4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

தமிழக கின்னரமும் தூர மேற்காசிய கின்னாரமும் - முனைவர் சித்ரா, ஆங்காங்

 

தமிழக கின்னரமும் தூர மேற்காசிய கின்னாரமும்

(Tamil Kinnaram and Far East Asia Kinnor)

 

      முனைவர் சித்ரா, ஆங்காங்

     SCOPE, City University of Hong Kong

 

ஆய்வுச் சுருக்கம்

    பண்டைய தூர மேற்காசிய இசைக்கருவியான கின்னாரம் (Kinnor) பற்றி பல ஆய்வுகள் 
வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கின்னாரத்தை தமிழகத்தின் கின்னரத்துடன் (Kinnarum) ஒப்பாய்வு 
செய்ய, தமிழகத்தில் கின்னாரம் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதங்களைக் குறிப்பிட்டு, 
இசைக்கருவியாக சொல்லப்படும் இந்தக் கருவி எப்படி மேற்காசிய நாடுகளின் கின்னாரத்துடன்
 ஒத்தது என்பதையும்,  அத்துடன் நம் சங்க இலக்கியங்கள் சுமெரிய இலக்கியங்களின் சம காலத்தை  
உடையவை என்பதையும் சான்றுடன் இந்தக் கட்டுரை விளக்க முயல்கிறது. 

அறிமுகம்

பண்டைய மேற்காசிய இசைக்கருவியான கின்னாரம் (Kinnor) பற்றியும், அதன் வடிவம் பற்றியும், அதிலிருந்து எழும் இசை பற்றியும், சுமெரிய நாகரிகம் மூலமாக பல ஆய்வுகள் செய்யப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளன.  இந்தக் கருவி கிரேக்கர்களின் கித்தாரா (Kithara) என்ற கருவிக்கு முன்னோடி என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

தமிழ்ப் புலவர்கள் பலரும் தங்கள் பாடல்களில், இன்றைய இலக்கியங்களாக விளங்கும் பல பாடல்களில் கின்னரம் (Kinnarum) என்ற வார்த்தையை பல பொருள்களில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.  அதில் கின்னரம் ஒரு இசைக்கருவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை உரை ஆசிரியர்கள் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இந்தக் கின்னரத்தை தமிழகத்தின் கின்னாரத்துடன் ஒப்பாய்வு செய்ய, தமிழகத்தில் கின்னாரம் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதங்களைக் குறிப்பிட்டு, இசைக்கருவியாக குறிப்பிடப்ப்படும் இந்தக் கருவி எப்படி மேற்காசிய நாடுகளின் கின்னாரத்துடன் ஒத்தது என்பதையும்,  அத்துடன் நம் சங்க இலக்கியங்கள் சுமெரிய இலக்கியங்களின் சம காலத்தை உடையவை என்பதையும் சான்றுடன் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

ஆய்வு எல்லை

இந்தக் கட்டுரை கின்னரம் என்ற சொல்லைக் கொண்டு மட்டுமே செய்த ஆய்வுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.  இந்தக் கருவியின் இசைத் தன்மைகளை மேலாய்வுக்கு விட்டுள்ளது. இந்தக் கருவி பல சிற்பங்களிலும் சித்திரங்களிலும் வடிக்கப்பட்டுள்ளன.  அதைப் பற்றிய நுண்ணிய மேலாய்வுகள் மேலும் பல உண்மைகளை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.

 

ஆய்வின் நோக்கம்

தமிழகத்தின் கின்னரத்தையும் தூர மேற்காசிய நாட்டு கின்னாரத்தையும் ஒப்பாய்வு செய்து, முடிவுகளை எடுத்துக் கூறுவதே இந்த ஆய்வின் நோக்கம்.  தமிழில் பயன்படும் கின்னரத்தைப் பற்றிய விளக்கங்கள் பலவற்றையும் கொடுத்த பின்னர், அந்தக் கருவியை தூர மேற்காசிய நாட்டு கின்னரத்துடன் ஒப்பாய்வு செய்து, விளக்கங்கள் தரப்பட உள்ளன. இதன் மூலம் இந்தக் கட்டுரை தமிழ் சுமெரியத் தொடர்புகளை இசைக் கருவியின் மூலமாக உணர்த்த விழைகிறது.

ஆய்வு முறை

தமிழச் சங்க இலக்கியம் தொடங்கி கின்னரம் என்ற சொல் எந்த வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது முதலில் ஆராயப்பட்டது. அதைத் தொடர்ந்து கின்னரம் என்ற சொல் சுமெரிய நாகரிகத்திலும் அதைத் தொடர்ந்து வந்த நாகரிகங்களிலும் எப்படி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது ஆராயப்பட்டது. இந்த முடிவுகளைக் கொண்டு, அந்தக் கருவியின் தன்மைகள் ஒப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் தரப்பட்டுள்ளன.

தமிழகத்தின் கின்னரம்

கின்னரம், கிண்ணாரம், கின்னாரம் என்று பல வழிகளிலும் கூறப்படும் சொல், பொதுவாக தமிழர்களின் பண்டைய இசைக்கருவியை குறிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆயினும், இதற்கு வேறு பெயர்களும், பல பொருளும் உண்டு.

வடமலை நிகண்டு

கின்னர மெனும்பெயர் கின்னர மிதுனமும்

 யாழின் பெயரு நீர்ப்பறவையு மாந்தையும். ....496

என்று கின்னரம், கின்னர மிதுனம், யாழ், நீர்ப்பறவை, ஆந்தை என்றும் குறிக்கின்றது.

இந்தக் கட்டுரை முதலில் கின்னரம் தமிழகத்தில் எப்படி கருவியாகவும், பண்ணாகவும், பறவை இனமாகவும், மேலும், தேவ கணமாகவும் குறிப்பிடப்படுகிறது என்பதை விளக்கும்.

கின்னரம் - கருவி

தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாம் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் புறத்திணை பாடல் ஒன்றில் கின்னரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணான் பாடினான்

வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக்

கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ்

அந்நரம்பும் அச்சுவையும் ஆய்ந்து." தொல்காப்பியம்,  புறப்.பெருந்திணை. 18

கின்னரம் போன்று அமைந்த தீந்தொடையாழ் என்றும் அந்நரம்பும் என்றும் குறிப்பிடுவது, கின்னரம் நரம்புக் கருவியின் வரிசையில் வருவதைச் சுட்டுகிறது.

யாழ் என்ற இசைக்கருவிக்கு, தந்தி, வீணை, கோட்டம், போடவதி, விவஞ்சி, கலம், கருவி என்ற பெயர்களுடன் கின்னரம் என்ற பெயரும் உண்டு என்கிறது பிங்கல நூற்பா 1430 மற்றும் 1431.

தந்தி வீணை கின்னரங் கோட்டங்கோடவதி விவஞ்சி யாழ்ப் பெயர்கூறும் 

- பிங்கல நூற்பா 1430

அறி கலமுங் கருவியு மப்பெயர்க்குரித்தே” - பிங்கல நூற்பா 1431

கம்பராமாயணம் பால காண்டம் நகரப் படலத்தில் கம்பர்,

வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்

கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,

துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்

விளை ஒலி, கடல் ஒலி மெலிய, விம்முமே.”  - கம்பராமாயணம்  153

என்ற பாடலில்,  வளை , வயிர், மகர வீணை, முழவு, துளை  என்று பல கருவிகளை வரிசைப்படுத்தும் போது, கின்னரத்தை ஒரு கருவியாகக் குறிப்பிடுகிறார்.

மேலும், கம்பர் யுத்த காண்டத்தில், மயங்கி இருந்த இலக்குவன் அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையின் காரணமாக, உணர்வு பெற்று எழுந்த போது ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான சூழலை விளக்குகிறார்.

"அரம்பையர் ஆடினர்; அமிழ்ந்த ஏழிசை

நரம்பியல் கின்னரம் முதல நன்மையே

நிரம்பின; உலகு எலாம் உவகை நெய்விழாப்

பரம்பின; முனிவரும் வேதம் பாடினார்". - கம்பராமாயணம்  8936

அப்போது ஏழிசை நரம்பியல் கின்னரம் என்று குறிப்பிடுவது, கின்னரம் என்பது நரம்புக் கருவி என்பதைக் காட்டுகிறது.

'சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும்

      நிறை ஆறும், சுருதித் தொல் நூல்

மாதவத்தோர் உறை இடமும், மழை உறங்கும்

      மணித் தடமும், வான மாதர்

கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு

      வருடுதொறும் கிளக்கும் ஓதை

போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும்

      உறங்கு இடனும், பொருந்திற்று அம்மா!கம்பராமாயணம்  4474

கம்பர்  மேற்கண்ட பாடலில், ‘கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடுதொறும்  கூறுவது, மீண்டும்,  கின்னரம் என்பது நரம்புக் கருவி என்பதைக் காட்டுகிறது.

மதுரையிற் சுவாமி தரிசனம் செய்கையில், அங்குள்ள சிவப்பிராமணர்கள் அவரைப்பார்த்துச் சோமசுந்தரக் கடவுள் சந்நிதிக்கெதிரே கட்டிய கூட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போலக் கூவுகின்ற கிளியைச் சுட்டிக்காட்டுகிறார் காளமேகப் புலவர்.

ஆடல்புரிந் தானென்னும் அந்நாளிலே மூவர்

பாடலுவந் தானென்ற பான்மையான் - கூடலிலே

நன்னரிவா சிக்கு நடைபயிற்றி னானென்றும்

கின்னரிவா சிக்குங் கிளி.” - காளமேகப் புலவர்

இப்படி தொல்காப்பியம் தொடங்கி காள மேகப் புலவர் வரை பலரும் கின்னரம் என்ற சொல்லை கருவியாக குறிப்பதை அறியலாம்.

கின்னரம் - பண்

கின்னரம் என்ற சொல்லை பல புலவர்கள் பண்ணாகக் குறிப்பிடுகின்றனர். அந்த வரிசையில் கீழ்கண்ட பாடலும் ஒன்று.

 

ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும்

ஆகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்

தேவதாளி நிருப துங்க ராகம்

நாகராகம் இவற்றுட் குறிஞ்சியாழ்

செந்து மண்டலி யாழரி மருதயாழ்

ஆகரி சாய வேளர் கொல்லி

கின்னரம் செவ்வழி வேளாவளி சீராகம்

சந்தி இவை பதினாறும் பெரும்பண்  - பிங்கலந்தை – 1380

என்ற பாடலின் மூலம் பிங்கலந்தை, கின்னரம் என்ற பண்ணைக் குறிக்கிறது.

கம்பராமாயணம் பால காண்டம் வரைகாட்சிப் படலத்தில் கம்பர், மலை நிகழ்ச்சிகளை மாந்தர் காண்பதைப் பற்றிக் கூற முற்படும் போது,

கோடு உலாம் நாகப் போதோடு இலவங்க மலரும் கூட்டிச்

சூடுவார்களி வண்டு ஓச்சித் தூ நறுந் தேறல் உண்பார்,

கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்

பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார்.”  – கம்பராமாயணம் 858

பாடலை இயற்றுகிறார். மகளிர் நாகம் இலவங்கம் மலர்களைச் சூடிக்கொள்வர். தேறல் உண்பர். மகர யாழில் கின்னர மிதுனம் என்னும் பண்ணைப் பாடுவர் என்று கின்னரப் பண்ணைப் பற்றி குறிப்பிடுகிறார். மேலும்,

கின்னர மிதுனம் பாட, கிளர் மழை கிழித்துத் தோன்றும்

மில் என, தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து,

பன்னக மகளிர் சுற்றிப் பலாண்டு இசை பரவ, பண்ணைப்

பொன் நகர் வீதிதோறும், புது மனை புகுகின்றாரை-  கம்பராமாயணம் 4953

என்ற பாடலிலும் கின்னர மிதுனத்தை பண்ணாகக் குறிப்பிடுகிறார்.

தேவாரத்தின் நான்காம் திருமுறைப் பாடல்கள் வரிசையில் திருமறைக்காடு பற்றிப் பாடும் போது திருநாவுக்கரசு நாயனார்

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப்

பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக்

கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற வெந்தை

மண்ணினார் வலங்கொண் டேத்து மாமறைக் காட னாரே.” – தேவார நான்காம் திருமுறைப் பாடல்

பாடுவார். “நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்  என்பது உரையாசிரியரின் கூற்று.  இதில் பக்தர்கள் இவை பாட கின்னர பண்ணை இயற்றினார் என்று பொருள் பொதிந்துள்ளதைக் காணலாம்

சிலப்பதிகார உரையில் 11991 பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தோன்றிய - பிங்கல நிகண்டு கூறும் 103 பண்களை தேவார திவ்வியப்பிரபந்தப் பாடல்களில் கூறப்படும் பண்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதுடன் தற்காலத்தில் இப்பண்களுக்கு இணையான இராகங்களைக் கண்டறிந்து அறிவிக்கும் பணியினை பண்ணாராய்ச்சிக்குழு தன் தலையாய பணியாக மேற்கொண்டு வருகிறது. (3)

தமிழ்ப் பண்களுக்கு இணையான 98 இராகங்களைக் கூற முற்படும் போது, 66ஆம் பண்ணான கின்னராகம் என்பது கீரவானி இராகத்தை ஒத்தது என்கின்றனர் இசை வல்லுநர்கள்.

இவற்றின் மூலம், மேற்கூறிய பாடல்கள் கின்னரத்தை ஒரு பண்ணாக குறிப்பிடுவதை அறியலாம்.

கின்னரம் - பறவை

கின்னரம் என்பது ஒரு வகை பறவை என்றும் இலக்கியம் கூறுகிறது.  கடியலூர் உருத்திரங் கண்ணனார் இளந்திரையனது மலையின் பெருமை கூற முற்படும் போது, கின்னரம் என்னும் பறவைகள் பாடும் தெய்வங்கள் உறையும் சாரலிடத்தே என்று பொருள் படும்படி வரும் பெரும்பாணற்றுப்படை பாடல்

கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் - பெரும்பாணற்றுப்படை 494

உரைக்கிறது.

இசையுணர் திறம் உடைய கின்னரம் என்ற பறவையைப் பற்றித் திருத்தக்க தேவர் சீவகசிந்தாமணியில் குறிப்பிடுகிறார். பெண்கள் யாழிசைத்த பொழுது கின்னரங்கள் வந்து இசை கேட்டு மகிழ்ந்தன. மைந்தர் பாடிய பொழுது இசைக்குறை கேட்டு அவை சென்று விட்டன. மீண்டும் அவள் பாடியதும் மீண்டும் வந்தன என்கிறார்.

மாதர்யாழ் தடவர வந்த மைந்தர்கைக்

கீதத்தான் மீண்டன கேள்விக் கின்னரம்

போதரப் பாடினாள் புகுந்த போயின

தாதலர் தாரினார் தாங்கள் பாடவே” - சீவகசிந்தாமணி 660

ஆந்தைக்கு ஆண்டலை, ஆந்தை, இருடி, உலூக, ஊமன், கின்னரி, குரால், குடிஞை, கௌசிக, கூகை,கூன், கோட்டான், பிங்கலை, கேகயம், (அசுணமா, இசையறி பறவை:– ஆசிரிய நிகண்டு) என்ற பெயர்களுடன் கின்னரம் என்று பெயரும் உண்டு என்பர் சிலர் (1).

கம்பராமாயணம் பால காண்டம் வரைகாட்சிப் படலத்தில் கம்பர்,

செங் கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா,

பொங்கு இருங் கூந்தல் சோரா, புருவங்கள் நெரியா, பூவின்

அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு அளைந்து, அமுதம் ஊறும்

மங்கையர் பாடல் கேட்டு, கின்னரம் மயங்கும் மாதோ!” – கம்பராமாயணம் 850

என்ற பாடலில் கின்னரம் என்பதை ஒரு பறவையாக குறிப்பிடுகிறார்.

கடலைத்தாண்டியது போல இருமடங்கு வேகமாகத் தாண்டினாலும் இலங்கையின் இடைநகரில் இருக்கும் அகழியைக் கடக்கமுடியாது’ என அநுமன் சொல்வதாகச் சுந்தரகாண்டத்தில் கம்பர் சொல்கிறார். இலங்கையில் இருந்த அந்த அகழியில்

உன்னம் நாரை மகன்றில் புதா உளில்

அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்

கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்

சென்னம் காகம் குணாலம் சிலம்புமே”  - கம்பராமாயணம் 4985

என்று பல பறவை வகைகளைச் சொல்லும் போது கின்னரத்தையும் குறிக்கிறார்.  ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் பண்டார மும்மணிக் கோவையில்

கின்னரம் வியக்குங் கீதம் பாட

நகைநில வெறிக்கு முகமதி காணூஉச்

சந்திர காந்தத்திற் சமைத்தசெய் குன்றம்

மைந்தர்போன் றுருகி மழைக்கணீர் சொரியப் - பண்டார மும்மணிக் கோவை  20

என்று கின்னரத்தைப் பறவையாகக் குறிக்கிறார். பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணம் பாடலிலும் கின்னரம் குறிப்பிடப்படுகிறது.

இன் நரம்பு உளர் ஏழிசை எழான் மிடற்று அளிகள்

கின்னரம் பயில் கடம்பமா வனத்தினின் கீழ் சார்த்

தென்னகர் சேகரன் எனும் குலசேகரன் உலக

மன்னர் சேகரன் அரசு செய்து இருப்பது மணவூர்.  - திருவிளையாடல் புராணம்  473

இந்தப் பாடலுக்கு உரையாசிரியர், “இனிய நரம்புகளைத் தடவுதலினால் உண்டாகின்ற  ஏழிசை போன்று, கண்டத்திலிருந்து உண்டாகும் ஓசையினையுடைய வண்டுகள், கின்னரம் என்ற இசைபாடுகின்ற பறவையும், பெரிய கடம்பவனத்தின் கிழக்குப் பகுதியைச் சார்ந்த இடத்தில்உலகின்கண் உள்ள மன்னர்களுக்கு முடிபோல்பவனும், பாண்டிய மரபிற்கு மகுடம் என்று சொல்லப் படுபவனுமாகிய, குலசேகரபாண்டியன் ஆட்சி புரிந்து இருப்பதற்கு இடமாக உள்ளது மணவூராகும்என்று பொருள் கூறுவார்.  இவ்வாறு கின்னரத்தைப் பறவையாகக் குறிக்கிறார் பரஞ்சோதி முனிவர்.

போகர் சித்த வைத்திய முறையை போகர் கற்பம் 300 என்ற நூலில் விளக்கும் போது, குரல் வளம் சிறக்க கூறும் மருந்தினை உட்கொண்டால் கின்னரத்தின் ஒலியைப் போன்ற இனிமையைப் பெறலாம் என்று குறிப்பிடுகிறார்.

விழலாகப் போகாமல் கரிசாலை கரந்தை

மிக்கான பொற்றலையும் நீலிவல் லாரை

பழலாகப் பாக்களவு பாலில் கொள்ளு

பாங்கான மண்டலந்தான் உண்டா யானால்

கழலாக காயந்தான் ஆயிரத் தெட்டு

கனகம்போல் சடந்தானும் கனிந்து மின்னும்

மழலாக வார்த்தையது கின்னரத்தின் ஒலியாம்

மகத்தான வாசியுமே இறுகும் பாரே.” - போகர் கற்பம் 300  100

கரிசாலை, கரந்தை, பொற்றலை, நீலி, வல்லாரை ஆகிய ஐந்து மூலிகைகளைத் தினமும் பாக்களவு ஒரு மண்டலம் உண்டு வந்தால், உடல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன்னாகக் கனிந்து மின்னுவதுடன், குரல் கின்னரம் போன்ற இனிமையானதாகவும் மூச்சும் இறுகி உடலை வளப்படுத்தும் என்று தெரிகிறது. (2) இதை நாம் பண்ணாகவும், இசைக் கருவியின் ஒலியாகவும், மேலும் கின்னரப் பறவையின் ஒலியாகவும் எடுத்துக் கொள்ளலாம்

கின்னரம் - விசித்திர விலங்கு

கின்னரம் என்பது இசை அறி விலங்கு, தேவ சாதி, பரிமுக மாக்கள் என்று அரும்பத தமிழ் இணையத்தின் அகராதி  குறிப்பிடுகிறது.

கம்பர் கின்னரத்தை கருவியாவும், பண்ணாகவும் பறவையாகவும் குறிப்படும் அதே நேரத்தில், அயோத்தியா காண்டம் சித்திரகூடப் படலத்தில் கம்பர், இராமன் சித்திரகூட மலையின் அழகை சீதைக்குக் காட்டி மகிழும் போது கூறுவதாக,

கணவன் காட்டுக்குள் எங்கோ இருக்கிறான். மனத்தில் கொதிக்கும் காதலினால், கணவனுடன் ஊடல் கொண்டு அவனைச் சென்று சேராமல் தனியே உட்கார்ந்திருக்கிறாள் கானகத்துப் பெண். காமவேதனையால் தவிக்கும் அவள் மீண்டும் கணவனைச் சென்று சேரும்படி, இன்னிசை பாடி அவள் மனதை உருக்குகின்றன கின்னர மிதுனங்கள்! பறவைகளும் பாம்புகளுமே அன்பு காட்டும் சித்திர கூடத்தில் தேவகணங்கள் ஆற்றும் காதல் சேவை இது 

என்று பொருள்படும் கீழ்வரும் பாடலில் வருணிக்கிறார்  கம்பர்.

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே!

கூடுகின்றலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப

ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்

பாடுகின்றன கின்னர மிதுனங்கள் – பாராய்!” - கம்பராமாயணம் 2057

கின்னர மிதுனம் என்பது குதிரை முகமும் மானுட உடலும் கொண்டு இசைபாடும் விசித்திர தேவகணங்களின் ஜோடியை கம்பர் குறிக்கிறார் என்பர் உரையாசிரியர்கள்.

கின்னரம் - தேவ கணம்

தமிழ் இலக்கியத்தில் கின்னரர் என்று குறிப்பிட்டு கின்னரத்தை தேவ கணமாவோ கின்னரம் வாசிக்கும் இசை வல்லுநராவோ குறிப்பிடும் சில பாடல்களும் உண்டு. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில்

நால்வகை தேவரும் மூவறு கணங்களும்” சிலப்பதிகாரம் 176

என்று பாடியதை நிகண்டு மூலமாக பதினெண் திறத்தவரைக் குறிப்பதாகக் கொள்வர். இந்தப் பதினெட்டு திறத்தவர்களை பல உரையாசிரியர்கள் யார் யார் என குறிப்பட்டுள்ளனர். அவற்றில் பதினெண் கணத்தவர்என்பதை நிகண்டு,

விரவுசா ரணரே, சித்தர், விஞ்சையர், பசாசர், பூதர்,

கருடர்,கின் னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர்,

உரகர் ஆகாச வாசர் உத்தர குருவோர் யோகர்

நிருதர்,கிம் புருடர், விண்மீன் நிறைகணம், மூவா றாமே  - நிகண்டு

என்று குறிப்பிடும் போது, சாரணர், சித்தர், விஞ்சையர், பசாசர், பூதர், கருடர், கின்னரர், இயக்கர், காந்தர்வர், சுரர், தைத்தியர், உரகர், ஆகாச வாசர், உத்தர குருவோர், யோகர், நிருதர், கிம்புருடர், விண்மீன் நிறைகணம்  என்ற பதினெட்டு தேவ கணங்களில், கின்னரர் என்ற ஒரு சாராரும் குறிக்கப் பெறுகின்றனர். இதைப் போன்று மற்றொரு ஆசிரியர்  சாரணர், சித்தர், தேவர், அசுரர், தானவர், கருடர், கின்னார், கிம்புருடர், யட்சர், வித்தியாதார், அரக்கர், கந்தருவர், சித்தர், பூதர், பைசாசர், தாரகையர், நாகர், ஆகாச வாசிகள், போக பூமியர்என்று பதினென்மரை குறிக்கும் போதும் கின்னரர் இடம் பெறுகின்றனர்.

பதினொன்றாம் திருமுறை சேரமான் பெருமான் நாயனார்   திருக்கைலாய ஞானஉலாவில்

விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்

அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் எச்சார்வும்” - தேவார பதினொன்றாம் திருமுறை

என்று தேவ கணங்களைக் குறிக்கும் போது கின்னரரும் இடம் பெறுகின்றனர். திருநள்ளாற்றுப் புராணப் பாடல் ஒன்றிலும் கின்னரர் குறிப்படப்படுகின்றனர்.

மைக் கருங்குழல் மங்கையர் பாடல்கேட்டு

ஓக்க விஞ்சையர் ஒப்பறு கின்னரர்

தக்ககோடு தளிர்க்கும் என்று உன்னியே

மிக்க பாடல் கருவிவிண் போக்கினார் - திருநள்ளாற்றுப்புராணம் 154    

முத்தி இலம்பகம்  பாடல்  ஒன்றிலும் கின்னரர் குறிப்படப்படுகின்றனர்.

 வரிய நாக மணி சுடர் மல்கிய

பொரு இல் பொன் முழை போர் புலி போதகம்

அரிய கின்னரர் பாட அமர்ந்து தம்

உருவம் தோன்ற உறங்கும் ஓர்பால் எலாம்  - முத்தி இலம்பகம் 306

சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் ஆனாய நாயனார் புராணப் பாடல் ஒன்றில்

பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்

மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்

தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்

அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்” -   பெரியபுராணம்  962

என்று தேவ கணங்களில் ஒருவரா கின்னரர் குறிக்கப் பெறுகிறார்.  கம்பராமாயணம் கடல்தாவு படலத்திலும், காட்சிப் படலத்திலும்

கீதங்கள் இசைத்தனர் கின்னரர்; கீதம் நின்ற

பேதங்கள் இயம்பினர் பேதையர்; ஆடல் மிக்க

பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன; பூசுரேசர்

வேதங்கள் இயம்பினர்; தென்றல் விருந்து செய்ய,” - கம்பராமாயணம் 4813

தொளை உறு புழை வேய்த் தூங்கு இசைக் கானம் துயலுறாது ஒரு நிலை தொடர,

இளையவர் மிடறும் இந் நிலை இசைப்ப, கின்னரர் முறை நிறுத்து எடுத்த

கிளை உறு பாடல், சில்லரிப் பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி,

அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும், அளப்ப;” - கம்பராமாயணம் 5156

தேவ கணங்களில் ஒருவரா கின்னரர் குறிக்கப் பெறுகிறார். நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் அருளிய முதலாயிரத்தில்

முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கி யத்தை முடிப்பான்மூ வுலகில்

மன்னரஞ்ச(சும்) மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க

நன் நரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து

கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே.”

 நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 279

என்ற பாடலில் கின்னர மிதுனங்கள் (கின்னரத் தம்பதியர்) கின்னரம் வாசிக்கும் தேவ கணங்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளனர். மகாகவி பாரதியார் விநாயகர் நான்மணிமாலை வேய்ங்குழல் என்ற கவிதையில்

எங்கிருந்து வருகு வதோ? – ஒலி

யாவர் செய்கு வதோ? - அடி தோழி!

மறைவினின்றுங் கின்னர ராதியர்

வாத்தியத்தினிசை யிதுவோ அடி!” - விநாயகர் நான்மணிமாலை
கின்னரர்கள் இசையைப் பற்றி எடுத்தியம்புகிறார். கின்னரம் வாசிப்பதால் கின்னரர் என்று பெயர் 
பெற்றனர் என்றும் கொள்ளலாம். இவ்வாறாக பல இலக்கியங்களில் கின்னரர்களை தேவ 
கணங்களாகவும், கின்னரம் என்ற கருவியை இசைப்பவர்களாகவும் காணலாம்.

இக்கட்டுரை இது வரை சில இலக்கியங்களில் கின்னரம் இடம் பெற்றுள்ளதைக் காட்டியுள்ளது. தமிழகத்தின் கின்னரம் என்ற தலைப்பில் கின்னரம் இசைக் கருவியாகவும், பண்ணாகவும், பறவையாகவும், விசித்திர விலங்காகவும், தேவ கணங்களாகவும்,  கின்னரம் வாசிப்பதால் கின்னரர் என்று பெயர் பெற்றுள்ளதையும் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. இத்துணை சான்றுகள் இருந்த போதும், இந்தக் கருவி எப்படி இருக்கும் என்பதை தமிழர்கள் அறிந்தாறில்லை.

மேற்காசிய கின்னார்

சுமெரிய நாகரிகம் தோன்றி பரவிய தூர கிழக்கு நாடுகளில், கின்னார் என்ற பெயருடன் ஒரு இசைக் கருவி இருந்ததை, அந்த நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களைக் கொண்டும், அதைப் பற்றிய வர்ணனைகள் கொண்ட மண் ஏடுகளைக் கொண்டும் நிறுவியுள்ளனர் தொல் பொருள் ஆய்வாளர்கள். இன்றைய இரான், இராக், ஜோர்டன், இஸ்ரேல், சிரியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் இத்தகைய இசைக் கருவி பரவலாக பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றிய விடயங்களை ஒரு ஆய்வுக் கட்டுரை பட்டியலிட்டுள்ளது. இங்கே ஆங்கிலத்திலே அது தரப்பட்டுள்ளது.

“Ebla, 2340-2300 B.C.E : A bilingual lexical text … has the equation

Balag = GI-na-ru-um/rum/lum

The right hand side is cleary the Kinnarum …”

Mari 1700 BCE. The term kinnarum (in the oblique plural form ki-in-na-ra-tim) is used in a text about two carpenters who supplied lyres for king Zimri-Lim ….

Alalakh, 1500-1400 B.C.E. The term ki-in-na-ru-hu-li is attested in Alalakh tablet A; T. 172, line 7….

Hattusas, 1500-1200 B.C.E. The term ki-nir-tal-la is given on a Hittle language tablet from Bogazkoy.

Ugarit, 1400-1300 B.C.E The term knr (in alphabetic cuneiform) and ki-na-ru (in syllabic cuneiform) are attested in several texts, two of which are given by Caubet … and … Gordon …

Emar 1300 B.C.E. The term kinnaru (ki-in-na-ru) is used (Arnaud 1987:no 545, line 392) in a local copy of the Sumero-Akkadian lexical list HAR.ra=hubullu known from Mesopotamia….

Egypt 1200 B.C.E. The term knnr (orr k-(i)n-nu-ru) is attested only once and the date is relatively late ca. 1200B.C.E…

Hebrew Bible, First millennium B.C.E. The kinnor is mentioned 42 times in the Hebrew Bible...

Syrian cuneiform kinnaru(m)” (Lawergren, 1998)

எப்லா நகரில் கின்னரம், மாரி நகரில் கின்னரதிம், அலலக் நகரில் கின்னருகுலி, ஹடுசாஸ் நகரில் கின்னாதலா, உகாரித் நகரில் கின்னரு, எம்மார் நகரில் கின்னரு, எகிப்தில் கின்னுரு என்று குறிப்பட்டுள்ளதாக ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் எபிரேய பைபிள் நூலில் கின்னார் என்று 42 முறை குறிப்பிட்டுள்ளதையும் அறியலாம். சிரிய நாட்டில் கின்னரு என்று இக்கருவி அழைக்கப்படுகிறது.

“… the Near East was actually the cradle for many ancient Greek instruments … The biblical instrument most similar to the lyre is the kinnor, and it was the most important musical instrument for the ancient Israelites, as it emerges from archaeological finds… . From the Near East, the lyre was adopted also by the Cretans and Mycenaeans…, especially for archaeological references, and the term seems to be first attested in Greece in a Linear B tablet from Thebes .. The word kinnor … exists also in Canaanite, Phoenician, Cypriot (Kinyras) and Ugaritic” (Provenza, 2014).

மேற்கண்ட ஆங்கிலக் கூற்றுப்படி நாம் இந்த கின்னார் என்று அழைக்கப்படும் சுமெரிய கின்னரம் பல நாடுகளுக்கும் இந்த நாகரிகத்திலிருந்து சென்றுள்ளதை அறியலாம். கிரேக்கர்களின் கின்னார் சுமெரிய நாகரிகத்திலிருந்து வந்தது என்பது வெளிப்படை.  பண்மைய கிரீட், மைசினியா, கண்ணன்;, பொனீசியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருவி வாசிக்கப்பட்டு வந்துள்ளதை அறியலாம்.

பல்வேறு நகரங்களில் அகழ்தெடுக்கப்பட்ட கருவி கீழ்கண்டவாறு இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.




ஒப்பாய்வு

கின்னரம் என்ற சொல் தமிழ் மொழியில் இருப்பதை அறியாத மேலை நாட்டவர், அதை சுமெரிய நாகரிகம் தழைத்தோங்கிய இடங்களின் மொழிகளில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் அகழாய்வுகளில்  நாம் இத்தகைய கருவிகளை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

ஆய்வாளர்கள் பலரும், குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த முனைவர் சதாசிவம் அவர்கள், மலேசியாவைச் சேர்ந்த முனைவர் லோகநாதன் அவர்கள் மற்றும் தமிழகத்தின் மாசோ விக்டர் ஆகியோர், சுமெரிய கியூணிபார்ம் மொழி தொல் தமிழ் என்பதை ஆய்ந்து நிறுவியுள்ளனர்.

இதன் அடிப்படையில், சொல் ஒற்றுமையைக் கொண்டு, தமிழகத்தின் கின்னரமும், சுமெரியரின் கின்னார் (கின்னரம்) என்ற கருவியும் ஒத்தவை என்ற முடிவுக்கு வரலாம். நம் தமிழ்க் கருவியும் சுமெரியரின் கின்னார் கருவியைப் போன்று இருக்கும் என்றும் தெளியலாம்.

முடிவுரை

கின்னரம் என்ற வார்த்தை கொண்டு சொல்லாய்வு செய்யப்பட்டு, தமிழகத்தின் கின்னரமும், தூர 
மேற்காசிய நாடுகளில் உள்ள கின்னாரமும் ஒத்தவை என்பதை இந்தக் கட்டுரை நிறுவுகிறது. இதன் மூலம்,
 தமிழ்ச் சுமெரியத் தொடர்புகளுக்கான பல சான்றுகள் உள்ள போதும். இந்த இசைக்கருவி மூலமாக 
மேலும் ஒரு சான்றினை வெளிக் கொணர்ந்துள்ளது. தமிழர் நாகரிகம் எங்கு தொடங்கியது என்பது 
இன்னும் முழுமையாக அறியப்படாத போதும், தமிழ்ச் சுமெரிய தொடர்புகளின் வலுவான சான்றாக 
இருக்கும் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. அத்துடன் நம் சங்க இலக்கியங்கள் சுமெரிய 
இலக்கியங்களின் சம காலத்தை உடையவை என்பதையும் சான்றுடன் நிறுவுகிறது. 
உசாத்துணை நூல்கள் 
தமிழ் நூல்கள்

  1. வடமலை நிகண்டு
  2. ஆசிரிய நிகண்டு
  3. தொல்காப்பியம்,  புறப்.பெருந்திணை
  4. பிங்கல நூற்பா
  5. கம்பராமாயணம்  
  6. காளமேகப் புலவர்
  7. பிங்கலந்தை
  8. தேவார நான்காம் திருமுறை
  9. தேவார பதினொன்றாம் திருமுறை
  10. பெரும்பாணற்றுப்படை
  11. சீவகசிந்தாமணி
  12. பண்டார மும்மணிக் கோவை
  13. திருவிளையாடல் புராணம்  
  14. போகர் கற்பம் 300 
  15. சிலப்பதிகாரம்
  16. நிகண்டு
  17. திருநள்ளாற்றுப்புராணம்
  18. முத்தி இலம்பகம்
  19. பெரியபுராணம்  
  20. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
  21. பாரதியார் விநாயகர் நான்மணிமாலை

இணையம்
1 - https://tamilandvedas.com/tag/ஆந்தையும்-சாவும்

2 - http://healthnews2all.blogspot.com/2017/01/

3 - http://www.tamilisaisangam.in/pan_research.php

ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள்
  1. Provenza, A., 2014. Soothing Lyres and epôidai: Music Therapy and the Cases of Orpheus,   
Empedocles and David. Music in Antiquity, p.308  
2. Lawergren, B., 1998. Distinctions among Canaanite, Philistine, and Israelite lyres,  
and their global lyrical contexts. Bulletin of the American Schools of Oriental Research 
309(1), pp.41-68.