372)

கடற்கரையில் நெடிது வளர்ந்து நிற்கும் பனைமரங்களின் கொண்டையில் கருக்கு உடைய நெடுமடல் குருத்துக்களை எட்டும் அளவுக்கு, மாயமான கடுங்காற்று தொகுத்துச் சேர்த்த நெடிய வெண்மணற் குன்று என விளக்கம் தருகிறார் பேராசிரியர் வேதசகாயகுமார். மேலும் நற்றிணை பாடல் வரி ஒன்றும் இதற்கு ஆதாரமாக சொல்லப்படுகிறது.

            முழங்கு திரை கொழி இய மூரி எக்கர்” (நற்றிணை - 15)

முழங்கும் அலைகள் கொண்டு சேர்த்த, பரந்து உயர்ந்த மணல் தேரி,என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எக்கர்குறித்து சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும,; சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி(1927), எக்கர் எனும் சொல்லுக்கு கீழ்க்காணும் பொருள்களைச் சங்க இலக்கியங்களின் வாயிலாகவே தருகின்றது.

1. இடுமணல் எக்கர்மணலிலும் பலரே (மலைபடுகடாம் - 556)

2. மணற்குன்று மட்டு அறல் நல்யாற்று எக்கர் ஏறி’– (புறநானூறு – 177)

இந்த மேற்கோள்களின் மூலமாக நெய்தல்நில மக்கள் பயன்படுத்திய எக்கர் எனும் அழகிய சங்ககால தமிழ் வார்த்தை தமிழ் உலகிற்கு மீண்டும் எடுத்தியம்பப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் எக்கர்

எக்கர்நெய்தல் நில மக்களின் முக்கிய சந்திப்புப் பகுதியாகக் காணப்படுகிறது. நெய்தல் நிலத் தலைவி அவள் தலைவனை எக்கரில்தான் சந்திக்கிறாள். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுத் திரும்பும் அவள் தந்தை கொண்டுவரும் மீன்களைக் கருவாடு ஆக்குவதற்காக எக்கரில்தான் காய வைக்கிறாள். தலைவி மீது காதல்கொண்ட தலைவன் அவளை ரகசியமாகச் சந்திக்க வரும்போது தன் தேரினை எக்கரின் மறைவில் நிறுத்திக்கொண்டுதான் வருகிறான்.மருதநிலம் சார்ந்த சமவெளிப்பகுதிகளில்அறுவடைக்களத்தில் வரும் ஏழைகளுக்கு உழவன் தானம் செய்வதுபோல, நெய்தல் நிலத்திற்கு வரும் ஏழைகளுக்கு பரதவன் கலம் நிறையும்படி மீன்களை வழங்குகின்றான். பின் எக்கர் மணல்மேட்டில் அமைதியாக உறங்குகின்றான். மறுநாளைக் குறித்த கவலை இல்லாத நெய்தல் நிலத்தலைவனுக்கு எக்கர் அமைதியான உறக்கத்தை தருகின்றது என்பதை இதன் மூலம் காணலாம்.

            பெருங்களம் தொகுத்த உழவர்போல

            இரந்தோர் வறுங்களம் மல்கவீசி

            பாடுபல அமைத்து கொள்ளை சாற்றி

             கோடு உயர் திணிமணல் துஞ்சும் துறைவ               (அகநானூறு – 30)

நெய்தல் கரைகளில் எக்கரின் உருவாக்கம் குறித்தும் குறுந்தொகைப் பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

ஆடரை புதையக் கோடையிட்ட

            அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனை

             குறியவாகுந்     (குறுந்தொகை–248)

கிழக்குக்கடற்கரையில் கோடைக்காலத்தில் உயர்ந்து வளர்ந்து நிற்கும் பனைமரங்களை விட உயரமாக மேல்காற்று கொண்டுவந்து குவிக்கும் எக்கர் மணற்குவியல் காணப்படும் என குறுந்தொகைப் பாடல்கள் வாயிலாக எடுத்துக்கூறும் வறீதையா,அந்த மணற்குவியலில் வந்தடையும் மீனவர்களின் படகுகளில் உள்ள மீன்களை அனைவருக்கும் பகிர்ந்து தருவதை அகநானூறு பாடல் வாயிலாகச் சொல்கிறார்.

மோட்டு மணல் அடைகரைக் கோட்டு மீன் கெண்டி

மணல் கமழ் பாக்கத்து பகுக்கும்

வளம் கெழு தொண்டி” (அகநானூறு -10)

இதன் மூலம் மீன் பகிர்தல் கூட எக்கர் மணல்மேடுகளில் நடந்தன என்பதை அறியலாம். மேலும் சேரநாடு சார்ந்த மேற்குக் கடற்கரை நெய்தல் நிலத்தில் காற்று அல்ல கடல் அலைதான் மணலைக் குவிக்கின்றது என்பதையும் குறுந்தொகைப் பாடல் வாயிலாகவே எடுத்துரைக்கிறார்.

                        பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரை (நற்றிணை – 35)

இவ்வாறாக சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலத்தின் பாதுகாப்பாக அமைந்த எக்கர் மணல்மேடுகளிலான அரண் காணப்பட்டதைச் சுட்டிக்காட்டுகிறார். இந்த எக்கர் மணல்மேடுகள் சங்ககாலந்தொட்டே நெய்தல் மக்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்தது ஆகும். வேலை முடிந்த பின்னர் மக்கள் தங்கள் சோர்வு தீர இம்மண்மேடுகளில் துயில்வதும், அந்திசாயும் மாலைவேளைகளில் குடும்பத்தோடு பொழுதுபோக்குவதும், மீன்பிடி உபகரணங்களை கடல்சீற்றத்திலிருந்து பாதுகாக்கும் களமாகவும் பயன்பட்டதைப் பல சங்கஇலக்கிய பாடல்வாயிலாகவே அறிந்துக்கொள்ளலாம்.

வறீதையா சுட்டும் எக்கர்

எக்கர்நெய்தல் நிலத்தின் மற்றொரு அடையாளம் எனச் சுட்டிக்காட்டும் வறீதையா கான்ஸ்தந்தின். தான் தொகுத்த வேதசகாயகுமாரின் நெய்தல் பதிவுகள் எனும் தொகுப்பிற்கு எக்கர்என்றே பெயரிட்டுள்ளர். இந்த புத்தகம் வெளிவந்த பின்னர்தான் பாடப்புத்தகத்தில் படித்து மறந்த தமிழ் ஆய்வாளர்கள் மனதில் கூட எக்கர்ஆளப்பதிந்தது எனலாம். எக்கர் கடல் சீற்றத்திலிருந்து நெய்தல் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் முக்கிய அரண் எனக்கூறும் வறீதையா,

குன்றத்தன்ன குவவுமண லடைகரை                     (குறுந்தொகை– 236)

குன்றைப் போன்று குவிதலை உடைய மணல் அடைந்த கரை எனும் பொருள்படும் குறுந்தொகைப் பாடலை தனது முக்குவர் - வரலாறு, வாழ்வியல், எதிர்காலம்எனும் தலைப்பில் தொகுத்த புத்தகத்தில் குறிப்பிடும் வறீதையா, எக்கர் பலகாலமாக கடலின் கொடிய சீற்றத்திலிருந்து நெய்தல் மக்களைப் பாதுகாத்தது என்கிறார்.

                        புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்

                        இணரவிழ் புன்னை யெக்கர் நீழ்      (குறுந்தொகை– 299)

என கானலும், எக்கரும் நெய்தலில் இணைந்து காட்சி தருவதை குறுந்தொகைப் பாடல் மூலமாக மீண்டும் சித்திரமாக்குகிறார் வறீதையா. எக்கர் இன்றி நெய்தல் முழுமை பெறாது என்கிறார். பனையை மூடுமளவிற்கு உயர்ந்த மணல்மேடுகளை கிழக்குக் கடற்கரையில் இன்றும் காணமுடியும் என்பதை தனது களஆய்வின் மூலமாக கூறும் வறீதையா, இயற்கை மீது அன்பில்லாத தற்கால மனிதர்கள், தங்கள் சுயநல ஆடம்பர வாழ்விற்காக எக்கர் மணல்மேடுகளைக் கரைத்துக்கொண்டிருக்கிறான். நெய்தல் மக்களின் வாழ்வியலை கடல் அலைகளின் சீற்றத்திலிருந்து பாதுகாத்த மணல்மேடுகளைக் குறித்த உணர்வு சிறிதளவுமில்லை. நெய்தல் தன் ஆரம்பக்கால அடையாளங்களைப் படிப்படியாக இழந்து வருகிறது என வருந்தும் வறீதையா மனிதனின் இயற்கை அழிப்பு வேட்கையால் கிழக்குக் கடற்கரையில் காணும் பனைஉயர எக்கர் மணல்மேடுகளை நாளைய தலைமுறை காண இயலுமோ எனும்ஆதங்கத்தை தனது இலக்கிய படைப்புகளின் மூலமாக சுட்டிக்காட்டி வருந்துகிறார். இதன்மூலமாக நெய்தல் நிலத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் எக்கர் பாதுகாக்கப்படவேண்டும் என்பதையும் வறீதையா வலியுறுத்துகிறார்.

தொகுப்புரை

·         எக்கர் நெய்தல் நிலத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று.

·         நெய்தல்நிலத்தை ஆழிப்பேரலைகளின் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் அரணே எக்கர் ஆகும்.

·         எக்கர் எனும் சொல் சங்கஇலக்கியத்தில் சொல்லப்படும் அழகிய தமிழ் வார்த்தை.

·         எக்கர் என்பதற்கு மணற்குவியல் அல்லது மணல்மேடுகள் என்பது பொருளாகும்.

·         எக்கர் பண்டையக்காலத்தில் நெய்தல் நில மக்களின் மீன்பிடித்தொழிலோடு நெருங்கியத் தொடர்புள்ள பகுதியாகும்.

·         தமிழகம் சார்ந்த கிழக்கு கடற்கரைகளில் சுழன்றடிக்கும் காற்றின் மூலமாகவே எக்கர் உருவாகிறது.

·         கேரளா சார்ந்த மேற்குக் கடற்கரைகளில் கடல் அலைகளின் சீற்றம் மூலமாக எக்கர் உருவாகிறது. 

தற்காலத்தில் மணற்கொள்ளையர்களால் எக்கர் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

கடற்கரைகளின் ஓரமாக நெருங்கிக் காணப்படும் நெய்தல் குடியிருப்புகள் கடல் அலைகளின் தீண்டல் தூரத்திலேயே காணப்படும். கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் காலங்களில் அவர்களின் குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகும் அவலநிலையில் காணப்படும். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை காலங்களில் மக்களின் உயிருக்கும் வீடுகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. எக்கர் மணல்மேடுகள் இதுபோன்ற பேரழிவுத்துயரங்களில் இருந்து மக்களைக் காக்கும் இயற்கை அரணாகும். சங்ககாலம் முதலே நெய்தல்திணையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக எக்கர் விளங்குவதை நாம் இக்கட்டுரையின் மூலமாகக் காணலாம்.. தமிழ் இலக்கிய உலகில் பெரிதாக பேசப்படாத எக்கர் குறித்து தனது தொகுப்புகளின் மூலம் வறீதையா அதன் நெய்தலைக் காக்கும் பரிமாணத்தை மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளார் என்பதை இக்கட்டுரையின் மூலமாகக் காணலாம்.

துணைநூற் பட்டியல்

1.   எக்கர் - வேதசகாயகுமாரின் நெய்தல் பதிவுகள், வறீதையா கான்ஸ்தந்தின், உயிர் எழுத்து   பதிப்பகம், திருச்சி-1, டிசம்பர்-2013.

2.   முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் (தொகுப்பு), வறீதையா கான்ஸ்தந்தின், நெய்தல் வெளி, 2010

3.   ஆழிப் பேரிடருக்குப் பின் (தொகுப்பு), வறீதையா கான்ஸ்தந்தின், காலச்சுவடு, நாகர்கோவில், 2006

4.    சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை-1927

5.   சங்க இலக்கியத்தில் நடைமுறை வாழ்க்கை, இராசாராம் சு.,அழகப்பா பல்கலைக்கழக வெளியீடு, காரைக்குடி-3, முதற்பதிப்பு, மேய்-2007

6.   சங்கத் தமிழர் வாழ்வியல், மு. சண்முகம் பிள்ளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, பதிப்பு - 2004