4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

தென்கிழக்காசிய நாடுகளில் தேவராஜ வழிபாடு - கி.சர்வேஸ்வரன்

 


தென்கிழக்காசிய நாடுகளில் தேவராஜ வழிபாடு

கி.சர்வேஸ்வரன்

இந்து நாகரிக சிறப்புக் கற்கை,

கிழக்குப் பல்கலைக்கழகம், 

வந்தாறுமூலை, இலங்கை. 

sarwesh1177@gmail.com

Tel.no – 0756630276

அறிமுகம்

எத்தகைய காலப்பகுதியில் தோன்றியது என அளவிட்டுக்கூறமுடியாத இந்து மதமானது உலக மதங்கள் யாவினுள்ளும் தனித்துவமானதாகத் திகழ்கின்றது என்பது உலகறிந்த உண்மை. பரத கண்டத்தின் ஆணிவேராகத் திகழும் இந்து மதம் பாரெல்லாம் பரந்து வியாபித்திருந்தது. தமிழக மன்னர்களும், வடநாட்டு மன்னர்களும் இந்து மதத்தினை ஏனைய தேசங்களிலும் பரப்பியிருந்தமை வரலாறிந்த சத்தியம். அந்தவகையில் ஆசியக் கண்டத்தினதும், இந்திய திருநாட்டினதும் தென்கிழக்கில் அமையப்பெற்ற நாடுகளை தென்கிழக்காசிய நாடுகள் என்பது புவியியலின் வழமை.  இத்தகைய நாடுகளாக,

           மியன்மார்,

           தாய்லாந்து,

           கம்போடியா,

           வியட்நாம்,

           மலேசியா,

           சிங்கப்பூர்,

           பாலித்தீவு,

           சுமத்ரா,

           யாவா,

           போர்னியா,

எனும் நாடுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்நாடுகளிலெல்லாம் இன்றும் இந்து மதத்தின் சிதைவினைக் காணலாம். தமிழக வரலாற்றுக் காலங்களில் பல்லவ மன்னர்களும், சோழர்களும் தம் அரசினை தென்கிழக்காசிய நாடுகள் வரை விஸ்தரித்திருந்தமை தென்கிழக்காசிய நாடுகளில் இந்து மதம் பரவ ஏதுவாக அமைந்தது. மேலும் தமிழகத்திற்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான வணிக, திருமண, குடியேற்ற மற்றும் அரசியல் உறவுகளும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து மதம் பரவ வழிவகுத்தது.

மேற்கண்ட காரணங்களால் இந்து மதம் தென்கிழக்காசிய நாடுகளில்   பரவலடைந்ததனால் இந்து மதத்துடன் தொடர்புடைய சமய நம்பிக்கைகளும், வழிபாட்டுப் பழக்கவழக்கங்களும் இத்தகு நாடுகளில் அதிகமாக பின்பற்றப்படலாயின. அதாவது திருமண நடைமுறையாயினும், மன்னர்களின் முடிசூட்டு விழாக்களாயினும் இந்துமத அனுஸ்டானங்களே பின்பற்றப்பட்டன. தாய்லாந்தின் மன்னர்களில் சிலர் 1ம் இராமர், 2ம் இராமர் எனும் பெயர்களைக் கொண்டிருந்தனர்.  தற்போதைய மன்னரை 09ம் இராமர் என்கின்றனர்.

'பட்டார குரு வழிபாடு' என்னும் வழிபாடும் தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் நிகழ்த்தப்பட்டிருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பட்டார குரு வழிபாடு என்பது தமிழ்முனி, குள்ளமுனி என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்ட அகஸ்திய மாமுனிவரை வழிபடும் வழிபாட்டுப் பழக்கமாகும். அதேபோல் தென்கிழக்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மேலுமொரு வழிபாட்டுப் பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் தேவராஜ வழிபாடு ஆகும்.  இவ்வழிபாடு குறித்து சற்று விரிவாக ஆராய்வோம்.

