4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

இயற்கைப் பேரழிவுகளும் மீட்டெடுப்பும் - ஜா. சஜிகுமார்

 

இயற்கைப் பேரழிவுகளும் மீட்டெடுப்பும்

 

ஜா. சஜிகுமார்

(பதிவு எண். 12549)

முனைவர் பட்ட ஆய்வு மாணவர்,

தமிழாய்வு மையம்,

நேசமணி  நினைவு கிறித்தவக்கல்லூரி, மார்த்தாண்டம்

ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி – 12.

 

ஆய்வுச்சுருக்கம்

நாம் வாழும் இந்த உலகமும் அதில் வாழும் உயிரினங்களும் ஐம்பெரும்பூதங்களுக்கு உட்பட்டதாகும். மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இன்று வரை பூமியைத் தவிர வேறு கோள்களில் மனிதனோ அல்லது ஏதேனும் உயிரினம் உயிர் வாழ முடியுமா என்ற தொடர் ஆய்வு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் பூமியைப்போல அனைத்து வளங்களையும், உயிர் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பு கொண்ட கோள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உயிரினங்கள் வாழ பல்வேறு வாய்ப்புகளை பூமி பெற்றிருப்பினும், அவ்வப்போது பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடரல்கள் மனித குலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைகின்றது. இந்த இயற்கை பேரழிவுககள் மனித அறிவிற்கு எட்டாதவையாக இருந்து வருகின்றது.

மனித குலத்திற்கு மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தும் இப்பேரழிவுகளை வகைப்படுத்தி அதனால் ஏற்படும் அழிவுகளிலிருந்து மக்களை மீட்டெடுத்து மீண்டும் மீள்குடியமர்த்துவது நாடாளும் ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைகின்றது. அவ்வாறு இதுவரை இவ்வுலகம் சந்தித்த பேரிடரல்கள், அதிலிருந்து மீண்டு வந்தவை, மற்றும் மீள்குடியமர்த்தல் தொடர்போல மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் மீட்டெடுப்பில் செய்ய வேண்டிய முன்னேற்றங்கள் குறித்து இவ்வாய்வு குறிப்பிடுகின்றது.

கலைச்சொற்கள்

ஆழி, மீட்டல், ஒக்கி, இடர்

முன்னுரை

சூரியனை சுற்றி சுழலும் கோள்களில் பூமியும் ஒன்று. பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான தகவமைப்பை பூமி பெற்றுள்ளதால் இதனை உயிர்க்கோளம் என்கிறோம். எனவேதான் பல்வகை உயிரினங்கள் பூமியில் வாழ்கின்றன. இந்த பூமியானது பல நேரங்களில் தன் இயல்பு தன்மையிலிருந்து விலகுவதாலும் பூமியில் வாழும் மனிதர்களின் சுயநலன்களால் ஏற்படும் இயற்கை பேரிடரல்களும் பூமியில் வாழும் உயிர்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் இயற்கை பேரிடரல்களின் போது அரசு செய்யும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளையும் குறித்து காண்போம்.

பேரிடர் - விளக்கம்

இடர் என்பதற்கு தமிழில் துன்பம்’1 என்பது பொருள். பேரிடர் என்பது பெருந்துன்பத்தை குறிக்கும். இயற்கையில் ஏற்படும் பல்வேறு மாறுதல்களினால் பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் பல்வேறு உயிரினங்களின் உயிருக்கும் உடமைக்கும் தீங்கு ஏற்படுவதே பேரிடர் எனப்படும்.2 ஓரிடத்தில் ஏற்படும் பேரிடர் என்பது அப்பகுதியிலுள்ள உயிர்களுக்கு மட்டும் சேதத்தை ஏற்படுத்தாமல் அங்கு வாழும் மக்களின் கலாச்சார பண்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

எவையெல்லாம் பேரழிவுகள்

இயற்கை ஒரு குறிப்பிட்ட பகுதியில் அளவிற்கு அதிகமான சேதங்களை உருவாக்கும் போது அதை அந்த நாட்டு அரசு பேரழிவாக அறிவிக்கின்றது. குறிப்பாக அளவிற்கு அதிகமாக பெய்யும் மழையும் அதனைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய பெருவெள்ளமும், வறட்சியும் அதையொட்டிய பஞ்சமும், பெரிய அளவிலான நிலநடுக்கங்களும் அதனால் ஏற்படக்கூடிய ஆழிப்பேரலையும் கட்டுப்படுத்த முடியாத தொற்று நோய்களும், புயல், எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ என அந்தந்த நாட்டு அரசுகள் ஏற்படும் பாதிப்புகளை பொறுத்து அவற்றை பேரழிவுகளாக அறிவிக்கின்றது.

நாடுகளின் வகைகள்

உலகில் பல்வேறு நாடுகள் உருவாகியள்ளன. ஐக்கிய நாடுகள் சபையானது 193 நாடுகளுக்கு நாட்டிற்கான அங்கீகாரத்தை கொடுத்திருக்கின்றது. இந்த நாடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.3

1. வளர்ந்த நாடுகள்

2. வளரும் நாடுகள்

3. ஏழை நாடுகள்

இன்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற உலக நாடுகள் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. காரணம் அந்நாடு எல்லாத்துறைகளிலும் தன்னிறைவை பெற்று அங்குள்ள மக்கள் எல்லா வளங்களுடன் வாழ்வதே இதற்கு ஆதாரம். இந்நாடுகளில் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து அந்த நாடும் அங்கு வாழும் மக்களும் வெகு விரைவில் மீண்டெழுவர்

இந்தியா போன்ற நாடுகள் வளரும் பட்டியலில் உள்ளது. இந்நாடுகளில் ஏற்படும் பேரழிவுகளிலிருந்து மக்கள் மீண்டு வர காலஅவகாசம் தேவைப்படும் என்பதை இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவுகள் சான்றளிக்கின்றது.

ஏழை நாடுகளின் பட்டியலில் இருக்கின்ற பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் எந்த வித வளர்ச்சியும் அடையாமல் இருப்பதை அந்நாடுகளில் ஏற்படும் பேரழிவுகளும் அதனிலிருந்து மீண்டுவர அந்நாடு எடுக்கும் கால அளவையும் காட்டுக்கின்றது.

இந்தியாவின் பேரழிவுகள்

ஒரு நாட்டில் ஏற்படும் அழிவுகளை பேரழிவுகளாக அறிவிப்பது அந்தந்த நாடுகளின் கையிலுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளையும் அதிலிருந்து இந்தியா மீட்டெழுந்ததையும் காண்போம்

சங்க இலக்கியத்தில் கடற்கோள்

 பண்டைய தமிழகத்தில் பல காலகட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்ந்ததை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. சங்க இலக்கியத்தில் ஆழிப்பேரலை பலகாலகட்டங்களில் கடற்கரையை தாக்கியதாக பதிவுகள் இடம் பெற்றுள்ளது. இதனை ஆசிரியர்கள்  கடற்கோள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஊழிகாலத்தில் கடல் பொங்கி எழுந்ததை சங்க இலக்கியத்தின் புறநானூறு

அறிதிற பெருங்கடல் இறுதிக்கண்

செலினும்:புறநானூறு 397

கலித்தொகை நூலானது அலைகள் ஊர்ந்து நிலப்பரப்பை ஆக்ரமித்துக் கொண்டதை

மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வெளவலின்4– எனக் குறிப்பிடுகிறது.

கொடுமையான கடல் பஃறுளி ஆற்றினையும் பரந்த நிலப்பரப்பினையும் தன்னுள் எடுத்துக் கொண்டது என்பதனை

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”5– என சிலப்பதிகார காப்பியம் குறிப்பிடுகின்றது.

சுனாமி

சுனாமி என்னும் சொல்லை இந்திய நாடு அறிந்து கொண்டதே 2004 –ற்கு பிறகுதான். சுனாமிஎன்பது ஜப்பானியச் சொல் இதற்கு தமிழில் துறைமுகத்தை தாக்கும் அலைஎன்பது பொருள். இதனை தமிழில்  ஆழிப்பேரலை என்கிறோம்.

பண்டைய கலிங்க நாட்டை ஆண்ட மன்னன் தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய எண்ணி அந்த திருமணத்திற்கு அனைத்து உயிரினங்கiயும் அழைத்ததாகவும். இறுதியாக கடலை திருமணத்திற்கு அழைத்ததாவும் அதற்கு கடல் நான் உன் மகளின் திருமணத்திற்கு வந்தால் உன்னால் தாங்க முடியாதுஎன்று கூறியதாகவும் அதற்கு கலிங்க மன்னன் இந்த அண்ட சராசரங்களில் வாழும் அனைவரும் வரும் போது நீ வருவதை என்னால் தாங்கமுடியாதாஎன்று கூறியதாகவும் அதனால் கடல் திருமணத்திற்காக கரையை நோக்கி வந்து அனைத்தையும் அழித்ததாகவும் கன்னியாகுமரி மாவட்டம் கலிங்கராஜபுரம் என்னும் பகுதியில் இன்றும் செவிவழி செய்தியாக இக்கருத்து சொல்லப்பட்டு வருகிறது.

மேலே குறிப்பிட்டது செவி வழி செய்தியாக இருப்பினும் இவற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் இந்த பகுதியில் மணற்மேடுகள் காணப்படுவதும் கடற்கோளால் புதையுண்ட ஒரு பழைமையான சிவன் கோவில் மண்ணிற்கடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இன்று சான்றாக இப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில் ஏற்பட்ட கடற்கோளுக்கு மக்கள் பல்வேறு கதைகளை கூறி வந்துள்ளனர்.

கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட கடற்கோள்கள்

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமேஸ்வரம் பகுதியை புயலும் ஆழிப்பேரலையும் ஒருசேர தாக்கி மிகப்பெரிய சேதத்தை உருவாக்கியது. குறிப்பாக இந்திய இரயில்வேயின் இராமேஸ்வரம் பயணிகள் இரயில் முழுவதுமாக கடலில் விழுந்ததும். இலங்கையோடு வர்த்தகத்தொடர்பில் இருந்த தனுஷ்கோடி பகுதி முழுவதும் கடற்கோளால் அழிந்தது. இந்த பேரழிவில் ஒரு நகரம் முழுவதும் அழிந்ததாலும் தொடர்ந்து பேரிடரல்கள் இந்த பகுதியை தாக்கியதாலும் இது மக்கள் வாழ தகுதியற்ற பகுதி என்றும் அரசால் தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அரசு அறிவித்துள்ளது.

2004 டிசம்பர் திங்கள் 26 நாள் இந்தோனேஷியா நாட்டின் சுமத்திரா என்னும் தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து வந்த ஆழிப்பேரலையும் இந்தியாவை குறிப்பாக தமிழக கடற்கரையை புரட்டிப்போட்டது. இதனால் தமிழக கடற்கரை வரலாறு காணாத அழிவை கண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாலின வேறுபாடின்றி சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை கடற்கரையில் பிணமாக கரையொதுங்கினர்.

மக்களின் உயிருக்கு நிகராக எதையும் கூறமுடியாது. ஆனால் உயிரோடு மக்களின் பல்வேறு வாழ்வாதாரங்களும் கடலில் கோரப்பசிக்கு இரையாகியது என்றே கூறலாம். நவீன முறையில் கட்டப்பட்ட மக்களின் குடியிருப்புகள் முற்றிலும் சேதமானது. கடற்ரையில் கரையேற்றப்பட்ட மீனவர்களின் பல இலட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களும் கடல் கொண்டு சென்றது. கொடுமை யாதெனில் உடுத்த மறு ஆடையும் அடுத்த வேளைக்கு உணவுமின்றி மக்கள் நிர்கதியானதும் எங்கும் மரண ஓலங்களுக்கிடையில் கடற்கரையில் வாழும் மக்கள் அந்த நாட்களில் அனுபவித்த துயரங்கள் வார்த்தையால் கூறமுடியாதவை.

ஒரு நாட்டில் ஏற்படும் இயற்கை பாதிப்புகளை பேரிடரல்களாக அறிவிப்பது அந்தந்த அரசுகளின் கையிலுள்ளது. 2017 நவம்பர் மாத இறுதியில் தமிழ்நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை ஒக்கிஎன்னும் புயல் தாக்கியது. ஆரசின் அலட்சியத்தால் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சுமார் 400- ற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலிலே சமாதியாயினர். குரையில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள், வாழைத்தோhட்டங்கள், பல ஆண்டுகள் பழைமையான மரங்கள் முற்றிலுமாக அழிந்தது. ஆனால் அரசு இதை பேரிடராக அறிக்க தவறியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தை மிகப்பெரிய புயல் தாக்கியது. இப்புயலுக்கு கஜாஎனப்பெயரிடப்பபட்டது. இது தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளை முற்றிலுமாக சீரழித்தது. மக்களின் உடமைகளும் வயல் நிலங்கள் முற்றிலுமாக அழிந்தது. இது தமிழ்நாட்டின் தற்கால பேரிடரலாக கொள்ளப்பட்டது. இன்று வரை இந்த பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் எதிர்கொண்ட பேரிடரலிலிருந்து மீண்டு வரவில்லை. மீட்டெடுப்பு நடவடிக்கையில் முழுமூச்சுடன் செயல்பட வேண்டியது  அந்தந்த அரசுகளின் தலையாய கடமையாய் உள்ளது.

மீட்டெடுப்பு நடவடிக்கை

உலகில் சில குறிப்பிட்ட இயற்கை பேரிடரல்கள் எப்போது ஏற்படும் என்று எவராலும் அறிதியிட்டு கூற முடியாதிருந்த காலகட்டத்தை கடந்து இன்று எல்லா இயற்கை பேரிடரல்களையும் முன்கூட்டியே அறிந்து (சுனாமி உட்பட) விழிப்புணர்வுடன் செயல்பட நாம் அறிவியல்துறையில் முன்னேறியுள்ளோம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரிடரல்களின் போது  அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் செய்த மீட்டெடுப்பு நடவடிக்கை கூர்ந்து கவனிக்கத்தக்கது.

பேரிடர் மேலாண்மை         

பேரிடர் மேலாண்மை என்பது தொடர்ச்சியான திட்டமிடல், நிர்வகித்தல், ஒன்றிணைத்தல், மற்றும் செயல்படுத்துதல் வழியாக பூமியில் உயிர்சேதத்தையும், பொருட்சேதத்தையும் தடுப்பது. மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பாதுகாக்கும் வழிமுறைகளை திட்டமிடும் குழுவாக இது செயல்படுகிறது. இக்குழு பேரிடர் மீட்டெடுப்பில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இதற்கு பல படிநிலைகள் உள்ளது. இவற்றில் தயார் நிலை, பொறுப்புணர்வு, மீட்சித்திறன், தணித்தல் முதலியவை முக்கியமானவை.

தயார்நிலை

இயற்கையாகவே இந்தியாவின் சில பகுதிகள் இயற்கை பேரிடர் நிறைந்த பகுதியாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளை அரசு கண்டு பேரிடர் ஏற்படுவதற்கு முன் பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் முறையான திட்டமிடுலும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பாக வைக்க இடங்களை அடையாளம் காணுதலும், அவசர கால உதவிக்கு அந்த பகுதியின் மக்களைக் கொண்டு பல்வேறு குழுக்களை உருவாக்குதலும் தயார் நிலைக்குள் வரும்.

பொறுப்புணர்வு

பேரிடர் ஏற்படுவதற்கு முன் அந்த பகுதிகளில் எச்சரிக்கை செய்தல், பேரிடரில் சிக்கிய மக்களை மீட்டெடுத்தல், காணாமல் போனவர்களை தேடுதல், மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, தங்குமிடம் போன்றவற்றை தற்காலிகமாக ஏற்படுத்துதல் பொறுப்புணர்வின் கீழ் வரும்.

மீட்சித்திறன்

மக்களை பேரிடரல்களிலிருந்து மீட்டெடுக்க செய்யும் அனைத்துமே மீட்சித்திறன் எனப்படும்.

தணித்தல்

பேரிடரல் நேரங்களில் ஏற்படும் அழிவுகளின் தாக்கத்தை குறைக்கும் எல்லா செயல்களும் தணித்தல் ஆகும்.

மீட்டெடுத்தல்

இன்று எல்லா நாடுகளிலும் இயற்கை பேரிடரல்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு ஏற்படும் பேரிடரல்களிலிருந்து மீண்டெழுவது என்பது சில நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலான பணியாக உள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் ஏற்படும் பேரிடரல்களிலிருந்து வெகு விரைவாக அவை மீண்டு வருவதை நம்மால் காணமுடிகிறது. ஜப்பான் அடிக்கடி நிலநடுக்கத்தையும் சுனாமியையும் எதிர்கொள்ளக்கூடிய நாடு. ஆனால் இந்நாடு வெகுவிரைவில் அந்த அழிவிலிருந்து மீண்டு வந்துள்ளது வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம். அது போல நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்ட காலங்களில் அரசு செய்த மீட்டெடுப்பு நடவடிக்கை மிகச்சிறப்பானது என்று சொல்ல முடியும்.

·         1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலுமாக அழிந்த போது அந்த பகுதி மக்கள் வாழ தகுதியற்ற பகுதி என்று அறிவித்ததோடு அங்கு வாழ்ந்த மக்களை மறுகுடியமர்த்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

·         2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின் அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆதில் சில குறிப்பிடத்தக்கவை.

·         கடற்கரையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை முற்றிலுமாக அகற்றி அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியோடு இயற்கை பேரிடரல்களிலிருந்து பாதிக்காத வண்ணம் மாற்றுக்குடியிருப்புகளை அரசு உருவாக்கியது.

·         கடற்கரையயிலிருந்து ஏறத்தாழ 70 மீட்டருக்கு உள் எந்த குடியிருப்புகளோ கட்டிடங்களோ இருக்கக்கூடாது என அரசாணை வெளியிட்டது.

·         கடற்கரைகளில் சவுக்கு மரங்கள் மற்றும் அலையாத்தி காடுகளை உருவாக்கி இயற்கை பேரிடற்களின் தாக்கத்தை தணிக்கும்  எண்ணத்தோடு பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தியது.

·         பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மனநல மருத்துவரின் உதவியோடு ஆற்றுப்படுத்துதல் மற்றும் மனமகிழ் பூங்காக்கள் அமைத்தல்.

·         சுனாமியில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு கருத்தடை மாற்று அறுவை சிகிட்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க வழிவகை செய்தல்.

·         சுனாமி பாதித்த பகுதியிலுள்ள இளையோருக்கு எம்.எஸ் சுவாமிநாதன் தொண்டு நிறுவனம் சார்பாக இலவச கணிணி பயிற்சி வழங்குதல்

·         மீன்பிடி தொழிற்கருவிகளை இழந்த மீனவருக்கு மீன் உபகரணம் வழங்குதல் என்ற பல்வேறு திட்டங்களை வழங்கி அதன் தாக்கத்திலிருந்து மக்களை ஒரு குறிப்பிட்ட கால்த்திற்குள் மீட்டெத்தனர்.

·         தமிழகத்தை சுனாமி தாக்கிய காலத்தில் அரசும் அரசு எந்திரமும் மிக விரைவாக செயல்பட்டு மீட்டெடுப்பு நடவடிக்கையை மிகச்சிறப்பாக செய்து முடித்தனர் என்றே சொல்ல வேண்டும்.

·         கடந்த 2017 ஆம் ஆண்டு மிகப்பெரிய புயல் தமிழக மேற்கு கடற்கரையை தாக்கியது என்பது மேலே குறிப்பிட்டப்பட்டது. ஆனால் அரசு அதை பேரிடறாக அறிவிக்கவில்லை. குறிப்பாக மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இதில் சிக்கி கொத்து கொத்தாக மடிந்தனர். ஆனால் அரசு மற்ற பேரிடரல்களில் காட்டும் அக்கறையை இதில் காட்ட மறுத்தது. இதனால் மக்கள் வீதிக்கு இறங்கி போராடியதால் அரசு பல்வேறு மீட்டெடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.

·         போர்க்கால அடிப்படையில் பேரிடர் மேலாண்மை குழு வரவழைக்கப்பட்டு முறிந்த மரங்கள் அப்புறப்படுத்தபட்டது.

·         புயலில் சின்னாபின்னமாக்கப்பட்ட மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.

·         ஆழ்கடலுக்கு நாட்டின் கடற்படை மீனவனை தேடி சென்றது.

·         ஏறத்தாழ 400 – க்கும் மேற்பட்ட மீனவர்களை காணாததால் அரசின் மெத்தனப்போக்கை கண்டடித்து நாள் முழுவதும் இரயில் மறியலில் ஈடுபட்டதால் கீழ்காணும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.7

·         காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் நிவாரணம் வழங்குதல்.

·         குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குதல்.

·         புயலால் சேதமடைந்த வீடுகளை சீர்செய்தல்.

·         கரையொதுங்கிய மீனவர்களின் சடலங்களை மரபணு சோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தல்.

·         புயலால் சேதமடைந்த தென்னை, வாழை, ரப்பர் மரங்களுக்கு இழப்பீடு வழங்குதல்.

போன்ற துரித நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இந்திய அரசால் உருவாக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவால் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகளில் ஏற்பட்ட கஜாஎன்னும் புயலின் போது அரசின் துரித நடவடிக்கையால் உயிர்ச்சேதம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது.

கஜா புயல் தன் கோர முகத்தை காவிரி டெல்டா நிலப்பரப்பில் அகோரமாக காட்டிச்சென்றது. மக்கள் குடியிருப்புகள், வயல்பரப்புகள், தென்னந்தோப்புகள் என்று காவிரி டெல்டா பகுதியையே சூறையாடியது. குறிப்பிட்ட சிலமணி நேரங்களுக்குள் மிகப்பெரிய பொருட்சேதத்தை உருவாக்கியது. பேரிடர் ஏற்படுவதற்கு அரசு எடுத்த மேலாண்மை நடவடிக்கையை விட மீட்பு நடவடிக்கையில் தெய்வு காணப்பட்டதாக காவிரி டெல்டாவும் கஜா புயலும் என்னும் தன்னுடைய நூலில் பேராசிரியர் வறீதய்யா குறிப்பிட்டுள்ளார்.7

உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயற்கை பேரிடரல்கள் ஏற்பட்டன. அவைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மீட்டெடுப்பு நடவடிக்கை என்பது மிக தொய்வானதாவே இருந்தது. ஆனால் பேரிடர் மேலாண்மைகுழு உருவாக்கப்பட்டதிலிருந்து அழிவின் தாக்கத்திலிருந்து உடனடியாக மீட்பு நடவடிக்கை துரிதமாகிறது.

தொகுப்புரை

·         பூமியில் பேரிடர் என்பது எப்பொழுது வேண்டுமாயினும் நிகழலாம். இயற்கையை கட்டுப்படுத்த இதுவரை மனிதன் கற்றுக்கொள்ளவில்லை.

·         பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசு முன் வர வேண்டும். பேரிடர் மேலாண்மைக்குழுவை மேலும் பலப்படுத்துதல்.

·         பேரிடருக்கு பிந்தைய மறுகுடியமர்த்தல் உறுதி செய்தல்.

·         மனித உயிர்களுக்கு தீங்கு ஏற்படா வகையில் திட்டங்கள் வகுத்தல்

·         இழப்பீடுகளை முறையாக வழங்குவதன் மூலம் விரைவில் மீட்டெடுத்தல் நிகழும்.

·         மனிதனின் ஆசை பேராசையாக மாறும் போது அவன் தன் கவனத்தை இயற்கையின் மீது செலுத்துகிறான். அளவிற்கு அதிகமாக இயற்கையின் வளங்களை சுரண்டுவதால் ஏற்படும் காலநிலை மாற்றங்களால் இந்த உலகு பல்வேறு பேரழிவுகளை சந்தித்து வருகின்றது. காடுகளை அழித்தும், இயற்கைக்கு எதிரான ஒரு வாழ்கையை வாழ முற்படுதலும் அழிவின் ஆரம்பம் ஆகும்.

துணைநின்றவை

1.      நர்மதா தமிழ் அகராதி, ஆசிரியர்.மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், ஆண்டு 2015.

2.      ஆழிப் பேரிடருக்குப் பின் - பேரா. வறீதய்யா, காலச்சுவடு பதிப்பகம், 2006 ஆம் ஆண்டு.

3.      தமிழ் விக்கிபீடியா இணையதளம்.

4.      புறநானூறுபுலியூர்க் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை-14,2010.

5.      சிலப்பதிகாரம் - புலியூர் கேசிகன் உரை.புலியூர்க் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை-14, 2013.

6.      ஒக்கி புயல் இனப்படுகொலை என்பேன் - ஆன்றணி வளன், கடற்கரை பதிப்பகம், இரையுமன்துறை. 2018.

7.      காவிரி டெல்டாவும் கஜா புயலும் - பேரா. வறீதய்யா, நெய்தல் வெளியீடு, தூத்தூர் அஞ்சல், பதிப்பு 2019.