4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

சிவாஜியின் திரைப் பயணமும் அரசியல் பயணமும் - ம.கவியரசன்

 

சிவாஜியின் திரைப் பயணமும் அரசியல் பயணமும்

 

ம.கவியரசன்,

22, நேருஜி நகர்,

(கிரி ஜிம் அருகில்)

பெரிய மாத்தூர்,

சென்னை-600 068.

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புத்துறையில் ஈடிணையற்ற திரைக்கலைஞர் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் செய்தியாகும். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் விமர்சன பக்கங்கள் உள்ளன. நாம் இப்போது பார்க்கப்போவது அதைத் தான். அதற்கு சிவாஜியை சற்று நீள்வாசிப்பு செய்வதும் அவசியமாகிறது.

1946ல் 'சிவாஜி கண்ட இந்துராஜ்யம்'(சந்திரமோகன்) என்னும் பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் சிவாஜியாக வேடமேற்று, தந்தை பெரியாரால் 'சிவாஜி'யாக பட்டம் சூட்டப்பெற்றார் வி.சி.கணேசன்.

1953ல் திமுகவில் முறைப்படியாய் நுழைந்த எம்ஜிஆரின் செல்வாக்கு மளமளவென உயர, எட்டாண்டுகளுக்கு மேலான திராவிட இயக்க அனுபவமிருந்தும், பங்களிப்பிருந்தும் உறுப்பினர் அட்டை கூட வைத்துக்கொள்ளாத சிவாஜி, அதிருப்தியின் காரணமாக திருப்பதி சென்று திரும்புகிறார்; திமுகவை விட்டும் விலகுகிறார்.

பராசக்தி குணசேகரனாய் திராவிடம் பேசிய சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் கப்பலோட்டிய தமிழனாகவும் தேசியம் பேசுகிறார். 'படிக்காத மேதை' என்ற காமராசரைக் குறிப்பிடும் சிறப்புப் பெயர் சிவாஜி நடிக்கும் படத்தின் பெயரானது. 'பாவமன்னிப்பு' இந்திய தேசியத்தின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் ஒருமைப்பாட்டை பறைசாற்றி தேசிய விருது பெற்றது.

1962 - சட்டமன்ற தேர்தலில் காமராசர் வெற்றி பெறுகிறார். பகுத்தறிவு பேசிய சிவாஜியின் படங்களில் 'திருவிளையாடல்', 'சரஸ்வதி சபதம்', 'கந்தன் கருணை', 'திருவருட்செல்வர்' என பக்திமணம் கமழ்கிறது.

இன்னொரு பக்கம் திமுகவின் பிரச்சார பீரங்கியாக, பகுத்தறிவுக் கருத்துகளை தன் பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரப்பி வந்தார் எம்ஜிஆர்.

1967- தேர்தலில் எழ முடியாத வீழ்ச்சிக்குள், மீள முடியாத சரிவுக்குள் காங்கிரஸ் கட்சியைத் தள்ளி அறிஞர் அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கிறது எம்ஜிஆரின் செல்வாக்கு. அதற்கு காங்கிரசின் தவறான நடவடிக்கைகளும் வழிகோலுகின்றன.

இச்சமயத்தில் தான் சிவாஜி தன் நாற்பதாவது பிறந்தநாளில் "என் சமூக மக்களுக்கு நன்மை செய்வேன்" என்று பேசத் தொடங்குகிறார். தன் படங்களிலும் சாதியப் பெருமையை பதிவு செய்ய தொடங்குகிறார். 1968-ஆம் ஆண்டு வெளிவந்த எங்க ஊர் ராஜா பட்டியலில் முதலிடம் பெறுகிறது.

இந்த இடத்தில் நாம் இன்னொரு செய்தியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ்காரரான சிவாஜி, சக காங்கிரஸ்காரரான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரனைப் பற்றித் தன் படங்களில் பதிவு செய்யாமல் அவர் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு விடுவிக்கப்பட்டவரான தன் சமூகத்தைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி பதிவு செய்ய புகுந்தது தான் அவருடைய முதல் தோல்வி. காங்கிரசின் வாக்குவங்கியில் தன்னுடைய நடவடிக்கை வலிமை சேர்க்கும் என்ற எண்ணத்தில் செய்திருந்தாலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில் இரு திராவிடக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பின்னர், வாக்குவங்கி அரசியலுக்காக சில சமுதாயங்களுக்கு அவர்கள் நன்மை செய்திருந்தாலும் திராவிட கருத்தியலின் அடிப்படையில் இங்கு எவரும் சாதி பார்த்து ஓட்டு போடுவதில்லை.

அதனால் சிவாஜியின் இந்த 'லாபி' பெரிதாக எடுபடவில்லை. ஆனாலும் சாதியப் படங்களை அவர் தொடர்ந்தார். 'பட்டிக்காடா? பட்டணமா?'(1972) அவ்வகையில் அமைந்த இரண்டாவது படம். "நம்ம இனத்துக்குள்ள ஒத்துமை வேணும்" என வசனம் பேசினார் சிவாஜி. கறுப்பு-வெள்ளை படங்களில் கடைசி Blockbuster ஆக 'பட்டிக்காடா? பட்டணமா?' விளங்குகிறது.

அடுத்ததாக 'நீதி'(1972) படத்தில் "முத்தமிழின் செல்வன் வாழ்க, முக்குலத்தின் கண்மணி வாழ்க" என கதைக்கு தொடர்பே இல்லாமல் பாடல்வரிகளை வைத்தார் சிவாஜி. 'என் மகன்'(1974) படத்தில் சாகும் காட்சியிலும் "நான் தேவன்டா" என்று சொல்லிக்கொண்டே சாகும் வேடத்தில் நடித்தார். தொடர்ந்து 'நாம் பிறந்த மண்'(1977), 'முதல் மரியாதை'(1985), 'என் தமிழ் என் மக்கள்'(1988) படங்களில் சிவாஜியின் சாதியவா(பா)சம் தூக்கலாகவே தெரிந்தது. இடையில் 'பாரத விலாஸ்', 'ராஜபார்ட் ரங்கதுரைபோன்ற தேசபக்திப் படங்களில் நடிக்கவும் தவறவில்லை சிவாஜி.

1992ல் வெளிவந்தது 'தேவர் மகன்'. முத்துராமலிங்க தேவரின் பார்வார்டு பிளாக் கட்சிக்காரர் கூட இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது. அப்படி ஒரு படத்தை எடுத்தவர் பார்ப்பனிய பகுத்தறிவு(?)ச் சிங்கம் கமல்ஹாசன். இறுதியில் பாரதிராஜாவின் இரண்டாம் மரியாதை 'பசும்பொன்'(1995).

இடையில் 1988ல் காங்கிரசிலிருந்து விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் துவங்கி, ஜானகி எம்ஜிஆருடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோற்கிறார். வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் இணைந்து, 1991ல்  கலைஞருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு தோற்கிறார். 1995ல் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுக்கு தன் பேத்தியை மணமுடித்து வைக்கிறார்.

சினிமா, அரசியல் பரபரப்புகளிலிருந்து சிவாஜி விலகிய பின்னர் வெளிவந்த அவரது கடைசி 5 படங்களில் சாதிய ஆதரவு இல்லை என்பதும் அவரது சுயசரிதையில் முத்துராமலிங்க தேவர் பற்றிய பதிவுகள் இல்லை என்பதும் ஆறுதலான செய்தியாகும். எவ்வாறெனினும் சிவாஜி என்ற சிறந்த கலைஞனின் திறமைக்கும் பெருமைக்கும் முன்னால் திருஷ்டி பரிகாரங்களாக அமைந்த சாதனையையே அவரது சாதியப் படங்கள் செய்து கொண்டு இருக்கின்றன.