            

தென்கிழக்காசிய நாடுகளில் தேவராஜ வழிபாடு

                   தேவராஜ வழிபாடு என்னும் சொற்பதத்தின் புரிதல் யாதெனின் 'ராஜனை வழிபடுதல்' என்று கூறலாம். ஆதிகாலத்தில் மக்கள் தங்களினதும், தம் பொருளாதாரத்தினதும் பாதுகாப்பின் பொருட்டு தம்மை நிர்வகிக்க ஒருவன் தேவை என உணர்ந்து தம் கூட்டத்தில் தலைசிறந்த ஒருவனைத் தலைவனாக நியமித்திருந்தனர். காலப்போக்கில் இறைமை என்னும் அதிகாரம் மன்னன் வசமானதால் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவனாக மன்னன் இருந்தான். இதனால் இறைவனுக்கு அடுத்தபடியாக மன்னனை மக்கள் மதிக்க ஆரம்பித்தனர். இறைவனால் மக்களாகிய எம்மை நிர்வகிக்கவும், வழிநடத்தவும் படைக்கப்பட்டவனே மன்னன் என மக்கள் உணரத்தொடங்கியது முதல் இத்தேவராஜ வழிபாடு ஆரம்பமாகியது.

வேத காலத்திலும் மக்கள் மன்னனைத் தெய்வமாகப் போற்றியிருந்ததனை அறியக் கிடைக்கின்றது. வேதகாலத்தின் அரசியல் சிந்தனைக்கும் இது அஸ்திவாரமாக அமைந்தது.  அதாவது அதனை விளக்கி கூற முற்பட்டால் வேதகால மக்களின் கடவுள் கோட்பாட்டின் நான்காவது படிநிலையாகிய ஒரு தெய்வக் கோட்பாடு பற்றிக் மொனோதீஸம் என்னும் சொற்பதத்தால் விளக்குகின்றார் மெக்ஸ்வூலர்.

அதாவது 'அனைவரிலும் மேலானவர் யார்? யாருக்கு எமது அவிபாகங்களைச் சொரிவோம்?'( 'கஸ்மை தேவாய கவிஸ் விஹேதம..' ) என்னும் கேள்வி மீள மீள எழுப்பபட்டது என வேதம் கூறுகின்றது. அதற்கு பதிலாக,

'அனைவரிலும் மேலானவர் பிரஜாபதியே அவருக்கே எமது அவிபாகங்களைச் சொரிவோம்.' என்னும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. எனவே இங்கு பிரஜாபதி என்னும் பதம் இடம்பெறுதலைக் காணலாம். இப்பதமானது பிரஜைகளின் அதிபதியைச் சுட்டுவதாக மெக்ஸ்வூலர் கூறுகின்றார்.

சிவபுராணம் முதல் மகாபுராணங்கள் பலவும் இப்பிரஜாபதிக்கு மற்றுமொரு வடிவத்தை அளிப்பதைக் காணலாம்.  அதாவது பிரம்மா உலகைப் படைத்த பின்னர் அதனை நிர்வகிக்க தன் கட்டைப் பெருவிரலிலிருந்து ஒருவனைத் தோற்றுவிக்கின்றார். அவன் பெயர் பிரஜாபதி என்பதாகும்.  அவனே உலக மக்களை நிர்வகிக்கும் தலைவன் என்றும், உலகத்தின் நியதிகளை உருவாக்கியவன் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அவன் தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் நிகரானவன், வணக்கத்திற்குரியவன் எனவும் குறிப்பிடுகின்றான். இச்சிந்தனைகளின் வாயிலாக வேதகால மக்கள் தம்மை ஆள்பவனைத் தெய்வமாக போற்றியிருந்ததனை அறிய முடிகின்றது. இத்தகு நடைமுறை காலப்போக்கில் மேலும் வளர்ச்சியுற்றது.

மன்னன் தன்னை தெய்வத்தின் அவதாரமாகக் கருதி ஆட்சிச் சட்டங்களை உருவாக்கினான். சர்வதிகாரங்களையும் தன்வசமாக்கினான். நிலவுடைமைச் சமுதாயம் தோன்றிய காலத்திலும் நாட்டின் நிலங்களனைத்தும் மன்னன் வசமாகவேயிருந்தன.  இத்தகு காலப் பின்னணியைக் கொண்ட இத்தேவராஜ வழிபாடு தமிழரின் செல்வாக்கு நீடித்த தென்கிழக்காசிய நாடுகளிலும் பரவலாகியது.

