தேவாரம் கூறும் திருநாவுக்கரசரின் இறைநெறிக் கொள்கைகள்
ஹ.விஜயலட்சுமி,எம்.ஏ.,பி.எட்.,எஃபில்.,பி.எச்.டி.,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603,
தொடா்பு எண்
: 93458853755
e-mail
: hvijilakshmi1979@gmail.com
ஆய்வுச் சுருக்கம் :
திருநாவுக்கரசா்
தனது தேவாரத்தில் பின்பற்றியுள்ள சைவ நெறிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை இறைநெறிக்கொள்கைகள் குறித்த பனுவல்களையும், இந்நெறிக் கொள்கைகளால் திருநாவுக்கரசர் பெற்ற இறையுணா்வினை இவ்வுலகத்தாரும் உணா்ந்து உவப்பிலா ஆனந்தம் அடையும் வகையில் பாடல்களைப் படைத்து இன்ப வாழ்விற்கு எவ்வாறு நல்வழிக்காட்டியுள்ளார் என்பதையும், இறைவழிப்பாட்டு முறைகள் குறித்தும் இக்கட்டுரை ஆராய்கிறது.
முக்கிய வார்த்தைகள்:
1. அட்டகா மலா்கள்
2. காளாமணி விளக்கு
3. மனமணி இலி்ங்கம்
4. நேயமே நெய்யும்
5. அலைபுனல்
முன்னுரை:
தமிழ்நாட்டில் சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சமயக்குரவர்கள் நால்வருள் நாவுக்கரசர் பெருமானுக்குத் தனிச்சிறப்பு உண்டு. துணிவு, கனிவு, தெளிவு ஆகிய முறையில் தம்முடைய வாழ்வை அமைத்துக்கொண்டு ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று வாழ்ந்த திருநாவுக்கரசர் உலகில் தோன்றிய உயிர் பல பந்தங்களை எல்லாம் அறுத்து வீடுபேறு அடைவதற்குரிய இறைநெறிகளையும் மனிதனாகப் பிறந்தவன் மனிதப்பண்புகளோடு இறைப்பேற்றை அடைவதற்குரிய நெறிமுறைகளைக் குறித்துக்காட்டும் இறைக்கொள்கைகளையும் 4.5.6-ஆம் திருமுறைகளான தனது தேவாரத்தில் பின் பற்றியுள்ள சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகளின் பயன்கள் குறித்தும் இந்நால்வகை நெறிகளால் தான் இறைவனை அடைந்ததாகவும் கூறியுள்ள மக்களின் நல்வாழ்விற்கு வழிகாட்டும் திருநாவுக்கரசரின் இறைநெறிக்கொள்கைகளின் நன்மைகள் பற்றியும் எடுத்துரைப்பதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
திருநாவுக்கரசரின் சரியை நெறிக் கொள்கை:
திருநாவுக்கரசரின் இறைக்கொள்கை சரியை எனப்படும் தாசமார்க்கமாகும். இதனைத் ‘தொண்டுநெறி’ என்றும் அறிஞர்கள் கூறுவர். “இறைவன் முதல்வன், அருவம், உருவம் என்ற மூன்று வடிங்களைக் கொண்டருள்கின்றான். அம்மூன்றனுள் முதற்கண் உருவடிவம் ஒன்றையே பொருள் என்று உணர்ந்து புறத்தொழில் அளவில் இயற்றப்படும் வழிபாடு சரியை எனப்படும்.”1 என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் திருநாவுக்கரசர் கோயிலை வலம் வருதல், கோயிலுக்குப் பூமாலை தொடுத்தளித்தல், கோயிலைத் துப்புரவு செய்தல், விளக்கிடுதல், திருமஞ்சன நீர் எடுத்தல், பசுமடம் அமைத்தல், ஆடிப்பாடி வழிபடுதல் போன்றவை சரியை நெறியின் கொள்கைகள் என்று கூறுகிறார். இத்தகைய பணிகளைச் செய்பவர்கள் இறைபேற்றினை அடைவர் என்று பெரியபுராணமும் எடுத்துரைப்பதை,
அல்லும் நண்பகலும் திரு
அலகுஇட்டுத் திருமெழுக்கு அமைப்போர்கள்
எல்லைஇல் விளக்கு எரிப்பவர்
திருமுறை எழுதுவோர் வாசிப்போர”2
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
சரியை நெறியின் பயன்:
சரியை நெறிக்கண் தொண்டு புரிவார்க்கு என்னென்ன பலன்கள் எல்லாம் உண்டாகும் என்பதைத் திருநாவுக்கரசர்,
“தேசத்தார் பரவி யேத்தும்
திருவையாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்
வல்வினை, மாயு மன்றே”3
என்றும் இறைவனின் திருப்பாத மலர்களை அன்புடன் தொழ வல்லவர் வல்வினையில் இருந்து நீங்கப் பெறுவர் என்றும் குறிப்பிடுகிறார். மேலும்,
“அட்டகா மலர்கள் கொண்டே
ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டாய் அருள்கள் செய்வார்
திருச்சோற்றுத் துறையனாரே”4
பெருமானை அட்ட மலர்களாகிய புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம் (குவளை), பாதிரி, அலரி, செந்தாமரை ஆகிய மலர்கள் கொண்டு தூவிப்போற்றினால் சிவபெருமான் அருள்புரிவான் என்று சரியை நெறியின் பயன்பற்றி திருநாவுக்கரசர் எடுத்துரைக்கின்றார்.
கிரியை நெறியும் திருநாவுக்கரசரும்:
கிரியை என்பது சைவ சித்தாந்தம் கூறும் இரண்டாவது வழிபாட்டு நெறியாகும். கிரியை என்பது மனித உடலின் ஐம்புலன்கள் வாயிலாக இறைவனை வழிபடுவதாகும். இறைவன் எழுந்தருளுவதற்கான இடம், பீடம், நினைத்த உருவம், அவ்வுருவத்திற்கு உள்ளீடாக நின்ற இறை ஒளி ஆகியவை மனத்தால் பாவித்தல் மூலம் அடையப்படுகின்றன என்பதை,
“பொள்ளத்த காய மாயப்
பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
விரும்புமின் விளக்குத் தூபம்;
உள்ளத்த திரியொன்று ஏற்றி
உணருமாறு உணர வல்லார்
கள்ளத் தைக் கழிப்பர் போலும்
கடவூர்வீ ரட்ட னாரே”5
என்ற பாடலால் ஈசன் உள்ளத்தில் திகழும் சோதியாகவும் சுடர் ஒளி விளக்காகவும் விளங்கி மெய்யுணர்வைத் தரும் பாங்கினை உணர்த்துகிறார் திருநாவுக்கரசர். இதனைத் திருமூலர்,
“உள்ளம் பெருங்கோயில் ஊன்உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளா் தெளிந்தோர்க்குச் சீவன் சிவமாகும்
கள்ளப்ப புலன் ஐந்தும் காளாமணி விளக்கே”6
என்ற பாடலின் மூலம் ஆலயத்தின் இயல்பையும் இறைவன் உறையும் இடத்தையும் உணர்த்துகிறார். உள்ளம் பெருங்கோவிலாகவும் உடம்பு ஆலாயமாகவும் வாய் கோபுர வாசலாகவும் சிவன் சிவலிங்கமாகவும் விளங்கும் நம் உடம்பிற்கு விளக்காக அமைவது ஐம்புலன்களே என்றும் விளக்குகிறார். கிரியை நெறிமுறைகளில் சிறப்பான ஒன்று மனத்திற்குள்ளேயே செய்யும் அகப்பூசை (உள்வழிபாடு) ஆகும். இதைச் செய்ய வேண்டிய முறை குறித்தும் அதனால் உயிர் அடையும் பயன் பற்றியும் திருநாவுக்கரசர் விளக்குகிறார்.
“காயமே கோயி லாகக்
கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மை யாக
மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டி னோமே”7
உடம்பைக் கோயிலாகவும், நறுமண நினைவுகளையுடைய மனத்தை அடிமையாகவும் கொண்டு வாய்மையைத் தூய்மையாகவும் வைத்து மனத்தின் மணியாக மேவும் ஆன்மாவை இலிங்கமாகப் பாவித்து இறைவனை ஏத்தினேன் என்று நாவுக்கரசர் பாடுகிறார்.
யோக நெறியும் திருநாவுக்கரசரும்:
யோகம் என்பது மனிதனால் செய்யப்படும் வழிபாடு ஆகும் . யோக நெறியில் இறைவனின் வடிவத்தை மனத்தில் நிறுத்தித் தியானத்தில் ஆழ்ந்து இருப்பவரைக் குறிக்கும். இதுவே உள்ளார்ந்த முறையில் கூறப்படும் அகவழிபாடு ஆகும். சுந்தரரின் சகமார்க்கம் என்னும் தோழமை நெறியாகும். இதனைத் திருநாவுக்கரசர், சிற்றுயிர் பேருயிருடன் கலத்தல். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி தியானமாகும். கிரியைத் தொண்டினால் ஆணவ மலம் மேலும் பரிபாகமுறும். சுத்திநிபாதம் தீவிரமாய் நிகழும். அந்நிலையில் இறைவனது அருவத் திருமேனியை உணரும் பக்குவத்தைப் பெற்று வழிபடுதல் யோக நெறியின் சிறப்பாகும். மனத்தை அடக்கி, அகலத்தில் நிறுத்தி ஒளி வடிவான இறைவனோடு ஒன்றாய்ச் செய்தலே யோகம் என்று கருதலாம் என்பதை திருநாவுக்கரசர்,
“விளக்கினார் பெற்ற இன்பம்
மெழுக்கினால் பதிற்றி ஆகும்
துளக்கின் நன்மலர் தொடுத்தால்
தூயவின் ஏறலாகும்
விளக்கு இட்டார்பேறு சொல்லின்
மெய்ஞ்நெறி ஞானம் ஆகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு
அடிகள் தாம் அருளுமாறே”8
என்ற பாடலடிகளால் யோகநெறியில் நின்றார்க்கு இறைவன் வெளிப்பட்டு அருள்வதாகவும் விளக்குகிறார். யோகம் என்பது தியானமாகும். மனதை ஐம்புல உபாதையிலிருந்து விலகி நிற்க உள்ளொளி உதவும் சிவபக்தனானவன் இவ்வகையான உபாதையிலிருந்து அகன்று இறைவனோடு ஒன்றி இறையின்பம் பெறுவதே யோகமாகும். யோகம் என்பதற்கு சேர்க்கை என்பதும் பொருள் உண்டு. சீவன் சிவத்தோடு சேர்தலாகும.; இதனை திருமூலர்,
“நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறி இருந்தாற்போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்என்று உணராக்
குறி அறிவானார்க்குக் கூடலும் ஆமே”9
என்ற பாடலால் சிற்றுயிர் பேருயிருடன் கலத்தல். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி தியானமாகும் என்று விளக்குகிறார்.
ஞானநெறியும் திருநாவுக்கரசரும்:
இறைவன் குருவாக வந்து ஞானத்தை உணர்த்துவது ஞானநெறியாகும். ஞானமும் அன்புநெறி என்றே கொள்ளப்படும். ஞானமார்க்கம் என்பது இறைவனை அடையும் நான்காவது நெறியாகும். நேரே இறைவனை அடையத்துணை செய்துவது இம்மார்க்கம். இதனைச் சன்மார்க்கம் என சைவசித்தாந்தம் கூறுகிறது. ஞானமானது, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைக் கைக்கூடல் என நான்கு நிலையாகும். இதில் கேட்டல் என்பது சிவன் சிவத்துடன் எப்படி சேருகிறது என்று தெளிவு குருவிடம் கேட்பதுக் கேட்டல் . இது ஞானத்தின் கிரியை நிலையில் திருவடிப்பேற்றினை நாடி அதன் விளைவாக முப்பத்தாறு மெய்யும் கடந்து அருள் வெளியில் காணும் சிவ ஒளியைத் தெளிதலாகும். இது ஞானத்தின் ஞானம் ஆகும். ஞானத்தல் இறைவனைத் தானும் தொழுததாக திருநாவுக்கரசர் எடுத்துரைக்கின்றார். இதனை,
“ஞானத்தால் தொழுவார் சிவ ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன் உனைநான் அலேன்;
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவனே”10
