4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

ஊர் பாசம் - தா. சரவணன்

 

ஊர் பாசம் 

பிழைக்க வந்த

பட்டணத்தில்

எல்லாத்துக்கும்

கட்டணம்

 

மண்வாசனையை

மணந்தவனுக்கு

மனித வாசம்

பிடிக்கவில்லைதான்

வந்த வேகத்தில்

போய்விட்டால்

ஊரு என்ன பேசும்

உழைக்க லாயக்கில்லாதவன்னு 

உறவு என்னை ஏசும்

 

பட்டினியாக கிடந்தாவது

பணத்தோடு போக

உழைக்க நான் இருக்கேன்

வேலைக்கொடுக்க

யாரிருக்கான்

அலைவது விதி

அறுந்தது செருப்பு

 

நாகரிகமான

வேலை கேட்டால்

நாயை மாதிரி

பார்க்கிறான்

 

நியாயமாக

வாழலாமென்றால்

நாய்கூட மதிக்கல

 

பட்டணம்னா

பசியும் பட்டினியும் தான்

பட்டபிறகு தெரிந்தது

 

பிடித்த

வேலையில்லை

கிடைத்த வேலை இது

 

எச்சில் தட்டை

கழுவாதவனை

எச்சியிலையை

எடுக்க வைத்தான்

ஏகப்பட்ட வேலையை

சுமக்க வைச்சான்

கதியேன்னு செய்தாலும்

வந்து வந்து

ஏங்க வைத்தது

ஊர் நினைப்பு

 

அப்போ போகலாம்

இப்போ போகலாம் என

ஊர் நினைப்பு

குறைய தொடங்கியாச்சு

ஆறு மாதம்

ஓடியே போச்சு

 

ஆத்தா

என் நினைப்புல அழுவாளேன்னு 

ஆசையாக

ஊருபோனா

அக்கறையாக

நலம் விசாரிக்காத

ஆளேயில்லை

 

கேட்க நாதியற்ற நகரத்தில்

நான் பட்ட கஷ்டம்

மறந்தே போச்சு.

 

தா. சரவணன்