தென்கிழக்காசிய மக்களும் தம் மன்னர்களைத் தெய்வமாவே வழிபட்டிருந்தனர். அந்நாடுகளின் மன்னர்களின் பெயர்கள், அரண்மனை, உடைகள், எனப்பட்ட பலவிடயங்கள் தெய்வங்களை ஒத்திருக்க வேண்டும் என்பதில் பலரும் கவனம் செலுத்தினர். தெய்வங்களைக்  போலவும், தேவர்களைப் போலவும்  மன்னர்கள் தம்மை மாற்றிக் கொண்டனர். இதற்கு காரணம் மன்னன் தெய்வமாக மதிக்கப்பட வேண்டியவன் என்பதேயாகும். மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில், திருமணச் சடங்குகளில் மன்னனைத் தெய்வமாகவே மதிப்பது இந்தியாவில் மட்டுமல்ல தென்கிழக்காசிய நாடுகளிலும்  பின்பற்றப்பட்ட ஒரு வழக்கமாகும். மன்னர்களின் அரண்மனையில் எப்பொழுதும் ஓர் ஆகம சுலோகம் ஒலிக்கும்.

                   ' ஓம் ராஜாதி ராஜப் பிரதட்சணாய

                     சாஹினே நவோ வயம் வைச்ரவணாய

                     குர்மஹே சமே ஹாமான் ஹாமாஸ்ய

                     மஹ்ர்யம் ததேது குபேராய,வைச்ரணவாய

                     மஹா ராஜாய நமோ நமஹ... '

இதன் பொருள், 'ராஜனுக்கெல்லாம் ராஜன், அனைவரிலும் தலைசிறந்தவன்…  அவ் மகா ராஜனை  நமஸ்கரிக்கின்றேன்' என்பதாகும்.  அரசர்கள் தம்மைத் திருமாலின் அம்சமாகக் கருதினர் இதுவும் தேவராஜ வழிபாட்டிற்கு வழிகோலிய விடயமாகும். மன்னன் மக்களை கட்டுப்படுத்துபவன், வழிநடத்துபவன், பாதுகாப்பவன் எனப் பலவாறு வர்ணிக்கப்பட்டான்.

சிவலிங்கத்தை நிறுவும் தகுதியுடையவர் புரோகிதராகிய அந்தணரே ஆவார் எனும் நம்பிக்கை நிலவியது. லிங்க வடிவமாகிய சிவபிரான், ஆளும் அரசன், அரசவைப் புரோகிதன் ஆகிய மூவருக்குமுள்ள தொடர்பு தேவராஜ வழிபாட்டின் அடிப்படையாக அமைந்தது. சிவலிங்க வழிபாடு ஆளும் அரசனை வழிபடும் வழிபாடாகவும் அமைந்தது. தென்கிழக்காசிய நாடுகள் சிலவற்றின் தலைநகரில் மலையுச்சியிலோ அல்லது கோயில்களிலோ நடப்பட்ட சிவலிங்கங்கள் அரசனையும், ஆண்டவனையும் குறித்து நிற்பதாக குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத்தேவராஜ வழிபாடு பிற்காலத்தில் தாய்லாந்து அரசராலும் போற்றப்பட்டது. இத்தகு வழிபாட்டு முறையினைப் பின்பற்றிய காரணத்தினாலேயே சிவபெருமானைப் போற்றும் திருவெம்பாவைப் பாடல்களும், தேவாரங்களும், திருமாலைப் போற்றும் திருப்பாவை பாடல்களும் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களில் பாடப்படும் வழக்கம் உருவாகியது.                 

தாய்லாந்து நாட்டில் இன்றுவரை நிலவிவரும் தேவராஜ வழிபாட்டிற்கு மன்னர்களின் முடிசூட்டு விழாக்களை ஆதாரமாகக் காட்டலாம். இன்றும் இந் நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவெம்பாவை, திருப்பாவை விழாக்களில் தேவராஜ வழிபாட்டின் சாரத்தைக் காணலாம்.

இத்தென்கிழக்காசிய நாடுகளில் பல்வேறு மதங்கள் காணப்பட்டிருந்தன. இம்மதங்களிடையே ஒருமைப்பாட்டினை போற்ற இத்தேவராஜ வழிபாடு பெரிதும் உதவியது. நாட்டை அரசாளும் அரசனின் ஆற்றல் சிவபிரானிடமிருந்து சிவலிங்கத்தின் மூலமாக பெறப்படுவது என்றும், அச்சக்தி சிவலிங்கத்தில் வதிவது என்றும், அச்சிவலிங்கம் மலையுச்சியில் வைத்து காக்கப்படுதல் வேண்டும் என்றும் நம்பப்பட்டது.                 

கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலேயே இத்தேவராஜ வழிபாடு அதிகம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என சான்றுகள் கூறுகின்றன. மன்னர்களை சந்திக்க விரும்பும் மக்கள், அனைவரிடமும் அனுமதிபெற்று அரச சபையினுள் நுழைய வேண்டும், மன்னனை வணங்கியே தன் வேண்டுதலை முன்வைக்க வேண்டும் என்ற நடைமுறைகளும் நிலவியது.                    

மன்னன் மரணதண்டனை, ஆயுள் தண்டனை முதலிய பல தண்டனைகளை வழங்கும் அதிகாரமும், அவற்றை ரத்து செய்யும் அதிகாரமும் பெற்றிருந்தான். இதனைப் பிற்கால அரசறிவாளர்கள் இறைமை அதிகாரம் என வர்ணித்தனர். இத்தகையதோர் தனித்துவமான அதிகாரத்தை மன்னன் பெற்றிருந்ததன் காரணத்தினால் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ மன்னனுக்கும், அவனது அதிகாரத்திற்கும் தலை வணங்க வேண்டியவர்களாயிருந்தனர். இத்தகு முறைமையே தேவராஜ வழிபாட்டிற்கு வழிவகுத்தது.                   

தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றில் மன்னன் அரச சபைக்கு வருகை தரும்போது கட்டியம் சொல்லும் முறை வழக்கிலிருந்தது. மன்னனின் பெருமைகளை பட்டியலிட்டுகூறி அவனை வரவேற்பது அப்போதைய வழமையாயிருந்தது. இந்நடைமுறையும் மன்னனை தெய்வமாகப் போற்றும் வழிபாட்டை விளக்குவதாகவுள்ளது. அவ்வாறான கட்டியங்களில் ஒன்றாக,

             ' ராஜாதி ராஜ.......

               மாமன்னர் வருகிறார்...'                                                                                     

எனும் கட்டிய பாடலைக் குறிப்பிடலாம். மன்னனது ஆணை மறுதலிக்கப்படவில்லை அவனது தீர்ப்பே இறுதியும், அறுதியுமாயிருந்தது. தண்டனை வழங்கப்பட்டவரையும் அத்தண்டனையிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் மன்னன் வசமேயிருந்தது. தன்னிகரில்லா தலைமைத்துவம் கொண்ட மன்னனது இத்தனித்துவமே அவனைத் தெய்வநிலைக்கு உயர்த்தியது எனலாம். அரசர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் எனும் கருத்து சம்பா ( வியட்நாம் ) நாட்டின் பூர்வீகக் குறிப்புக்களில் காணப்படுகின்றது. பல்லவ, சோழ அரச வம்சங்கள் 'வர்மன்' எனும் பெயரோடு ஆட்சி புரிந்தனர்.                   

கடாரத்துபீபம் எனப்பட்ட இன்றைய மலேசியாவினை ஆண்ட பரமதத்தன் எனும் மன்னன் ஹெட்டன் குன்று சிவபிரானின் ஆலயத்திற்குச் செல்லும் போது பூரண கும்ப மரியாதையோடு வரவேற்கப்பட்டதாக அவ்வாலயத்தின் சாசனமொன்று கூறுகின்றது. இதேபோன்று சாவகம் எனும் யாவா தீவு பற்றிய தேசசஞ்சாரியாகிய பாகியனின்  குறிப்பொன்றில்,

' இந்து சமயம் இந் நாட்டில் ஓங்கி நிற்கின்றது மக்கள் அதில் பற்றுக் கொண்டுள்ளனர் புத்த மதம் இங்கு கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. மன்னன் மக்களின் மனதை வென்று கடவுளாகவே வணங்கப்படுகின்றான்.  செல்வச் செழிப்பு நிறைவுபெற்றுள்ளது...'

எனக் கூறுகின்றமையைக் காணலாம். அதுமட்டுமன்றி இந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட சில கல்வெட்டுக்களின் ஓரங்களில் சங்கு, சக்கரம், திரிசூலம், அகஸ்தியர் கமண்டலம் என்னும் தெய்வீக முத்திரைகளுடன், அரசர்களின் செங்கோலும், சிம்மாசனமும் முத்திரைகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இது தெய்வத்தின் சின்னங்களுக்கு சமமானதாக மன்னனின் செங்கோலும், சிம்மாசனமும் மன்னனும் மதிக்கப்பட்டதனை நினைவுபடுத்துவதாகவுள்ளது.                  

அதுபோன்று சுவர்ணதுபீபம், சமுத்திர துபீபம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட  சுமத்திரா தீபகற்பத்தில் கி.பி 03ம் நூற்றாண்டில் இந்து மன்னர்கள் குடியேறினர். அவ்வேளை அங்கு வாழ்ந்த ஆதிவாசிகளை சீர்திருத்தம் செய்ததாகவும், அதற்கு நன்றியாக ஆதிவாசிகள் அம்மன்னர்களை வணங்கித் தொழுததாகவும், தம் நாட்டிலேயே அவர்களைத் தங்க வைத்து அவர்களின் வழிநடத்தலிலே வழிநடந்ததாகவும் தேசசஞ்சாரிகளின்  குறிப்புக்கள் கூறுகின்றன.                 

கற்பூர துபீபம் எனும் நாட்டில் அதாவது இன்றைய போர்னியாவிலும் தமிழர்கள் தம் வர்தகத்தினைப் பேணியிருந்தனர். அதன்படி சீனா செல்லும் வழியில் போர்னியாவில் தங்கி குடியேற்றங்களை அமைத்திருந்தனர் இவ்வாறு குடியேறிய தமிழர்கள் பின் இந்நாட்டை ஆளவும் செய்தனர். அதன்படி மூலவர்மன் என்ற மன்னன் பலவேள்விகளைச் செய்ததாகவும், மக்கள் அவனின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியதாகவும் 'சாலைத் தூண்' குறிப்பொன்றில் ஆதாரம் கிடைத்துள்ளது.                     

கிழக்குப் போர்னியாவின் ஹோம்பேஸ் எனுமிடத்திலுள் ஓர் குகையில் சிவபிரான், கணேசர், நந்தி, அகஸ்தியர், பிரம்மன் ஆகியோரின் விக்கிரகங்களுடன் மன்னர்களின் கிரீடம், பதக்கம் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன.                  

காம்போஜ தேசம் வந்த  கௌண்டியன் என்னும் பிராமணன் நாக இளவரசியாகிய சோமி என்பவளை மணமுடித்து இத்தேசத்திற்கு அரசனானான். கௌண்டியனின் பின் வந்த மன்னர்களில் யசோவர்மன் என்பவன் இந்துத் துறவிகளுக்கு 100 ஆச்சிரமங்களை அமைத்தான் என்பதனைப் பற்றிக் கூறும் கல்வெட்டொன்றில்,

              ' ராஜ அதி ராஜ...'

என்னும் பதம் காணப்படுகின்றது. இப்பதம் மன்னனின் பெயரின் கீழ் குறிப்பிடப்படுகின்றது. எனவே இது மன்னனுக்குரிய புகழாரமாக இருக்கக்கூடும் என்பர். இந்நாட்டை ஆண்ட மற்றுமொரு மன்னனாகிய 7ம் ஜெயவர்மனின் காலத்தில் 'ஆங்கோர்தோம்' எனும் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ் ஆலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேல்விதானத்தில் அமைக்கப்பட்ட மும்மூன்று சிகரங்களின் நடுவில் இவ் ஜெயவர்மன் மன்னனின் முகத்தோற்றத்தின் நான்கு வெளிப்பாடுகளைக் காணமுடியும். இது உலகின் நான்கு திசைகளையும் நோக்கிய நிலையில் மன்னனின் வரையறையற்ற அதிகாரம் செலுத்தப்படுகின்றது எனும் பொருள்படுவதாக க.த.திரு. நாவுக்கரசு அவர்கள் 'தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மன்னன் 4 திசைகளிலும் அதிகாரம் செலுத்தும் இறைமை பெற்றிருந்த செய்தி புலனாகின்றது.                    

மேலும், சியாம் அல்லது சீயம் நாட்டினை எடுத்து நோக்கினால் இந்நாடு இன்று தாய்லாந்து என அழைக்கப்படும் சிறப்புப் பெற்றுள்ளது அந்நாட்டினை கி.பி 15ம் நூற்றாண்டில் 1ம் இராமர்  (ராம்ஒன்) எனும் பெயருடைய  மன்னன் ஒருவன் ஆண்டதாகவும் வரலாறு கூறுகின்றது. இவனது காலத்தில் நிறுவப்பட்ட சிவபிரானின் ஆலயமொன்றின் கல்வெட்டில்,

'இவன் மனு தர்ம சாஸ்திரப்படி நாட்டை ஆள்பவன், அவன் எங்கள் வணக்கத்திற்குரியவன்...'

 எனும் வாக்கியம் இடம்பெறுகின்றது. இந்நாட்டின் கொழுத்தூர் அரச சபையிலேயே திருவெம்பாவை பாடல் இடம்பெற்றது எனவும் அறிய முடிகின்றது. அதேபோல தாய்லாந்திலுள்ள செயின் மை (Ching mai) எனுமிடத்தில் மூன்று தமிழ் மன்னர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இது பொதுவிடத்தில் வழிபடப்பட்டன என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.        

 இதுபோன்று தென்கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் மன்னனைத் தெய்வமாக மதித்தது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மன்னன் அரசசபைக்கு வரும்போதும், பள்ளியறையிலிருந்து துயிலெழும் போதும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடப்பட்டதாகவும் அறியக்கிடைக்கின்றது. பொதுவாக இந்துக்களின் ஆலயங்களில் அதிகாலைப் பூஜைகளின் போது இறைவனை பள்ளியெழுச்சிப் பாடல்கள் பாடி துயிலெழுப்புவது ஐதீகம். இம்மரபு மன்னர்களுக்கும் பேணப்பட்டமை அவனது இறைநிலையைக் காட்டுகின்றது.

' எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே...'                                                                                 

 என்றவாறு அப்பள்ளியெழுச்சி பாடல்கள் அமைந்து காணப்படும். மன்னனின் அருகில் சாமரம் வீசும் இருவர் எப்பொழுதும் வீற்றிருப்பர். மக்கள் அவனை மலர் தூவி வரவேற்கும் நடைமுறையும் காணப்பட்டது.

 முடிவுரை

எனவே தொகுத்து நோக்குகின்றபோது, அரசியல், சமயம் போன்ற ஒரு நாட்டின் பல்வேறு அம்சங்களால் மக்களால் மன்னன் மதிக்கப்பட்டிருந்தான். இந்தியாவில் மன்னர்கள் பெற்ற மதிப்பு தென்கிழக்காசிய நாடுகளிலும் மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. இறைவன் கண்முன்தோன்றி எச்செயலும் செய்வதில்லை. அதற்குப் பதிலாக தன் பிரதிநிதியாக ஒருவனை அனுப்பிவைப்பார் என்ற நம்பிக்கையின் வாயிலாக அப்பிரதிநிதி மன்னனே  என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. இவ் நம்பிக்கையே காலப்போக்கில் மன்னனை தெய்வமாகப் போற்றும் தேவராஜ வழிபாடாக வளர்வு கண்டது எனப்படுகின்றது. காலப்போக்கில் மன்னர் முறைமை மாறியது.  எனினும் மக்களை ஆளும் ஆள்பதியை இன்றும் மக்கள் தெய்வமாக எண்ணும் ஒரு மனநிலையிலிருந்து மாறுபடவில்லை. இந்நிலைக்கு அக்காலத்தைய தேவராஜ வழிபாடே காரணம் எனலாம். இவ்வாறாக பல்வேறு தனித்துவமான அம்சங்களைக் கொண்டும், இந்தியப் பண்பாட்டை உள்ளடக்கியும்  தென்கிழக்காசிய நாடுகளில் மன்னனைத் தெய்வமாகப் போற்றும் தேவராஜ வழிபாடு சிறப்புப் பெற்று விளங்கியது எனலாம்.

உசாத்துணை நூல்கள்

1.         செ.கிருஸ்ணராஜா., 'தென் கிழக்காசியாவில் இந்து பண்பாடு'இ குமரன் புத்தக இல்லம், கொழுப்பு, சென்னை.

2.         வ.இராஜாராம்., 'சீனா ஜப்பான் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் வராலாறு', தமிழ்நாடு இந்தியா.

3.         ப.கணேசலிங்கம்., 'இந்து சமயப் பரம்பல் அன்றும் இன்றும்', வர்தக மாணவர் ஒன்றியம், யாழ்பாணம், இந்து கல்லூரி.

4.         ஜி.கிருஸ்ணமூர்த்தி., 'தென்கிழக்காசியா', தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை.