4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

பிரதிபூவன் கோழி : தீவிரத்தன்மையாகும் பெண்ணியம் - கா. அன்பரசன்

 

பிரதிபூவன் கோழி : தீவிரத்தன்மையாகும் பெண்ணியம்

கா. அன்பரசன்

முதுகலைத்தமிழ் இராண்டாமாண்டு

தமிழ்த்துறை

தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்.

சினிமா

எவ்வளவு அற்புதமான ஆயுதம்

நமக்கு அதில்

முதுகு சொறியத்தான் சம்மதம்

எத்தனை உன்னதமான அணுகுண்டு

நாம் அதற்குத் தருவதோ

மத்தாப்புக்குரிய மரியாதைதான்

வைரமுத்துவின் கவிதைவரிகள் நினைவிலாடுகின்றன. திரைமொழி எனும் பேராயுதத்திற்கு நாம் அளிக்கும் வரையறைக் குறித்து இக்கவிதையில் வைரமுத்து பேசியிருப்பார். 40 ஆண்டுக்காலமாய் திரைத்துறையில் இருப்பவர் இவ்வாறாகவே கவிதை புனைய காரணம் ஏனோ? தமிழ்த் திரையுலகம் கையாளும் கதைக்களமும் எடுத்துரைக்கும் காட்சியமைப்பும் ஏற்படுத்திய தாக்கம் என்பதே விடையாகி நிற்கிறது.

உடற்கட்டே இல்லாத கதைமாந்தன் (Hero) மலைப்போல் காட்சியளிக்கும் எதிர்மறை கதைமாந்தர்களை (Rowdys) ஒரே நொடியில் அடித்து அந்தரத்தில் பறக்கவிடுவதும், பாடல் காட்சிகளில் கதைமாந்தன் கழுத்து முதல் கால் வரை ஆடைகள் அணிந்திருக்க கதைமாந்தி (Heroine) மட்டும் அரைகுறை ஆடையில் சுழன்று கொண்டிருப்பதும், உருவகேலிக்கை வசனங்களும், ஆயிரம் கதை மாந்தர்கள் இருப்பினும் காட்சி அமைப்புகள் அனைத்தும் கதைமாந்தனை நோக்கிய குவியப்படுத்தலும் தமிழ்த்திரைமொழியின் அடிநாதம். அதற்காக தமிழ்த் திரைப்படங்கள் அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இல்லை. ஒரு சில படங்கள் இதிலிருந்து விலகி படமாக்கப்பட்டுள்ளன. வருத்தம் என்னவெனில் இப்படங்களின் வருகை எள்ளளவே.

தமிழ்த் திரைமொழியிலிருந்து மாறுபட்டு இருப்பவை மலையாள மொழித் திரைப்படங்கள். முன்புரைத்தாற்போல தமிழ்த் திரைமொழியின் காட்சியமைப்புகள் மலையாளத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பாலான மலையாள திரைப்பட இயக்குநர்கள் அத்தகு செயலாக்கத்திலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளவே விரும்புகின்றனர்.தமிழ் x மலையாள திரைமொழிகளுக்கிடையே பெருத்த இடைவெளி உண்டு. மரபாக்கம், மீட்டெடுத்தல், புத்தாக்கம் பெறல் முதலிய செயற்கூறுகள் இருமொழியிலும் வேறானவை. மரபு, மீட்டெடுப்பு என்பது தமிழ் x மலையாள திரைமொழியில் நேரெதிர் துருவங்களாகவும், புத்தாக்கம் என்பது ஏறக்குறைய ஒன்றிணைந்தே உள்ளன. புத்தாக்கத்தின் ஒன்றிணைவிற்கு தமிழ் x மலையாள கருத்தியல் ஒரே தளத்தில் இயங்குவதன் வெளிப்பாடு காரணமாகிறது.  இந்திய ஒன்றியத்தில் அறிவியல், மரபியல் சிந்தனைகளை உள்வாங்கி அதனை முற்போக்குவாதத்தில் கையாளும் மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளாவும் உள்ளன. கேரளா தன் முற்போக்குவாதத்தைத் திரைமொழியில் காட்ட ஒருபோதும் தயங்கியதில்லை. வெளிப்படையான அரசியல், உடைத்தெறியும் கட்டமைவு, ஜாதியம், பெண்ணியம், உடலரசியல் முதலானவற்றின் மீதான பொதுப்புத்தியை மலையாள திரைப்படங்கள் கேள்விக்கு உட்படுத்துகின்றது.  இத்தகு முன்னெடுப்புகளை தமிழ்த் திரைமொழியில் காண்பது அறிதே. மேற்கூறிய பொதுப்புத்திகளை விளிம்புநிலைக்கு உட்படுத்த எத்தனித்தாலும் தமிழ்த் திரையுலகம் அதனை வியாபார நோக்கிலும், விளம்பர நோக்கிலும் உட்படுத்தி விடுகின்றது.

மலையாள திரைப்படங்களான பிரதிபூவன்கோழி (2019) உயரே (2019) ஹோம் (2021) சாராஸ் (2021) மாலிக் (2021) அணும் பெணும் (2021) தி கிரேட் இந்தியன் கிட்சன் (2021) குருதி (2021) போன்றவை வெவ்வேறு தளத்தில் இயங்கினாலும் இவையாவும் பொதுபுத்தி சித்தாந்தங்களை கேள்வி கேட்பவனாக இருக்கின்றன. இப்படங்களில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் "சண்டகம்" சிறுகதையை மையமாகக் கொண்டு மஞ்சுவாரியர் நடிப்பில் வெளிவந்த பிரதிபூவன்கோழி திரைப்படத்தைப் பற்றியே இக்கட்டுரை அலசுகிறது.

பிரதிபூவன் கோழியில் மாதுரி (மஞ்சு வாரியர்) ×அனந்தப்பன் (ரோஷன் ஆண்ட்ரூஸ்) இருவரின் உரசலை அடித்தளமாக்கி உளவியலும், தீவிரத்தன்மையோடு இயைந்த பெண்ணியமும் கலந்து படமாக்கப்பட்டிருக்கிறது. தன் விருப்பமின்றி தன்னைத் தொட்ட ஒருவனைத் திருப்பி அடிக்க வேண்டும் என்னும் ஒற்றைவரியைக் கொண்டே படம் நீளுகிறது. மாதுரி ஆடையகத்தில் வேலை செய்யும் பெண்ணாக வருகிறாள். பெற்றோரோடு எளிமையாகவும் மகிழ்வாகவும் வாழ்கிறாள். ரோஷம்மா (அனுஸ்ரீ) மாதுரியின் தோழி. இருவரும் ஒன்றாகவே வேலைக்குச் செல்வர். பயணம் பொதுப்பேருந்திலேயே நிகழும் இப்படியிருக்கையில் ஒருநாள் அனந்தப்பன் மாதுரியின் பின்னழகைத் தீண்டிவிட கதைக்களம் இங்கிருந்து உயிர்கொள்கிறது. தன் விருப்பமின்றி தீண்டியவனைத் திருப்பி அடிக்க முயல்வதும் அது நிறைவேறியதா என்பதும் மீதிக் கதை.

திரைப்படத்தின் தொடக்கத்தில் மாதுரி இளைய பெண்ணொருத்திக்கு நவயுக ஆடையை (Modern Dress) அணிவித்து, அப்பெண்ணின் அம்மாவிடம் காண்பிப்பாள். அம்மா பூரிப்படைய அப்பனோ "நீ என்ன கூத்துக் காரியா நடிக்கவா போற....?" எனக் கேட்பான். அழுதுகொண்டிருக்கும் அப்பெண்ணிடம் "நீ கவலைப் படாதே மேல நல்லா படிச்சு வேலைக்குப் போயி உனக்கு பிடிச்ச மாதிரி ஆடையை அணிந்துகொள்" என மாதுரி கூறுவாள். பெண்களை சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி அடி எடுத்து வைக்குமாறு கூறும் அறைக்கூவல் இது. சிறுசிறு தேவைகளுக்கு எல்லாம்  ஆண் வர்க்கத்தை சார்ந்து இருப்பதால்தான் அடிமையாகி இருக்கிறோம். நமக்கென ஒரு வேலை அதன்வழி நம் தேவைகளைப் பூர்த்தி செய்து சுயமாக வாழலாம் என்பதே இவ்வசனத்தின் அடிநாதம்.

பேருந்தில் மாதுரி இடம் நிகழ்ந்த பாலியல் சீண்டல்கள் தமிழ்த்திரையில் ஏராளமான காட்சிகளுண்டு. உதாரணமாக தனுஷின் "சுள்ளான்" திரைப்படத்தில் பெண்ணை ஒருவன் தீண்டுவான். உடனே அவளது எதிர்வு என்ன....? தீண்டியவனைத் தாக்கினாளா? இல்லை தன் குடும்ப பொருளாதார நிலை, குடும்ப சிக்கல்கள் குறித்தான வசனங்களைப் பேசி "ஐயோ பாவம்" என உணர்ச்சி படவைப்பாள். இலக்கியமோ, திரைமொழியோ எதுவாகினும் உணர்ச்சி பட வைக்காமல் இருத்தல் வேண்டும். இதனை பிரதிபூவன் கோழியில் ரோஷன் ஆண்ட்ரூஸ் நளினமாக கையாண்டிருப்பார். தன் விருப்பின்றி தீண்டியவனை அடிக்க வேண்டுமென்ற தீவிரத்தன்மையை மாதுரி வழியாக வெளிக்கொணர்ந்து இருப்பார்கள். பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினாள்வெளியே சொல்லாமல் தங்களுக்கு உள்ளிருந்து அழுவர் எனும் பொதுப்புத்தியை உடைத்தெறிந்து பாலியல் வன்கொடுமையாளர்களைத் திருப்பியடிக்க வேண்டும் என்ற சித்தாந்தம் முன்வைக்கப்படும்.  இது மற்ற பெண்களுக்கு நம்பிக்கையாகவும் முன்னுதாரணமாகவும் அமைந்து விடுகிறது.

அனந்தப்பனின் பாலியல் சீண்டலிருந்து வெளியே வராமல் அந்த நினைவோடு வரும் மாதுரி வீட்டில் மின்விளக்குகளை(Lights) அணைத்துவிட்டு இருளில் இருக்க விரும்புகிறாள். தமிழ்த் திரைமொழியில் காட்டும் அழுகாச்சி பெண்களைப் போல் அழாமல் அனந்தப்பனை எவ்வாறு பழிவாங்க வேண்டுமென்று எண்ணுகிறாள். ஆயிரம் வார்த்தைகள் தரும் ஆறுதலைவிட தனிமையில் மௌனம் அளிக்கும் போதனையே வீரியமானது. அதற்கேற்ப மாதுரி தன்னை சுயபோதனைக்கு உள்ளாக்கிக் கொள்கிறாள். அனந்தப்பனை சந்தையில் தேடி அலைகிறாள். அப்பொழுது அவன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறான். ஊர்சனமே அவனை மிரட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாதுரி அங்கேயே அவனை அடிக்க துணிகிறாள் ரோசமாவே அவளை சமாதானப்படுத்தி சாந்தப்படுத்துகிறாள். அனந்தப்பன் சூராதிசூரனாக இருந்தாலும் அவனைக்கண்டு அஞ்சாமல் தன்  தீவிரத்தன்மையில் இருந்து சற்றும் விலகாமல் அப்படியே இருக்கிறாள். ஆண்களின் உடல் வலிமையை விட பெண்களின் மன வலிமையே சிறந்தது என்பதை கண்ணசைவில் காண்பித்து செல்வாள்.

அனந்தப்பனை கைது செய்யக்கோரி காவல் துறைக்கு செல்கிறாள். அங்கே இருக்கும் துணை ஆய்வாளரும் அனந்தப்பனின் நீட்சியாகவே இருக்கிறான். அவனும் மாதுரியை போதைப் பொருளாகவே காண்கிறான். இதனைக் கண்டு அஞ்சாமல் துணை ஆய்வாளனது நடத்தையை அவன் மனைவியிடம் கூற வீட்டிற்கே செல்கிறாள். துணை ஆய்வாளன் அவளிடம் கண்ணசைவில் வேண்டாமென சொல்லுகையில் அங்கிருந்து சென்றுவிடுகிறாள். மாதுரி வீட்டிற்கு வந்துவிடவே சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பது போல துணை ஆய்வாளன் காவல் ஆட்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான். காவல் ஆட்கள் வீட்டை சோதனை இடுகின்றனர். அவளை உளவியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். ஆனால், நீ காவல்துறையின் அதிகாரத்தொனியில் என்னை அணுகினாலும் தன் முடிவிலிருந்து பிசகாமல் இருக்கிறாள்.

முடிவாக தொடர்வண்டி (Railway station) நிலையத்தில் அனந்தப்பனை மாதுரி மீண்டும் சந்திக்கிறாள் இருவரும் ஒருவரைப்  பார்த்து ஒருவர் நெருங்குகின்றனர். இடையே தொடர்வண்டி ஒன்று குறுக்கிடுகிறது. அதற்குள் அனந்தப்பனை கொலையாட்கள் கொலை செய்யத் துணிகின்றனர். உயிருக்கு போராடும் அனந்தப்பனை மாதுரியும், ரோசமாவும் பார்க்கின்றனர். ரோசமா "உனக்கு செய்த தீமைக்கு கடவுள் கொடுத்த தண்டனையா நெனச்சுக்கோ என்று சொல்கிறாள்" மாதுரி அதற்கு "இது கடவுள் கொடுத்த தண்டனை என்றால் நான் இன்னும் அவனுக்கு தண்டனைக் கொடுக்க வில்லை" என்று அனந்தப்பனை மகிழுந்தில்(Car) ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கிறாள். இக்காட்சியில் மனிதாபிமானமும் இரக்கமும் அழகான வசனங்களாலும், காட்சியினாலும் கடத்தப்பட்டிருக்கும். அனந்தப்பனை திருப்பியடிக்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பினும் அவனை உயிர்ப்பிக்க செய்யவே மாதுரி எத்தனிக்கிறாள். தீவிரத்தன்மை ×  மனிதாபிமானம் இக்காட்சியில் இருநிலை தன்மையில் சிக்கி மாதுரி தவிக்கிறாள்.

குணமான பிறகு அனந்தப்பன் மருத்துவமனையிலிருந்து (Hospital) தப்பித்து மறைவான இடத்திற்கு சென்று ஒளிந்துக் கொள்கிறான். அதனை எவ்வாறாகவே யூகித்து அறிந்து மாதுரி அவ்விடம் செல்கிறாள். படுத்தப் படுக்கையாகி இருக்கும் அனந்தப்பனை அடிக்க முயலுகையில் "தான் செய்தது தவறு" எனும் தொனியில் மௌனமாகி அனந்தப்பன் கண்ணீர் சிந்த அவனை அறைய முடியாமல் அங்கிருந்து விலகி நகர்கிறாள். அவனை அடிக்க முடியவில்லையே என்ற எண்ணத்தின் தீவிரத்தன்மை குறையாமலே மாதிரி இருக்கிறாள். இப்படியிருக்கையில் அவள் பயணம் செய்யும் பேருந்தில் பள்ளி மாணவியொருத்தியை ஆண்மகன் தீண்டிவிட அனந்தப்பனுக்கு மாற்றாக, பதிலியாக அவனை நினைத்து பேருந்தில் அடிக்கிறாள். சாலையில் இறங்கி அவன் ஓடுகையிலும் விடாது அவனைத் துரத்தி அடிக்கிறாள். தீண்டிய கையை கல்லால் அடித்து நசுக்குகிறாள். இதனைக் கண்ட பள்ளி மாணவி அஞ்சாமல் அவனை ஓங்கி அறைகிறாள். மழை பெய்ய மாதுரி நனைந்தப்படி காட்சி முடிவுறுகிறது.

மேற்கண்ட காட்சியில் சில விஷயங்களைக் கவனித்தல் வேண்டும். தன் கோபத்தையும் தீவிரதன்மையையும் போக்க முடியாமல் அவதிப்படுகையில் அனந்தப்பனை போல இன்னொருத்தன் அதே செயலை மற்றொரு பெண்ணிடம் செய்கிறான். அனந்தப்பனுக்கு பதிலியாக இவன் மாதுரியால் பார்க்கப்பட்டு தன் கோபத்தை மடைமாற்றுகிறாள். அனந்தப்பனை எவ்வாறு அடிக்க எத்தனித்தாலோ அதனை அவன் மீது செய்கிறாள். மற்றொன்று இக்காட்சியில் பள்ளி மாணவியைத் தீண்டியவனது கையைக்கல்லால் அடித்து நொறுக்குவது என்பது பெண்ணினது பொதுப்புத்திகளை நசுக்கி சமனிடுவது என்பதாகவும், பெண்களைப் போதைப் பொருளாக நோக்குவதை சிதைப்பதாகவும் குறியீட்டுத் தன்மையில் பொருள் கொள்ளலாம். இறுதியானது மாதுரி மழையில் நனைந்து செல்வது. இப்படத்தின் தொடக்க முதல் எந்த இடத்திலும்  மழை பெய்கிறது போன்ற காட்சிகள் இருக்காது. மழை பெய்ததற்கு அறிகுறியாக ஆங்காங்கே நீர் தேங்கிய இடங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால், இறுதியில் மட்டும் மாதுரி மழையில் நனைவது போன்ற காட்சி இருக்கும். கதைமாந்தரின் மௌன இடைவெளி, குறியீடாக்கம் மூலமாக படைப்பாளன் தன்னை அடையாளப்படுத்துவான். இம்மழைக்காட்சி படைப்பாளன் தன்னை வெளிப்படுத்துவதற்கான ஏதுவாகி விட்டது. மாதுரியின் தீவிரத்தன்மை குறைந்ததற்கும் அவளின் நிலை கண்டு வானமே மழைபெய்ததாகவும் குறியீடாக காட்டப்பட்டிருக்கும். படம் முழுவதும் கோபத் தொனியினையே முகமாக கொண்டிருக்கும் மாதுரி மழையால் தீவிரத்தன்மைக் குறைந்து சற்று புன்முறுவலாக காட்டப்பட்டிருப்பாள். மழை, கை இரண்டும் குறியீடாக்கி காட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில்அனந்தப்பன், துணை ஆய்வாளன், இறுதியாக வரும் பாலியல் தீண்டல் ஆண், மாதுரியின் பக்கத்து வீட்டு ஆண் என அனைத்து ஆண்களையுமே எதிர்மறையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? என்ற ஐயம் பொது பார்வையாளர்களிடையே எழக்கூடும். இதற்கு விடை காண்பது என்பது எளிதானதே. இப்படத்தில் காட்டப்படும் அனைத்து ஆண்களின் பாத்திர அமைப்பு எதிர்மறையாகக் காட்டப்படவில்லை. மாறாக, சமூகத்தில் பெண்கள் மீது அவரவர் வைத்திருக்கும் பொதுப்புத்திகளின் பிரதிபலிப்பாகவே உள்ளது. இந்த எதிர்மறை பாத்திர அமைப்பிலிருந்து விலக்காக ரோசாமாவின் கணவரும், மாதுரியின் தந்தை இருவரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனார். ரோசமாவின் கணவன் தங்களுக்கு இடையே உடல் உறவு நிலையை பற்றி முகம் கோணாமல் மாதுரியிடம் சொல்வான். தங்கள் உறவு நிலைகளை பிற பெண்களிடமே பெண்கள் சொல்ல மறுக்கும் பட்சத்தில் ரோசமாவின் கணவன் பாத்திரம் புதிதாகக் கூறவே உள்ளது. மற்றொன்று மாதுரியின் தந்தை பாத்திரம் மகளின் திருமணம் முடிவை அவளே ஏற்பாள் என்பதும், தன் மகள் கத்தியுடன் ஒருவனை அடிக்க எத்தனிக்கிறாள் என்பதை அறிந்த பின்பும் அது அவளின் தனிப்பட்ட விஷயம். அதில் நான் தலையிடுவது தவறு என தன் மனைவியிடம் உரையாடும் இடம் எல்லாம் அற்புதம்.

இப்படத்தின் கவனிக்கத்தக்க விஷயங்களாக பாலமுருகனின் ஒளிப்பதிவும், கோபிசுந்தரின் பின்னணியிசையும் உள்ளது. ஒளிப்பதிவு மூலமாக பாலமுருகன் மாதுரியை நோக்கியே காட்சிகளைக் குவியப்படுத்தாமல் இயல்பு நிலையிலேயே படமாக்கி உள்ளார். பிறகு, கோபிசுந்தர் மாதுரி × அனந்தப்பன் உரசலைப் பேசும்போதெல்லாம் வரும் பின்னணி இசையை குரூரத்தன்மையோடும் தீவிரத்தன்மையோடும்  இயைந்தவாறு காட்சிக்கு வலுச்சேர்த்து இருக்கிறார்.

இவையாவும் கடந்த பிறகு இப்படத்தின் கதை மாந்தர் தேர்வும் படத்தின் கதைக்கருவுக்கு வலு சேர்க்கிறது. அவரவர் தன் நிலை உணர்ந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் எதிர்மறை காட்சியாக இறுதியாக வரும் மாதுரி அனந்தப்பனை அடிக்க எத்தனிக்கையில் அவனது உடல்நிலைக் கருதி அடிக்காமல் விலகி செல்கிறாள். என்னதான் படம் முழுவதும் தீவிரத்தன்மையோடு வந்தாலும் மாதுரி இவ்விடத்தில் பெண்ணுக்கே உரித்தான மென்மை தன்மையைக் கொண்டவளாக காட்டப்பட்டுள்ளளா? என்ற ஐயம் எழுகிறது. இவையெல்லாம் கடந்து பார்க்கையில் பிரதிபூவன் கோழி திரைமொழிக்கு நல்வரவே.