4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

மகன் தந்தைக்கு ஆற்றிய உதவி! - முனைவர் சித்ரா ( ஹாங்காங்)

 

மகன் தந்தைக்கு ஆற்றிய உதவி!

 

(மகாபாரதத்தின் பீஷ்மர் பற்றியநாடகம்)

 

 

முனைவர் சித்ரா

ஹாங்காங்

 

 


உறுப்பினர் விவரம்

 

 

சந்தனு - இளைஞன்

(இருபத்தி இரண்டு வயது உடையவன்; இளவரசன்திண்மையான தோள்களை  உடையவன்வீரம்  மிக்கவன்வித்தைகள் பல  கற்றவன்)

 

சந்தனு - நடுத்தர வயதுடையவர்

(நாற்பத்தி இரண்டு வயது உடையவர்; அரசர்திண்மையான தோள்களை உடையவர்வீரம் மிக்கவர்வித்தைகள் பல கற்றவர்)

 

கங்காதேவி 

 (வாலைப்பெண்; 20 வயது உடையவள்; திண்மையான மனம் கொண்டவள்; தைரியசாலி; வீரம் மிகக் கொண்டவள்மகனின் மேல் அன்பு கொண்டவள்)

 

தேவவிரதன் - சிறுவன் 

(8 வயது உடையவன்; உயரமான சிறுவன்; காட்டுவாசியின் தினவுதாயின் பால் மிகுந்த அன்பு கொண்டவன்)

 

தேவவிரதன் - இளைஞன்

(இருபதுவயது உடையவன்திண்மையான தோள்களை உடையவன்வீரம் மிக்கவன்வித்தைகள் பல கற்றவன்)

 

தச ராஜன்

நடுத்தர வயதுடையவர்

(40 வயது  உடையவர்; மீனவர்; கரிய நிறத்தவர்திண்மையான தோள்களை உடையவர்வீரம் மிக்கவர்)

 

 


 

அறிமுகம்

 

(குரல் மட்டும் ஒலிப்பதாகவோ அல்லது சந்தனு நேராக நின்று பேசுவதாகவோ கொள்ளலாம்)

 

என்னை யார் என்று தெரிகிறதா? என் பெயர் தேவவிரதன். என் தந்தை பீஷ்மர் என்று பிறகு எனக்கு பெயர் தந்தார். மகாபாரத கதையில் முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். முதலில் இருந்து கடைசிவரை இருக்கும் கதாபாத்திரம். என்னுடைய தந்தை சந்தனு மகாராஜா தாய் கங்காதேவி. என் தாய் தந்தையை விட்டு போன பல வருடங்களுக்குப் பிறகு தந்தை சத்தியவதி என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த என் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்குத்தான் திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு பிறந்தார்கள். திருதராஷ்டிரனுக்கு பிறந்தவர்களை கௌரவர்கள் என்றும் பாண்டுவிற்கு பிறந்தவர்களை பாண்டவர்கள் என்றும் கூறுவார்கள்.

 

இந்த அறிமுகத்துடன் என்னுடைய கதையை, பீஷ்மருடைய துவக்க கால கதை என்ன என்பதை இந்த நாடகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதோ 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி' நாடகம்.

 


 

காட்சி 1

 

உறுப்பினர்கள்: சந்தனு, கங்காதேவி

காலம்: காலை வேளை

இடம்: கங்கை ஆற்றங்கரை

 

காட்சியின் முக்கிய வசனம்:

நான் செய்யும் எந்த செயலை பற்றியும் கேட்கக் கூடாது.’

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

மனைவியிடம் நயந்து பேசுதல் 

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

கையறு நிலை

 

 

(மிகவும் வருத்தத்துடன் இருக்கும் சந்தனு கங்காதேவி வருவதை பார்த்ததும்)

 

சந்தனு: தேவி.. குழந்தையை எங்கே கொண்டு செல்கிறாய்?

 

கங்காதேவி: அரசே.. நான் செய்யும் எந்த செயலை பற்றியும் கேட்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா! மறந்துவிட்டீர்களா?

 

சந்தனு: மறக்கவில்லை தேவி.. இதற்கு முன்பு பிறந்த 8 குழந்தைகளையும் பிறந்ததுமே நீ கங்கை நதியில் விட்டு வந்ததை பார்த்தேன். இந்தக் குழந்தையையும் நீ அப்படி செய்து விடக்கூடாது என்பதற்காக தான் கேட்கிறேன்.

 

கங்காதேவி: அரசே.. நான் உங்களை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது.

 

சந்தனு: தேவி.. என்ன இது? சந்திர வம்சத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் கேட்டேன்.

 

கங்காதேவி: அதெல்லாம் எனக்குத் தெரியாது. நம் திருமணத்தின்போது நான் சொல்லியது என்ன? நான் செய்யும் செயலைப் பற்றி கேட்டால் உங்களை விட்டு சென்று விடுவேன் என்பதுதானே!

 

சந்தனு: தேவி.. என்னை மன்னித்துவிடு! குழந்தையை என்ன செய்தாலும் பரவாயில்லை.. நீ என்னை விட்டு செல்ல வேண்டாம்..

 

கங்காதேவி: அரசே.. மன்னிக்கவும். நாம் பிரியும் நேரம் வந்துவிட்டது.

 

(கங்காதேவி குழந்தையுடன் செல்லுதல்)

 

சந்தனு: தேவி... குழந்தை?

 

கங்காதேவி: சில காலம் குழந்தையை நானே வளர்த்து, சமயம் வரும்போது உங்களிடம் சேர்க்கிறேன்.

 

சந்தனு: தேவி.. என்ன இது? அநியாயம்.. நீயும் போகிறேன் என்கிறாய்.. குழந்தையையும் எடுத்துச் செல்வேன் என்கிறாயே! நியாயமா இது?

 

கங்காதேவி: நியாய அநியாயத்திற்கு இங்கு இடம் இல்லை. நான் சொன்னது போல் தான் நடக்கும். சென்று வருகிறேன் அரசே...

 

(கங்காதேவி குழந்தையுடன் செல்லுதல்; சந்தனு வருத்தத்துடன் நிற்றல்)

 

-          காட்சி முடிவு -

 


 

காட்சி 2

 

உறுப்பினர்கள்: சந்தனு, தேவவிரதன், கங்காதேவி

காலம்: காலை வேளை

இடம்: கங்கை ஆற்றங்கரை

 

காட்சியின் முக்கிய வசனம்:

தேவவிரதன் உங்களிடம் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது.’

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

நெடுங்காலத்திற்கு பின்பு மகனையும் மனைவியையும் சந்திப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை காட்டும் அம்சம்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

குடும்பத்தினரை சந்தித்ததில் மகிழ்ச்சியும், மனைவியை  பிரிவதில் கவலையும்

 

(சிறுவன் தேவவிரதன் காட்டுப்பகுதியில் ஒரு குன்றின்மேல் கல்லை உருட்டி விளையாடிக் கொண்டு இருத்தல்; சந்தனு அவனைப் பார்த்துவிட்டு அருகில் வந்து)

 

சந்தனு: என்ன இது? தனியாக இந்தக் காட்டில் இருக்கிறாயே! பயமாக இல்லையா?

 

தேவவிரதன்: நான் எதற்கு பயப்பட வேண்டும்? நான் வீரன்.

 

சந்தனு: உம்..   உம்.  நல்ல வீரன் தான்.. நீ யார்? உன் பெயர் என்ன?

 

தேவவிரதன்: என் பெயர் தேவவிரதன்...

 

சந்தனு: அருமையான பெயர்... கடவுளுக்கு பணிந்தவன். அது சரி.. உன்னுடைய தாய் தந்தை?

 

தேவவிரதன்: என்னுடைய தாயார் கங்காதேவி..

 

சந்தனு: கங்கா தேவி! அவர்கள் எங்கே?

 

தேவவிரதன்: நான் கூப்பிட்டதும் வருவார்கள்.

 

சந்தனு: அப்படியா! எங்கே கூப்பிடு... பார்க்கலாம். இந்த வீரனின் தாயாரை காண ஆவலாக இருக்கிறது.

 

தேவவிரதன்: அம்மா.. இங்கே வாருங்கள்.

 

(கங்காதேவி வருதல்; கங்கா தேவியை பார்த்ததும் சந்தனுவின் முகத்தில் வியப்பு) 

 

சந்தனு: தேவியா? அப்படி என்றால் இவன்?

 

கங்காதேவி: ஆம் அரசே.. இவன் தங்களுடைய மகன் தான். சந்திர வம்சத்து வாரிசு. தேவவிரதன் உங்களிடம் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

 

சந்தனு: அப்படி என்றால் நாம் அனைவரும் அரண்மனைக்குச் செல்லலாம் வாருங்கள்.

 

( சந்தனு திரும்பி நடக்க முற்படுதல்)

 

கங்காதேவி:அரசே! நில்லுங்கள்.

 

சந்தனு: என்ன தேவி?

 

கங்காதேவி: நீங்கள் உங்கள் மகனை அழைத்துச் செல்லலாம். ஆனால் என்னால் வர முடியாது.

 

சந்தனு: (கவலையுடன்) என்ன தேவி? இவனோ சிறுவன். நீயும் எங்களுடன் வந்தால் நன்றாக இருக்கும்.

 

தேவவிரதன்: ஆமாம் தாயே!

 

கங்காதேவி: அரசே! அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் தனியாக இருந்து பழகியவன். தேவைப்பட்டால் மட்டுமே நான் வந்து கவனித்து வந்தேன்.

 

சந்தனு: உன்னிடம் என்னால் பேசி வெற்றி பெற முடியாது.

 

கங்காதேவி: தேவவிரதா! இவர் தான் உன் தந்தை. இனிமேல் நீ அவருடன் சென்று வாழலாம்.

 

தேவவிரதன்: அம்மா.. என்னுடைய தந்தையை காட்டியதற்கு நன்றி. நான் உங்கள் பெயர் சிறப்பாக இருக்கும் வண்ணம் நடப்பேன்.

 

கங்காதேவி: கவலை வேண்டாம் தேவ  விரதா.  உன் பெயர் உலகம் உள்ளளவும் இருக்கும் வண்ணம் பெயர் பெறுவாய். என் வாழ்த்துக்கள்

 

தேவவிரதன்: சென்று வருகிறேன் தாயே!

 

சந்தனு: (வருத்தத்துடன்) தேவி... நாங்கள் சென்று வருகிறோம்.

 

(இருவரும் செல்லுதல்)

 

கங்காதேவி: (சற்று வருத்தத்துடன்) ஆகட்டும் அரசே!

 

-          காட்சி முடிவு -

 


 

காட்சி 3

 

உறுப்பினர்கள்: சந்தனு, தேவவிரதன்

காலம்:  மாலை வேளை

இடம்: அரண்மனையில்  அறை

 

காட்சியின் முக்கிய வசனம்:

உனக்கு இளவரசு பட்டம் கட்ட முடிவு செய்துள்ளேன்.’

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

தந்தை மகன் இருவரிடையே உள்ள உறவினையும் பாசத்தையும் எடுத்துக்காட்டும் அம்சம்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

அரசியல் பொறுப்புணர்வு

 

(தேவவிரதன் தந்தையைக் காண வருதல்; சந்தனு நாற்காலியில் வீற்றிருத்தல்)

 

சந்தனு: தேவவிரதா!  நாடு எப்படி உள்ளது? மக்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்?

 

தேவவிரதன்:  (தலைகுனிந்து வணங்கிவிட்டு) தந்தையே! தங்களது ஆட்சியில் அனைத்தும் நன்றாகவே இருக்கிறது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

 

சந்தனு: தேவவிரதா! நீயும் இப்போது எல்லா கலைகளையும் கற்று அரசனுக்கு வேண்டிய அனைத்து தகுதியும் பெற்று விட்டாய்.

 

தேவவிரதன்: (மண்டியிட்டு வணங்கி) தந்தையே! எல்லாம் தங்களது ஆசிகள்.

 

சந்தனு: நான் சொல்ல வந்தது என்னவென்றால், உனக்கு இளவரசு பட்டம் கட்ட முடிவு செய்துள்ளேன்.

 

தேவவிரதன்: (கைகளைக் கூப்பி) தங்கள் விருப்பம் தந்தையே!

 

சந்தனு: (ஆணையிடும் தோரணையில்) இப்போது போலவே நாடு எப்போதும் சுபிட்சமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உண்மை வழியில் நடக்க வேண்டும். நீதி தவறாமல் ஆள வேண்டும்.

 

தேவவிரதன்: (பணிவுடன்) முயல்கிறேன் தந்தையே!

 

சந்தனு: முயல்கிறேன் என்று கூறுவது போதாது. செய்து காட்டுகிறேன் என்று சொல்லவேண்டும்.

 

தேவவிரதன்: (கம்பீரத்துடன்) ஆகட்டும் தந்தையே! உண்மை வழியில் நீதி தவறாமல் நாட்டை வழி நடத்துகிறேன். இது உறுதி.

 

சந்தனு: (மகிழ்ச்சியுடன்) இதுவே சிறந்த மொழி. நான் இன்னும் சில காலம் உன்னுடன் இருந்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ள எண்ணுகிறேன்.

 

தேவவிரதன்: ஆகட்டும் தந்தையே! என்னுடைய ஆட்சியில் நாடு எப்படி இருக்கிறது என்று பார்த்து விட்டு பிறகு இந்த முடிவை எடுத்தால் நல்லது.

 

சந்தனு: நல்லது மகனே! உன்னிடத்தில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. என்னை விடவும் நீ நல்லாட்சியை தருவாய் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. தேவவிரதா! உன்னுடைய ஆட்சி நல்ல விதம் நடக்க என் வாழ்த்துக்கள்.

 

தேவவிரதன்: (மண்டியிட்டு வணங்கி) நன்றி தந்தையே! உங்கள் ஆசிகள் இருந்தால் நான் வெற்றி பெறுவது உறுதி. சென்று வருகிறேன் தந்தையே!

 

சந்தனு: நல்லது மகனே! வெற்றி எப்போதும் உன் பக்கம் இருக்கட்டும்.

 

(தேவவிரதன் மீண்டும் வணங்கி விட்டு செல்லுதல்)

 

-          காட்சி முடிவு -

 


 

காட்சி 4

 

உறுப்பினர்கள்: சந்தனு, தச ராஜன்

காலம்:  மாலை வேளை

இடம்: கடற்கரையில் ஒரு பகுதி

 

காட்சியின் முக்கிய வசனம்:

அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன?’

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

தந்தை மகளின் எதிர்காலத்தை எண்ணிப் பார்க்கும் நிலையால் ஏற்படும் உணர்வுகள் கூடிய அம்சம் 

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

தந்தை மகளிடம் கொண்ட பரிவு

 

(அரசர் சந்தனுமிடுக்குடன் தச ராஜனைக் காணவருதல்)

 

தச ராஜன்: (பணிவுடன்) வாருங்கள்... அரசே வாருங்கள்.. நீங்களோ பேரரசர்... இந்த எளிய மீனவர் தலைவனைக் காண வந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.

 

சந்தனு: அதெல்லாம் இருக்கட்டும்.. தச ராஜனே! நான் வந்த காரணம்...

 

தச ராஜன்: அறிவேன் அரசே.. என் மகள் சத்தியவதி நடந்த விவரங்களை வந்து கூறினாள்.

 

சந்தனு: தச ராஜனே! நான் வேட்டைக்கு வந்து இருந்தேன். அப்போது உங்கள் மகள் சத்தியவதியை கண்டேன். அவளை மணக்க விரும்புகிறேன். அதனால் நேரே பெண் கேட்க வந்தேன்.

 

தச ராஜன்: அரசே! தவறாக எண்ண வேண்டாம். உங்கள் எண்ணம் சரியானதா? உங்களை மணக்க என் பெண் தகுதியானவளா?

 

சந்தனு: தகுதியைப் பற்றி யோசிக்க வேண்டாம். உங்கள் பெண்ணை மணக்க எனக்கு பிடித்து விட்டது. நான் நன்கு யோசித்து விட்டு தான் பெண் கேட்க வந்தேன்.

 

தச ராஜன்: (தயங்கிய வண்ணம்) இருந்தாலும் அரசே..

 

சந்தனு: இனி என்ன தயக்கம்... கேட்க வேண்டியதைக் கேளுங்கள்...

 

தச ராஜன்: அரசே! நீங்கள் மாபெரும் மனிதர். உங்களுக்கு பெண் கொடுக்க எனக்கு ஏதும் தயக்கம் இல்லை. உங்களுக்கு மகன் இருக்கிறார். அவருக்கு இளவரசர் பட்டமும் கட்டி விட்டீர்கள்.

 

சந்தனு: அதற்கு என்ன?

 

தச ராஜன்: (தயக்கத்துடன் எச்சில் விழுங்கி) அரசே! மறுபடியும் கேட்பதற்கு மன்னியுங்கள். சத்தியவதி என் மகள். நான் அவளது எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன? இளவரசர் தானே அரசனாக ஆக முடியும்.

 

சந்தனு: (வியப்புடனும் வருத்தத்துடனும்) அதனால்?

 

தச ராஜன்: என்னுடைய மகளுக்குப் பிறக்கும் குழந்தை அரசன் ஆவது என்றால் எனக்கு சம்மதம். நான் சொன்ன சொல் கேட்டு கோபிக்க வேண்டாம். நான் பெண்ணின் தந்தை ஆயிற்றே! அதனால்தான் இப்படிப் பேச வேண்டி இருக்கிறது.  (வணங்கி) மன்னித்துவிடுங்கள்.

 

சந்தனு: (ஆழ்ந்த யோசனை செய்துவிட்டு) தச ராஜனே! உங்கள் மகளை நான் மணக்க விரும்புவது உண்மை. ஆனால் எனக்கு என் மகன் தேவவிரதன் அதை விடவும் முக்கியம். அவனுக்குத் துன்பம் கொடுக்க விரும்பவில்லை. நான் சென்று வருகிறேன்.

 

தச ராஜன்: (வணங்கி) அரசே! என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

 

சந்தனு: (வருத்தத்துடன்) பரவாயில்லை தச ராஜனே!

 

(சந்தனு செல்லுதல்)

 

-          காட்சி முடிவு -

 


 

காட்சி 5

 

உறுப்பினர்கள் தேவவிரதன், சந்தனு

காலம்: மாலை வேளை

இடம்: அரண்மனையில் அறை 

 

காட்சியின் முக்கிய வசனம்:

நீங்கள் வருத்தத்துடன் காணப்படுவதே சங்கடமாக இருக்கிறது.

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

மகன் தந்தை கொண்ட வருத்தத்தை பற்றி அறிந்து செயல்படும் அம்சம்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

மகன் தந்தையிடம் கொண்ட கனிவு

 

(அரசர் சந்தனு வருத்தத்துடன் யோசனை செய்துகொண்டு இருக்க, இளவரசன் தேவவிரதன் வருதல்)

 

தேவவிரதன்: தந்தையே! வணக்கம்.

 

சந்தனு: வா மகனே! வா! நீயும் நாடும்  சுகம்தானே?

 

தேவவிரதன்: தந்தையே? யாவரும் நலம். ஒரே ஒரு மனக்குறை மட்டும் உண்டு.

 

சந்தனு: என்ன மகனே அது? என் மகன் வருத்தப்படுவதா? கூடவே கூடாது.

 

தேவவிரதன்: நீங்களோ நீதி தவறாத அரசர். உண்மை வழி நடப்பவர். உங்களை எதிர்க்க ஒருவரும் இல்லை. மக்கள் உங்களை அரசராகப் பெற்றதற்கு பெருமைப்படுகிறார்கள். இருந்தும், நீங்கள் வருத்தத்துடன் காணப்படுவதே சங்கடமாக இருக்கிறது. தயவுசெய்து காரணத்தை கூறுங்கள்.

 

சந்தனு: மகனே!அதைப் பற்றி யோசிக்காதே! மக்கள் விரும்பியபடி ஆட்சி செய்கிறேன். கடவுள் காட்டிய வழியில் வாழ்க்கையை நடத்துகிறேன். அவ்வளவுதான்!

 

தேவவிரதன்: தந்தையே! நான் ஏதும் தவறு செய்து விட்டேனா? தவறை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கின்றேன். தவறுக்கான தண்டனை உண்டு என்றால் என்னை தண்டித்து விடுங்கள். தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

 

சந்தனு: மகனே! நீயோ என் உயிர். நீ நன்கு கற்றவன். நீ எப்போதும் தவறு செய்ததே கிடையாது. நீ வீரன். நீ நீதி தவறி நடந்ததே கிடையாது. என்னை எந்த அளவிற்கு மக்கள் நேசிக்கிறார்ளோ அதே அளவு உன்னையும் நேசிக்கிறார்கள். உன்னிடத்தில் தவறு காண முடியுமா என்ன?

 

தேவவிரதன்: பின் ஏன் வருத்தத்துடன் இருக்கின்றீர்கள்? காரணத்தை கூறுங்களேன்..

 

சந்தனு: மகனே! இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

 

தேவவிரதன்: தந்தையே! இருந்தாலும்...

 

சந்தனு: மகனே போதும்!

 

தேவவிரதன்: ஆகட்டும் தந்தையே! (மிகுந்த வருத்தத்துடன்) நான் சென்று வருகிறேன் தந்தையே!

 

சந்தனு: நல்லது மகனே!

 

(தேவவிரதன் செல்லுதல்)

 

-          காட்சி முடிவு -

 


 

காட்சி 6

 

உறுப்பினர்கள்: சந்தனு, தச ராஜன்தேவவிரதன்

காலம்: காலை வேளை

இடம்: கடற்கரையில் ஒரு பகுதி

 

காட்சியின் முக்கிய வசனம்:

மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை தான் செய்கிறேன்.’

 

காட்சியின் முக்கிய நடிப்பம்சம்:

மகன் தந்தை கொண்ட வருத்தத்தை அகற்ற சபதம் பூணுதல்

 

காட்சியில் காட்ட வேண்டிய உணர்வு:

மகன் தந்தையிடம் கொண்ட  கனிவால் ஏற்பட்ட சபதம் செய்யும் துணிவு

 

(இளவரசன்தேவவிரதன்மிடுக்குடன் தச ராஜனைக் காணவருதல்)

 

தச ராஜன்: வாருங்கள்..  இளவரசே! வாருங்கள்..

 

தேவவிரதன்: தச ராஜனே! நடந்த விஷயங்களை தந்தையின் தேர்ப்பாகனிடமிருந்து தெரிந்து கொண்டேன்.  நடந்த விவரங்களை தீர யோசித்து ஒரு முடிவுடன் வந்திருக்கின்றேன். என் பெயர் தேவவிரதன். கடவுளுக்கு பணிந்தவன் என்பது அதன் பொருள். எனக்கு என் தந்தை கடவுள். அதனால் என் கடவுளுக்காக நான் என் அரச பதவியை துறக்க தயார் ஆகி விட்டேன். இது சத்தியம். இதிலிருந்து என்னாளும் மாறமாட்டேன். உண்மையாக இருப்பேன்.

 

 தச ராஜன்: இளவரசே! மிக்க மகிழ்ச்சி. (தயக்கத்துடன்) இருந்தாலும்...

 

தேவவிரதன்: இருந்தாலும்... என்ன தச ராஜனே? என் உயிரை விட வேண்டுமா? நான் அதற்கும் தயார்.

 

தச ராஜன்: ஐயோ? நான் அப்படி சொல்லவில்லை. தாங்கள் மாபெரும் மனிதர். உங்கள் சொல்லை காப்பீர்கள். ஆனால் உங்களுக்குப் பிறக்கும் வாரிசுகள் என் மகளுடைய பிள்ளைகளுடன் பதவிக்காக சண்டை செய்தால் என்ன செய்வது? அதுதான் என் தயக்கத்திற்கு காரணம்.

 

தேவவிரதன்: (சிரித்துக்கொண்டே) பூ... இதுதானா விஷயம்? என் தந்தைக்காக பதவியைத் துறந்தேன். என் தந்தையை  மணப்பவர் எனக்கு தாய். தாயும் எனக்கு கடவுள்தான். அதனால் என் தாய்க்காக இப்போது இன்னொரு சத்தியம் செய்கிறேன். என்றென்றும் நிலைத்து நிற்கும் பூமித்தாயே! சூரியனே! சந்திரனே! உங்களை சாட்சியாக வைத்து இந்த சத்தியத்தை செய்கிறேன். என் வாழ்நாள் உள்ளளவும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எல்லா பெண்களையும் என் தாயாக மதிப்பேன். இது சத்தியம்.

 

சந்தனு: (வேகமாக ஓடி ஓடி வந்து) மகனே! இதென்ன சத்தியம்? நீ இங்கு வந்ததைக் கேட்டு ஓடோடி வந்தேன். ஆனால், காலம் கடந்து விட்டதற்கு வருந்துகிறேன்.

 

தேவவிரதன்: தந்தையே! வருந்த வேண்டாம். மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை தான் செய்கிறேன். உங்கள் வருத்தம் போக்க, என் உயிரையும் தர சித்தமாய் இருக்கும்போது, இந்த சத்தியம் பெரிதல்ல.

 

சந்தனு: தேவவிரதா! உன்னை மகனாக பெற்றதற்கு நான் பெருமைப் படுகின்றேன்.

'மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்' என்ற வாக்கிற்கு ஏற்ப நடந்து கொண்டதால், கடுமையான சத்தியத்தை ஏற்றதால், நீ பீஷ்மர் என்று அழைக்கப்படுவாய். தந்தைக்காக உயிரையும் துச்சமாக மதித்ததால், நீ விரும்பிய போது உன் உயிர் போகும் தன்மையை பெறுவாய். நீ நிலம் உள்ளளவும் பெயர் பெற்று விளங்குவாய்.

 

தேவவிரதன்: நன்றி தந்தையே! நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் அதுவே எனக்குப் போதும்.

 

சந்தனு: (மகனை கட்டித்தழுவி) மகனே! மகனே!

 

-          காட்சி முடிவு -

 


 

முடிவு

 

(குரல் மட்டும் ஒலிப்பதாகவோ அல்லது சந்தனு நேராக நின்று பேசுவதாகவோ கொள்ளலாம்)

 

நாடகம் சொன்ன கதை உங்களுக்கு புரிந்ததா? தந்தை சொல்கின்ற பேச்சை என்னென்று கேட்கக் கூட விரும்பாத குழந்தைகளாய் இன்று குழந்தைகள் இருக்கின்ற போது, நான் தந்தைக்காக எதுவும் செய்யத் தயாராக இருந்ததை கவனித்தீர்களா! பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். என் அளவிற்கு கேட்கவில்லை என்றாலும், சொல்லும் பேச்சை காது கொடுத்து கேட்க வேண்டும்; நடக்க வேண்டும். இந்த அறிவுரையை தரும் முக்கிய நோக்கில்தான் இந்த நாடகத்தை நடத்தினோம்.

 

நன்றி. வணக்கம்.