4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

கொரோனா - கற்றதும் பெற்றதும் -முனைவர் ச.பிரேமகுமாரி

 

கொரோனா - கற்றதும் பெற்றதும்

                (முதல் அலை)

 

சீனப்பட்டு சீனப்பட்டாடை

சீனக்கற்கண்டு சீனக்கண்ணாடி..

சீனத்து வெகுமதியைத்

தொட்டால் பற்றிக் கொள்ளும்

தொட்ட பொருளிள் மறைந்தே கொல்லும்….

 

மூச்சு விட்டால் ஒட்டிக் கொள்ளும்

கொஞ்சம் விட்டால் உயிர் கொல்லும்..

காற்றில் வைரலாய்……

கொரோனா என்னும் காலனாய்…..!

 

காத்துக் கொள்ள மருந்தில்லை,

பார்த்துச் செல்ல வழியுமில்லை..

கொத்துக் கொத்தாய்ச் செத்து மடிந்தனர்,

பள்ளம் பார்த்துக் குவித்துப் புதைத்தனர்….!

 

பிணக்குவியலைத்

தந்தது சுனாமிப் பேரலை..

பிணக்குவியலைத்

தந்தது கொரோனாப் பேரலை……!

 

மக்கள் கூட்டம் வீதியிலில்லை,

மளிகைக்கடை திறக்கவில்லை

இறைச்சிக் கடையும் இயங்கவில்லை….

 

அரிசி பருப்பு கிடைக்கவில்லை,

பேருந்து ஓடவில்லை,

பெருங்கோயில் பூசையில்லை….

 

பால்காரர் வரவில்லை,

நாள்கணக்கில் வேலையில்லை..

செல்லும் இடமெங்கும்..

நள்ளென்று இருந்தது

நண்பகல் முழுவதும்….!

 

உழைக்கவும் வழியில்லை,

உழைத்தாலும் ஊதியமில்லை

பிழைக்கவும் இடமில்லை,

பிழைத்தாலும் பலனில்லை…..

 

துரத்தியது கொரோனா,

துன்பம் தந்தது பசியும் பட்டினியும்

கல்லென் சுற்றமொடு..

புலால் நாறும் பாணர்களாய்

படித்தோரும் என்போன்றோரும்….

 

உள்ளம் வாடி ஊரடங்கினாலும்,

உறங்காமல் பணிசெய்தோர்,

மருத்துவர் செவிலியர்,

மின்ஊழியர் அஞ்சல் அலுவலர்,

ஊடக நண்பர்இவர்

உயிர்க்கு உத்தரவாதமில்லை,

தியாகத்திற்கும் வெகுமதியில்லை….

 

கொரோனா தந்த பாடத்தில்,

வார்த்தைகள் வழிமறைக்க

நீதிநூல் வரிசையில்

பன்னிரண்டாம் இடம்பிடிக்க,

ஆசாரக் கோவையின்

அர்த்தமாய் விளங்க…..

 

நீராடிக் கால்கழுவி வாய்ப்பூசி

உண்ணும் முறையைச்

சொல்லித் தந்தது….

இஞ்சி மிளகு தாய்வீட்டுச் சீதனமானது..

 

வேம்பு தலையாத்த பாண்டிய மரபினராய்

வேம்பு மகளிர் கூந்தலிலும் சூடப்பட்டது..

மஞ்சள் வீட்டு முற்றத்தில் தெளிக்கப்பட்டது,

சாணம் பூசி மெழுகப்பட்டது…….!

 

கட்டிப்பிடி வைத்தியம்

வசூல்ராஜா சொன்னாலும்,

புணர்ச்சி பழகுதல் கூடாதென

வாசுகி ஐயன் சொன்ன

உணர்ச்சியே கொரோனாவுக்குக்

கிழமை தந்தது……..!

 

தொட்டுக் கொள்ளாமல்

தூர நின்று பேச வைத்தது

கட்டிக் கொள்ளாமல்

கை குவித்து வணங்கச் செய்தது….

மரபும் பண்பாடும்

மாறாத பாடமானது……!

 

உலகை உலுக்கிய கொரோனா

வலைத்தளத்தில் கை குலுக்கியது,

மீளாத் துயரத்திலும்

மீம்ஸ்களுக்குப் பஞ்சமில்லை……

 

குர்மா சொர்ணா கர்ணா எனப்

பாட்டிகளால் பெயர் சூட்டப்பட்டது,

வைரசோடு மீம்ஸ்களும் வைரலானது……!

 

மாணவர்களின் நெடுநாள்

நண்பனானது…..

ரமண மாமாவின் மௌசினை

மெதுவாய்க் குறைத்தது……!

 

எது எப்படியோ………

கவிபாடிக் கருத்துரைக்கும்

காலமல்ல கொரோனா

அல்வழியில் நடப்போரின்

உயிர் பறிக்கும்,

காலனே கொரோனா…….!

 

தன் நலத்திலும்,

தன்னலம் கொள்ளாமல்

சிந்திக்க வைத்தது கொரோனா……!

 

நித்தம் நிலையாமை

கூறும் கொரோனா,

புத்தர் மீண்டும்

பிறந்தாரா எனப் போதித்தது…….!

 

ஆசை கொள்ளாதிரு

அடுத்தவரை ஏசாதிரு,

உன்னைத் தனிமைப்படுத்து

உனக்காக மற்றவரைக் காத்திடு……

 

இன்பத்தைப் பகிர்ந்திடு

இல்லாததை மறந்திடு..

முற்றும் துறந்திடு,

முடிந்தவரை உதவிடு..

இருந்தவரை இருந்திடு,

எந்நேரமும் இறப்பு வரும் காத்திடு…….!

 

இறுதியாய்……..

 

போட்டி பொறாமை

சினம் சூழ்ச்சி

வஞ்சகம் ஆணவம்

சொத்து சேர்ப்பு எனப்

பித்துப் பிடித்த நம் புத்திக்குப்

பத்துப் போட்டது கொரோனா……!

 

…………………………………………………………………………………………………………

முனைவர் ச.பிரேமகுமாரி,