சிவஞானிகள் உன்னை தசகாரியத்தில் வைத்து உண்மை ஞானத்தால் தொழுவார்கள். நான் உன்னை அத்தகு ஞானத்தால் தொழுவேனல்லேன்; சிவஞானிகள் சரியை, கிரியை, யோகம் ஆகிய நெறிகளில் நின்று வழிபடுதலினும் மேலாகிய ஞானநெறியில் நின்று உன்னைத் தொழுவதைக் கண்டேன். எனவே, ஞானம் பெறாத நானும் உன்னை ஞானத்தால் தொழுவேன். அஃதாவது ஞான பூசையைச் செய்வது ஒன்றே என்னிடம் உள்ளது. பெருமானை வழிப்படாத நாட்கள் எல்லாம் பிறவா நாட்கள் என்பது திருநாவுக்கரசரின் கணிப்பாகும். அரியானை எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில்,
“கரியானை நான்முகனை கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவாநாளே”11
எனக் கூறுகிறார். ஞானிகள் இறைவனைத் தொழுது ஏத்தும் வகையினைக் கண்டு, மண்ணுயிர்களும், இறைவனை மனமுருகக் கசிந்து வணங்கினால், பதிஞான வடிவாக விளங்கும் முதல்வன் மண்ணுயிர்களுக்கு அனைத்தையும் கருணையுடன் தருவான் என்று கூறுகிறார் திருநாவுக்கரசர். இத்தன்மையை,
“என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
தன்னை நானுமுன் ஏதும் அறிந்திலேன்
என்னைத் தன்னடியான் என்று அறிதலும்
தன்னை நானும் பிரான் என்று அறிந்தேனே”12
என்ற பாடலில் இறையருளால் தம்மை உணர்ந்து தம் தலைவனை சிவபிரானையும் உணர்ந்த பெருநிலையை உலகோருக்கும் உணர்த்துகின்றார்.
இறைவனை அடையும் முறைகள்:
திருக்கோயிலைத் திருவலகு கொண்டு சுத்தம் செய்தவர் பெற்ற இன்பத்தின் அளவில் பத்து மடங்கு மெழுகினவர்க்கு வாய்க்கும். மலர்கள் தொடுத்து மாலையாக்கி இறைவனுக்கே அணிவித்தால் சிவலோகம் செல்லலாம். கோயில் திருவிளக்கு இட்டவர் பெறும் பேறு சொல்லில் அடங்காத நிலையான தவம் ஆகும். அறியாமையில் சிக்கி, ஆணவத்தில் உழன்று உண்மை காணாமல் தடுமாறும் என் நெஞ்சமே! இங்கே வா! நிலை பேறாக இன்ப வாழ்வு உனக்கு வேண்டுமென்றால் நீநித்தமும் திருக்குளத்தில் நீராடி எம்பெருமானுடைய கோயிலுக்குச்செல். வைகறை புலர்வதற்கு முன்பு கோயிலைத் திருவலகிட்டு கூட்டிப் பெருக்கித் தூய்மை செய் திருமெழுக்கும் இடு, நறுமலர் மாலைகளைத் தொடுத்து இறைவனுக்கு சார்த்து, இனிய பாசுரங்களால் அவர் புகழப்பாடு, தலையாரக் கும்பிட்டு பன்முறை வணங்கிக் கூத்தும் ஆடும். சங்கரா போற்றி என்னும் அலைபுனல் நிறைந்த செஞ்சடையை உடைய உலக முதல்வா என்றும் ஆரூரா என்றும் வாய்விட்டு அலறு. இதுவே நீ உய்யும் நெறியாக திருநாவுக்கரசர் கூறுவதை,
“நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா!
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி போற்றி! என்றும்
அலைபுனல் சேர்செஞ்சடையெம் ஆதி என்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே”13
என்ற பாடல் விளக்குகின்றது. இதனைத் திருமூலர்,
“அன்பே சிவம் இரண்டு என்ப அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்” 14
என்ற பாடலால் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே இறைவனை அடையும் வழி என்று திருமந்திரத்தில் உறுதியாகக் கூறியுள்ளார்.
இறை வழிபாட்டின் நன்மைகள்:
இறைவனை காலை, மதியம், அந்தி ஆகிய மூன்று காலங்களிலும் வழிபட வேண்டும். அவ்வழிபாட்டை வன்னி இலைகளைக் கொண்டு செய்தல் சிறந்தது. பிரணவ மலர்களாகிய கொன்றை மலர்களைக் கொண்டும் எட்டு விதமான மலர்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட மாலையை இறைவனின் பாதத்தில் தூவி போற்றுதல் என்பது ஆகமங்களை கற்றுணர்ந்தோர் செய்யும் செயலாகும். இதனை அறியாதவர்கள் பிறமலர்களைக் கொண்டும் வழிபடுவர்களுக்கு அதற்குத் தக்க வகையில் அருள்புரிவான் என்பதை,
“புலரும் போதும் இலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுக ளாற்பணி யச்சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும் ஐயாறரே”15
என்று ஐயாற்றில் வீற்றிருக்கும் இறைவனைப் பற்றியும் இறைவழிபாட்டில் நன்மையும் பற்றி கூறியுள்ளார் திருநாவுக்கரசர்.
முடிவுரை:
பரம்பொருள் என்பது இவ்வுலகில் எங்கும் நிறைந்துள்ளது. அப்பரம் பொருள் இவ்வுலகில் உள்ள உயிர்களின் வடிவிலும் விளங்குகிறது. உயிர்களுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக்குச் செய்வதாகும். ஆகையால் அனைத்துமாய் நின்ற இறைவனை அகத்தில் உணர்ந்து பேரறிவுப் பொருளாக விளங்கும் இறைவனை நமது அறியாமை இருள் நீங்க உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்றும் உடலை ஓம்பி, மனதை ஒருமைப்படுத்தி, இறைவனை சிந்தனையிலிருத்தி காலை, மதியம், அந்தி ஆகிய மூன்று வேளைகளிலும் கொன்றை மலர்களையும் எட்டு விதமான மலர்களால் ஆன மாலையை அணிவித்தும் வழிபட்டு வந்தால்; இறவாப் புகழுடன் நூற்றாண்டுகள் கடந்து வாழலாம். மக்களின் நல்வாழ்விற்கான இறையின்பத்தை ஊட்டுவதாகவும் திருநாவுக்கரசர் பின்பற்றிய சைவநெறிகளான இறைநெறிக் கொள்கைகள் அமைந்துள்ளது சிந்திக்கத்தக்கதாகும்.
மேற்கோள்கள்:
1. சைவமும் வைணவமும் : பக்.77
2. பெரியபுராணம் கணநாதர், 3930
3. திருநாவுக்கரசர் தேவாரம், 4:39:4
4. திருநாவுக்கரசர் தேவாரம், 4:41:2
5. திருநாவுக்கரசர் தேவாரம், 4:31:1
6. திருமந்திரம். ப. 1823
7. திருநாவுக்கரசர் தேவாரம், 4:76:4
8. திருநாவுக்கரசர் தேவாரம், 4:76:4
9. திருமந்திரம். ப. 1438
10. திருநாவுக்கரசர் தேவாரம், 5:91:3
11. திருநாவுக்கரசர் தேவாரம்: 6:1:1
12. திருநாவுக்கரசர் தேவாரம், 5:91:8
13. திருநாவுக்கரசர் தேவாரம்: 6:31:3
14. திருமந்திரம், ப. 270
15. திருநாவுக்கரசர் தேவாரம், 5:27:6
பயன்படுத்திய நூல்கள்:
1. புலவர்.பி.ரா.நடராசன் - திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் தொகுதிகள்-1,2,3.உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை -1. மு.ப.2003
2. ஸ்ரீ செண்பகாவின் சைவமும் வைணவமும் புத்தகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பாண்டி பஜார், சென்னை -17. மு.ப. 2010
3. கோ.சுப்பிரமணியன் - பெரியபுராணம், வித்தியா நூபாலயந்திர
சாலை, சென்னை.
மு.ப. 1951
4. அ.மாணிக்கம்
திருமந்திரம் மூலமும் உரையும்.
தொகுதிகள்-1, 2 வர்த்தமானன் பதிப்பகம்,
தியாகராய
நகா், சென்னை-17
5. க.வெள்ளைவாரணன்- சைவ சித்தாந்த சாத்திர
வரலாறு, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவு+ர்.
மு.ப.2002.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக